தொல்காப்பியம் - பாலவியாகரணம் கலைச்சொல் ஒப்பீடு
த. சத்தியராஜ்

தமிழில் தொல்காப்பியமும், தெலுங்கில் பாலவியாகரணமும் அவ்வம்மொழிகளைக் கற்கும் மாணவர்களாலும் அறிஞர்களாலும் பெரிதும் வாசிக்கப்படுவன; வாசிக்கப்பட்டும் வருவனவாம். தொல்காப்பியம் கி.மு.5ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாக கருதப்படுகின்றது. பாலவியாகரணம் கி.பி.1858ஆம் ஆண்டு வெளிவந்த நூலாகும். இவ்விரு நூல்களும் காலத்தால் மிகவும் வேறுபாடுடையன. இருப்பினும் வெவ்வேறு மொழிகளுக்குரிய இலக்கணங்கள் என்பதால் ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. அவ்விரு நூல்களில் காணலாகும் கலைச் சொற்கள் குறித்து ஒப்பிட்டு விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
பெறுநர் என்ற சொல் எவ்வாறு உருப்பெற்றது. அது
பெறு எனும் அடிச்சொல்லுடன்,
அர் எனும் பலர்பால் ஈறு இணைய பெறுநர் என்றாயிற்று. இம்மாற்றத்திற்கு எவ்வாறு பொதுப் பெயரிடுவது. அவ்விரு சொற்களும் ஒன்றோடொன்று இணைவது, ஆணும் பெண்ணும் இணைவதற்கு ஒப்பாகும். அதனைப் புணர்தல் என்பர். அதன் அடிப்படையில்தான் அதற்குப் புணர்ச்சி எனும் கலைச்சொல் (பொதுப்பெயர்) உருவாகியிருக்க வேண்டும். அவ்வாறே ஒவ்வொரு கலைச்சொற்களும் உருவாயிருக்கக் கூடும் என எண்ணுவதற்கு இடமளிக்கின்றது. இக்கலைச்சொற்கள் ஒரு கருத்தைப் புரிந்து கொள்வதற்கான குறியீடு. இக்குறியீட்டைப் பயன்படுத்தியே பல விளக்கங்கள் விதிகளாக அமைகின்றன.
அறிவுலகம் பலதிறப்பட்ட பிரிவுகளுடன் திகழும் பான்மையது. அப்பிரிவுகளுள் ஒன்றின்கண் பயில்வார்க்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட பொருளை உணர்த்தும் ஆற்றலுடைய சொற்களை அல்லது சொற்றொடர்களையே நாம் குறியீட்டுச் சொற்கள் என்று அழைக்கலாம். தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பெருமக்களாகிய இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் முதலானோர் இச்சொற்களைக் ’குறி’ என்றும் ‘குறியீடு’ என்றும் கூறுவர். இவற்றை இக்கால அறிஞருலகம் ‘கலைச் சொற்கள்’ என்று பேசும். இக்குறியீட்டுச் சொற்களைத் தேவைக்கேற்ப அறிவுலகச் சிற்பிகள் தாமே படைப்பதும் உண்டு; அல்லது உலகவழக்கில் உள்ள சொற்களையே எடுத்து தேவையான பொருளில் பயன்படுத்துவதும் உண்டு. சில வேளைகளில் இக்குறியீடுகள் சில சொற்களைச் சுருங்கச்சொல்லி விளக்க வைக்கும் சிறப்புடையனவாக, ஆற்றல் உடையனவாக அமைகின்றன (சுப. திண்ணப்பன், தொல்காப்பியத்தில் இலக்கணக் குறியீட்டுச் சொற்கள், 1972:363 - 364)
பழந்தமிழிலக்கண உரைகாரர் கலைச்சொல்லைக் ‘குறி’ என்றும் ‘குறியீடு’ என்றும் குறிப்பிடுவர். தமிழ் இலக்கணங்களில் காணப்படும் இக்குறியீடுகள் முந்தைய இலக்கணக் காலந்தொட்டே வழங்கி வருவன. தொல்காப்பியர் இக் குறியீடுகளை அறிமுகப்படுத்தும்போதும் கையாளும்போதும் பலவிடங்களில் எனப்படுப, என்ப, என்மனார், மொழிப எனப் பிறர் கூற்றாக அமைப்பதை இங்குச் சான்றாகக் கூறலாம். ‘என்மனார் ஆசிரியர் எனவே, உயர்திணை, அஃறிணை என்பன தொல்லாசிரியர் குறியாம் (ப.4) என்று சேனாவரையர் தொல்காப்பியச் சொல்லதிகார முதற் சூத்திர உரையில் கூறுவார்.
