இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

தொல்காப்பியர் குறிப்பிடும் எண்களும், எண்களுக்குரிய பெயர்களும்

மு. அன்பழகன்


தொல்காப்பியத்தில் எண்களின் பெயர்ப்புணர்ச்சிகள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் பல எண்களின் பெயர்ப்புணர்ச்சிகள் பல்வேறு சிக்கல்கள் நிறைந்ததாகவே காணப்படுகின்றன. அதில், 9, 90, 900, 9000, 90000, 900000 போன்ற எண்களின் பெயர்ப்புணர்ச்சிகள் குறிப்பிடத்தக்கன.

தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள இந்த எண்களின் பெயர்ப்புணர்ச்சிகள் மிகவும் சிக்கலானது என்றும், பின்னர் காலத்தில் இடைசெருகலாகச் சேர்க்கப்பட்டது என்றும், செயற்கை நூற்பாவாகச் செய்யப்பட்டது என்றும், இடம் மாற்றி அமைக்கப்பட்டது என்றும் பல்வேறு இலக்கண அறிஞர்கள் மற்றும் மொழியியல் வல்லுனர்களும் தங்கள் கருத்துக்களைப் பல்வேறு நிலைகளில் பதிவுகள் செய்துள்ளனர்.

தொல்காப்பியர் குறிப்பிடும் எண்களும் அவைகளின் பெயர்களும் பல அறிஞர்களின் கருத்துக்களோடு ஒப்பிடப்பட்டு அந்தந்த எண்களுக்குரிய சரியான பெயர்களை அறியும் முயற்சியாகவே இக்கட்டுரை அமைகின்றது.

தொல்காப்பியர் குறிப்பிடும் எண்களும் எண்களுக்குரிய பெயர்களும்

1. ஒன்பது, தொண்டு - 9
2. தொண்ணூறு - 90
3. தொள்ளாயிரம் - 900
4. ஒன்பதினாயிரம் - 9,000
5. -?- - 90,000
6. ஒன்பது நூறாயிரம் - 9,00,000



9 என்ற எண்ணின் பெயர்

தொல்காப்பியர் ஒன்பது என்று குறிப்படும் எண்ணுப்பெயர்க்குரிய வடிவமானது 9 என்ற வரிவடிவமாகும். இதனைத் தொண்டு என்ற பெயரிலும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

“மெய்பெறு மரபின் தொடை வகை தாமே
ஐ ஈர் ஆயிரத்து ஆறு ஐஞ் ஞாற்றொடு
தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்று
ஒன்பஃது என்ப உணர்ந்திசினோரே” (தொல்.பொருள்.செய் - 100)

  • தொண்டு என்னும் பெயர் மிகப்பழங்காலத்தில் 9 என்ற எண்ணிற்கு வழங்கப்பட்ட பெயர் ஆகும். அதனை ஒன்பது என்று பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் வழங்கப்பட்ட காலத்திலேயே தொல்காப்பியர் வாழ்ந்திருக்க வேண்டும். இதனாலேயே 9 என்ற எண்ணிற்கு தொண்டு என்ற சொல்லையும், ஒன்பது என்ற சொல்லையும் குறிப்பிட்டுள்ளார் என்று இரா. மதிவாணன் அவர்கள் கூறுகின்றார்.

  • 9 என்ற எண்ணைக் குறிக்கும் பெயர் தொண்டு என்பதே ஆகும்.

    தொண்டு = 9

    தொண்பது = 90

    90 என்னும் எண்ணைக் குறிக்கத் தொண்பது என்ற பெயர் வழங்கப்பட்டு வந்தது.

    தொண்டு = 9

    (தொண்பது) ஒன்பது = 90

    தொண்பது - ஒண்பது - ஒன்பது என வழங்கும் நிலை ஏற்பட்டது.

    தொண்டு என்னும் சொல் வழக்கு வீழவே அதனை அடுத்து உள்ள எண்ணுப் பெயர்கள் ஒவ்வோர் இடமாய்த் தாழ்ந்து ஒவ்வொரு எண்ணிற்கும் இடம் மாறி அமைந்துவிட்டன என்கின்றார் பாவாணர்.

    ஒன்பது - 9

  • தொண்டு என்னும் சொல்லின் வேர்ச்சொல் தொள் என்பதாகும். ஒன்பது என்ற சொல்லில் பத்து என்ற இரண்டாம் பகுதியின் முன் உள்ள முதல் பகுதி ஒன் என்பது தொள் என்பதிலிருந்தே பிறந்தது என்கின்றார் கால்டுவெல்.

  • தொண்டு என்பது காரணப்பெயர் என்று பாவாணர் கூற்றினால் அறியமுடிகின்றது.

    தொள் - தொண்டு = துளை

    மாந்தன் உடம்பில் ஒன்பது (9) துளைகள் இருப்பதால் துளையின் பெயர் அதன் தொகைக்காயிற்று என்று பாவாணர் தொண்டு என்பதன் பெயர் பெற்ற காரணத்தைக் கூறியுள்ளார்.

    ஒன்பது (9) என்ற எண்ணின் பெயர் விளக்கம்

    ஒன்பது (9) என்ற எண்ணுப்பெயரின் விளக்கத்தினை அறிஞர்கள் பலரும் ஒரே சிந்தனையின் அடிப்படையில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.

  • “பொனிசிய வணிகர்கள் கி.மு.1200 முதல் நண்ணிலக் கடல் நாடுகளுடன் பெருவணிகம் புரிந்தனர். அக்காலத்தில் கிரேக்கர்கள் ஒன்பதினை ஒன்று குறைந்த பத்து IX என்றனர். நான்கினை ஒன்று குறைந்த ஐந்து IV என்றனர். பொனிசிய வணிகர்களின் வாயிலாகவே ஒன்று குறையப் பத்து என்னும் பொருளில் இந்திய மொழிகளில் ஒன்பதைக் குறிக்கும் சொல்லாட்சி வழங்கத் தொடங்கியது” என்று கூறுகின்றார் இரா.மதிவாணன் அவர்கள்.

