குறுந்தொகையும் காதா சப்த சதியும் புலப்படுத்தும் விலைமகளிர் நெறிகள்
த. சத்தியராஜ்.
பரத்தை எனும் சொல்லும், காமக்கிழத்தி எனும் சொல்லும் தொல் வழக்கில் இருந்துள்ளதென்பது தொல்காப்பியம் காட்டும் உண்மை. இச்சொற்கள் தற்பொழுது மருவி விலைமகளிர் , விபச்சாரி(Prostitute) என வழங்கப்படுகின்றன. இம்மகளிர்களின் வாழ்க்கைநெறி காம நுகர்ச்சியினால் தம்மை நாடி வருவோருக்கு, அத்தாகத்தைத் தீர்த்து மகிழ்ச்சி அளிப்பதேயாம் என்பது உலகளாவிய பொதுச்சிந்தனை. இதனை ஒவ்வொரு மொழி இலக்கியங்களும் பதிவு செய்துள்ளன; பதிவு செய்தும் வருகின்றன. அச்சிந்தனையைத் தமிழில் குறுந்தொகையும், பிராகிருதத்தில் காதா சப்த சதியும் பதிவு செய்துள்ளன. அதனை ஒப்பிடுவதாக இக்கட்டுரை அமைகிறது.
குறுந்தொகையும் விலைமகளிரும்
குறுந்தொகை ஒரு தொகைநூல். இது பூரிக்கோவால் தொகுக்கப்பட்டதும்; சிறந்த நானூற்று ஒரு கவிகள் கொண்டது ஆகும். இதன் வரையறை நாலடி சிற்றெல்லையாகவும், எட்டடிப் பேரெல்லையாகவும் அமைந்துள்ளது. இந்நூல் சங்க மக்களின் வாழ்க்கை நெறிகளைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இதற்குப் பலவிளக்க உரைகளும், பதிப்புகளும் உள்ளன.
இத்தொகை நூல் விலைமகளிர் எனக் கருதப்பெறும் பரத்தையரின் வாழ்வியலை ஐந்து பாடல்களில் விளக்குகிறது. இவ்வைந்து பாடல்களைஆலங்குடி வங்கனார், ஔவையார், மாங்குடி மருதனார், வில்லக விரலினர் ஆகிய நால்வர் பாடியுள்ளனர். அவர்கள் மருதம், முல்லை ஆகிய நிலங்களில் வாழும் பரத்தையரின் வாழ்வியலை மட்டும் சுட்டுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. விலைமகளிருக்கு இணையான சொல்லாகப் பரத்தையர், காதல் பரத்தையர், இல்பரத்தையர் என்பன சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதாக ஆய்வறிஞர்கள் கருதுவர்.
குறுந்தொகையில் பரத்தையர்(8,164), காதற்பரத்தையர்(80, 370) குறித்து முறையே இரண்டிரண்டு பாடல்களும், இல்பரத்தைக்(364) குறித்து ஒரு பாடலும் காணப்படுகின்றன. அப்பாடல்கள் புலப்படுத்தும் கருத்தமைவுகள் பின்வருமாறு:
1. தலைவி, தன்னைப் பழித்துரைத்தாள் எனப் பிறர் கூற கேள்விப்பட்ட பரத்தை, அன்று தலைவன் எம் மனைக்கண் இருக்கும்போது இனிய மொழிகள் கூறினான்; இன்புற்றோம். இன்று அவன் தன் மனைவியின்பால் சென்று தம்மை மறந்தனன். மனைவி ஆட்டுவிக்க இவன் ஆடுகிறான் ஆடிப்பாவைப் போல எனத் தலைவியின் உறவினர் அறியும் வண்ணம் பழித்துரைத்தாள் (8).
2. தோழியே! இது கேள் என்றாள் பரத்தை. தலைவி தன் அறியாமையாலே என்னைப் பழித்துரைக்கிறாள். ஆனால் யான் ஒரு தீதும் செய்யவில்லை. என்னைத் தலைவன் நாடி வந்தான். அவளுக்குரிய காம இன்பத்தை யான் அளித்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது. தலைவி என்னைப் பழித்துரைப்பதேன்? அதை ஏற்றுக்கொள்ள முடியாது. யான் தவறு செய்திருந்தால் ஆழ்விழுங்கும் கடல் என்னைக் கொலைத்தொழில் புரியட்டும். அதனை யான் இன்பமுடன் ஏற்றுக் கொள்வேன் என்றாள் (164).
