மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும்
39. மணிமேகலை காப்பிய மரபும் சமய மரபும்
ம. கார்மேகம்
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று மணிமேகலை; சிலப்பதிகாரத்தோடு தொடர்ச்சியாக இயங்குகின்ற காப்பியம் இது. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரால் எழுதப் பெற்றது என்பதை அனைவரும் அறிவர். இந்தக் காப்பியம் பின்பற்றியுள்ள காப்பிய மரபும் சமய மரபும் குறித்துக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தண்டியலங்காரம் பெருங்காப்பிய நிலை பற்றிப் பேசும் போது,
"வாழ்த்து, வணக்கம, வருபொருள் இவற்றின் ஒன்று
ஏற்புடைத் தாகிமுன் வரவு இயன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்
தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்தாய்
மலைகடல் நாடு வளநகர் பருவம்
இருசுடர்த் தோற்றம் என்று இனையன புனைந்து
நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல்
பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல்
தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல்
புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தல் என்று
இன்னன புனைந்த நன்னடைத் தாகி
மந்திரம் தூது செலவு இகல் வென்றி
சந்தியில் தொடர்ந்து சருக்கம் இலம்பகம்
பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி
நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்
கற்றோர் புனையும் பெற்றிய தென்ப”
(தண்டி நூற்பா: 8)
என்று கூறுகிறது. அத்துடன்,
“கூறிய உறுப்பில் சில குறைந்து இயலினும்
வேறுபாடு இன்றென விளம்பினர் புலவர்”
(தண்டி- நூல்-9)
“அறம் முதல் நான்கினும் குறைபா டுடையது
காப்பியம் என்று கருதப் படுமே”
(தண்டி-நூல்-10)
என்றும் தண்டியலங்காரம் இலக்கணம் வகுக்கிறது.
முதலில் கூறிய நூற்பாவில் உள்ள அனைத்துச் செய்திகளையும் உள்ளடக்கியதாக மணிமேகலையைக் கருதுவதற்கு வாய்ப்பில்லை. சில குறைந்து காணப்படுவதாகக் கொள்ளலாம். அந்த வகையில் மணிமேகலையின் காப்பிய மரபைக் காண்பது பொருத்தமாக இருக்கும்.
சிலப்பதிகாரத்தைப் போல மூன்று பெருங் காண்டங்களை மணிமேகலை ஆசிரியர் அமைத்துக் கொள்ளவில்லை. முப்பது காதைகள் அமைத்துள்ளார். தண்டியலங்காரம் கூறியது போல் சருக்கம்; இலம்பகம் என்ற பெயரில் இல்லாவிட்டாலும் காதை என்ற அமைப்பு உள்ளது. சருக்கம், இலம்பகம் என்பவை பிற்காலத் தண்டியில் அமைந்தவை. எனவே தண்டியலங்காரத்தைப் பின்பற்றி மணிமேகலை எழுதப் பெறவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. எனினும் காப்பிய மரபு மணிமேகலையில் அமைந்துள்ளதைக் காண வேண்டிய கட்டாயமும் உள்ளது.
வாழ்த்துதல்
விழாவறை காதையில் மன்னனை வாழ்த்துகிற பகுதி அமைந்துள்ளது. கடவுள் வாழ்த்து, இயற்கை வாழ்த்து என்று அமைத்துக் கொள்ளாமல் நேரடியாகக் காதைக்குள் நுழையும் போது மன்னனை வாழ்த்துகிறார் சீத்தலைச் சாத்தனார். ஊரை வாழ்த்தி மன்னனை வாழ்த்துகிறார்.
“முரசு கடிப்பிகூஉம் முதுகுடிப் பிறந்தோர்
திரு விழை மூதூர் வாழ் கென் றேத்தி
வான மும்மாரி பொழிக மன்னவன்
கோள்நிலை திரியாக் கோலோ னாகுக (விழாவறை 31-34)
என்று வாழ்த்துகிறார்.
ஆயிரங்கண்ணோனாகிய இந்திரனுக்கு நடத்தப் பெறுகின்ற விழா என்பதைக் கூறி அவனுக்கு நடத்தப் பெறும் விழா முறையாக இல்லையெனில் பூதங்கள் துன்பம் செய்யும் என்பதால் எல்லாத் தெய்வங்களையும் வணங்கச் செய்கிறார்.
“நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலாப்
பதிவாழ் சதுக்கத்துகத் தெய்வம் ஈறாக
வேறு வேறு சிறப்பின்”(விழாவறை 54-56)
என்பது மணிமேகலைத் தொடர்
நற்பொருள்
அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் பயக்கக் கூடியதாகக் காப்பியம் இருக்க வேண்டும். அந்த வகையில் மணிமேகலை அறத்தைப் பற்றி மிகுதியும் பேசுகிறது. அறம் செய்வதற்கு வேண்டிய பொருள் பற்றியும் பொருளைப் பெற்ற வழி பற்றியும் அதனால் ஏற்படும் இன்பம், வீடு பேறு பற்றியும் காப்பிய மரபிற்கேற்றவாறு சொல்லப்படுகின்றன. ஆனால் சாதாரண உலகியல் இன்ப வாழ்க்கை என்று இல்லாமல் அறத்தின் வழிப்பட்டதாகவே இக்காப்பியம் அமைந்துள்ளது.
“மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே”
என்ற நிலையில் மணிமேகலை அமுதசுரபி ஏந்தியது அறத்தின்பாற்பட்ட வாழ்க்கைப் பயனைக் கூறுவது ஆகும்.
“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்லென” (மணிபல்லவம் 228-231)
என்று மணிமேகலா தெய்வம் கூறுவதாக அறச்செய்தி அமைகிறது.
தன்னிகரில்லாத் தலைவி
காப்பியத்திற்குத் தலைவன் வேண்டும்; அதுவும் தன்னிகரில்லாத் தலைவன் வேண்டும்; சீத்தலைச் சாத்தனார் தன்னிகரில்லாத் தலைவியைக் கொண்டு இக்காப்பியத்தைப் படைத்துள்ளார். சிலப்பதிகாரத்தில் கண்ணகி தன்னிகரில்லாத் தலைவியாகப் படைக்கப் பெற்றது போல் மணிமேகலைக் காப்பியத்திலும் மணிமேகலை தன்னிகரில்லாத் தலைவியாகப் படைக்கப் பெறுகிறாள்.
“மாபெரும் பத்தினி; மகள்மணி மேகலை
தீத்தொழில் படாஅள்”
என்று கூறும் ஒரு தொடரிலேயே கண்ணகியின் மகளாகிய மணிமேகலை தீத்தொழில் எனக் கருதப் பெற்ற கணிகையர் வாழ்க்கையை விட்டுத் தவம் மேற்கொண்ட செய்தி கூறப் பெறுகிறது.
மாதவியின் மகள் மணிமேகலை என்றாலும் கண்ணகியின் மகள் என்று காட்டுவதிலே புலவருக்கு அவ்வளவு ஆர்வம் உள்ளது எனக் கொள்ளலாம். மலர் பறிக்கச் செல்லக் கூறிய மாதவியிடத்தில் சுதமதி கூற்றில் மணிமேகலையின் அழகை வருணிக்கிறார் சாத்தனார்.
“ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்”
(மலர்வனம் 24-25)
என்று கூறுவதோடு நின்று விடாமல்
“மாமலர் கொய்ய மலர்வனம் தான்புகின்
நல்லின அன்னம் நாணாது ஆங்குள
வல்லுந கொல்லோ மடந்தை நன்னடை
மாமயில் ஆங்குள வந்து முன் நிற்பன
சாயல்கற் பனசொலோ தையல் தன்னுடன்
பைங்கிளி தாமுள பாவைதன் கிளவிக்கு
எஞ்சல கொல்லோ இசையுந கொல்லோ”
என்று மணிமேகலையின் நடைக்கு அன்னம் நாணுவதாகவும் மயில் சாயல் கற்கும் எனவும் மணிமேகலை முன் கிளியின் பேச்சு இனிமையாகுமா என்றெல்லாம் ஒரு தலைவியைப் பாராட்டுவதால் தன்னிகரில்லாத் தலைவியைப் படைத்துள்ளார் சாத்தனார் எனலாம். தலைவியின் அழகைக் காப்பியங்கள் பல கணக்கின்றி வருணித்தாலும் சீத்தலைச் சாத்தனார் ஒரு சில தொடர்களில் மட்டும் தான் மணிமேகலையின் அழகைப் பேசுகிறார். பிற இடங்களில் இந்தத் தலைவி செயற்கரிய செயல்களைச் செய்பவளாகக் காட்டுகிற பகுதியைக் காணலாம்.
