கட்டுரைக்காதை காட்டும் பாண்டியர்களின் அறநெறி
முனைவர் பா. சீனிவாசன்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தட்சசீலா பல்கலைக் கழகம், ஓங்கூர், திண்டிவனம்.
ஆய்வுச் சுருக்கம்
அறம் என்பது மனிதனைத் தீய வழிகளிலிருந்து காத்து நிற்பது. நல்வாழ்வுக்கு குன்றின் மேல் இட்ட விளக்காக வழிகாட்டுவது. இந்த அறக் கருத்துக்களை நம் இலக்கண இலக்கியங்கள் எடுத்துரைத்து வாழ்வு மேம்பாடு அடையத் துணை புரிகின்றன. அந்த இலக்கியங்களுள் அறநெறிக் கருவூலமாக விளங்குவது சிலப்பதிகாரம். அதில், கண்ணகி, கோவலன் மூவேந்தர்கள் வாயிலாக இக்கால மக்களுக்கும் அரசாளுபவர்களுக்கும் பொருந்தும் வகையில் அறக் கருத்துக்களை அமைத்துள்ளார் இளங்கோவடிகள். அக்கருத்துக்களிலிருந்து மூவேந்தர்களில் ஒருவான பாண்டியர்களின் அறநெறிகளையும், அவன் அறநெறி தவறியது ஊழ்வினையின் பயனே என்பதையும் விளக்கும் வண்ணம் இவ்வாய்வு அமைகின்றது.
அறிமுகம்
காவியம் என்ற வடசொல்லின் திரிபே, காப்பியம் என்பதாகும். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருளினைக் கொண்டு இயற்றப்பட்ட தொடர்நிலைச் செய்யுளே காப்பியம். அக்காப்பியங்கள் ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம் என வகைப்படுத்தப் பட்டுள்ளது. அந்த ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம் தமிழின் முதன்மை காப்பியமாகத் திகழ்கின்றது. இக்காப்பியம் உணர்வுகளின் காப்பியமாக இருப்பதனால், பாரதியார், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றார். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் தன்னகத்தேக் கொண்டது. தமிழர்களின் வாழ்வினை அகம், புறம் எனப் பிரித்து அவர்கள் வாழ்வுக்குத் தேவையான அறக்கருத்துக்களை இளங்கோவடிகள் இக்காப்பியத்தின் வாயிலாக எடுத்துக் கூறியுள்ளார். அவர் கூறிய அறங்களில் ஒன்றான அரசியல் பாயிரத்தில் மட்டும்தான் வந்துள்ளது. ஆனால், அரசு என்பதன் செயல்பாடுகள் குறித்து நூலில் பல இடங்களில் செய்திகள் வந்துள்ளன. அந்த வகையில், “அறம்” என்னும் பொருண்மையில் கட்டுரைக் காதையின் வாயிலாக பாண்டியர்களின் அறநெறி குறித்து இக்கட்டுரை அமைகிறது.
அறம் விளக்கம்
மக்களுக்கு உறுதி தரும் பொருள்கள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பதாகும். இந்நான்கிலும் முதன்மையாக விளங்குவது அறமே. இம்மானிடப் பிறவிதனில் தனக்கென வரையறுத்த ஒழுக்கங்களின் முழுமையான வடிவமே அறம். நம்மைப் பின் தொடர்ந்து வரும் தீய எண்ணங்களை அழித்தெறிவதே அறம். எண்ணமும் மனமும் தூய்மையானதாக இருந்தால்தான் எல்லாச் செயல்களும் சிந்தனைகளும் சிறப்புற விளங்குவதே அறம் என்பதனால் தான் மனத்துக்கண் மாசிலன் ஆதலன் என்றார் வள்ளுவர். தொல்காப்பியர் ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்’ என்று அறம் என்பதனை இன்பம் என்னும் பொருளில் கூறுகிறார். கழகத் தமிழ் அகரதியானது அறம் என்பதற்கு, கடமை, தர்மம், கற்பு, இல்லறம், துறவறம், புண்ணியம், அறநூல், அறக்கடவுள் என்னும் பொருள்களைத் தருகின்றது.
