பேரறிஞர் அண்ணா சிறுகதைகளில் மொழிநடை
முனைவர். மா.தியாகராசன்
முன்னுரை
பேரறிஞர் அண்ணா பிறந்த போது, தேவர்கள் வானத்திலிருந்து மலர்மாரி பொழியவில்லை; தேவதுந்துபி இசை முழங்கவில்லை; முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடி வந்து “வாழ்க! வாழ்க!” என வாழ்த்துக்கள் வழங்கவில்லை. பிறந்த குழந்தையின் தலைக்கு மேலே நாகம் படம் விரித்துக் குடை பிடிக்கவில்லை; அற்புதங்கள் எதுவும் நிகழாமலேயே எளிமையாக எல்லாக் குழந்தைகளும் பிறப்பது போலத்தான் அண்ணா பிறந்தார். ஆனால் அவர் வளர வளர மனித நேயம் மதநல்லிணக்கம், வாய்மை, தூய்மை, தாய்மை, நேர்மை ஆகிய அரும்பண்புகளும், கூரிய அறிவும், சீரிய சிந்தனையும் அவரிடம் சேர்ந்து வளர்ந்தன. அவர் தெய்வத்தை வணங்காதவராக வாழ்ந்த போதும் தமிழ் மக்கள் அனைவரும் அவரையே தெய்வமாகக் கருதி வணங்கத்தக்க நிலைக்கு அவர் உயர்ந்தார்.
அறிவியல் அணுகுமுறை கொண்ட அறிஞர் ஒருவர் கலையுணர்வும் கொண்டவராக இருத்தல் அரிது. இவ்விரண்டும் ஒருங்கே அமையப் பெற்றிருந்தாலும் அவரிடம் அவற்றை வெளிப்படுத்துதற்குப் பேச்சாற்றல் எழுத்தாற்றல் ஆகியவை அமைந்திருப்பது மிகவும் அரிது. இவற்றுடன் தூய உணர்வும் தாயுள்ளமும் இணைந்திருத்தல் அரிதினும் அரிது. இவையெல்லாம் ஒருங்கே அமையப்பெற்ற ஒருவர் பொது வாழ்வுக்கு வாராமல் போய்விட்டால் இத்தனையும் நாட்டுக்குப் பயன்படாமல் போய்விடும். இத்தகு நலன்கள் பெற்ற சான்றோர் ஒருவர் சமுதாயத் தொண்டராகப் பொதுப்பணிபுரியப் புறப்பட்டு வந்துவிட்டால், அவரால் அவரைப் பெற்ற திருநாடு பெருமை அடையும்; உலகமே அவரைத் தெய்வமாகப் போற்றிப்புகழும்; வாழ்த்தி வணங்கும்.
அத்தகைய சான்றோராக ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் அற்புத மலராகக் காஞ்சி மன்னன் கனிவுமிகு அண்ணன் பேரறிஞர் அண்ணா மலர்ந்தார்; தம் எழுத்தால் பேச்சால் மக்களைக் கவர்ந்தார். அவர்தம் சிறு கதைகளில் மொழிநடை எவ்வாறு அமைந்துள்ளது? என்பதை ஆய்ந்தறிவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
மொழிநடை
அறிஞர் ஒருவர் தம் உள்ளத்தில் தோன்றும் எண்ணத்தை எழுத்தில் - கட்டுரை, கவிதை, கதை வடிவத்தில் வடித்துக் கொடுக்கும் போது அவற்றைப் படிப்பவர்கள் மனத்திலும் அதே எண்ணத்தை உண்டாக்கும் வண்ணம் படைக்கப்படும் படைப்புகளே சிறந்த படைப்புக்கள் ஆகும். அதுபோலவே சிறந்த பேச்சாளர் ஒருவர் தம் உள்ளத்தில் தோன்றிய உணர்வுகளை அவர் பேச்சைக் கேட்பவர்கள் உள்ளங்களிலும் உண்டாகுமாறு பேசுவதே சிறந்த பேச்சாகும். இங்ஙனம் பேச்சிலும் எழுத்திலும் தம் எண்ணத்தை வெளிப்படுத்தும் பாங்கு மொழிநடை எனப்படும். மக்கள் காலால் நடக்கும் நடை பலவகையாக அமைந்திருப்பதை நாம் அறிவோம். உடல் வலிவும் பொலிவும் உடையவன் ஒருவன் தெருவில் நடக்கும் போது அவன் நடை எழிலும் எழுச்சியும் உடையதாய் இலங்கும்; நோயாளன் நடையில் தளர்ச்சி தெரியும்; மது அருந்திப் போதையில் இருப்பவன் தள்ளாடி நடப்பான். இவை போலவே எழுத்தாளர் தம் மொழிநடையும் பல வகையில் அமையும்.
