சிற்றிலக்கியம் வரையறையும் வரலாறும்
முனைவர் நா.கவிதா
இலக்கியம் என்பது தனது வாசகர்களுக்கு வெறும் அழகியல் உணர்வை மட்டும் தருவதாக அமைதல் கூடாது. அதற்கப்பால் காணப்படுகின்ற சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துவதாக அமைதல் வேண்டும். அவ்வகையில், சமகாலச் சிக்கல்களையும், எண்ணப் போக்குகளையும், எதிரொலித்துக் காட்டுவதில் சிற்றிலக்கியங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. பிரபந்தம் என்ற வடசொல்லுக்கு நிகரான சிற்றிலக்கியம் என்ற சொல் உணர்த்தும் பொருளினை ஆராய்வதாகவும், அவற்றின் வரலாற்றினை வெளிப்படுத்துவதாகவும் இக்கட்டுரை அமைந்துள்ளது.
“சிற்றிலக்கியம்” சொல் வரலாறு
சோழர் காலத்தில் தொடங்கி அவர்களுக்குப் பிறகு தமிழகத்தை ஆண்ட நாயக்கர் காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் மிகுதியும் சிற்றிலக்கியங்கள் எனப்படுகின்றன. “சிற்றிலக்கியம்” என்ற சொல்லாட்சி வழக்கிற்கு வருவதற்கு முன்பு “பிரபந்தம்” என்ற வடமொழிச் சொல்லாட்சி காணப்பட்டது. “பிரபந்தம்” என்ற சொல்லுக்கு நன்கு கட்டப்பட்டது என்பது பொருளாகும். கி. பி. 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அடியார்க்கு நல்லார் உரையில், “பிரபந்தம் என்பது அடிவரையறையின்றிப் பல தாளத்தாற் புணர்ப்பது” என்று குறிப்பிடப்படும் கருத்தும் இங்கு நோக்கத்தக்கது. பொதுவாக எல்லா இலக்கியங்களும் நன்கு கட்டப்பட்டவையே. எனவே “பிரபந்தம்” என்ற சொல் சிற்றிலக்கியத்தை மட்டும் குறிக்கவில்லை என்பதை ஊணர்ந்து “சிறு பிரபந்தம்” எனும் சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினர். பின்னர், தமிழ் மொழியின் மீதுள்ள ஆர்வம் காரணமாக “சிற்றிலக்கியம்” என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டது. இத்தகைய சிற்றிலக்கியச் சொல்லாட்சி பற்றிக் கூறுகையில், “உரிச்சொல் என்பதன் இடத்தை நிகண்டு என்பது குறித்துள்ளது போல் சிறுகாவியங்கள், சிற்றிலக்கியங்கள் என்ற பொருளில் பிரபந்தம் பெருவழக்காயிற்று” (1) என்று தா.ஈசுவர பிள்ளை ஏடுத்துரைத்துள்ளார்.
இடைக்காலத் தமிழக வரலாற்றில் பிரபந்தம் எனக் காணப்படும் சொல்லாட்சி பின்னர் “சிற்றிலக்கியம்” என்றும் “சிறு காப்பியம்” என்றும் வழங்கலாயிற்று. தண்டியலங்காரம் காப்பியம் என்றும், பெருங்காப்பியம் என்றும் பாகுபடுத்தி இலக்கணம் கூறுகின்றது. “வடமொழி இலக்கணம் வழித் தமிழ் இலக்கியங்களை வகைப்படுத்தியதன் விளைவாகவே “சிறுகாப்பியம்” எனும் சொல் வழங்கப்பட்டுள்ளது. அதனால், சிற்றிலக்கியம் என்ற பெயர்ப் பொருத்தத்தை விடப் பரணி இலக்கியம், உலா இலக்கியம், பள்ளு இலக்கியம் எனச் சுட்டப் பெறுவது தகவுடையது” (2) என்ற கருத்தும் சிற்றிலக்கியச் சொல் வரலாற்றில் குறிப்பிடத் தகுந்தது. “பிரபந்தம்” என்னும் வடமொழிச்சொல் பிற்காலத்தில் மறைய “சிற்றிலக்கியம்” என்ற சொல்லாட்சி நிலைபெற்றது.
“சிற்றிலக்கியம்” விளக்கம்
சிற்றிலக்கியம் என்னும் இலக்கிய வகை பற்றி அறிஞர்களின் பல்வேறு கருத்துக்களைக் காண இயலுகிறது. “பிரபந்தம் என்பது தொண்ணூற்றாறு வகைப்பட்ட நூல்” (3) என்று அகராதி பொருள் தருகிறது. மேலும், ரா. சீனிவாசன் பிரபந்தம் பற்றி எடுத்துரைக்கையில், “காவியத்தின் ஒரு கூறாகிய ஒரு துறை மட்டும் பாடப்படுவது பிரபந்தம்” (4) என்று சுட்டியுள்ளார்.
தா. ஈசுவரப்பிள்ளை சிற்றிலக்கியத்திற்கு விளக்கம் தருகையில், “குறைந்த எண்ணிக்கையுடைய பாடல்களைக் கொண்டும், எண் வகை யாப்பினாலும், குறிப்பிட்ட அமைப்பு நிலையினாலும் படைக்கப்பெறும் இலக்கிய வகையே சிற்றிலக்கியம்” (5) என்று எடுத்துரைக்கின்றார்.
சிற்றிலக்கியத்தின் உள்ளடக்கம் பற்றிக் குறிப்பிடுகையில், “சிற்றிலக்கிய வகைகள் நெடும்பாட்டு போல்வன. முற்ற முடிந்த ஒரு குறிப்பிட்ட பொருளின் மேல்வன... சங்க காலத்துப் பாட்டுக்கள் போலக் குறிப்பிட்ட இறைவனை, மன்னனை, வள்ளலைப் பற்றிப் புகழ்வதற்காக, சிறப்பாக எடுத்துரைப்பதற்காக ஏழுதப்பட்டன” (6) என்று தமிழண்ணல் எடுத்துரைக்கின்றார்.
“பேரிலக்கியங்கள் அறம், பொருள், இன்பம், வீடு நான்கும் உணர்த்தும். இவற்றில் ஒன்றோ பலவோ குறைந்துவரின் அவை சிற்றிலக்கியங்களாம். பின்னை நாளில் புற்றீசல் போன்று கிளர்ந்த இந்நூல்கள் 96 வகையாகக் கொண்டு இவற்றிற்கேற்ப இலக்கணம் வகுத்தனர்” (7) என்ற மது. ச. விமலானந்தன் கருத்தும் குறிப்பிடத்தக்கது.
சிற்றிலக்கியத்தின் தோற்றத்திற்கு தொல்காப்பியம் ஓர் அடித்தளம்
சிற்றிலக்கியத்தின் தோற்றத்திற்குரிய தொன்மை வரலாற்றை அறிவதற்குத் தொல்காப்பியம் அடித்தளமாக அமைகின்றது. காலந்தோறும் மக்களின் தேவைக்கேற்ப, கவிஞரின் கற்பனைக்கேற்ப இலக்கியங்கள் தோன்றிக் கொண்டே வருகின்றன. இக்கருத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் தொல்காப்பியர் புதியனவாக எழும் இலக்கிய வகைகளைப் போற்ற வேண்டும் என்ற நிலையில் “விருந்து” என்னும் வனப்பினைப் படைத்துள்ளார்.