  • திராவிட மொழிகளில் 9 என்ற எண்ணிற்கு வழங்கப்படும் பெயர்கள் பலவற்றுள் இரண்டாம் பகுதியாக இருப்பது பத்து (10) என்ற சொல் ஆகும். அதன் முதல் பகுதியான ஒன் என்பது தொண்டு என்ற சொல்லின் வேர்ச்சொல்லான தொள் (தொல்) என்பதிலிருந்தே பிறந்தது ஆகும்.      தொல் (தொள்) = தொன்மை (முன்னர்)

    ஆகையால்,

    ஒன் (தொள்) = முன்னர்

    எனவே ஒன்பது என்ற பெயரானது பத்திற்கு (10) முன்னே நிற்கும் எண் (9) எனப் பொருள்படும் என்கின்றார் கால்டுவெல்.

    மேலும், துளு, கோதர் மொழிகளில் 9 என்ற எண்ணிற்கு வழங்கப்படும் ஒர்ம்ப், ஒர்ம்பது என்ற பெயர்களும் பத்தில் ஒன்று குறைந்தது அல்லது ஒன்று குறையப் பத்து என்ற பொருளினை உடையதாக பேராசிரியர் குண்டர்ட் கூறும் கருத்துக்களையும் கால்டுவெல் செம்மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் எடுத்துக்காட்டுகின்றார்.



  • 90 என்ற எண்ணின் பெயர்

    தொல்காப்பியர் ஒருபஃது (10), இதுபஃது (20), முப்பஃது(30) என்ற எண்ணுப் பெயர்கள் புணரும் வரிசையில் 90 என்ற எண்ணிற்கான பெயர்ப்புணர்ச்சியினைக் கூறியுள்ளார்.

    “ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
    முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்
    பஃதென் கிளவி ஆய்த பகரம் கெட
    நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
    ஒற்றிய தகரம் றகரமாகும்” (தொல்.எழு., குற்.புண - 40)

    ஒன்பது (9) + பத்து (10) = தொண்ணுறு (90)

    இந்த எண்ணிற்குரிய பெயர்ப்புணர்ச்சி மிகவும் சிக்கலானது என்று பல அறிஞர்கள் கூறுகின்றனர். தொண்ணூறு என்னும் பெயருக்கான புணர்ச்சி வேறுவகையில் நிகழ்வது என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர்.

  • தொண்டு என்பதன் வேர்ச்சொல்லான தொள் என்பது நிலை மொழியாக இருக்க, நூறு என்னும் வருமொழி சேர்ந்து புணர்ந்தாலேயே தொண்ணூறு என்னும் பெயர் பிறக்க முடியும் என்கின்றார் ச. சுபாஸ்சந்திரபோஸ்.

    90 என்ற எண்ணிற்கான பெயரை இவர் தொண்ணூறு என்றே எடுத்துக் கொள்கின்றார். இதனைத் தொல்காப்பிய நூற்பா கொண்டே விளக்கம் தருகின்றார்.

    “ணள என் புள்ளிமுன் டண எனத் தோன்றும்“ (தொ.எழு., தொ.மரபு-8)

    என்பதனால்

    தொள் + நூறு = தொண்ணூறு

    இதனை ஒன்பது பெருக்கல் நூறு எனப் பொருள் கொள்ளாமல் நூற்றில் ஒன்பது பங்கு என்றே பொருள் கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றார்.

    இக்கருத்தினையே கால்டுவெல் அவர்களும் கூறுகின்றார். இவரும் 90 என்ற எண்ணிற்கான பெயரினைத் தொண்ணூறு என்றே எடுத்துக் கொள்கின்றார்.

    தொள் + பத்து = தொண்ணூறு

    தொள் என்னும் சொல் பத்து என்ற சொல்லுடன் புணர்ந்தால் தவறுதலாக அமையும்.

    தொண்ணூறு = 90

    நூறு = 100

    எனவே தொண்ணூறு (90) என்பதனை நூறுக்கு (100) முன்னே நிற்கும் எண் (90) என்றே பொருள் கொள்ள வேண்டும் என்கின்றார் கால்டுவெல்.

  • ஒன்பது + பத்து = தொண்ணூறு தொல்காப்பியர் கூறும் இப்புணர்ச்சியில்

    ஒன்பது - தொண் என்றும்

    பத்து - நூறு என்றும் மறுபிறவி எடுக்கின்றன. இப்புணர்ச்சி தொல்காப்பியர் கூறியது அல்ல. இடைச்செருகலாக எழுதிச் சேர்க்கப்பட்டது என்கின்றனர் பு.பாலாஜி மற்றும் வி.பி.புருசோத்தமன் அவrகள்.

  • ஒன்பது என்பதில் ஒகரத்தோடு தகரத்தைச் சேர்த்து னகரத்தை ணகரமாக்கி தொண்ணூறு வருவதற்கான செயற்கை நூற்பாக்களை எழுதி இடைக்காலத்தில் சேர்த்திருக்கின்றனர் என்கின்றார் இரா.மதிவாணன் அவர்கள்.

    மேலும் அவர், தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள தொண்ணூறு என்னும் எண்ணுப் பெயரினை எடுத்துக் கொள்ளும் முறை பற்றித் தெரிவிக்கின்றார்.

    தமிழில் தொள் (தொள்பம்) என்னும் சொல் குறை என்னும் பொருளினும் கையாளப்படுகின்றது.

    அதனால், தொண்ணூறு (90) என்பதனை நூற்றுக்குப் பத்துக்குறை (100-10) என்றே பொருள் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார்.

