மணிமேகலை அறங்களை வலியுறுத்துவது போலவே விலக்க வேண்டிய குற்றங்களையும் வரிசைப்படுத்துகிறது. அவற்றில் குறிக்கத்தக்கன இக்கட்டுரையில் சுட்டப்பெறுகின்றன.
‘‘புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் உலக நோன்பின் உணர்ந்தோய் எங்கோ! குற்றம் கெடுத்தோய்! செற்றம் செறுத்தோய்! முற்ற உணர்ந்த முதல்வா எங்கோ! காமந்கடந்தோய்! ஏமம் ஆயோய்! தீநெறிக்கடும்பகை கடிந்தோய் எங்கோ! ஆயிர வாரத்து ஆழியந்திருந்தடி நாவாயிரம் இலேன் ஏத்துவது எவன்’’ என்ற , போற்றும் மொழிகளில் விலக்க வேண்டிய குற்றங்களும், வீடுபேறும் தொக்கி இருக்கக் காண்கிறோம்.
சக்கரவானக்கோட்டம் உரைத்தகாதையில் சம்பாபதித் தெய்வம் கோதமை என்னும் பெண்ணுக்குச் சொல்லும் உண்மைகள் சிந்திக்கத்தக்கன. கோதைமையின் மகனான அறியாச் சிறுவன் இறந்துபட, அவன்அழ, அப்பொழுது சம்பாபதித் தெய்வம் அவளுக்கு ஆறுதல் கூறுகிறது.
ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால்
செய்வினை மருங்கின் சென்ற பிறப்பு எய்துதல்?
என்கிறது.
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
வினைவழிப்படூஉம் என்பது தெரிந்தனம் ஆகையால்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறுயொரை இகழ்தல் அதனினும் இலமே
என்ற புறநானூற்றுக் கருத்து இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
மணிமேகலையைப் புகார் நகரில் இருந்து மணிபல்லவத் தீவிற்கு மணிமேகலா தெய்வம் தூக்கிப்போய் வைத்துவிட்டு, புகார் நகருக்குத் திரும்பி, சுதமதியைத் துயில் எழுப்பி, அக்காதை (7) யில் உதயகுமாரனுக்கு அறநெறி உரைக்கிறது.
‘‘பொங்குமெல் அமளியில் பொருந்தாது இருந்தோன்
முன்னர்த்தோன்றி மன்னவன் மகனே
கோள்நிலை திரிந்திடின் மாரிவறம் கூறும்
மாரிவறம் கூறின் மன்னுயிர் இல்லை.
மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயிர் என்னும் தகுதிஈன் றாகும்.
தவத்திறம் பூண்டோன் தன்மேல் வைத்த
அவத்திறம் ஒழிக’’
என்று அறிவுரை கூறியது.
மணிபல்லவத் தீவில் புத்த பீடிகைகண்டு தொழுது தன் பழம்பிறப்பு பற்றி அறிகிறாள் மணிமேகலை.
‘‘அரவக் கடல்ஒலி அசோதரம் ஆளும்
இரவி வன்மன் ஒருபெரும் தேவி
அலத்தகச்சீறடி அமுதபதி வயிற்று
இலக்குமி என்னும் பெயர்பெற்றுப்பிறந்தேன்
அத்திபதி என்னும் அரசன் பெருந்தேவி
சித்திரம் ஆளும் சீதரன் திருமகள்
நீலபதி என்னும் நேரிழை வயிற்றில்
காலை ஞாயிற்றுக் கதிர்போல் தோன்றிய
இராகுலன் தனக்குப் புக்கேன்’’
என்கிறாள்.