அண்ணா அவர்கள் பேச்சிலும் எழுத்திலும் தெளிவான, வளமான, அழகான ஆற்றொழுக்கான, ஆற்றல் மிக்க நடை அமைந்திருந்தது. அவர்தம் நடையழகின் சிறப்பினைப்பற்றி எழுதுவதானால் பல நூல்களாக விரியும். அதனால் தான் அண்ணா அவர்களின் எழுத்தில் சிறுகதைகளில் அமைந்துள்ள மொழிநடை மட்டுமே இங்குத் திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சிறுகதைகளில் அமைந்துள்ள மொழிநடை பற்றியும் முழுமையாக எழுத வேண்டுமானால் ஒரு தனி நூல் எழுத வேண்டும். எனினும் ஒரு நூல் வடிவில் எழுதாமல் ஒரு கட்டுரை வடிவில் அதனை அடக்க வேண்டியிருப்பதால் அளவில் குறைவாகவும்,செய்திகள் செறிவாகவும் ஆய்வு நோக்கில் நிறைவாகவும் இந்தக் கட்டுரை மலர்ந்துள்ளது.
சிறுகதையில் மொழியின் இடம்
சொற்கள் நடந்து வருவது உரைநடை; நடனமாடி வருவது கவிதையாகும் கவிதையில் எதுகை, மோனை, முதலிய தொடைகளும், கற்பனை படிமம் முதலிய உத்திகளும் கலந்து வருதல் வேண்டும். எனவே கவிதையில் மொழி நடையின் சிறப்பு இன்றியமையாத பங்கு பெறும்; கட்டுரைகளிலும் மொழிநடையின் சிறப்பே பொலிவூட்டும்; புதினங்களும் அதிக பக்கங்களில் எழுதப்படுவதால் புதினங்களிலும் மொழி நடையை அழகுற அமைப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் சிறுகதை, ஆசிரியர் தாம் கூறக் கருதிய மையக் கருவினைப் படிப்போர் சரியாகப் புரிந்து கொள்ளத்தக்க வகையில் விளக்கிச் சுருக்கமாக எழுதுவது ஒன்றே போதுமானதாகும். எனினும் கொடுப்பது எதுவாயினும் அழகு படுத்தியே கொடுப்பது அண்ணாவுக்கே உரிய தனிப் பண்பு என்பதால் அண்ணா அவர்களின் சிறுகதைகள் கூடத் தெளிவான மொழிநடை மட்டுமின்றிப் பட்டாடை கட்டிவரும் பாவையைப் போன்று அழகான நடையுடனும் அமைந்துள்ளன என்பதே நாடறிந்த உண்மை.
சிறு கதைகளில் அணிநலம்
இயற்கையாகவே வனப்பு மிக்க மங்கையர்கள், தங்கள் தோற்றத்தை மேலும் வனப்புடன் காட்டுதற்கு வளையல்கள், மோதிரங்கள் முதலிய அணிகலன்களை அணிந்து கொள்வார்கள். அது போல அழகிய இலக்கியப் படைப்புகளுக்கு மேலும் அழகூட்டுவதற்கு அவற்றில் பல வகையான அணிகள் விரவி வருமாறு படைப்பார்கள்; அத்தகைய அணிகளுக்கெல்லாம் ‘உவமையே தாய்’ எனப் போற்றப்படுவதாகும்.
அத்தகைய உவமைகள் அண்ணாவின் சிறுகதைகளில் அதிக அளவில் அழகுற அமைந்துள்ளன. எடுத்துக் கொண்ட பொருளுடன் அதற்குக் கூறப்படுகின்ற உவமை எந்த அளவுக்குப் பொருத்தமானதாக அமைகின்றதோ அந்த அளவுக்கு உவமை சிறப்புறும்.
அண்ணா அவர்கள் எழுதியுள்ள ‘பவழபஸ்பம்’ என்னும் சிறுகதையில் நம் நாட்டில் புத்தமதம் ஓங்கி வளரத் தொடங்கிய போது அதன் வளர்ச்சியைத் தடுக்க வேண்டுமெனப் பழமையாளர்கள் விரும்பினார்கள்; ஆனால் மன்னர்கள் சிலர் ஓங்கி வளர்ந்து வருகின்ற புத்த சமயத்தைத் தடுப்பது பலமான புயலை விலை கொடுத்து வாங்குவதற்கு ஒப்பாகும் என்று கருதினார்கள்; அதற்கேற்ப நடந்தார்கள் என்று அறிஞர் அண்ணா அவர்கள் ஓர் உவமையை அழகுற அமைத்துள்ளார்.
