புலம்பலுக்கு ஈடாகப் புலம்பெயர்தல் மகிழ்ச்சியை பரிசாகத் தரவில்லை. மாறாகப் போராட்டங்களை எண்ணற்ற கோணங்களில் வியாபித்துள்ளது என்பதனைப் புலம்பெயர் எழுத்தாளர்களின் மற்றுமொரு வடிவமான இடம்பெயர்ந்த சூழல் சார்ந்த சிறுகதைகள் சுட்டிக்காட்டுகின்றன.
வாழ்வியல் சூழல் தமக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், புலம்பெயர்ந்தவர்கள் நம்மைச் சுரண்ட வந்தவர்கள் என்ற ஏளனப்பார்வையும் அதனால் ஏற்படுகின்ற போராட்டங்களும் விரக்தியும் ஏராளம். வேற்றுமொழியைக் கற்றுக்கொள்வதின் கட்டாயமும் அதன் சிக்கல்களும் வேற்றுக்கலாச்சார வாழ்வியல் தமக்கும் புலம்பெயர் நாடுகளில் பிறந்த தமது பிள்ளைகளுக்குமான மொழி, கலை, கலாச்சாரப் போராட்டம் தமது தாய்நாட்டுக் கல்விக்குத் தகுதியற்ற வேலைவாய்ப்பும், அதனால் விளையும் உளவியல் சிக்கலும் என எண்ணற்ற காரணிகளை கற்பனை என்ற வடிவத்திலுள்ள சிறுகதைகளில் புனைப்பெயரில் நிஜத்தைப் பதிவு செய்து ஆறுதலடைகின்றனர் எனலாம்.
இதற்குச் சான்றாக;
ஞானம் மற்றும் தமிழருவி - வாணமதி (மதிவதனி என்ற இயற்பெயர் கொண்டவர் சுவிற்சர்லாந்து)
ஒரு கடிதத்தின் விலை - கே. எஸ். சுதாகர் (ஆஸ்திரேலியா)
போன்ற புலம் பெயர் எழுத்தாளர்களின் சிறுகதைகளில் இடம் பெயர்ந்த சூழல் சார்ந்த உட்கருத்துக்களைக் கண்டுகொள்ள முடிகிறது.காலத்திற்குக் காலம் மாற்றமுற்ற சமூக அமைப்பு நிமிடத்துக்கு நிமிடம் வேகமாகச் சமூகச் சூழலைத் தர நிர்ணயம் செய்வதில் போட்டாபோட்டி போடுகிறது. அதற்கு ஏற்பவே புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறுகதைகளும் கலாச்சாரங்களோடும், இலக்கியப் பாரம்பரியங்களுடனும், மொழிகளுடனும் தொடர்புறுகின்றன. தமது புதிய உணர்வுகளையும் அனுபவங்களையும் இடத்துக்குத் தக்கபடி எழுத்தின் ஊடாக வரிவடிவம் கொடுக்கும் சிறுகதை எழுத்தாளர்கள் இலைமறைகாயாக நிறபேதம், இனப்பயங்கரவாதம், புதியபண்பாடு, பொருளாதார நெருக்கடிகள், வேலை வாய்ப்புத் திண்டாட்டம், அந்நியநாட்டில் ஏற்படும் பயம் மற்றும் அங்கலாய்ப்பு போன்ற நாளாந்த போராட்டங்களையும் பதிவாக்கத் தவறவில்லை.
புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறுகதைகளில் அதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தினைப் பிரதிபலிப்பதாக சிறுகதை ஆய்வாளர்கள் விமர்சிக்கின்றனர். அதினை லூக்கோஸ்லாவியா எழுத்தாளர் மிலன்குண்டோ அதிகாரத்துக்கு எதிரான போராட்டம் என்பது மறதிக்கு ஞாபங்களின் போராட்டம் என்று குறிப்பிடுகிறார். எத்தகைய ஆழமான கருத்தை உட்பதித்துள்ளது என்பதைப் புலம்பெயர் சிறுகதை எழுத்தாளர்களின் கதைகள் கண்முன்னே தோன்றி சாட்சியமாகின்றன. ஆகமொத்தம் புலம்பெயர் எழுத்தாளர்கள் அதிகாரத்துக்கு எதிரானவர்களாகவே இருக்கின்றனர். அதனால் தான் அவர்களின் சிறுகதை இலக்கியங்களும் தமக்கென ஒரு இடத்தினை பெற்றுவிட்டது எனலாம்.
