பெயரும் பொருள், பெயராத பொருள் என்னும் இருவகைப் பொருளிலும் இயல்பாக நிகழும் நிகழ்ச்சி ஒழித்து கவிஞர் தாம் கருதிய வேறு ஒரு காரணத்தை அவற்றின் மீது ஏற்றிச் சொல்லுதல் தற்குறிப்பேற்றம் என்னும் அணியாகும்.
“பெயர் பொருள் அல் பொருள் என இரு பொருளினும்
இயல்பின் விளைத்திறன் அன்றி அயல் ஒன்று
தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப்பேற்றம்” (தண்டியலங்காரம் 56)
பெயரக்கூடிய பொருளை வைத்துப் பாடப்படுவதால் பெயரும் பொருள் தற்குறிப்பேற்ற அணியாகும்.
வயிற்றில் பலமுறை அடித்துக் கொண்டு அழுவன போல
கோழிகள் சிறகுகளைத் தன் வயிற்றில் அடித்துக் கொள்வது இயற்கை. அதையேக் கம்பர். கைகேயி, தசரதனிடம் பெற்ற வரத்தைக் கண்ட பறவையின் செயல்களாகக் கூறுகின்றார். எண்ணப்படுகின்ற யாமக் கணக்கில் கடைசியாகக் கழியும் யாமத்தைத் தெரிவிப்பனவாகிய கோழிகள் கைகேயியினால் தசரதனின் அறிவு கலங்கி துன்புற்ற முறைகளைப் பார்த்து மனம் கலங்கி அழகான சிறகுகளாகிய இரு கைகளால் தன் வயிற்றில் பலமுறை அடித்துக் கொண்டு அழுவன போலத் தோன்றின என்று குறிப்பிடுகிறார்.
“எண் தரும் கடை சென்ற யாமம் இயம்புகின்ற ஏழையால்
வண்டு தங்கிய தொங்கல் மார்பன் மயங்கி விம்மியவாறு எலாம்
கண்டு நெஞ்சு கலங்கி அம் சிறை ஆன காமர்துணைக்கரம்
கொண்டு தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப போன்றன கோழி” (கைகேயி சூழ்வினை படலம் 228)
கோழி பெயரும் ஒரு உயிருள்ள பொருள். கோழியின் மூலமாக தன் குறிப்பை ஏற்றிக் கூறப்பட்டுள்ளது.
பெயராத பொருளை வைத்து பாடப்படுவதால் பெயரல் பொருள் தற்குறிப்பேற்ற அணியாகும்.
மகளிருடைய முகங்களின் தொகுதியைப் போல
மாலைப் பொழுதில் தாமரை மலர் குவிதல் இயல்பு. தாமரையில் தங்கும் பிரம்மன் துண்டு போடப்பட்ட சந்திரனைக் கொண்டு, தானே உண்டாக்கிய ஒளி பொருந்திய நெற்றியைப் பெற்ற அயோத்தி மகளிருடைய முகங்களின் தொகுதியைப் போல தாமரை மலர்க் கூட்டம் சிந்திய கள்ளாகிய கண்ணீரோடு ஒளி இழந்தவையாகக் குவிந்து அழகிழந்தன.
“பகுத்த வான் மதி கொடு பதுமத்து அண்ணலே
வகுத்த வாள் நுதலியர் வதன ராசிபோல்
உகுத்த கண்ணீரினின் ஒளியும் நீங்கிட
முகிழ்த்து அழகு இழந்தன முளரி ஈட்டமே”
(தைலமாட்டுப் படலம் 528)
தாமரை இடம் பெயராது. பெயராதத் தாமரை மூலமாக தன் குறிப்பை ஏற்றிக் கூறப்பட்டுள்ளது.
வெப்பத்தைக் குறைத்துக் கொள்வது போல
மாலைப் பொழுது வந்தது. கடலுக்குள் சூரியன் மறைகிறான். விசுவாமித்திரர், இராம, இலட்சுமணர் ஆகிய மூவருக்கும் குளிர்ச்சியைத் தருவதற்காகவேக் கொதிக்கும் வெப்பத்தைக் குறைத்துக் கொள்வது போலக் கடலுக்குள் சூரியன் மறைகிறான்.
“நதிக்கு வந்து அவர் எய்தலும் அருணன்தான் நயனக்
கதிக்கு முந்துறு கலினமான் தேரொடும் கதிரோன்
உதிக்கும் காலையில் தண்மை செய்வான் தனது உருவில்
கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான்போல் கடல் குளித்தான்”
(அகலிகைப் படலம் 459)
மாலைப் பொழுதில் சூரியன் மறைதல் இயற்கை நிகழ்ச்சி, வெப்பத்தைக் குறைத்துக் கொள்வதற்காகவே அவர்களுக்குத் துன்பம் ஏற்படாமல் இருக்கும் பொருட்டாகவே மறைந்தார் என்பது போல் கம்பர் பாடியுள்ளார். எனவே, இப்பாடல் தற்குறிப்பேற்ற அணியில் அமைந்துள்ளது.
