சிறுகதையை வரையறுக்க நினைத்த அறிஞர் பலரும் அவரவர் பார்வைக்கேற்ப அதனைப் பலவகையாக விளக்கியுள்ளனரே தவிர, யாரும் முடிந்த, முடிவான வரையறையை இதுவரை கூறவில்லை.
கதையின் தொடக்கமும் முடிவும் குதிரைப் பந்தயம் போல் இருக்கவேண்டும் - செட்விக்
சிறந்த சிறுகதை என்பது படித்து முடித்தவுடன் ஒரு குறிப்பிட்ட நேரமாவது அவன் நினைவில் நிற்க வேண்டும். அதே கதையை மீண்டும் படிக்க அவனைத் தூண்ட வேண்டும். இந்த ஆர்வத்தைத் தூண்டினால், அதைச் சிறந்த சிறுகதையாகக் கொள்ளலாம். எடுத்தப் பொருளை உணர்ச்சி புலப்பட விளக்கி இருக்க வேண்டும். இன்னும் கூடுதலாக விளக்கியிருந்தால் பயனற்றதாக ஆகிவிடும் என கூறத்தக்கவாறு அளவாக இருக்க வேண்டும். நோக்கம்,குறிக்கோள், செயல், உணர்வு ஆகியவைச் சிதைவுறாமல் ஒன்றுபட்டு அமைய வேண்டும். சிறந்த சிறுகதையின் அமைப்புக்கு கு. ப. இராசகோபாலனின் விடியுமா? என்ற சிறுகதை ஒரு சான்றாகும்.
சிறுகதையில் மொழிநடை
சிறுகதையின் மொழிநடை அதன் வெற்றிக்கு முதற்காரணமாகும். ஒரு சொல் கூட அதிகமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கக் கூடாது. சிறுகதை வெற்றிக்கு வெளிப்பாட்டு உத்திகள் முக்கியமென்றாலும், பயன்படுத்தும் நடை மிகவும் இன்றியமையாதது ஆகும். சிறுகதையில் நடை எளிமையானதாக, இனிமையானதாக இருக்க வேண்டும் கதையின் உட்பொருளுக்கு இயைந்த சுருதியில் இயங்குவதும் வெளிப்படுத்துவதும் கதை ஆசிரியரின் நடைச் சிறப்புகளாக அமையும்.
சிறுகதை எழுதுவதற்குச் சிறந்த எழுத்தாளரின் கதைகளை ஊன்றிப் படிக்க வேண்டும். நல்ல கற்பனை ஓட்டமும், கலை விருப்பமும் வேண்டும். தினமும் எழுதிப் பார்க்க வேண்டும். சிறுகதை என்பது ஓர் அரிய கலை. அதைப் பயிற்சியின் மூலமும், அதிக அளவு படிப்பதன் மூலமும், கற்பனை ஓட்டத்தின் மூலமுமே வளர்த்துக் கொள்ள முடியும்.
ஊடகங்களில் கதையின் நோக்கமும் போக்கும்
எந்த ஊடகமானாலும் ஊடகங்களின் ஊடே இல்லை... இல்லை... கூடவே பின்னிப் பிணையப்பட்டதுதான் கதைகள். அக்கதைகளின் மேல்... நமது நோக்கமும்... போக்கும்... அதிகமோ? கொஞ்சமோ? அவற்றின் வழிகாட்டல்கள் நமது வாழ்வியலில் நம் தடம் பதிக்க உதவுமோ? அன்று... தடை போடுவதற்கு உதவுமோ? இக்கேள்விகள் அவரவர் தம்மைத்தாமே... சுயபரிசோதனை செய்தும்... பகுத்துப் பார்த்தும், வகுத்துத் தேர்வு செய்து நல்லதோர் தீர்வாய் தேர்ச்சி பெறவேண்டும்.
