தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
17. சிறுகதைகளில் சாதியநிலை சார்ந்த மாற்றங்கள்
முனைவர் வி. புனிதா
சமூக நீதி சார்ந்த புதிய சமத்துவம், பழைய மதிப்பான படிநிலை வேற்றுமை ஆகிய இரண்டிற்கும் இடையில் சாதியத்தாக்கம் மதிப்பு மாற்றம் பெறுவதை சிறுகதை ஆசிரியர்கள் சித்தரிக்கின்றனர். சிறுகதைகளை ஆராய்ந்து பார்க்கும் மதிப்பு மாறுதல் என்பது கீழ்கண்ட ஐந்து வகைகளில் வெளிப்பட்டுள்ளது.
1. அகமண மீறல்
2. உயர்சாதி மனப்பான்மை மாறுதல் பெறல்
3. உயர்வு தாழ்வு மோதல்
4. சமத்துவ எழுச்சி பெறல்
5. சாதிய பழக்க வழக்கங்கள் மாறல்
அகமண மீறல்
பழைய சாதியக் கட்டமைப்புக் கூறுகளில் ஒன்று அகமண முறை. இந்த அகமண முறையின் நெகிழ்ச்சியைச் சிறுகதைகள் சுட்டுகின்றன. அகமண முறைக்கு அடிப்படை சாதி ஆகும். சாதி என்னும் சொல்லுக்குப் பிரிவு என்பது பொருள். தொல்காப்பிய மரபியலில் வரும்
“நீர்வாழ் சாதியும் அது பெறற்கு உரிய”
எனும் நூற்பா இதனை விளக்கும்.
சங்க காலத்தில் தொழில் வழிப்பட்ட சாதிப்பிரிவுகள் இருந்தன.
“வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும்
அவன்கட் படுமே”
என்ற புறநானூற்றுப் பாடலில் வரும் கீழ்ப்பால் என்பது, கீழ்ச்சாதியையும் மேற்பால் என்பது, மேல் சாதியையும் குறிக்கின்றன. ஐங்குறுநூறு, அகநானூறு போன்ற அகத்துறை இலக்கியங்கள் குறிஞ்சி நிலத்துக் குறவன் நெய்தல் நிலத்து மீனவர் மகளை விரும்பி மணந்து கொண்டதாகக் கூறுகின்றன. குறவர் மீனவர்களிடையே வேறுபாடுகள் இல்லாமல் திருமணங்கள் நடைபெற்றன என்ற செய்தியை இது விளக்குகின்றது.
எனவே, தமிழ்நாட்டில் சங்ககாலத்தில் சாதிய வேறுபாடுகள் தொழில் ரீதியில் இருந்தன என்பதும், சாதிகளுக்கிடையே உயர்வு தாழ்வுகள் உண்டு என்பதும் புலனாகிறது. இது ஆசிரியர்களின் வருகைக்குப் பின் பல்வேறு உட்பிரிவுகளாகப் பிரிந்து மேலும் வளர்ந்தது.
“ஒருவன் (அல்லது ஒருத்தி) தான் இருக்கின்ற
குழுவுக்குள்ளேயே, அதாவது உறவுக்குழுக்குள்ளேயே
அல்லது சமயத்துக்குள்ளேயே திருமணம் செய்து
கொண்டால் அதற்கு அகமணம் என்று பெயர்”
(உ. சுப்பிரமணியபிள்ளை - சமூகவியல் ப. 61)
சிறுகதை ஆசிரியர்கள் தத்தம் சிறகதைப் படைப்புகளில் அகமண மீறலைச் சித்தரித்துக் காட்டுகின்றனர். கந்தர்வனின் “காடுவரை” என்ற சிறுகதையில் வரும் விசயலட்சுமி தீவிர ஆசாரக் குடும்பத்தைச் சேர்ந்த பிராமணப்பெண். இவள், தன்னுடன் வேலைபார்க்கும் பெஞ்சமின் என்ற ஆங்கிலோ இந்தியனைக் காதலித்துப் பெற்றோரின் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து கொள்கிறாள். பெஞ்சமின் பெற்றோர்களும் இத்திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. கலப்புத் திருமணம் செய்துகொண்ட விசயலட்சுமியும், பெஞ்சமினும் அன்புடன் வாழ்ந்து வந்தார்கள். இந்நிலையில் கர்ப்பமுற்ற விசயலட்சுமி முதல் பிரசவத்தில் இறந்து விடுகிறாள். இருவர் வீட்டிலிருந்தும் பெற்றோர்கள் வருகிறார்கள். பிணத்தை எங்கு புதைப்பது என்பதில் போராட்டம் நடைபெறுகின்றது.
