இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


13. இரா. நடராசனின் சிறுகதைகளில் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை முறை

ம. கண்ணன்

சமுதாயத்தில் மக்களை உயர்ந்தோர் - தாழ்ந்தோர் எனப் பகுத்துப் பார்க்கும் நிலை காணப்படுகின்றது. தாழ்ந்த நிலையில் உள்ள மக்கள் தங்களது குடும்பத்தை மேம்படுத்தப் பலவகையினும் முயல்கின்றனர். இந்நிலையில் அவர்கள் வாழ்க்கையில் போராட்டம், துன்பம், சமூக அவமதிப்பு போன்றவற்றை எதிர்கொள்கின்றனர். அதனால், அவர்களது தேவைகள் நிறைவுபெறுவதில்லை. விளிம்புநிலை மக்களின் தொழில், உணவுமுறை, பெண்கள் நிலை, காதல் போன்ற வாழ்க்கைக் கூறுகளையும் அவர்கள் மீதான சமூகத்தின் பார்வையையும் பற்றி இரா. நடராசனின் சிறுகதைகள் மூலம் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

விளிம்புநிலை மக்கள்

“விளிம்புநிலை மக்கள் என்று குறிப்பிடும் நபர்கள் சமூகத்தில் எந்தவிதமான அங்கீகாரமும் இல்லாதவர்கள்; தங்களுடைய உரிமைக்காகப் போராடுபவர்கள். தற்போது இருக்கின்ற நிலையைத் தக்கவைத்துக் கொள்வதில் அந்தமக்கள் மிகுந்த கவனமாக இருக்கின்றனர்.“ (பெருமாள் முருகனின் படைப்புகளில் விளிம்புநிலை மாந்தர், ப.51) என்று விளிம்புநிலை மக்களின் நிலையை உணர்த்துகிறார் ம. தமிழ்ச்செல்வி.

வருவாய் குன்றிய பல தொழில்களைச் செய்யும் மக்கள், புறக்கணிக்கப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோர் விளிம்புநிலை மக்கள் ஆவர். இதனைச், “சமுதாய அடுக்கில் கீழ்நிலையில் - விளிம்பில் - ஓரத்தில் இருப்பவர்களையே, அதாவது சாதி, சமயம், பால் - இனம் என்ற எல்லாத் தளங்களிலும் ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, தாழ்நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள், தேவதாசிகள், பாலியல் தொழிலாளிகள், அரவாணிகள், தொழுநோயாளிகள், அனாதைகள், ஆதரவற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள் முதலானவர்களே விளிம்புநிலை மனிதர்களாவர்” (உங்கள் நூலகம்-ஆகஸ்ட் 2015, பக்.91-92) என்று விளிம்புநிலை மக்கள் யாவர் என்பதற்குக் ‘கொங்கு வரலாற்று ஆவணங்களில் விளிம்புநிலை மனிதர்கள்’ எனும் கட்டுரையில் விளக்கம் அளிக்கிறார் ந. மணிகண்டன்.

அம்மக்களின் வாழ்க்கை தினம்தினம் செத்துப் பிறப்பது போன்றே அமைகின்றது. அன்றாடத் தேவையான உணவிற்குப் பெரும் உழைப்பினைக் கொடுத்தாலும், அதற்கான விலைதான் கிடைப்பதில்லை. தொழில்நிலையில் ஏற்படுகின்ற இடர்ப்பாடுகள் அவர்களது மனநிலையைச் சிதைத்து, குழப்பமான சூழலை உருவாக்குகின்றன. விளிம்புநிலை மக்கள் வாழ்க்கையில் ஆசைகள், கனவுகள் போன்றவை கானல்நீராய் அமைகின்றன. அவரவர் தொழிலை அவர்களது சந்ததியினரே பரம்பரையாகச் செய்யவேண்டும் என்கின்ற நிலையும் இந்தியாவில் காணப்படுகின்றது.

இரா. நடராசனின் சிறுகதைகள் விளிம்புநிலை மக்கள் பலர் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனையை நடுவணாகக் கொண்டு அமைந்துள்ளன.