மலர்ந்த மலரின் வாசம் வண்டை ஈர்ப்பதுபோல்... சுட்டிக் குழந்தைகள் முதல் சுறுசுறுப்பான இளைஞரைத் தொடர்ந்து, இல்லத்தரசியர் மற்றும் முதியோர் என்றௌ அனைவரும், சரித்திரக்கதைகள், விஞ்ஞானப்பூர்வமான கதைகள், குடும்பக் கதைகள், மர்மக்கதைகள், தெய்வீகக் கதைகள், சித்திரக் கதைகள், புராணக் கதைகள் என்று அவரவர் இரசனைக்கு விருந்தாய், அவரவர் மனநிலைக்கேற்ப படித்து ரசிக்கின்றனர். விஞ்ஞான வளர்ச்சி மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தும் விதமாய் அரும்மருந்தாய் அரும்பணியைத் தொலைக்காட்சியின் கதைகள் சொன்னாலும்,
தெருக்களில் கூடி விளையாடிய பிள்ளைகள் ஓரடிக்குள் அமர்ந்த படி தொலைக்காட்சிக் கதைகளின் மேல் நாட்டம் கொண்டு உடலின் ஆரோக்கிய சக்திக்கு முட்டுக்கட்டையாக்கிக் கொண்டிருப்பது மாற்ற முடியாது என்பது போல் ஓர் மாயச்சுழல். இவைகள் யாவும் யாவருக்கும் நன்கு தெரிந்த விவரங்கள் தான் என்றாலும் மீள முனைவதில்லை. கதைகளின் முரணான கருத்துக்கள், கருத்தான உணர்வுகளைச் செரிமானமாக்கி, வெறுமானமாக மனத்தைச் சக்கையாகப் பிழிகின்றதோ? இவ்வாறாகத் தொலைக்காட்சியின் கதைகளின் போக்கு ‘மலர்ந்த மலரின் வாசம் வண்டை ஈர்ப்பது போல் ஈர்க்கின்றது.
சூரியனின் கதிர்கரங்கள் நீரை உறிஞ்சி நீராவியாக்கி, மேகமாய் உருவாக்கி மீண்டும் மழையாய், பூமிக்கு நீரை வாரி வாரி வழங்குகின்றது. ஆனால், தொலைக்காட்சியின் கதிர்வீச்சு, மனித உணர்வுகளை உறிஞ்சி, மனித சக்தியை முடக்குகின்றது.
கதைப் படைப்பாளர்களின் நோக்கும், படிப்போரின் போக்கும்
ஒரு கதையை உருவாக்க அதன் கருக்களமாய், எங்கோ, எப்பொழுதோ, அருகிலோ, தொலைவிலோ, எதிரிலோ, பிறர் சொல்லக் கேட்டோ, தான் பெற்ற அனுபவத்தின் வாயிலாகவோ உண்மையின் அடிப்படையில் கதைக் கருக்களத்தின், மூலத்தின் அடிப்படையில் கதைகள் உருவாவதாக் கதைப் படைப்பாளர்களின் கூற்றாகும். கதைகளைப் படைக்கும் படைப்பாளர் நாட்டு நடப்பை எடுத்தியம்பி மக்கள் விழிப்போடு செயல்பட, எழுத்துக்கள் எனும் திரி கொண்டு, கற்பனை நெய் ஊற்றி, வார்த்தை தீபம் ஏற்றுகின்றனர்.
கதைகளின் ஊடே, கதைக்கு வளமாவது கற்பனை வளம். இந்தக் கற்பனை வளம் என்பது இயற்கை வளத்திற்கு ஒப்பானதாக அமையும். உருவாக்கத்திற்குக் கண், காது, மூக்கு, வாய், கை, கால் வைத்து வெற்றி நடை போட வைப்பது கற்பனை வளம்.
‘கடுகளவு உண்மை
கடலளவு கற்பனை - கதை”
வீணையின் தந்தியை விரல்கள் மீட்டினால் தான், வீணையின் சப்தசுர உணர்வுகள் நமக்குப் புரியும். அதே போல் கதைகளின் கற்பனைவளம், மனித உணர்வுகளை மீட்டித் தூண்டிவிடும் ஆற்றல் மிக்கது. மனிதவளம் எதை விரும்பி நோக்குகின்றதோ, அதன் போக்கும், அதன்போக்கில் போகும் சீர்கெட்ட செயலைச் செய்த ஒருவனிடம் கேட்டால், அந்த ஊடகத்தில் கண்ட கதைக் காட்சியின் பின்னணிதான் இதற்குக் காரணம் என்று காரணம் கற்பிப்பான். இப்படியாகக் கதைகளைப் படைப்பவரின் நோக்கும் போக்கும், படிப்போரின் (பார்ப்போரின்) நோக்கும் போக்கும், எதிரெதிரணியில் குற்றச் சொல்போர் புரிந்து கொண்டு இருக்கின்றனர்.