3. தலைவி, தன்னைப் பழித்துரைத்தாள் எனக்கேட்ட பரத்தை, அவளின் உறவினர் கேட்கும்படி, யானும் தலைவனும் நீர் பெருகி வரும் பெரிய துறையின்கண் ஆடுதலை விரும்பிச் செல்லவிருக்கிறோம். முடிந்தால் உறவினர்களுடன் வந்து மீட்டுச் செல்லட்டுமே பார்க்கலாம் எனச் சூளுரைத்தாள் (80).
4. தலைவி, தன்னைப் பழித்துரைத்தாள் என்பதைக் கேள்வியுற்ற பரத்தை, அவளின் உறவினர் அறியும்படி யான் பொய்கையை ஒத்தவள். யானும் தலைவனும் ஈருயிர் ஓருடலாய் உள்ளோம். அத்தலைவன் என்னைப் பிரிந்து தன் இல்லத்திற்குச் சென்று விட்டால், யான் ஓருயிர் ஓருடலே ஆவேம் என்றாள் (370).
5. சேரிப்பரத்தை, தன்னைப் பழித்துரைத்தாள் எனத் தனது உறவினர் கூறக் கேட்ட இற்பரத்தை, அவளின் உறவினர் அறியும்படி தலைவன் என் மீது மிகுந்த காமம் உடையவன். அவன் உன்னை நாடமாட்டான். விரைவில் துணங்கைக் கூத்து விழா வரவிருக்கிறது. அவ்விழாவில் ஒருவர் கண்ணோடு ஒருவர் கண் மாறுபடும்படி மறவருடைய விளையாட்டுகள் நிகழும். முடிந்தால் அவ்விழாவில் தலைவனை அழைத்துச் செல்லட்டுமே பார்க்கலாம் என்றாள் (364).
இக்கருத்தமைவுகளின்வழி தலைவிக்குத் தெரிந்தே பிற பெண்களுடன் தலைவன் பாலுறவு வைத்துள்ளான் என்பது வெளிப்படை. இதனுள் விளக்கப்பட்ட செய்திகள் சற்றுச் சிந்திக்க வைக்கிறது. அஃது யாதெனின், விலைமகளிருக்குரியப் பண்புகளேதும் கற்பிதம் செய்யப்படவில்லை என்பதாம். ஏனெனின் விலைமகளிர் பொருளுக்காக மட்டுமே தன் உடலைப் பல்வேறு ஆண்களுடன் காமத்திற்காகப் பகிர்ந்து கொள்வாள் என்பது நடப்பியல்சார் உண்மை. ஆனால் அக்கூற்றுகள் ஒரு ஆடவனுடன் சேர்ந்து பாலுறவு கொள்ளும் நிலையை மட்டுமே சுட்டுகின்றன. அக்கூற்றுகள் இற்பரத்தை என்பவளைத் தலைவியாகவும்; காதற்பரத்தை, பரத்தை என்பவர்களை முறைப்படி மணமாகாமல் பாலுறவு மட்டும் வைத்துக் கொள்பவளாகவும் அறிமுகப்படுத்துகின்றன எனலாம். இவர்கள் சமூகத்துக்கு அஞ்சியே வாழக்கூடியவர்கள். இது அன்றிலிருந்து இன்றுவரை தொன்று தொட்டு வரும் ஓர் அடையாளம். எவ்வாறிருப்பினும் பரத்தையர் என்பவள் விலைமகளிர் அல்ல என்பது குறுந்தொகைக் காட்டும் உண்மை. இங்கு இந்துமதி என்பவரின் கருத்துச் சுட்டிக்காட்டத்தகுந்தது.
பரத்தைக் குறித்து கைலாசபதி, அறவாணன், இராமகிருட்டினன், செயராமன், சிலம்பு செல்வராசு போன்றோர் தம் ஆய்வுக் கருத்துகளை மொழிந்துள்ளனர். இதன்வழி, தமிழகத்தில் நடந்த போர்கள் மற்றும் பகை காரணமாகப் பாதிப்பிற்குள்ளானதில் கணவனை இழந்த பெண்கள் பரத்தமைச் சமூகம் உருவாகக் காரணமாயிருத்தல் கூடும் என்றும் பரத்தையர் விலைமகளிர் அல்லர் என்ற கருத்தும் அறியப்படுகிறது (2012:70).