  • தானங்களை எண்ணிக் கணக்கிடுவது கணித வழக்கு. 90 என்ற எண்ணில் ஒன்று, பத்து என்ற இரண்டு தானங்கள் மட்டுமே இருக்கின்றன. எனினும் இதனை நூறு என்ற பெயர் கொண்டு அழைப்பதும் எண்ணத்தக்கது.

  • தொண்டு + பத்து = தொண்பது என்று பாவாணர் கூறுகின்றார்.

    தொண்டு = 9

    தொண்பது (தொண்டு + பத்து) = 90

    தொண்பது என்ற பெயர் ஒண்பது - ஒன்பது என்று திரித்து வழங்கப்பட்டது.

    தொண்டு = 9

    ஒன்பது = 90

    தொண்ணூறு = 900

    தொண்டு என்ற பெயர் வழக்கு வீழவே அதன் மேலிடப் பெயர்கள் எல்லாம் தாழ்ந்து வந்தன. இதனால்,

    ஒன்பது = 9

    தொண்ணூறு = 90

  • ஒன்பது என்றால் ஒன்பது பத்துக்கள் (9x10=90) என்றே பொருள் கொள்ள வேண்டும் என்கின்றார் முனைவர் பாக்கியமேரி அவர்கள்.
  • 90 என்ற எண்ணினைத் தொண்பது என்றே கூறுகின்றாr இரா. மதிவாணன். மேலும், தொண்பது குறித்துத் தொல்காப்பியர் எழுதிய நூற்பா கிடைக்காமல் போயிருக்கலாம் என்றும், இதனால் தொல்காப்பியத்தில் நூற்பாக்கள் இடம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றது என்றும் கூறுகின்றார்.

    தொல்காப்பியத்தில் ஒருபஃது (10) இருபஃது (20), முப்பஃது (30) என்ற எண்ணுப் பெயர்கள் கூறப்படும் வரிசையில் தொண்பது (90) என்ற பெயர்ப்புணச்ச்சியினைக் கூறாமல் தொண்ணூறு (900) என்ற பெணர்ப்புணர்ச்சி இடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்கின்றார்.

    தொல்காப்பியத்தில் நூற்பா இடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்ற இவரின் கருத்தினை ஏற்றுக் கொள்ள இயலாது. ஏனென்றால், தொல்காப்பியத்தில் - ஒன்பது+ பத்து = தொண்ணூறு என்பதற்கான விதியினையே தொல்காப்பியர் கூறியுள்ளார். இதனை, ஒன்று முதல் ஒன்பது வரை உள்ள எண்முன் நூறு என்ற எண் புணரும் வரிசையில் இணைக்கப்பட்டால், அப்பகுதியில் அனைத்து எண்களும் நூறு என்ற எண்ணுடன் இணைக்கப்படுகையில் இப்புணர்ச்சி மட்டும் பத்து என்ற எண்ணுடன் பொருந்துதல் சரியான நிலையில் அமையாது என்பது குறிப்பிடத்தக்கது.



  • 900 என்ற எண்ணின் பெயர்

    தொல்காப்பியர் ஒருநூறு (100), இருநூறு (200), முந்நூறு (300) என்ற எண்ணுப்பெயர்கள் புணரும் வரிசையில் 900 என்ற எண்ணிற்கான பெயர்ப்புணர்ச்சியினைக் கூறியுள்ளார்.

    “ஒன்பான் முதனிலை முந்து கிளந்தற்றே
    முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும்
    நூறுஎன் கிளவி நகாரமெய் கெட
    ஊ ஆ ஆகும் இயற்கைத்து என்ப
    ஆயிடை வருதல் இகர ரகாரம்
    ஈறுமெய் கெடுத்து மகரம் ஒற்றும்” (தொல்.எழு., குற்.புண-58)

    ஒன்பது + நூறு = தொள்ளாயிரம்

    இவ்வெண்ணிற்கான பெயர்ப்புணர்ச்சி சிக்கலானது என்று பல அறிஞர்கள் கூறுகின்றனர்.

    தொள்ளாயிரம் என்ற எண்ணுப்பெயருக்கான புணர்ச்சி வேறு வகையினது என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர்.

    தொண்டு என்பதின் வேர்ச்சொல்லான தொள் என்பது நிலை மொழியாக நிற்க, ஆயிரம் என்னும் வருமொழி சேர்ந்து புணர்ந்தாலேயே தொள்ளாயிரம் என்ற எண்ணுப் பெயர் பிறக்க முடியும் என்கின்றார் ச. சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள்.

    900 என்ற எண்ணிற்கான பெயரினை இவர் தொள்ளாயிரம் என்றே எடுத்துக் கொள்கின்றார். இதனை தொல்காப்பிய நூற்பா கொண்டே விளக்கம் தருகின்றார்.

    “குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்” (தொ.,எழு.,தொ.மரபு - 18)

    என்பதனால்,

    தொள் +ஆயிரம் = தொள்ளாயிரம் (900)

    இதனை ஒன்பது பெருக்கல் ஆயிரம் எனப் பொருள் கொள்ளாமல் ஆயிரத்தில் ஒன்பது பங்கு என்றே பொருள் கொள்ள வேண்டும் என்கின்றார்.

  • இக்கருத்தினையே கால்டுவெல் அவர்களும் கூறுகின்றார். இவரும் 900 என்ற எண்ணிற்கான பெயரைத் தொள்ளாயிரம் என்றே எடுத்துக் கொள்கின்றார்.

    தொள் +ஆயிரம் = தொள்ளாயிரம்

    தொள் என்னும் சொல் நூறு என்ற சொல்லுடன் புணர்ந்தால் தவறுதலாக அமையும்.