புத்தமதத்தின் வேகமான வளர்ச்சியைக் கண்ட பழமையாளர்களும் புத்தசமயத்தை நேரடியாக எதிர்க்காமல், “புத்த சமயம் கூறும் கருத்துகள் எல்லாம் நம் வேதங்களிலும் உபநிடதங்களிலும் அமைந்துள்ளன. என்று பாராட்டுவது போலக் கூறி, புதுமை விரும்புவோரை மயங்க வைத்துவிட்டு மெல்லத் தம்மார்க்கத்தைப் பிணைப்பர். பழமையாளர் தம் இத்தகைய வஞ்சகச் செயல் “பசும்புல் தரையில் வளைந்து நெளிந்து செல்லும் சர்ப்பம் போல் உலவிற்று, வேங்கையைப் போலப் பாய முடியவில்லை” என இரண்டு உவமைகளை அறிஞர் அண்ணா அடுக்கிக் கூறியுள்ளார்.
பசும்புல் தரையில் நாகம் நெளிந்து வளைந்து செல்லும் போது, புல் மறைத்துக் கொள்வதால் பாம்பு செல்வதை மற்றவர்கள் பார்த்தறிய முடியாது. ஆகையால் நாகம், தான் செல்ல வேண்டிய இடத்திற்கு மறைந்தவாறே சென்று சேர்ந்துவிடும். ஒரு வேளை பாம்பு ஊர்ந்து செல்வதை யாராவது பார்த்தாலும் புல்தரையில் மறைந்து செல்லும் பாம்பினை அடிக்க முடியாது. புல் பாம்பின் மீது அடிபடாமல் கேடயம்போல் தடுத்துவிடும் என்னும் கருத்துகளை இந்த உவமையில் அண்ணா உள்ளடக்கியுள்ளார். வேங்கை போலப் பாய முடியாது என்னும் உவமை வெளிப்படையாகப் புத்தசமயத்தினை எதிர்க்க இயலாது என்பதனை விளக்குகின்றது. புத்தசமய ஆதரவாளர்கள் அதிக அளவில் இருந்ததால் பழமையாளர்கள் அவர்களுடன் நேரடியாக மோதவில்லை. வஞ்சகமாகப் புரட்சியாளர்களுக்கு எதிரான செயல்களைச் செய்து கொண்டிருந்தார்கள் என்னும் கருத்துகளை இந்த உவமைகள் விளக்குகின்றன.
புதுமை விரும்பும் புரட்சியாளர் கூட்டத்தில் இருந்த மருதவல்லி என்னும் புரட்சிப்பெண் எதிர்பாராமல் அணி மாறினாள். ஆம்! புதுமையை விரும்பும் புரட்சியாளர்களை எதிர்த்தாள். பழமையாளர்களை ஆதரித்து முழங்கினாள். சோர்ந்து போயிருந்த பழமைவாதிகளுக்கு மருத வல்லியின் வரவு, அவள் முழக்கம் மகிழ்ச்சியை ஊட்டின. அண்ணா அவர்கள் பழமையாளர்கள் அடைந்த இந்த மகிழ்ச்சியைக் ‘காரிருளில் தோன்றிய மின்னல் போல்’ இருந்தது என்னும் ஓர் உவமையைக் கூறி விளக்கியுள்ளார். புரட்சியாளர்கள் வலிவுடன் வளர்ந்ததால் பழமையாளர்கள் இருளில் தவித்தது போலத் துன்புற்றார்கள் என்பதும் அந்த நேரத்தில் மருதவல்லி அணிமாறிப் பழமைக்கு ஆதரவாகக்குரல் கொடுத்த பாங்கு காரிருளில் பளிச்சென மின்னல் தோன்றியதைப் போல இருந்தது என்பதும் பொருத்தமுற அமைந்துள்ளன.
