தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
12. தனுஷ்கோடி ராமசாமி சிறுகதைகளில் குடும்ப உறவுநிலை
மு. கண்ணன்
முன்னுரை
தொடக்கக் காலத்தில் நாடோடிகளாகச் சுற்றித் திரிந்த மானிடச் சமூகம் ஓரிடத்தில் தங்கள் குடிகளை நிலையமர்த்திக் கொண்டது. இக்குடிகளுக்கென்று குழு அமைப்பு காணப்பட்டது. பிற்காலத்தில் நாகரிக வளர்ச்சியும், திருமண அமைப்பு முறையும் தோன்றிய காலக்கட்டத்தில் குடும்பம் எனும் அமைப்பு முறை தோற்றம் பெற்றது. திருமண அமைப்பு முறையினால் முறையற்ற புணர்ச்சி நிலை மாறி ஒழுங்குபட்ட உறவுமுறைகள் உருவாகியது. தாய் - தந்தை, கணவன் - மனைவி, அக்கா - தங்கை, அண்ணன் - தம்பி போன்ற குருதி தொடர்பான உறவுகள் உருவாகின. குடும்பம் என்ற அமைப்புமுறை உருவாகிய பிறகு மானிடச் சமூகத்தில் பல குலப்பிரிவுகள் ஏற்பட்டன. ஒரு குலத்தில் வாழும் நபர்கள் சகோதரன் - சகோதரி என்ற உறவுமுறை கொண்டவர்கள் என்ற வரையறை உருவாகியது. குடும்ப நபர்களிடையே பூசல், சச்சரவுகள் நடைபெறும் பொழுது, இச்சிக்கல்களைத் தீர்த்து வைக்க “குழுவின் தலைவன்“ செயல்பட்டான். இந்நிலை பரிமாற்றமே இன்றைய குடும்ப வளர்ச்சிக்கு வழிவகை செய்தது எனலாம்.
குடும்பம் - வரையறை
சமூக தளத்தில் ஒரு அங்கமாக விளங்குவது குடும்பம் ஆகும். பல குடும்பங்களின் கூட்டமைப்பே சமூகமாக, சமுதாயமாக உருவாக்கம் பெறும். “குடும்பம் என்பது குறைந்த பட்சம் ஆண் ஒருவனும் பெண் ஒருத்தியும் குழந்தைகளோடு சமுதாயத்தாலோ திருமணத்தாலோ அங்கீகரிக்கப்பட்ட நிலையான உறவில் அமைவதாகும்“ என்று குடும்பம் குறித்து விளக்கமளிக்கின்றார்.
குடும்ப அமைப்பு உருவான விதம் குறித்து சி. பக்தவத்சல பாரதி பின்வருமாறு எடுத்துக் கூறுகின்றார். “குடும்பம் என்னும் அமைப்பானது ஓர் ஆணும் பெண்ணும் அவர்களுடைய சமுதாய மரபுப்படி மணவாழ்வில் ஈடுபடும் நிலையால் மட்டுமே தோன்ற முடியும். அவ்வாறு இணைந்தால்தான் அச்சமுதாயத்தில் அவர்கள் குடும்பமாக ஏற்றுக் கொள்ளப்படுவர். அவ்வாறின்றி ஒரே வீட்டில் ஓர் ஆணும் பெண்ணும் காதலர்களாகவோ, வேறு வகையிலோ உறவு பெற்று, உண்டு மகிழ்ந்து வாழ்ந்தாலும் அவர்களிடையே சமுதாயம் ஏற்றுக் கொள்ளக்கூடிய கணவன் - மனைவி உறவு அமையாதவரை அவர்கள் குடும்பம் என்ற அமைப்பை ஏற்படுத்தவியலாது“ என்கிறார்.
இலக்கியங்களில் குடும்பம்
கணவன் - மனைவி - குழந்தைகள் ஆகியோரைக் கொண்ட அமைப்பு முறையினைக் குடும்பம் எனலாம். குடும்ப நிலையின் தன்மையினை இலக்கியங்களும், இலக்கியப் படைப்பாளர்களும் தங்கள் படைப்புகளில் காலந்தோறும் பதிவு செய்து வந்துள்ளனர். இல்வாழ்க்கை என்று கருதப்படும் குடும்ப வாழ்க்கையின் சிறப்பினைத் திருவள்ளுவர் சிறப்புடன் விளக்கிக் காட்டுகின்றார்.
“அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.“
அறம் என்று சிறப்பித்துக் கூறப்பட்டதே இல்வாழ்க்கை ஆகும். பிறரால் பழிக்கப்படாமல், குற்றம் இல்லாமல் வாழ்வது சிறப்புடையது என்கிறார்.
குடும்ப வாழ்வின் கூறுகளை அக்காலம் தொட்டு இன்று வரையிலும் இலக்கியங்கள் பதிவு செய்து வருகின்றன. குறிப்பாக, இன்றைய நவீன காலப் படைப்பாளர்கள் சமுதாயத்தில் ஓர் அங்கமாக விளங்கும் குடும்பத்தைக் குறித்தும் தம் படைப்புகளில் பதிவு செய்து வருகின்றனர். அந்நிலையில் தனுஷ்கோடி ராமசாமி தம் படைப்புகளில் குடும்ப உறவுகளின் நிலை குறித்தும், சிக்கல்கள் குறித்தும் பதிவு செய்துள்ளார். அவர் படைப்புகளில் இடம்பெற்றுள்ள குடும்ப உறவுகள் பற்றிய நிலைப்பாட்டினை பின்வரும் நிலையில் வகைப்படுத்தி ஆராயலாம்.
கணவன் - மனைவி உறவு
குடும்பம் எனும் அமைப்பில் கணவன், மனைவி உறவு முதல் நிலை உறவாகவும், முதன்மையான உறவாகவும் கருதப்படுகின்றது. ஆண், பெண் உறவுகளில் குறிப்பிடத்தக்க உறவாக கணவன் - மனைவி உறவு அமைவதை பின்வரும் நிலையில் அறியலாம்.
“சமூக உறவை விட்டு அகலாமல் இருக்கவும், குழந்தைகளைப் பெறவும் ஓர் ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிரந்தரமான உறவை ஏற்படுத்தித் தருவது திருமணம், இத்திருமணத்தால் ஏற்படும் கணவன் மனைவி உறவு, உள்ளத்தாலும், உடலாலும் மிக நெருங்கிய உறவாகும்“ என்ற கூற்று வழி கணவன் மனைவி உறவு நிலையின் சிறப்பினை அறியலாம்.
“நாரணம்மா“ எனும் கதையில் இல்லப்பதேவன் தம் மனைவி நாரணம்மா மீது கொண்டுள்ள எல்லையில்லாத பாசம் கொண்டுள்ளமையை எடுத்துக்காட்டுகின்றார். குழந்தைப்பேறுக்காக தன் மனைவியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தன்னிடம் உள்ள நாற்பத்தைந்து பைசாவையும் கொடுத்துவிட்டு மேலும் மருத்துவச் செலவுக்குரிய பணத்தினைத் தயார் செய்ய தம் மனைவியை விட்டுப் பிரியும் நிலையினையும் கணவன் - மனைவி அன்பு நிலையையும் எடுத்துக் காட்டுகின்றார்.
இல்லப்பத்தேவன் 15 பைசாவிலே ஒரு டீ அடிச்சிட்டு 65 பைசா குடுத்துக் காருக்குப் போயிருப்பான். பொண்டாட்டி கையிலே ரெண்டு ரூபாயைக் கை குளிரக் குடுத்துட்டுப் போயிருப்பான். இப்ப அவன் கையில் இருக்கிறதெல்லாம் நாப்பத்தஞ்சு காசுதான்.
“நாரணம்மா... ... நார்ணம்மா
என்ன? ன்னு எழுந்திட்டா
நா போய்ட்டு வர்றேன்
அவ ஒரு மாதிரி இவன் மேலே முழிச்சா
இந்தா ன்று நாப்பத்தஞ்சு காசை நீட்டினான்
உங்களுக்குக் காருக்கு?
நா ஒரு வீச்சிலே நடந்து போயிருவேன்
எட்டு மைல் தூரமிலே... ...
ஆமா இந்த ஏழெட்டு வருஷமாத்தானே காரு... ...
அதுக்க முன்னே ஒரு சிரிப்பு சிரிச்சுக்கிட்டான்
அதுக்கு ஏதாவது வாங்கிக் கொறிச்சுக்கிட்டே போங்க
நீ ஒண்ணு... ... இந்தாப்பிடி... ... ... வெறுங்கையோடயா இருப்ப“
மேற்கண்டக் கதைப் பகுதியில் கணவன் மனைவி மீதும், மனைவி கணவன் மீதும் கொண்டுள்ள அன்பு நிலையினைப் பதிவு செய்துள்ளார். பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையிலும், கணவன்-மனைவி உறவு அன்பு நிலையோடு இயற்குவதைச் சுட்டுகின்றார்.