போன பிறவியில் மணிமேகலை பெயர் இலக்குமி. இவளோடு உடன் பிறந்தவர்கள் தான் தாரை, வீரை இவனது தாய் மாதவியும் தோழி சுதமதியும் ஆவர். இவன் கணவன் இராகுலன்தான் இப்பிறவியில் உதயகுமாரன் இராகுலன் குட்டிவிடம் என்னும் பாம்பு கடிக்க அவன் சாக அவனோடு இலக்குமியும் தீப்பாய்ந்து உயிர்நீத்தாள். இத்தகு பழம்பிறப்புச் செய்திகளை மணிமேகலைக்கு மணிமேகலா தெய்வம் கூறி மூன்று மந்திரங்களை உபதேசித்து மறைந்தது.
இவ்வுலக மக்கள் அறவுரை கேளாமல் துளை தூர்ந்த செவியினவாய் உள்ள இழிநிலையினை மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு உரைக்கிறது.
‘‘உயிர்கள் எல்லாம் உயர்வு பாழாகி
பொருள் வழங்கு செவித்துளை தூர்ந்து, அறிவிழந்து (வறிய)
வறம் தலை உலகத்து அறம்பாடு சிறக்க
சுடர்வழக்கற்றுத் தடுமாறு காலை, ஓர்
இளவள ஞாயிறு தோன்றி தென்ன
நீயோ தோன்றினை நின்அடிபணிந்தேன்’’
என்கிறது.
மணிமேகலைக்கு மணிமேகலா தெய்வம் செய்த மூன்று மந்திர உபதேசங்கள்
1. வேற்று வடிவம் எய்தல்
2. வான்வழிச்செல்லல்
3. பசி அறுத்தல்
‘‘வேற்று உரு எய்தல்,
அந்தரம் திரியவும், ஆக்கும் இவ்அருந்திறல்
மந்திரம் கொள்கென வாய்மையின் ஓதி
மக்கள் யாக்கை உணவின் பிண்டம்
இப்பெருமந்திரம் இரும்பசி அறுக்கும்”
என்று மூன்று மந்திரங்களை மணிமேகலா தெய்வம் உபதேசித்தது. இவை மணிமேகலைக்குப் பெரிய வரங்களாக அமைந்தன. தீவதிலகை என்னும் தெய்வமங்கை தோன்றிக் ‘‘கோமுகிப்பொய்கையில் வைகாசி விசாகம் ஆகிய இன்று ஆபுத்திரனின் அமுதசுரபி தோன்றி நின்கையில் கிடைக்கும் என்று மணிமேகலையிடம் கூறியது.
‘‘ஆங்கு அதில் பெய்த ஆருயிர்மருந்து
வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது
தான் தொலைவில்லாத் தன்மையது ஆகும்’’
( பாத்திரம் பெற்ற காதை)
என்கிறது.
கோமுகியை வலம் வந்து வணங்கிய மணிமேகலை கையில் அமுதசுரபி வந்து அமர்ந்தது. உடனே அவள் புத்தரை வணங்கிப் போற்றுகிறாள்.
‘‘மாரனை வெல்லும் வீர! நின்னடி
தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின்னடி
பிறர்க்கறம் முயலும் பெரியோய் நின்னடி
துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி
எண்பிறக்கொழிய இருந்தோய் நின்னடி
கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின்னடி
தீமொழிக்கு அடைத்த செவியோய் நின்னடி
நகரர் துயர்கெட நடப்போய் நின்னடி
வணங்குதல் அல்லது வாழ்த்துதல் என்நாவிற்கு
அடங்காது என்ற ஆயிழை முன்னர்
போதி நிழல் பொருந்தித் தோன்றும்
நாதன் பாதம் நவை கெட ஏத்தி
தீவதிலகை சேயிழைக்கு உரைக்கும்
குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாண் அணிகளையும், மாண் எழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும்பாவி, அது தீர்த்தோர்
இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராந்’’
என்று மணிமேகலை கூறியதும் தீவதிலகை அவளுக்குக் கூறுகிறாள்.
ஆற்றுநர்க்கு அளிப்போர் அளவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே.
உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகிக்
கயக்கறு நல்லறம் கண்டனை’’ என்றலும்
மணிமேகலை மகிழ்ந்து அமுதசுரபியுடன் புகார்
நகரம் வான்வழி மீண்டனள். தாயரோடு அறவண அடிகளைத்
தொழுதனள். அறவண அடிகள் நல்லறம் கூறினார்
‘‘ஆருயிர் மருந்தாம் அமுதசுரபி எனும்
மாபெரும் பாத்திரம் மடக்கொடி பெற்றனை
மக்கள் தேவர் என இருசார்க்கும்
ஒத்த முடிவின் ஓர் அறம் மஉரைக்கேன்
பசிப்பிணி தீர்த்தல் என்றே தஅவரும்
தவப்பெரு நல்லறம் சாற்றினர் ஆதலின்
மடித்த தீக்கொளியமன் உயிர்ப் பசிகெட
எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தான் என்’’
ஆபுத்திரன் திறம் அறிவித்த காதையில் ஆபுத்திரன் வரலாறு கூறப்பெறுகிறது. வேள்விக் களத்தில் பசுக்கொலை செய்யப்படும் நிலையில் ஆபுத்திரன் நள்ளிரவில் அப்பசுவை விடுத்துச் செல்கிறான். அப்பொழுது பசுக்கொலை எவ்வளவு பெரிய குற்றம். அது விலக்கப்பட வேண்டியதல்லவா என்று வேதியர்க்கு அறிவிக்கிறான்.
‘‘நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்
விடுநில மருங்கின் படுபுல் ஆர்ந்து
நெடுநில மருங்கின் மக்கட்கெல்லாம்
பிறந்தநாள் தொட்டுச்சிறந்த தன் நீம்பால்
அறந்தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை?
ஆன்மகன் அலசன், மான்மகன் சிருங்கி
புலிமகன் விரிஞ்சி, புரையோர் போற்றும்
நரிமகன் அல்லனோ கேசகம்பளன்?
ஈங்கிவர் நும் குலத்து இருடிகணங்கள் என்று
ஓங்குயர் பெருஞ்சிறப்பு உரைத்தலும் உண்டார்
ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ?
நான்மறை மாக்கள் நன்னூல் அகத்து? என
வயணங்கோடு என்ற ஊரில் வாழ்ந்து அந்தணர்களால் விரட்டி அடிக்கப்பெற்ற ஆபுத்திரன் மதுரை வந்தான். நாமகள் கோவில் வாயிலில் இருக்கும் பீடமுள்ள அம்பலத்தில் தங்கினான். பிச்சைப் பாத்திரத்தில் பிச்சை எடுத்து, பலவீன மக்களை உண்பித்து, ஓட்டைத் தலைக்கு வைத்து தூங்கினான்.
‘‘காணார் , கேளார், கால்முடப்பட்டோர்
பேணுநர் இல்லோர் பிணிநடுக்குற்றோர்
யாவரும் வருக என்றிசைந்து உடன் ஊட்டி
உண்டொழி மிச்சில் உண்டு, ஓடுதலை மடுத்து
கண்படை கொள்ளும் காவலன்தான் என்’’
ஓர் இரவு பசியென வந்த பலர்க்கு உணவளிக்க ஒன்றும் இல்லாததால் வருந்திய ஆபுத்திரன் முன் சிந்தாதேவி தோன்றி ஓர் அமுதசுரபி வழங்கி அதன் திறம் உரைத்தாள்
‘‘ஏடா! அழியல். எழுந்து இது கொள்ளாய்
நாடு வறங் கூறினும் இவ்வூடுவறங்கூறாது
வாங்குநர் கையகம் வருந்துதல் அல்லது
தான் தொலைவில்லாத் தகைமையது ஆகும்’’
ஆபுத்திரன் அமுதசுரபியால் உலகோர் பசிப்பிணி
நீக்கி வாழ்ந்தான். ஒருநாள் அவன்முன்
தேவேந்திரன் தோன்றி ‘‘நீ செய்த நல்லறல்
பயன்பெறுக, உனக்க என்ன வேண்டும்?