அறநெறிக் கருவூலம்
தமிழின் முதற் காப்பியமகவும், முதன்மைக் காப்பியமாக விளங்கும் சிலம்பினை அறநெறிக் கருவூலம் எனக் கூறுவதே பொருத்தமாகும். ஏனெனில் மற்ற காப்பியங்கள் எல்லாம் ஏதேனும் ஒரு சமயக் கருத்தினை மைமமாகக் கொண்டே அமைந்துள்ளது. இக்காப்பியம், அறவியல் காப்பியம் என்பதை, அரசியல் பிழைத்தோற்கு அறம் கூற்றாகும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவோர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என வாழ்வியலுக்குத் தேவையான அறக்கருத்துக்களை மூன்று அடிகளில் வைத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ வழி செய்கின்றது. இதனால் இதனை அறக் காப்பியம் என அறுதியிட்டுக் கூறலாம்.
மூவேந்தர்கள் ஆட்சி
தமிழக அரசர்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, அதன் எல்லைகளையும் கூற வேண்டியது அவசியம். சிலம்பு, சேர சோழ பாண்டிய மன்னர்களின் சிறப்பினை வஞ்சி புகார் மதுரைக் காண்டத்த்தின் வாயிலாக எடுத்துரைக்கின்றது. இருப்பினும், மூவேந்தர்களின் அரசுகள் தன் நாட்டு எல்லைகளைக் கடந்து தமிழ்வுணர்வு கொண்டவர்களாக இருந்தமையை இளங்கோவடிகள் தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நன்னாட்டு தென் தமிழ் தண் புனல் நன்னாட்டு அருந்தமிழ் என எடுத்துக் கூறுகின்றார். தொல்காப்பியம் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் கூறுவதனைப் போன்று சிலம்பில் இளங்கோவடிகள் இவர்களின் வட தென் எல்லைகளாக வடவேங்கடம் தென்குமரியும், கடலே கிழக்கு எல்லையாக விளங்கியதாகவும்,
“நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த தன்புனல் நன்னாட்டு
மாட மதுரையும் பீடார் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனற் புகாரும்
அரைசு விற்றிருந்த உரைசால் சிறப்பின்” (1)
“குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டிணி மருங்கிற் றண்டமிழ் வரைப்பிற்
செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியின்
ஐந்திணை மருங்கின் அறம்பொரு ளின்பம்
மக்கள் தேவ ரெனவிரு சார்க்கும்” (2)
“இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி” (3)
என்ற அடிகளின் வாயிலாகப் பதிவு செய்கின்றார்.
மூவேந்தர்களின் அரசியல் அறம்
சங்க கால மக்கள் மன்னர்களை தலைவராகக் கொண்டு அவர்களின் ஆட்சியின் கீழ் இயங்கினர் என்பதை மன்னர் உலகத்தே மலர் தலை உலகம் என்கிறது புறநானூறு. அதனால்தான் மக்களின் இயல்பையும், தேவைகளையும் உணர்ந்து செயல்படும் செங்கோன்மையாக அறம் தவறாது, அல்லவை நீக்கி அரசானது சமுதாயத்தினை மேன்மையுறச் செய்தல் வேண்டும். அதுவே அரசின் கடமையென,
“அறனிழுக்கா தல்லவை நீக்கி மறன் இழுக்கா மானம்
உடையது அரசு” (4)
என்பது வள்ளுவர் கூற்று.