அதனை அடுத்துப் பழமையாளர் மேலும் சிந்தித்தனர். ‘மின்னல் என்பது பேரொளியாய்த் தோன்றி உடனே மறைந்து விடக்கூடியது. ஆனால் மருதவல்லியின் இந்த ஆதரவு முழக்கம் பழமையாளர்கள் வெற்றிபெறும் வரை மறையாமல் ஒலிக்கவேண்டும் என்று விரும்பி. அதனால் மருதவல்லியின் ஆதரவு என்னும் ஒளியை நிலையான திவ்ய ஜோதியாக்க வேண்டும் என்று பழமையாளர் கூறினர். இந்தத் தொடர் பழமையாளர் கூறியது என்பதால் வடமொழிச் சொல்லாகிய “திவ்ய ஜோதி” என்னும் சொல்லாலேயே - பிற்போக்கு ஆன்மிகவாதிகள் தம் சொல்லாலேயே அண்ணா குறிப்பிட்டுள்ளார்.
‘நாடோடி’ என்னும் சிறுகதையில் ஒரு நிறுவனத்தின் மேலாளர், அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் வாணிகத் தொடர்பாகப் பல ஊர்களுக்குத் தொடர்ந்து சென்று வருவது தமக்குத் துன்பமாக இருக்கிறது என்று கூறினார். அதனைக் கேட்ட உரிமையாளர், மேலாளரைக் கடிந்துரைத்தார். அப்போது அவர், “பல ஊர்களுக்குப் போய் வந்தால் தானே வாணிகம் பெருகும்” என்று கூறிப் பின்னர் அவர்,“கட்டிப் போட்ட மாடு மாதிரி, பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி, இடித்து வைத்த புளி மாதிரி நீ ஒரே இடத்தில் இருப்பதற்கு விரும்புகிறாயா?” என்று கேட்டார். இந்தப் பகுதியில் பயணத்தை விரும்பாமல் ஒரே இடத்தில் இருக்க விரும்புகின்றவர்களுக்குப் பொருத்தமான மூன்று உவமைகளை அடுக்கிக் கூறியுள்ளார். இந்த மூன்று உவமைகளும் மக்கள் பேச்சு வழக்கில் இயல்பாகக் கையாளும் உவமைகள் இவற்றைத் தம் கதைச் சூழலுக்கு ஏற்ப அண்ணா அவர்கள் எடுத்து ஆண்டுள்ள பாங்கு சிறந்த மொழிநடையாகும்.
“யார் மீது கோபித்துக் கொள்வது?” என்னும் சிறுகதையில் வறுமையில் வாடித் தேய்ந்த ஒரு மூதாட்டியைக் “காய்ந்த சருகு என உருவகப்படுத்திக் கூறியுள்ளார். புதுக்கவிதைகளில் கையாளப்படுகின்ற படிம உத்தியை இப்பகுதியில் அண்ணா அழகுற அமைத்துள்ளார் இதோ...அந்தப் பகுதி,
“வெறும் சருகு! அதற்குக் கையும், காலும், கண்ணும் அம்மட்டோ பாழும் வயிறும்”
இப்பகுதி உருவக அணி அமைந்த புதுக்கவிதையாகவே நடைபோடுகிறது,நடனமிடுகிறது. அண்ணா அவர்களின் அன்றைய உரைநடையே இன்றைய புதுக்கவிதைகளுக்கு முன்னோடி என்பதை எண்ணும் போதே உள்ளம் மகிழ்கிறது; உடனே நெகிழ்கிறது.
‘பூபதியின் ஒருநாள் அலுவல்’ என்னும் சிறுகதையில் “செல்வர்களுக்கு உண்டாகும் செருக்கு, அவர்களை அழிக்கும் நெருப்பு’ என்றும் செருக்கினை நெருப்பாகவும் உருவகப்படுத்தியுள்ளார். திருவள்ளுவர் ‘சினம்; என்னும சேர்ந்தாரைக் கொல்லி’ (குறள-306) எனச் சினத்தை நெருப்பாக உருவகப்படுத்தினார். ஆனால் அண்ணா அவர்கள் செல்வச் செருக்கினை நெருப்பாக உருவகப்படுத்தியுள்ளார்.
