அறிவு என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான வழியை கையாள்வதில் இருக்கும் திறன் ஆகும். இதில் நுண்ணறிவு என்பது அறிவுத் திறனில் திட்டமிட்டு செயல்படும் ஒரு பகுதியாகும். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையான அனைத்து வகையான செயற்பாடுகளிலும், வெற்றி வாய்ப்புக்களிலும், அனுபவப் பகிர்வுகளிலும் நுண்ணறிவு முக்கிய இடத்தினை வகிக்கின்றது. மனிதனின் முழு வாழ்க்கையினையும் சிறப்பான முறையில் வழி நடத்திச் செல்வதற்கும் இது உதவுகின்றது. இதனடிப்படையில் நோக்கும் போது நுண்ணறிவு என்பது “நோக்கோடு செயற்படுதல், பகுத்தறிவுடன் சிந்தித்தல், சூழ்நிலைகளை சமாளித்தல், போன்றவைகள் சேர்ந்த கூட்டுச் செயற்பாடு” என்று வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது. அத்துடன் நுண்ணறிவைக் குறிக்கும் “intelligence" என்ற ஆங்கிலச் சொல்லானது “நுண்மதி, விவேகம், உளத்திறன், உள ஆற்றல், உளச்சார்பு, புத்திக்கூர்மை, அறிதிறன்” எனப் பலவாறாக அறியப்படும்.
செயற்கை நுண்ணறிவு என்பது கணினி அல்லது இயந்திரங்களை மனிதன் நுண்ணறிவினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்குகின்ற செயன்முறையாகும். அதாவது, இயற்கையாக இல்லாமல் மனிதனால் உருவாக்கிய இயந்திரங்களும் பொறிமுறைகளும் நுண்ணறிவுடன் செயற்படுவதாகும். இது கணினி விஞ்ஞானத்தின் ஒரு பகுதியாக விளங்குகின்றது. மனிதர்களுக்கு ஒத்த அல்லது மனிதர்களை விட அறிவுத் திறன் கொண்ட கணினிகளையும், இயந்திர மனிதர்களை உருவாக்குவது இத் துறையின் நோக்கமாகும்.
இன்று அறிவியலில் “செயற்கை நுண்ணறிவு விருத்தி” என்பது தனித்துறையாக வளர்ச்சிபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது என்பதுடன் மனிதனுக்கு மட்டும் அறிவு, நுண்ணறிவு இருக்கிறது என்று எண்ணுதல் தவறானது. அதாவது எல்லா உயிரினங்களுக்கும் இந்த அமைப்பு இயற்கையில் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு உயிரினமும் தனது சூழலில் உருவாகும் சவால்களுக்கு ஏற்ப இலக்குகளை அமைத்துத் தன்னிடம் இருக்கும் அறிவுத்திறனைப் பயன்படுத்தி இலக்கை அடைகிறது. உதாரணமாக ஒரு கல பக்ரீரியாக்கள் அல்லது நுண்ணுயிர்கள் தான் உயிர் வாழத் தேவையான உணவைப் பெற்றுக் கொள்ளவும், தொடர்ந்து சந்ததியைப் பெருக்கவும் அறிவைப் பயன்படுத்துகிறது. அதேப்போல் பல்வேறு உயிரினங்கள் வெவ்வேறு தளங்களில் தனது அறிவுத்திறனைப் பயன்படுத்துகின்றன.
செயற்கை நுண்ணறிவின் வரலாறு பற்றிய நிலைப்பாட்டை நோக்கும் போது, ஆதிகாலத்தில் இருந்தே மனிதனுக்குத் தன்னைப் போல் சிந்திக்கக் கூடிய, செயலாற்றக்கூடிய உயிரினங்கள் அல்லது இயந்திரங்களை உருவாக்குவதில் ஈர்ப்பு இருந்தது. இதனைக் கிரேக்ககாலப் புனைகதைகளில் காணலாம். உதாரணம் செயற்கை அறிவுத்திறன் கொண்ட க்ரிட்டின் டேலோஸ், கிபேஸ்டஸின் “தங்கரோபோக்கள்” மற்றும் பிக்மேலியனின் கேலாட்டியா, போன்ற சிந்திக்கும் இயந்திரங்கள், செயற்கை உயிர்கள் முதலியனவற்றைக் குறிப்பிடலாம். மேலும் மனிதர்களைப் போன்ற அறிவுள்ள இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான குறிப்புக்கள் கிரேக்க எகிப்திய நாகரிகங்களில் காணப்படுகின்றன. மத்தியக்காலத்தில் ஜாபிர் இப்னுகயான், பிரான்ஸியஸ், யூட்காலோவ் போன்றவர்கள் இயந்திர மனிதர்களை உருவாக்கியவர்களாகக் கருதப்படுகின்றனர்.
பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் நாவல்களிலும் புனைகதைகளிலும் இயந்திர மனிதர்கள் இடம் பெற்றார்கள். உதாரணம் மேரிசெலினுடைய “பிராங்ஸ்டைன்” பாத்திரத்தை குறிப்பிடலாம். இத்தகைய நிலையில் செயற்கை நுண்ணறிவு என்ற பதத்தை “Johe; macarthy" (1956) என்பவர் தான் முதன் முதலில் உருவாக்கினார். இதனை அவர் “நுண்ணறிவுள்ள இயந்திரங்களை உருவாக்குகின்ற விஞ்ஞானம் மற்றும் பொறிமுறை” என்றும் அழைத்தார்.
இன்றைய உலகில் கைத்தொழில் சார்ந்த தொழில்நுட்பத் துறைகளிலும், கணினி விஞ்ஞானங்கள், இயந்திர மனிதன் (ரோபோட்கள்), முதலியனவற்றின் உருவாக்கத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. செயற்கை நுண்ணறிவானது மனித மனத்தின் திறன்களைச் செயற்கையாக உருவாக்க முடியும் என்ற வலியுறுத்தலால் மெய்யியலில் ஒரு சவாலாக அடையாளப்படுத்தப்படுகின்றது. நுண்ணறிவுத் திறன் உள்ள இயந்திரங்களை மனிதர்கள் உருவாக்கியதன் விளைவாகவே மனம் பற்றிய மெய்யியல் ரீதியான, ஒழுக்கவியல் ரீதியான பிரச்சினைகளும் எழுப்பப்படுகின்றன.
இதனடிப்படையில் நோக்கும் போது நுண்ணறிவு என்பது எங்கே இருக்கின்றது? என சிந்திக்கும் போது அது மனிதனின் மூளையில் இருக்கின்றது. அது இயற்கையாகப் படைக்கப்பட்டது. அவ்வாறெனின் செயற்கை நுண்ணறிவு எங்கே உள்ளது? அது இயந்திர மூளையில் இருக்கின்றதா? அல்லது இயந்திரங்கள் செய்வதை ஏற்றுக் கொள்வதில் இருக்கின்றதா? மனிதனால் நுண்ணறிவு செய்வதை செய்ய முடியாதா? இயந்திரங்களுக்குச் செயற்கை நுண்ணறிவைக் கொடுப்பது மனிதன் என்றால் ஏன்? மனிதனால் இயந்திரங்கள் செய்வதைச் செய்ய முடியாமல் உள்ளது.
மனிதன் கொடுக்கும் நுண்ணறிவைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு செயற்படுகிறது. ஆனாலும் அந்தளவு திறமை மனிதனுக்கு இருக்கும் போது, ஏன் அச்செயற்பாட்டை மனிதனால் நிகழ்த்த முடியாது. இயந்திரங்கள் எந்தளவு நுண்ணறிவுடன் இருக்க முடியும். என்பதற்கு எல்லைகள் உள்ளதா? மனித நுண்ணறிவிற்கும் செயற்கை நுண்ணறிவிற்கும் ஏதேனும் முக்கியமான வித்தியாசங்கள் உள்ளனவா? அத்துடன் ஓர் இயந்திரம் மனம் மற்றும் உணர் நிலை ஆகியவற்றைப் பெற்றிருக்க முடியுமா? ஓர் இயந்திரத்தை நுண்ணறிவு கொண்டதாக உருவாக்க முடியுமெனில் அதனால் உணரமுடியுமா? அதனால் உணர முடியுமெனில் மனிதனைப் போல அதற்கும் உணர்வுகள் உள்ளதா? என்ற வினாக்கள் மெய்யியல் ரீதியாக எழுப்பப்படுகின்றது.
இன்றைய நிலையில் ரொபோட்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிதல், வேலைகளை விரைவாகச் செய்தல், மனிதர்களால் செய்யமுடியாத நுணுக்கமான, கடினமான செயற்பாடுகளை ஆற்றுதல், உற்பத்தியைப் பெருமளவில் கிடைக்க வழி செய்தல், வரவேற்பாளராகச் செயற்படுதல். அலுவலகங்களில் பணிபுரிதல், வீட்டுப் பணிகளை நிறைவேற்றுதல், நபர்களை வரவேற்றல், பிள்ளைகளுடன் விளையாடுதல், ஆபத்து வேளைகளில் அபாய ஒலி எழுப்புதல், ஆபத்துக்களைத் தடுத்தல், வெடிகுண்டுகள் அகற்றுதல், யுத்தமுனைகளுக்குப் பயன்படுதல் முதலானவைகளை நிறைவேற்றுகின்றது.