    தொள்ளாயிரம் = 900

    ஆயிரம் = 1000

    இதனால் தொள்ளாயிரம் (900) என்பதனை ஆயிரத்திற்கு (1000) முன்னே நிற்கும் எண் (900) என்றே பொருள் கொள்ள வேண்டும் என்கின்றார் கால்டுவெல்.

  • ஒன்பது + நூறு = தொள்ளாயிரம்

    ஒன்பது - தொள் என்றும், நூறு - ஆயிரம் என்றும் மறுபிறவி எடுக்கின்றன. இப்புணர்ச்சி தொல்காப்பியர் கூறியது அல்ல என்றும், இடைச்செருகலாக எழுதிச் சேர்க்கப்பட்டது என்றும் கூறுகின்றனர் பு.பாலாஜி மற்றும் வி.பி.புருசோத்தமன் அவர்கள்.

    ஒன்பது என்பதில் ஒகரத்தோடு தகரத்தைச் சேர்த்து னகரத்தை ளகரமாக்கி தொள்ளாயிரம் வருவதற்கான செயற்கை நூற்பாவினை எழுதி இடைக்காலத்தில் சேர்த்திருக்கின்றனர் என்கின்றார் இரா.மதிவாணன் அவர்கள்.

    மேலும் அவர் தொள்ளாயிரம் என்ற எண்ணுப் பெயரின் விளக்கத்தினைப் புரிந்து கொள்ளும் முறை பற்றிக் குறிப்பிடுகின்றார்.

    தொள்ளாயிரம் (900) ஆயிரத்திற்கு நூறு குறை (1000-100) என்றே பொருள் கொள்ள வேண்டும் என்கின்றார்.

    · 900 என்ற எண்ணில் ஒன்று, பத்து, நூறு என்ற மூன்று தானங்கள் மட்டுமே இருக்கின்றன. எனினும் இதனை ஆயிரம் என்ற பெயர் கொண்டு அழைப்பதனையும் கவனிக்க வேண்டும்.

    தொண்டு + நூறு = தொண்ணூறு என்பது பாவாணர் கருத்தாக இருக்கின்றது.

    தொண்டு = 9

    தொண்பது (தொண்டு + பத்து) = 90

    தொண்ணூறு (தொண்டு + நூறு) = 900

    தொள்ளாயிரம் (தொண்டு + ஆயிரம்) = 9000

    தொண்பது என்பது ஒண்பது - ஒன்பது என்று திரிந்து வழங்கப்பட்டதாலும், தொண்டு என்ற பெயர் வழக்கு வீழ்ந்ததாலும் அதன் மேலிடப் பெயர்கள் தாழ்ந்து அமைந்து விட்டன.

    ஒன்பது = 9

    தொண்ணூறு = 90

    தொள்ளாயிரம் = 900

  • தொல்காப்பியத்தில் ஒரு நூறு (100), இருநூறு (200), முந்நூறு (300) என்ற எண்ணுப் பெயர்கள் கூறப்படும் வரிசையில் தொள்ளாயிரம் என்ற எண்ணுப்பெயர் இடம் பெற்றிருக்கின்றது. தொண்ணூறு என்ற எண்ணுப்பெயர் இடம் மாற்றப்பட்டு அமைந்ததைப் போலவே தொள்ளாயிரம் என்ற எண்ணுப்பெயர் நூற்பாவும் இடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றார் இரா. மதிவாணன் அவர்கள்.

    தொல்காப்பிய நூற்பா இடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்ற இவரின் கருத்து ஏற்றுக் கொள்ள இயலாது. ஏனெனில், ஒன்பது+ஆயிரம் = தொள்ளாயிரம் என்பதற்கான விதியினையே தொல்காப்பியர் கூறியுள்ளார். இதனை ஒன்று முதல் ஒன்பது வரை உள்ள எண்கள் ஆயிரம் என்ற எண்ணுடன் புணரும் வரிசையில் இணைக்கப்பட்டால், அப்பகுதியில் அனைத்து எண்களும் ஆயிரம் என்ற எண்ணுடன் இணைக்கப்படுகையில் இப்புணர்ச்சி மட்டும் நூறு என்ற எண்ணுடன் பொருந்துதல் சரியான நிலையில் அமையாது என்பது குறிப்பிடத்தக்கது.


  • 9000 என்ற எண்ணின் பெயர்

    தொல்காப்பியர் ஓராயிரம் (1000), ஈராயிரம் (2000), மூவாயிரம் (3000) என்ற எண்ணுப்பெயா;கள் புணரும் வரிசையில் 9000 என்ற எண்ணிற்கான பெயர்ப்புணர்ச்சியினைக் கூறியுள்ளார்.

    “ஒன்பான் இறுதி உருபுநிலை திரியாது
    இன்பெறல் வேண்டும் சாரியை மரபே” (தொல்.,எழு.,குற்.புண-65)

    ஒன்பது +ஆயிரம் = ஒன்பதினாயிரம் (9000)

  • ச. சுபாஸ் சந்திரபோஸ் அவர்களின் கருத்தின்படி, இதனை, பத்தாயிரத்தில் (10,000) ஒன்பது பங்கு என்று ஒன்பதினாயிரம் (9000) என்றே பொருள் கொள்ள வேண்டும்.

  • கால்டுவெல் அவர்களின் கருத்தின்படி, இதனைப் பத்தாயிரத்திற்கு (10,000) முன் நிற்கும் எண் ஒன்பதினாயிரம் (9000) என்றே பொருள் கொள்ள வேண்டும்.

  • இரா.மதிவாணன் அவர்களின் கருத்தின்படி, இதனைப் பத்தாயிரத்திற்கு ஆயிரம் குறை (10,000-1000) என்ற பொருளில் ஒன்பதினாயிரம் (9000) என்றே பொருள் கொள்ள வேண்டும்.

