தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
16. வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் சிறுகதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
முனைவர் வெ. பானுமதி
இலக்கியம் என்பது மனித வாழ்க்கையினை எடுத்துக்காட்டும் காலக் கண்ணாடியாகும் இவ்விலக்கியம் சிறந்த செய்திப் பதிவுக் கருவியாகும், படைப்பாளன் தான் கண்ட மக்களின் வாழ்க்கைச் சிக்கலைப் படைப்பில் ஓர் ஓவியமாகத் தீட்டிக் காட்டுகின்றார். அதனால்தான் இலக்கியம் சமுதாயத்தையொட்டி இயங்குகிற பெரிய கற்றலாகக் கருதப்படுகிறது.
படைப்பாளன் தான் கண்ட மனித இனத்தின் நிகழ்வுகளைத் தன்னுடைய படைப்பிற்குக் கருவாக மேற்கொள்கிறான். அவ்வாறு மேற்கொள்ளும் பொழுது தன் சிந்தனையையும், முழு பட்டறிவையும் சேர்த்து உயர்க்கலை வடிவமாக்குகிறான். அம்மக்களின் நிறை குறைகளை குறிப்பாகவோ, வெளிப்படையாகவோ வெளிப்படுத்துகிறான், அத்துடன் அச்சிக்களுக்கு தீர்வு காணவும் விழைகிறான்.
தற்கால இலக்கியங்களும் சமூக நிகழ்வுகளையே இன்றியமையாதக் கருப்பொருளாகக் கொண்டு படைக்கப்படுகின்றன.
சமுதாயம்
தமிழ்ச்சான்றோர் அன்றைய சமுதாயத்தின் இயல்பிற்கும், மரபிற்கும் ஏற்ப மக்கள் வாழ்க்கை முறையை பாகுபாடு செய்துள்ளார். தொல்காப்பியர்.
“வழக்கெனப் படுவது உயர்ந்தோர் பேற்றே
நிகழ்ச்சி அவர்கட் டாகலான்” (தொல்-பொருளதிகாரம்-647)
என்கிறார்.
இன்றைய சமூதாயத்தில் ஒரு மனிதன் வாழ பல உரிமைகள் உள்ளன. அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். சில சமுதாயத்தில் உள்ள மக்களுக்கு மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன, அவர்களால் அச்சமுதாயம் சமத்துவமாக வாழ முடியாது இதில் தலையிட்டு தீர்வுக்கான, சமுதாயம் தேவைப்படுகிறது என்கிறார். (மனித உரிமைகள் - வ.ந.விஸ்வநாதன் - ப: 150)
இங்ஙனம் சமுதாயம் பற்றியக் கருத்துக்களை பலரும் கூறியுள்ளளனர்.
வாழ்க்கை ஒரு இராத்திரியே. தங்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலம் மிகக் குறுகிய காலம், இவற்றுள் தனித்துவமிக்க வாழ்க்கை வாழ்பவர்கள் ஒரு சிலரே. நாம் சேர்க்கின்ற செல்வம் நம்மை அடையாளப்படுத்துவதில்லை. நம் செயல்பாடுகளே நம்மை அடையாளப்படுத்துகின்றன அவ்விதம் தன் வாழ்வில், பணியில், நேயப்பண்பால் வாழ்வில் உயர்ந்து கொண்டு வருபவர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள்.
இவருடைய ‘அரிதாரம்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் காணப்படும் சமூகச் சிந்தனைகள் சிலவற்றைக் காணலாம். இச்சிறுகதைகள் பிரபலமான தாமரை, இதயம் பேசுகிறது, புதியபார்வை, குமுதம், கணையாழி, ஆனந்தவிகடன், தினமணிகதிர் போன்ற பத்திரிக்கையில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பாகும். இக்கதைகளில் சமூகச் சிந்தனையாக, குருவுக்கும் சிஷ்யனுக்குமான உறவு, நம்பிக்கை, குருவின் மனமாற்றம், மனிதநேயமற்ற மனிதர்கள், மயானச் சிந்தனைகள், தன்னம்பிக்கைச் சிந்தனையையும் காணலாம்.