உதயகுமரன் என்ற இளவரசனிடமிருந்து மணிமேகலையைக் குலதெய்வமாகிய மணிமேகலை காப்பது, புத்த பீடிகை கண்டு பழம் பிறப்பு உணர்வது, அமுத சுரபியைப் பெறுவது, அதனால் அறம் செய்வது, அறம் செய்து உயிர்களின் பசித் துன்பத்தைப் போக்குவது அனைத்துமே மணிமேகலை என்ற தலைவியின் சிறப்பைத் தாங்கிப் பிடிப்பவையாகச் சாத்தனார் படைக்கிறார். ஒரு காப்பியம் என்பது நன்னெறியைப் புகட்டுவதுடன் அந்நெறியைக் கடைப்பிடித்து எவ்வாறு காப்பிய மாந்தர்கள் உயர்ந்தனர் என்பதையும் குறிப்பாகக் காட்டிச் செல்லவேண்டும் அந்த நிலையில் காப்பியத் தலைவி மணிமேகலை காப்பியம் முழுவதும் விரவிக் காணப் பெறுகிறாள்.
பூம்பொழில் நுகர்தல், புனல் விளையாடல் என்பவையெல்லாம் தலைவன் தலைவியர்க்கு உரியவை; இல்லற வாழ்க்கை இன்பத்தை நுகர்வோர்க்குப் பொருந்தும் செய்திகளைச் சாத்தனார் கூறாமல் அறவாழ்க்கைச் செய்திகளைக் கூறுவதால் மலை,கடல், நாடு, வளநகர், பருவம் ஆகியன பற்றிப் புலவர் மிகுதியும் கருதவில்லை என்றே கொள்ளலாம். இருப்பினும் நாட்டு மன்னவனைப் பற்றிப் பேசுகிறார்.
”மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல்இன் றெனின் இன்றால்”
(சிறைசெய்காதை 208,209)
கடல் பற்றியதாக ஓரிடத்தில் சங்கு உழுது, முத்து உழுது, மோது நீர் சூழ்ந்த நீலமாக் கடல் என்ற குறிப்பையும் காட்டுகிறார். ஆனாலும் கூடப் பொழில் வருணனையும் இடம் பெறச் செய்கிறார்.
பல்வேறு வகை மலர்வனங்களைப் பற்றிப் பேசும் புலவர்,
“இருள்வளைப் புண்ட மருள்படு பூம்பொழில்
குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட
மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய
வெயில் நுழைபு அறியாக் குயில்நுழை பொதும்பர்”
என்று பொழில் பற்றி வருணிப்பதைக் காண முடிகிறது.
இருசுடர்த் தோற்றம்
“உலகு துயில் எழுப்பினன் மலர்கதி ரோன்”
(கந்திற்பாவை -190)
“காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப”
(மணிபல்லவம்-18)
என்று கதிரவன் பற்றிப் பேசுபவர்,
புத்த ஞாயிறு தோன்றும் காலைத்
திங்களும் ஞாயிறும் தீங்குறா விளங்க”
என்று திங்களையும் ஞாயிற்றையும் ஒரே வழிச் சுட்டிச் சொல்கிறார்.
ஆக எடுத்துக் கொண்ட அறம் பற்றிய செய்தியை விளக்குவதற்குத் தன்னிகரில்லாத் தலைவியைப் படைத்தவர் காப்பியத்திற்கு எநn;தந்தப் பகுதிகள் தேவையோ அவற்றைப் பற்றி மட்டுமே சொல்கிறார் எனலாம். கிளைக்கதைகள் பலவற்றை இடம்பெறச் செய்கின்ற மரபு வட நூல்களைப் பின்பற்றியதாகக் கொள்ளலாம். மொத்தத்தில் இளமையும் நில்லாது, யாக்கையும் நில்லாது மிக்க அறமே விமுத்துணையாகும் என்ற கொள்கையை அவர் காப்பிய நோக்கமாக, மரபாக வகுத்துக் கொண்டார் எனலாம்.
