தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
20. மாலன் சிறுகதைகளில் இலக்கிய உத்திகள்
பேராசிரியர் த. சண்முகசுந்தரம்
தொன்மைமிக்க தமிழ் மொழியில் சிறப்புமிக்க இலக்கியங்கள் காலந்தோறும் தோன்றி மொழிக்குப் பெருமை சேர்த்து வருகின்றன. இலக்கியங்களின் பொருளும், வடிவமும் பல மாற்றங்களுக்கும் உட்பட்டு வளர்ந்து வருகின்றன. இலக்கியப் பொருளாகச் சமுதாயமும், இலக்கிய வடிவமாக உரைநடையும் உருவாக்கம் பெற்றது இருபதாம் நூற்றாண்டிலேயே ஆகும். உரை நடை, அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் எங்கும் பரவிற்று. உரைநடையிலும் நாவல், நாடகம், சிறுகதை, கட்டுரை எனப் பல வடிவங்கள் இருந்தாலும் அவற்றில் மிகுதியும் செல்வாக்குப் பெற்றது நாவலும், சிறுகதையும் எனலாம். அவை இரண்டினுள் பேரளவுத் தோற்றம் பெற்றுத் திகழ்வது சிறுகதையே. சிறுகதைகள் செல்வாக்கு பெறக் காரணம் அதன் குறுகிய வடிவமே ஆகும். இத்தகைய சிறுகதை வளர்ச்சியில் அண்மைக் காலத்தில் படைக்கப்பட்டு மாலன் எழுதிய ‘இறகுகளும் பாறைகளும, என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் இங்கு ஆராயப்படுகின்றன.
கதைத் தலைப்பு
ஒரு சிறுகதைக்குத் தலைப்பு என்பது மனித உடலுக்குத் தலை போன்றது. தலைப்பே சிறுகதை வாசிப்பவர்களை மிகவும் கவரக்கூடியது என்பதை “சிறுகதையின் தலைப்பு ஒரு பெரிய கோட்டையில் சிறிய வாயில் போன்றும் விடியற்காலை இருளைப்பிளக்கும் கதிரின் எழுச்சி போன்றும் அமைந்து கதையின் முழு அமைப்பையும் நிழல் வடிவில் காட்டக்கூடிய ஆற்றல் பெற்றுத் திகழ வேண்டும்” (1) என சாலை இளந்திரையன்கூற்றை மாலனின் சிறுகதைகளில் நாம் காணலாம்.
மாலன் சிறுகதைகளின் தலைப்புகள்
குறியீட்டுத் தலைப்பு, பாத்திரப் பெயர்த் தலைப்பு, எண்ணும்மைத் தலைப்பு, எச்சத் தொடர்த்தலைப்பு என்ற வகைகளில் மாலனின் சிறுகதைகளை வகைப்படுத்தலாம்.
குறியீட்டுத் தலைப்பு
“ஒரு பொருள் மற்றொரு பொருளைக் குறித்து வரும், அதே சமயத்தில் பொருள் புலப்படுத்துவதில் தனிச்சிறப்பு உடையதாய் விளங்கும்” (2) என்று நாஜெராமன் குறிப்பிடுகிறார்.
இதனையடிப்படையாகக் கொண்டு ‘கரப்பான் பூச்சி’ என்னும் கதை அமைந்துள்ளது.
“கண்ணுக்குப் புலனாகாதவற்றைப் புலப்படுத்திக் காட்டுகிற கண்ணுக்குப் புலனாகும் ஒன்றே குறியீடு” (3) என்கிறார் டாக்டர் இரா. தண்டாயுதம்.
அவ்வகையில் மாலன் கண்ணுக்குப் புலனாகாத திருட்டுத் தன்மையை, கண்ணுக்குப் புலனாகும் கரப்பான் பூச்சியைக் குறியீடாக்கி உள்ளதன் மூலம் அறியலாம். “கரப்பான் பூச்சி” என்ற கதையில் இடம் பெறும் சிவராமன் பத்திரிக்கை ஆசிரியர். ஒவ்வொரு ஆசிரியரும் கரப்பான் பூச்சிமாதிரி இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இவை ‘கரப்பான் பூச்சி’ என்னும் கதையில் சிவராமன் சொல்லுவது போல ஆசிரியர் மாலன் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார்.
