பிளாஸ்டிக் பைகள் இன்றைய மனிதன் வாழ்க்கையில் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருளாகி விட்டது. எந்தப் பொருள் வாங்கினாலும் வணிக நிறுவனங்கள் அதை பிளாஸ்டிக் பைகளில் போட்டுக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்ட பின்பு குப்பைக்குச் சென்று விடுகின்றன. குப்பைக்குச் சென்ற இந்தப் பைகள் அழிந்து விடுகின்றனவா? என்றால் அதுதான் இல்லை. இது மண்ணில் புதைக்கப்பட்டால் கூட மக்கிப் போவதில்லை. அழியா வரம் பெற்ற இந்தப் பைகளை அழிக்க முயற்சிப்பதை விட தவிர்க்க முயற்சிக்க வேண்டும் என்று வருங்காலம் வளமாக இருக்க விரும்பும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உலகம் முழுக்கப் போராடி வருகின்றனர்.
இந்தப் போராட்டங்களில் சில நாடுகள் பிளாஸ்டிக் பைகளை முழுமையாகத் தவிர்த்து விட்டன. பல நாடுகள் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினாலும், அதன் உற்பத்தியைத் தடுக்கவில்லை. கண்டும் காணாத இந்தப் போக்கினால் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்தப் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடுகள் பற்றிய சிறு புள்ளி விவரம்.
1. உலகம் முழுவதும் ஓராண்டுக்கு 50 ஆயிரம் கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.
2. ஒவ்வொரு நிமிடத்திற்கும் 10 இலட்சம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.
3. இந்தியாவில் பிற நாடுகளை விட பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. காய்கறி முதல் அனைத்துப் பொருட்களின் விற்பனைக்கும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு ஊடுருவிப் போய்விட்டது.
4. பிளாஸ்டிக் பைகளை அழிப்பது மிகவும் கடினமானது. இப்பிளாஸ்டிக் பைகள் முழுமையாக அழியக் குறைந்தது 300 ஆண்டுகளாவது ஆகும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
5. பயன்பாட்டிற்குப் பின்பு குப்பைக்குச் செல்லும் பிளாஸ்டிக் பைகள் அழிக்க முடியாமல் பூமியின் நிலப்பரப்பில் பல இடங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. ஆறு, குளம், கடல் என நீர்நிலைகளிலும் கூட மிதந்து கொண்டிருக்கின்றன.
6. பூமியின் நிலப்பரப்பில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகளைத் தின்று அவைகளைச் செரிமானம் செய்ய முடியாமல் பல கால்நடைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. பூமியினுள் மேலாகப் புதைந்து கிடக்கும் பிளாஸ்டிக் பைகள் மழைநீரை பூமிக்குள் செல்லவிடாமல் தடுத்துவிடுவதால், நிலத்தடி நீரின் அளவும் குறைந்து கொண்டே இருக்கின்றன. இதனால் வருங்காலத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உள்ளது.
7. ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் சேரும் பிளாஸ்டிக் பைகளால் குடிநீர் ஆதாரங்களாகத் திகழும் ஆறு, குளங்கள் விசத் தன்மைக்கு மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. ஆறு, குளம், கடல் போன்றவற்றில் வாழும் உயிரினங்கள் சிறிது சிறிதாக அழிந்து கொண்டே இருக்கின்றன.
இந்தியாவில் 20 மைக்ரான் கனம், 8க்கு 12 அங்குலத்திற்க்குக் கீழான அளவிலுள்ள பிளாஸ்டிக் பைகளுக்குத் தடையுள்ளது. ஆனால், இந்தத் தடையைச் செயல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் அக்கறை கொள்ளாததால் நாடு முழுக்க பிளாஸ்டிக் பைகள் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. இதனால், கால்நடைகள் நலனுக்காகப் பாடுபடும் தொண்டு நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தனர். இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், பிளாஸ்டிக் பைகளின் தவறான பயன்பாடு கால்நடைகளுக்கு மட்டுமில்லாமல் வருங்காலத் தலைமுறையினருக்கும் ஆபத்தாக இருப்பதால் அதை முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் அல்லது உற்பத்தியாளர்கள் பிளாஸ்டிக் பைகளை மறுசுழற்சி செய்திட வேண்டும் என்றும், இதுகுறித்து இந்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் இந்திய அரசுக்குக் குறிப்பாணை அனுப்ப உத்தரவிட்டது.