குருவுக்கும் சிஷ்யனுக்குமான உறவு
குருவுக்கும் சிஷ்யனுக்குமான உறவினை தலைமாணாக்கன் என்ற சிறுகதையில் காணலாம். இதில் குருவின் மீது மாணவனுக்கு உள்ள பற்று என்ன என்பதை மாணவன் தன் கட்டைவிரலை குருவிற்கு காணிக்கையாய் அளிக்கும் விசித்திரம் உலகிற்கு கூறும் நற்சிந்தனையாக உள்ளது. குருவானவர், சிஷ்யனுக்கு சிலைவைப்பது அதனினும் மேலான சிந்தனை. இவை அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள பற்றினை வெளிப்படுத்துன்றன.
மனித நேயச் சிந்தனை
“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” (ஒளையார்)
“உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்” (மணிமேகலை)
என்ற வரிகளின் வாயிலாக
மனிதப் படைப்பில் மகத்தானது மனிதநேயம் என்பதைக் காணலாம். இன்றைய வாழ்க்கையில் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய மனிதநேயமாக, புறநானூற்றில்
“நல்லது செய்தல் ஆற்றிராயினும்
அல்லது செய்தல் ஒப்புமின்” (புறநானூறு-195)
என்கிறார்.
வேற்றுமையில் ஒற்றுமைகாண விழைவதே மனிதநேயம், அறநெறிகாலச் சிந்தனை, பக்திகாலச் சிந்தனை, சிற்றிலக்கியக் காலச் சிந்தனை, இக்காலச் சிந்தனை அனைத்திலும் மனிதநேயம் பேசப்படுகிறது.
இறையன்புவின் “தலைமாணாக்கன்” கதையில், சிஷ்யன் குருவின் உயிரைக் காப்பாற்றுவதும் ‘மாயை’ சிறுகதையில் நெல்சன் மண்டேலாவை சிறந்த மனிதர் என ஒத்துக்கொள்ளும் மனிதநேயத்தையும் பார்க்கலாம்.
‘விபத்து’ என்ற கதையில், வடநாட்டைச் சார்ந்த தாரதத், தமிழ்நாட்டைச் சார்ந்த பிரதீப்புடன் கொண்ட உறவினை, நட்பினை வெளிப்படுத்துகின்றது. இதில் வேற்று மொழிகளிடையே உள்ள இனத்தின் ஒற்றுமையைக் காட்டுகின்றது.
‘வைக்கோல் கன்றுகள்’ என்ற கதையில், கந்தசாமியின் மனித நேயத்தை வெளிப்படுத்துகின்றார். தன் வீட்டிற்குப் பசியோடு வந்தவனுக்கு உணவிட்டு, தன் பண்ணையிலேயே வேலையும் கொடுத்து, அவனுக்குத் திருமணமும் செய்து வைக்கின்றார். பின் அவன் மனைவி இறந்தபின் அவன் குழந்தையையும் படிக்க வைக்கிறார். அணில் குட்டியைத் தூக்கிச் சென்று மருத்துவம் பார்த்து, அதன் உயிரைப் பிழைக்கச் செய்கிறார். கந்தசாமியின் பண்பின் வாயிலாக பிற உயிர்களிடத்தும் அன்பு காட்டும் மனிதநேய சிந்தனை வெளிப்படுகிறது.
தன்னம்பிக்கைச் சிந்தனை
வாழ்க்கையில் நம்பிக்கை தேவை. அதனை ஊட்டுவது இலக்கியம். அமைதியாக இருப்பதும், நம்பிக்கையுடன் செயல்படுவதிலும் மாபெரும் சக்தி மறைந்திருக்கிறது. முதலில் தன்னை உணரவேண்டும் என்கிறார். தன்னம்பிக்கையின் வெளிப்பாடே கடவுள் நம்பிக்கை என்கின்றனர். தன்னம்பிக்கை முதலில் தன்னை உணர்ந்து, பின்பு பிறரை உணர வைக்கிறது.
“உடையார் எனப்படுவது ஊக்கம் அஃது இல்லார்
உடையது உடையரோ மற்று” (குறள்)
“மனதில் உறுதி வேண்டும் வாக்கினில் இனிமைவேண்டும்” (பாரதியார் பாடல்கள்)
இவ்வரிகள் மனிதனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.
‘தலைமாணாக்கன்’ கதையில், சிஷ்யன் கட்டை விரல் இல்லாமல் வில்லைச் செலுத்த நம்பிக்கையோடு முயன்று வெற்றியடைகின்றான். ‘ஸ்தபதி’ கதையில் சிற்பியானவன் தன்னம்பிக்கையோடு சிற்பங்களைச் செதுக்கி உயர் நிலையையும், உலகில் புகழையும் பெறுகின்றான்.
