இலத்திரனியல் சாதனங்கள் இன்று உலகில் அதிவிரைவான தயாரிப்புக்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பச் சாதனங்களின் வளர்ச்சி, துரிதப் பொருளாதார அபிவிருத்தி, நகரமயமாக்கம், நுகர்பொருள் கொள்வனவு, தொழில்நுட்ப வளர்ச்சி முதலியன இலத்திரனியல் உற்பத்திகளின் தேவையை அதிகரித்துள்ளன. இதனால் இலத்திரனியல் சாதனங்கள் எமது நாளாந்த வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அத்தியாவசியத் தேவையாக மாறியுள்ளன. இலத்திரனியல் கழிவுகள் என்பது மீள் திருத்தலுக்கு உட்படுத்த முடியாத நிலையில் உள்ள இலத்திரனியல் சாதனங்களைச் சூழலில் வீசும் போது, சூழலுக்கு விடுவிக்கப்படும் சக்தி அல்லது சடப்பொருள் எனப்படும். இலத்திரனியல் கழிவுகள் எனப் பிரதானமாக அடையாளப்படுத்தப்படுபவை மின்கலங்கள் (Batterys), கம்பிகள் (Wires), வெப்பமாக்கிகள் (Heaters), நெகிழி (Plastic), றப்பர் (Rubber) முதலியனவாகும். இத்தகைய இலத்திரனியல் கழிவுகளில் உள்ள ஆசனிக், கட்மியம், இரசம், குறோமியம், ஈயம், நாகம், பேரியம், செலினியம், செம்பு, புரோமின் முதலிய இரசாயணக்கலவைகள் பேராபத்தானவை.
இலத்திரனியல் கழிவுகளை பிரதானமாக மூன்றாக வகைப்படுத்தலாம். அவையாவன;
1. பாரியவீட்டுப் பாவனைப் பொருட்கள் - குளிரூட்டி, சலவை இயந்திரம் போன்றவை
2. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு பொருட்கள் - கணினி, மடிக்கணினி, அச்சு இயந்திரம், கையடக்கத்தொலைபேசி போன்றவை
3. பாவனையாளர் உபகரணங்கள் - தொலைக்காட்சி, வானொலி போன்றவை
உலகளாவியரீதியில் வருடாந்தம் 13 கோடிக்கும் மேற்பட்ட கணினிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மில்லியன் கணக்கிலான கணினிகள் விற்கப்படுகின்றன. இதனால் உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 20 - 50 மெட்ரிக் தொன் இலத்திரனியல் கழிவுகள் சூழலுக்கு விடப்படுகின்றன. அத்துடன் தினமும் 4 - 5 தொன் இலத்திரனியல் கழிவுகள் சூழலில் குவிவடைகிறது. இலத்திரனியல் கழிவுகளை அதிகளவில் ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா முதலிய நாடுகள் வெளியிடுகின்றன. அண்மைக் காலங்களில் துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட சீனா, இலத்தின் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முதலியன வெளியிடுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. என்பதுடன் பெரும்பாலான நாடுகளில் குப்பை ஆக்கப்படும் இலத்திரனியல் கழிவுகளில் இருந்து தேவையான உலோகங்களைப் பெறுவதற்காக அவை உடைக்கப்பட்டும், பகுதி பகுதியாக வேறாக்கப்பட்டும், எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் விடுகின்றன. உதாரணம் நைஜீரியத் துறைமுகத்திற்கு இலட்சக்கணக்கான பாவிக்காத கையடக்கத் தொலைபேசிகளும், கணினிகளும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
சூழலின் பிரதான மூலக்கூறுகளான நிலம், நீர், வளி ஆகியன இலத்திரனியல் கழிவுகளால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதனால் இலத்திரனியல் கழிவுகள் சூழலின் உயிரியல் பல்வகைமைத் தன்மையிலும், இயற்கையின் சமநிலைத் தன்மையிலும், மனிதனின் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இலத்திரனியல் கழிவுகளை மண்ணினுள் புதைக்கும் போது அவை மக்குவது இல்லை. அவை, நீண்டகாலம் மண்ணில் தங்கியிருந்து மண் மற்றும் மண்வளத்தின் தரத்தினை மாற்றியமைக்கின்றன. அதாவது இலத்திரனியல் கழிவுகள் நிலத்தைச் சென்றடையும் போது மண்வளம் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அத்துடன் மண் நச்சுத்தன்மையையும் அடைகிறது. இதனால் நிலச்சூழலின் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. மேலும் தாவர அழிவு, தாவர வளர்ச்சியில் பாதிப்பு, உயிரின அழிவு, பயிர்கள் அழிவடைதல், மண் வளம் இழத்தல், இயற்கைக் கனிமங்கள் பாதிப்படைதல், அழிவடைதல் முதலியன நிகழுகின்றன. உதாரணமாக, கையடக்கத் தொலைபேசியின் மின்கலத்தில் அடங்கியுள்ள இரசாயணப் பதார்த்தம் அவை வீசப்பட்ட இடத்தில் 600 கன அடி வரையிலான மண்வளத்தின் இயற்கைத் தன்மையை அழிக்கவல்லது.
இலத்திரனியல் கழிவுகளை எரிப்பதனால் அதிலிருந்து வெளியாகும் நச்சுவாயுக்கள் வளிமண்டலத்துடன் கலக்கின்றது. இதனால் வளிமண்டலவியலில் பல்வேறு வகையான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக, கணினியை உடைத்துத் தீயிலிட்டு எரிப்பதால் அதில் உள்ள ஆசனிக், அஸ்ரோனியம், ஈயம், தகரம், என்டிமன், பெர்லியம், கோபோல்ட், இரசம், போன்ற இரசாயண மூலக்கூறுகள் புகையாக வெளியேறி வளிமண்டலத்துடன் கலக்கின்றன. இதனால் பாரிய அழிவுகள் ஏற்படுகிறன. உதாரணம், ஓசோன் படையில் துவாரம், அமில மழை பொழிதல், அல்பீட்டோ கதிரின் அதிகத் தாக்கம் முதலியனவற்றைக் கூறலாம்.