கருப்பொருள் அடிப்படையில் பஞ்சதந்திர நீதிக்கதைகள்
சிறுவர்களுக்கான சிறுகதைப் பயன்பாட்டில் முக்கிய இடத்தைப் பெற்ற சிறுகதை நூலே பஞ்சதந்திர நீதிக்கதைகள் என்ற நூலாகும். இந்நூல் மாணவர்களின் சிந்தனை ஆற்றலைச் சிறப்பாக்கிச் அருமையான இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் கற்பனை ஆற்றலையும் வளர்த்துள்ளது. எல்லோரையும் ஈர்க்கும் படைப்பாற்றலால் பாடநூல்களிலும் இடம் பிடித்து சிறப்பிடம் பெற்றுள்ளது. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் போன்றவற்றிலும் சில கதைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பஞ்சதந்திர நீதிக்கதைகள் என்னும் இந்நூலை இயற்றியவர் விஷ்ணுசர்மன் என்பவர் ஆவார். இவரது சிறப்புப் பெயர் சோமசர்மன் என்பதாகும். இந்நூலை ஐந்து தந்திரத்தால் அமைத்துள்ளார். அதாவது யுத்தி, சூழ்ச்சி, உபாயம், திறம், எனும் அடிப்படையில்
1. நட்பைக் கெடுப்பது
2. நட்பைப்பெறுவது
3. அடுத்துக் கெடுப்பது
4. அடைந்ததை அழிப்பது
5. ஆராயாமல் செய்வது
என ஐந்து தந்திரங்களால் இந்நூல் அமைக்கப் பெற்றுள்ளது.
இந்நூல் ஐந்து பகுதியாக மொத்தம் 44 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.
கதை என்பது கருப்பொருளை அழகுறச் சொல்வது என்று பொருள் கொள்ளலாம். ‘கதைத்தல்’ என்பது ‘சொல்வது’ எனப்பொருள் தரும். இங்கு அளவு வகையில் சிறுமை அடிப்படையில் சிறுகதை என்று வழங்கப்படுகிறது. பெருமை எனில் அது அளவில் நெடுங்கதையேயாகும். சிறுகதை ஆய்வை இரண்டாகப் பகுக்கலாம்.
1. அமைப்பு வழி ஆய்வு
2. பொருள் வகை ஆய்வு
எனக் கொண்டு இவ்வாய்வு பொருள்வகை ஆய்வாகக் கொள்ளப்பட்டுள்ளது. சிறுகதை மிகப்பழமை சார்ந்த ஓர் இலக்கிய வகையாகும்.இதன் வளர்ச்சிக்கு மூல ஊற்று மாந்தரின் கதை கேட்கும் ஆர்வத்திலேயே உள்ளது என்பர் முனைவர் சு. பாலச்சந்திரன்.
1. முதல் தந்திரம் - நட்பைக் கெடுப்பது
ஒவ்வொரு மனிதர்க்கும் நட்பு ஒரு நல்ல துணையாகும். அத்துணைய சதிகாரர்கள் கெடுக்காமல் விழிப்புணர்வு கொள்ள இந்தப் பகுதி உதவுகிறது. இப்பகுதியில் 16 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.
2. இரண்டாம் தந்திரம் - நட்பைப் பெறுவது
நட்பைப் பெறுவது என்பது நல்ல ஊக்க உணர்வு. இப்பகுதியில் ஐந்து சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.