மேலும், அக்கூற்றுக்களில் பரத்தையர்கள் பழித்துரைப்பதாகவும், சூளுரைப்பதாகவும், வருந்துவதாகவும் அமைகின்றனர். அப்பரத்தை மொழிகளின்வழி புரிந்து கொள்ளப்பட்ட சில புரிதல்களாவன:
1. திருமணம் ஆன ஆடவனே பிற பெண்டிரை நாடும் நாட்டமுடையவன் எனக் காட்டுதல்.
2. பரத்தை என்பவள் விலைமகளிருக்குள்ள பண்புகளைக் கொண்டிருக்கவில்லை.
3. தலைவன் தலைவியின் உறவினர்கள் வாழுமிடங்களிலேயே தனக்குக் காம இன்பத்தைத் தரக்கூடிய பெண்டிரை நாடல்.
4. பரத்தையரை உயர்ந்தவர்களாகவே கருதுதல்.
5. அதியமான் அஞ்சி (எழினி) மன்னர்க் குறித்துப் பதிவு செய்தல் (80).
6. கலவியின்போது நிகழும் தன்மையைச் சுட்டல்.
7. காம இன்பம் மனித வாழ்வில் ஒரு அங்கம் என வலியுறுத்தல்.
8. ஆடவரும் பெண்டிரும் பார்த்துப் பழகக் கூடிய களங்களைச் சுட்டுதல்.
9. காமத்தைத் தனக்கு இணக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் தவறில்லை எனல்.
இப்புரிதல்கள் வரையறை செய்யபெற்ற இலக்கியமாகவே குறுந்தொகை விளங்குகிறது என்பதை அறியலாம். இவ்விடத்து மணவாளன் என்பாரின் கருத்தைச் சுட்டிக்காட்டலாம்.
காதல் என்னும் மானுட ஒழுகலாறும், அது குறித்து எழும் இலக்கியங்களும் மானுடப் பொதுமை வாய்ந்தன. அந்த வகையில் தமிழ் அகப்பாடல்களும் ஒரே தன்மையினவே. ஆனால், மானுடக் காதலுணர்வின் எல்லாக் கூறுகளையும் தமிழ் அகப்பொருள் நூல்கள் பாடுவதில்லை. ஒருவன் ஒருத்தியிடையே நிகழும் காதல் வாழ்க்கையின் சில வரையறுத்த ஒழுகலாறுகளை மட்டுமே இவை பாடுகின்றன (2011:190 - 191).
காதா சப்த சதியும் விலைமகளிரும்
தெலுங்கு நாட்டு சாதவாகன மன்னன் காலன் என்பவரால் தொகுக்கப்பட்ட நூலே காதா சப்த சதி. இது பிராகிருத மொழியில் (மகராட்டிரி) எழுதித் தொகுக்கப்பட்ட ஒரு தொகை நூல். இந்நூல் எழுநூறு பாடல்கள் அடங்கியத் தொகுப்புநூல் என்பார் மு.கு.ஜகந்நாதராஜா (1981:முன்னுரை). அவர் அவற்றில் ஐந்நூறு பாடல்களை மட்டும் தமிழாக்கம் செய்துள்ளார். அந்நூல் (தமிழ்ச் சங்க இலக்கியப் படைப்பின் சமகாலத்தது) கூற்றுகள் அடிப்படையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மொழியாக்க நூலுள் விலைமகளிர்(பரத்தை) கூற்றுக்களும் இடம்பெறுகின்றன. அக்கூற்றுக்கள் மூன்றாகும். அக்கூற்றுக்களைப் பாடியவர்கள் இருவர். ஒருவர்: காலன். இவர் இரண்டு பாடல்கள்(190,219) பாடியுள்ளார். மற்றொருவர்: கவிராயன். இவர் ஒரு பாடல்(20) பாடியுள்ளார். அவ்விரு புலவர்களும் சுட்டும் பரத்தையர் குறித்த குறிப்புகள் வருமாறு:
1. பரத்தையின் மகள் தன்னை அழகூட்டுவதற்காக அணிகலன் அணிந்து கொண்டிருந்தாள். அப்போது அவளின் தாயாகிய பரத்தை, மகளே விரைவில் செல், தலைவன் காதல் வேட்கையுடன் உள்ளான். நீ தாமதித்தால் அவனின் வேட்கைத் தணிந்துவிடும். பிறகு அவன் உன்னைப் புறக்கணிக்கக் கூடும். நீ அணிகள் அணியாமலே அழகாய் இருப்பவள் தானே, ஏன் உனக்குக் கூடுதலாக அணிகள்? விரைவில் செல் என்றாள் (20).