“விருந்தே தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே” (தொல்., செய்., 239)
என்ற நூற்பா எதிர்காலத்தில் தோன்றக்கூடிய இலக்கியங்களையும் கற்றுக் கொள்ள வழிகாட்டுகிறது என்றே பொருள் கொள்ள வேண்டும். பேராசிரியர் இதற்கு உரை கூறுகையில், “புதுவது கிளந்த யாப்பின் மேற்றே என்றது என்னையெனின், புதிதாகத் தாம் வேண்டியவற்றால் பல செய்யுளும் தொடர்ந்து வரச் செய்வது. அது முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலானோர் செய்த அந்தாதிச் செய்யுளுமென உணர்க. கலம்பகம் முதலியனவும் சொல்லும்” (8) என்று விளக்கம் தந்துள்ளார். எனவே சிற்றிலக்கியத் தோற்றத்திற்கு அடிப்படை வித்து தொல்காப்பியத்தில் காணக் கிடக்கின்றது எனலாம்.
“குழவி மருங்கினும் கிளவதாகும்” (தொல்.பொருள்.புறத்திணையியல்:82)
“எரொடு தோற்றமும் உரித்தென மொழிப” (தொல்.பொருள்.புறத்திணையியல் : 83)
“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
இற்றிடைக்காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇச்
சென்று பயனெதிர்ச் சொன்ன பக்கமும்” (தொல்.பொருள்.புறத்திணையியல் : 36)
என்ற தொல்காப்பிய நூற்பாக்கள் தரும் செய்திகள் முறையே “பிள்ளைத்தமிழ், உலா, ஆற்றுப்படை என்னும் சிற்றிலக்கிய வகைகளாகப் பிற்காலத்தே உருப்பெற்றன என்ற கருத்து நிலவுகின்றது. அதனைப் போன்றே, தொல்காப்பியர் புறப்பொருள் துறைகளாகக் குறிப்பிடும் களவஞ்சி, காஞ்சி மாலை, நொச்சி மாலை, புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, இயன்மொழி போன்ற இன்ன பிறவும் பிற்காலத்தே அவ்வப் பெயர்களிலேயே சிற்றிலக்கியங்களாகத் திகழ்வதைக் காண முடிகின்றது” (9)
எல்லா வகை இலக்கியத்திற்கும் தொன்மையைத் தேடிக் காண்பது தமிழருக்குரிய ஒரு மரபாகும். அவ்வகையில், மேற்கூறப் பெற்ற கருத்துக்களின் மூலம் சிற்றிலக்கிய வகைகள், தொல்காப்பியம் என்ற தொன்மை நூலுடன் தொடர்பு கொண்டுள்ள பாங்கினை அறிய இயலுகின்றது.
சிற்றிலக்கியம் தோற்றத்திற்கான காரணிகள்
தமிழ் இலக்கியங்கள் யாவுமே அவை தோன்றிய காலத்து அரசியல் நிலை, சமுதாயச் சூழல், மக்களின் கருத்தோட்டம், கலையுணர்வு முதலியவற்றை அடிப்படைக் காரணிகளாகக் கொண்டுள்ளன. அவ்வகையில், தமிழில் தோன்றியுள்ள சிற்றிலக்கியங்களில் தமிழகம் பற்றிய அக்கால அரிய செய்திகள் பலவற்றை அறிய முடிகின்றது. இத்தகைய சிற்றிலக்கியத்தின் தோற்றத்திற்கான சூழல் குறித்து ஆ. மார்க்ஸ் குறிப்பிடுகையில், “பேரரசுகளை உருவாக்கிக் கட்டிக் காத்து அரசியல் நிர்வாகம் செய்வதிலும், வாழ்க்கையில் பெரும் பகுதியைப் போர் செய்வதிலும் கழித்திருந்த பேரரசர்கள் இடையிடையேக் கேட்டு மகிழச் சிறு பிரபந்தங்களே தகுதியாக இருந்தமையால், காவிய காலத்தில் சிற்றிலக்கிய வடிவங்கள் தோன்றிப் பின்னர் வளர்ந்தன” (10) என்று குறிப்பிடுகின்றார்.
மேலும் சிற்றிலக்கியத் தோற்றத்திற்கான சூழலினை எடுத்துரைக்கையில், “13 ஆம் நூற்றாண்டிற்குப் பின் தமிழகம் அன்னியர் ஆட்சியில் இருந்தது. அவர்கள் மொழியே செல்வாக்குப் பெற பைந்தமிழ் புறக்கணிக்கப் பெற்றது. புலவர்கள் போற்றுவாரின்றித் திக்கற்று நின்றனர். வாழ்வே குலைந்து நிற்கும் போது, வளமார் காவியங்களோ, வகையான இலக்கியங்களோ தோன்ற முடியுமா? செந்தமிழ்ச் சிறப்பறியா சிற்றின்பச் சிந்தை மிக்க சிற்றரசர்கள் மற்றும் செல்வந்தர் கை பார்த்து இருந்தனர் கவிஞர்கள். காலத்தின் கோரப்பிடியிலே சிக்கித் தவித்த கவிஞர்கள், அவர்கள் உளம் மகிழவே சிற்றிலக்கியங்கள் பல செய்து வயிற்றுப் பாட்டைக் கவனித்தார்கள். தமிழன்னையை அணி செய்யத் தரமான இலக்கியம் யாத்த நிலைபோய், தனிப்பட்டோரைப் பாராட்டிப் பயன் பெறுதற்காகப் பிரபந்தங்கள் பல பாடினர்” (11) என்று இலக்கிய வரலாற்றாசிரியர் கூறிச் செல்வர்.
மேற்கூறப்பெற்ற சூழலில் உருவாகிய சிற்றிலக்கியம் பல வடிவங்கள் பெற்றமைக்கான காரணிகளை தா. ஈசுவரப்பிள்ளை பின்வருமாறு பகுத்துக் கூறியுள்ளார். அவை:
1. சமுதாய மாற்றம் காரணமாக புதிய இலக்கிய வகைகள் பல தோன்றுதல்.
2. சங்க அகப்பொருள் துறைகளைத் தனி இலக்கியமாகப் படைக்கும் வேட்கை அதிகரித்ததன் விளைவு.
3. அகப்பொருள் போன்றே புறப்பொருள் துறைகளையும் தனி இலக்கியமாகப் படைக்கும் ஆர்வம்.
4. மரபு வழியாக வந்த இலக்கிய வடிவங்களை இணைத்துப் புதிய இலக்கியம் படைக்கும் எண்ணம்.
5. தல இறைவனைப் புகழும் நோக்கத்துடனும், இறைவனின் சிறப்பை எடுத்து இயம்புதல் மூலம் மக்களின் சமய உணர்வைத் தூண்டும் வேட்கையுடனும் இலக்கியம் படைத்தல்.
6. வாழ்வியல் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் எண்ணத்துடனும், ஓர் இலக்கியத்திற்குப் போட்டியாக மற்றொரு இலக்கியத்தைப் படைக்கின்ற நோக்கத்துடனும் இலக்கியம் படைத்தல்.
7. குறிப்பிட்ட எண்ணிகையில் பாடல் பாடும் ஆர்வமும், ஒரே வகை யாப்பைப் பயன்படுத்திப் பல பாடல்கள் இயற்றும் வேறுபட்ட நோக்கமும் செயல்பட்டமை.