இங்கு ஒரு கதையில் வேடன் ஒருவன் வலையை விரித்தான். வலையின் மேல் உணவுப் பொருளைத் தூவினான். இதைக் கண்ட புறாக்கள் உணவுக்காக வலையின் மீது அமர்ந்து வலையில் அகப்பட்டன. அரசப்புறா சொல்லியதைக் கேளாது அவ்வாறு மாட்டிய பின் அரசப்புறா அப்புறாக்களைத் தப்பிக்க வைக்கத் தானும் அவ்வலையில் அகப்பட்டது. பின் அனைத்துப் புறாக்களும் பறந்து சென்றன. அரசப்புறாவின் வழிகாட்டலில் குகை அருகே சென்று இறங்கின. நட்பு எலியிடம் கூறி வலையைத் துண்டித்து அனைத்தும் தப்பின. இதன் மூலம் நட்பின் அருமையை உணர முடிகிறது.
3. மூன்றாம் தந்திரம் - அடுத்துக் கெடுப்பது
அடுத்து கெடுக்கும் செயல் தவறானது என்றாலும் அழிவில் தப்ப விழிப்புணர்வு கொள்ள வேண்டும் என்கிறது இப்பகுதி. இப்பகுதியில் 9 சிறுகதைகள் உள்ளன.
4. நான்காம் தந்திரம் - அடைந்ததை அழிப்பது
நல்ல பயனை அடையும் போது அதை அழிப்பது கொடுமையானதாகும். அப்பொழுது விழிப்புணர்வு தேவை என்பதை இக்கதைகள் தூண்டுகின்றன. இப்பகுதியில் 6 கதைகள் உள்ளன. இங்கு முட்டாள் முதலைக் கதையைக் காண்போம்.
குரங்கும் முதலையும் நட்பானது. குரங்கு நாவல் பழங்களை முதலைக்குத் தந்து நல்ல நட்பாக விளங்கியது. பெண் முதலை ஆண்முதலையிடம் நாவல் பழம் உண்ணும் குரங்கின் ஈரல் சுவையாக இருக்கும் எனக் கூறி ஆண் முதலையைத் தூண்டியது. ஆண் முதலை தந்திரமாகக் குரங்கை தண்ணீர் வழியாக அழைத்து வந்தது. இதை அறிந்த குரங்கு எனது ஈரல் மரத்தின் மீது காய வைத்துள்ளேன் என்று கூறி தப்பியது. இது தந்திரத்தால் பிழைத்தல் எனும் கருத்தைக் கொண்டது.
5 ஐந்தாம் தந்திரம் - ஆராயாமல் செய்வது
எதையும் ஆராயாமல் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது இப்பகுதி. இப்பகுதியில் 8 கதைகள் உள்ளன. இதில் அவசரத்தால் நேர்ந்த கொடுமை எனும் கதையைக் காண்போம்.
அந்தணன் ஒருவன் கீரிப்பிள்ளையைத் தனது பிள்ளையாகக் கருதி வளர்த்தான். அவனுக்கு ஆண்குழந்தைப் பிறந்தது. வீட்டில் யாரும் இல்லாத போது குழந்தையிடம் ஒரு பாம்பு வந்தது. அதைக் கீரிப்பிள்ளைக் கடித்து குழந்தையைக் காப்பாற்றியது. வீட்டுக்கு வெளியே வந்த கீரிப்பிள்ளையைக் கண்டு அந்தணன் மனைவி தன் மகனைக் கீரி கடித்திருக்கும் என்று கருதி கீரிப்பிள்ளையைக் கொன்றாள். பின் உண்மை அறிந்து வருத்தமுற்றாள். இதிலிருந்து எதையும் ஆராயாமல் செய்யக்கூடாது என்பது விளங்கும்.
