சங்ககாலத்தில் தமிழர்களிடம் மட்டுமன்றி அவர்கள் வளர்த்த விலங்குகளிடமும் மறமாண்பும், மான உணர்வும், நாணமும் இருந்தன என்பதற்கு முத்தொள்ளாயிரப் பாடல் ஒன்று சான்றாக விளங்குகிறது.
சோழ மன்னன் பகை நாட்டின் மீது படையெடுத்து வாகை சூடினான். வீரத்திலகமிட்டு வெற்றி முத்தம் பதித்து சென்றுவா வென்றுவா என மறத்தமிழச்சிக்கேயுரிய அந்தத் தன்மான உணர்ச்சியிலே, வாழ்த்து கூறி விடை கொடுத்த மனைவிமார்கள் பகை வென்று திரும்பும் தம் கணவர்மார்களை வரவேற்க வீட்டு வாயிற்படியிலேயே ஆவலும், ஆசையும் ததும்பக் காத்திருக்கின்றனர்.
அன்றிரவு, பிரிந்த இடை நாள்களுக்கும் சேர்த்து இன்பப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. மார்பிலே பட்ட அம்பு முனைகளின் வேதனையை மனைவிமார்கள் தங்கள் கொங்கை முனைகளிலே வேது செய்து ஆற்றுகின்றனர். போர்க்களப் புழுதிபட்டும், வியர்வையிலே உப்பாகக் காய்ந்திருக்கும் உதடுகளில் தங்கள் கொவ்வை இதழ்களைப் பதித்துத் தேன் சுவையை ஊட்டுகின்றனர். குதிரைகளின் கடிவாளத்தையும், வாட்களின் பிடிகளையும் பிடித்து உரமேறிய கைகளுக்கு மலரினும் மென்மையுடைய தம் மேனியைத் தருகின்றனர். போர்க்களத்திலே மனத்தில் கொடுமையையும், விழிகளில் கனலையும் கக்கிய தம் கணவன்மார்களை இன்ப குளம் நோக்கி அழைத்துச் செல்கின்றனர்.
ஆம்! வெற்றிக் கூத்திலே இவர்களெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் தம்மையே மறந்து விளையாடிக் கொண்டிருக்கும் அந்த வேளையில், வெற்றிக்குத் துணைநின்ற ஓர் உள்ளம் தன் அன்புக் காதலியைக் காணமுடியாமல் ஓரத்தில் ஒதுங்கி நிற்கிறது. போருக்குச் சென்ற மறவர்களில் காலிழந்தும், கையிழந்தும் திரும்பிய வீரர்களும் தம் மனைவிமார்களுடன் கூடிக் குலாவுகையில் வெற்றிக்கே மூலமாய் நின்று, வீர விழுப்புண்கள் பல ஏற்றுத் தம் மன்னனையே காத்த அந்த ஐந்தறிவு உள்ளம் மட்டும் ஏனோ தனித்து நிற்கிறது.
ஆம்! அந்தக் களிறு போர்க்களத்தில் மறவர்களாலும் இடிக்க முடியாத மதில்களைத் தம் கிம்புரிக் கொம்புகளால் இடித்துத் தள்ளியது. அவ்வாறு இடிக்குங்கால் கிம்புரியொடு கொம்பும் ஒடிந்தது. அத்துடன் விட்டதா? இல்லை! இல்லை! மதிலை அழித்து உள்ளே சென்று பகைமன்னரைப் பாய்ந்து தள்ளிக் காலால் இடறிக் கொண்டே போகிறது. அப்படி போனதால் கால்நகமும் தேய்ந்து போயின. கால்நகமும், கொம்பும் சென்றபுன்பும் தம் மன்னரைத் தாங்கி எதிர்வந்த பகையினைத் தங்கையால் தடுத்து வெற்றியைத் தந்தது.
போர்முடிந்து அனைவரும் வீடு திரும்பினர். ஆனால் இந்தக் களிறோ! கொம்பும், நகமும் இழந்த கோலத்தில் பிடி முன்பு செல்ல நாணியது. தம்பிடி முன்பு சென்றால் கொம்பும், நகமும் இழந்த இக்கோலத்தைக் கண்டு எள்ளி நகையாடுமே! மதிலை விடத் தம் கொம்புகள் உரமற்றவை எனக் கேலி பேசுமே என்ற வெட்கத்தால் தன் பிடியினைக் காணாமல் மூலையிலே ஒதுங்கி நிற்கிறது.
ஆம்! அக்காலத்தில் தமிழர்களுக்கு மட்டுமன்றி அவர்களால் வளர்க்கப்பட்ட விலங்குகளுக்கும் தன்மான உணர்ச்சி இருந்ததைத்தான் இக்களிறு நமக்குக் காட்டுகிறது.
இத்தகு இன்பமிகு காட்சியைக் காட்டும் பாடல்.
“கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர்
முடியிடறித் தேய்ந்த நகமும் - பிடிமுன்பு
பொல்லாமை நாணி புறங்கடை நின்றதே
கல்லார்தோட் கிள்ளி களிறு!
(முத்தொள்ளாயிரம் - 72)