தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
15. கல்கி சிறுகதைகளில் பெண்ணியச் சிந்தனைகள்
முனைவர் ப. சித்ரா
முன்னுரை
குடும்பம் என்பது சமுதாயத்தின் அடிப்படைக்கூறு இக்குடும்ப நிறுவனத்தைச் செம்மைப்பட நிர்வகிப்பவர்கள் பெண்கள். பெண்களின் ஆளுமையையும், அறிவையும் பொறுத்தே ஒரு குடும்பத்தின் நல்லதும் கெட்டதும் அமைகிறது. பெண்மையைப் பற்றிக் கூற வேண்டுமென்றால் உணர்ச்சிகளைப் பேணுவது, உள்ளன்பைப் போற்றுவது, வேதனையைத் தாங்குவது, தன்னையே அர்ப்பணம் செய்வது இவை எல்லாம் ஒரு பெண்ணின் வாழ்க்கை என்று கூறலாம்.
பெண் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை தொடக்கத்தில் துணை இருக்காது. நம் வாழ்வின் நடுப்பகுதியல் இன்பம் இருக்காது. வாழ்வின் இறுதிப்பகுதியில் ஆறுதல் இருக்காது. ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் நேற்று - இன்று - நாளை என்ற முக்காலங்களுடனும் இணைந்தது. இக்காலங்களில் பெண்ணின் இன்றியமையாமையை உணர வேண்டும். பெண்கள் இன்றி இவ்வுலகம் இல்லை. இத்தகைய சிறப்புமிக்க பெண்களின் நிலையைக் கல்கியின் சில சிறுகதைகளைக் கொண்டு ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கல்கி
தமிழ்ச்சிறுகதைக்கு ஆழத்தை சாத்ததியமாக்கியவர் புதுமைப்பித்தன் என்றாலும், தமிழ்ச்சிறுகதையின் அகலத்தை சாத்தியமாக்கியவர் கல்கியே ஆவார். அதிலும் குறிப்பாக அடுப்படியே கதியெனக் கிடந்த பெண்கள் படிக்கவும், நிகழ்கால அரசியல், வரலாறு ஆகியவற்றை அறியவும், பேசவும், விவாதம் செய்யவுமான சூழலை உருவாக்கியது கல்கியின் எழுத்துகளே ஆகும்.
பெண்ணியம்
இலத்தின் மொழியில் ‘பெண்’ என்று பொருள்தரும் ‘பெமினா’ என்ற சொல்லிருந்து பெண்ணியம் என்ற சொல் தோன்றியது. பதினேழாம் நூற்றாண்டுகளில் பெண்ணியம் என்பதைக் குறிக்க ‘மகளிரியம்’ என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பெண் சமத்துவம் வேண்டிப் போராடும் பெண்ணியக்கங்களையும் செயல்பாடுகளையுமே பெண்ணியம் என்று கூறுகின்றார்கள்.
பெண்ணுரிமை
‘மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்தல் வேண்டும்’ என்கிறார் கவிமணி. நாட்டிலுள்ள மண், மொழி, மதம் என அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது பெண்மையின் பெயரென்றால் அது மிகையன்று.
நாடு வளம் பெற பெண் சிறத்தல் வேண்டும். பெண்ணைப் போற்றிய நாடு அறிவினிலும், தரத்தினிலும் மாற்றம் காணும். பெண் போற்றப்பட வேண்டுமாயின், ஆண்கள் போன்று அனைத்து உரிமைகளையும் பெண்களும் பெற வேண்டும். அவள் சுயமாகச் சிந்திக்க, செயல்பட, அறிவை விரிவாக்கப் பெண்ணுக்கு உரிமை மிக மிக அவசியாமாகும்.
வாழும் உரிமையை உலகில் அனைவருக்கும் சமமாகவே இறைவன் தந்துள்ளான். காதலுரிமை, திருமண உரிமை, பொருளாதார உரிமை, சொத்துரிமை, கல்வி உரிமை போன்ற பல உரிமைகள் பெண்ணுக்கு இருந்தால், சுதந்திர நாட்டில் பெண் சுதந்திரமாக வாழ முடியும்.
பெண்ணடிமை நீங்கப் பெண் அனைத்து உரிமைகளையும் பெறுதல் வேண்டும். பெண் முன்னேறினால் நாடு முன்னேறும். சமுதாயம் முன்னேறினால் நாடு முன்னேறும், அனைத்தும் முன்னேறினால் ஓருலக ஆட்சி மலரவும் வாய்ப்புள்ளன.