தொழில்முறை

விளிம்புநிலை மக்களின் தொழில்களாகக் கழிவறை சுத்தம் செய்தல், சங்கு ஊதுதல், செருப்புத் தைத்தல், சாக்கடையில் பொருட்கள் தேடுதல், பாலியல் தொழில், பிச்சையெடுத்தல், பிணவறை மேற்பார்வை, வெட்டியான் பணி, சாராயம் விற்றல் போன்றவற்றினை இரா. நடராசனின் சிறுகதைகள் சுட்டுகின்றன. இத்தொழில்களைச் செய்கின்ற நிலையில் திருட்டுப்பழி, தன் பாரம்பரியச் சொத்தையிழத்தல், மனஉளச்சல், பிற உயிரினங்களோடான போராட்டம் போன்ற பிரச்சனைகளுக்கு உட்படுகின்றனர். ஆண்கள், பெண்கள் ஆகியோர் மலம் அள்ளும் தொழிலினை மேற்கொள்கின்றனர்.

தங்களது அடிப்படைத் தேவைகள் காரணமாகக் கழிவறை சுத்தம் செய்யும் தொழிலை ஒரு பிரிவினர் செய்கின்றனர். அது மரபுவழிப்பட்டிருப்பதைக் காணமுடிகின்றது. ஊரைச் சுத்தம் செய்து தங்களை அசுத்தமாக்கிக் கொள்ளும் நிலையில் அம்மக்கள் உள்ளனர்.

கழிவறையைச் சுத்தம் செய்யும் தொழில் மிகவும் கீழானதாகக் கருதப்படுகிறது. இந்தத் தொழிலைச் செய்பவர்களைப் பிறர் அவமரியாதையுடனேயே நடத்துகின்றனர். அவர்களைக் காணும்பொழுதே முகம் சுளிக்கின்றனர். இவர்கள் வாய்ப்பு நேர்ந்தால் திருட்டு முதலிய குற்றச் செயல்களில் ஈடுபடத் தயங்காதவர்கள் என நினைக்கின்றனர். தேவாலயத்தில் கழிவறை சுத்தம் செய்பவர் மீது திருட்டுப்பழிச் சுமத்துவதைப் ‘பக்திக்குரிய இடம் கோயில் மட்டுமல்ல’ என்னும் சிறுகதையில் சுட்டுகின்றார் இரா. நடராசன். கழிவறையைச் சுத்தம் செய்பவர் தன்னுடைய நிலையை எண்ணி மனம் வெதும்புகிறார். இதனை,

“பாதர் என்னவெல்லாம் பேசிட்டாரு…யாரு? நான் திருடுறேனாம்... அதுவும் கக்கூசுக்குள்ள அவரு அவசரத்துக்கு கழற்றிவச்ச தோத்திர ஜெப மோதிரத்தை இங்கே கழுவ வந்த நான் திருடினேன்னு சொல்றாரு... தேவன் சாட்சி... மரிதான் காதில் சொல்லோணும்... உசுரே போயிரும் இந்த கெழவனுக்கு... பாக்குறது பிசுநாறிப் பொளப்பாக இருக்கலாம்... ஆனால்... ஒரு புராது கிடையாது...” (இரா. நடராசன் சிறுகதைகள் ப.50)

என்பதன் வாயிலாக உண்மையாகவே பணியாற்றுகின்றபோதிலும் பொருள் காணவில்லையென்றால் முதலில் சந்தேகிக்கப்படுபவர்களாக இவர்களே உள்ளனர் என்று காட்டுகிறார் நடராசன். கீழ்நிலைத் தொழிலைச் செய்தாலும் தன்னுடைய தன்மானதிற்கு இழுக்குயெனில் உயிரையும் துறப்பர் என்பதைக் கிழவனின் கூற்று வழியே புலனாகிறது.