8. மகளிர் விளையாட்டுகளை இலக்கியமாகப் படைத்தல் மட்டுமின்றி, அவர்கள் உடல் ஊறுப்புகளை வருணிக்கும் நோக்கத்துடன் இலக்கியம் படைக்கும் எண்ணம் தோன்றியமை.
இவ்வாறு தா. ஈசுவரப்பிள்ளை சுட்டும் கருத்துக்களின் அடிப்படையில் தோன்றிய சிற்றிலக்கியங்களைச் சான்றுகளுடன் பின்வருமாறு அட்டவணைப் படுத்த இயலுகின்றது.
சிற்றிலக்கிய உருவாக்கத்திற்கான காரணிகளும் இலக்கிய வகைகளும்
எண் |
காரணிகள் |
இலக்கிய வகைகள் |
1 |
சமுதாய மாற்றம் காரணமாக புதிய இலக்கிய வகைகள் தோன்றல் |
இடைக்காலத்தில் அரசர்களும் இறைவனைப் போற்றிய காரணத்தால் சங்க காலத்தில் அரசனைப் பாடிய துயிலெடை நிலை பின்னர் இறைவனைப் பாடும் பள்ளியெழுச்சி என்ற இலக்கிய வகை ஆயிற்று |
2 |
சங்க அகப்பொருள் துறைகளைத் தனி இலக்கியமாகப் படைத்தல் |
காம மிக்க கழிபடர் கிளவி துறை விரிந்து தூது ஆயிற்று.
மடலேறுதல் துறை விரிந்து மடல் ஆயிற்று.
அகப்பொருள் துறைகள்இணைந்து கோவை ஆயின. |
3 |
புறப்பொருளில் தனி இலக்கியம் படைத்தல் |
தானையின் சிறப்பினைக் கூறும் தானைமாலை |
4 |
மரபு வழிப் பாடுபொருளை இணைத்துப் புதிய இலக்கியமாகப் படைத்தல் |
மறக்களவழி, களவேள்வி ஆகிய துறைப் பொருள் இணைந்து பரணியாக உருவாக்கம் பெற்றது |
5 |
சமய உணர்வை வெளிப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்தல் |
பிள்ளைத்தமிழ், கலம்பக நூல்களும் இதற்குச் சான்றுகள். பெரும்பாலானவை சமயம் சார்ந்தனவாய் உருவாயின. |
6 |
தல இறைவனைப் புகழ்தல் |
தலபுராணம் உருவாயிற்று |
7 |
இறைவனின் அவதாரச் சிறப்பைக் கூறும் வேட்கை |
உற்பவமாலை, அங்கமாலை ஆகியவை உருவாயின. |
8 |
சாதாரண மக்கள் வாழ்வியல் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் எண்ணம் |
பள்ளு, உழத்திப்பாட்டு குறம், குறவஞ்சி, குறத்திப்பாட்டு ஆகியவை தோன்றின. |
9 |
ஓர் இலக்கிய வகைக்குப் போட்டியாக மற்றோர் இலக்கியத்தைப் படைத்தல் |
ஆடவரைப் பாடுவது & நாமமாலை பெண்டிரைப் பாடுவது & புகழ்ச்சி மாலை |
10 |
புலமை விளையாட்டைப் புலப்படுத்தும் எண்ணம் |
வருக்கக் கோவை, அந்தாதி ஆகியன இவ்வகை சார்ந்தன. |
11 |
குறிப்பிட்ட எண்ணிக்கையில் பாடல் பாடும் ஆவல் |
அட்டமங்கலம், நவமணி மாலை, தசாங்கம், நான்மணிமாலை, இரட்டைமணிமாலை, மும்மணிமாலை |
12 |
ஒரே வகை யாப்பைப் பயன்படுத்தி பாடல்கள் பாடும் ஆவல் |
நூற்றந்தாதி, ஒருபா ஒருபஃது, இருபா இருபஃது ஆகியன இவ்வகையின. |
13 |
பல்வேறு பாவகைகளைப் பாடவேண்டும் என்ற ஆவல் |
அலங்காரப் பஞ்சகம், கலம்பகம் |
14 |
மகளிர் விளையாட்டை இலக்கியமாக மாற்றுதல் |
ஊசல், அம்மானை ஆகியவை இதற்குச் சான்றுகள். |
15 |
உறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு இலக்கியம் படைத்தல் |
நயனப்பத்து, பாதாதி கேசம், கேசாதி பாதம், பயோதரப்பத்து ஆகியன இவ்வகை அமைப்புடையன. |
இடைக்காலத் தமிழகத்தில் ஆரசியல், சமுதாயம், பொருளாதாரம், சமயம் போன்ற பலவகைக் காரணங்களால் தோற்றம் பெற்ற சிற்றிலக்கியங்கள் மேற்கூறிய காரணிகளால் தான் வெற்றிப் பாதையை நோக்கிப் பயணித்தன எனக் கருத இடமுண்டு.
சிற்றிலக்கியத்தின் பொருண்மை
தமிழ் இலக்கிய வரலாற்றில் விழுமிய பொருள்களால் சிறந்து, அறம், பொருள், இன்பம், வீடு உணர்த்துவனவாய் அளவால் விரிந்து மக்கள் வாழ்வினை வளப்படுத்தத் தோன்றியவை பேரிலக்கியங்கள் எனப்படும். அவ்வகையில் அளவால் குறைந்து, கற்பனை மிகுந்து, கடவுளரையும், செல்வர்களையும் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு படிப்போரை இன்புறுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டவையே சிற்றிலக்கியங்கள் இகும்.
அத்தகைய சிற்றிலக்கியத்தின் பொருண்மை குறித்து கு. முத்துராசன் குறிப்பிடுகையில், “சிற்றிலக்கியங்கள் பெரும்பாலும் தெய்வங்களைக் குறித்தும், தெய்வ அடியவர்களைக் குறித்தும், சிறந்த அறிஞர்களைக் குறித்தும், கவிஞர்களைக் குறித்தும் மற்றும் பேரரசர், குறுநில மன்னர், பெருநிலக்கிழார் முதலானவர்களைக் குறித்தும், மக்களின் சமூகப் பழக்க வழக்கங்களை ஒட்டியும் எழுந்துள்ளன” (12) என்பார். இத்தகைய பொருண்மை கொண்டனவாக சிற்றிலக்கியங்கள் தோன்றக் காரணம் புலவர்கள் தனித்து வாழ இயலாத சூழ்நிலையில் மன்னர்களையோ, வள்ளல்களையோ சார்ந்து, அவர்கள் தரும் பொருளைப் பெற்று வாழ்ந்த சமுதாயச சூழலே என்பது முன்னர் கூறப்பட்டது.
இவ்வாறாக வேறுபட்ட பொருண்மை உடைய ஒவ்வொரு சிற்றிலக்கிய வடிவத்தையும், காப்பியங்களோடு ஒப்பிட்டுக் காண்கையில் பிரபந்தங்கள் பொருண்மை நிலையில் எங்ஙனம் வேறுபடுகின்றன என்ற உண்மையை உணர முடியும். சான்றாகப் பல காப்பியங்கள் கற்பனைத் தலைவர்களையும், கடவுளரையும் கடவுட் தன்மை உடையவர்களையும் பாட, சிற்றிலக்கியங்கள் பல, அவை தோன்றிய காலத்து வாழ்ந்த உண்மை மனிதர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு, அவர்தம் வாழ்வியல் நிகழ்ச்சிகளைப் பாடுபொருளாகக் கொண்டு அமைந்துள்ளன. (எ.டு. நந்திக் கலம்பகம், மூவருலா, கலிங்கத்துப்பரணி). சில இடங்களில் காப்பியங்களைப் போலவே சிற்றிலக்கியங்களும் இறைவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அமைந்தாலும் இறைவனைப் போற்றும் நோக்கில் புராணக் கதைகளை எடுத்தியம்புகின்றன.