தத்தம் சாதிய மதிப்புகளைப் பின்பற்றி மனிதன் வாழவேண்டும் என்ற பழைய சமூக எதிர்பார்ப்பு முற்றிலுமாக மாற்றம் அடையவில்லை என்றாலும், காதல் காரணமாகப் புதிய சமூக மாறுதல் பின்னனியில் இளைஞர்களிடையே அகமண மீறலும் அதனால் பழக்க வழக்க மாறுதல்களும் ஏற்படுகின்றன. இந்த அகமண மீறல் சாதியக் கட்டுப்பாட்டை மீறிய சமத்துவம் என்ற புதிய சமூக மதிப்பு உருவாக்கத்திற்கு துணை செய்கின்றது.
சமூகத்தில் கல்வியும், பொருளாதாரமும் வேலை வாய்ப்பும் புதிய மதிப்பு உருவாகத் துணை செய்கின்றன. இவற்றின் மூலம் சாதி வேறுபாட்டு உணர்வு நீங்கிச் சமத்துவம் பெறலை இச்சிறுகதை சித்தரித்துள்ளது.
உயர்சாதி மனப்பான்மை மாறுதல் பெறல்
பழைய சமூக அமைப்பில் நான்கு வகை வருணப் பிரிவுகள் நடைமுறையில் இருந்தன. பல்வேறு சாதிப்பிரிவுகள் இன்னும் இருந்து வருகின்றன. இப்பிரிவுகளில் உயர் சாதியினராகக் கருதப்பட்டவர்கள் பிராமணர்கள். இவர்கள் நாட்டை ஆண்ட அரசனை விடவும் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். சடங்குகள் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் பிற சாதியைவிடவும் வேறுபட்டவர்கள். ஆனால், புதிய சமூக மாறுதல் பின்னணியில் மேல், கீழ் என்ற சாதியப் படிநிலை வேற்றுமை மதிப்பு சார்ந்த மனப்பான்மைகளும் நடத்தைகளும் சமத்துவம் நோக்கி மாறுதல் அடைகின்றன. இம்மாறுதல்களையும் சிறுகதைகள் சித்தரித்துக் காட்டுகின்றன.
சீனி. மோகனின் “எக்குடிப்பிறப்பினும்” என்ற கதையில் வரும் கண்ணன் உயர்சாதியைச் சேர்ந்தவன். அய்யாக்கண்ணு இவனின் நண்பன். இவன் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன். இருவரும் எழுத்தர் வேலைக்காக சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வில் அய்யாக்கண்ணு வெற்றியடைகிறான். கண்ணன் தோல்வியுறுகிறான். இதனால் கண்ணனுக்கு வருத்தம் உண்டாகிறது. கண்ணனின் மாமா ராமமூர்த்தி கண்ணனைப் பார்த்து, நீ சொல்லிக் கொடுக்க அதனால் படித்துத் தேர்வு எழுதிய அய்யாக்கண்ணு வெற்றி பெற்றுவிட்டான், நாம் தோல்வியடைந்து விட்டோமே என்று தானே வருந்துகிறாய்” என்று கேட்கிறார். அதற்குக் கண்ணன் தேர்வில் அய்யாக்கண்ணு வெற்றிபெற்றது தனக்கு மகிழ்ச்சி என்றும், சாதிமதம் சார்புடன் விளங்கும் அரசின் மீதுதான் தனக்கு வருத்தம் என்றும் கூறுகிறான். இதைக்கேட்ட ராமமூர்த்தி மகிழ்ச்சி அடைகிறார். அய்யாக்கண்ணு நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற மீண்டும் கண்ணன் உதவி செய்கிறான்.
இக்கதையில் இடம்பெறும் கண்ணன், அவன் அப்பா ஆகியோரிடம் உயர் சாதிக்குரிய ஆசாரங்கள் எதுவும் காணப்படவில்லை. அத்துடன் தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் முன்னேற்றத்திற்கு உயர்ந்த மனோபாவத்துடன் உதவி செய்கிறார்கள். உயர்சாதியினரின் மனமாறுதல், இக்கதையில் இயல்பாகச் சித்தரிக்கப் பெற்றுள்ளது.