இங்கே வா என்று அழைப்பது போல
காற்றில் கொடிகள் அசைவது இயற்கையான நிகழ்ச்சி. ஆனால், கவிஞர் காவலில் சிறந்த மிதிலை நகரம், நான் செய்த தவத்தினால் லட்சுமி குற்றமற்ற தாமரை மலரைப் பிரிந்து, இங்கு அவதரித்து இருக்கிறாள் என்று கூறி, செந்தாமரை போன்ற விழிகள் பெற்ற இராமனைச் சிறந்த அழகிய கொடிகள் என்னும் கைகளை உயிரைத் தூக்கி அசைத்துக் காட்டி விரைவாக இங்கே வா என்று அழைப்பது போல இருந்தது.
“மை அறு மலரின் நீங்கியான் செய் மாதவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று செழு மணிக்கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடி நகர் கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வா என்றுஅழைப்பது போன்றது அம்மா”
(மிதிலைக் காட்சிப் படலம் 486)
என்று வருவதால் இப்பாடல் தற்குறிப்பேற்ற அணியில் அமைந்துள்ளது.
வாலியின் இரத்தத்தால் சிவந்த முகம் போல
இருள் வேருடன் அழிந்து போகுமாறு ஒளி வீசும் கதிரவன் புகழ்மிக்க மேற்குப் பக்கத்தில் உள்ள அஸ்த்தமன மலையில் அடைந்த பொழுது, அச்சூரிய மண்டலமானது மலை போன்ற வானரத் தலைவனான வாலியின் இரத்தத்தால் சிவந்த முகத்தைப் போன்று விளங்கியது.
“அகம்வேர் அற்றுக வீசு அருக்கனார்
புகழ்மாலைக் கிரி புக்க போதினின்
நகமே ஒத்த குரக்கு நாயகன்
முகமே ஒத்தது மூரி மண்டிலம்”
(வாலி வதைப்படலம் 405)
சிவனின் நெற்றியில் வெளிப்பட்ட நெருப்பு போல
காலையில் சூரியன் உதயமாகும் என்பது இயற்கையே. இராமன் காதல் நோயால் துயரம் அடைந்து தளரும் நேரத்தில், சூரியன் இராமனது மனதில் பெரும் துயரம் குறையவும், செந்தாமரை மலர்கள் என்னும் முகங்கள் மலர்ச்சி பெறவும், எதையும் மறைக்கும் இருள் என்னும் பெயரோடு எதிரே வந்து புள்ளிகளை உடைய யானையின் தோலாகிய போர்வையைப் போர்த்துக் கொண்ட உதயகிரி என்ற சொல்லப்படும் சிவனது நெற்றியில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு விழியைப் போல உதித்தான்.
கோபம் மிகுந்து சிவந்து விட்டதைப்போல
காலைப் பொழுதில் சூரியன் வந்தால் இருள் மறையும் என்பது இயற்கை. புகையைப் போல நெருங்கி நின்ற இருள் என்னும் பகையானது குதித்து ஓடி விட மாளிகையின் உள்ளே எரியும் விளக்குகள் யாவும் ஒளியை இழந்து விட, சூரியன் உதயகிரியில் தோன்றினான். அவன் தனது குலத்தில் பிறந்தவனாகிய தசரதனது அரிய உயிர் நலிந்து மெலியும்படி பாவம் முற்றிய கைகேயியே செய்த பகைச் செயலினால் கோபம் மிகுந்து சிவந்து விட்டதை ஒத்திருந்தான்.
(கைகேயி சூழ்வினைப் படலம் 242)
துன்பம் பொறுக்க மாட்டாதது போல
மாலைப் பொழுது வந்தவுடன் கதிரவன் மறைதல் இயற்கை. என் குலத்து இராமன் காட்டுக்குச் செல்வதைக் கண்டு சகிக்க மாட்டேன் என்று நினைத்த கதிரவனே மலைகளுக்கிடையே மறைந்து கொள்ள விரைந்து சென்றான், என்று சொல்லும் தன்மையுடையனவாகி எருமைகளோடு பசுக்கள் தொழுவதிற்கு திரும்பும் வெயில் விலகிப் போகவும், நட்சத்திரங்கள் ஒளி பெற்ற பிரகாசிக்கவும், அந்தம மாலை அடைந்தான்.