நூற்றாண்டு வாரியாக இலக்கிய வரலாற்றை எழுதிய மு. அருணாசலம் பாட்டுடைத் தலைவர்களை மட்டுமே எடுத்துக் கொண்டு காலத்திற்கேற்ப பிரபந்தங்களின் பொருண்மை எங்ஙனம் வேறுபடுகின்றது என்பதைக் கீழ்க்கண்டவாறு ஒரு பட்டியலிட்டுக் காட்டுகிறார். (13)
எண் |
காலம் |
பாட்டுடைத்தலைவர் |
சிறப்புக் குறிப்பு |
1 |
சங்கம் |
தலைவர் (அ) வள்ளல் |
தெய்வத்தைச் சிறப்பித்தல் இல்லை |
2 |
பாசுரம் (பக்தி இலக்கியம்) |
தெய்வம் மட்டும் |
மனிதரைச் சிறப்பித்தல் இல்லை |
3 |
சோழர் |
சோழ அரசர்கள் |
தெய்வத்தைச் சிறப்பித்தல் இல்லை |
4 |
பிற்காலம் |
தெய்வமும் தலைவனும் |
தாழ்ந்தோரைச் சிறப்பித்தல் உண்டு |
இப்பட்டியலிலிருந்து பேரரசு காலத்தில் சோழ அரசர்களைச் சிறப்பித்துப் பாடும் பொருண்மையே பெரும்பான்மையான சிற்றிலக்கியங்களில் இருந்தது என்பதை உணரலாம். சோழர் காலத்திற்குப் பிற்பட்ட காலத்தில் மிகுதியாகத் தோன்றிய சிற்றிலக்கியங்கள் இறைவனையும், உயர்ந்தோரையும் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டதோடல்லாமல், சாதாரண மனிதர்களையும் பாட்டுடைத் தலைவர்களாக கற்றுக் கொண்டன. இதனால் பாட்டுடைத் தலைமை என்னும் பொருண்மை காலம் தோறும் மாறி வந்தது என்பதை அறிய முடிகிறது. இங்கு பரணி என்ற சிற்றிலக்கிய வடிவத்தை மட்டும் கொண்டு ஆராயும் போது, பேரரசு காலத்தில் தோன்றிய கொப்பத்துப் பரணி, கூடல் சங்கமத்துப் பரணி, கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி ஆகிய அனைத்துமே சோழப் பேரரசுகள் வேற்று நாட்டரசர்களை வென்றடக்கிய புகழைப் பாடுபவையாகத் திகழ்கின்றன. இத்தகைய பொருண்மை கொண்ட “பரணி ஈலக்கியம் 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் தத்துவ, சித்தாந்த கருத்துக்களைப் பாடுபொருளாகவும், (மோகவதைப்பரணி, பாசவதைப்பரணி) 18,19 ஆம் நூற்றாண்டுகளில் இறைவனின் புகழைப் பாடுபொருளாகவும் (திருச்செந்திற்பரணி, கஞ்சவதைப்பரணி, இரணியவதைப்பரணி) கொண்டன” (14) என்ற ஆ. மார்க்ஸ் கருத்தும் இங்கு சிறப்பிற்குரியதாக அமைகின்றது. முஜிபுர் ரஹ்மானைச் சிறப்பித்து வங்காள தேசம் உருவான வரலாற்றைப் பாடும் வங்கத்துப் பரணி இருபதாம் நூற்றாண்டில் உருவானது.
மேற்கூறப்பெற்றக் கருத்துக்களின் மூலம், அகமும் புறமுமாய் அமைந்த வாழ்வின் ஒரு பகுதியை விளக்கும் இலக்கியமே சிற்றிலக்கியம் என்பதும், அதனுடைய பொருண்மை காலத்திற்கேற்ப வேறுபடும் என்ற கருத்தும் புலனாகின்றன.
சிற்றிலக்கியத்தின் இயல்புகள்
இலக்கியப் படைப்புகள், காலந்தோறும் பல்வேறு மாற்றங்களைப் பெற்று வருகின்றன. அவ்வகையில் அதிகமான மாற்றங்களைப் பெற்று சிற்றிலக்கியம் தோன்றிய காலம் பொற்காலமாகக் கருதப்படுகின்றது. ஏனெனில், “சங்க இலக்கியம், காப்பிய இலக்கியங்களுக்குப் பின் தமிழிலக்கிய உலகில் ஏற்பட்ட இருண்ட காலப் பகுதியானது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னரே சிற்றிலக்கியங்களின் தோற்றத்தாலே ஒளிமயமானது” (15) என்ற கருத்தும் இங்கு நினைக்கத்தக்கது. அத்தகைய சிற்றிலக்கியத்தின் இயல்புகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
சிற்றிலக்கியத்தின் சிறப்பியல்புகளாக தா. ஈசுவரப்பிள்ளை பின்வரும் கருத்துகளை முன் வைக்கின்றார். (16)
வட்டாரச் சார்புடையனவாகச் சிற்றிலக்கியங்கள் திகழ்கின்றன. காப்பியங்களைப் போல உலகப் பார்வை இதில் இடம் பெறுவதில்லை.
பெரும்பாலான சிற்றிலக்கியங்கள் தமிழ் மண் சார்ந்த, தமிழ் மரபு சார்ந்த கருத்துக்களோடு அமைந்துள்ளன.
பல துறை சார்ந்த பெரிய நூல் போல் அமையாமல், ஒரு சில துறைகளைப் பற்றிய ஆழமான பார்வை உடையனவாகத் திகழ்கின்றன.
சிற்றிலக்கியம் எனச் சொல்லப்பட்டாலும் இலக்கியச் சுவையில் பேரிலக்கியத்திற்கு ஈடு கொடுக்கும் இயல்புடையன.
இறைவன், மன்னன் முதல் சாதாரண மக்கள் வரை பாட்டுடைத் தலைவனாக அமைதற்கு ஏற்ற வகையில் விளங்குவன.
சமுதாய அரசியல் நிலைகளைப் புலப்படுத்துவன.
இவை போன்ற பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியனவாகச் சிற்றிலக்கியங்கள் திகழ்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக “இன்று வரையிலும் தோன்றிக் கொண்டிருக்கும் இயல்பின” என்னும் பண்பும் சிற்றிலக்கியத்தின் பெருமையினைப் பறை சாற்றி நிற்கின்றது.
