வள்ளுவரின் பொருள் நீட்டல் உத்தி
மு. சங்கர்
அறம், பொருள், காமம் என்னும் மூன்று பால்களைத் தன்னகத்தே கொண்டு ஒப்புயர்வற்ற அறநூலாகவும் இலக்கிய நூலாகவும் திகழ்கின்றத் திருக்குறளை வள்ளுவர் பெருமகனார் இயற்றினார் என்று கூறுவர். இவருடைய பொருள் நீட்டலுத்தி யாது? என்று காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
பொருண்மையியல் (Semantics)
அமைப்பு மொழியியலின் ஒரு பிரிவாகப் பொருண்மையியல் (Semantics) திகழ்கின்றது. பொருண்மையியல் என்பது சொற்கள், தொடர்களின் பொருளை விளக்குகின்ற அறிவுத்துறையாகும். அதில் பல் பொருண்மை (Polysemy) என்ற பிரிவு மிகவும் இன்றியமையாதது. ஒரு சொல் பல பொருட்கள் என்பதே இதன் பொருள். இவற்றில் நேர் பொருள், மாற்றப்பொருள், சிறப்புப் பொருள், அணிப்பொருள் என்னும் நான்கு வகைகள் உண்டு. இவற்றுள் அணிப்பொருள் என்னும் வகையில் அடங்கக் கூடியதே பொருள் நீட்டல் என்பது. இதனை அடிப்படையாகக் கொண்டு வள்ளுவரின் பொருள் நீட்டலுத்தி குறித்து ஆராயப்படுகின்றது.
பொருள் நீட்டல் (Lengthen of Meaning)
ஒரு பொருளைக் குறிக்கும் சொல் இன்னொரு பொருளையும் குறிக்கும் போது பொருள் நீட்டல் ஏற்படுகின்றது. பொருள் நீட்டல் என்பது இரு நிலைகளில் ஏற்படும். ஒன்று உருவகம் (Metaphor) மற்றொன்று ஆகுபெயர். உருவகம் என்பது உவமையாகிய பொருளும் உவமிக்கப்படும் பொருளும் வேறுபாடு இல்லாது இரண்டும் ஒன்றென ஒருமித்துக் கூறுவதாகும். ஆகுபெயர் என்பது ஒன்றன் இயற்பெயர் இன்னொரு பொருளுக்குத் தொடர்புடைய பிறிதொரு பொருளைத் தருவதாகும். அதாவது, காஞ்சிபுரம் என்று கூறும்போது அது ஊரையும் அங்கு தயாரிக்கும் பட்டையும் குறிக்கக் காணலாம். இதனை ஆங்கிலத்தில் Metonymy என்று அழைப்பர். தமிழில் வழங்கும் ஆகுபெயர் கோட்பாடு வடமொழியில் இல்லை (2005:210) என்று கூறுவார் ச.பாலசுந்தரனார். ஆனால், வடமொழியில் இலக்கணை என்னும் பகுப்புண்டு. இதில் சொற்கள் நேராகப் பொருள் தரும் முறையும் குறிப்பாகப் பொருள் தரும் முறையும் உண்டு என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஆகுபெயர் (Metonymy)
நெருங்கிய தொடர்புடைய வேறொன்றின் பெயரால் ஒன்றைச் சுட்டுவதே ஆகுபெயர் என்பது(the act of referring to sth by the name of sth else that is closely connected with it, Oxford English - English - Tamil Dictionary, 2009, p.896). அதாவது ஒரு சொல் சுட்டும் புறப்பொருள் இன்னொரு புறப்பொருளோடு காரண - காரிய அடிப்படையில் தொடர்புற்றிருந்தால் அது ஆகுபெயராகும். இது பல பொருள் குறிக்கும் ஒரு சொல்லாகவும் வரப்பெறும். குறிப்பால் பொருள் உணர்த்தும் தன்மையதாக ஆகுபெயரைக் கொள்ளலாம் என்பார் சூ. இன்னாசி (2009:82).
இயற்கையான பொருள் தருமிடத்து இயற்பெயர் என்றும், தொடர்புடைய பிறிதொரு பொருளைத் தருமிடத்து ஆகுபெயர் எனவும் கூறுதல் இலக்கணமாகும் என்று ச. பாலசுந்தரனார் (2005:209) ஆகுபெயரின் இலக்கணத்தைத் தெளிவுபடுத்துவார்.
