இடைக்கால இலக்கிய அறம்
முனைவர் மா. தியாகராசன்
முன்னுரை
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல (குறள் 39)
உலகில் உள்ள நல்லன எல்லாம் புண்ணியமெல்லாம் ஞானமெல்லாம் ‘அறம்’. எச்செயலெவரானும் பாராட்டப் பெறுகின்றதோ அது அறமாகும். “விலக்கத்தக்கது ஒன்றும், உலகத்துப் பலராலும் பாராட்டப் பெறுமாயின் அறமாகலாம்” என்கிறது சுக்கிர நீதி. (அத் 5.சு35)
தமிழில் ‘அறம்’ வடமொழியில் தர்மம் என்ற இரண்டு சொற்களும் ஒரே பொருள் உடையனவாக இருந்த போதிலும் அவற்றின் தன்மை, வேறுபாடு உடையனவாகும். ‘தர்மம்’ என்ற சொல் ‘புருஷ தர்மம்’ ‘பத்தினி தர்மம்’ என்று பலவாறு வரையறுக்கப்பட்ட சில நியதிகளுக்குக் கட்டுப்பட்டது.’ அறம்’ என்ற சொல், விரிந்து பரந்து அதே சமயத்தில் ஆழ்ந்த கருவையும் தன்னிடத்தை நிலைபெறச் செய்வதாகும்.
"மனத்துக்கண் மாசிலனாதலே" அறம் என்ற வள்ளுவர் அறத்தை இல்லறம், துறவறம் என்று இருபெரும் கூறுகளாக்கினார். கவிச்சக்கரவர்த்தி கம்பனோ, வில்லறம், சொல்லறம் என்றும் அறக்கூறுகளை அதிகமாக்கினார். இத்தகைய சிந்தனைகள் இடைக்கால இலக்கியங்களில் பரவலாக வலியுறுத்தப்பட்டுள்ளதை ஈண்டுக் காண்போம்.
இடைக்கால இலக்கியம்
இடைக்கால இலக்கியம் பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் என்ற இருபெரும் பகுப்புக்களை உள்ளடக்கியதாகும். மூவர் தேவாரம், மாணிக்க வாசகர் பாடல்கள் ஆகியவை சைவத்திருமுறைகள். ஆண்டாள், தொண்டரடிப்பொடி ஆழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகியோர் பாடல்கள் நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தைச் சேர்ந்த வைணவ இலக்கியங்கள் . சைவ வைணவ சமயங்களைச் சேர்ந்த இவை அனைத்தும் பக்தி இலக்கியங்கள்` என்ற பகுப்பில் அடங்குபவை. தூது, உலா, பிள்ளைத்தமிழ், பரணி,கலம்பகம், அந்தாதி ஆகிய ஆறும் சிற்றிலக்கிய வகைகளாகும்.
"என் கடன் பணி செய்து கிடப்பதே" "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று திருத்தொண்டர்கள் மூலம் பொதுத் தொண்டை வலியுறுத்தும் பக்தி இலக்கியங்கள் முழுமையிலும் `தானம், தவம், துறவு, ஞானம், இன்னா செய்யாமை, அன்பு, ஒப்புரவு, நடுவு நிலைமை போன்ற அறவியல் கோட்பாடுகள் பெரிதும் காணப்படுகின்றன.
நாளைய துன்பத்திற்கு அஞ்சி, இன்றைய இன்பத்தைக் கைவிட்டுப் `பசி வந்தால் பத்தும் பறந்து போகும்` நிலையில் உள்ளவர்கட்கு அறம் விளங்காது.
அறத்தோடு வாழவும், அதை வாழ்க்கைக்கு ஏற்றவகையில் விளங்க வைக்கவும் சான்றோர் சிலரால்தான் முடியும். உண்மையே அறம்; அதனால்தான் "அறம் ஒன்றே தரும் மெய்யின்பம்" என்றனர் ஆன்றோர். பாரதிகூட,
"அறம்ஒன் றேதரும்
மெய்யின்பம்; என்றநல்
அறிஞர் தம்மை அனுதினம் போற்றுவேன்!"
என்று பாடினார்.
அபிராமி பட்டர் சுட்டும் அறங்கள்
"மணியே, மணியில் ஒளிவிடும் ஒளியே, ஒளியினை உடைய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட அணிகலனே, அணியப்படும் அணிகலனுக்கு அழகே" என்று அபிராமியைப் பணிந்து வணங்கும் பட்டர், சிவபெருமான் அளித்த இருநாழிநெல்லினைக், கொண்டு, வேளாளர் முதலியவர்களால் பயிர் செய்வித்து நாட்டின் வளத்தைப் பெருக்கி அதன் வாயிலாக முப்பத்திரண்டு அறங்களைச் செய்து உயிர்களைப் பிழைக்கச் செய்தவளும் காமாட்சியம்மை என்று போற்றுகின்றார்.