சிற்றிலக்கிய வகைளும் பாட்டியல் நூல்களும்
சோழர் காலத்திற்குப் பின் நாடு தழுவிய இலக்கியங்கள் தோன்றாமல், வட்டார இலக்கியங்களான பிரபந்தங்கள் என்னும் சிற்றிலக்கியங்கள் உருவாக்கம் பெற்றன. இவை யாவும் வட்டார இலக்கியங்களாக இருந்தமையால் இவற்றைத் தொகுத்தவர்கள் இவற்றின் வகை, எண்ணிக்கை ஆகியவற்றைச் சொல்வதில் வேறுபடுகின்றனர். “கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரையிலும் சிற்றிலக்கிய ஏண்ணிக்கை 96 என ரையறுத்துக் கூறும் வழக்கு ஏற்படவில்லை. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் தோன்றிய “பிரபந்த மரபியல்” என்ற பாட்டியல் நூலே முதன் முதலாக 96 என்று எண்ணிக்கையை வரையறுத்துக் கூறுகின்றது” (17)
“பிள்ளைக் கவி முதல் புராணம் உறாகத்
தொண்ணூற்றாறு ஏன்னும் தொகையதாம்” (பிரபந்த மரபியல், செ.ஏ. 1)
என்று “பிரபந்த மரபியல்” கூறும் வரையறை குறிப்பிடத்தக்கதாகும். பாட்டியல் நூல்கள் எழுதிய புலவர்கள் தத்தம் விருப்பத்திற்கு ஏற்பச் சிலவற்றை இலக்கிய வகைகளாக ஏற்றும், விடுத்தும் இலக்கிய வகைகளுக்கு விளக்கம் தந்துள்ளனர். இதனால் இவை குறப்பிடும் இலக்கிய வகைகளின் எண்ணிக்கையும் வேறுபடுகிறது.
பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை காலந்தோறும் வேறுபடுகின்றது என்பதைப் பின்வரும் அட்டவணை விளக்குகின்றது.
பாட்டியல் நூல்கள் தரும் சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை
எண் |
பாட்டியல் நூலின் பெயர் |
நூலாசிரியர் |
சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை |
காலம் (நூற்றாண்டு வரிசையில்) |
1 |
பன்னிருபாட்டியல் |
பன்னிரு புலவர்கள் |
68 |
13 |
2 |
வெண்பாப் பாட்டியல் |
குணவீர பண்டிதர் |
58 |
13 |
3 |
நவநீதப் பாட்டியல் |
நவநீத நாடனார் |
52 |
14 |
4 |
சிதம்பரப் பாட்டியல் |
பரஞ்சோதி முனிவர் |
69 |
16 |
5 |
இலக்கண விளக்கப் பாட்டியல் |
வைத்தியநாத தேசிகர் |
66 |
17 |
6 |
பிரபந்த மரபியல் |
& |
96 |
16 (அ) 17 |
7 |
தொன்னூல் விளக்கம் |
வீரமா முனிவர் |
93 |
17 |
8 |
பிரபந்த தீபிகை |
முத்து வேங்கட சுப்பையர் |
98 |
19 |
9 |
முத்து வீரியம் |
முத்துவீர உபாத்தியாயர் |
96 |
19 |
10 |
சுவாமி நாதம் |
சுவாமி கவிராயர் |
45 |
19 |
11 |
பிரபந்த தீபம் |
& |
95 |
19 |
12 |
பிரபந்தத் திரட்டு |
& |
119 |
19 |
இவற்றில் வேறுபட்ட கருத்துகள் விளங்கினாலும் தமிழ் மரபில் சிற்றிலக்கிய வகைகள் 96 எனும் கருத்து நிலை பெற்று விட்டது. ஆயினும் சிற்றிலக்கியவகை எண்ணிக்கை நிலையாக இருந்ததில்லை என்பதற்கு பாட்டியல் நூல்கள் தக்க சான்றுகளாகத் திகழ்கின்றன. எனவே சிற்றிலக்கிய வகைகள் ஏண்ணிக்கை “18 ஆம் நூற்றாண்டு இறுதிவரையில் தான் 96 வகை என்ற வரையறை இருந்தது. தற்காலத்தே ஏறக்குறைய 331 சிற்றிலக்கியப் பிரிவுகள் இருப்பதாகக் கூறுவர்” (18) என்று நூர்மைதீன் குறிப்பிடுகிறார். மேலும், புலவர் இளங்குமரன் இவ்வெண்ணிக்கை குறித்து எடுத்துரைக்கையில், “இப்பாட்டியல் நூல்களின்படி சிற்றிலக்கிய எண்ணிக்கை ஒருமுகப்படவில்லை என்பதை அறிய முடிகின்றது. தற்காலத்துக் கணக்கீட்டின்படி சிற்றிலக்கியத்தின் வகை 417 என உறுதி செய்யப்பெற்றுள்ளது” (19) என்பார்.
ஆகவே காலத்தின் கோலத்திற்கேற்பவும், மக்களின் மனப்போக்கிற்கேற்பவும், புலவர்களின் புலமைத் திறனுக்கேற்பவும் பல்வேறு இலக்கிய வகைகள் தோன்றக்கூடும் என்பதால் சிற்றிலக்கிய வகைகள் தொண்ணூற்றாறு என வரையறுத்து முடிந்த எண்ணிக்கையாகக் கூறுதல் ஏற்புடைத்தன்று எனக் கருத இடமுள்ளது.
“யாப்பு என்னும் இலக்கணத்தாய் பெற்றெடுத்த சேய்” என்று அழைக்கப்படும் பாட்டியல் நூல்கள், சிற்றிலக்கியப் பாடல்களின் எண்ணிக்கை, யாப்பு, வடிவம், பொருண்மை மற்றும் பாட்டுடைத்தலைவன், பாடுபொருள் பொருத்தம் ஆகியனவற்றை வரையறுத்துக் கூறும் சிறப்புடையன. அத்துடன் சிற்றிலக்கியப் பாகுபாட்டினை வகைப்படுத்தி அறிவதற்குப் பாட்டியல் நூல்களின் இன்றியமையாத கருவிகளாகத் திகழ்கின்றன. பாட்டியல் நூல்களின் வளர்ச்சி வரலாறு பற்றி அறிந்து அவற்றை ஒப்பிட்டு நோக்குங்கால் 96 என்ற பட்டியலில் அடங்கும் இலக்கிய வகைகளையும், அப்பட்டியலைக் கடந்து நிற்கும் இலக்கிய வகைகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
பாட்டியல் நூல்கள், சிற்றிலக்கிய வகைகளை வகுத்து, வரையறைப்படுத்தி இலக்கணம் இயம்பியுள்ளன. இதனால், காலத்தேவைக்கும், கற்பனைக்கும் ஏற்ப புதிய இலக்கிய வடிவங்கள் பல தோன்றி, சிற்றிலக்கிய வகையினைச் செழிக்கச் செய்துள்ளன என்னும் உண்மையினை உணர முடிகின்றது.
கலம்பகம், கோவை, அந்தாதி போன்ற இலக்கிய வகைகள் 9ம் நூற்றாண்டிலே தோன்றி விட்டன என்றாலும் அவற்றுக்கான இலக்கணம் பின்னரே உருவாயிற்று. குறவஞ்சி, பள்ளு, சதகம், தலபுராணம் போன்ற இலக்கிய வகைகள் 15ம் நூற்றாண்டின் பின்னரே உருவாயின என்பது குறிப்பிடத்தக்கது.