உரையாசிரியர்கள் கூறுவன (Commentators Says)
1. ஆகுபெயர் என்ற பொருண்மை என்னவெனில், ஒன்றன் பெயர் ஒன்றற்காய் நிற்றல் என்றவாறு (தொல்.சொல்.இளம்.110) என்று இளம்பூரணரும்
2. ஒன்றன் பெயர் ஒன்றற்காதலென ஆகுபெயரிலக்கணத்திற்குத் தோற்றுவாய் செய்தவாறு (தொல்.சொல்.சேனா.114) என்று சேனாவரையரும்
3. ஆகுபெயர் என்பது யாது எனின், யாதானும் ஒரு பொருத்தத்தினால் ஒன்றன்பெயர் ஒன்றதாக வருவது (தொல்.சொல்.தெய்.110) என்று தெய்வச்சிலையாரும் கூறுவர்.
மேலே கண்ட உரையாசிரியர்களின் கருத்துக்கள் வழி நின்று காணும்போது ஆகுபெயர் என்பது ஒன்றன் பெயர் ஒன்றற்கு ஆகி வருவது என்று கூறுவதே பொருத்தமாகும்.
இலக்கணிகள் கூறுவன (Grammarians says)
தொல்காப்பியர் ஆகுபெயரின் இலக்கணத்தை வேற்றுமை மயங்கியலில் கூறுவார்.
முதலிற் கூறுஞ் சினையறி கிளவியும்
சினையிற் கூறு முதலறி கிளவியும்
பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரும்
இயன்றது மொழிதலும் இருபெய ரொட்டும்
வினைமுத லுரைக்குங் கிளவியொடு தொகைஇ
அனையமர பினவே ஆகுபெயர்க் கிளவி (தொல். சொல்.சேனா.114)
மேலும் ஆகுபெயர் பற்றி 115, 116, 117 ஆகிய சூத்திரங்களில் விளக்கிச் சொல்வார். இச்சூத்திரங்களில் எல்லாம் ஆகுபெயரின் இலக்கணத்தைத் தெளிவாக வரையறுத்துக் கூறவில்லை.
ஆனால் பவணந்தி முனிவர் ஆகுபெயரின் இலக்கணத்தைத் தெளிவாக வரையறை செய்கின்றார்.
பொருண்முத லாறோ டளவைசொற் றானி
கருவி காரியங் கருத்த னாதியுள்
ஒன்றன் பெயரா னதற்கியை பிறிதைத்
தொன்முறை யுரைப்பன வாகு பெயரே (நன்.சொல்.பெயர்.33)
இச்சூத்திரத்திற்கு உரையெழுதிய கழகப்புலவர்கள், “ஒரு மொழியின் இயற்பொருள் அதனை முடிக்கவரும் மொழியின் பொருளோடு பொருத்தமின்றிப் போகுமிடத்து அம்மொழியில் ஆக்கப்பொருள் கொள்ளப்பெறும். இவ்வாறு ஆக்கப்பொருள் கொள்ளும் மொழியே ஆகுபெயராகும்” என்னும் வரையறையைத் தருகின்றனர்.
ஆகுபெயரின் இயல்புகள் (Characters of Metonymy )
ஆகுபெயரின் இயல்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. பெரும்பாலும் ஒரு சொல்லாய் வரப்பெறும்.
2. நியதிப் பெயராய் வரப்பெறும்.
3. முதல் சினை முதலாய தொடர்பால் வேறுபொருள் உணர்த்தும்.
4. தொன்று தொட்டு வரப்பெறும்.
5. சொல் குறுக்கம்.
6. பொருள் நீட்டல்.
வள்ளுவரின் பொருள் நீட்டல்
வள்ளுவரின் பொருள் நீட்டல் உத்தியாக இவ்வாகுபெயரே அமையக் காணலாம். இதனைப் பரிமேலழகர் உரை வழி அறியமுடிகின்றது. உருவகத்தை (ஏகதேசம்) விட ஆகுபெயர்களே பெரும்பாலான இடங்களில் (காமத்துப்பால்,குறட்பாக்கள்-1081, 1097, 1098, 1105, 1111, 1113, 1131, 1132, 1191, 1196, 1206, 1214, 1225, 1231, 1237, 1255, 1261, 1263, 1268, 1275, 1285, 1287, 1313) வள்ளுவரால் ஆளப்பட்டுள்ளன.