இல்லப்பத்தேவன் மனைவி மீதும் அக்கறைக் காட்டுவதும், நாரணம்மா தம் கணவன் இல்லப்பத்தேவன் மீது அன்பு காட்டுவதையும் புலப்படுத்திக் காட்டுகின்றார்.
கணவன் - மனைவி உறவுச் சிக்கல்
குடும்பத்தின் முதன்மை உறவாகக் கருதப்படும் கணவன் - மனைவி இடையே சில தருணங்களில் உறவுச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில் குடும்பச் சிதைவுகள் உருவாகின்றன. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இன்மை, பொருளாதாரச் சிக்கல், குழந்தைப்பேறு இன்மை, பாலுறவுச் சிக்கல்கள், வேலையின்மை போன்ற இன்ன பிற காரணங்களால் கணவன் மனைவி இடையே கருத்து முரண்பாடு தோன்றி உறவுச்சிக்கல் உருவாகின்றது.
மகன் - தாய் உறவுநிலை
குழந்தைகளின் மீது ஒரு தாய் செலுத்தும் அன்பு எந்நிலையில் உண்மைத்தன்மை வாய்ந்ததோ, அதேபோல் குழந்தைகளும் தாய் மீது அன்பு செலுத்துகின்றனர். தன்னை ஈன்றெடுத்த தாய் மீது அன்பும் அக்கறையும் உடைய குழந்தைகளை இன்றளவும் காணமுடிகின்றது. தனுஷ்கோடி ராமசாமி மகன் - தாய் மீது கொண்டுள்ள அன்பு நிலையைப் புலப்படுத்திக் காட்டுகின்றார்.
“மாயிருளு“ எனும் கதையில் மாயிருளு என்பவன் தன் தாய் மீது கொண்டுள்ள அன்பு நிலையினைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். வறுமை நிலையில் உள்ள குருவம்மா தான் உணவு உண்ணாவிட்டாலும் தன் குழந்தைகள் உணவு உண்ணட்டும் என நினைக்கின்றாள். ஆனால் மாயிருளோ தன் தாய் உணவு உண்ணட்டும் என நினைக்கின்றான். மகன், தாய் மீது கொண்டுள்ள அன்பு நிலையினைப் பின்வரும் கதைப்பகுதி வழியே காணலாம்.
“மாயிருளு ஒரு மாதிரி நின்று ஆத்தாளைப் பார்த்தான். ஏத்தே நீ ராத்திரியும் சாப்பிடலே... இப்பவும் சாப்பிடாட்டா தம்பிக்கு பாலிருக்காதுல்லேத்தே... என்று கனத்துக் கரைந்த குரலில் கூறிக் கவிழ்நத்வனின் கண்கள் அருவியாக ஒழுகியது. இந்தச் சத்தியத்தைச் சொல்லிவிட்டு அவன் பைக்கூடு தோளில் தொங்க நடந்தான். ஏ... ஆத்தே எங்கண்ணு... நா பெத்த செல்லம்... ... ... இதெல்லாம் நீ எங்கே படிச்சே... இந்த சின்ன வயசிலே உனக்கு இவ்வளவு அறிவா என்று மனசுக்குள் எண்ணும் பொழுது குருவம்மாள் கண்களில் வெப்பமிக்க ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது” என்ற கதைப்பகுதியில் மகன், தாய் மீதும் தம் குடும்ப நலன் மீதும் கொண்டுள்ள அன்பின் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றார். குடும்பம் எனும் அமைப்பானது அன்பு எனும் நல் இயக்கத்தில் இயங்குவதற்கு ஒருவரையொருவர் அன்பு வழியில் நடத்தல் வேண்டும் என்கின்றார்.
அண்ணன் - தம்பி உறவு நிலை
குடும்பத்தில் முதல் நிலை உறவாகக் கருதப்படும் கணவன், மனைவி இருவருக்கும் பிறக்கும் குழந்தைகள் அண்ணன், தம்பிகளாக ஆகின்றனர். முதலில் பிறந்தவன் அண்ணனாகவும், அதற்கு அடுத்தபடியாக பிறந்தவன் தம்பியாகவும் கருதப்படுகின்றனர். அண்ணன் - தம்பி உறவு அன்பியலோடு இயங்கும் பொழுது குடும்பம் மனமகிழ்வை அடைகின்றது. ஒரு தாய் வயிற்றில் உடன் பிறந்த அண்ணன் - தம்பி உறவு குடும்ப அமைப்பில் கவனிக்கத்தக்க ஒன்றாகும். தம்பிக்கு அண்ணன் வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும் விளங்க வேண்டும். அண்ணன் தம்பி உறவுநிலை சிறப்பாக அமைய வேண்டும் என தனுஷ்கோடி ராமசாமி விருப்பம் தெரிவிக்கின்றார். “ஆயிரங் கண்ணுடையாள்“ எனும் கதையில் அண்ணன், தம்பி மீது கொண்டுள்ள அன்பையும், அக்கறையையும் காட்டுகின்றார்.