பெண் பாத்திரத்தை முன்னிலைப்படுத்திய சிறுகதைகள்
கேதாரியின் தாயார் - ‘அம்மாமி அம்மாள்’
‘அம்மாமி அப்பளத்தின்’ அடையாளம், தன் கணவனால் மூன்று வயது குழந்தையுடன் கைவிடப்பட்டவள், தன் மகனுக்காகவே வாழ்ந்தவள், விட்டுப்போன கணவனின் இறப்பால் விதவைக் கோலம். அதனுடன் மொட்டையும் அடிக்கப்படுதல், தன் தாயார் அபசகுனமாக மாறிய அவலநிலையை நினைத்தே கேதாரி இறந்துபோதல், அதனால் கேதாரியின் மனைவியும் அபசகுனமான விதைவையாக்கப்படுதல்.
கடிதமும் கண்ணீரும்
அன்னப்பூரணி தேவியின் வாழ்க்கையில் மூன்று நிலைகள்.
ஆறு வயதில் பாலிய விவாகம்
ஒன்பது வயதில் விதவைக் கோலம்
கல்யறிவு இல்லாமையால் கைவிட்டுப்போன மறுவாழ்க்கை
பல்வேறு துன்பத்திற்கு ஆளான பெண்களின் ஆசிரமத் தலைவி
காதலி ஒன்றே அனைத்திற்கும் அஸ்திவாரம் என்று கூறுபவள்.
கமலா கல்யாணம்
கமலா வளர்ப்பு பெற்றோரால் வளர்க்கப்பட்டவள்
வயதானவரோடு திருமணம் நிச்சயம் - திருமணத்தை சமூக ஆர்வலர்கள் தடுத்தல் - அவ்வயோதிகரே கமலாவின் தந்தையாக இருத்தல் - திருமணத்தைத் தடுத்த ஆர்வலர்களில் ஒருவரான கல்யாணசுந்தரத்தை திருமணம் செய்து கொள்ளுதல்.
வீணை பவாணி
பவாணி ஓர் அழகுப் பெட்டகம், அழகுக்கு அழகு சேர்த்து பவாணியின் இசையும், பாட்டும் மொத்தத்தில் இவள் ஓர் தெய்வப்பிறவி. ஆனாலும் சாதாரண பெண்ணாகக் கலைக்குழுவில் பிறந்து, திருமணமே செய்து கொள்ளாமல் பெரிய மனிதர் ஒருவருடன் வாழ்தல், இருவருக்கும் மனவருத்தம் ஏற்படுதல், அவரால் தன் வாழ்க்கையை இழந்து, அவருடைய சந்தேகத்திற்கு இடமாகி, அவர் இறந்ததாக நினைத்து அவர் மீது கொண்ட உள்ளன்பால் உயிரைத் தானே மாய்த்துக் கொண்டவள்.
மேற்கூறப்பட்ட நான்கு கதைகளில் வரும் நான்கு பெண்களும் வேறு வேறு நிலையில் சொல்லப்பட்டிருந்தாலும், அனைவரும் துன்பத்தை அனுபவித்தவர்களே. இவர்களைக் கொண்டு கல்கி சுதந்திரப் போராட்டக் காலங்களில் வாழ்ந்த பெண்களின் நிலையை சிறப்பாக சித்தரித்துக் காட்டியுள்ளார்.
பாலிய விவாகம்
அறியாப் பருவமாகிய விளையாட்டு பிள்ளைப் பருவத்தில் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதே பாலிய விவாகமாகும். இவ்வாறு செய்து வைப்பது ஓர் முறையற்ற செயலாகும். இதனைக் கல்கி கடிதமும் கண்ணீரும் கதையில்,
“ஆறு வயதிலே எனக்குக் கல்யாணம் பண்ணினார்களாம்
ஒன்பது வயதில் கைம்பெண் ஆனேன் - அதெல்லாம்
எனக்குக் கனவு மாதிரிகூட ஞாபகத்தில் இல்லை” (கல்கி முத்துக்கள் பத்து - ப. 56)
என்று பால்ய விவாகத்திற்கு ஆளான அன்னப்பூரணி கூறுவதாக படைத்துக் காட்டியுள்ளார்.
