பாவேந்தர் காட்டும் பெண்மை!
முனைவர். மா. தியாகராஜன்
முன்னுரை
இந்திய நாட்டில் அந்நியர் ஆட்சி கொலு வீற்றிருந்த போது, தமிழ்மொழி, தன் சீரும் சிறப்பும் குன்றி, வளமும் வனப்பும் சீர்குலைந்து, தாயினை இழந்து தவிக்கின்ற சேய் போல் இருந்தது! அந்நிலையில், அறிவு ஆதவன் போன்று வீரகவி "சுப்பிரமணிய பாரதி" தோன்றினார். அவர் வழியினைப் பின்பற்றித், தனக்குத் தானே ஒரு பாதையை வகுத்துக் கொண்டு, தமிழ்நாட்டின் சமூகக் கொடுமைகளைக் கண்ணுற்று மனம் பொறாது, அலைகளைக் களைந்தெறியக் கொதித்தெழுந்தவர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்! இவருடைய கவிதைகள் இனிமையும் எளிமையும் கொண்டவை. அவை, படிப்போர் உள்ளத்தில் உணர்ச்சியும் உவகையும் ஊட்டவல்லன. பாரதியாரின் கவிதைத்தன்மையும் திரு.வி.கவின் அழகொழுகும் கன்னித்தமிழின் நன்னடையும் ஒருங்கு சேர்ந்து யாண்டும் ஒளி வீசும் கதிர்மணி விளக்கமாகத் திகழ்வதே பாரதிதாசனின் கவிதைகள் எனலாம்.
நோபல் பரிசுக்கும் உரியன
தமிழ்ப்பெரியார் திரு.வி.க.வின் “பெண்ணின் பெருமை” பாரதிதாசனின் பெண்மை, கைம்மை பற்றிய கவிதைகளில் காட்சியளிக்கின்றன. சென்ற காலத்தின் பழுதிலாத் திறனும், எதிர்காலத்தின் சிறப்பும் புரட்சிக்கவிஞர் கவிதைகளில் இழையோடுகின்றன. பாரதிதாசன் பாடல்கள், இலக்கியச் சுவையில் ஐம்பெருங்காப்பியங்களையும் விஞ்சி நிற்கின்றன.
“பாட்டுக்கொரு புலவன் பாரதி” என்பது போல் “புரட்சிக்கு ஒரு கவிஞன் பாரதிதாசன்!” சமுதாயத்தில் புரையோடிக் கிடந்த மடமைக் கருத்துக்களைக் கொளுத்தி, மக்களின் செவ்விய வாழ்வுக்காகத் தமிழ்க்கவிமழை பொழிந்த கார்மேகமாக விளங்கியவர் பாவேந்தர். இவருடைய அழகின் சிரிப்பு என்னும் நூலைப்படித்த “கமில் சுவலபெல்” என்னும் மேனாட்டறிஞர், அழகின் சிரிப்பு எனும் தலைப்பே ஒரு கவிதையாக இருக்கிறது. (The title itself is a poem) என்றும், இப்பாடல்கள் ஆங்கிலத்திலிருந்திருந்தால் உறுதியாக “நோபல் பரிசு” கிடைத்திருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
பெண்மையைப் போற்றுதல்
வள்ளுவரும் இளங்கோவும் ஏற்றிப் போற்றிய பெண்ணினத்தை - மகாகவி பாரதியின் வாரிசான பாரதிதாசனும் போற்றுகின்றார். பெண்ணுரிமை பற்றிக் கவிதையில் பாரதியும், உரைநடையில் திரு.வி.க வும் பேசினர். பாரதிதாசனார் அத்துறையில் பல பாடல்களைப் புனைந்துள்ளார். “ஜான்மில்டன்” என்ற மேலைநாட்டுக் கவிஞர், பெண்களை “வலிமையற்ற படைப்புக்கள்” (Weak vessals) என்று குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு உரிய இடமளிக்க வேண்டும் எனப் பாரதிதாசனார் பேசுகின்றார்.
“ஆடை அணிகலன் ஆசைக்கு வாசமலர்
தேடுவதும் ஆடவர்க்குச் சேவித் திருப்பதும்
அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப்போல் வாழுவதும்
கெஞ்சுவது மாகக் கிடக்கும் மகளிர்குலம்
மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர்பகுதி’’ (பாரதிதாசன் கவிதைகள்)
- என்று பெண்கள் நிலையைக் குறிப்பிட்டுள்ளார். ஆயினும், இந்நிலை அறவே களையப்பட வேண்டும் என்பதையும் கடுமையான குரலில் முழங்குகின்றார். பெண்ணைத் தூற்றும் பேயர்களைப் பின்வருமாறு சாடுகின்றார்:
“பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம் என்கின்றீரோ?