“ராஜபார்ட் ரங்கதுரை” என்னும் சிறுகதையில் ரங்கதுரை என்னும் சிறந்த நடிகர் தாம் நடித்து வந்த நாடகக்குழுவை விட்டு விலகி விட்டார். அதனால் நாடகக்குழுவின் உரிமையாளர் ரங்கதுரைக்குப் பதிலாக அவர் நடித்த பாத்திரங்களுக்கு வேறு சிலரை நடிக்க வைத்து நாடகங்களை நடத்தி ஒருவாறு குழுவை நடத்திக் கொண்டிருந்தார். ஆயினும் ரங்கதுரைக்குப் பதிலாக நடித்தோர் எவரும் அவர்போல் நடிப்பில் மிளிரவில்லை என்பதை விளக்கும் வகையில் அறிஞர் அண்ணா “மோரிலிருந்து தான் வெண்ணெய் எடுக்க முடியும்” பன்னீரிலிருந்து கூட எடுக்க முடியாதே” என்று ஓர் உவமை கூறி விளக்கியுள்ளார். ரங்கதுரை – மோர் அவரிடமிருந்த திறமையான நடிப்பு என்னும் வெண்ணெய் கிடைக்கும், மற்ற நடிகர்கள் பன்னீர் போன்று எவ்வளவு உயர்ந்தவர்களாயினும் அவர்களிடமிருந்து சிறந்த நடிப்பு என்னும் வெண்ணெய் எடுக்க இயலாது என்பதை அறிஞர் அண்ணா அழகுபட விளக்கியுள்ளார். இவை போலப் பல அணிகள் ஆங்காங்கே அண்ணாவின் சிறுகதைகளில் அமைந்து பளிச்சென ஒளிவீசுகின்றன. அதனால் அண்ணாவின் உரைநடைகள் கூடக் கவிதைகளாகவே காட்சியளிக்கின்றன.
எதுகை நலம் பொதிந்த நடை
எது, கைக்குக்குக் கிடைத்தாலும் எதுகையாய் எழுதும் வல்லமை பெற்றவர் அறிஞர் அண்ணா. அடுக்கு மொழி நடையில் அண்ணாவுக்கு நிகராக இன்னொருவரைக்கூற இயலாது. அண்ணா அவர்களின் அடுக்கு மொழி என்பது எதுகை, மோனை, இயைபு ஆகிய தொடைகள் நிறைந்த நடையேயாகும்.
‘எதுகை’ என்பது முதற் சீரின் முதல் எழுத்து அளவொத்து இருக்க இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பதாகும். அண்ணா அவர்கள் பேச்சிலும் எழுத்திலும் எதுகைகள் தாமாகவே ஓடிவந்து, கூடி நின்று, ஆடிக்களிக்கும் இந்தச் சிறப்பு, இலக்கியம் நாடிக் கற்போரைத் திகைக்க வைக்கும்.
‘இவர்கள் குற்றவாளிகளா?’ என்னும் சிறுகதையில், அவரின் அருள் உள்ளம் இவர்கள் வாழ்வில் அன்பை வளர்த்தது இன்பத்தை ஓங்கச் செய்தது.
“குணம் பெற்ற இவர்கள் மணம் பெற்ற வாழ்வு கொண்டது எப்படிக் குற்றம்” இப்பகுதியில் எதுகை நலம் இயற்கையாக அமைந்து அழகூட்டியுள்ளது.
‘இருவர்’ என்னும் சிறுகதையில், வாழ்வு பாழ்பட்டுத் தாழ்நிலையில் சென்று விடுமோ?” என்னும் வரியில் எதுகை எழிலுற அமைந்துள்ளது. ‘பலி’ என்னும் சிறுகதையில் ‘தொட்டதெல்லாம் கெட்டிடக் கண்டான்’ கொற்றம் அற்று வீழ்ந்து விடும் என்று ஆருடம் கூறினார் மற்றுமொரு நீளமான தாக்குதல்’ என்னும் பகுதியில் எதுகைகள் இனிதாக இடம் பெற்றுள்ளன.
அண்ணா அவர்கள் சிறுகதைகள் அனைத்திலும் அமைந்துள்ள எதுகைகளில், பானை சோற்றுக்குப் பதம் பார்க்கும் பருக்கைகள் போல் ஒன்றிரண்டு மட்டும் இங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனையாகும். அண்ணா அவர்களுக்கு மோனையின் மீதுள்ள மோகம்’ அந்த மோகம் தந்த வேகம் அவர்தம் சிறுகதைகள் அனைத்திலும் மோனை மழை போலப் பொழிந்து கொட்டியுள்ளது.