2. பரத்தை தன் மகளிடம் நாம் நெருப்பை ஒத்தவர்கள். அந்நெருப்பு கள்ளுண்ணும் இடத்திலும், யாகசாலையிலும் எரியும் (ஒளிவீசும்) தன்மையுடையது. ஆகையால் நமக்குத் தாழ்ந்தோர் உயர்ந்தோர் என்பது கிடையாது. அனைவரும் சமமானவரே. எனவே, அவர்களுக்குச் சமமான அன்புடன் காம இன்பத்தைத் தருவதே நமது கடமை என்றாள் (190).
3. பரத்தை தன்னிடம் காம இன்பந்துய்க்க வந்த இளைஞனிடம், இளைஞனே! குழந்தைப் பிறந்து ஒரு மாதம் கழிந்த பெண், குழந்தைப்பேறு அடைந்த ஆறுமாதப் பெண், ஒரு நாள் காய்ச்சலால் உடல் தளர்ந்த பெண், பிரிவுத்துயர் மிகுந்த பெண், மன்றத்தில் நடனமாடிக் களைத்த பெண், பூப்பெய்திய புத்தம் புதிய பெண் ஆகியோரிடத்துத் துய்க்கக் கூடிய காம இன்பமே சிறந்தது எனக்கூறி வாழ்த்தவும் செய்தாள் (219).
இக்கருத்துகள் விலைமகளிரையே பெரிதும் புடமிட்டிருக்கின்றமை வெளிப்படை. இதில் இறுதியாக வரும் கூற்று காமவித்திரக் குறிப்பின்படி அமைந்ததாகும் என்பார் மு.கு. ஜகந்நாதராஜா (1981:178). இனி, அம்மூன்று கூற்றுக்கள் புலப்படுத்தும் சில புரிதல்களாவன:
1. விலைமகளிரை வாழ்க்கை நெறிகளைச் சுட்டுதல்.
2. விலைமகளிர் எனும் சமூகம் அத்தொழிலை அடுத்த தலைமுறைக்குக் கற்பிப்பது.
3. காம இன்பத்தில் அனைவருக்கும் சம உரிமை தருவது.
4. சிறந்த காமம் குறித்த அறிவைப் புகட்டுவது.
5. மணமாகாதோரும் விலைமகளிரை நாடி வருவது.
6. பொருளுக்கு முக்கியத்துவம் தராமை.
7. வாடிக்கையாளரின் தன்மை அறிந்து செயல்படுவது.
8. விலைமகளிரை நெருப்புக்கு இணையாகக் கூறுவது.
இப்புரிதல்களின் மூலம் நடப்பியல் தன்மைகளைப் புரிந்துகொள்ளலாம். இங்கு மணவாளன் என்பாரின் கருத்து நினைவிற்கொள்ளத்தக்கது.
காதா சப்த சதியின் பாடல்கள் காதற்பொருண்மையை யதார்த்தப் பார்வையில் பல்வேறு இலக்கிய நயங்களுடன் கூறுகின்றன என்பதும், காதல் பற்றிய மானுட மனங்களின் யதார்த்தப் படிமங்களைத் தத்ரூபமாகக் காட்டுகின்றன என்பதும், இந்தப்பொருளை, இந்த வடிவத்தில் இத்தகைய இலக்கிய நயத்தோடு கூறுகின்ற வட இந்திய முதல் இலக்கியம் காத சப்த சதிதான் என்பதும் விவாதத்திற்கு அப்பாற்பட்ட தெளிவான உண்மைகள்(2011:193).