ஔவையோ கோல் உயர கோன் உயர்வான் என்கின்றார். அதாவது எல்லா நூல்களுமே அரசன் நீதியோடு இருக்க வேண்டும் என்பதைக் கூறுகிறது. அரசவைக்கு எப்பொழுதும் நன்மக்களைக் காத்தலும் கொடியவர்களைத் தண்டித்தலுமே சிறந்த அறங்களாகும். மேலும் நீதியுடைய அரசனையே யாவரும் போற்றுவார்கள். அவர்களிடத்தே திருமகள் பல்லாற்றானும் வந்தெய்துவள். அரசன் தன் நாட்டிலுள்ள அனைவர்க்குமே மன்னன் நீதியுள்ளவனாக இருக்க வேண்டும். அது போலவே நீதி தவறிய மன்னன் நீதியை தன் விருப்பின்படி பயன்படுத்தும் அரசன் துன்புறுவான். மேலும், நீதி தவறும் பொழுது நாடு வேறுபடும் மக்கள் முதலியோரும் வேறுபடுவர். பொதுவாகவே, அரசன் நல்லவனாக இருந்தால் அறக்குணம் உடையவனாக இருந்தால் அந்த நாடு நலம்பெறும். அறம் தவறிய அரசனின் நாடு வளம் பெறுவது கடினம் என்பதைப் பல பாடல்களும் நூல்களும் சான்றாக இருந்து விளக்குகிறது. மேலும் அறநெறி தவறாமல் அறநெறியில் இயங்கும் அரசனையே குடிமக்கள் விரும்புவர். அந்த வகையில் மூவேந்தர்கள் தமது ஆட்சியில் அறச்சிந்தனையோடு செயல்பட்டனர். இதனை சோழ அரசனுக்கு அற நெறிகள் புகட்ட ஐம்பெருங்குழு எண்பேராயமும் சுற்றமாக விளங்கி அறத்துடன் ஆட்சி செய்ய உதவியதாக,
“அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்” (5)
“ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும்” (6)
“வெம்பரி யானை வேந்தற் கோங்கிய
கரும வினைஞருங் கணக்கியல் வினைஞரும்” (7)
என்ற பாடல் அடிகளின் வாயிலாக இளங்கோவடிகள் எடுத்துரைப்பதனைக் காணலாம். அதனைப் போன்றே பாண்டியர்களும் சேரர்களும் அறநெறி வழுவா ஆட்சி புரிந்தமையினை,
“கோத்தொழி லாளரோடு கொற்றவன் கோடி
வேத்தியல் இழந்த வியனிலம் போல
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்” (8)
“தென்னர் கோமான் தீத்திறங் கேட்ட
மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்
எம்மோ ரன்ன வேந்தற் குற்ற
செம்மையின் இகந்தசொற் செவிப்புலம் படாமுன்
உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென
துன்னிய துன்பம் துணிந்துவந் துரைத்த
நன்னூற் புலவற்கு நன்கனம் உரைத்தாங்கு” (9)
என்ற பாடல் அடிகளின் வாயிலாக அறியலாம்.
பாண்டியர்களின் அறநெறி
குடிமக்கள் தம் மன்னர்கள் அறநெறி பிழவாமல் ஆட்சி செய்தலை விரும்பி அந்த ஆட்சி கிடைக்கப் பெறும் பொழுது வாழ்த்தவும் செய்வர். அதே வேளை, அறநெறியில்லா அரசனை எதிர்க்கவும் செய்யவர். இதனைக் குறளும் கடிகையும்
“குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்” (10)
“கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்து ஆள்வான்
உண்ணோட்டம் இன்மையும் இல்” (11)
என்ற அடிகள் வாயிலாக எடுத்துரைக்கின்றது.
இக்கருத்துக்களை சிலம்பும்,
“கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப்
படுங்கதிர் அமையம் பார்த்திருந் தோர்க்குப்” (12)
“பெரு நில மன்னன் இருநிலம் அடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி
மாதர்க் கோலத்து வலவையின் உரைக்கும்
மூதிர் பெண்டிர் ஓதையின் பெயர” (13)
என்ற அடிகளின் வாயிலாக விளக்குகின்றது.