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பழைய பண்பாடுகளை மறந்து, புதுப்புது பயன்பாடுகளை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதால் இயற்கையை இழந்து செயற்கையால் வந்த விளைவுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். சுற்றுச்சூழல் மாசடைதல், புவி வெப்பமயமாதல், ஓசோன் படலத்தில் ஓட்டை என்று புதிய ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறோம். அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் தண்ணீர், குளிர்பானங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் பிளாஸ்டிக்கிலான புட்டிகளில் அடைக்கப்பட்டுத்தான் விற்பனைக்கு வருகின்றன. சாதாரணமாக நாம் பல் துலக்குவதில் கூட நாம் பழையதைத் துறந்து, புதியதை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி"
- என்று உடல் நலத்திற்கு உதவும் நம் பண்டைய தமிழர்களின் பல் துலக்கலுக்கான பண்பாடு கூட சிதைந்து, அதிலும் பிளாஸ்டிக் பயன்பாடு புகுந்து கொண்டுவிட்டது. பிளாஸ்டிக் பைகளைப் போன்றே பிளாஸ்டிக்கிலான பல்வேறு பொருட்கள் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பயன்பாட்டில் அவசியமானதாக மாறிவிட்டன. பிளாஸ்டிக் பை மற்றும் சில பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. ஆனால், மக்கள் அதிகம் பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படாத வகையில் கழிவுப் பொருட்களாகச் சேர்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் அழகிய நிறங்களில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் பல் துலக்கி (Tooth Brush) முக்கியமான கழிவுப் பொருளாகச் சேர்ந்து கொண்டிருக்கின்றன என்பது மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல்.
ஆம், இன்றைய மக்கள் பயன்பாட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அழகிய வடிவங்களில், பல்வேறு நிறங்களிலான பிளாஸ்டிக்கிலான பல் துலக்கிகளை விரும்பிப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பல்துலக்கிகள் மற்றும் அதைத் தாங்கி வரும் பிளாஸ்டிக் உறைகள் போன்றவையும் பிளாஸ்டிக் பைகளைப் போலவே பயன்பாட்டிற்குப் பின்பு தூக்கி எறியும் நிலையில் குப்பைகளாகச் சேர்ந்து கொண்டிருக்கின்றன. மனிதர்கள் சராசரியாக ஆண்டொன்றுக்கு ஆறு பல்துலக்கிகளைப் பயன்படுத்தித் தூக்கி வீசுகின்றனர். குப்பைக்குச் செல்லும் இந்தப் பல்துலக்கிகள் மற்றும் இதைத் தாங்கி வந்த உறைகள் போன்றவையும் அழிவதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் பிளாஸ்டிக் பைகளை விட மிக அதிகமானது.
ஆண்டொன்றில் தனிமனிதர் சராசரியாகப் பயன்படுத்தும் ஆறு பல்துலக்கிகள் மற்றும் அதைத் தாங்கி வரும் உறைகளின் எடை சுமார் 150 கிராம் இருக்கிறது. இதை இந்திய மக்கள்தொகையான 120 கோடி மக்கள் பயன்பாட்டில் கணக்கிட்டால் தூக்கி எறியும் பிளாஸ்டிக்கிலான பல்துலக்கிகள் மற்றும் அதற்கான உறைகளின் எடை 1.80 இலட்சம் மெட்ரிக் டன்களாக இருக்கிறது. உலகம் முழுவதுமுள்ள 700 கோடி மக்கள் பயன்பாட்டுக் கணக்கில் பிளாஸ்டிக்கிலான பல்துலக்கிகள் மற்றும் அதற்கான உறைகளின் எடை 10.5 இலட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக இருக்கும். ஓர் ஆண்டில் வீணாகும் பிளாஸ்டிக்கிலான பல்துலக்கிகள் இவ்வளவு எடை கொண்டதாக இருந்தால் ஆண்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இதன் எண்ணிக்கையும் அதிகமாகப் போவதுடன் அழிக்க முடியாமல், இந்தப் பூமியில் தேங்கிப் போகும் அபாயமும் வந்து கொண்டிருக்கிறது.
அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பல் துலக்கிகள் ஒதுக்கித் தள்ளிவிட முடியாத ஒன்றாக ஆகிவிட்ட நிலையில், அதை அப்படியே தூக்கி எறிந்து விடவும் முடியாது. ஆனால், அதற்காகப் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் முடியாதுதான். இந்நிலையில் சென்னையில் இருக்கும் கோ. புண்ணியமூர்த்தி என்பவர் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் புதிய பல்துலக்கி ஒன்றை வடிவமைத்து உள்ளார்.