என்று கேட்டான்.
அதற்கு ஆபுத்திரன் கிண்டலாகக் கூறுகிறான்.
‘‘ஈண்டுச் செய்வினை ஆண்டு நுகர்ந்திருத்தல்
காண்தரு சிறப்பின் நும் கடவுளர் அல்லது
அறம்செய் மாக்கள். புறம்காத்து ஓம்புநர்
நற்றவம் செய்வோர், பற்றறமுயல்வோர்
யாவரும் இல்லாத் தேவர்நன்னாட்டுக்கு
இறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே!
வருந்தி வந்தோர் அரும்பசி களைந்து அவர்
திருந்து முகம் காட்டும் என் தெய்வக் கடிகை!
உணவுகொல்லோ? உடுப்பன கொல்லோ?
பெண்டிர் கொல்லோ? பேணுநர் கொல்லோ?
யாவை ஈங்கு அளிப்பன தேவர்கோன் என்றலும்
தேவேந்திரன் பொறாமைப்பட்டான். ஆபுத்திரனைத் தண்டிக்கக் கருதி மழைவளம் ஈந்தான். பன்னீராண்டு மழையின்றிக் கிடந்த பாண்டிநாடு பசியும் பிணியும் நீங்கி வசியும் வளனும் சுரந்தது. ஆகவே ஆபுத்திரனுக்கு அவனது அமுதசுரபிக்கும் வேலையின்றிப் போயிற்று. அன்னம் உண்போர் ஒலிகேட்ட அம்பலத்தில் அயோக்கியர் கூடி எழுப்பிய ஒலிகேட்டது.
(பாத்திரமரபு காதை)
‘‘ஆருயிர் ஓம்புநன் அம்பலப் பீடிகை
ஊண்ஒலி அரவம் ஒடுங்கியதாகி
விடரும் தூர்த்தரும் விட்டேற்றாளரும்
நடவை மாக்களும் நகையொடுவைகி
வட்டும் சூதும் வம்பக்கோட்டியும்
முட்டாவாழ்க்கை முறைமையாதாக’’
சாவக நாட்டில் பஞ்சம் இருப்பதாக அறிந்த ஆபுத்திரன் ஒரு கப்பலில் சென்ற பொழுது மணிபல்லவத் தீவில் தனித்துவிடப்பட்டான். பிறருக்குப் பயன்படாத பாத்திரத்தைச் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்வது குற்றம் என்று ஆபுத்திரன் கருதினான்.
மன்உயிர் ஓம்பும் இம்மாபெரும் பாத்திரம்
என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன்
தவநீர் மருங்கின் தனித்துயர் உடந்தேன்
சுமந்து என் பாததிரம்? என்றனன் தொழுது
கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சியின்
ஓர்யாண்டு ஒருநாள் தேமான்றுஎன விடுவோன்
அருள் அறம் பூண்டு ஆங்கு ஆருயிர் ஓம்புநர்
ஊர் எனில் அவர்கைப் புகுவாய் என்று ஆங்கு
உண்ணாநோன் போடு உயர்பதிப்பெயர்ப்புழி’’
உயிர்துறந்த ஆபுத்திரன் சாவகநாட்டு
மன்னன் ஆன பூமிச்சந்திரனது பசு
வயிற்றில் மனித மகனாகப்பிறந்தான்.
ஆபுத்திரனது அமுதசுரபி மணிமேகலைக்கு வந்தது. முதலில் கற்புக்கரசி ஆதிரையிடம் முதல் பிச்சை பெறுமாறு காயசண்டிகை கூற,
‘‘வான்தகு கற்பின் மனை உறைமகளிரின்
தான்தனி ஓங்கிய தகைமையார் அன்றோ?
ஆதிரை நல்லாள் . அவள் மனை இம்மனை
நீபுகல் வேண்டும் நேரிழை என்றனள்.