  • 9000 என்ற எண்ணில் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் என்ற நான்கு தானங்களே இருக்கின்றன. இருப்பினும் இதனை பத்தாயிரம் என்ற பெயr கொண்டு அழைப்பதனையும் எண்ணுதல் வேண்டும்.

  • தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் என்பது பாவாணர் கருத்தாக இருக்கின்றது.

    தொண்டு = 9

    தொண்பது = 90

    தொண்ணூறு = 900

    தொள்ளாயிரம் = 900

    தொண்பதினாயிரம் = 9000 (ஒன்பதினாயிரம்)

    தொண்பது என்பது ஒண்பது - ஒன்பது என்று திரிந்து, தொண்டு என்ற சொல் வழக்கு வீழவே அதன் மேலிடப் பெயர்கள் எல்லாம் தாழ்ந்து அதற்குக் குறைவான எண்களுக்கு அமைந்து விட்டன.

    ஒன்பது = 9

    தொண்ணூறு = 90

    தொள்ளாயிரம் = 900

    ஒன்பதினாயிரம் = 9000

  • தொல்காப்பியத்தில் ஓராயிரம் (1000), ஈராயிரம் (2000), மூவாயிரம் (3000) என்ற எண்ணுப் பெயர்கள் கூறப்படும் வரிசையில் ஒன்பதினாயிரம் என்ற எண்ணுப்பெயர் இடம் பெற்றிருக்கின்றது. தொண்ணூறு, தொள்ளாயிரம் என்ற எண்ணுப்புணர்ச்சி தொல்காப்பியத்தில் இடம் மாற்றி அமைக்கப்பட்டிருப்பது போலவே ஒன்பதினாயிரம் என்ற எண்ணுப்பெயர் நூற்பாவும் இடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்கின்றார் இரா. மதிவாணன் அவர்கள்.

    இக்கருத்து ஏற்றுக்கொள்ளுதற்கு இயலாது. ஏனெனில் தொல்காப்பியத்தில் ஒன்பது + ஆயிரம் = ஒன்பதினாயிரம் என்பதற்கான விதியினையே தொல்காப்பியர் கூறியுள்ளார். இதனை ஒருபத்து முதல் எண்பஃது வரை உள்ள எண்கள் ஆயிரம் என்ற எண்ணுடன் புணரும் வரிசையில் இணைக்கப்பட்டால், அப்பகுதியில் ஒருபஃது முதல் எண்பஃது வரை உள்ள எண்கள் ஆயிரம் என்ற எண்ணுடன் இணைக்கப்படுகையில், இப்புணர்ச்சி மட்டும் ஒன்பது என்னும் ஒருதானம் ஆயிரம் என்ற எண்ணுடன் பொருந்துதல் சரியான நிலையில் அமையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.


  • 90,000 என்ற எண்ணின் பெயர்

    தொல்காப்பியர் ஒரு பத்தாயிரம் (10,000), இருபதாயிரம் (20,000), முப்பதாயிரம் (30,000) என்ற எண்ணுப் பெயர்கள் புணரும் வரிசையில் 90,000 என்ற எண்ணிற்கான பெயரினைக் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

    “ஆயிரம் வரினே இன் என் சாரியை
    ஆவயின் ஒற்றிடைமிகுதல் இல்லை”(தொல்.,எழு.,குற்.புண-71)

    இந்நூற்பாவில், பத்து என்ற எண்ணின் முன் ஆயிரம் என்ற எண் புணருதலைத் தொல்காப்பியர் கூறியுள்ளார். இதில் ஒரு பஃது முதல் எண்பஃது வரை உள்ள எண்களே ஆயிரம் என்ற எண்ணுடன் சேர்ந்து புணர முடியும்.

    இதன் வழி ஒருபதினாயிரம் முதல் (10,000) எண்பதினாயிரம் (80,000) வரை எண்ணுப்பெயர்கள் தோன்றுவதற்கு வழி கூறியுள்ளார் தொல்காப்பியர். 90,000 என்ற எண்ணிற்குரிய பெயர் தோன்றுவதற்கு தொல்காப்பியத்தில் எங்கும் விதி கூறப்படவில்லை.

    தொல்காப்பியர் 90 என்ற எண்ணிற்குத் தொண்ணூறு என்ற பெயர் கூறுகின்றபடியால் நூறு என்ற எண்ணுப்பெயரின் முன்னர் ஆயிரம் என்ற எண்ணுப் பெயர் புணர்ந்தாலேயே 90,000 என்ற எண்ணிற்குரிய பெயர் பெறப்படும்.

    தொண்ணூறு + ஆயிரம் = தொண்ணூறாயிரம்

    90 + 1000 = 90,000

    தொல்காப்பியர் 90 என்ற எண்ணிற்குத் தொண்ணூறு என்று பெயர் கூறுகின்றபடியால் 90,000 என்ற எண்ணிற்குத் தொண்ணூறாயிரம் என்ற பெயரே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

  • ச. சுபாஸ் சந்திரபோஸ் அவர்களின் கருத்தின்படி, இதனை, நூறாயிரத்தில் (1,00,000) ஒன்பது பங்கு என்று, தொண்ணூறாயிரம் (90,000) என்றே பொருள் கொள்ள வேண்டும்.

  • கால்டுவெல் அவrகளின் கருத்தின்படி, நூறாயிரத்திற்கு (1,00,000) முன் நிற்கும் எண் தொண்ணூறாயிரம் (90,000) என்றே பொருள் கொள்ள வேண்டும்.

  • இரா.மதிவாணன் அவrகளின் கருத்தின்படி, நூறாயிரத்தில் (1,00,000) பத்தாயிரம் குறை (1,00,000-10,000) என்று, தொண்ணூறாயிரம் (90,000) என்றே பொருள் கொள்ள வேண்டும்.