இவ்வகை குறியீடுகளைத் தவிரப் பிறமொழி இலக்கணச் சிந்தனைகளின் தாக்கத்தால் அயல்மொழிக் குறியீடுகள் தற்சமமாகவோ தற்பவமாகவோ வழங்குவதும், சில வேளைகளில் கடன்மொழி பெயர்ப்பாக வழங்குவதும் உண்டு. மொழிகளிடையே ஏற்படும் தொடர்பினால் இலக்கணங்களிடையே இத்தகைய கொடுக்கல் வாங்கல் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இக் கொடுக்கல் வாங்களின் அளவு அநேகமாக இருமொழிகளிடையே நிலவும் நெருக்கத்தின் அளவிற்கேற்ப இருக்கும் இந்திய மரபிலக்கணங்களிடையே காணப்படும் ஒற்றுமைக்கு ஆதாரமாக இருப்பன இக் கலைச் சொற்கள் என்றால் மிகையில்லை (சு. இராசாராம், 1992: 248 - 249)
கலைச்சொல் பயன்பாடு மொழி வளர்ச்சியில் இன்றியமையா இடம் வகிக்கின்றது. மொழி வளர்ச்சியில் சமூக வளர்ச்சியும் பங்கு பெறுவதால் சமூக நிகழ்வுகளுக்குத்தக கலைச்சொற் பயன்பாட்டில் மாற்றங்கள் நிகழ்கின்றன (இரா. அறவேந்தன், 2003: 189)
எனும் கருத்துகள் கலைச்சொற் பயன்பாடு எந்த அளவிற்கு இலக்கணக் கலைஞர்களுக்குத் தேவை என்பதை வலியுறுத்துவதோடு மட்டுமின்றி கலைச்சொல் குறித்த புரிதலையும் தருகின்றன. ஆக, கலைச்சொல் பயன்பாடு கொள், கொடை மொழிகளின் இணைப்புப் பாலமாக இருப்பதோடு மட்டுமின்றி சமூக மாற்றங்களையும் ஏற்படுத்தின; ஏற்படுத்தி வருகின்றன.
தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்கும் அரசியல், மதம், கலை, பண்பாடுகளில் தொன்னெடுங்கலமாகவே தொடர்பு இருந்து வந்திருக்கின்றது
(2005:337) இருந்தும் வருகின்றது.
தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தில் சமசுகிருதம், பிராகிருதம், பாலி ஆகியன தமிழ்மொழிச் சூழமைவுகளில் அமைந்த மொழிகள் என்பது அறிஞர்களின் கருத்து. ஆனால் அம்மொழிகளின் எக்கலைச் சொற்களும் தொல்காப்பியத்தில் இடம்பெறவில்லை என்பது அறிஞர்களின் கருத்து. இருப்பினும் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள அந்தம் (487), கருமம் (568), காரம், கரம், காரை ஆகியன பிறமொழிக்குரிய கலைச்சொற்கள் (சுப. திண்ணப்பன், 1972) எனக் கருதும் ஒரு கருத்தும் உண்டு. அஃது ஆராயற்பாலது.
பிறமொழி இலக்கணக் கலைஞர்களை விடத் தொல்காப்பியர் மக்களின் புரிதல்களில் அமைந்த சொற்களையே இலக்கணக் கலைச்சொற்களாக உருவாக்கித் தந்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள இலக்கணக் கலைச்சொற்கள் அனைத்தும் பேச்சு வழக்கு மொழியினின்று தோன்றிய இயல்பான சொற்களாம்.
