இந்த உலகத்தில் நாம் கண்ணை மூடித் திறக்கும் நேரத்திற்குள் எத்தனையோ செயல்கள் நடந்து முடிந்து விடுகின்றன. ஒவ்வொரு வினாடிக்குள்ளும் பல குழந்தைகள் பிறக்கின்றன. பலர் இறந்து போய் விடுகின்றனர். பல பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேவையற்ற பல அழிக்கப்பட்டு விடுகின்றன. இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை என்பதை எடுத்துச் சொல்லும் தோற்றங்களும் மறைவுகளும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் என்ன நடந்திருக்கும்? என்று நாம் தெரிந்து கொள்ள மாயஜாலக் கதைகளில் வரும் மாயக்கண்ணாடி இருந்தால் கூட குறிப்பிட்ட ஒரு சில நிகழ்ச்சிகளையே காண முடியும். உலகிலுள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும் நாம் அறிந்து கொள்ள விரும்பினாலும் அந்த நிகழ்ச்சிகளை நாம் தெரிந்து கொள்ளும் முன்பே பல மாற்றங்கள் நடந்து விடும்.
இந்த மாற்றத்திலும் குறிப்பாக ஒரு சில பொதுவான புள்ளி விபரங்கள் இப்படித்தான் இருக்கிறது என்று சொல்லும் வகையில் உலக மக்கள் தொகை, பிறப்பு, இறப்பு மற்றும் மக்கள் தொகை வளர்ச்சி போன்றவற்றுடன் உலகில் நடைபெறும் திருமணங்கள், விவாகரத்துக்கள், கருக்கலைப்புகள், எய்ட்ஸ் நோய் ஆபத்து, புற்று நோய் ஆபத்து, கார் உற்பத்தி, கணினி உற்பத்தி, பூமியின் வெப்பநிலை போன்றவற்றில் இப்பொழுது என்ன நடந்திருக்கும்? இந்த நாளில் என்ன நடந்திருக்கும்? இந்த வாரத்தில் என்ன நடந்திருக்கும்? இந்த மாதத்தில் என்ன நடந்திருக்கும்? இந்த வருடத்தில் என்ன நடந்திருக்கும்? என்பதை புள்ளிவிபரத் தகவல்களாக எண்ணிக்கையில் அறிந்து கொள்ள முடியும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
ஆம். இந்த புள்ளிவிபரச் சேவையை கடந்த கால நிகழ்வுகள் மற்றும் மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஆங்கிலத்தில் வெளியாகும் இணைய தளம் ஒன்று உலகக் கடிகாரம் என்கிற பெயரில் உடனுக்குடன் அளித்து வருகிறது.
மேலும் இத்தளத்தில் தொற்று நோயில்லாத இதய சம்பந்தப்பட்ட நோய்கள், புற்று நோய், சுவாச நோய்கள், உணவுச் செரிமான நோய்கள், மன சம்பந்தமான பிரச்சனைகள், சர்க்கரை நோய்கள் மற்றும் இதர தொற்று நோயல்லாத நோய்கள் பற்றிய புள்ளி விபரங்கள் காணப்படுகின்றன.
கிருமிகளின் மூலம் பரவும் எய்ட்ஸ், வயிற்றுப் போக்கு, காசநோய், மலேரியா, டெங்கு, தொழுநோய் போன்ற சில தொற்று நோய்கள் குறித்த புள்ளி விபரங்கள் மற்றும் போக்குவரத்து விபத்துக்கள், விஷம் அருந்துதல், தற்கொலை, கலவரம், போர் போன்றவற்றின் பாதிப்புகள் குறித்த புள்ளி விபரங்கள் போன்றவை குறித்த புள்ளி விபரங்களும் இதில் காணப்படுகிறது.
இது குறித்த படத்தை மேலே காணலாம்.
மேலும் தற்போதைய புள்ளி விபரங்கள் அறிய கீழ்காணும் உலகக் கடிகாரத்தின் இணைய தள முகவரியைச் சொடுக்கிச் சென்று பார்க்கலாமே...