  • பாவாணார் 9 என்ற எண்ணினைத் தொண்டு என்று கூறுவதால், இதனை,

    தொண்டு + பத்தாயிரம் = தொண்பத்தாயிரம்

    9 + 10,000 = 90,000

    என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பத்து என்ற எண்ணுடன் ஆயிரம் என்ற எண் புணர வேண்டும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுவதனைப் போன்று இதனை எடுத்துக் கொண்டால்,

    தொண்பது (90) + ஆயிரம் (1000) = தொண்பதினாயிரம் (ஒண்பதினாயிரம்) (90,000)

    என்ற பெயரில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    90,000 என்ற எண்ணில் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம் என்ற ஐந்து தானங்கள் மட்டுமே இருக்கின்றன. எனினும் இதனை நூறு என்ற பெயரில் கூறப்படுவதனையும் எண்ணுதல் வேண்டும்.

  • 9,00,000 என்ற எண்ணின் பெயர்

    தொல்காப்பியர் ஒருநூறாயிரம் (1,00,000) இருநூறாயிரம் (2,00,000), முந்நூறாயிரம் (3,00,000) என்று எண்ணுப் பெயர்கள் புணரும் வரிசையில் ஒன்பது நூறாயிரம் (9,00,000) என்ற எண்ணிற்கான பெயர்ப்புணர்ச்சியினைக் கூறியுள்ளார்.

    “நூறாயிரம் முன் வரூஉம் காலை
    நூறன் இயற்கை முதனிலைக் கிளவி” (தொல்.,எழு.,குற்.புண-66)

    ஒன்பது + நூறாயிரம் = ஒன்பது நூறாயிரம்.

    9,00,000 என்ற இந்த எண்ணிற்குத் தற்காலத்தில் ஒன்பது லட்சம் என்ற பெயர் வழங்கப்படுகின்றது. லட்சம் என்பது வடமொழி பெயர். ஆகையினால், இதனை முன்னர் காலத்தில் நூறாயிரம் என்றே வழங்கியிருக்க வேண்டும் என்பதனை அறிய முடிகின்றது.

  • ஒன்பது + நூறு = தொள்ளாயிரம் என்று திரிந்து வழங்கப்பட்டதனைப் போன்றே,

    ஒன்பது + நூறாயிரம் = தொள்ளாயிரமாயிரம் என்று திரிந்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தொல்காப்பியர் இதனை ஒன்பது நூறாயிரம் என்று இயல்பாகப் புணரச் செய்துள்ளார் என்கின்றனர் பு.பாலாஜி மற்றும் வி.பி.புருசோத்தமன் அவர்கள்.

  • பாவாணர் 9 என்ற எண்ணினைத் தொண்டு என்று குறிப்பதால்,

    தொண்டு (9) + நூறாயிரம் (1,00,000) = தொண்ணூறாயிரம் (9,00,000) என்றும், மேலும், 900 என்ற எண்ணினைத் தொண்ணூறு என்று குறிப்பதாலும், 9,00,000 என்ற எண்ணைத் தொண்ணூறாயிரம் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • ச. சுபாஸ் சந்திரபோஸ் கூற்றின்படி, பத்து நூறாயிரத்தில் (10,00,000) ஒன்பது பங்கு (9,00,000) ஒன்பது நூறாயிரம் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

  • கால்டுவெல் அவர்களின் கருத்தின்படி, பத்து நூறாயிரத்திற்கு முன்னர் அமைந்த எண் (9,00,000) ஒன்பது நூறாயிரம் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

  • இரா. மதிவாணன் அவர்களின் கருத்தின்படி, பத்து நூறாயிரத்தில் (10,00,000) ஒரு நூறாயிரம் குறை (1,00,000) என்பதால் ஒன்பது நூறாயிரம் (9,00,000) என்றே பொருள் கொள்ள வேண்டும்.

  • 9,00,000 என்ற எண்ணில் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், நூறாயிரம் என்ற ஆறு தானங்கள் மட்டுமே இருந்தும் இதனை பத்து நூறாயிரம் என்று அழைக்கப்படுவதனையும் எண்ணுதல் வேண்டும்.

  • பாவாணர் கருத்துப்படி,

    தொண்பது (90) + நூறாயிரம்(1,00,000) = தொண்பது நூறாயிரம் (90,00,000)

    இதனால், 90,00,000 என்ற எண்ணிற்கே ஒன்பது நூறாயிரம் வழங்கப்படுவதனை அறியமுடிகின்றது.

  • பாவாணர், தொல்காப்பியர் குறிப்பிடும் எண்களும், எண்களுக்குரிய பெயர் வேறுபாடுகளும்

    பாவாணர் கூறியது எண்கள் தொல்காப்பியர் கூறியது
    தொண்டு 9 ஒன்பது, தொண்டு
    தொண்பது 90 தொண்ணூறு
    தொண்ணூறு 900 தொள்ளாயிரம்
    தொள்ளாயிரம் 9000 ஒன்பதினாயிரம்
    தொண்பதினாயிரம் (ஒன்பதினாயிரம்) 90,000 -?-
    தொண்ணூறாயிரம் 9,00,000 ஒன்பது நூறாயிரம்
    தொண்பது நூறாயிரம் (ஒன்பது நூறாயிரம்) 90,00,000 -?-



    190, 109 என்ற எண்களுக்குரிய பெயர்கள்

    தொல்காப்பியர் நூற்றொருபத்து (110), நூற்றிருபஃது (120), நூற்றி முப்பஃது (130) என்ற எண்ணுப்பெயர்கள் புணரும் வரிசையில் 190 என்ற எண்ணிற்கான பெயர்ப்புணர்ச்சியினைக் குறிப்பிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

    “அவை ஊர் பத்தினும் அத்தொழிலாகும்”(தொல்.,எழு.,குற்.புண-68)

    இதில் நூறு என்ற எண்ணிற்கு முன் பத்து என்ற எண்கள் புணருவதனைத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இதனால் நூற்றொருபஃது (110) முதல் நூற்றெண்பஃது (180) வரை உள்ள எண்களுக்கே பெயர் அறிய முடியும்.