“திருச்சிற்றம்பலம்” கதை தியாகராஜரிடம் உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. தான் பிறருக்கு கற்று கொடுத்த கலைக்காக அவர்களிடம் உதவி பெற வேண்டும் என நினைக்காமல் மனதில் உறுதியுடன் இருத்தல். தன் மகனுக்கு, தன் நடனக்கலையை கற்றுக் கொடுக்கும் பொழுது நிலைதடுமாறி விடுவோம் என்று இறுதிவரை கற்றுக் கொடுக்காத மனநிலையையும் காணலாம்.
சமூகம்
சமூகம் என்பது சமுதாயமே ஆகும். இச்சமுதாயத்தில் மனிதனின் மாறுபட்ட மனநிலையைக் காணலாம்.
“அரிதாரம்” என்ற உருவகக் கதையில், நாயின் வாயிலாக இன்றைய சமூகச் சீரழிவினைக் காணலாம். சாதிச்சண்டை, ஒற்றுமை இன்மை போன்றவற்றை விளக்கி, ஒற்றுமையினால் வெற்றி உறுதி என்ற தீர்வையும் இக்கதையில் காணலாம். “தலைமாணாக்கன்” கதையில் குருவானவர் தாழ்ந்த இனத்தவருடன் சமமாக உட்கார்ந்து, உயர்ந்த இடத்தில் உள்ள நான் சாப்பிடுவதா என்று நினைக்கின்ற தாழ்வான மனப்பான்மை உள்ளவரைக் காட்டுகின்றது.
‘பரிச்சயம்’ என்ற கதையில், மனித வாழ்வு நிலையற்றது என்ற சிந்தனையை வெளிப்படுத்துகிறார். நண்பனின் இறப்பை வெளிப்படுத்துகின்றார்.
‘பலவீனம்’ என்ற கதையில், கணவன் மனைவிக்கும் இடையில் உள்ள உறவினை ‘ஸ்நோபால்’ என்ற நாயின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். இதில் தன் மீது அன்பு கொண்டவர்கள் தன் மீது மட்டுமே அன்பு கொள்ள வேண்டும் என்று நினைக்கின்ற சமுகத்தைக் காட்டுகின்றார்.
‘கால்கள்’ என்ற சிறுகதையில், கர்வத்தால் சிந்திக்காமல் பிறரைத் துன்புறுத்துகின்றவன் துன்பப்படுவான் என்ற சமூக சிந்தனையை உணர்த்துகிறார்.
‘அழுக்கு’ என்ற கதையில், நம்பிக்கையே உண்மையாகும் பொழுது ஏது பொய்? என்ற சிந்தனை தாயின் மீது மகன் கொண்ட அன்பு, நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
‘மயானம்’ என்ற சிறுகதையில், உயிருக்கு விலையில்லை, மயானம் என்பது அமைதி பூங்கா. இறப்பினை விழாக்கோலமாக மாற்றுகின்ற மக்களின் மனநலச் சிந்தனை வெளிப்படுகிறது.
‘மாயை’ கதையில், நெல்சன்மண்டேலாவைப் புகழ்ந்தவர்கள். சென்னைக்கு வந்தபோது இனிமேல் கறுப்பர்களைத்தான் காணப்போகிறோம் என்ற நையாண்டியை வெளிப்படுத்தி, இதில் மனிதர்கள் மற்றும் மனம் உள்ளவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறார்.
‘தலைமாணாக்கன்’ என்ற சிறுகதையில், தான் உயர்நிலையை அடைய கற்றுக் கொடுத்தவர்களை கொலை செய்ய நினைக்கும் சமுதாயத்தைக் காட்டுகின்றார். இதில் குருவானவரை தனக்குச் சாதகமாக செயல்படவில்லை என்பதற்காகத் தீர்த்துக்கட்ட எண்ணுகின்ற மன இயல்பு சிந்தனை வெளிப்படுகின்றது.
இங்ஙனம் சமூகம், தன்னம்பிக்கை, மனிதநேயம், உறவு முறைகள், மனித இயல்புகள் போன்ற சிந்தனைகளை தூண்டக் கூடியதாக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் ‘அரிதாரம்’ சிறுகதைக் தொகுப்பு அமைந்துள்ளது.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.