பொருந்தாத் திருமணம்
“பெருந்திணை என்பது பொருந்தா காமம்” என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். அதாவது, வயதில் மூத்தவர் ஒரு இளம் பெண்ணை மணப்பதோ, வயதில் குறைந்த வயதுடைய ஆண் வயது முதிர்ந்த பெண்ணை மணப்பது பொருந்தாத திருமணம். இவற்றைக் கல்கி கமலா கல்யாணம் என்ற சிறுகதையில்,
“ஒரு நாள் திருவளர்ச்சோலைக் கோவிலில் நடக்கப்போகும் ஒரு கல்யாணத்தைப் பற்றி எங்களுக்குச் செய்தி வந்தது. ஐம்பத்தைந்து வயதான ஒரு கிழவருக்கும் பன்னிரண்டு வயதுப் பெண்ணுக்கும் கல்யாணம் நடக்கப் போகிறதா வதந்தி உலாவிற்று. மாமண்டூரில் யாரோ ஒரு உபாத்தியாயராம்; சம்சாரியாம். அவருடைய மூத்த பெண் கமலாவைத்தான் இப்படி ஒரு கிழவருக்கு பலிகொடுக்க ஏற்பாடாகியிருந்ததாம்” (கல்கி முத்துக்கள் பத்து - ப. 79)
என்று கமலாவிற்கு நடைபெறவிருந்த, பொருந்தாத திருமணத்தைக் கதையில் வரும் சமூக ஆர்வலர்களின் வாயிலாக வெளிப்படுத்தி இருப்பதும், அவற்றைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டுள்ள செய்திகளின் வழி கல்கியும் இதனை எதிர்த்து இருப்பதை நன்கு அறிந்துகொள்ள முடிகிறது.
கைம்பெண் நிலை
கணவனுடன் வாழ்ந்தாலும், கணவனால் கைவிடப்பட்டு வாழ்ந்தாலும் பெண்கள் கணவன் இறந்தவுடன் கைம்பெண்ணாகப் படுவது சமூகத்தின் நிகழ்த்தப்படும் ஒரு மரபாகும். கல்கி சிறுகதையின் கேதாரியின் தாயாரும், அன்னப்பூரணி தேவியும் கைம்பெண்ணாக்கப்பட்டவர்களே, அவர்களின் நிலையை,
“கேதாரி திரும்பி வந்தான். வெள்ளைப் புடவை அணிந்து மொட்டைத் தலையை முக்காடால் மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்த பாகீரதி அம்மாமியை உற்றுப் பார்த்தான்.”
“ஐயோ! அம்மா! என்று பயங்கரமாக ஒரு கூச்சல் போட்டு விட்டுத் தொப்பென்று கீழே உட்கார்ந்தான்”.
“சங்கரா! அது என்ன சாஸ்திரமடா அது? அநாதையாய் விட்டுப்போய்ப் பதினெட்டு வருஷம் திரும்பிப் பாராமலிருந்த புருஷன் செத்ததற்காகத் தலையை மொட்டையடிக்கச் சொல்லும் சாஸ்திரம்! அதைக் கொண்டு வாடா, தீயில் போட்டுக் கொளுத்துவோம்!” (கல்கி முத்துக்கள் பத்து பக். 36, 37)
என்று கேதாரியின் வாயிலாகவும்,
“அவ்வளவு இளம்வயதில் விதவையானதில் ஒரு சௌகரியம் இருந்தது. நாலைந்து வருஷத்துக்குப் பிறகு அப்படி நேர்ந்திருந்தால் எல்லாரையும் போல் என்னையும் அலங்கோலம் செய்திருப்பார்கள் ரொம்பச் சிறு வயதானபடியால் அப்படி ஒன்றும் செய்யாமல் விட்டிருந்தார்கள்” (கல்கி முத்துக்கள் பத்து - ப. 56)
என்று அன்னப்பூரணியின் வாயிலாக, அவர்களுக்கு நடக்கவிருந்த விதவைக் கோலத்தை பற்றியும் கல்கி தெளிவாகச் சித்தரித்துள்ளார்.
பெண் கல்வி
ஆண்டவனின் படைப்பில் அரிது ஒன்று உண்டென்றால், அது பெண்தான் என்பார் காந்தியடிகள். ‘ஓர் ஆணுக்குக் கல்வி அளிப்பது குடும்பத்தில் ஒருவருக்குக் கல்வி அளிப்பதாகும். ஆனால் ஒரு பெண்ணுக்குக் கல்வி அளிப்பது அக்குடும்பத்திற்கே கல்வி அளிப்பது போலாகும்” என்று நேரு கூறியுள்ளார்.
