தொல்காப்பிய மரபியலும் தமிழிலக்கிய மரபு மாற்றமும்
வீ. உதயகுமார்
மரபு என்பது உடலிலும் உணர்விலும் அறிவிலும் சமுதாயத்திலும் மொழியிலும் மரத்துப்போன ஒன்று. கால் மரத்துப் போனால் உணர்வு தெரியாது. ஒருவன் தலை கீழாக நடக்கலாம். அது பயிற்சி எல்லாரும் காலால் நடப்பது மரபு. பலருக்குக் காலால் நடப்பது மரத்துப்போயிருக்கிறது. அதுபோல, தமிழ் இலக்கண இலக்கியங்களில் மறத்துப் போன மரபின் மாற்றங்களை இனம் காணுவதாக இக் கட்டுரை அமைகிறது.
மரபு
"எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே"
(நன்னூல்-சொல்-388)
என்று நன்னூலார் இலக்கணம் வகுக்கிறார்.
மரபு மாறிச் சொற்கள் வழங்குமாயின் இவ்வுலகத்துச் சொற்கள் எல்லாம் பொருளை இழந்து வேறு வேறாக ஆகிவிடும்.
"மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும்"
(தொல்-சொல்-646)
என்கிறார் தொல்காப்பியர்
"மரபு நிலை திரிதல் செய்யுட் கில்லை
மரபு வழிப் பட்ட சொல்லி னான"
(தொல்-பொருள்-645)
மரபு மாறாமல் சொற்களால் செய்யுட்கள் இயற்றப்படுதல் வேண்டும். தொல்காப்பியர் மரபின் இன்றியமையாமையை உணர்த்துகிறார். ஆனால், இன்று மரபு மாறி செய்யுள் இயற்றப்படுகின்றன.
"வழக்கெனப் படுவ துயர்தோர் மேற்றே"
(தொல்-பொருள்-647)
வழக்கு என்று சொல்லப்படுவது உயர்ந்தோர் வழங்கிய வழக்கே. உயர்ந்தோர் ஒழுகலாறுகள் தான் வழக்காக் கருதப்பட்டன. ஆனால், இன்று தற்போது எளியோருடைய ஒழுகலாரும் இலக்கிய வழக்காக ஆட்சி பெற்றுள்ளது. உதாரணம்;
எளியமக்களின் பேச்சுவழக்கு, வட்டார வழக்கு
மரபு என்பது உலகயியல் பெயர், வினை, இடை, உரி என்னும் நால் வகைச் சொற்களால் வழங்கப்படுவது உலகியல் மரபாகும்.
1. அபிதான சிந்தாமணி
2. தந்தை மரபு, தாய் மரபு
யாதொரு பொருளை, யாதொரு சொல்லால், யாதொரு நெறியால், அறிவுடையார் சொன்னார்களோ அப்படிச் சொல்லுதல் மரபு என்று அபிதான சிந்தாமணி விளக்கம் தருகிறது. தொல்காப்பியப் பொருளதிகார மரபியலில் தமிழ் இலக்கிய மரபை வறையறுத்து கூறுகிறது.
1. உயிர்களுக்கான பெயர் மரபு
2. உயிரினப் பாகுபாட்டு மரபு
3. நால் வருணப் பாகுபாட்டு மரபு
4. நூல் மரபு
என பெரும் பிரிவுகளாக்கி இவற்றுள் உட்பிரிவையும் விளக்குகிறார்.
1) உயிர்களுக்கான பெயர் மரபு
இளமைப் பெயர் மரபு
ஆண்பால் பெயர் மரபு
பெண்பால் பெயர் மரபு
2) உயிரினப் பாகுபாடு மரபு
ஒரறிவு முதல் ஆறறிவு உயிர் வரை
3) நால் வருணப் பாகுபாட்டு மரபு
அந்தணர்
அரசர்
வணிகர்
வேளாளர்
4) நூல் மரபு
முதல் நூல்
வழி நூல்
உரை நூல் மரபு
நூலின் செம்மை
குற்றம்
உத்தி
இளமைப் பெயர் மரபு
"பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்
கன்றும் பிள்ளையும் மகவும் மறியும்
என்று ஒன்பது குழவியொடு இளமைப் பெயரே" (தொல்-1500)
பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி என ஒன்பது வகையான இளைமைப் பெயர்களைத் தொல்காப்பியர் பட்டியலிடுகிறார். பிற்கால இலக்கண நூலான தமிழ்நூலில் த.சரவணத்தமிழவன் மூன்று இளமைப் பெயர்களைக் குறிப்பிடுகிறார்.