இந்தப் புதிய பல் துலக்கி தற்போது பயன்பாட்டிலுள்ள பல் துலக்கியைப் போலத்தான். தற்போதுள்ள பிளாஸ்டிக்கிலான பல் துலக்கியை இரு பகுதிகளாகப் பிரித்து, பல் துலக்கும் பிளாஸ்டிக் நரம்புகள் கொண்ட பகுதியைப் பல் துலக்கியின் தலைப்பகுதி (Head Portion) ஆகவும், மற்றொரு பகுதியைக் கைப்பிடிப்பகுதி (Handle Portion) ஆகவும் உருவாக்கிக் கொண்டுள்ளார். இந்த இரண்டு பகுதிகளையும் இணைப்பதற்கு வசதியாகப் பல் துலக்கியின் தலைப்பகுதியின் கீழ் திருகாணியாகவும், கைப்பிடிப்பகுதியின் மேல் தலைப்பகுதி திருகாணி சேரும் விதமாகவும் வடிவமைத்துள்ளார்.
இந்தப் பல் துலக்கியின் கைப்பிடிப் பகுதி நிரந்தரப் பயன்பாடுடையதாகத் துருப்பிடிக்காத இரும்பு (Stainless Steel) கொண்டும், தலைப்பகுதி தற்போது பயன்பாட்டிலுள்ளவாறே சிறிய அளவில் பிளாஸ்டிக்கைக் கொண்டு தேவைப்படும் போது மாற்றிக் கொள்ளும் வகையில் உருவாக்கிக் கொள்ளலாம். தலைப்பகுதியிலுள்ள பல் துலக்கும் பிளாஸ்டிக் நரம்புகள் கொண்ட பகுதி சிதைந்து பயன்படுத்த முடியாத நிலையில் அதை மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்தப் பல் துலக்கியின் கைப்பிடிப்பகுதி நிரந்தரப் பயன்பாட்டில் இருப்பதாலும், தலைப்பகுதி மாற்றிக் கொள்ளும்படியும் இருப்பதால், தற்போது பயன்பாட்டிலுள்ள பிளாஸ்டிக் பல் துலக்கியின் கைப்பிடிக்கான பிளாஸ்டிக்கின் பயன்பாடு இல்லாமல் போய்விடுகிறது. தலைப்பகுதிக்கு மட்டும் சிறிது பிளாஸ்டிக் பயன்பாடு தேவையாக இருக்கிறது.
இதன் மூலம் இந்தியாவில் ஓர் ஆண்டில் குப்பையில் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பல் துலக்கிகளின் எடை 1.80 இலட்சம் மெட்ரிக் டன் எடையிலிருந்து 95 சதவிகிதம் குறைக்கப்பட்டு விடும். பல் துலக்கிகள் மூலம் குப்பைக்கு வரும் பிளாஸ்டிக்கின் எடை ஆண்டொன்றுக்கு சுமார் 1.71 இலட்சம் டன்னாகக் குறைந்து விடும். இந்தப் புதிய பல்துலக்கியின் வடிவமைப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெரும்பங்கு வகிப்பதுடன், தற்போது பிளாஸ்டிக் பல் துலக்கிகளுக்காகப் பொதுமக்கள் செலவிடும் பணத்திலும் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்து போய்விடும்.
இந்த வடிவமைப்புக்கான முழு உரிமையைப் பெற்றிருக்கும் இதன் வடிவமைப்பாளர் கோ. புண்ணியமூர்த்தி, “இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் முழுமையான பிளாஸ்டிக்கிலான பல் துலக்கிகளுக்குத் தடை விதிக்க வேண்டும். உலோகத்தாலான பல் துலக்கியின் நிரந்தரக் கைப்பிடிப்பகுதி மற்றும் பிளாஸ்டிக்கிலான தலைப்பகுதி கொண்ட புதிய பல் துலக்கியை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு உதவ வேண்டும்.
இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கு, புதிய பல் துலக்கியை இலவசமாக அளிக்க முன் வர வேண்டும். அதாவது, முதல் ஆண்டில் புதிய பல் துலக்கியின் உலோகத்திலான கைப்பிடிப்பகுதி ஒன்று, பிளாஸ்டிக்கிலான தலைப்பகுதி ஆறு அடங்கியதாக இலவசமாக அளிக்கலாம். வரும் ஆண்டுகளில் புதிய பல் துலக்கியின் கைப்பிடிப்பகுதியைத் தவிர்த்து பிளாஸ்டிக்கிலான தலைப்பகுதி ஆறு எண்ணிக்கையில் இலவசமாக அளிக்கலாம்.
இதன் மூலம் பள்ளிக் குழந்தைகளிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படும். மேலும், முழுமையான பிளாஸ்டிக் பல் துலக்கிகளின் பயன்பாடுகளால் வீணாகிச் சேரும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு குறைக்கப்படுவதுடன், பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவது பெருமளவு குறைக்கப்படும்.” என்கிறார்.
இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கோ. புண்ணியமூர்த்தி வடிவமைத்துள்ள புதிய பல் துலக்கியை நாடு முழுவதும் பயன்பாட்டுக் கொண்டு வர உதவ வேண்டும்.