ஆதிரை கணவன் சாதுவன் தீநெறி வாழ்ந்து, பொருள் தேடக் கப்பலில் சென்று, கலம் உடைந்து, நாகர்களை அடைந்தான். நாகர் தலைவன்
‘‘கள் அடுகுழிசியும் கழிமுடை நாற்றமும்
வெள் என்பு உணங்கலும் விரவிய மஇரக்கையில்
எண்குதன் பிணவோடு இருந்தது போல
பெண்டுடன் இருந்த பெற்றிநோக்கி
பாடையின் பிணித்து, அவன்பான்மையன் ஆகி
அவர்களை நல்வழிப்படுத்தினான். நாகர் தலைவன்,
(காதை16)
‘‘நம்பிக்கு இளையன் ஓர் நங்கையைக்கொடுத்து
வெங்களும் ஊனும் வேண்டுவ கொடும் என
அவ்வுரை கேட்ட சாதுவன் அயர்ந்து
வெவ்வுரை கேட்டேன் வேண்டேன் என்றலும்
பெண்டிரும் உண்டியும் இன்றெனின் மாக்கட்கு
உண்டோ ஞாலத்து? உறுபயன் உண்டெனின்
காண்ருவம் யாங்களும் காட்டுவாயாக என
மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும்விழித்தலும் போன்றது உண்மையின்
நல்அறம் செய்வோர் நல்உலகு அடைதலும்
அல்அறம் செய்வோர் அருநரகு அடைதலும்
உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்
என்று அறம் கூறிய சாதுவன்
அவர்கள் இனி வாழ்நெறி விளம்பினான்.
உடைகல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்குறின்
அடுதொழில் ஒழிந்து எவ்வுயிர் மாட்டும்
தீத்திவும் ஒழிக’’ எனச்சிறுமகன் உரைப்போன்
சாதுவான் பூம்புகார் திரும்பி ஆதிரையோடு வாழ்ந்து நல்லறம் புரிந்தான். மணிமேகலை ஆதிரையிடம் முதல் பிச்சை கேட்டாள். ஆதிரை அப்பொழுது ‘‘பார் அகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்தென்’’
புகார் உலகஅறவியில் அமுதசுரபியுடன் மணிமேகலை உலவக்கண்ட உதயகுமாரன் ‘‘ஏன் இப்படி ஆனாய்’’ எனக்கேட்டன். அதற்கு அவள்‘‘இவன் நம் முற்பிறவிக் கணவன் ஆகையால் அறநெறிப்படுத்தலாம்’’ என எண்ணி அறநெறி கூறுகிறாள்.
‘‘கேட்டது மொழிவேன் . கேள்வியாளரின்
கோட்ட செவியை நீ ஆகுனவ ஆம்எனின்
பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும்
இறத்தலும் உடையது இடும்மைக் கொள்கலம்
மக்கள் யாக்கை இது என உணர்ந்து
மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்
மண்டு அமர்முறுக்கும் களிறு அனையார்க்கு
பெண்டிர் கூறும் பேர்அறிவு உண்டோ!
கேட்டனை ஆயின் வேட்டது செய்க.
சோழமன்னன் மூலம் மணிமேகலை சிறைக்கோட்டத்தை அறக்கோட்டம் ஆக்கினாள் காஞ்சனன் என்னும் கந்தருவனால் உதயகுமாரன் வாளால் கொல்லப்படுகிறான். மணிமேகலை வருந்துகிறாள் கந்திற்பாவை(காதை21) வருவது உரைக்கிறது.