“பெண்கட்குக் கல்வி வேண்டும்
குடித்தனம் பேணுதற்கே
பெண்கட்டுக் கல்வி வேண்டும்
மக்களைப் பேணுதற்கே
பெண்கட்குக் கல்வி வேண்டும்.
உலகினைப் பேணுதற்கே!”
என்று பாரதிதாசன் கூறியுள்ளார்.
இவ்வாறு அறிஞர் பெருமக்களால் சிறப்பித்து கூறப்பட்ட பெண் கல்வியின் சிறப்பினை,
“அன்னப்பூரணியின் வாழ்க்கை வரலாறோ, எல்லாரும் பிரசித்தமாக அறிந்த விஷயம். ஒன்பதாவது வயதில், நினைவு தெரியுமுன்பே விதவைக் கொடுமைக்கு ஆளாகும் துர்பாக்கியத்தைப் பெற்றவர் அவர். அவருடைய அந்த துர்பாக்கியமே பெண் குலத்தின் நற்பாக்கியம் ஆயிற்று பிற்காலத்தில் அவள் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து, முயற்சியுடன் படித்து, கடைசியாக பி.ஏ; எல். டி. பட்டமும் பெற்றார். அதுமுதல், இளம்பிராயத்தில் கணவனை இழந்தவர்கள், கணவன்மார்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள், அநாதைப் பெண்கள் முதலியோருக்குத் தொண்டு செய்வதிலேயே தமது வாணாளைச் செலவிட்டு வந்தார். (கல்கி முத்துக்கள் பத்து ப. 52)
என்று கல்கி அன்னபூரணி பாத்திரத்தின் வாயிலாக, பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும், சிறப்பினை வெளிப்படுத்தியிருப்பது கல்கியின் சிறந்த சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளது.
உயர்ந்த செயல்
நீ இன்றி நான் இல்லை, நான் இன்றி நீயில்லை என்று வாழும் இல்லற வாழ்வில், கணவன் இறந்து விட்டால், கணவன் மீது கொண்ட அன்பால் பெண்கள் தன் உயிரை விடவும் துணிவது உண்டு. ஆனால் கலைக் குடும்பத்தில் பிறந்த ஓர் பெண் திருமணம் செய்து கொள்ளாமல், ஒருவர் மீது அன்பு கொண்டு அவருக்காகவே தன் உயிரை விடுவதை, வீணை பவானியில்,
“அன்புள்ள கந்தப்ப அண்ணனுக்குத் தங்கச்சி பவானி எழுதிக் கொண்டது. என் பிராண நாயகரைப் பிரிந்து நான் உயிர் வாழ விரும்பவில்லை. இன்றைக்கு நான் செய்யும் கச்சேரிதான் கடைசிக் கச்சேரி. அவர் எனக்கு அன்புடன் வாங்கிக் கொடுத்த வைர மோதிரத்திலிருந்த வைரங்களை எடுத்துப் பொடி பண்ணி வைத்திருக்கிறேன். கச்சேரியிலிருந்து வந்ததும் சாப்பிட்டு விடுவேன்”
(கல்கி முத்துக்கள் பத்து - ப. 168)
என்று கல்கி பவானியின் செயலை உயர்வாகக் கூறியிருப்பது எண்ணத்தக்கது.
முடிவுரை/b>
ஒவ்வொரு கால கட்டத்திலும் புதுப் புதுப் பிரச்சனைகளும் தொல்லைகளும், துன்பங்களும், தீமைகளும் சமுதாயத்தில் பெண்களுக்கு ஏற்படுவது உண்டு. அவற்றை வெளிப்படுத்துவதற்காகவும் அவற்றோடு போராடுவதற்காகவும் பேனா முனையால் முணைந்தவர் கல்கி ஆவார். சிறுகதைகளில் காட்டப்பட்ட பெண்கள் நிலை துன்பமுடையதாக இருந்தாலும், துன்பத்தின் வாயிலாக பெண்களின் பிரச்சனைக்கு தீர்வுக் கூறியிருப்பதன் மூலம் கல்கி ஓர் சமூகப்படைப்பாளான் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றன.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.