குறவஞ்சியில் குன்றாத கதைக்கூறுகள்
வாழ்வியல் கூறுகள் நிறைந்த செயல்பாடுகளை இயல்புக்கேற்ப சுவைக்கவும், உணர்ச்சிப் படிவங்களோடு கலையழகு சிறக்கவும் அமைபவை கதைகளாகும். நடந்த நிகழ்வையோ அல்லது நடக்க வேண்டும் என்ற விருப்ப நிகழ்வையோ அடிப்படையாய் வைத்து, அதன்மேல் கற்பனை எனும் கட்டுமானம் ஏற்றி கலை மெருகுடன் கவினழகு விளங்க வியப்புமிக்க காட்சிகளும் துடிப்புமிக்க நிகழ்ச்சிகளும் சீராகப் பின்னிப் பிணைந்து கதைகளை அமைப்பின், அவை கலைக்கோலமாய் நாடகத் தன்மைப் பெறுகிறது. இரசனை, காட்சி, கதைப்போக்கு, ஊடகம் வேறுவேறாக இருப்பினும் கதை எனும் கலையையும் அகற்ற விரும்பும் மனிதனின் மனநிலையும் இன்றும் மாறவில்லை. அவ்வகையில் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான குறவஞ்சி இலக்கியத்தின் கதையமைப்பு, கதைப்போக்கு, அதன் தன்மைக் குறித்துக் காணலாம்.
காதற்சுவை மிகுந்த கதையாகக் குறவஞ்சி விளங்குகிறது. தலைவி தலைவன் மீது காதல் கொள்வதும், சிங்கன் சிங்கியிடம் அளவற்ற ஆசை கொண்டு காதலுரை பகர்வதும், காதற்சுவையை வெளிப்படுத்தும் இடங்களாகும். மேலும் பருவ மங்கையர் தத்தம் உணர்வுக்குத் தக்கவாறு தலைவனைக் கண்டு மயங்கி வருந்துவது காமச்சுவையின் வெளிப்பாடாய் அமைகிறது.
சிங்கியை நெடுநாட்கள் காணாமல் வருந்தும் சிங்கன் அவளைக் கண்டதும், அடங்காக் காதலை அகத்திலே அடக்கி, ஐயவுரை பகன்று, அவளுடைய மனத்தை அறிய முற்படுவது அன்பின் ஆழத்தைப் புலப்படுத்துதாக அமைகிறது. அதேபோல, நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாகவும் குறவஞ்சிக்கதையில் பல பகுதிகள் உள்ளன. தலைவனைக் கண்டு மயங்கிய பெண்கள் தம்மை மறந்து பல விதமாகச் செயல்படுகின்றனர். திருக்குற்றாலக் குறவஞ்சி இத்தகைய காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
‘ஒருகைவளை பூண்ட பெண்கள் ஒருகைவளை பூணமறந்து
ஓடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார்
இருதனத்து ரவிக்கைதனை அரையிலுடை தொடுவார்பின்
இந்தவுடை ரவிக்கையெனச் சந்தமுலைக் கிடுவார்”
(பாடல் 14)
மனமயக்கத்தில் ஒன்றை மறந்து இன்னொன்றைச் செய்வது காண்போருக்கு நகைப்பைத் தரும். பல குறவஞ்சி இலக்கியங்களில் குறி சொல்லும் குறத்தியின் பேச்சும் அவனுடைய வேட்டை நிகழ்ச்சிகளும், நகைச்சுவையை வெளிப்படுத்துவதாக உள்ளன. குறத்தி தன்னுடைய குறி கூறும் திறமையைப் புலப்படுத்திக் காட்டுவதும், சிங்கன் தன்னுடைய வீரத்தை வெளிப்படுத்திக் காட்டுவதும், பெருமிதச் சுவைக்கு எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன.
திருக்குற்றாலக் குறவஞ்சியில்
‘வித்தாரம் என்குறி அம்மே - மணி
முத்தாரம் பூணும் முகிழ்முலைப் பெண்ணே
வித்தாரம் என்குறி அம்மே”
(பாடல் 42)
என்று கூறுகிறது. தியோகேசர் குறவஞ்சியில்,
நான் சொல்லும் குறி பொய்யாதுள
என் சொற்படி செய்வாயே - அம்மே
என்று பாடுவதிலும் பெருமிதச்சுவை வெளிப்படுவதைக் காணலாம்.
இவை போன்று அச்சம், இளிவரல், மருட்கை, வெகுளி போன்ற பல்வேறு சுவைகளோடு பக்திச்சுவை மிகுந்திருப்பதும் குறவஞ்சியின் கதைத் தன்மையைச் சிறப்பித்துக் காட்டுகின்றன.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.