அண்ணாவின் படைப்புகள் அனைத்திலுமே மோனை அமையாத சொற்றொடரைக் காண இயலாது. ‘தீட்டுத் துணி’ என்னும் சிறுகதையில் சுப்பிரமணிய அய்யர் என்பவரை வருணிக்கின்ற பொழுது, ‘கொழுந்து வெற்றிலையும் கொட்டைப்பாக்கும்’ என்னும் இத்தொடரில் மோனை அமைந்துள்ளது. இந்த வரி ஒரு திரைப்படத்தில் ‘கொழுந்து வெத்திலையும், கொட்டைப் பாக்கும் போட்டால் வாய் சிவக்கும்’ என ஒரு பாடலின் முதலடியாக அமைந்துள்ளது. இது மட்டுமன்று அண்ணாவின் அழகிய தொடர்கள் பின்னர் வந்த திரைப்படங்கள் பலவற்றில் பாடல் அடிகளாக இடம் பெற்றுள்ளன என்பதை நாம் அறிவோம்.
‘பேய் ஓடிப்போச்சு’ என்னும் சிறுகதையில் வேலன் என்பவன் செல்லாயியைப் பார்த்து,
“ஆசைக் கிளியே! அல்லிராணி
அழகான மாதரசி அல்லிராணி
அருகினிலே வரலாமோ அல்லிராணி”
என்னும் மோனை அமைந்த வரிகள் கூட, பல திரைப்படப் பாடல்களுக்குச் சாயல் தந்துள்ளன.
இயைபுத் தொடை இயைந்த நடை
இயைபு, ஒழுங்கு, முழுமை ஆகிய மூன்றும் ஒருகலையின் ஒருமைப் பாட்டை உருவாக்க வல்லன. அத்தகைய இயைபினை ‘யாப்பருங்கலம்’, அடிதோறும் இறுதிக்கண் எழுத்தாலும் சொல்லாலும் ஒன்றி வரத் தொடுப்பது’ என இலக்கணம் வகுத்துள்ளது. கலையின் வடிவத்தைச் செம்மையாக்கும் நடையியல் சார்ந்த கூறாகிய இயைபு அண்ணாவின் படைப்புகள் அனைத்திலும் இயைந்து வருவதும் எழிலைத் தருவதும், அறிந்து மகிழத்தக்கவை போற்றிப் புகழத் தக்கவை.
செவ்வாழை என்னும் சிறுகதையில், ‘எதிர்க்கத் தெரியாத கோழை, இங்கிதம் தெரியாத வாழை, இவன் பெயர் ஏழை’ என இயைபு, இயல்பாக அமைந்து மொழிநடைக்கு இனிமை சேர்க்கிறது.
சந்திரோதயம் என்னும் சிறுகதையில் “பொறிபறக்கும் கண்கள், கனல் தெறிக்கும் பேச்சு இவைகளை எதிர்பார்த்துத்தான் அந்த இளைஞன் பூந்தோட்டம் வந்தான் அங்கே, புள்ளிமான் ஆடிற்று’ பூங்குயில் பாடிற்று’, என இயைபு அமைந்துள்ளது.
இங்ஙனம் அண்ணாவின் மொழிநடை சிறப்பதற்கு இயைபுத்தொடையும் உதவி செய்துள்ளது.
சிறுகதைகளில் அந்தாதி
ஒரு செய்யுளில் ஓர் அடியின் இறுதிக்கண் நிற்கும் எழுத்து, அசை, சீர், சொல், அடி ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்று (அந்தம்) அந்த அடியின் முதலாக (ஆதி) அமையுமாறு தொடுப்பது ‘அந்தாதித் தொடை’ எனப்படும் அண்ணா அவர்களின் ‘வசீகர வரலாறு’ என்னும் சிறுகதையில் விதவை கலியாணியின் அழகினை வருணிக்கும் போது “எவ்வளவு அழகு! அழகுதங்கும் பருவம்!! பருவ அழகு கொண்டுள்ள அங்கங்கள்! அங்கங்களைத் தாங்கிக் கொண்டு தங்கக் கொடி” என்று கூறும் பகுதியில் அந்தாதி அமைந்துள்ளது.
அடுக்குத் தொடரும் இரட்டைக்கிளவியும்
இசை நிறைகின்ற இடத்திலும், அசைநிலைகள் வருகின்ற இடத்திலும்,பொருளோடு புணர்கின்ற இடத்திலும் ஒரே சொல் பலமுறை அடுக்கி வருவது அடுக்குத் தொடர் ஆகும். பேரறிஞர் அண்ணா அவர்கள் சிறுகதைகளில், மெல்ல மெல்ல, சரி சரி, துருவித் துருவித், கேட்டுக் கேட்டு, கிளறிக் கிளறி, சில சில – போன்ற அடுக்குத்தொடர்கள் பொருத்தமுறு இடங்களில் அமைந்து கதைமாந்தர் தம் செயல் வேகத்தைப் புலப்படுத்தியுள்ள பாங்கு அண்ணாவின் மொழிநடைக்கு வளம் சேர்க்கின்றன.