    90 என்ற எண்ணிற்குத் தொல்காப்பியர் தொண்ணூறு என்று பெயர் குறிப்பிடுவதனால், நூறு என்ற எண்ணுடன், நூறு என்ற எண் புணர்ந்தாலேயே 190 என்ற எண்ணுக்கான பெயரினைப் பெறமுடியும்.

    90 என்ற எண்ணிற்கு தொண்பது என்ற பெயர் இருந்தாலேயே, தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள நூற்பாவின் வழி, 190 என்ற எண்ணிற்குரிய பெயரினை அறிய முடியும்.

    நூறு + தொண்பது = நூற்றொண்பது

    100 + 90 = 190

    நூறு என்ற எண்ணுப் பெயருடன் ஒன்று முதல் ஒன்பது வரை உள்ள எண்கள் புணரும் என்று கூறும் நூற்பாவானது,

    “நூறு என் கிளவி ஒன்று முதல் ஒன்பாற்கு
    ஈறு சினை ஒழிய இன ஒற்று மிகுமே” (தொல்.,எழு.,குற்.புண-67)

    இதில், 109 என்ற எண்ணிற்குரிய பெயரானது கூறப்படுகின்றது.

    நூறு + ஒன்பது = நூற்றொன்பது

    நூற்றொன்பது = 109

    9 என்ற எண்ணிற்கு தொண்டு என்ற பெயர் குறிக்கப்பட்டாலேயே,

    நூறு + தொண்டு = நூற்றிதொண்டு

    நூற்றி தொண்டு = 109 என்பதறியப்படுகின்றது.

    இதனால் 109 என்ற எண்ணிற்கு நூற்றி தொண்டு என்பதும் - 109 என்ற எண்ணிற்கு தற்காலத்தில் வழங்கப்படும் நூற்றொன்பது என்ற பெயர் 190 என்ற எண்ணுக்கும் வழங்கப்பட்டிருந்திருக்க வேண்டும் என்பதனை அறிய முடிகின்றது.

    துணைநூற்பட்டியல்

    1. இளங்குமரன். இரா., தேவநேயம் (பாவாணர்)-8, சென்னை: பாவாணர் அறக்கட்டளை, 2004.

    2. கால்டுவெல்., செம்மொழிகளின் ஒப்பிலக்கணம், சென்னை: விக்னேஷ் வெளியீடு, 2007.

    3. சுப்பிரமணியன்.ச.வே., தொல்காப்பியம் தெளிவுரை, சென்னை: மணிவாசகர் பதிப்பகம், 2010.

    4. சுபாஸ் சந்திரபோஸ்.ச., எழுத்தியல் ஆய்வுகள்-I, சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம், 2001.

    5. தேவநேயப்பாவாணர்.ஞா., தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சென்னை: கழக வெளியீடு, 1955.

    6. பாக்கியமேரி, வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2009.

    7. பாலாஜி. பு., புருஷோத்தமன். வி.பி., எல்லோருக்கும் தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சென்னை: ஐந்திணைப் பதிப்பகம், 2009.

    8. மதிவாணன். இரா., தொல்காப்பியர் காலம், சென்னை: சேகர் பதிப்பகம், 2009.

    அட்டவணை

    பாவாணர் கூறியது எண்கள் தொல்காப்பியர் கூறியது
    தொண்டு 9 ஒன்பது, தொண்டு
    தொண்பது 90 தொண்ணூறு
    நூற்றிதொண்டு 109 -?-
    நூற்றொன்பது 190 -?-
    தொண்ணூறு 900 தொள்ளாயிரம்
    தொள்ளாயிரம் 9000 ஒன்பதினாயிரம்
    தொண்பதினாயிரம் (ஒன்பதினாயிரம்) 90,000 -?-
    தொண்ணூறாயிரம் 9,00,000 ஒன்பது நூறாயிரம்
    தொண்பது நூறாயிரம் (ஒன்பது நூறாயிரம்) 90,00,000 -?-


    ச. சுபாஸ் சந்திரபோஸ்

    10ல் 9 பங்கு - ஒன்பது (9)

    100ல் 9 பங்கு - தொண்ணூறு (90)

    1000ல் 9 பங்கு - தொள்ளாயிரம் (900)

  • 10,000ல் 9 பங்கு - ஒன்பதினாயிரம் (9,000)

  • 1,00,000ல் 9 பங்கு - தொண்ணூராயிரம் (90,000)

  • 10,00,000ல் 9 பங்கு - ஒன்பது நூறாயிரம் (90,000)

  • கால்டுவெல்

    10 முன் நிற்கும் எண் - ஒன்பது (9)

    100 முன் நிற்கும் எண் - தொண்ணூறு (90)

    1000 முன் நிற்கும் எண் - தொள்ளாயிரம் (900)

  • 10,000 முன் நிற்கும் எண் - ஒன்பதினாயிரம் (9,000)

  • 1,00,000 முன் நிற்கும் எண் - தொண்ணூறாயிரம் (90,000)

  • 10,00,000 முன் நிற்கும் எண் - ஒன்பது நூறாயிரம் (9,00,000)

  • இரா.மதிவாணன்

    10க்கு 1 குறை - ஒன்பது (9)

    100க்கு 10 குறை - தொண்ணூறு (90)

    1000க்கு 100 குறை - தொள்ளாயிரம் (900)

  • 10,000க்கு 1000 குறை - ஒன்பதினாயிரம் (9000)

  • 1,00,000க்கு 10,000 குறை - தொண்ணூறாயிரம் (90,000)

  • 10,00,000க்கு 1,00,000 குறை - ஒன்பது நூறாயிரம் (9,00,000)

  • குறிப்பு:

  • அட்டவணையில் கண்டறியப்பட்டது.
    *****


    இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

  • இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/literature/p84.html
    

      2024
      2023
      2022
      2021
      2020
      2019
      2018
      2017


    வலையொளிப் பதிவுகள்
      பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

      எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

      சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

      கௌரவர்கள் யார்? யார்?