"பறவை இளமை பெரும்பால் குஞ்சு
விலங்கு - குட்டி, மரப்பெயர் - கன்று" (283)
பெரும்பாலும் பறவை இனத்தைக் குறிக்க இளமைப் பெயரைக் குஞ்சு என்றும், விலங்கு இனத்தை குறிக்க குட்டி என்றும்,மரப்பெயரை குறிக்க கன்று என்று பின்பற்றப்படுவதை,
"பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை"
என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
பெரும்பாலும் பறவை இனத்தைக் குறிக்க இளமைப் பெயராகக் குஞ்சு என்றும், விலங்கு இனத்தை குறிக்கக் குட்டி என்றும் மரப்பெயர் (மரங்களை) குறிக்க கன்று என்றும் பின்பற்றப்படுவதை,
''பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை''
என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
பறவையையும் விலங்கையும் குறித்த பெயர் இன்று பார்ப்பு என்பது மாறி பெண்ணைக் குறிக்கும் பெயராகப் பிள்ளை என்று வழங்குகிறது. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுப்பெயராக வழங்குகிறது.
''பார்ப்பு திரிந்து பெண்ணின் இளமைக்காம்
பிள்ளை உயர்திணை ஆண்பெண் பொதுப்பெயர்'' (285)
என்ற நூற்பாவின் மூலம் அறிய முடிகிறது.
பெரிய பிள்ளையில் இருந்து சிறு பிள்ளை வரையும் குறிக்கிறது குட்டி என்பது பெண்களின் சிறிய வரையும் சிறிய பொருள்கள் அனைத்தையும் குட்டி என்றே கூறி வழங்கப்படுகிறது.
கன்று
யானை, குதிரை, கழுதை, கடமை, பசு, கன்று, குட்டி இவை அனைத்தும் இளமைப்பெயராக வழங்கியது. குதிரை குட்டி, கழுதை குட்டி, கன்று என்பது மாறி குட்டி என்று வழங்கப்படுகிறது.
குஞ்சு
குயிலின் குஞ்சு கோழிக் குஞ்சு
புறாக் குஞ்சு காக்கைக் குஞ்சு
தொல்காப்பியர் காலத்தில் பறவைக்கும், விலங்குக்கும், மரத்திற்கும், பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இன்று பறவைக்குக் குஞ்சு என்றும், விலங்கிற்கு குட்டி என்றும், மரத்திற்குக் கன்று என்றும் பொதுப்பெயராக வழங்கப்படுகிறது.
ஆண்பால் பெயர்கள்
“ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்
சேவும் சேவலும் இரலையும் கலையும்
மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும்
யாத்த ஆண்பால் பெயர் என மொழிப"
என்ற நூற்பா தொல்காப்பியர் காலத்தில் வழங்கிய ஆண்பால் பெயர்கள் ஆகும்.
ஏறு
“பன்றி புல்வாய் உழையே கவரி
என்றிவை நான்கும் ஏறு எனற்கு உரிய"
பன்றி புல்வாய் உழை கவரி இவற்றின் ஆணினை ஏறு என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். மேலும் எருமை மரை பெற்றம் கடல்வாழ் சுறா மீன் 'எறு' என்ற சொல் வழங்கப்பட்டுள்ளது. இன்று ஏறு என்ற சொல் ஏற்றை மட்டும் குறிக்கிறது.
பெண்பால் பெயர்கள்
“பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும்
மூடும் நாகும் கடமையும் அளகும்
மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும்
அந்தி சான்ற பிடியொடு பெண்ணே"
பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாடு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி ஆகியவை பெண்பால் பெயர்கள்.