அந்தக் காலவோட்டம் காலகதியில் காணாமல் போய்விட்டன. இன்றைய யுகத்தில் புலம்பெயர்தல் என்பது உயிரைத் தக்கவைப்பதுக்கான இடப்பெயர்வாகவே உள்ளது. அரசியல் தஞ்சம் கோரி இடம் பெயர்ந்தவர்கள், காலனியாதிக்க விளைவுகளின் பொருட்டு குடிபெயர்ந்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், சென்ற நாட்டிலேயே குடியுரிமை பெற்றவர்கள் எனப்பட்டியலிட்டு இதனுள் அடங்குகின்ற யாவருமே புலம் பெயர்ந்தவர்களே. சிறப்பாக வரையறுக்கின், ஒரே அரசியல் பூகோள எல்லையை விட்டுப் பெயர்ந்து சமூக அரசியல் பண்பாட்டுச் சூழ்நிலைகளால் பெரிதும் வேறுபட்ட பிரதேசங்களில் வாழ நேரிடுகிறவர்களை குறிக்கிறது.
இவ்வாறு வாழ நேரிடுகிறவர்களால் படைக்கப்படும் இலக்கியங்களைப் புலம்பெயர் இலக்கியங்கள் அல்லது புலம் பெயர்ந்தோர் இலக்கியங்கள் என்ற சொற்றொடர் கொண்டு அழைக்கின்றோம். இதற்குள் முத்தாக மிளிரும் இலக்கியம் "புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறுகதைகள்"ஆகும்.
புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறுகதைகள் என்றவுடன் யாவருக்கும் கண்முன்னே கண்ணாடியாகத் தெரிபவர் புதுமைப்பித்தனே ஆவார். முதல்முதலாகப் புலம் பெயர்ந்தவர்களைப் பற்றி சிறுகதை எழுதி, புலம்பெயர் எழுத்தளர்களின் சிறுகதைகளுக்கு மையக்கல்லாக விளங்கியுள்ளார்.
தமிழ்ச்சமுதாயம் அண்மைக்காலம் வரை புலம்பெயர்தலை அறியாத சுயத்தின் சமூகமாகவே வாழ்ந்து வந்துள்ளது. ஆனால் சங்க இலக்கியத்தில் வர்ணிக்கப்படும் மாக்களாக வந்தவர்கள் அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் இலங்கையில் குடியேற்றப்பட்டவர்கள். இவர்கள் இலங்கை நாட்டுக்கு உரிமையானவர்களை துரத்தியடித்து புலம்பலைப் பரிசாகவும், புலம்பெயர்தலை வரமாகவும் கொடுத்து விட்டனர் என்றே கூற முடிகிறது.
இதனால் புலம்பெயர்தலும் + புலம்பலும் இணைந்த சிறுகதைகள் புலம்பெயர் எழுத்தாளர்களின் உயிர்நாடியாகிவிட்டது எனலாம். விதியின் வடிவோ அல்லது சூட்சியின் பிடியோ என்று விடை காணமுடியாத ஏக்கங்களுடன் தாம் புலம்பெயர்ந்த நாட்டின் சூழலையும், தமக்குள் பதிவாகியுள்ள தாய்நாட்டின் அனைத்து உணர்வுகளையும் ஒன்றிணைக்க முடியாமல், தேடலும், விரக்தியும், ஏக்கமும், வெறுமையும் நினைந்த உணர்வலைகளுக்கு கதாப்பாத்திரங்கள் ஊடாகக் கதை சொல்கின்றனர் எனலாம்.