காலந்தோறும் சிற்றிலக்கியக் கூறுகள்
ஒவ்வொரு மொழி இலக்கியங்களும் காலந்தோறும், வளர்ச்சியடைந்து உச்சநிலையினை நோக்கியும், தனக்குள் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டும் திகழ்வது இயற்கையே ஆகும். இக்கருத்தினையே தமிழண்ணல் பின்வருமாறு எடுத்துரைக்கிறார். “இலக்கிய வகைகள் தம்முள் மாறாமல் அமைகின்றன என நினைப்பது தவறு. அவை நூலுக்கு நூல் மாறிக் கொண்டே இருக்கின்றன. ஒரு வகையின என நாம் கருதுவனவற்றுள்ளும் ஒவ்வொன்றும் தனித்தன்மை ஊடையனவாகின்றன” (20) என்ற கருத்து சிற்றிலக்கியத்திற்கு முழுமையாகப் பொருந்துகின்றது எனலாம்.
எல்லாக் காலத்தும் இலக்கியம் வாழ்க்கையினின்று தான் தோன்றுகிறது. மேலும் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல் இயல்பே. ஆதலால் காலந்தோறும் தோன்றுகின்ற இலக்கிய வகைகள் பலவற்றுள்ளும் சிற்றிலக்கியக் கூறுகள் ஊடாடி இழைந்து நிற்கின்றன. சங்க காலம், சங்கம் மருவிய காலம், பக்தி இலக்கிய காலம், காப்பிய காலம், பிற்கால இலக்கியம் போன்ற இலக்கிய வகைகள் பலவற்றுள்ளும் சிற்றிலக்கியக் கூறுகள் சிறந்து காணப்படுகின்றன எனலாம்.
சங்க இலக்கியத்தில் சிற்றிலக்கியக் கூறுகள் கூறுகள்
சங்க காலத்தைச் சார்ந்த சில இலக்கியங்களைப் பாட்டியல் நூல்கள் கூறும் இலக்கிய வகைகளில் அடக்கி மொழிய இயலும் ஏன்பர். “ஐந்திணைச் செய்யுள்” என்பது பாட்டியல் கூறும் ஒரு இலக்கிய வகை. இதற்கு எடுத்துக்காட்டாக எட்டுத்தொகை நூல்களில் ஐங்குறுநூறு நற்றிணையைக் குறிப்பிடலாம். தொகைச் செய்யுள் என்னும் இலக்கிய வகைக்குச் சான்றாக குறுந்தொகை, நெடுந்தொகை, கலித்தொகை ஆகியவற்றைக் கூறலாம். அடுத்ததாக பத்துப்பாட்டில் உள்ள திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகியவற்றை ஆற்றுப்படை என்ற இலக்கிய வகைக்குச் சான்றாகக் கூறலாம்” (21)
இத்துடன் சங்க இலக்கியத் தொகுதியில் சிற்றிலக்கியப் பொருண்மை சார்ந்த தனிப்பாடல்களும் மிகுதியாக உள்ளன என்பர். புறநானூற்றில் இப்பண்பு பரந்து விளங்கக் காணலாம்.
சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பெற்ற பின்னர் உருவான பாட்டியல் நூல்கள், சங்க இலக்கியப் பாடல்களையும் குறிப்பிட்ட இலக்கிய வகைக்குள் அடக்க முயற்சிக்கின்றன.
சங்கம் மருவிய காலஇலக்கியங்களில் சிற்றிலக்கியக் கூறுகள்
சங்கம் மருவிய காலத்தில் எழுந்தனவாகக் கருதப்படும், இரட்டைக் காப்பியங்களுள் சிலப்பதிகாரத்தில் சிற்றிலக்கிய வகைகளின் களத்தினைக் காண இயலுகின்றது. இதில் “வாழ்த்துக் காதையில் அமைந்த கந்துகவரி, ஊசல்வரி, அம்மானை வரி, வள்ளைப்பாட்டு என்பன சிற்றிலக்கியச் சாயலுடையவை. வேட்டுவ வரியில் அமைந்த வெட்சி, வெட்சிப் புறநடை என்னும் பகுதிகள் “வீரவெட்சிமாலை” எனும் இலக்கிய வகைக்குச் சான்றாகக் கூறலாம். அத்துடன் கற்புடைப் பெண்டிரைப்பற்றி கூறும் குறிப்பு “தாரகைமாலை” என்னும் இலக்கிய வகையோடு தொடர்புடையது” (22) என்றும் சுட்டுவர்.
நீதி கூறும் கீழ்க்கணக்கு நூல்களில் திரிகடுகம், சிறுபஞ்சமூலம் ஆகிய நூல்களில் மாலை, கோவை போன்ற இலக்கிய வகைகளுக்குரிய தொகுத்துக் கூறும் அமைப்பு இடம் பெறுதல் நோக்கத்தக்கது. கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது என வரும் நூல்கள் யாவும் நாற்பது என்னும் பாடல்கள் எண்ணிக்கையினை நினைவூட்டுகின்றன.
பக்தி இலக்கியத்தில் சிற்றிலக்கியக் கூறுகள்
வரலாறு, காதல், போர்ச் செய்திகள், நீதிநெறிகள், சமுதாய வாழ்வு, பக்தி, தத்துவம் முதலிய பலவகைப் பாடுபொருண்மைகளைக் கொண்ட சிற்றிலக்கியங்களில் பெரும்பான்மையானவை இறைவனையும் இறைவன் சார்ந்த சமயத்தையும் பற்றி சிந்திக்கத் தூண்டும் பக்தி உணர்வை மையமாகக் கொண்டவை.
கி.பி. 4 ஆம் நூ. இறுதி முதல் கி.பி. 12ஆம் நூ. இறுதி வரை பக்தி இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றின. அத்தகைய பக்தி உணர்வோடு சிற்றிலக்கியப் பயிரையும் நாயன்மார்களும், ஆழ்வார்களும் செம்மையுற வளர்த்தனர்.
திருஞானசம்பந்தர் பாடிய யமகம், சக்கரமாற்று, ஏகபாதம், கோமூத்திரி, மாலைமாற்று போன்ற வடிவங்கள் “சித்திரக்கவி” இலக்கிய வகையோடு உறவுடையன. அப்பர் பாடிய திருவங்க மாலையின் பன்னிரு பாடல்களே பிற்காலத்தில் “அங்கமாலை” என்னும் இலக்கிய வகை தோன்றக் காரணமாக அமைந்தன. புதுமையான இலக்கிய வகைகளை அறிமுகப்படுத்தியுள்ள மாணிக்கவாசகருடைய பதிக இலக்கியங்கள் (கோயில் மூத்த திருப்பதிகம், கோயிற்றிருப்பதிகம்...) பிற்காலத்தில் “பதிக இலக்கியம்” உருவாகக் காரணமாயின. திருமாளிகைத்தேவர் இறைவனைப் புகழும் பொருண்மை நிலையில் உள்ள பாடல்களில் “பாதாதிகேச இலக்கிய வகை” அமைப்பு பயின்று வந்துள்ளமையைக் காண இயலுகின்றது. இது பின்னர் தனி இலக்கிய வகையாயிற்று. மாணிக்கவாசகர் பாடிய திருத்தசாங்கம், திருப்பொன்னூசல், திருவம்மானை, திருப்பள்ளியெழுச்சி ஆகியவை பின்னர் தனி இலக்கிய வகைகளாயின.