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள் (குறள்.1105)
இக்குறட்பாவில் வரும் தோடு (தோட்டார்) என்பதை ஆகுபெயராகக் கூறுவார் பரிமேலழகர். பூவினை அணிந்த கூந்தலையுடைய பெண் என்பது இக்குறட்பாவின் நேரடிப்பொருள். ஆனால், தோடு என்னும் சொல்லிற்குப் பூவிதழ், ஓலை, காதணி, வளையம் என்னும் பல பொருட்கள் உண்டு. ஆனால், இக்குறட்பாவில் பூவிதழ் என்னும் பொருளே வள்ளுவரால் ஆளப்பட்டுள்ளது. ஆக, தோடு என்பது வளைந்த என்னும் பொருளைக் கொண்டிருந்தாலும் இங்குப் பூவினைக் குறிக்கக் காணலாம். இதனால் தோடு என்பதை ஆகுபெயராகக் கூறுவார் பரிமேலழகர். சுருங்கக் கூறின் தோடு என்னும் சொல் வளையம் என்னும் பொருளுக்காகி பின் பூவிற்கு ஆகி வருவதால் இதனை ஆகுபெயராகக் கொள்ளலாம்.
மேலும் சில குறட்பாக்களையும் சான்றாகக் காட்டலாம்.
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு (குறள்.1113)
இக்குறட்பாவில் உருவகமும் ஆகுபெயரும் வரக்காணலாம். ஆனால், ஆகுபெயரை மட்டுமே ஆய்வுக்குக் கொண்டுள்ளதால் உருவகம் இவண் தவிர்க்கப்படுகின்றது.
இக்குறட்பாவில் வரும் முறி மற்றும் முறுவல் என்னும் இரண்டையும் ஆகுபெயராகக் கருதலாம். ஏனெனில், முறி என்னும் சொல் எழுத்தோலை, தளிர், துண்டு, வெண்கலம் என்னும் பல பொருட்களைக் குறிக்கும். ஆனால், இக்குறட்பாவில் தளிர் என்னும் பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. இச்சொல் மேனிக்கு ஆகி வரக்காணலாம். மேலும், முறுவல் என்னும் சொல்லும் புன்னகை, பல் என்னும் பொருட்களைக் கொண்டிருந்தாலும் இவண் பல் என்னும் பொருளிலேயே பயின்று வரக்காணலாம். இச்சொல் முத்திற்கு ஆகி வருவதால் இதனை ஆகுபெயராகக் கருதலாம்.
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்தும் (குறள்.1132)
இக்குறட்பாவில் வரும் மடல் என்னும் சொல்லை ஆகுபெயராகக் கருதலாம். ஏனெனில், மடல் என்னும் சொல் பனையோலை என்னும் நேரடிப் பொருளில் வள்ளுவரால் கையாளப்பட்டிருந்தாலும் இங்கு தலைவனின் ஆற்றாமைக்கு ஆகி வருவதால் ஆகுபெயராயிற்று.
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து (குறள்.1237)
இக்குறட்பாவில் வரும் பூசல் என்னும் சொல் சண்டை, வருத்தம் என்னும் பொருட்களில் பயின்று வந்தாலும் இங்கு ஆரவாரம் என்னும் பொருளிலேயே வந்துள்ளது. ஆக, பூசல் என்னும் சொல் ஆரவாரத்திற்கும் தலைவியின் தோளிற்கும் ஆகி வரக் காணலாம்.
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன் (குறள்.1263)
இக்குறட்பாவில் வரும் உரன் என்னும் சொல் வலிமை, ஊக்கம், ஞானம் என்னும் பொருட்களைக் கொண்டிருந்தாலும் வெற்றி என்னும் பெயருக்கே ஆகி வருவதால் இச்சொல்லை ஆகுபெயராகக் கருதலாம்.
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன் றுடைத்து (குறள்.1275)
இக்குறட்பாவில் பயின்று வரும் கள்ளம் என்பதை ஆகுபெயராகக் கருதுவார் பரிமேலழகர். காரணம், இச்சொல் உடன்போக்கிற்கு ஆகி வருவதால்தான்.