உயர்வு தாழ்வு மோதல்
வேளாண் சமூக அமைப்புச் சார்ந்த மக்கள் தொழிலிய மாறுதல் பின்னணியில் சமத்துவ உணர்வு பெறுகிறார்கள். காலங்காலமாக வலுவாக ஊன்றியுள்ள சாதியப் பின்னணியில், இம்மதிப்பு மாறுதல்கள் எளிதாக ஏற்புப் பெறுவதில்லை. உயர்வு தாழ்வு மோதல் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகி வருகிறது. இம்மோதல்களையும் அதனால் ஏற்படும் முரண்களையும் சிறுகதைகள் சித்தரித்துக் காட்டுகின்றன.
செங்கை செல்வராசனின் “ராக்கால பாரிக்கோடுகள்” என்னும் கதையில் வரும் சரோசா பண்ணையாரின் மகள் இவள், தன்னுடைய தந்தையின் பண்ணையில் கூலி வேலை செய்வோரின் மகள் ராணியுடன் விளையாடுகிறாள். ஒருநாள் காரில் தன் தந்தையுடன் சென்று கொண்டிருந்த சரோசா கார் நின்றபோது ராணியை அழைக்கிறாள். அவளும் அருகில் வந்து தன் வாயில் வைத்திருந்த வெல்லக்கட்டியை எடுத்து கடித்துக் கொடுக்கிறாள். இதனைப் பார்த்த பண்ணையார் கோபம் கொண்டு காரின் கதவை ராணியின் மேல் மோதுகிறார். தம் மகள் கூலிக்காரனின் மகளுடன் பேசுவதையும் பழகுவதையும் பார்த்த பண்ணையார்,
“அறிவிருக்கா உனக்கு? அந்த சாணி
பொறுக்குற கூலிக்கார நாயின் அப்பன்
நம்மவீட்டு படியாள், அவகூட என்ன
பேச்சு உனக்கு? ….” (செங்கை செல்வராசன் - ராக்கால பாரிக்கோடுகள் ப. 172)
என்று கடுமையாகக் கூறுகிறார். இதனைக் கேட்டு, சரோசா மனம் வருந்துகிறாள். இவ்வேறுபாடுகளுக்கும் காரணம் என்ன? என்ற கேள்வி அவளைச் சிந்திக்க வைக்கிறது. சாதிய ரீதியலான, வர்க்க வேறுபாட்டு மோதல் இக்கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
சமத்துவ எழுச்சி பெறல்
குப்பைகளைக் கூட்டுதல், வெட்டியான் தொழில் செய்தல் ஆகியவை கீழ்த்தரமான வேலைகளாகக் கருதப்பட்டன. இவ்வேலைகளைச் செய்வோரும், மலைவாழ் இனத்தவரும் கீழ்ச்சாதியினராக்கப்பட்டனர். இக்கீழ்ச்சாதியினரும் புதிய சமூக மாறுதல் பின்னணியில் சமத்துவ மதிப்பு நோக்கிய மன எழுச்சி பெற்றுப் போராடுவதை சிறுகதைகள் சித்தரித்துக் காட்டுகின்றன.
வேல. ராமமூர்த்தியின் “பூமயில்”, “கொட்டடி... கொட்டடி குருவக்கா” ஆகிய இரண்டு கதைகளும் கீழ்ச்சாதி இனத்தவரிடம் ஏற்பட்ட விழிப்புணர்வை விளக்குகின்றன. “பூமயில்” என்னும் கதையில் வரும் சோலை, நாகு இருவரும் பூமயிலின் பிள்ளைகள். சோலை கிடை ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறான். ஒரு நாள் நாகுவின் மகனுக்குக் காது குத்திக் கிடாய் வெட்டும் வைபவம் நடைபெறுகிறது. அப்போது சோலை ஆட்டை மேய்த்துவிட்டு வந்து விடுவதாகக் கூறிச் செல்கிறான். ஆடு மேய்க்கச் சென்ற இடத்தில் காவலர்களால் வேண்டுமென்றே கைது செய்யப்படுகிறான்.