பாணினீயத்தில் உள்ள குறியீட்டுச் சொற்களை அதன் உரையாசிரியர் பதஞ்சலியின் ‘க்ருத்ரிமா’ (kritrima) (செயற்கையானவை) என்றும் ‘அக்ருத்ரிமா’ (akritrima) (இயற்கையானவை) என்றும் இருவகைப்படுத்திப் பேசுவர். பேச்சு வழக்கில் இல்லாது நூலாசிரியரால் தேவைக்கேற்ப படைத்துக்கொள்ள பெற்றவை செயற்கையானவை. அவை சொற்களாகவே கருதப்பெறும் பெற்றியன அல்ல. எடுத்துக்காட்டாக ’டி’ (ti), ‘கு’ (ghu), ‘ப’ (bha) என்று வடமொழியில் வழங்குவனவற்றைச் சொல்லலாம். இயற்கையான குறியீடுகள் பேச்சுவழக்கு மொழியினின்று தோன்றி இயல்பகப் பொருள் விளக்கும் தன்மையன ஆகும். பாணினீயத்திலுள்ள குறியீட்டுச் சொற்களை ஒப்பிட்டு ஆராய்ந்தால் செயற்கையான குறியீட்டுச் சொற்களைத் தொல்காப்பியத்தில் காணமுடியாது. தொல்காப்பியக் குறியீட்டுச்சொற்கள் இயல்பாக (natural) அமைந்த தமிழ்ச் சொற்களே ஆகும். மேலும், அவை தம் அமைப்பாற்றலால் தாமே பொருளைப் புலப்படுத்தும் (self explanatory) தனித்தன்மை வாய்ந்தவைகளாகும். இளம்பூரணரும் ‘தொல்காப்பியர் காரணம் பற்றியின்றிக் குறியிடார்’ என்று கூறுவர் (1972: 365 - 366)
தொல்காப்பியத்திற்குப் பின்பு எழுதப்பட்ட வீரசோழியம் தொடக்கம் முதலே பிறமொழிக்குரிய இலக்கணக் கலைச் சொற்கள் இடம்பெறுவது நினைக்கத்தக்கது. அதனைப் பின்வரும் அட்டவணைத் தெளிவுபடுத்தும்.
தொல்காப்பியம் |
வீரசோழியம் |
சமசுகிருதம் |
புணர்ச்சி |
சந்தி |
சந்தி |
மிகுதல் (தோன்றல்) |
ஆகமம் |
ஆகம |
மெய்பிறிதல் (திரிதல்) |
ஆதேசம் |
ஆதேச |
குன்றல்(கெடுதல்) |
உலோபம் |
லோபய |
உரிச்சொல் |
தாது |
தாது |
தொல்காப்பியத்தில் எழுத்து, திரிபு, பெயர், வினை, இடை, உரி, எச்சம், திணை, இருதிணை, அஃறிணை, உயர்திணை, இயற்பெயர், சினைப்பெயர், அசைநிலைக் கிளவி, ஆக்கக் கிளவி, இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் போல்வன செந்தமிழ்ச் சொற்களே இலக்கணக் கலைச் சொற்களாக இடம்பெறுகின்றன. ஆனால் பாலவியாகரணத்தில் தூய தெலுங்கு மொழிக்குரிய இலக்கணக் கலைச்சொற்களைக் காட்டிலும் சமசுகிருத இலக்கணக் கலைச் சொற்களே மிகுதியாக எடுத்தாளப்பட்டுள்ளன. அக்கலைச் சொற்கள் தற்சமமாகவோ தற்பவமாகவோ இடம் பெறுகின்றன.
சின்னயசூரி, முந்துநூல்களின் கலைச்சொற்களையே மிகுதியாக எடுத்தாண்டுள்ளார். அவர் புதிய கலைச்சொற்களை உருவாக்கியதாகத் தெரியவில்லை. இங்கு ஆந்திரபாசாபூசணத்தின் கலைச் சொற்களையும், பாலவியாகரணக் கலைச்சொற்களையும் (சில மட்டும்) ஒப்ப வைத்துப் பார்த்தால் புலப்படும்.