“முதலாழ்வார்கள் பாடிய மூன்று திருவந்தாதி, திருமழிசையாழ்வார் பாடிய நான்முகன் திருவந்தாதி, திருவரங்கத்தமுதனாரின் இராமாநுசர் நூற்றந்தாதி, நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதி ஆகியன யாவும் “அந்தாதி” ஏன்னும் சிற்றிலக்கிய அமைப்பின. திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தம் “பல்சந்தமாலை” என்னும் இலக்கிய வகையோடு இயைத்து எண்ணத்தக்கது. திருமங்கை ஆழ்வாரின் சிறிய திருமடல், பெரிய திருமடல் என்பன “மடல்” என்னும் இலக்கிய வகைக்குரியவை. தொண்டரடிப் பொடியாழ்வார் திருப்பள்ளியெழுச்சி பாடியுள்ளார். திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம் என்பன “தாண்டகம்” எனும் யாப்புச் சார்பு இலக்கிய வகையைச் சார்ந்தவை. கண்ணனைக் குழந்தையாகக் கருதிக் குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார் ஆகியோர் பாடிய பாடல்களில் “பிள்ளைத்தமிழ்” இலக்கிய வகையின் பகுதிகள் பல அமைந்துள்ளன” (23)
இவற்றால் பக்தி இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள பெரும்பான்மையான சிற்றிலக்கியக் கூறுகள் பிற்காலத்தில் சிற்றலக்கிய வகைகளாக வளர்ச்சி பெற்றுள்ளன என்பதனை அறிய முடிகின்றது.
காப்பிய இலக்கியத்தில் சிற்றிலக்கியக் கூறுகள்
காப்பிய இலக்கியத்தில் காணப்படும் செய்திகளை மூலமாகக் கொண்டு, பிற்காலத்தில் பல சிற்றிலக்கிய வகைகள் தோற்றம் பெற்றுள்ளன என்பர். ஏனெனில், காப்பிய உறுப்புக்கள் பல சிற்றிலக்கியக் கூறுகளாய் அமைந்துள்ளமை காணத்தக்கது.
“சிற்றிலக்கியத்தின் தோற்றத்திற்குப் “பக்தியே அடிப்படைக் காரணம் என்றாலும், சிற்றிலக்கியங்கள் யாவும் பக்தியின் அடிப்படையிலேயே தோன்றியுள்ளன என்று சொல்லி விட முடியாது. ஏனெனில், சிற்றிலக்கியத்தின் பாடுபொருள் பெரும்பான்மை பக்தியையும், சிறுபான்மை வீரவழிபாடு, தலைமை வழிபாடு போன்ற புறப் பொருண்மையையும் உடையதாகத் திகழ்கிறது” (24) என்ற கு. முத்துராசன் கூற்று பக்தி இலக்கியத்தில் உள்ள சிற்றிலக்கியக் கூறுகளைக் காட்டிலும் காப்பிய இலக்கியத்தில் உள்ள சிற்றிலக்கியக் கூறுகளை மிகுதியும் நினைவுறுத்துகின்றன எனலாம்.
“பெருங்கதையில் உதயணண் உலா, சிந்தாமணியில் சீவகன் இலா, இராமாயணத்தில் அமைந்த உலாவியற் படலம் ஆகியன யாவும் உலா என்னும் சிற்றிலக்கிய வகையின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளன. அத்துடன், கோவலன் மதயானையை அடக்கும் பகுதி, மணிமேகலையில் உதயகுமாரன் மதயானையை அடக்குதல் முதலிய இலக்கியக் கூறுகள் வாதோரண மஞ்சரி என்ற இலக்கிய வகையின் உருவாக்கத்திற்கு வித்தாகத் திகழ்கின்றன. காப்பியங்களில் கூறப்படும் கனவுப் பொருண்மைச் செய்திகள் யாவும் அனுராக மாலை என்னும் இலக்கிய வகை உருவாக்கத்தோடு தொடர்புடையனவாகத் திகழ்கின்றன. காப்பியத் தலைவனையும், தலைவியையும் புகழும் புகழ்ச்சிப் பொருண்மைப் பகுதிகள் யாவும் நாமமாலை, புகழ்ச்சிமாலை என்னும் இலக்கிய வகைகளை உருவாக்கின” (25) என்று ந. வீ. செயராமன் அவர்கள் சான்றுகளுடன் விளக்கிக் காட்டியுள்ளார்.
மேற்கூறப்பெற்ற கருத்துக்கள், தமிழ்க் காப்பியங்களில் சிற்றிலக்கியக் கூறுகள் நிறைந்து விளங்குகின்றன என்பதைப் புலப்படுத்துகின்றன.
பிற்கால இலக்கியத்தில் சிற்றிலக்கியச் செல்வாக்கு
சிற்றிலக்கிய காலத்திற்கு முற்பட்ட கால இலக்கியங்களில் சிற்றிலக்கியக் கூறுகள் காணப்படுவது போல சிற்றிலக்கிய காலத்திற்குப் பிற்பட்ட காலத்திலும் சிற்றிலக்கியக் கூறுகள் காணப்படுகின்றன. பிற்கால இலக்கியத்தில் பக்தி, நாட்டுப்பற்று, தலைமை போற்றல் ஆகிய பொருண்மை நிலைகளில் சிற்றிலக்கியச் செல்வாக்கு அதிகமாகக் காணப்படுகின்றது. அவற்றில் ஒரு சில சான்றுகள் விளக்கக் கூடியன. “அருணகிரிநாதர் பாடிய கந்தரந்தாதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழு கூற்றிருக்கை என்ற பெயர்களில் அந்தாதி, விருத்த இலக்கணம், எழுகூற்றிருக்கை ஆகிய சிற்றிலக்கிய வகைகளைப் பாடியுள்ளமை சிறப்பிற்குரியது. தாயுமானவர் ஆனந்தக் களிப்பு, கண்ணி என வரும் யாப்பு சார்ந்த சிற்றிலக்கிய வகைகளை மிகுதியாகப் படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பாரதியார் பாடல்களில் விநாயகர் நான்மணிமாலை, பாரதமாதா திருப்பள்ளி ஏழுச்சி, மகாசக்திப் பஞ்சகம், பாரதமாதா திருத்தசாங்கம் போற்றி அகவல், சுதந்திரப்பள்ளு போன்றவையெல்லாம் சிற்றிலக்கியச் சாயலுடைய பகுதிகள்” (26) என்று ந. வீ. செயராமன் சிற்றிலக்கிய வகைகளின் தாக்கத்தைச் சுட்டுகிறார்.
துரை அரங்கனார் பாடிய முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பிள்ளைத்தமிழ் மட்டுமின்றி பெரியார் பிள்ளைத்தமிழ், எம். ஜி. ஆர். பிள்ளைத்தமிழ், அண்ணாதுரை கோவை, காமராசர் உலா ஆகியனவும் தோன்றியுள்ளன.
ஒரே பொருளைப் பல்வேறு வடிவங்களில் வெளியிடற்கும் பல்வேறு பொருண்மைகளைக் குறிப்பிட்ட வடிவத்தில் வெளியிடற்கும் பொருத்தமானதோர் அமைப்பாக சிற்றிலக்கியங்கள் திகழ்ந்துள்ளன என்பதனைக் காலந்தோறும் சிற்றிலக்கியங்கள் வரலாற்றை அறிவதன் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிகின்றது.