உணவுமுறை

விளிம்புநிலையில் உள்ள மக்கள் உணவுமுறையில் கருவாட்டுக் குழம்பும், பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ள முடியாத பன்றி இறைச்சியையும் உண்ணும் நிலையைச் இரா. நடராசன் சிறுகதைகள் உரைக்கின்றன. கழிவறையைச் சுத்தம் செய்வதற்குக் கிடைப்பவை கொண்டு சற்றுக் கூடுதல் சாப்பாடு சாப்பிடமுடியும் என்பதைச் ‘சங்கிலி’ சிறுகதையில்,

“ஆத்தா நேத்து கருக்கல்லயே ஆசிடு தூக்கிக்கிட்டு போயிருச்சில்ல. எம்புட்டுவூடுகள்ல கக்கூசு களுவிச்சு தெரியுமா... பொளுது சாஞ்சு கருவாட்டு கொளம்பு நயினா...” (இரா. நடராசன் சிறுகதைகள், ப.151)

என்று மகள் தன் குடிகாரத் தந்தையிடம் உரைப்பதான் மூலம் அறியமுடிகின்றது. கருவாட்டுக் குழம்பினை மிகவும் விரும்பும்நிலையில் ஏதேனும் சிலபொழுதுகளில் மட்டுமே, அவர்களால் அதை ருசிக்க முடிகின்றது என்பது புலனாகிறது. பல வீடுகளுக்குக் கழிவறையைச் சுத்தம் செய்வதன் மூலமே அவர்கள் விருப்பமான உணவினைப் பெறமுடியும் என்பதை இப்பகுதி உணர்த்துகின்றது.

“கருவாட்டுக் கொழம்பு அவள் வைக்கணும். அதன் ருசி ஊர் அறியும்” (இரா. நடராசன் சிறுகதைகள், ப.135)

என்று குஞ்சா கூறுவதாக ‘மிச்சமிருப்பவன்’ எனும் சிறுகதை சுட்டுகின்றது.

பன்றி இறைச்சியை எல்லோரும் விரும்பாத நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் பன்றி இறைச்சியை உண்பதை,

“பன்னி திங்கிற பயலுவளுக்குக் கட்டுப்பாடே கிடையாதப்பா” (இரா. நடராசன் சிறுகதைகள், ப.277)

என்று கேலிசெய்யும் முறையைத் ‘தலைமுறை கைதிகள்’ எனும் சிறுகதை உரைக்கிறது.

“பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்” (குறள்:751)

என்று வள்ளுவர் உரைப்பதிலிருந்து பொருள் இல்லாதவர்களைச் சமூகம் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என்பது புலனாகிறது. திருவள்ளுவர் கூறும் பொருளில்லாதவராகக் கடைநிலை மக்கள் உள்ளார்கள். பொருள் இல்லாததோடு பல சிக்கல்களுக்கு இடையில் வாழ்க்கை நடத்துகின்றனர் என்பது உறுதிப்படுகின்றது.



பெண்களின் நிலை

விளிம்புநிலை மக்களின் பெண்கள் மிகவும் கடினமாக உழைக்கும் திறன் கொண்டவர்களாக உள்ளனர். கணவன் மீது அன்பும் அரவணைப்பும் கொண்டு குடும்பத்தின் வருமானத்திற்கு வேலை செய்யும் தன்மை உடையவர்களாகவும் காட்டுகிறார் இரா. நடராசன். கீழான தொழிலாகக் கருதப்படும் கழிவறையைச் சுத்தம் செய்யும் பணியைச் செய்கிறவளாகவும் பெண்கள் உள்ளனர். ஏதுமறியாத விளிம்புநிலை பெண்களின் வாழ்க்கையை இருட்டறையில் தள்ளிவிடுகின்ற சூழலைச் சுட்டுகிறது. இதனை,

“பிறந்திருந்தாள் சற்குணம். உனது தாயின் கருணைக்காக, பெரியப்பா வாக்களித்த சொத்துக்காக... தன்னையே பணயமாக வைக்கத் துணிந்த அபலை. பல் துருத்தியதற்காக... கருப்பாய் இருந்ததற்காக, படிக்காமல் போனதற்காக, முதல் தாரத்திற்குப் பிறந்ததற்காக வாழ்வின் எதிர்த் திசையில் போராட வந்தவள்.” (இரா. நடராசன் சிறுகதைகள் ப.83)