மண்ணுக்குக் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை!
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே!
ஊமையென்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்
ஆமை நிலைதான் ஆடவர்க்கும் உண்டு!
புலனற்ற பேதையாய்ப பெண்ணைச் செய்தால்அந்
நிலம்விளைந்த பைங்கூழ் நிலைமையும் அம்மட்டே!’’ (பாரதிதாசன் கவிதைகள்)
- என்ற பாடலில், பெண்ணினத்தின் பேதமை நீங்கப் பெரிதும் முயலவேண்டும் என முழங்குகிறார் கவிஞர்.
குடித்தனம் பேணுதற்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும், உலகினை உணர்ந்து கொள்வதற்கும் பெண்களுக்கே கல்வி வேண்டும் என்று கூறி,
“கல்வியில்லாத பெண்கள் களர்நிலம் அந்நிலத்தில்
புல் விளைந்திடலாம்! நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை
நல்லறிவுடைய மக்கள் விளைவது நவிலவோ நான்! (குடும்ப விளக்கு)
-என்று கல்லாத பெண்ணினத்தைக் “களர்நிலம்” என்றும் உவமைகாட்டிப் பெண் கல்வியின் சிறப்பினை உணர்த்துகின்றார். பெண்மை உயர்வுக்குண்டான வழியைப் பாரதி கண்ட புதுமைப் பெண்களை உருவாக்கும் வழியைப் பாடுகிறார். தான் காண விழையும் சமுதாயப் புரட்சிக்குத் துணையாய் நின்று தோள்கொடுப்பவர்கள் பெண்களே” என்பது இவர்தம் அசையாத நம்பிக்கை!
“அன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும்
எண்ணும்படி அமைத்தீர்! இப்படியே பெண்ணுலகம்
ஆகும்நாள் எந்நாளோ அந்நாளேதுன்பமெல்லாம்
போகும்நாள் இன்பப் புதிய நாள் என்றுரைப்போம்!’’ (பாரதிதாசன் கவிதைகள்)
என உறுதியாகக் கூறுகிறார் கவிஞர்!
காதல் மணக்கும் வாழ்வு
பெண்மையும் ஆண்மையும் அன்புப் பெருக்கால் இணைந்து இல்லறம் நடத்த வேண்டும் என்பதே இவரது உள்ளக்கிடக்கை. பாரதி போற்றிய காதல் மணத்தை அவர்தம் தாசனும் வரவேற்றுப் போற்றுகின்றார்!
“காதல் அடைதல் உயிரியியற் கை அது,
கட்டில் அகப்படும் தன்மையதோ?’’ (குறிப்பு1)
எனக் கேட்டுச் சாதி மதபேத சாத்திரங்களெல்லாம் காதலுக்கெதிரே துச்சமெனப் பேசுகின்றார். உயிர்க்காதலால் தம்மை மறந்து இணைந்திருப்போர் உலவும் உலகே தனி உலகு அது!
“சாதலும் வாழ்தலும் அற்ற இடம்-அணுச்
சஞ்சலமேனும் இல்லாத இடம்
மோதலும் மேவலும் அற்ற இடம்-உளம்
மொய்த்தலும் நீங்கலும் அற்ற இடம்! (குறிப்பு 2)
-இப்படிப்பட்ட சொர்க்கத்தின் தனிவாயிலில் சேர்ந்து நுழையும் காதலர்க்குப் புறவுலகத்தடையும் ஒரு தடையாமோ எனக் கேட்டு உலகை எச்சரிக்கின்றார்.
“இன்று தொட்டுப் புவியே-இரண்
டெண்ணம் ஒருமித்தபின்
நின்று தடை புரிந்தால் –நீ
நிச்சயம் தோல்விகொள்வாய்!’’ (குறிப்பு3)
என்கிறார். அவர் காட்டும் காதற்காட்சி ஒன்று காண்போம். காதல் உணர்வு எனும் உலகில் துன்பம், மோதல், மேவல், மொய்த்தல், நீங்குதல் முதலியன இல்லையென்று கூறும் கவிஞர், காதற்குற்றவாளிகளை நமக்கு அறிமுகப்படுத்தி வைக்ககிறார்.
“சந்திரன்”, கூடத்தில் தனியே பாடம் படித்திருக்க, அங்கே அவன் இதயம் கவர்ந்த “சொர்ணம்” வருகின்றாள். சந்திரனைப் பார்க்கின்றாள். அவனும் தலைநிமிர்ந்தான் இருவர் விழிகளும் எதிரெதிர் மோதின. கண்ணோடு கண்ணினை நோக்கு கொக்கின் வாய்ச்சொற்களுக்கு அங்கே இடமேது? இதோ அந்த அழகான காட்சி!