காலந்தோறும் பல்வேறு இலக்கியங்களிலும் சிற்றிலக்கியக் கூறுகள் சிறந்து விளங்கியுள்ளன. பின்னர் அக்கூறுகள் தனித்தனி இலக்கிய வகைகளாக உருப்பெற்றுள்ளன. பின்னர் அவ்வகைகள் பிற இலக்கியங்களில் தாக்கத்தை ஏற்படுத்தின. ஆயினும் சிற்றிலக்கியங்கள் தனித்த இயல்புகளை இழக்காமல் சிறப்பிற்குரியனவாகத் திகழ்ந்தமை போற்றத்தக்கது.
இவ்விடத்தில் வே. இரா. மாதவன் அவர்களின் “தமிழிலுள்ள சிற்றிலக்கிய வகைகளின் வளர்ச்சி நிலைகளை ஆராயுமிடத்து, ஒரு நீண்ட கதைப் பொருண்மையின் பல்வேறு படிநிலைகளிலும் பல்வேறு இலக்கியங்கள் கிளைத்தெழுந்து வளர்ந்துள்ளதைக் காணலாம்” (27) என்னும் கருத்து குறிப்பிடத்தக்கது.
இக்கூற்றுக்கேற்ப சிற்றிலக்கியக் கூறுகள் காலந்தோறும் பல்வேறு படிநிலையில் காணப்படும் முறைமையினை மேற்கூறப்பெற்ற கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.
தொகுப்புரை
சிற்றிலக்கியம் என்னும் இலக்கிய வடிவம் தொடக்கத்தில் பிரபந்தம் என்ற சொல்லால் குறிக்கப்பட்டது. முழுப் பொருண்மையின் பகுதியாக ஒரு பொருள் பற்றிப் பாடப்பட்டவை பிரபந்தங்கள் எனப்பட்டன. அவையே பின்னர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் ஓர் இறைவனை அல்லது அரசனை அல்லது வள்ளலைச் சிறப்பிப்பதற்காக எழுதப்பட்டன.
தொல்காப்பியம் புறத்திணையியலில் பிள்ளைத்தமிழ், உலா, ஆற்றுப்படை, களவஞ்சி, காஞ்சி மாலை, நொச்சி மாலை ஆகிய சிற்றிலக்கிய வகைகளுக்கான வித்து காணப்படுகின்றது,
அரசர்கள் வாழ்க்கையில் பெரும்பகுதியினைப் போர்களில் கழித்தது போக எஞ்சியிருந்த சிறுகாலப் பகுதியில் களித்திட சிறு பிரபந்தங்கள் தகுதியாக இருந்தமையால் சிற்றிலக்கியங்கள் சிறப்புப் பொருண்மை ஏற்றன.
தா. ஈசுவர பிள்ளை சிற்றிலக்கியத்தின் தோற்றத்திற்குரிய காரணிகளாகச் சமுதாய மாற்றம், புதுமை வேட்கை, தனித்துறைப் பொருளைத் தனி இலக்கியமாகப் படைக்கும் புலமைத்திறம், சமய உணர்வைத் தூண்டும் நோக்கம், பெண்களை இன்ப நுகர்பொருளாகக் காட்டும் சிந்தனை ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிற்றிலக்கிய உருவாக்கத்திற்கான அடிப்படைகளும் அட்டவணைப்படுத்தப் பட்டுள்ளன.
தொடக்கத்தில் அரசர்களின் போர்வீரம், கொடைத்திறன் இவற்றைச் சிறப்பித்துப் பாடின. சிற்றிலக்கியங்கள் பின்னர் கடவுளர், அடியவர், நிலக்கிழார் ஆகியோரைப் பாடியதோடல்லாமல் சாதாரண மக்கள் வாழ்க்கையினையும் பாடுபொருளாக ஏற்றன.
சிற்றிலக்கிய வகைகள் எண்ணிக்கை பற்றிப் பாட்டியல் நூல்கள் பலவகையான கருத்துகள் தருகின்றன. பக்தி இலக்கியக் காலம் முதலாகச் சிற்றிலக்கியங்கள் தோன்றினாலும் அவற்றைத் தொகுத்து 96 என்னும் எண்ணிக்கையினைப் பிரபந்த மரபியலில் (16ம் நூற்றாண்டு) காண முடிகிறது. 18ம் நூற்றாண்டின் இறுதி வரையில் இந்த எண்ணிக்கையே நிலை பெற்றது. தற்காலத்தில் நானூறுக்கும் மேற்பட்ட சிற்றிலக்கிய வகைகள் அறியப்பட்டுள்ளன.
சங்க காலம் தொடங்கிக் காலந்தோறும் தோன்றுகின்ற இலக்கிய வகைகள் பலவற்றுள்ளும் சிற்றிலக்கியக் கூறுகள் ஊடாடி நிற்கின்றன. சிற்றிலக்கியங்களில் இடம் பெறும் காதல், வீரம், போர், தலைமை போற்றல், மக்கள் வாழ்வியல் ஆகிய பொருண்மைக் கூறுகள், யாப்பு வடிவம், தொகுத்துக் கூறும் முறை, அணி வகைகள் ஆகியவற்றைக் காலந்தோறும் இலக்கிய வரலாற்றில் காண முடிகின்றது.
குறிப்புகள்
1. தா. ஈசுவரப்பிள்ளை, தமிழில் சிற்றிலக்கிய வரலாறு & முதற்பகுதி, ப.18
2. நா.செல்வராஜ், இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள், ப.5
3. தமிழ், அடோன் அகராதி, பக். 376, 377
4. ரா.சீனிவாசன், தமிழ் இலக்கிய வரலாற்றுக் கட்டுரைகள், ப.102
5. தா. ஈசுவரப்பிள்ளை, மு.கூ.நூ., ப.21
6. தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, ப.275
7. மது. ச. விமலானந்தம், தமிழ் இலக்கிய வரலாறு, ப.146
8. கு.முத்துராசன், சமயப் பாடல்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் ஒரு திறனாய்வு, ப.115
9. பீ. மு. அஜ்மல்கான், இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள், ப.5
10. அ. மார்க்ஸ், சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள், ப.14
11. மது. ச. விமலானந்தம், மு.கூ.நூ., ப.146
12. கு. முத்துராசன், மு.கூ.நூ., ப.116
13. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு & 12ஆம் நூற்றாண்டு, ப.46
14. அ. மார்க்ஸ், மு.கூ.நூ., ப.10
15. பீ. மு. அஜ்மல்கான், மு.கூ.நூ., ப.2
16. தா. ஈசுவரப்பிள்ளை, மு.கூ.நூ., ப.27
17. ந. வீ. செயராமன், பாட்டியலும் இலக்கிய வகைகளும், ப.19
18. வா. மு. ஆ. நூர்மைதீன், நெஞ்சையள்ளும் நாகையந்தாதி, ப.9
19. புலவர் இளங்குமரன், இலக்கிய வகை அகராதி, ப.8
20. தமிழண்ணல், சங்க இலக்கிய ஒப்பீடு, ப.9
21. ந. வீ. செயராமன், சிற்றிலக்கியத் திறனாய்வு, ப.137
22. மே.நூல், ப. 139
23. மு. சண்முகம் பிள்ளை, சிற்றிலக்கிய வளர்ச்சி, ப.95
24. கு. முத்துராசன், சிற்றிலக்கியச் சிந்தனைகள், ப.3
25. ந. வீ. செயராமன், சிற்றிலக்கியத் திறனாய்வு, ப.146
26. மே. நூல், ப.148
27. வே. இரா. மாதவன், தமிழில் தூது ஈலக்கியம், ப.54
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|