“மனத்தில் பரபரவென்று கரப்பான் பூச்சி ஓடிற்று, விரல் நீளத்திற்குக் கரும் பழுப்பில், மீசையை இடமும் வலமும் அலைத்துக் கொண்டு நகர்கிற கரப்பான் பூச்சி, பார்க்கவே அருவருப் பூட்டுகிற கரப்பான் பூச்சி. கரப்பான் பூச்சியை லேசில் அழிக்க முடியாததாம். புகை, விஷம், மருந்து, வெந்நீர் எல்லாவற்றிற்கும் தப்பித்துக் கொள்ளுகிறது. அணுயுத்தம் நிகழ்ந்து கதிர்வீச்சுக்கள் ஏற்பட்டால்கூட பூமியில் உயிரோடு தப்பிவிடக்கூடிய ஜீவராசி அதுதானாம். கரப்பான் பூச்சியை அழிக்கணும்னா ஒரே வழி ஓங்கி மிதிக்கணும்” (ப.48)
என்று கரப்பான் பூச்சியைக் குறியீடாக வைத்து தலைப்பிட்டுள்ள பாங்கு நோக்கத்தக்கதாகும்.
பாத்திரப் பெயர்த் தலைப்பு
மாலன் பாத்திரப் பெயரினைத் தலைப்பாகக் கொண்டும் சிறுகதைகள் அமைந்துள்ளார்:
எடுத்துக்காட்டாக பிரச்சனையின் பெயர் சந்திரலேகா, இளஞ்செழியன் ஆரம்பித்த மெஸ் என்பனவாகும். பாத்திரப் பெயர் தலைப்பு உயர்திணையில் ஆண் பாத்திரப் பெயரைத் தலைப்பாகக் கொண்டு இளஞ்செழியன் ஆரம்பித்த மெஸ் என்ற கதை அமைந்துள்ளது.
“முகத்தில் கர்வம் பொங்க நாற்காலியில் வந்து உட்கார்ந்தான் இளஞ்செழியன். இளஞ்செழியனை நீங்கள் பாத்திருக்கக்கூடும். முகம் முழுவதும் மண்டிய முரட்டு தாடியும் கோணிபோல் கணக்கும் குர்தாவும் அணிந்து தோல்பையுடன் இலக்கியக் கூட்டங்களுக்கு வருகின்ற இலக்கியவாதி”(ப.59)
பிரச்சனையின் பெயர் சந்திரலேகா என்ற கதையில், பெண் பாத்திரத்தினைத் தலைப்பாகக் கொண்டு அமைந்துள்ளது.
“ஐம்பது வருடங்களாக எங்கள் கல்லூரிச் சரித்திரத்தில் இல்லாதப் பிரச்சனை திடீர் என்று முளைத்திருந்தது. பிரச்சனையின் பெயர் சந்திரலேகா” (ப.52)
என்பதைப் பெண் பாத்திரப் பெயர் தலைப்பிற்குச் சான்றாகக் கூறலாம்.
எண்ணும்மைத் தலைப்பு
இறகுகளும் பாறைகளும்என்ற கதை எண்ணும்மைத் தலைப்புக்கு எடுத்துக்காட்டாகின்றது.
எச்சத் தொடர்த் தலைப்பு
ஆதலினால் இனி...
பெண்மை வாழ்க வென்று...
ஆகிய கதைகளின் தலைப்புகள் எச்சத் தொடராக அமைந்துள்ளன.
கதைத் தொடக்கம்
சிறுகதைகள் தொடங்கும் போது விறுவிறுப்பான உரைநடையாகவோ, நாடகக் காட்சியினைக் காண்பது போன்றோ சுவை உணர்வு ஏற்படும் வண்ணம் இருக்க வேண்டும். கதைப் பொருளுக்கும், கதைக் கருவிற்கும் ஏற்ற தொடக்கங்கள் அமையும் போதே சிறுகதைகள் வெற்றி பெறும். அவ்வகையில் “ஒரு சிறந்த கதையாசிரியர் படிப்பவரின் ஆர்வத்தையும் கற்பனையையும் தூண்டக்கூடிய வகையில் தம் கதையைத் தொடங்குதல் வேண்டும். கதையின் தொடக்க வரி நெஞ்சை அள்ளும் வகையில் அமைந்து கதையின் முழுப் பொருளையுமே குறிப்பால் புலப்படுத்துதல் வேண்டும்” (4)
அதன்படி மாலனின் சிறுகதைகளின் தொடக்கங்கள் அமைந்துள்ளன.
மாலனின் சிறுகதைகளின் தொடக்கம்
1. உரையாடல் தொடக்கம்
2. நிகழ்ச்சி வருணனைத் தொடக்கம்
3. பாத்திர மனவுணர்வுத் தொடக்கம்
4. ஆர்வ நிலைத் தொடக்கம்
உரையாடல் தொடக்கம்
கதாபாத்திரங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளும் வண்ணம் கதை தொடக்கம் அமைந்தால் அதனை உரையாடல் தொடக்கம் எனலாம். ‘கூலி’ என்னும் கதையில் கூலிக்காரனும், முதலாளியும் தன் கூலியைக் கேட்கிறான். இது கதையின் தொடக்கமாக அமைகிறது.