எனும் கூற்றில் ஏழையாகப் பிறந்ததற்காக மனநலம் பாதிக்கப்பட்டவருக்குத் திருமணம் செய்விக்கும் நிலையில் சற்குணம் இருக்கிறாள் என்பதைச் ‘சென்ற ஞாயிற்றுக்கிழமை’ எனும் சிறுகதை இயம்புகின்றது. கணவனின் உழைப்பை உறிஞ்சும் ஒட்டுண்ணிகளாக மக்கள் இருப்பதைக் காண்கிறாள். அக்கொடுமைகளிலிருந்து விடுதலை செய்வதற்காக அவனை நஞ்சு வைத்துக் கொல்லும் நிலையில் அவள் இருக்கிறாள். மனநிலை பாதிக்கப்பட்டவருக்குத் திருமணம் செய்விக்கும்பொழுது, அவருடைய மனநிலை மாற்றம் பெறும் எனும் நம்பிக்கை சமூகத்தில் உள்ளமையால் இக்கொடுமை நிகழ்கிறது.

குடும்பச் சூழலின் காரணமாகப் பாலியல் தொழில் செய்யும் பெண்ணொருத்தி அடையும் துன்பத்தை ‘இரத்தத்தின் வண்ணத்தில்’ எனும் சிறுகதை சுட்டுகிறது. ஒரு சமயத்தில் பலரால் பாலியல் துன்புறுத்தலுக்குட்படும்போது கொலை செய்யும் பெண்ணின் நிலையை

“சட்டத்துக்கு வெளியே வேசியாகத் திரிந்த போது ஆண் மிருகங்களால் குறைந்தபட்சம் ஒரு உயிருள்ள பொருளாகக் கூட நடத்தப்படாத என்னை... சட்டம் குற்றவாளி என்கிற முறையில் கண்ணியமாகவே நடத்தியது” (இரா. நடராசன் சிறுகதைகள் ப.232)

எனும் கூற்று இயம்புகின்றது; வறுமையின் காரணமாகவோ, சூழலின் காரணமாகவே பாலியல் தொழிலுக்கு ஆட்படும் பெண்களின் துன்பம் எத்தகையது என்பதை உணர்த்துகின்றது. பாலியல் தொழிலாளி அடையும் துன்பத்தை,

“எருமைங்களோட படுத்துக் காயம்பட்டு மிதிபட்டு ரெண்டு ரூபாய் சம்பாதிரிச்சிருக்றேனே எங்கஷ்டம் தெரியுமா உனக்கு? நாய் மாதிரி கடிச்சிப்புட்டு கணக்கு சொல்றவனும், மாமூல் தராட்டி சிகரெட்டுல சுடுற போலீசுகளும் தெரியுமா உனக்கு... (இரா. நடராசன் சிறுகதைகள், ப.165)

என்று ‘ரெண்டு ரூபாய் தீர்றவரைக்கும்’ என்னும் சிறுகதை இயம்புகிறது. தம் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளத் துடிக்கும் பெண்கள் பாலியல் தொழில் செய்தேனும் அதனை அடைய முயலும் போது பல இடர்பாடுகளுக்கு உட்படுகின்றனர் என்பது புலனாகிறது.

மேலும், நாத்திகனின் மனைவியாக இருந்து அவனை மாற்றுகின்றவளாக, சமூக அவலத்தைச் சுட்டும் கருத்துகளைக் கொண்டவளாக, குடிகாரனின் மனைவியாக, மனநலம் பாதித்தவளாக என பன்முகத்தன்மை கொண்டவர்களாகப் பெண்களை இரா. நடராசனின் சிறுகதைகளில் படைத்துள்ளார்.


காதல்

ஆணும் பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் பாலியல் சார்ந்து, அன்பை வெளிக்காட்டும் ஒரு கருவியாக காதல் உள்ளது. காதல் என்பது அனைவருக்கும் பொது என்பதைத் தொல்காப்பியர்

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வரூஉம் மேவற் றாகும்“ (தொல்.பொரு. நூ. 219)

என்று உரைப்பதால் அனைத்து உயிர்களுக்கும் இன்பமாகக் காதல் உள்ளது என்பது உய்த்துணரப்படுகிறது. காதலைப் பற்றிப் பாடாத புலவன் இல்லை எனலாம். பண்டையத் தமிழரின் இருகண்களாகக் காதலும் வீரமும் இருந்ததெனச் சங்க இலக்கியங்கள் உலகறியச் செய்துள்ளன. காதல் ஒருவனை வாழவும் வைக்கும் சாகவும் வைக்கும் என்பதை அறிவோம். காதல் இல்லாத உயிர்கள் இப்புவியில் வாழத் தேவையில்லையென உணர்ந்த பாரதி,

“காதல் காதல் காதல், காதல் போயின்
சாதல் சாதல் சாதல்”

என்று குரல் கொடுக்கிறார்.