“இரட்டைக்கிளவி” சொல்லும் கருத்திற்கு வேகத்தையும் சுவையையும் ஊட்ட வல்லதாகும். அண்ணா அவர்கள் சிறுகதைகளில், “முகம் எப்போதும் பளபளப்புத்தான் இப்போது மினுமினுப்பும் தெரிந்தது.
‘கடுகடுத்த முகமல்லவா காட்டினாய்?’ என்பன போன்ற இரட்டைக் கிளவிகளும் சிறப்புற இடம் பெற்றுள்ளன.
கூடுவிட்டுக் கூடுபாய்தல்
கதைகள், புதினங்கள், காவியங்கள், நாடகங்கள் முதலியவற்றைப் புனையும் படைப்பாளர்கள் ஒவ்வொரு கதை மாந்தரைப் படைக்கும் போதும் தாம் அந்தக் கதை மாந்தராகவே மாறிப் படைத்தால் தான் அந்தப் படைப்பு வெற்றி பெறும். ஓவியம் வரையும் ஓவியன் ஒருவன் அந்த ஓவியமாகவே ஆகிவிடுவதால் தான் அதை வரைய முடிகிறது என்பது கவிஞர் தாந்தே கூற்று. (who paints a Figure if he cannot be it, cannot draw it)) அந்த வகையில் அறிஞர் அண்ணா அவர்களும் தம் சிறுகதைகளில் கதை மாந்தர் பேசும் உரையாடல் பகுதிகளை எழுதும் போதெல்லாம் அந்தக் கதை மாந்தராகவே மாறி எழுதியுள்ளார். இங்ஙனம் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து எழுதப் படும் நடை உயிரோட்டம் உள்ள மொழிநடையாக அமையும்.
ஆன்மிகவாதிகளில் பிற்போக்காளர் சிலர் எப்படிப் பேசுவார்கள்? அண்ணா, கதைமாந்தர்களாக அவர்களை எப்படிப் படைத்துள்ளார்? என்பதற்கு இதோ... ஓர் எடுத்துக்காட்டு,
“பகுத்தறிவாளரை மறுத்துப் பேசிய பிற்போக்காளர் ஒருவர், “இந்தச் சாதுவைச் சாமான்யமாகக் கருதாதே சிலருக்கு ஆய்சு ஓமம், நவக்கிரஹ ஜெபம், திலத ஓமம், மார்க்கண்டேய ஜெபம், காலசாந்தி ஓமம், யாவும் தெரியுமாம்” என்று கூறுவதாக அமைந்துள்ள இப்பகுதியில் அண்ணா அந்தப் பாத்திரமாகவே மாறி ஆன்மிகவாதிகளில் ஒரு பிரிவினர் பேசுவது போல அப்படியே எழுதியுள்ளார்.
‘சாது’ என்னும் சிறுகதையில் வேலையாள் ஒருவன், தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வரும் தன் முதலாளி தன்னை உதைப்பேன்’ என்று கூறிய போது அந்த வேலையாள் தன் முதலாளியை எதிர்த்துப் பேசுவதாக அமைந்துள்ள பகுதியில், “சும்மா இருங்க’ உங்களிடம் வேலை செய்ய வந்திருக்கின்றேனே தவிர, உதை வாங்க அல்ல் மனுசாளை மனுசாள் அடிக்கிறதும் உதைக்கிறதும் தகாதுங்க மாட்டை அடித்தால் கூட அது திரும்ப முட்ட வரும்” என்று கூறும் பகுதியை எழுதும் போது அண்ணா தாமே அந்த வேலையாளாக மாறியுள்ளார். அதனால்தான் மாட்டை அடித்தால் கூட அது திரும்ப முட்டவரும்” என்று அவன் செய்யும் தொழில், பட்டறிவு இவற்றிற்கேற்ற உவமையை அவன் கூறுவதாக இப்பகுதி அமைந்துள்ளது.