மேலும் பாண்டிய மன்னர்கள் அறநெறி தவறாமல் ஆட்சி செய்தவர்கள். அவர்கள் தன் நாட்டு மக்களுக்கு எந்தவிதமான துன்பமும் தராமல் செங்கோலாட்சியைத் தந்தவர்கள் என்பதனை,
“கருங்கதிர் வேனில் இக்காரிகை பொற அள்
படிந்தில சீறடி பரல்வெங் கானத்துக்
கோள்வல் உளியமும் கொடும் புற்று அகழா
வாள் வரி வேங்கையும் மான்கணம் மறலா
அரவும் சூரும்இரைதேர் முதலையும்
உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா
செங்கோல் தென்னவர் காக்கும் நாடென
எங்கணும் போகிய இசையோ பெரிதே” (14)
என்ற அடிகளின் வாயிலாகக் காணலாம். இதனையே இளங்கோவடிகள், கோவலன் மதுரை மாநகர்க்கு வரும் முன் பாண்டியர்களின் ஆட்சியினைப் நாட்டுக்குப் பல செல்வத்தைத் தருவதும் மக்களுக்கு நிழலாக விளங்குவதும் ஆகிய அருளாட்சி முறையைக் கடமையாகக் கொண்டு சிறிதும் அறநெறி வழுவாது ஆள்பவர் பாண்டியர்களே என கோவலன் கூற்றாக,
“நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி
கடம்பூண்டு உருட்டும் கௌரியர் பெருஞ்சீர்க்
கோலின் செம்மையும் குடையின் தண்மையும்
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப்
பதியெடு அறியாப் பண்புமேம் பட்ட
மதுரை மூதூர் மாநகர் கண்டாங்கு” (15)
“கருங்கதிர் வேனில் இக்காரிகை பொற அள்
படிந்தில சீறடி பரல்வெங் கானத்துக்
கோள்வல் உளியமும் கொடும் புற்று அகழா
வாள் வரி வேங்கையும் மான்கணம் மறலா
அரவும் சூரும்இரைதேர் முதலையும்
உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா
செங்கோல் தென்னவர் காக்கும் நாடென
எங்கணும் போகிய இசையோ பெரிதே” (16)
எனவும் பாண்டியன் அறம் தவறவில்லை என,
“மண்ணக மடந்தை வான்துயர் கூறக்
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென்
நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள் நல்லறமே
கண்ணகி தன்கேள்வன் காரத்தால் - மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை
விளைவாகி வந்த வினை” (17)
என்னும் பாடலடிகளில் சிலம்பு எடுத்துக்காட்டுகிறது.
கட்டுரைக்காதை காட்டும் பாண்டியர் அறநெறி
பாண்டிய மன்னன் அறநெறி தவறாமல் ஆட்சி செய்தவன். அவன் தன் நாட்டு மக்களுக்கு எந்த விதமான துன்பமும் தராமல் செங்கோலாட்சியைத் தந்தவன் என்பதை மதுரை தெய்வமான மதுராபுரி கண்ணகியினை நோக்கி ஆராய்ச்சி மணியின் நா அசைவைக் கேட்டறியாதவன் பகை மன்னர்கள் பொறாமையால் பழி தூற்றுவார்களே அன்றி தன் குடிமக்கள் பழி தூற்றும் கொடுங்கோலன் அல்லன் என
“மறைநா ஓசை யல்லாது யாவதும்
மணிநா வோசை கேட்டது மிலனே
அடி தொழு திறைஞ்சா மன்ன ரல்லது
குடிபழி தூற்றும் கோலனும் அல்லன்” (18)
என்று கூறுகிறது. மேலும், கீரந்தை என்னும் அந்தணன் பொருள் தேட தனது மனைவியை வீட்டில் விட்டுச் சென்று விட்டான். பாண்டிய மன்னன் இரவில் நகரவலம் போகும்போது, கீரந்தை வீட்டில் சத்தம் கேட்கவும் மன்னன் கதவைத் தட்டிவிட்டான். அப்போது அச்சம் கொண்ட அந்தணன் மனைவி, “குடிமக்களுக்கு அரசனுடைய செங்கோலாட்சி காவலாக அமையும் அல்லாது அதனை விட காவல் வேறு எதுவும் இல்லை” என்று கூறி என்னை இல்லத்தில் விட்டு அகன்றீர். இப்பொழுது அந்த அரச வேலி காவலாக இல்லையோ? எனக் கூறினாள். அதனைக் கேட்ட பாண்டிய மன்னன் வருத்தமுற்று சக்கரப்படையையே உடைத்தத் தனது கையினை உடை வாளால் வெட்டினான் என அத்தெய்வம்,
“நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று
வச்சிரத் தடக்கை அமரர் கோமான்
உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தகை
குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து
இறைக்குடிப் பிறந்தோர்க் கழுக்கம் இன்மை” (19)
என்ற அடிகளில் பாண்டியன் அறநெறியில் நின்ற செய்தியை எடுத்துரைக்கின்றது. அதோடு மட்டுமல்லாமல் சோழ நாட்டில் பராசரன் என்னும் கற்ற அந்தணன் சேர நாட்டுக்குச் சென்று சேர அரசனைப் பாடிப் பரிசல்கள் பெற்று வந்தவன் வழியில், பாண்டி நாட்டில் மறையவர் வாழும் அரச மரத்தை உடைய மன்றத்தில் தங்கினான். அங்கே விளையாடிக் கொண்டிருந்த அவ்வூர்ச் சிறுவர்கள் அவனை வந்து சூழ்ந்து கொண்டனர். அச்சிறுவர்களை நோக்கித் தன்னோடு சேர்ந்து. வேதம் ஓதினால் அவர்களுக்குப் பரிசு தருவதாகக் கூறினான். அச்சிறுவர்களுள் வார்த்திகன் என்பான் மகன் தக்கிணன் மிகத் தெளிவாக அம் மந்திரங்களை உச்சரித்துக் கூறினான். அவனைப் பாராட்டிப் பல பரிசுகள் அளித்துப் பாராட்டித் தன் ஊர் திரும்பினான் பராசரன். அவ்வூரில் சிலர் இக் குடும்பத்து மக்கள் அணிகள் அணிந்து நடமாடுவதைக் கண்டு களவாடிவிட்டதாகக் கூற வார்த்திகனைச் சிறையிட்டனர். வார்த்திகன் மனைவி கார்த்திகை அவ்வூர்க் கொற்றவை கோயில் முன் நின்று முறையிட்டாள். அக்கோயில் கதவு மூடிக் கொண்டது. இதனை அறிந்த வேந்தன் தன் ஆட்சியில் எங்கோ கேடு நிகழ்ந்து விட்டது என விசாரித்து, தான் செய்த தவறினை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு. அந்த அந்தணனை அறநெறி விடுதலை செய்தான் என,
“வலவைப் பார்ப்பான் பராசர னென்போன்
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்
கோன்முறை யறைந்த கொற்ற வேந்தன்
தான்முறை பிழைத்த தகுதியுங் கேள்நீ” (20)
என்ற அடிகளின் வாயிலாக கூறுவதனைக் காணலாம்.
அதேவேளையில், பரதனாக முற்பிறவியில் இருந்த கோவலன் ஆய்ந்து அறியாமல் சங்கமன் என்னும் வணிகனை ஒற்றன் எனக் கூறித் தண்டிக்கச் செய்தான். அதனை அறிந்த அவன் மனைவி நீலி என்பவள் இச்சாபமே உன்
நிலைக்குக் காரணம் கோவலனின் முன் வினையேக் காரணம் என கண்ணகியிடம்,
“சங்கமன் என்னும் வாணிகன் தன்னை
முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவன்
வெந்திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன்
பரத னென்னும் பெயரனக் கோவலன்
விரத நீங்கிய வெறுப்பின னாதலின்
ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு
வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழிக்
கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி
நிலைக்களங் காணாள் நீலி என்போள்
அரசர் முறையோ?பரதர் முறையோ?
தம்முறு துயரமிற் றாகுக வென்றே
விழுவோ ளிட்ட வழுவில் சாபம்
பட்டனி ராதலிற் கட்டுரை கேள்நீ” (21)
என்ற அடிகளின் வாயிலாக பாண்டியனின் அறநெறியினை எடுத்துரைக்கின்றது.