“பெரியவன் கருசனக்காரன், தம்பிக விட்டுட்டு சாப்பிட மாட்டான்... இந்த நெனவுகள் மனசைக் குளிர வச்சது” எனும் பகுதியில் அண்ணன் தம்பி மீது கொண்டுள்ள அன்பு நிலையைக் காட்டுகின்றார். இவர்களின் நல்உறவினால் தாய் மகிழ்வுறுவதையும் சுட்டுகின்றார்.
“கந்தகக் கிடங்கிலே“ எனும் கதையில் அண்ணன் - தம்பி உறவினை உணர்வியலோடு பதிவு செய்கின்றார். உடல்நிலை சரியில்லாத தம்பியின் மீது அன்பு காட்டும் அண்ணனின் பாச உணர்வினைச் சுட்டுகின்றார். தன் தம்பி உடல்நலம் சரியாக வேண்டும் என நினைந்துருகும் அண்ணனின் நிலையினை எடுத்துக் காட்டுகின்றார். குடும்ப வறுமையைச் சரிசெய்ய சிறு வயதிலேயே தீப்பெட்டித் தொழிற்சாலைக்குப் பணிக்குச் சென்று உழைக்கும் பாலகிட்ணன் என்பவன் தன் தம்பி முத்துக்கிட்ணன் மீது கொண்டுள்ள அன்பு நிலையை படம் பிடித்துக் காட்டுகின்றார்.
“முத்துக்கிட்ணன் திக்குத் திக்குன்று முக்கிக்கிட்டு மூச்சு விட்டுக்கிட்டிருந்தான்... தம்பி நெஞ்சுல பெறங்கைய வச்சுத் தொட்டுப் பார்த்தான். காச்ச போட்டுக் கொதிச்சது.
தம்பிப் பாப்பாவ... இன்னைக்குச் சாத்தாருக்கு... பெரிய டாக்டர்ட்ட ... தூக்கிட்டுப் போறோம்ல... பெரிய்ய... டாக்டரு ... நல்ல மாத்திரையாக் குடுப்பாரு... தம்பிப் பாப்பா... முழுங்கினா ஒடனே காச்சல் விட்ரும் திரும்ப வராது.
அண்ணனைப் பாத்து தம்பி சிரிச்சான். அம்மமா கலங்கினாள்.
அண்ணன் வந்தவுடனே முத்துக்கிட்ணன் தாவி ஓடுவான். தம்பியத் தூக்கி அணச்சுக்கிட்டே தூக்குச் சட்டிக்குள்ளேருந்து ரொட்டியோ பிஸ்கோத்தோ வாழப்பழமோ எடுத்துக் குடுப்பான். தெனமும் பாலகிட்ணனுக்கு வாங்கித் திங்கிறதுக்குன்னு அம்பது காசு குடுத்துவிடுவாள். அதில தம்பிக்கும் வாங்கிட்டு வந்திருவான்” எனும் கதைப்பகுதியில் அண்ணன் - தம்பி அன்பு உறவினைச் சுட்டிக் காட்டுகின்றார். ஒரே தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பி உறவு இன்றளவு பாசமற்று பிளவுபட்டு கிடப்பதை நினைவுபடுத்துகின்றார். அண்ணன் - தம்பி உறவு வலுப்பெறும்போது தான் குடும்ப ஒற்றுமை தழைத்தோங்கும் என வலியுறுத்துகின்றார்.
அண்ணன் - தங்கை உறவுநிலை
கணவன் - மனைவி இருவருக்கும் பிறக்கும் குழந்தைகளில், முதலில் பிறக்கும் ஆண் அண்ணன் என்ற உறவையும், இரண்டாவது பிறக்கும் பெண் குழந்தை தங்கை எனும் உறவினை அடைகின்றனர். ஒரே தாயின் வயிற்றில், பிறந்ததால் இரத்த உறவாக கருதப்படுகின்றனர். இருவரும் தத்தம் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் பாச உறவாக உள்ளனர். அண்ணன் தன் தங்கை மீது அன்பு வைத்திருப்பதையும், தங்கை அண்ணன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பதையும் தனுஷ்கோடி ராமசாமி “நாரணம்மா“ எனும் கதை வழியே படம்பிடித்துக் காட்டுகின்றார்.