ஆந்திரபாசாபூசணம் |
தமிழ் |
பாலவியாகரணம் |
ஆகமமு |
தோன்றல் |
ஆகமமு |
ஆதேசமு |
திரிதல் |
ஆதேசமு |
அச்சதெனுகு |
தூயதெலுங்கு |
அச்சதெனுகு |
அச்சுலு |
உயிர்கள் |
அச்சுலு |
அடுகு |
இழத்தல் |
அடுகு |
லோபமு |
கெடுதல் |
லோபமு |
தத்சமமு |
தற்சமம் |
தத்சமமு |
தத்பவமு |
தற்பவம் |
தத்பவமு |
அர்(ற்)று/அத்வமு |
அகரம் |
அர்(ற்)று/அத்வமு |
அர்த்தமு |
பொருள் |
அர்த்தமு |
ஜட்ட |
இரட்டை |
----- |
ஜங்கம |
உயர்திணை, உயிருள்ள |
----- |
குறுசலு |
குறில் |
ஹ்ரஸ்வமு |
இவ்வொப்பீட்டு அட்டவணை ஓரளவிற்கு முந்துநூல்களின் இலக்கணக் கலைச்சொற்களையே எடுத்தாண்டுள்ளமையும், குறிப்பாகச் சமசுகிருதச் சொற்களையே எடுத்தாண்டுள்ளமையும் குறித்து நிற்கக் காணலாம். பாலவியாகரணமும் ஆந்திராபாசாபூசணமும் மொழித்தூய்மையை வலியுறுத்த நினைத்தாலும் அதனால் சமசுகிருத பிடியிலிருந்து விலக முடியவில்லை என்பது வெளிப்படை.
இதுவரை விளக்கப்பட்ட கருத்துகளின்வழி, தொல்காப்பியம் பன்மொழிச் சூழல்களை எதிர்கொண்டாலும் தனித்தமிழை நிலை நாட்டுவதில் முக்கியப் பங்கு வகித்தது. ஆனால், பாலவியாகரணம் பன்மொழி சூழமைவுகளிலிருந்து தூய தெலுங்கை மீட்டெடுக்க நினைத்தாலும் முடியவில்லை. இதற்கு ஆந்திர சப்த சிந்தாமணித் தொடக்கம் முதல் சமசுகிருதம் தெலுங்கோடு ஒன்றிவிட்ட நிலையே காரணமாகும்.
துணைநின்றவை
தமிழ்
1. அகத்தியலிங்கம் ச. முருகையன்.க., 1972 தொல்காப்பிய மொழியியல், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்
2. அறவேந்தன் இரா., 2003, தமிழ் சிங்கள இலக்கண உறவு, தாயறம், திருச்சி.
3. இளவழகன் கோ.(பதி.), 2003, தொல்காப்பியம் எழுத்ததிகாரம் (இளம்பூரணம்) சொல்லதிகாரம் (சேனாவரையம்), தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
4. இராசாராம் சு., 1992, வீரசோழிய இலக்கணக் கோட்பாடு, இராகவேந்திரா, நாகர்கோவில்.
5. சாவித்ரி சி. (மொ.ஆ.), ஆந்திரசப்தசிந்தாமணி, பாலவியாகரணம்.
6. ஜகந்நாதராஜா மு.கு., 2005, தமிழக ஆந்திர வைணவத் தொடர்புகள், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
தெலுங்கு
7. நரசிங்க ரெட்டி சி. (உரை.), 2011, பாலவியாகரண வியாக்கியன சகிதம், தெலுங்கு அக்காதெமி, ஐதராபாத்து.
8. பரவத்து சின்னயசூரி, 2005, பாலவியாகரணம், பாலசரசுவதி புத்தாலயம், சென்னை.
ஆங்கிலம்
9. Usha Devi Ainavolu (Tran.), 2009, Andhra Bhaashaa Bhuushanamu, Emesco Publisher, Vijayawada.