நிறைவுரை
சிலம்பில் அரசு அறம் என்பது மூவேந்தர்களை மையமாக வைத்துக் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் பாண்டிய மன்னனை அதிகமாக மையப்படுத்தி அறம் பேசப்படுகிறது. அதற்குக் காரணம் மூவேந்தர்களில் சிறப்பான ஆட்சியைத் தந்தவன் பாண்டியன். அதனால் தான் அவனை மையமாகக் கொண்டு அறம் பேசப்படுகிறது. இதனை மதுராபுரி தெய்வம், மறையோன், கோவலன் வாயிலாக இளங்கோவடிகள் எடுத்துரைக்கின்றார். பாண்டியன் ஊழ்வினைப் பயனாலேயே அறம் பிழைபட்டுவிட்டானே தவிர, அறம் தவறவில்லை என்பதை இக்கட்டுரையின் வாயிலாக காணமுடிகின்றது.
சான்றாதாரங்கள்
1. புகார்க் காண்டம்-வேனிற் காதை:1-5
2. வஞ்சிக் காண்டம்-நூற் கட்டுரை-1-6
3. புகார்க் காண்டம்- அரங்கேற்று காதை-37-38
4. குறள்-384
5. புகார்க் காண்டம்-அரங்கேற்று காதை-126
6. புகார்க் காண்டம்-இந்திர விழா ஊர் எடுத்த காதை-156
7. வஞ்சிக்காண்டம்-கால்கோள் காதை-38-39
8. மதுரைக் காண்டம் –காடு காண் காதை – 60-62
9. வஞ்சிக்காண்டம்-காட்சிக் காதை-91-106
10. குறள்-549
11. நான்மணிக்கடிகை-93:3-4
12. மதுரைக் காண்டம் – புறஞ்சேரியிறுத்த காதை-15-16
13. புகார்க் காண்டம்-இந்திர விழா ஊர் எடுத்த காதை-71-75
14. மதுரைக் காண்டம் –புறஞ்சேரி இறுத்த காதை-3-10
15. மதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-1-6
16. மதுரைக் காண்டம் –புறஞ்சேரி இறுத்த காதை-3-10
17. மதுரைக் காண்டம் -கொலைக்களக் காதை-215-221
18. மதுரைக் காண்டம் -கட்டுரை காதை- 30-34
19. மதுரைக் காண்டம் -கட்டுரை காதை- 49-53
20. மதுரைக் காண்டம் -கட்டுரை காதை- 61-132
21. மதுரைக் காண்டம் -கட்டுரை காதை-151 -170
துணை நூற்பட்டியல்
1. திருக்குறள், சிற்பி பாலசுப்பிரமணியம், தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், சென்னை. (2014)
2. நான்மணிக் கடிகை (மூலமும் உரையும்), ஞா. மாணிக்கவாசகன், உமா பதிப்பகம், சென்னை.
3. சிலப்பதிகாரம் - சிலப்பதிகாரம் மூலமும் உரையும், புலியூர் கேசிகன், பாரதி பதிப்பகம், சென்னை.
4. சிலப்பதிகாரத்தில் பண்பாட்டுக் கோலங்கள், இரகுபரன், இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சு, (2003).
5. சிலப்பதிகார வைதீகக் கருத்துகள், அ. சீனிவாசன், மாணவர் மறுதோன்றி மையம், சென்னை. (2001)
6. சிலப்பதிகாரத்தில் அறம், ஜெய. ராஜமூர்த்தி, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை.
கட்டுரைகள்
1. சிலப்பதிகாரத்தில் அறம் - மீள் பார்வை, முனைவர் செ. ரவிசங்கர்.
2. சிலப்பதிகாரத்தில் அறச் சிந்தனைகள், முனைவர்.சு. மகாலட்சுமி
3. அரசியல் அறக் கோட்பாடுகள் (பாகம் – 2), முனைவர் மு. பழனியப்பன்
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|