காலத்தின் கட்டாயத்தில் பிறக்கின்ற இலக்கியங்கள் இப்படித்தான் இருக்குமென பறைசாற்றுவதற்குப் புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறுகதைகளும் சாட்சியமாகும். புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை...
1. தாயகம் சார்ந்த சிறுகதைகள்
2. இடம்பெயர்ந்த சூழல் சார்ந்த சிறுகதைகள்
என்று வகுத்துக்கொள்ள முடிகின்றது.
தாயகம் சார்ந்த சிறுகதைகள் அரசியல் ஒடுக்குமுறைகள் மற்றும் இன அழிப்பை அடையாளப்படுத்துபவையாகவும், இழக்க அல்லது ஏமாற்ற முடியாத, தமது தாய்நாட்டின் ஏக்கங்களும் நினைவுகளும் சார்ந்ததாகவும், தமது மண்வாசனையை மறக்கமுடியாத தேடலின் சிறுகதைகளாகவும் சித்தரித்துக் கொள்கின்றனர்.
எடுத்துக்காட்டாக;
"பொ. கருணாமூர்த்தியின் போதிமரம் "என்ற சிறுகதை புலம்பெயர் தமிழர் மீது திணித்துள்ள பண்பாட்டுச் சிதைவினைச் சுட்டிக்காட்டுகிறது.
"ஒருமுறை சில நண்பர்களுடன் ஹம்போக்கில் வெளிநாட்டுக் குடியிருப்பு ஒன்றில் நிறையத் தமிழர்கள் இருக்கின்றார்கள் எனக் கேள்விப்பட்டு, அந்த தமிழர்களைத் தேடிச் சென்றேன். எதேச்சையாகஅவர்கள் குசினிக்குள் நுழைந்த எனக்கு பேரதிர்ச்சி!
எங்கள் பள்ளிக்கூடத்தில் என்னை விட இரண்டு வகுப்புகள் ஜூனியராகப் படித்த ஐயர் பொடியன் ஒருவன் பெரிய கோழியொன்றை மல்லாக்கப் போட்டு வகிர்ந்து கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் அசடு வழிந்து கொண்டே சொன்னான். என்ன செய்யிறது இங்க எல்லாத்தையும் மாத்தவேண்டியதாகப் போச்சு...!”
இந்தச் சிறுகதையில் தாயகத்தில் கட்டிக்காக்கப்பட்ட கலை, கலாச்சாரக் காரணிகள் காலத்தின் கட்டாயத்துக்குள் சிதைக்கப்படுவதை நகைச்சுவை இளையோடியதைப் போலச் சொன்னாலும் வாசகர் பலர் சுர் என்ற வலியை உணர்ந்திருப்பர். இதுதான் புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறுகதைகளின் கம்பீரம் எனலாம்.
இவரைப்போல
அன்னை மண் - ச. வே. பஞ்சாட்சரம் (கனடா)
கூடுகள் சிதைந்தபோது - அகில் (கனடா)
ஆத்மாவைத்தொலைத்தவர்கள் - ஆவூரான் s (ஆஸ்திரேலியா)
ஆதிரை - சயந்தன் (சுவிற்சர்லாந்து)
உயரப்பறக்கும் காகங்கள் - ஆசி.சுந்தராஜா (ஆஸ்திரேலியா)
அவள் ஒரு தமிழ்ப்பெண் - முகில் கண்ணன் (பிரான்ஸ்)
போன்ற எண்ணற்ற புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறுகதைகள், ஈழத்தின் ஏக்கத்தைப் புலம்பலாக ஒப்புவிக்கின்றது எனலாம். புலம்பலுக்கு ஈடாக புலம்பெயர்தல் மகிழ்ச்சியைப் பரிசாகத் தரவில்லை. மாறாகப் போராட்டங்களை எண்ணற்ற கோணங்களில் வியாபித்துள்ளது என்பதனை புலம்பெயர் எழுத்தாளர்களின் மற்றுமொரு வடிவமான இடம்பெயர்ந்த சூழல் சார்ந்த சிறுகதைகள் சுட்டிக்காட்டுகின்றன.