காதல் இல்லையாயின் இவ்வுலகில் உயிரினங்கள் தோன்றியிருக்க முடியாது என்பது உண்மை. இது காதலின் தேவை எத்தகையது என்பதை வலியுறுத்துகின்றது. இதனை உணர்ந்த ஆசிரியர், பெண்ணாக மாறிய ஒருத்தியின் காதல் பற்றி ‘பால்திரிபு’ எனும் சிறுகதையில் உணர்த்துகிறார். இதனை,

“ஒரு பெண். யாரும் சந்தேகப்பட முடியாத பெண். என் ஈர வயிறு சிலிர்க்கிறது. ரகோத்தமன் என்பவர் என்னை உயிருக்குயிராகக் காதலிக்கும் அளவிற்கு முழுமையான பெண் நான். என் அலுவலக மேசையைச் சுற்றி நான் தோன்றுகின்ற ஆயிரக்கணக்கான தோற்றங்கள் அனைத்திலுமே இப்போது நான் மனுஷி, ஒரு பெண்.” (இரா. நடராசன் சிறுகதைகள் ப.22)

என்று குறிப்பிடுகிறார். பெண்ணாக மாறியவளின் உள்ளத்தின் உணர்வினையும் காதலையும் சுட்டுகின்றது தன் மனைவியைப் பிரிந்து அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட ஆணும் பெண்ணுமல்லாத மூன்றாம் பாலினத்தார்க்கும் காதல் உரியது என்கிறது இக்கதை.


சமூகத்தின் பார்வை

தாழ்த்தப்பட்ட மக்களைச் சமூகத்தில் மிகவும் கீழான நிலையில் வைத்துத் துன்புறுத்தும் நிலையைக் காணமுடிகின்றது. ஊரின் பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வாழ்க்கையை நடத்துபவர்களாக விளிம்புநிலை மக்கள் உள்ளனர். மழை பெய்யாமல் பொய்க்கும் நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களை நரபலியிடும் சூழலைத் ‘தலைமுறை கைதிகள்’ எனும் சிறுகதை சுட்டும்.

“ஆத்தா திருஓலைப்படி சங்கிலியோட மகன் மாசானம் பேர கொடுத்திருக்கா - சாமி சாவு, சொர்க்கம் - புள்ளையாண்டான் கொடுத்து வச்சிருக்கான்…” என்பதால் கடவுளின் பெயரைச் சொல்லி, சொர்க்கம் கிடைக்குமென ஆசை வார்த்தைகள் கூறி தாழ்த்தப்பட்ட மக்களை நரபலியிடுவதைக் காட்டுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களல்லாதாரின் கொடுஞ்செயல் இங்குப் புலனாகிறது.

சமுதாயத்தில் உயர்ந்தோருக்கென ஒரு குவளையும், தாழத்தப்பட்டவருக்கென ஒரு குவளையும் என்ற இரட்டைக் குவளைமுறை வைத்து தண்ணீர், தேனீர் கொடுத்த நிலையை ‘மிச்சமிருப்பவன்’ எனும் சிறுகதை உணர்த்துவதை,

“இப்போதுதான் பட்டணத்தில் நம்ம ஆட்கள் எல்லோரும் போல கடையில் பீடி வாங்கி டீ சாப்பிட்டு வருகிறார்கள். இங்கென்ன? இன்னமும் அதே அலுமினிய குவளை. கள்ளு சட்டி சமாச்சாரங்கள்தான்.”(இரா. நடராசன் சிறுகதைகள், ப.136)

எனும் கூற்றின் மூலம் அறியமுடிகின்றது. தற்காலத்தில் இந்நிலையானது இல்லாது பாகுபாடின்றி காகிதக் கோப்பையில் தேனீர் வழங்குவதைக் காணமுடிகின்றது. ஊரில் உள்ள பொதுக்கோயில்கள், பொதுக்கிணறுகள், பொதுவழி போன்றவற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தக் கட்டுப்பாடு இருப்பதைக் காணமுடிகின்றது. கழிவறை சுத்தம் செய்பவன் சிறுவனாக இருந்த போது, பொதுக் கிணற்றில் தண்ணீர் அருந்தியதற்காகத் தண்டிக்கப்படுகிறான்.