முடிவுரை
அண்ணா அவர்கள் எழுதிய சிறுகதைகள் அனைத்துமே இனிய, எளிய நடையில் அமைந்துள்ளன. பாத்திரப் படைப்புகளிலும் அண்ணா கதை மாந்தராகவே மாறி விடுவதால் அண்ணாவைக் காணமுடியாது. கதை மாந்தர்கள் மட்டுமே தோன்றுவார்கள். இஃது அண்ணாவின் நடைக்கு இயல்புத் தன்மையை வழங்கியுள்ளது. உவமை முதலிய அணிகள் மிகவும் பொருத்தமாக விரவி வந்துள்ளன. எதுகை, மோனை, அந்தாதி போன்ற தொடைகள் அனைத்தும் பொருத்தமுற அமைந்து மொழி நடைக்கு நலம் சேர்க்கின்றன. தனித் தமிழில் எழுத வேண்டும் என்பது அண்ணா அவர்களுடைய விருப்பமாக இருந்த போதும், அண்ணா காலத்தில் எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் புகுந்து விட்ட வட சொற்களை நீக்கி நல்ல தமிழ்ச் சொற்களைப் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் கொண்டு வந்த அருஞ்செயலைச் செய்தவர் அண்ணா என்ற போதிலும் அவர்தம் சிறுகதைகளில் பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன. கதை மாந்தர் ஆன்மிகவாதியாய், பழைமை விரும்பியாய்ப் படைக்கப்படும் போது அதற்கேற்ப அவர்கள் பேசுவதாக அமையும் பகுதிகளில் அதிக அளவில் வடமொழிச் சொற்களைக் கலப்பது தவிர்க்க முடியாதது என்பதனாலும் அண்ணா வாழ்ந்த காலத்தில் வடமொழிச் சொற்களைக் கலந்து எழுதும் பாங்கு மிகுந்திருந்ததாலும் அண்ணா பிற மொழிச் சொற்களை அறவே நீக்கி எழுத விரும்பிய போதிலும் அவரால் முடியவில்லை. கதைமாந்தர் உரையாடல் காரணமாகக் கொச்சைச் சொற்களும் இடம் பெற்றுள்ளன எனினும் வளமான, தெளிவான, எளிய, இனிய, படிப்போர் உள்ளங்களில் பதியும், மொழிநடை அண்ணா அவர்கள் சிறுகதைகள் அனைத்திலும் இடம் பிடித்துள்ளது. அந்த மொழிநடை தமிழன்னையின் இலக்கியத் தேரோட்டத்திற்கு வடம் பிடித்துள்ளது.
ஆய்வுக்குத் துணை செய்த நூல்கள்
1. செவ்வாழை (பதிப்பு ஆண்டு 1987, விலை ரூ. 20.00)
2. செங்கரும்பு (பதிப்பு ஆண்டு 1996, விலை ரூ. 12.50)
3. கன்னி விதவையான கதை (பதிப்பு ஆண்டு 1997, விலை ரூ. 15.00)
4. சந்திரோதயம் (பதிப்பு ஆண்டு 1997, விலை ரூ. 15.00)
5. பவழபஸ்பம் (பதிப்பு ஆண்டு 1997, விலை ரூ. 13.50)
6. கட்டை விரல் (பதிப்பு ஆண்டு 1997, விலை ரூ. 11.50)
7. மழை (பதிப்பு ஆண்டு 1987, விலை ரூ. 10.00)
8. அறுவடை (பதிப்பு ஆண்டு 1987, விலை ரூ. 10.00)
9. பிடிசாம்பல் (பதிப்பு ஆண்டு 1988, விலை ரூ. 6.00)
(நூலாசிரியர்: பேரறிஞர் அண்ணா, வெளியீடு : பூம்புகார் பதிப்பகம், 63, பிரகாசம் சாலை (பிராட்வே) சென்னை–108.)
10. அண்ணா வாழ்வும் பணிகளும் - கட்டுரை தொகுப்பு (ஒவ்வொன்றும் விலை ரூ. 150.00) (பதிப்பு ஆண்டு 2009)
தொகுதி – 1
தொகுதி – 2
தொகுதி – 3
தொகுதி – 4
(பதிப்பாசிரியர்: வேல் கார்த்திகேயன், மயிலம் பரிமளவேல், தமிழ் உயராய்வுமையம் 5ஃ38இ சன்னதி வீதி, மயிலம் - 604 304, விழுப்புரம் மாவட்டம்)
11. இலக்கியத்திறன் - டாக்டர் மு வரதராசனார், (பதிப்பு ஆண்டு 1959, விலை ரூ. 4.50) (பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை – 1.)
12. திருக்குறள் - டாக்டர் மு வரதராசனார் (பதிப்பு ஆண்டு 1990, விலை ரூ.10.50) (சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்;, 59, பிராட்வே, சென்னை – 1.)
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.