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து (குறள்.1285)
இக்குறட்பாவில் வரும் கோல் என்னும் சொல் ஆகுபெயராக வந்துள்ளது. காரணம், இச்சொல் வெளிப்படையாக மைதீட்டும் கோலைக் குறித்தாலும் இங்கு காதலனை நினைந்துருகும் காதலியின் நிலையைக் குறிக்கக் காணலாம். ஆகவே, இதனை ஆகுபெயராகக் கொள்ளலாம்.
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று (குறள்.1313)
இக்குறட்பாவில் வரும் பூ என்னும் சொல் வளையம் என்ற பொருளில் வெளிப்படையாக வந்தாலும் பிறள் ஒருத்திக்கு ஆகி வரக்காணலாம்.
காமம் உழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி (குறள்.1131)
இக்குறட்பாவில் வரும் வலி என்னும் சொல் நோய் என்னும் பொருளைக் குறித்தாலும் இங்கு துணை என்னும் பொருளுக்கு ஆகி வரக் காணலாம்.
இக்கட்டுரையின் தொகுப்புரையாகச் சிலவற்றை கூறவேண்டும்.
சொற்கள் ஆகுபெயராகப் பயன்படுத்தப்படும் போது பொருள் மாற்றம் அடைவதைக் காண்கின்றோம். அதாவது, ஒரு பொருளைக் குறிக்கும் சொல், அந்தப் பொருளின் தொடர்ச்சித் தன்மையால் மற்றொரு பொருளைக் குறிக்கும் நிலையை ஆகுபெயர் என்கின்றோம்.
சொற்கள் புதிய பொருட்களைச் சுட்டும்போது பொருள் நீட்சி என்பது அங்கு ஏற்படுகின்றது.
மொழியியலார் பொருண்மையின் நீட்சியாக உருவகத்தையும் ஆகுபெயரையும் சுட்டுவர்.
வள்ளுவர் உருவகத்தை விட ஆகுபெயர்களையே பொருள் நீட்டலுக்குப் பயன்படுத்தியுள்ளார் என்பது பரிமேலழகர் உரை வழி அறியமுடிகின்றது.
ஆகுபெயருக்கான அகராதிப் பொருள் (lexical meaning) ஒன்றிருக்க வள்ளுவா; பயன்படுத்திய பொருள் என்பது வேறுபட்டுள்ளது. இதையே மொழியியலார் பொருண்மை மாற்றம் (semantics changes) என்றழைப்பர்.
பொருண்மை மாற்றத்தின் காரணமாக ஏற்கனவே இருந்த ஒரு பொருள் (meaning) நீட்சி அடைவதைக் காண்கின்றோம்.
பெரும்பாலான ஆகுபெயர்கள் குறிப்புப் பொருளைக் காட்டவே பயன்பட்டு வந்துள்ளதை மேலே காட்டிய குறட்பாக்கள் உறுதி செய்யும்.
இது வள்ளுவரின் நடைச் (style) சிறப்பைக் காட்டுகின்றது.
துணை நூற்கள்
1. இளம்பூரணர் (உரை), தொல்காப்பியம் (எழுத்து, சொல், பொருள்), சாரதா பதிப்பகம், சென்னை, 2010.
2. இன்னாசி. சூ, சொல்லியல், பாரி புத்தகப் பண்ணை, சென்னை, 2009.
3. கீதா.வ. லலிதாராஜா. இர, மொழியறிவியல், மொழியியல் உயராய்வு மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம், 2007.
4. கோவேந்தன்.த., திருமகள் தமிழ் கையகராதி, திருமகள் நிலையம், சென்னை,1995.
5. சேனாவரையர் (உரை), தொல்காப்பியம், சொல்லதிகாரம், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், சென்னை, 2001.
6. திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், சென்னை, 1991.
7. தெய்வச்சிலையார் (உரை), தொல்காப்பியம், சொல்லதிகாரம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2010.
8. நன்னூல், காண்டிகையுரை, சொல்லதிகாரம், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், சென்னை, 1992.
9. பாலசுந்தரனார். சு., இருபதாம் நூற்றாண்டிற்கான தமிழிலக்கணம் - சொற்படலம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2005.
10. Oxford English - English - Tamil Dictionary, Oxford University Press, New Delhi, 2009.
11. Rajam.V.S., A Reference Grammar of Classical Tamil Poetry, American Philosophical Society, Philadelphia,1992.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|