“இல்லப்பத்தேவன்” மனைவி “நாரணம்மா“ இறந்த செய்தி அறிந்த இல்லப்பத்தேவனின் தங்கை “தனம்“ மனம் துடித்து அழுவதை துன்ப நிலையோடு வெளிப்படுத்திக் காட்டுகின்றார்.
“ஏ... என் உடன் பிறப்பே... இந்தக் குரல் இல்லப்பத் தேவனின் அடிவயிற்றைக் கலக்கியது. மேற்கே திரும்பிப் பார்த்தான்.
தனம் தலைவிரிகோலமாகப் பிள்ளையைத் தூக்கிவிட்டு ஓடி வந்தாள். அவளுக்குப் பின்னாலே அவளது கறுப்புச் செல்வங்கள் நிர்வாணமாக ஓடி வந்தார்கள். பிள்ளையைக் கீழே போட்டுட்டுத் தனம் மார்பிலே அடிச்சுக்கிட்டு ஏ... என் உடன்பிறப்பே எஞ் சீமானே உங்களுக்கா இந்தக் கதின்னு கத்திக்கிட்டே அவன் கால்களில் வீழ்ந்து கதறினாள்.
“நீங்க யாருக்கு என்ன துரோகம் பண்ணினீங்க? யாரு திங்கிற சோத்திலே மண்ணள்ளிப் போட்டீங்க? உங்களுக்கா இந்தக் கதி... ஏ கடவுளே... கடவுளே... உனக்குக் கண்ணில்லையா... கண்ணில்லையா?” மேற்கண்ட கதைப்பகுதியில் அண்ணனுக்கு ஏற்பட்ட துன்பத்தினைக் கண்டு மனவேதனையடையும் தங்கையின் நிலைப்பாட்டினை உணர்வியலோடு பதிவு செய்துள்ளார்.
குடும்ப உறவுகளில் அண்ணன் தங்கை உறவு போற்றுதலுக்குரியது ஆகும். ஒரே தாய் வயிற்றில் பிறந்த ஆணும் பெண்ணும் தாங்கள் இறக்கும் வரையிலும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி வாழும் உன்னத உறவாக விளங்குவதை படைப்பாளர் தம் படைப்பு வழி அடையாளம் காட்டுகின்றார்.
தந்தை - மகன் உறவு நிலை
கணவன் - மனைவி இருவரும் இணைந்து குழந்தைகளைப் பெறும் பொழுது பெற்றோர்களாகின்றனர். குடும்ப உறவுநிலையில் தந்தை மகன் உறவு நிலை குறிப்பிடத் தகுந்தது. பத்து மாதம் குழந்தையைக் கருவறையில் சுமந்து பெற்றெடுப்பது முதன்மையான கடமையோ, அதேபோல் குழந்தையை நன்முறையில் சான்றோனாக வளர்ப்பது தந்தையின் கடனாகும். தந்தை - மகன் உறவு நிலையை ஜி. வசந்தா பின்வரும் நிலையில் காட்டுகின்றார்.
“மணமான ஓர் ஆடவன் குழந்தை பெறும் போது தந்தை என்றும் அக்குழந்தை ஆணாக இருப்பின் மகன் என்றும் சுட்டுப்படுகின்றனர்” பண்புநலன்களை கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் குடும்ப ஒற்றுமைக்கு வழிவகைச் செய்ய வேண்டும் என்ற நற்கருத்துக்களை தனுஷ்கோடி ராமசாமி கதைகள் வழியே அறியமுடிகிறது.
பயன்பட்ட நூல்கள்
1. Reece McGee(Ed), Sociodlogy An Introduction, p.364.
2. சி. பக்தவத்சலபாரதி, பண்பாட்டு மானிடவியல், ப.352.
3. திருக்குறள், ப.549.
4. நாஞ்சில் நாடன், தீதும் நன்றும், ப.15.
5. தனுஷ்கோடி ராமசாமி, தனுஷ்கோடி ராமசாமி கதைகள், ப.73.
6. தனுஷ்கோடி ராமிசாமி, தனுஷ்கோடி ராமசாமி கதைகள், ப.60.
7. மேலது, ப.529
8. நங்கை குமணன், பெண்ணுரிமை பேசுவோம், ப.9.
9. தனுஷ்கோடி ராமசாமி, தனுஷ்கோடி ராமசாமி கதைகள்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.