அவர் குறிப்பிடும் அறங்கள் மொத்தம் முப்பத்திரண்டு ஆகும். அவையாவன:
ஆதுலர்க்குச்சாலை (ஆதுலர்- வறுமையாளர்); ஓதுவார்க்குணவு; அறுசமயத்தார்க்குண்டி; பசுவுக்கு வாயுறை (வாயுறை புல், வைக்கோல் முதலியன); சிறைச் சோறு; ஐயம்(பிச்சை); தின்பண்டம் நல்கல்; அறவைச் சோறு (அநாதைகளுக்குச் சோறிடுதல்); மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல்; மகப்பால் வார்த்தல்; அறவைப் பிணஞ்சுடுதல்; அறவைத் தூரியம் (தூரியம்-நல்லாடை அளித்தல்) சுண்ணம்; நோய்க்கு மருந்து; வண்ணார்; நாதவிதர்; கண்ணாடி; காதோலை; கண்மருந்து; தலைக்கெண்ணெய்; பெண் போகம்; பிறர் துழர் காத்தல்; தண்ணீர்ப் பந்தல்; மடல்; தடம்; சோலை; ஆவுறிஞ்சுத்தறி (பசுக்கள் முதலியவற்றிற்கு உடம்பு அரிக்கும்போது தேய்த்துக் கொள்வதற்காகக் கட்டைகளை நட்டு வைத்தல்) விலங்கிற்குணவு; ஏறு விடுத்தல்; விலை கொடுத்துயிர்காத்தல். பறவை (முதலியவற்றைக் கொன்று உண்பதற்காக விற்கப்படும்போது அவற்றின் விலையைக்கொடுத்து விட்டு உயிரைக் காப்பாற்றுதல்) கன்னி காதானம் என்பனவாகும்.
அறம் உரைத்தல்
பொய் ஒழுக்கத்தை மேற்கொண்டு, மனதெளிவு இன்றி, மயங்கிக் கள் போதை, சூது, தீய நட்பு போன்றவற்றால் நாளும் அழிந்துவரும் மக்களைப் பொய்மை, திருட்டு, புறங்கூறல் போன்ற தீய செயல்களிலிருந்தும் மீட்டு, நல்வழிப்படுத்த ஆன்றோர்கள் மெய்யறிந்த சான்றோர்கள் கூறிய அறிவுரைகளே அறவுரைகளாகும். நல்லன செய்ய நல்வழிப்படுத்தத் தோன்றிய அறங்களை மறவாது போற்றலும், காத்தலும் இன்றியமையாதனவாகும்.
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம்
உண்மைதான் உலகில் சிறந்தது; உயர்ந்தது. உண்மையான அனைத்திலும் அறம் விளங்கும். இயற்கை உண்மையானது, இறையருள் மிக்கது; இறைவடிவானது; அதனால்தான் இறைவனை மெய்ப்பொருள் என்றும் அழைக்கின்றோம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வாசகமே நம் திருவாசகம். மனிதகுலம் சிறக்க மாண்புநெறி காட்டியவர்கள் சங்கத் தமிழர்கள் விண்ணும் மண்ணும் தோற்றுவிக்கும் தேவன்ஒருவனே; அந்த இறைவன் இயற்கையாய் நிறைந்திருக்கும் தன்மையினை,
பாரிடை ஐந்தாய்ப் பரந்
தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்
தாய் போற்றி
வளியிடை இரண்டாய்
மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய்
விளைந்தாய் போற்றி
என்று மாணிக்க வாசகரும்,
பாரொடு விண்ணும் பகலு
மாகிப் பனிமலை வரை
யாகிப் பரவையாகி
நீரோடு தீயும் நெடுங்காற்று
மாகி நெடுவெள்ளிடை
யாகி நிலனுமாகி
என்று சுந்தரரும் பாராட்டி, பிரபஞ்சத்தைப் படைக்கும் மெய்ப்பொருளை உணர்பவருக்கே அறம் விளங்கும் என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.
இறைவன் - அறம்
எல்லாம் வல்ல பரம்பொருளை அடைந்தபின் எத்தொழிலும் எளிதாகின்றது; இனிதாகின்றது; இனிய அறமாகின்றது. இவ்வுலகிலும் எவ்வுலகிலும் இதற்கு மேலும் வேண்டுவது ஏதேனும் உண்டோ? என்று வினவும் குலசேக ராழ்வார் இறைவனுக்கு எது அறம் என்பதையும் தெளிவுபடுத்துகின்றார்.
உலகியல் வட்டத்தில் எத்தகைய பெருவாழ்வுப் இறை வட்டத்தில் வாழும் புல்லுக்கும் நிகராகாது என்பதை உணர்ந்தவர். குலசேகரப் பெருமான் இறைவட்டதில் வாழத்துடிக்கும் துடிப்பைப் பாடிய இவர் தம்மை உய்விக்க இறைவன் எழுந்து வரவில்லையே என்ற ஏக்கத்தைப் பாடத் தொடங்குகிறார். தம்மைக் கரையேற்றுதல் இறைவன் – அறம் என்பதையும் நினைவுறுத்துகின்றார். கரையேற்றுதல் என்பது பிறவியைவெல்லுதல் என்பதாகும்.
இறவாத இன்ப அன்போடு இறைவன் ஆடும் திருக்கூத்தை எதிலிருந்து என்றும் கண்டு கொண்டிருத்தல் வேண்டும் என்று காரைக்கால் அம்மையாரும், மனித்தப்பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தெ என்று அப்பர் அடிகளும் பாடியதன் மூலம் இவ்வுண்மை விளங்குகிறது.
அடியார்களுக்குஇணையாக ஆண்டவனே வந்து அறம் வளர்த்ததும் இத்தமிழ் மண்ணில் தான்! திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு ஐயாறப்பன் என்றும் இறைவிக்கு அறம் வளர்த்த நாயகி ( தர்ம சம்வர்த்தினி) என்றும் இன்றும் பெயர் வழங்கப்பட்டு வருவது இதற்குச் சான்றாகும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.