(தைலமாட்டுப் படலம் 527)
நானே காத்து நிற்பேன் என்று கூறுபவன் போல
சூரியன் நம் குலத்து அரிய புதல்வன் தசரதன் சொர்க்கமடைந்து விட்டான். அவனுடைய புதல்வர்கள் அயோத்தியை விட்டு அகன்று தூரத்தில் உள்ளனர். அவர்கள் திரும்பி வரும் வரை இந்த நாட்டை நானே காத்து நிற்பேன் என்று கூறுபவன் போல, மீன்கள் நிறைந்த கடல் எனும் முரசு முழங்க, தேவர்கள் துதிக்க, மண்ணுலகத்து மக்கள் வணங்க ஒளிமயமான தனது ஒற்றைச் சக்கர தேர் மீது ஏறி உதயமானார்.
(தைல மாட்டுப் படலம் 601)
உயிர்கள் யாவும் இறக்கும் முறை
சூரியன் மறைதலும், மறுநாள் உதித்தலும் இயற்கை. இதை உலகத்து உயிர்களைப் போல பிறத்தல் என்பதைப் பெறாதவனாகிய சூரியன் அளவற்ற பிறப்புகளை உடைய உயிர்கள் யாவும் இறக்கும் முறை இதுதான் என்று உலகத்தாருக்குக் காட்டுகின்றவனைப் போல, முந்தின நாள் மாலையில் மறைந்தான். அடுத்த நாள் காலையில் இறந்த உயிர்கள் மீண்டும் பிறக்கும் முறை இதுதான் என்று காட்டுகிறவனைப் போல உதித்தான்.
“துறக்கமே முதல ஆய தூயன யாவையேனும்
மறக்குமா நினையல் அம்மா வரம்பு இல தோற்றும் மாக்கள்
இறக்குமாறு இது என்பான்போல முன்னை நாள் இறந்தான் பின் நாள்
பிறக்குமாறு இது என்பான் பிறந்தனன் பிறவா வெய்யோன்”
(குகப்படலம் 658)
சூரியனைப் பார்த்து தாமரை மலரும் இராமன் கண்டு சீதையின் முகம் தாமரைப் போன்ற மலர்ந்தது. (குகப்படலம் 659)
தசரதனுக்கு நீர்க் கடன் ஆற்றச் செல்வது போல
சூரியன் மலையில் மறையத் தொடங்கினான். நாகப் பாம்பாகிய படுக்கையில் இருந்து நீங்கிய இராமன் சூரிய குலத்தில் பிறந்தான். அந்தச் சூரிய குலத்திற்குத் தலைவனாக விளங்கி இருப்பவனும் அவனே ஆதலால் ஐந்து குதிரைகள் பூட்டப்பட்ட தேரினை உடைய சூரியன் இறந்து போன தசரதனுக்கு நீர்க் கடன் ஆற்றச் செல்வது போல, கடலுக்குள் மூழ்கினான்.
(திருவடிசூட்டுப் படலம் 1150)
சூரியன் வானின் நெற்றி விழி போல
உதயசூரியனின் தோற்றத்தை நான்கு பாடல்களில் குறிப்பிடுகிறார். கின்னரர்கள் வேதங்களைப் பாட, உயர்ந்தோர்கள் கைகுவித்து வணங்க, கடல் என்னும் அழகிய மத்தளம் ஒலிக்க, சிவபெருமானின் பொன்னிற சடை விகிர் பகிர்ந்து பறந்தது போல, ஒளி மிகுந்த சூரியன் வானின் நெற்றி விழி போல உதயமானார்.
“எண்ண அரிய மறையினொடு கின்னரர்கள்
இசை பாடஉலகம் ஏத்த
… … … … … … … … … … … ...
கண்ணுதல் வானவன் கனகச் சடைவிரிந்தா
லென விரிந்த கதிர்கள் எல்லாம்”
(மிதிலை காட்சிப்படலம் 581)
இராமபிரான் கரிய நிறம் பெற்றாரா
இராமன் கரிய செம்மல் வீதிகளில் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்த பெண்களின் மேல் விழிகளில் உள்ள கருமை நிறம். அவன் விழிகளின் கருமை நிறமா அல்லது இராமபிரானைப் பார்த்ததால் இராமபிரானின் கரிய நிறம் அவர்களின் விழிகளுக்கு வந்ததா? இத்தனை விழிகளின் கரிய நிறமும் இராமபிரானின் மீது பட்டதால் இராமபிரான் கரிய நிறம் பெற்றாரா?