சமய மரபு
எல்லாச் சமயங்களிலும் புத்த சமயம் முதன்மையானது என்பதைச் சுட்டுகின்ற காப்பியம் மணிமேகலை எனலாம். அதே சமயம் குலதெய்வம் காக்கும் என்ற கோட்பாடும் உணர்த்தப்படுகிறது. குலதெய்வ வழிபாடும் வற்புறுத்தப்படுகிறது.
கடவுளைப் பிறவிப் பிணி மருத்துவன் என்று மணிமேகலை கூறுகிறது. பிறவிப் பிணி நீங்க அறம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறது. வினைப்பயன் தான் பிறவிக்குக் காரணம் என்று பேசுகிறது.
“வினையின் வந்தது வினைக்கு விளைவாயது”
(பளிக்கறை 113)
தெய்வமோ பேயோ யாரையும் வருத்துவதில்லை உயிரை எடுத்துக்கொள்வதில்லை. அனைத்தும் வினையின் பயனே என்ற கோட்பாட்டை மணிமேகலை உணர்த்துகிறது.
“அணங்கும் பேயும் ஆருயிர் உண்ணா
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது”
(சக்கரவாள-150-152)
என்று மணிமேகலை பேசுகிறது.
சக்கரவாளக் கோட்டம், பெருங்கோட்டம், நெடுநிலைக் கோட்டம் என்று பல கோயில்கள் இருந்திருக்கின்றன என்ற குறிப்பையும் காண முடிகிறது. நிலையாமை பற்றிய சிந்தனையும் சுட்டப் பெறுகிறது. ஆசையை அறுப்பது ஒன்றுதான் பிறவாமைக்கு வழி, ஆசையை அறுப்பதற்கு வழி அறம் செய்வதுதான் என்பது பேசப் பெறுகிறது.
“பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக என்று அருளி”
(ஊரலர் உரைத்த 64-67)
என்று உரவோன் அருளியதாக மாதவி கூற்றில் வைத்துப் பேசுகிறார் புலவர்.
மணிமேகலை வஞ்சி மாநகர் புக்க போது அந்தந்தச் சமயத்தவர் கூறும் பொருள்களைக் கேட்டு அதன் பின்னர், பெரியோன் பிடக நெறி கடவாய் என்று அறவண அடிகள் கூறியதும் மணிமேகலை வெவ்வேறு சமயத்தவரின் கொள்கைகளைக் கேட்டு அறிகிறாள் என்பதைப் பார்க்கிறோம்.
அளவைவாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி ஆகியோரிடத்தில் அவரவர் சமயங்கள் பற்றிக் கேட்டறிகிறாள் மணிமேகலை.
“வேற்றுருக் கொண்டு வெவ்வே றுரைக்கும்
நூற்றுறைச் சமய நுண்பொருள் கேட்டே
அவ்வுரு வென்ன ஐவகைச் சமயமும்
செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன்
அடிகள் மெய்ப்பொருள் அருளுக என்ன”
(தவத்திறம் 41-45)
மணிமேகலை கேட்டதும் அறவண அடிகள் தம் சமய மரபுகளைக் கூறுகிறார். பிறர் மதம் மறுத்து, தம் மதம் தருமமதம் என்று விளக்குகிறார்.
உள்ளத்தால் விளையும் வெஃகல், வெகுளல், பொல்லாக் காட்சி ஆகியனவும், சொல்லால் விளையும், பொய்,குறளை, கடுஞ்சொல், பயனில சொல் ஆகியனவும், மெய்யால் விளையும் கொலை, களவு, காமம் ஆகியனவும் விலக்கி நிற்பதே தருமமாகும் எனச் சொல்லப் பெறுகிறது. நல்வினைஎன்பது மேற்சொல்லிய பத்து நிலையிலிருந்தும் நீங்கி நல்ல கொள்கையில் தானம் தலைநின்று வாழ்பவரே தேவராக, மக்களாக, பிரம்மராக ஆகி மேவிய மகிழ்ச்சியினால் வினைப்பயனை எய்துவர் என்று மணிமேகலை வற்புறுத்துகிறது. எனவே நல்வினை வயப்படுதலே தருமம் என்று கூறுவது தான் மணிமேகலை உணர்த்தும் சமயம் எனலாம்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.