முறையான மீள் சுழற்சியும், அழித்தொழிப்பும் இல்லாமையால் இலத்திரனியல் கழிவுகள் உடலியல் சார் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றன. அதாவது, ஒரு கணினி உற்பத்திக்கு 22 கிலோ நிறை உடைய இரசாயணக்கலவை பயன்படுத்தப்படுகிறது. என்பதுடன் அக்கணினியை இயக்கப் பாரியளவிலான சக்தியும் செலவாகிறது. இத்தகைய சக்தி அனைத்தும் முழுமையாக பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக 20 % தொடக்கம் 40% வரையான சக்தி வீணாக சூழலுக்கு விடப்படுகிறது. அவை தீவிர நச்சுத்தன்மையுடையதாக விளங்குகிறது. இத்தகைய செயற்பாடுகளால் உடல்நிலை பாதிப்படைவதோடு, உயிரின இனப்பெருக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, ஒரு கணினியை உற்பத்தி செய்ய 7கிலோ நெகிழி (Plastic) பயன்படுத்தப்படுகிறது. அன்றாடம் இப்பொருட்களைp பயன்படுத்துவதால் புற்று நோய், சிறுநீரகp பாதிப்பு, சுவாசப்பிரச்சினை, ஆண்மைக் குறைபாடு, தைரொக்சைட், கருவின் வளர்ச்சி வீதம் குறைவு, வயதுக்கு முன் பூப்படைதல் முதலியன ஏற்படுகிறது.
மேலும் இலத்திரனியல் கழிவுகளின் முறையற்ற அழித்தொழிப்பு இல்லாமையால் நீர் வளம் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இன்று நீர் வளம் அருகி வருவதற்கும், விற்பனைப் பொருளாக மாறியுள்ளமைக்கும் இலத்திரனியல் கழிவுகள் ஒருவகை காரணமாக இருக்கலாம். உதாரணமாக, பழுதடைந்து வீசப்படும் கையடக்கத் தொலைபேசி ஒன்றின் மின்கலம் 30,000 டன் நீரை மாசடையச் செய்கின்றது.
இலத்திரனியல் கழிவுகள் எங்கு உற்பத்தியாக்கப்படுகின்றன. அவை எங்கிருந்து அனுப்பப்படுகின்றன. என்பது தொடர்பில் தெளிவுபடுத்துகைகள் இல்லாத போதும் கூட ஆசிய பசுபிக் நாடுகளான சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும், கானா, நைஜீரியா, செனகல், போன்ற சில ஆபிரிக்க நாடுகளும் இலத்திரனியல் கழிவுகளை மீள் சுழற்சி செய்யும் முக்கியமான நாடுகளாக உள்ளன. மேலும் இலத்திரனியல் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கு மேலைத்தேய நாடுகள் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. உதாரணமாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பான்போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகள் மட்டுமன்றி அபிவிருத்தி அடைந்து வருகின்ற மலேசியா, சவூதி அரேபியா போன்ற நாடுகளும் இலத்திரனியல் கழிவுகளை அகற்றாமல் மீள் சுழற்சிக்காக இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்குப் புதிய வடிவத்தில் திருப்பி அனுப்புகின்றது. மேலும் 2006 ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் நிகழ்ச்சித் திட்டம் மூலம் இலத்திரனியல் கழிவுகள் தொடர்பான மதிப்பீட்டை ஆரம்பித்துள்ளது. இம்மதிப்பீட்டின் பிரகாரம் ஆண்டு தோறும் 20 - 50 மில்லியன் கழிவுகள் உருவாக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையைப் பொறுத்தவரையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் இலத்திரனியல் கழிவுகளை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் கணினி, கையடக்கத் தொலைபேசி முதலியவற்றுக்கான விலைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. இலங்கையில் இலத்திரனியல் கழிவுகளால் ஏற்படும் சூழலியல் அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் பழைய கையடக்கத் தொலைபேசிகளை சேகரிக்கும் திட்டத்தினை சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க வளங்கள் அமைச்சு நடவடிக்கையை எடுத்து செயற்பட்டு வருகிறது. அத்துடன் இலத்திரனியல் கழிவுகளை அழிப்பதால் ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்ப்பதற்கு மத்தியச் சுற்றாடல் அபிவிருத்தி அதிகாரசபை இலத்திரனியல் கழிவுகளைப் பொறுப்பேற்பதற்காகச் சில நிறுவனங்களைப் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே மனிதனுடைய அத்தியாவசியத் தேவைகளிலும், ஆடம்பரத்தேவைகளிலும் இலத்திரனியல் சாதனங்களின் பாவனை தவிர்க்க முடியாதவையாக உள்ளது. இந்தச் சாதனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டின் மூலம் வெளியிடப்படும் கழிவுகளானது சூழலின் ஒட்டுமொத்தமான உயிரின சுவாத்தியப்பாடுகளுக்கு ஒவ்வாத தன்மையினை ஏற்படுத்தி விடுகின்றன. எனவே இலத்திரனியல் சாதனங்களின் பாவனையினை ஓரளவு குறைத்து, கூடுமான வரையில் மீள் சுழற்சிக்கு உட்படுத்தி மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் ஊடாக இதன் தாக்கத்தை பகுதியளவிலேனும் குறைத்துக் கொள்ளலாம்.