      தமிழ் ஆண்டுப் பெயர்கள்

      பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

      வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

      பண்டைய படைப் பெயர்கள்

      ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

      மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

      மரம் என்பதன் பொருள் என்ன?

      நீதி சதகம் கூறும் நீதிகள்

      மூன்று மரங்களின் விருப்பங்கள்

      மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

      மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

      யானை - சில சுவையான தகவல்கள்

      ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

      புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

      நான்கு வகை மனிதர்கள்

      தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

      மாபாவியோர் வாழும் மதுரை

      கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

      தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

      குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

      மூன்று வகை மனிதர்கள்

      உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


    சிறப்புப் பகுதிகள்





    முதன்மைப் படைப்பாளர்கள்

    வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


    சிரிக்க சிரிக்க
      எரிப்பதா? புதைப்பதா?
      அறிவை வைக்க மறந்துட்டானே...!
      செத்தும் செலவு வைப்பாள் காதலி!
      வீரப்பலகாரம் தெரியுமா?
      உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
      இலையுதிர் காலம் வராது!
      கண்ணதாசனின் நகைச்சுவைகள்
      குறைச்சுத்தான் எடை போடறாரு...!
      அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
      குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
      இடத்தைக் காலி பண்ணுங்க...!
      சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
      மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
      மாபாவியோர் வாழும் மதுரை
      இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
      ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
      அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
      ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
      கவிஞரை விடக் கலைஞர்?
      பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
      கடைசியாகக் கிடைத்த தகவல்!
      மூன்றாம் தர ஆட்சி
      பெயர்தான் கெட்டுப் போகிறது!
      தபால்காரர் வேலை!
      எலிக்கு ஊசி போட்டாச்சா?
      சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
      சம அளவு என்றால்...?
      குறள் யாருக்காக...?
      எலி திருமணம் செய்து கொண்டால்?
      யாருக்கு உங்க ஓட்டு?
      வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
      கடவுளுக்குப் புரியவில்லை...?
      முதலாளி... மூளையிருக்கா...?
      மூன்று வரங்கள்
      கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
      நான் வழக்கறிஞர்
      பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
      பொழைக்கத் தெரிஞ்சவன்
      காதல்... மொழிகள்
    குட்டிக்கதைகள்
      எல்லாம் நன்மைக்கே...!
      மனிதர்களது தகுதி அறிய...
      உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
      இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
      அழுது புலம்பி என்ன பயன்?
      புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
      கடவுளைக் காண உதவும் கண்ணாடி
      தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
      உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
      ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
      அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
      கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
      எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
      சிங்கத்திற்கு வாழைப்பழம்!
      வலை வீசிப் பிடித்த வேலை
      சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
      இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
      கல்லெறிந்தவனுக்கு பழமா?
      சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
      வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
      ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
      அக்காவை மணந்த ஏழை?
      சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
      இராமன் சாப்பாட்டு இராமனா?
      சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
      புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
      பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
      தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
      கழுதையின் புத்திசாலித்தனம்
      விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
      தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
      சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
      திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
      புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
      இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
      ஆணவத்தால் வந்த அழிவு!
      சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
      சொர்க்க வாசல் திறக்குமா...?
      வழுக்கைத் தலைக்கு மருந்து
      மனைவிக்குப் பயப்படாதவர்
      சிங்கக்கறி வேண்டுமா...?
      வேட்டைநாயின் வருத்தம்
      மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
      கோவணத்திற்காக ஓடிய சீடன்
      கடவுள் ரசித்த கதை
      புத்தர் மௌனமாக இருக்கலாமா?
      குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
      சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
      தேங்காய் சிதறுகாயான கதை
      அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
      அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
      கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
      சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
      அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
      விமானத்தில் பறந்த கஞ்சன்
      நாய்களுக்கு அனுமதி இல்லை
      வடைக்கடைப் பொருளாதாரம்
    ஆன்மிகம் - இந்து சமயம்
      ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
      தானம் செய்வதால் வரும் பலன்கள்
      முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
      பிரதோஷம் எப்படி விஷேசமானது?
      விநாயகர் சில சுவையான தகவல்கள்
      சிவராத்திரி விஷேசமானது ஏன்?
      முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
      தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
      கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
      எப்படி வந்தது தீபாவளி?
      தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
      ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
      ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
      அனுமனுக்கு வடை மாலை ஏன்?
      திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
      விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
      கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
      சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
      முருகா என்றால் என்ன கிடைக்கும்?
      குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
      விபூதியின் தத்துவம்
      கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
      தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
      கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
      இறைவன் ஆடிய நடனங்கள்
      யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
      செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
      கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
      விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
      இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
      நவராத்திரி பூஜை ஏன்?
      வேள்விகளும் பலன்களும்
      காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
      பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
      அம்பலப்புழா பால் பாயாசம்
      துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
      சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
      ஈசன் உபதேசித்தத் தலங்கள்
      பரமபதம் விளையாட்டு ஏன்?
      வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
      பதின்மூன்று வகை சாபங்கள்
      இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
      சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
      பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
      சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
      உணவு வழித் தோசங்கள்
      திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
      மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
      பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
      நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
      சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
      மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
      இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
      பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
      கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
      அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
      தீர்க்க சுமங்கலி பவா


    தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                            


    இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
    Creative Commons License
    This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License