ஒப்பியல் நோக்கில் புலவர்களும் அவர் தம் விலைமகளிர் நெறிகளும்
தமிழின் குறுந்தொகையிலும், பிராகிருத்ததின் காதா சப்த சதியிலும் விலைமகளிர் பேசக்கூடிய பதிவுகள் சிலவே இடம்பெற்றுள்ளன. இருப்பினும் பிராகிருதத்தைக் காட்டிலும் குறுந்தொகையில் கூடுதலாக இரண்டு பதிவுகள் உள்ளன.
குறுந்தொகையின் பரத்தைக் கூற்றுக்கள் ஒரு பரத்தைப் பெண்ணுக்கு, அவளின்கண் காம இன்பந்துய்க்க வரும் ஆடவனின் மனைவியால் ஏற்படும் பழிச்சொற்களை மையமிட்டவையாகவும், அதற்கு அப்பரத்தைச் சூளுரைக்குமாறும், வருந்துமாறும் அமைந்துள்ளன. ஆனால் காதா சப்த சதியில் ஒரு விலைமகளிருக்குரியப் பண்புகளைக் கற்றுக்கொடுக்கும் முகாந்திரமாகவும், தன்பால் இன்பந்துய்க்க வரும் இளைஞர்களுக்குச் சிறந்த காமத்தைப் பற்றிய கற்பித்தலைப் புகட்டுவதாகவும், காமம் எனும் இன்பத்தில் அனைவரும் சமம் எனவரும் சிந்தனைகளைப் பதிவு செய்வதாக அமைந்துள்ளன. இதன்வழித் தமிழ் விலைமகளிர் குறித்து விளக்கவில்லை என்பது வெளிப்படை.
விலைமகளிர் கூற்றுக்களைப் பாடிய புலவர்கள் முறையே தமிழில் நால்வரும்(குறுந்தொகை), பிராகிருத்ததில் இருவரும்(காதா சப்த் சதி) ஆவர். இருப்பினும் அவ்விருமொழிக் கவிஞருள் தமிழில் ஔவையாரும், பிராகிருத்ததில் காலன் என்பவரும் தலா இரு பாடல்கள் பாடியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. அவ்விருவருள் தமிழில் மட்டுமே பெண்பால் புலவராக இருப்பது சிறப்புக்குரியது.
அவ்விருமொழிப் புலவர்களிடத்துக் காணலாகும் பொதுமைச் சிந்தனை யாதெனில், இருமொழிப் புலவர்களும் விலைமகளிரை உயர்ந்தோராகக் கருதியமையேயாம். ஏனெனின் அவர்கள் விலைமகளிரை ஒப்பிட்டுக் கூறும் உயர்ச்சொற்கள் முறையே தமிழில் பொய்கை, வாளைமீன்(மீனினத்தில் சிறந்தது) என்பனவும், பிராகிருத்ததில் நெருப்பு என்பதுவும் ஆம்.
இதுகாறும் விளக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் நோக்கும்போது இருமொழிக் கவிஞர்களிடத்தும் வேறுபாடுகள் நிலவினாலும், விலைமகளிரை உயர்ந்தோராகக் கருதுகின்றமை ஒருமித்தச் சிந்தனையாகவும், பொதுக் கோட்பாடாகவும் நிலவுகிறது என்பதை அறியமுடிகிறது.
துணை நின்றவை
1. இராகவையங்கார் ரா.(உரை.), 1993, குறுந்தொகை விளக்கம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.
2. சக்திதாசன் சுப்பிரமணியன் (உரை.), 2008, குறுந்தொகை, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
3. செல்வராசு அ., 2008, இலக்கிய இலக்கணப் புரிதல், எழில், திருச்சி.
4. சோமசுந்தரணார் பொ.வே.(உரை), 2007, குறுந்தொகை, கழக வெளியீடு, சென்னை.
5. மணவாளன் அ.அ., 2001, இலக்கிய ஒப்பாய்வு சங்க இலக்கியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
6. மைக்கேல் சரோஜினிகி. பத்மநாபப் பிள்ளை ப., இராசரத்தினம் வ.(பதிப்.), 2012, வளர்தமிழ் ஆய்வு, வளர்தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல்.
7. ஜகந்நாதராஜா மு.கு., 1981, காதா சப்த சதி, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.