“கூடத்தில் மனப்பாடத்திலே-விழி
கூடிக் கிடந்திடும் ஆணழகை
ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால்-அவள்
உண்ணத் தலைப்படும்நேரத்திலே
பாடம் படித்து நிமிர்ந்தவிழிதனிற்
பட்டுத் தெறித்தது மானின்விழி!
ஆடை திருத்தி நின்றாள் அவள்தான்-இவன்
ஆயிரம்ஏடுதிருப்புகின்றான்!’’ (குறிப்பு 4)
புத்தம் புதிய புத்தகமொன்று புன்னகை பூத்து நிற்கையிலே கையிலுள்ள ஏட்டிலா கவனம் செல்லும்? ஓடைக்குளிர் மலர்ப்பார்வை, உண்ணத்தலைப்படுதல், பட்டுத்தெறித்தது மானின் விழி ஆகிய சொல்லோவியம் சிறந்து நிற்கும் காட்சியைக் காணலாம்.
பாரதிதாசனும் செயங்கொண்டாரும்
பிரிவுத் துயரினைப் பேசவந்த கவிஞர் பின்வருமாறு கூறுகின்றார்.
“காதல் துரத்தக் கடிதுவந்த வேல்முருகன்
ஏதும் உரையாமல் இருவிரலை வீட்டுத்
தெருக் கதவில் ஊன்றினான் ‘’திறந்தேன்’’ என்றோர்சொல்
வரக்கேட்டான்.ஆ! ஆ! மரக்கதவம் பேசுமோ?
என்ன புதுமை எனஏங்க மறுநொடியில்
சின்னக் கதவு திறந்த ஒலியோடு
தன்னருமைக் காதலியின்
தாவுமலர்க்கை நுகர்ந்தான்!
புன்முறுவல் கண்டுள்ளம் பூரித்தான் ‘என்னேடி
தட்டு முன்பு தாழ் திறந்து விட்டாயே’ என்றுரைத்தான்;
விட்டுப் பிரியாதார் மேவும் ஒரு பெண் நான்
பிரிந்தார் வரும் வரைக்கும் பேதை, தெருவிற்
கருமரத்தாற் செய்தகதவு’’ (குறிப்பு 5)
பாரதிதாசனின் இப்பாடல் நயத்துடன் ஒப்பு நோக்கத்தக்க கலிங்கத்துப் பரணிப் பாடல் ஒன்றினையும் கண்டு மகிழ்வோம்.
“வருவார் கொழுநர் எனத் திறந்தும்
வாரார் கொழுநர் என அடைத்தும்
திருகும் குடுமி விடியளவும் தேயுங் கபாடம் திறமினோ!’’ (கலிங்கத்துப் பரணி. கடைதிறப்பு)
கவிதைக்கு விளக்கம் தேவையில்லை. மீண்டும் மீண்டும் பாட்டைப் படித்துச் சுவைத்துக் கவியின் உளவியல் நுட்பமும் சொற்திறனும் கண்டு மகிழலாம்!
சமுதாயச் சீர்திருத்தம்
இளமைத் திருமணத்தை எதிர்க்கும் புட்சிக்கவிஞர், விதவைத் திருமணம் வேண்டுமென்கிறார். கைம்பெண் நிலைக்குக் கழிவிரக்கம் ஒன்று “கோரிக்கையற்றுக் கிடக்கு தன்னே இங்கு வேரிற் பழுத்த பலா’’ என்று கூறி,
“ஆடவரின் காதலுக்கும் பெண்கள் கூட்டம்
அடைகின்ற காதலுக்கும் மாற்றமுண்டோ?
பேடகன்ற அன்றிலைப் போல் மனைவி செத்தால்
பெருங்கிழவன் காதல் செயப் பெண் கேட்கின்றான்?
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால் பின்மணத்தல் தீதோ?
பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ?” (குறிப்பு 6)
என்று, இளமையில் கைம்மை ஏற்ற இளம்பெண்ணின் நல்வாழ்வுக்கு வாதிடும் முறையால் வினாவினை எழுப்பி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறார்.
முடிவுரை
சமுதாயத்தில் இடம் பெற்றுவிட்ட தீயப் பழக்க வழக்கங்களையும் மூடக் கருத்துக்களையும் கடிந்து பாடி, படிப்பவர் உள்ளத்தில் புத்துணர்ச்சியை எழுப்பிய புரட்சியாளர் பாவேந்தர் ஆவார்! அப்பெருமகனாரின் பாட்டுக்களில் விழுமிய கற்பனையும் உண்டு; வேகமான உணர்ச்சியும் உண்டு; பழந்தமிழ் மரபை ஒட்டிய புத்துலகச் சிந்தனையும் உண்டு. தமிழர் வாழ்வுக்கு அவர்தம் எழுத்தும் பேச்சும் என்றும் அரண் செய்யும்!
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.