‘‘உன் தாயரும் அறவண அடிகளும் காஞ்சியில் உளர். அங்கு நீ சென்று அறம்புரிக. அறவண அடிகள் கூறும் அறவுரை கேட்க உனக்கு அவர் மெய்பொருள் உணர்த்து வார் தவம் தர்மம் ஆகியவற்றின் இயல்பினை விளக்குவார் ஒன்றை ஒன்று சார்ந்து வருதலினால் தோன்றும் நிதானங்களான பேதமை, செய்கை, உணர்வு, அருவுரு வாயில், ஊறு நுகர்வு, வேட்கை , பற்று பவம், தோற்றம், வினைப்பயன் ஆகிய பன்னிரண்டுநிதானங்களையும் விளக்குவார். அவர் கூறிய படி நல்லறம் செய்து காஞ்சியில் வாழ்ந்து மறைவாய். பிறகு பலபிறவி ஆணாக உத்தர மகதநாட்டில் பிறந்து, புத்தருக்கு தலைமாணாக்கனாய் ஆகி, முடிவில் பற்றறுத்து முக்தி அடைவாய்’’ என்று முனிவர் ஒருவர் மக்கள் நீக்க வேண்டிய குற்றங்கள் ஐந்து எனக் கூறுகிறார்
‘‘முடிபொருள் உணர்ந்தோர் முதுநீர்
உலகில் கடியப்பட்டன ஐந்துள. அவற்றில்
கள்ளும் பொய்யும் களவும் கொலையும்
தள்ளாது ஆகும் காமம் தம்பால்
ஆங்கது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என
நீங்கினர் அன்றே நிறைதவ மாக்கள்
நிங்கார் அன்றே நீன் நிலவேந்தே!
தாங்கா நரகம் தன்னிடை உரப்போர்’’
என்கிறார். சோழ மன்னன் சொல்கிறான். . .
‘‘மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்றெனின் இல்லை’’
என்கிறான். ஆகவே மன்னன் அறநெறி ஆட்சியும் காவலும் செய்யாவிடில் அது குற்றம் என்கிறான்.
சோழ மன்னன் கிள்ளி வளவன் வெட்டப்பட்ட தன் மகன் உதயகுமாரனின் பிணத்தை அப்புறப்படுத்தச் சொன்னான். மணிமேகலையைச் சிறையிடச் சொன்னான். அரசமாதேவி மணிமேகலைக்குத் துயர் இழைத்தாள். மணிமேகலை அவளுக்கு அறவுரை கூறித் திருத்தினாள் (காதை 23)
‘‘கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை
தலைமையாகக் கொண்ட நின் தலைமைஇல் வாழ்க்கை
புலைமை என்று அஞ்சிப் போந்த பூங்கொடி
நின்னொரு போந்து நின்மனைப் புகுதாள்.
என்னோடு இருக்கும்’’
என்ற மணிமேகலையின் பாட்டி சித்திராபதிக்கு இராசமாதேவி சேர்ந்தாள். எல்லோரும் அறவண அடிகளிடம் சென்றனர் . அவர் அறவுரை கூறினார். (காதை 24) ஆதிபுத்திரன் நாடு அடைந்த காதை)
‘‘தேவி கேளாய் செய்தவ யாக்கையின்
மேவினேன் ஆயினும் வீழ்கதிர்போன்றேன்
பிறந்தோர் மூத்தோர் , பிணி நோய் உற்றார்
இறந்தார் என்கை இயல்பே, இது கேள்
பேதமை செய்கை, உணர்வே அருஉரு
வாயில் ஊறே, நுகர்வே, வேட்கை
பற்றே , பவமே, தோற்றம் வினைப்பயன்
இற்று என வருத்த இயல்பு ஈர் ஆறும்
பிறந்தோர் அறியின் பெரும்பேறு அறிகுவர்
பேதைமை என்பது யாது என வினவின்
ஓதிய இவற்றை உணராது மயங்கி இயற்படு பொருளால
கண்டன மறந்து முயற்கோடு உண்டு எனக் கேட்டது தெளிதல்.