“கொட்டடி ... கொட்டடி குருவக்கா” என்னும் கதையில் வரும் குருவன் வெட்டியான் குலத்தைச் சேர்ந்தவன். ஒரு சினிமா கொட்டகையில் கணக்கு எழுதிக் கொண்டிருந்தபோது வேலை கடினம் என்று முதலாளியிடம் சொல்வதற்கு அச்சமுற்று, ஒரு நாள் தலைமறைவாகி விடுகிறான். சினிமா கொட்டகைக்காரர் குருவன் பணத்தை எடுத்துக்கொண்டு ஒடிவிட்டான் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். காவலர்கள் குருவன் அகப்படாததால் அவன் மனைவி குருவக்காவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். கோபம் கொண்ட கொட்டுக்காரர்கள் அனைவரும் காவல் நிலையம் சென்று கொட்டடித்துக் குருவக்காவை மீட்டு வருகிறார்கள்.
ஒரு காலத்தில் உயர்சாதியினர் வாழும் வீதிகளில் நடப்பதற்கும், பொது நீர் ஊற்றுகளில் தண்ணீர் எடுப்பதற்கும் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கையிடுக்கில் துண்டை வைத்துக்கொண்டு உடம்பை வளைத்து, மேல்சாதியினரிடம் மிகுந்த மரியாதையுடன் பேசி வந்தனர். இன்று,
“வேளை நெறுக்குடா... கண்ணாடியை ஒடச்சு ...
சோலையை வெளியேத்துங்கடா...” (வேல. ராமமூர்த்தி - பூமயில் ப. 73)
என்று கூறுமளவிற்கு போராட்டக் குணத்தைப் பெற்று இருக்கிறார்கள். உயர்சாதியைச் சேர்ந்தவர்களை அவர்களின் கொடுமைகளை எதிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு சாதி சமத்துவ மதிப்பு அடிப்படையிலான எழுச்சி எனலாம்.
சாதிப் பழக்க வழக்கங்கள் மாறல்
இன்றைய இளைஞர்கள் புதிய சமத்துவ மதிப்பு உருவான பின்னணியில் திறந்த மனத்துடன் அனைவருடனும் சமமாகப் பழகித் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்வு செய்யும் தன்னம்பிக்கையைப் பெற்று விளங்குகின்றார்கள். இதன் காரணமாகச் சாதியப் பழக்க வழக்கங்கள் மாறல் என்ற இந்நிலை சிறுகதைகளில் சித்தரிக்கப் பெற்றுள்ளன.
சுப்ரபாரதி மணியனின் “இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்” என்னும் சிறுகதைகள் வரும் மல்லிகார்ஜுனன் செட்டியார் இனத்தைச் சேர்ந்தவர். தன் சாதியில் நடைபெறும் திருமணங்களுக்கு, அதாவது மாப்பிள்ளைக்குத் தலையில் “டர்பன்” கட்டும் தொழில் செய்து வருகிறார். இதன் மூலம் படிநிலைத்தரத்தில் உயர்நிலை உணரப்பட்டது.
காலப்போக்கில் கலப்புத் திருமணத்தினாலும், இளைஞர்கள் பழைய பழக்க வழக்கங்களை விரும்பாததாலும், புதிய சமத்துவ மதிப்பு வாழ்க்கை முறையில் ஊடோடி வந்து கொண்டிருந்தாலும், டர்பன் கட்டுவதை விட்டு விடுகிறார்கள். தன் ஜாதியைச் சேர்ந்த இளைஞர்களின் மாற்றத்தைக் கண்டு மல்லிகார்ஜுனன் வேதனைப்படுகிறார்.
சாதி உணர்வு மட்டும் இல்லாமல், சாதிகளுக்கு உள்ளே இருக்கின்ற பழக்க வழக்கங்களும் காலப்போக்கில் மாறுவதை உணரமுடிகின்றது. இம்மாறுதல்களுக்கு அடிப்படைக் காரணம் புதிய சமத்துவ மதிப்பு சமூக மதிப்பாக ஊடுபரவி வருதலே எனலாம்.
சாதியநிலை, சமயநிலை, பெண்நிலை மற்றும் வர்க்கநிலை குறித்த சமூக மதிப்புகள் பரிசீலனை செய்யப்படுவதும், இச்சமூக மதிப்புகள் மாற்றம் பெறுவதும் குறிப்பிடத்தக்கது. சிறுகதையாசிரியர்கள் இம்மதிப்பு மாற்றத்தை தெளிவுறச் சித்தரித்துக் காட்டுகின்றனர்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.