ஒட்டகம், குதிரை, கழுதை, மரை, மான் பறவையினத்துல் பொண்பாலைப் பெட்டை என்றும் தொல்காப்பியர் வழங்கினார். ஆனால், இன்று பறவையினத்துள் பெண்பாலாகிய கோழியைப் பெட்டை என்றும் சொல் வழங்குகிறது.
நால் வருணப் பாகுபாடு
தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வர்களுக்கு உரிய தொழில்களையும் பண்புகளைப் பற்றி தொல்காப்பியர் சுட்டுகிறார்.
தொல்காப்பியர் அகத்திணை ஒழுக்கங்களுக்குரிய தலைமக்களை வகைப்படுத்திய நிலையிலும், புறத்திணை ஒழுக்கங்களை விரித்துரைத்த நிலையிலும், அவர்கள் வாழும் நிலத்தையும் தொழில்களை வகைப்படுத்திய நிலையிலும், வேளாண் மாந்தர் வைசியர் என்ற வருணம் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை.
பிராமணர், பிராமணர் அல்லாதவர் என்று தமிழ் குடிகளை ஆரம்ப காலத்தில் குறிக்கப்படுகிறது. பிராமணர் என்பதற்குப் பல்வேறு பிரிவுகள் காணப்படுகிறது. பிராமணர் அல்லாதவர் என்பதற்குள் நாம் கூறுகின்ற அனைத்துக் குலங்களும் குறிப்பிடப்படுகிறது.
அந்தணர்
நூலே கரகம் முக்கோல் மனையே
ஆயும் காலை அந்தணர்க்கு உரிய
நூல் கரகம் முக்கோல் மனை
இவை நாண்கும் அந்தணர்க்கு உரியது
1. நூல் - முப்புரிநூல் (பூணூல்)
2. கரகம் - (கமண்டலம் - குண்டிகை) - நீர் பொண்டி வைத்திருக்கும் பாத்திரம்
3. முக்கோல் - ஒருகோலுடையார் - சந்நியாசிகள் துறவறத்து நின்றவர்கள் = ஊர் தோறும் பிச்சையேற்று உண்பவரும், ஒரு இடத்தில் இருந்து தாம் ஈட்டிய பொருளை உண்டு வாழ்பவரும் என இருதிரத்தார்
4. மனை - ஆசனம்
அரசர்
படை, கொடி, குடை, முரசு, குதிரை, களிறு, தேர், தார், முடி போன்றவை அரசர்க்கு உரியது என்று தொல்காப்பியர் ஒன்பது அங்கங்களாகச் சுட்டுகிறார்.
படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு (381 குறள் இறைமாட்சி)
படை, குடி, உணவு, அமைச்சு, நட்பு, அரண் ஆறும் அரசருக்கு உரியது.
தொல்காப்பியர் அரசருக்குரியதாக ஒன்பது புறத்தோற்றத்தைப் பற்றி குறிப்பிடுகிறது. திருக்குறள் பண்பையும் புறத்தோற்றத்தைக் குறிப்பிடுகிறார்.
தொல்காப்பியர் அரசர்க்கு உரியதான ஒன்பதையும் அடியொட்டி, இடைக்காலத்தில் 'தசாங்கம்' என்று அரசர்க்குரியதாக சிற்றிலக்கியம் பத்து பொருட்களைச் சிறப்பித்துக் கூறுகிறது. தொல்காப்பியர் கூறாத நாடு, மலை, ஆறு, ஊர் இவற்றைக் குறிப்பிடுகின்றது.
அரசர்களின் புறத்தோற்றத்தை மட்டும் தொல்காப்பியர் கூறினார். சிற்றிலக்கியம் நாட்டின் வளத்தையும் அரசரின் புறத்தோற்றத்தையும் பற்றி கூறுகிறது.
வணிகர்
வணிகரை வைசிகன் என வழங்கும் வழக்கை மரபியலில் மட்டும் காண்கின்றோம். இது சங்கத்தொகை நூல்களில் காணப்படவில்லை.
“வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை"
வணிகரைக் குறித்த வைசிகன் என்னும் சொல் வடமொழிச் சொல் பழைய தமிழ் நூல்களில் காணப்படவில்லை.