மிக முக்கியமான பகுதி
உலகம் மூன்றிலும் உயிர்ஆம் உலகம்
அலகில் பல்லுயிர் அறுவகைத் தாரும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே
நல்வினை தீவினை என்று இரவகையான்
சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி
வினைப்பயன் விளையும் காலை, உயிர்கட்கு
மனப்பேர் இன்பமும் கவலையும் காட்டும்
தீவினை என்பது யாதென வினவின்
ஆய்தொடி நல்லாய் ஆக்கு- அது கேளாய்
கொலையே களவே காமத்தீ விழைவு
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்
சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்
வெம்பகல், வெகுளல், பொல்லாக்காட்சி
(காமம்) (மயக்கம்)என்று
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப்
பத்து வகையான் பயன்தெரி புலவர்
இத்திறம் பட்ரார் படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகி,
கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர்
நல்வினை என்பது யாதென வினவின்
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி
சீலம் தாங்கி, தானம் தலைநின்று
மேல் என வகுத்த ஒரு மூன்றுதிறத்து
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்
என்றார் அறவண அடிகள்
மணிமேகலை கூறுகிறாள். (காதை-25)
‘‘மாற்றரும் கூற்றம் வருவதன் முன்னம் போற்றுமின் அறம்’’ என்கிறாள். அதாவது விலங்கும் நரகரும் பேய்களும் அக்கும் கலங்கு அஞ்சத் தீவினை கடிமின், கடிந்தால் தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர் ஆகலின் நல்வினை அயராது ஓம்புமின் என்கிறாள்.
‘‘உலகு உயக் கோடற்கு ஒருவன் தோன்றும் என்கிறாள். அந்த ஒருவன் தான் புத்தபிரான், காவிரிப்பூம்பட்டினம் சுனாமி எனப்படும் ஆழில் பேரலையால் அழிந்த செய்தி மணிமேகலையில் கூறப்படுகிறது.
மணிபல்லவத்தில் புண்ணியராசனுக்கு (முற்பிறவி ஆபுத்திரன்) மணிமேகலை கூறுகிறாள்,
‘‘அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள், மன்னுயிர்க்கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்’’ என்றாள். பிறகு மணிமேகலை வஞ்சி நகர் சென்றாள்.
வஞ்சிமாநகரில் கண்ணகி கோவலன் படிமங்களை வணங்கினாள். கண்ணகித் தெய்வம் மணிமேகலைக்கு அவளது பழம் பிறப்பு, வினைப்பயன், பின்வருவன எல்லாம் உரைத்தாள். மகதநாட்டில் கபில வஸ்துநகருல் புத்தபிரான் தோன்றி அருள்புரிவார் என்றாள். செங்குட்டுவனின் சிறப்பினையும் செப்பினாள்.
(காதை 26 காஞ்சி மாநகர் புக்க காதை)
சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையில் வஞ்சிமாநகரில் சமயக்கணக்கராகிய அளவைவாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசிவகவாதி, நிகண்ட வாதி, சாங்கிய வாதி, வைசேடிகவாதி , பூதவாதி ஆகியோரிடம் மணிமேகலை கேட்டறிந்த சமய உண்மைப் பொருள்கள் உரைக்கப்படுகின்றன.
அதில் ஒரு கருத்து (ஆசீவகம்) வீடு பேற்றை அடைய விரும்பும் மக்கள் முறையே கரும்பிறப்பு , கருநீலப்பிறப்பு, பசும்பிறப்பு, செம்மைப் பிறப்பு, பொன்மைப்பிறப்பு, வெண்மைப் பிறப்பு என்ற இவ் ஆறுவகையான பிறப்புக்களிலும் பிறந்து முடிவில் வெண்மைப் பிறப்பில் வீடுபேறு எய்துவர் . வீடுபெற விழைவோர் துன்பத்தை வேண்டாதோர்.
மணிமேகலை மாசாத்துவானை வஞ்சிநகரில் கண்டு வணங்கினாள். அவன் மூலம் பல செய்திகள் அறிந்தாள் (28. கச்சிமாநகர் புக்கக் காதை) மணிமேகலை பிறகு காஞ்சி செல்கிறாள். அங்கு அறவண அடிகளைச் சந்திக்கிறாள். அவளுக்கு மெய்ப்பொருளை அறவண அடிகள் விளக்குகிறார். (காதை 29) தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை) அதில் ஒரு கருத்து. அறவண அடிகள் கூற்று . ஆதிபுத்தன் வகுத்த அளவைகள் இரண்டே அவை பழுதற்ற காட்சியும், பழுதற்ற கருத்தும் ஆகும்.