இதனைச், ‘சங்கிலி’ எனும் சிறுகதை

‘பள்ளியோடம் படித்த நாட்களில் கிணற்றில் தண்ணீர் குடித்ததற்காகத் தீட்டுக்கு அடித்ததும்கூட மறந்துவிட்டது சங்கிலிக்கு’ (இரா. நடராசன் சிறுகதைகள், ப.154) என்றுரைப்பதால் சமூகம் தாழ்த்தப்பட்டோரை நசுக்கி வைத்திருந்ததை அறியமுடிகின்றது.

இந்த நிலையைக் கண்டித்த பாவேந்தர் பாரதிதாசன்,

“உயர்வென்று பார்ப்பனன் சொன்னால் - நீ
உலகினில் மக்கள் எல்லாம் சமம் என்பாய்;
துயருறத் தாழ்ந்தவர் உள்ளார் - என்று
சொல்லிடுந் தீயரைத் தூவென் றுமிழ்வாய்!“ (தேன்தமிழ் கவிதைகள், ப.144)

என்று உரைப்பதனால் சமுதாயத்தில் மக்கள் சமமாக இருத்தல் வேண்டும் என்ற கருத்தினைச் சிந்திக்க வேண்டியுள்ளது. சமதர்ம சமுதாயம் தோன்றிட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.


முடிவுரை

  • கடைநிலை மக்களின் உணவுத் தேவை முழுமையாகப் பூர்த்திடையாத வண்ணம் உள்ளதைக் காணமுடிகின்றது.

  • பெண்ணுரிமைகள் முழுமையாகக் கிடைத்து அவர்கள் வளர்ச்சியை அடைதல் தேவை என்பது புலனாகிறது.

  • தீண்டாமைக் குற்றம் தொடர்ந்து நிகழ்வதை தடுத்து அவர்களின் மேன்மைக்கு உதவுதல் கடமையாகிறது. இன்னும் சில இடங்களில் இக்கொடுமை நிகழ்வது துன்பம் தருவதாகும்.

  • மனிதனின் மலத்தினை மனிதன் அள்ளுவதென்பது கொடுமையானது. அந்நிலை ஒழிக்கபட்டு அம்மக்களின் வாழ்வாதாரத்தை மேன்மைபடுத்துவது அவசியமானது என்பதை அறியமுடிகின்றது.


  • *****


    இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

    இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/seminar/s2/p13.html
    

      2024
      2023
      2022
      2021
      2020
      2019
      2018
      2017


    வலையொளிப் பதிவுகள்
      பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

      எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

      சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

      கௌரவர்கள் யார்? யார்?

      தமிழ் ஆண்டுப் பெயர்கள்

      பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

      வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

      பண்டைய படைப் பெயர்கள்

      ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

      மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

      மரம் என்பதன் பொருள் என்ன?