“பஞ்சு அணி விரலினார் தம் படை நெடுங் கண்கள் எல்லாம்
செஞ்செவே ஐயன் மெய்யின் கருமையைச் சேர்ந்தவோதாம்
மஞ்சு அன மேனியான்தன் மணி நிறம் மாதரார்தம்
அஞ்சன நோக்கம் போர்க்க இருண்டதோ அறிகிலேமால்”
(உலாவியற்படலம் 1019)
பெண்களின் மைதீட்டப்பட்ட கண்களின் கருவிழி கருப்பு இராமனை நிறமும் கருப்பு இயற்கையாக இருக்கின்ற ஒன்றை ஏற்றிப் புகழ்வது தற்குறிப்பேற்ற அணி ஆகும்.
இருளைக் கிழித்துக் கொண்டு ஒரு தேர் மீது வருவது போல
கரு நிறத்து பேரொளியாகிய இராமனும், தாமரை மலரில் வாழும் திருமகளைப் போன்ற சீதையும் நாளை குறைவில்லாத முறையில் திருமணம் செய்து கொள்கின்றனர் என்று முரசறைவான் அறிவித்ததும், சூரியன் தன் குலத்துக்குமரனான இராமனது திருமணக் கோலத்தைப் பார்ப்பதற்கு வந்ததைப் போல தன்னுடைய சிவந்த கரணங்களால் இருளை கிழித்துக் கொண்டு ஒரு தேர் மீது வந்து தோன்றினான்.
“செஞ்சுடர் இருள் கீறித் தினகரன் ஒரு தேர்மேல்
மஞ்சனை அணி கோலம் காணிய என வந்தான்”
(கடிமணப்படலம் 1127)
ஒளி வந்ததும் இருள் விலகியது
இராமன் சரவங்க முனிவர் ஆசிரமத்தில் இரவைக் கழித்தான். விளங்குகின்ற ஒளியை உடைய சூரியன் வெயில் போன்ற ஒளியை வெளிவிடம் கூறிய வாழை போலப் பிரகாசிக்கும் திருமேனியை உடைய இராமனது புகழைப் போல எல்லாத் திசைகளிலும் பரவி இருப்பதும் அளவிட முடியாததுமான தன்னுடைய ஒளி விளங்கும் கைகளாகிய கிரணங்களின் வரிசையால் உலகை மூடிய இருளாகிய போர்வையை நீக்கினான். சூரியன் வந்தவுடன் இருள் விலகும் என்பது இயல்பான செய்தி.
“விலகிடு நிழலினன் வெயில் விரி அயில் வாள்
இலகிடு சுடரவன் இசையன திசைதோய்
அலகிடல் அரிய தன் அவிர் கர நிரையால்
உலகு இடுநிறை இருள் உறையினை உரிவான்”
(சரவங்கன் பிறப்பு நீங்கு படலம் 107)
கோதாவரி நதியினுடைய இயல்பு குறித்துக் கூறும் போது, அசைந்து பாய்கின்ற அந்த கோதாவரி ஆறு குற்றமற்ற உண்மையை உடைய இராம இலட்சுமணர் காட்டிலே வாழ்கின்ற துன்பம் தரும் காட்சியைக் கண்டு அவர்களிடம் கொண்ட பெருகிய அன்பினால் மிகவும் இறங்கி தொகுதியாக உள்ள குவளை மலர்களாகிய அழகிய கண்களில் இருந்து தேனாகிய கண்ணீர் துளிகள் பரவி வழிய கதறி கதறி அழுவதையும் ஒத்திருந்தது. பூக்களில் இருந்து தேன் நிரம்பி வழிவது என்பது இயல்பான செய்தி.
“எழுவுறு காதலால் இங்கு இரைத்து இரைத்து ஏங்கி ஏங்கி
பழுவநாள் குவளைச் செவ்விக் கண் பனி படர்ந்து சோர
வழுஇலா வாய்மை மைந்தர் வனத்து உறைவருத்தம் நோக்கி
அழுவதும் ஒத்தலால் அவ்அலங்கு நீர் ஆறு மன்னோ”
(சூர்ப்பணகைப் படலம் 220)
’போரிடம் வலிமை மிகுந்த ஒரு மானிடம் அரக்கர்களை வலிந்து கொன்ற செய்தியை வெற்றி மாலை சூடிய இராவணனுக்குத் தெரிவிப்போம்’ என்று எண்ணி, அங்கேத் தோன்றிய இரத்த ஆறுகள், மாறுபாடு கொண்ட அரக்கர்களின் உடல்களைச் சுமந்தனவாய் இலங்கையை அடைந்தன. ஆற்றில் லேசான பொருள் மிதந்து செல்லும் என்பது இயற்கையான செய்தி.
“வலம் கொள் போர் மானிடன் வழிந்து கொன்றமை
அலங்கல் வேர் இராவணற்கு அறிவிப்பாம் என
சலம் கொள்போர் அரக்கர்தம் உருக்கள் தாங்கின
இலங்கையின் உற்ற அக்குருதி ஆறு அரோ”
(கரண் வதைப்படலம் 485)