கடைசி முப்பதாவது காதை- பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதையில் பௌத்தமதச் சிறப்பு பேசப்படுகிறது.
புத்தம், தன்மம், சங்கம் என்னும்
முத்திற மணியை மும்மையின் வணங்க
சரணா கதியாய் சரண் சென்று அடைந்தபின்
போதிமூலம் பொருந்தி இரந்து
மாரனை வென்று, வீரன் ஆகி
குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும்
(காமம் , வெகுளி, மயக்கம் )
வாமன் வாய்மை ஏமக்கட்டுரை
விலக்க வேண்டிய குற்றங்கள் பற்றி அறவண அடிகள் மணிமேகலைக்கு கூறுகிறார்.
ஆய்தொடி நல்லாய்! ஆங்கது கேளாய்
கொலையே களவே காமத்தீவிழைவு
உலையா உடம்பில் தோற்றுவ மூன்றும்
பொய்யே, குறளை , கடுஞ்சொல், பயனில் (கோள்)
சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்
வெப்பகல், வெகுளல், பொல்லாக்காட்சி என்று
(வௌவல்)
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப்
பத்து வகையால் பயன்தெரி புலவர்
இத்திறம் படரார், படர்குவர் அயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகி
கலங்கிய உள்ளக் கவலையின் தோன்றவர்
நல்வினை என்பது யாதென வினவின்
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி
சீலம் தாங்கி, தானம் தலைநின்று
மேல் என வருத்த ஒரு மூன்று திறத்து
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி
மேவிய மகிழ்ச்சி வினைப் பயன் உண்குவர்
அறவண அடிகள் நிறைவாகக் கூறும் அறவுரை
பேதைமை சார்வா செய்கை ஆகும்
செய்கை சார்வா உணர்ச்சி ஆகும்
உணர்ச்சி சார்வா அருஉரு அகம்
அருஉருச் சார்வா வாயில் ஆகும்.
வாயில் சார்வா ஊறு ஆகுமே
ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும்
வேட்கை சார்ந்து பற்று ஆகுமே
பற்றின் தோன்றம் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரணமாக
வருமே ஏனை வழி முறைத்தோற்றம்
தோற்றம் சார்பின் மூப்பு, பிணி, சாக்காடு
அவலம், அரற்று, கவலை , கையாறு எனத்
தவல்இல் துன்பம் தலைவரும் என்ப
ஊழின் மண்டிலமாச் சூழும் இந்நுகர்ச்சி
யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம்
காமம் வெகுளி மயக்கம் காரணம்
அநித்தம், மதுக்கம், அநான்மா, அசுசி என
தனித்துப் பார்த்து பற்று அறுத்திடுதல்
மைத்திரி , கருணா, முதிதை என்று அறிந்த
திருந்து நல் உணர்வான் செற்றம் அற்றிடுக
சுருதி, சிந்தனா, பாவனா, தரிசனை
(அறிவுரை கேட்டல்) (கேட்டபடி நடத்தல்) (தெளிதல்)
சுருதி உய்த்து மயக்கம் கடிக!
இந்நால் வகையான் மனத்திருள் நீங்கு என்ற
முன்பின் மலையா மங்கல மொழியின்
ஞானதீபம் நன்கனம் காட்ட
தவத்திறம் பூண்டு தருமம் கேட்டு
பவத்திறம் அறுக என பாவை நோற்றனள் என்’’
என்ற நிலையில் மணிமேகலைக் காப்பியத்தில் இச்செய்திகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு மணிமேகலையில் விலக்கப்பட வேண்டியனவும் கொள்ளப்பட வேண்டியனவும் காட்டப் பெற்றுள்ளன.