      நீதி சதகம் கூறும் நீதிகள்

      மூன்று மரங்களின் விருப்பங்கள்

      மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

      மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

      யானை - சில சுவையான தகவல்கள்

      ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

      புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

      நான்கு வகை மனிதர்கள்

      தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

      மாபாவியோர் வாழும் மதுரை

      கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

      தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

      குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

      மூன்று வகை மனிதர்கள்

      உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


    சிறப்புப் பகுதிகள்





    முதன்மைப் படைப்பாளர்கள்

    வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


    சிரிக்க சிரிக்க
      எரிப்பதா? புதைப்பதா?
      அறிவை வைக்க மறந்துட்டானே...!
      செத்தும் செலவு வைப்பாள் காதலி!
      வீரப்பலகாரம் தெரியுமா?
      உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
      இலையுதிர் காலம் வராது!
      கண்ணதாசனின் நகைச்சுவைகள்
      குறைச்சுத்தான் எடை போடறாரு...!
      அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
      குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
      இடத்தைக் காலி பண்ணுங்க...!
      சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
      மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
      மாபாவியோர் வாழும் மதுரை
      இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
      ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
      அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
      ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
      கவிஞரை விடக் கலைஞர்?
      பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
      கடைசியாகக் கிடைத்த தகவல்!
      மூன்றாம் தர ஆட்சி
      பெயர்தான் கெட்டுப் போகிறது!
      தபால்காரர் வேலை!
      எலிக்கு ஊசி போட்டாச்சா?
      சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
      சம அளவு என்றால்...?
      குறள் யாருக்காக...?
      எலி திருமணம் செய்து கொண்டால்?
      யாருக்கு உங்க ஓட்டு?
      வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
      கடவுளுக்குப் புரியவில்லை...?
      முதலாளி... மூளையிருக்கா...?
      மூன்று வரங்கள்
      கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
      நான் வழக்கறிஞர்
      பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
      பொழைக்கத் தெரிஞ்சவன்
      காதல்... மொழிகள்
    குட்டிக்கதைகள்
      எல்லாம் நன்மைக்கே...!
      மனிதர்களது தகுதி அறிய...
      உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
      இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
      அழுது புலம்பி என்ன பயன்?
      புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
      கடவுளைக் காண உதவும் கண்ணாடி
      தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
      உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
      ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
      அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
      கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
      எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
      சிங்கத்திற்கு வாழைப்பழம்!
      வலை வீசிப் பிடித்த வேலை
      சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
      இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
      கல்லெறிந்தவனுக்கு பழமா?
      சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
      வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
      ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
      அக்காவை மணந்த ஏழை?
      சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
      இராமன் சாப்பாட்டு இராமனா?
      சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
      புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
      பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
      தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
      கழுதையின் புத்திசாலித்தனம்
      விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
      தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
      சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
      திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
      புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
      இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
      ஆணவத்தால் வந்த அழிவு!
      சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
      சொர்க்க வாசல் திறக்குமா...?
      வழுக்கைத் தலைக்கு மருந்து
      மனைவிக்குப் பயப்படாதவர்
      சிங்கக்கறி வேண்டுமா...?
      வேட்டைநாயின் வருத்தம்
      மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
      கோவணத்திற்காக ஓடிய சீடன்
      கடவுள் ரசித்த கதை
      புத்தர் மௌனமாக இருக்கலாமா?
      குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
      சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
      தேங்காய் சிதறுகாயான கதை
      அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
      அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
      கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
      சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
      அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
      விமானத்தில் பறந்த கஞ்சன்
      நாய்களுக்கு அனுமதி இல்லை
      வடைக்கடைப் பொருளாதாரம்
    ஆன்மிகம் - இந்து சமயம்
      ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
      தானம் செய்வதால் வரும் பலன்கள்
      முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
      பிரதோஷம் எப்படி விஷேசமானது?
      விநாயகர் சில சுவையான தகவல்கள்
      சிவராத்திரி விஷேசமானது ஏன்?
      முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
      தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
      கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
      எப்படி வந்தது தீபாவளி?
      தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
      ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
      ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
      அனுமனுக்கு வடை மாலை ஏன்?
      திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
      விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
      கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
      சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
      முருகா என்றால் என்ன கிடைக்கும்?
      குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
      விபூதியின் தத்துவம்
      கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
      தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
      கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
      இறைவன் ஆடிய நடனங்கள்
      யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
      செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
      கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
      விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
      இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
      நவராத்திரி பூஜை ஏன்?
      வேள்விகளும் பலன்களும்
      காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
      பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
      அம்பலப்புழா பால் பாயாசம்
      துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
      சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
      ஈசன் உபதேசித்தத் தலங்கள்
      பரமபதம் விளையாட்டு ஏன்?
      வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
      பதின்மூன்று வகை சாபங்கள்
      இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
      சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
      பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
      சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
      உணவு வழித் தோசங்கள்
      திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
      மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
      பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
      நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
      சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
      மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
      இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
      பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
      கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
      அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
      தீர்க்க சுமங்கலி பவா


    தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                            


    இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
    Creative Commons License
    This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License