உதாரணமாகச் சீனாவின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மனிதர்களுடன் உரையாடும் பெண் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். மனிதர்களைப் போலவே பேசிப் பழகும் இந்த ரோபோவிற்கு “ஜியாஜியோ”எனப் பெயரிட்டுள்ளனர். இந்த ரோபோவின் முகபாவங்கள் உடல் மற்றும் வாய், அசைவுகள் மனிதர்களைப் போன்று உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ரோபோ பல பணிகளை மேற்கொள்ளுகிறது. மேலும் ரோபோட்கள் உலக வரலாற்றில் முதல்முறையாக கண் பார்வையினை இழந்த பிரித்தானியாவைச் சேர்ந்த“பில்பியர்” என்பவரின் கண்ணின் விழித்திரையில் இருந்து ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒருபகுதி தடிமனான மிகவும் மெல்லிய படலத்தை வெற்றிகரமாக உரித்து எடுத்து கையிலிருக்கும் வடிகட்டிகள் மென்மையான செயன்முறைகள் மூலம் அறுவைச் சிகிச்சையை நிறைவேற்றியுள்ளது.
1997இல் Deep Blue என்ற கணினி மயப்படுத்தப்படுத்தப்பட்ட சதுரங்க இயந்திரம் உலகின் முதல் வரிசை சதுரங்க ஆட்டக்காரனான Garry Kasparor தோற்கடித்தது. 2005 இல் Stand Ford Robot மனித இயந்திரம் 131 மைல்கள் கொண்ட ஒரு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றது. இதே போல 2011இல் ஒருமனித இயந்திரம் புதிர் போட்டியில் மிகச்சிறந்த போட்டியாளர்களான Brad Rutter, Kenjeeepngs ஆகியோரைத் தோற்கடித்தது. அத்துடன் மனித உருவம் கொண்ட “கிராபோ” எனும் பெயரினையுடைய ரோபோ முதன் முதலில் தனது வார்த்தையை விண்வெளியில் பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ரோபோ நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதரான “நீல் ஆம்ஸ்ரோங்” இற்கு அஞ்சலி செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
கணணியின் செயற்பாடுகள் பற்றி நோக்கும் போது வீட்டுப் பயன்பாடு, குழந்தைகளுக்கான கல்வி, விளையாட்டு, இணையத் தொடர்பு, தொழிற்சாலை உற்பத்திகள், பயன்பாடுகள், ஏற்றுமதிகள், வருமானங்கள், வரவுசெலவுகள், அலுவலகப் பயன்பாடு, தொடர்புகள், வியாபாரப் பயன்பாடு, இணையத் தொடர்பு, வியாபாரம், மருத்துவம், கல்வி, அரசியல், அதிநவீன தொழில்நுட்பப் பயன்பாடு, கிரபிக்ஸ், மல்டி மீடியா தொழில் நுட்பம், பொழுதுபோக்கு, பொருட்களை விற்றல், வாங்குதல், மின்னஞ்சல் (தகவல் பரிமாற்றங்கள்), (இணையத்தில் இணைந்துள்ள ஆயிரக்கணக்கான செய்திக் குழு, தகவல் தொகுப்புக்கள், விரும்பிய பக்கங்களில் உரையாடல்கள், விவாதங்களை மேற்கொள்ளுதல்) இணைய அட்டை சேமிப்புக்கள், (கோடிக்கணக்கான புத்தகங்களில் கிடைக்கப் பெறும் கல்வி, பொது அறிவு) முதலிய செயற்பாடுகளைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு படைக்கப்பட்ட இயந்திரங்கள் நிறைவேற்றுகின்றன.
மனிதனுடைய மூளையின் வெளிப்பாடான கணினிகள் மனித மூளையை விடப் பல மடங்கு ஆற்றலுடன் செயல்படுகின்றது. மனித மூளையை விடத் தீவிரமாக வேலைகளை மேற்கொள்ளுகிறது. கணினிகள் தொழிற்சாலைகளில் இயந்திரங்களின் இயக்கங்களை ஒருங்கிணைத்து அவற்றைக் கட்டுப்படுத்துகின்றது. மேலும் பல இலட்சம் செய்திகளைப் பதிவு செய்யும் ஆற்றல் மிக்கனவாக விளங்குகிறது. அத்துடன் கடினமான பல பணிகளையும் மனித முயற்சியால் இதுவரை முற்றிலும் முடியாமல் போன பல ஆராய்ச்சிகளையும் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றன. ஆனால் மனித மூளையால் அத்தகையச் செயற்பாடுகளை நிறைவேற்ற முடியாமல் உள்ளது. கணினி இயந்திரத்திற்கு, இயந்திர மனிதனுக்குச் செயற்கை நுண்ணறிவினை மனிதன் வழங்கினாலும் கூட, மனிதனால் செய்யமுடியாதவற்றை இத்தகைய இயந்திரங்கள் நிறைவேற்றுகின்றது. இதனடிப்படையில் நுண்ணறிவைச் செயற்கை நுண்ணறிவு விஞ்சியுள்ளது என்று கூறுவதுதான் பொருத்தமானது.