வேளாளர்
“வேளாண் மாந்தர்க்கு உழுதுண் அல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி"
உழுதல், உண்ணல் போன்றவற்றைத் தவிர வேறு நிகழ்ச்சிகள் வேளாளர்க்கு இல்லை.
அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று நான்கு பெரும் பிரிவிற்குப் பல்வேறு சிறு பிரிவுகள் காணப்படுகின்றன. இன்று ஒவ்வொரு இனத்திற்குள்ளும் நான் உயர்ந்தவர், நீ தாழ்ந்தவர் என்ற பாகுபாடு காணப்படுகிறது.
நூல் மரபு
முதல் நூல்
மூல நூலை முதலாகக் கொண்டு ஒருவன் வழி நூல் செய்தான். அவன் செய்த வழிநூலைப் பின்பற்றி பின்னொரு காலத்தில் ஒரு நூல் தோன்றினால், அது வழி நூல் என்று இந்த வழி நூல் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த வழி நூல் முதல் நூலாகவும் வழங்கப்பெறும் என்பதைத் தொல்காப்பியர்.
“நுதலிய நெறியின் உரைபடு நூல்தாம் முதலும்
வழியும் என இருவகை இயல"
வழிநூலை தன் முதல் நூலாகக் கொண்டு தோன்றிய நூல் சார்பு நூல் ஆகும் என்பதை ஒரு வகையாகக் கொண்டால், அதன் வழியில் தோன்றிய நூல் சார்பிற்சார்பு எனவும் அதன் வழி வந்த நூலை சார்பிற் சார்பிற்சார்பு எனவும் எண்ணிலடங்காமல் போய்விடும் என்பதைத் தொல்காப்பியர் முதல்> வழி என இருவகையாக அடக்கி கூறுகிறார். ஆனால் > இன்று எழுகின்ற எல்லா நூலையும் முதல் நூலாகவே கொள்ளப்படுகிறது.
முதல் நூல், வழிநூல் = பன்னிருபடலம் - முதல் நூல்
= புறப்பொருள் வெண்பாமாலை - வழி நூல்
வழிநூல்
“வழியின் நெறியே நால்வகைத்தாகும்"
முதல் நூலை அடிப்படையாகக் கொண்டு தோன்றும் நூல்களை வழிநூல் என்பர் அவை நான்கு வகைக்கடும்.
1. தொகுத்தல் - முதல் நூலில் விரிவாகக் கூறியனவற்றைத் தொகுத்து கூறுதல். (தொல்காப்பியம் முதல் நூல் இறையனார் களவியல் உரை)
2. விரித்தல் - முதல் நூலில் தொகுத்து கூறப்பட்டவற்றுள் விலங்காமல் இருப்பவற்றை விலங்குமாறு விரித்து கூறுதல். (பன்னிருபடலம் முதல் நூல் புறப்பொருள் வெண்பாமாலை)
3. தொகை விரி - முதல் நூலில் விரிவாகக் கூறியனவற்றைத் தொகுத்தும் தொகுத்து கூறியனவற்றை விரித்தும் கூறுதல்.(தொல்காப்பியத்தில் பதவியல் கருத்துகளை நன்னூல் தொகுத்தும் விரித்தும் கூறுகிறது)
4. மொழிபெயர்ப்பு நூல் - பிற மொழியில் எழுதப்பட்ட நூல்களைத் தமிழ் மொழியில் செய்வது. (வடமொழி - காவியதர்சம், தமிழ் - தண்டியலங்காரம்)
முடிபாக
“பழையன கழிதலும் புதுயன புகுதலும்
வழுவல கால வகையினானே"
என்ற கருத்திற்கினங்க காலத்தின் பிடியிலிருந்து மாற்றங்கள் தப்புவதில்லை காலந்தோரும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. தொல்காப்பிய மரபுகளும், காலத்தின் பிடியில் சிக்கிக் கொண்டு அந்தந்தக் காலத்திற்கேற்ப, பல்வேறு மாறுதல்களைப் பெற்று வந்துள்ளமையை எம் அறிவிற்கு எட்டிய கூறுகளை மட்டும் இக்கட்டுரை வாயிலாக புலப்படுத்தப்பட்டுள்ளது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.