“என்னங்க ஐயா வெறும் தாளைக் கொடுக்கறீங்களா? கருப்புசாமியின் குரல் ஏமாற்றத்தில் கலந்தது. வெறுந்தாளாய்யா இது? வெறுந்தாளா? கண்ணைத் தொறந்துட்டு பாரு ?
“வேணாம் சாமி ரூவாயாக் கொடுத்துடுங்க”
“ரூவாதாம்ப்பா” (ப.33)
அது கேள்விக்கணையாக கதையின் தொடக்கமாக அமைகிறது.
பாத்திர வருணனைத் தொடக்கம்
“வருணனை மூலம் கதை மாந்தரை அறிமுகப்படுத்தி, அவர்களுடைய பேச்சுக்களின் மூலமும், செயல்களின் மூலமும் அவர்கள் தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொண்டு விடும் தன்மைகளைக் காணலாம்” (5) என்பர் திறனாய்வாளர்.
இக்கூற்றுப்படி “பிரச்சனைகளின் பெயர் சந்திரலேகா” படைக்கப்பட்டுள்ளதனை சந்திலேகா கதையில் காணலாம்.
“ஐம்பது வருடங்களாக எங்கள் கல்லூரிச் சரித்திரத்தில் இல்லாத பிரச்சனை திடீரென்று முளைத்திருந்தது. பிரச்சனையின் பெயர் சந்திரலேகா, சந்திரலேகா எனக்கு ஒரு வருடம் ஜூனியர், கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் நாளே தலைப்புச் செய்திகளைத் தொட்ட தாரகை” (ப.53)
சந்திரலேகாவின் தோற்றத்தையும், அவனுக்கு ஏற்பட்ட விளைவின் மூலம் அவன் நிலையை வருணித்துச் செல்லும் போக்கினையும் காண முடிகிறது.
நிகழ்ச்சி வருணனைத் தொடக்கம்
கதையின் தொடக்கம், ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை வருணனை செய்வதாக தொடங்குவது நிகழ்ச்சி வருணனைத் தொடக்கமாகும். ஆசிரியர் ‘பெண்மை வாழ்கவென்று’ என்ற கதையில் ஆசிரியர் நிகழ்ச்சி வருணனையை மிக நன்றாகச் சித்தரிக்கிறார். “இடுப்பில் ஒரு உதைவிட்டான் சங்கரன், சின்னிக்கு உடம்பு சிலிர்த்தது, உதை விழுந்த இடத்தை வருடிக்கொண்டாள். மெல்லச் சிரித்தாள், நட்ட நடு ரோடில் ஆபீஸ் போகிற அவசரத்தில், ஒரு பெண் தனக்குத்தானே சிரித்துக் கொள்வதை பஸ் ஸ்டாண்டின் கண்கள் உற்றுப் பார்த்தன” (114)
என்ற அடிகள் மூலம் நிகழ்ச்சி வருணனையை விவரித்துள்ளார் ஆசிரியர்.
பாத்திரமனவுணர்வுத் தொடக்கம்
பாத்திரங்களின் மனவுணர்வு வெளிப்படுவதைத் தொடக்கமாகக் கொண்டு இறகுகளும் பாறைகளும் என்ற கதையில் பாத்திர மனவுணர்வை வெளிப்படுத்திருக்கிறார் ஆசிரியர் இதை கீழ்க் காணுமாறு தெளிவுபடுத்தியிருக்கிறார்.
“அருணாவைப் பத்து வருடங்களாக எனக்குத் தெரியும் அதாவது அவள் அப்பா இறந்துபோன தினத்திலிருந்து. ராத்திரி தூங்கப்போகும்போது அப்பா அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்க்கும் போது உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். அவளுக்கு வயது எட்டு” ( ப.18)
ஆர்வநிலைத் தொடக்கம்
“சிறுகதையின் தொடக்கம் படிப்பவரின் ஆர்வத்தையும், கற்பனையையும் தூண்டக் கூடிய வகையில் அமைதல் வேண்டும” (6) என்பர் டாக்டர் மு. வரதராசனார். இக்கருத்துக்கு வலுவூட்டும் வகையிலே ஆர்வநிலைத் தொடக்கக் கதைகள் படைக்கப்பட்டுள்ளன. கதை படிக்கும் வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் கவசம் என்ற கதை உள்ளது.
“திஸ் இஸ் டூ மச் என வீரிட்டாள் மைதிலி. கையிலிருந்த செய்திப்பத்திரிக்கை எகிறிப்போய் விழுந்தது. கலவரத்துடன் எட்டிப் பார்த்தாள் சாவித்ரி. ’அறிவு ஜீவிகள் கிளப்‘ மொத்தமும் கூடத்தில் ஆஜராகியிருந்தது” (ப.24)
என்ற நிலையில், ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைந்துள்ள பாங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கதை முடிவு
சிறுகதை என்ற கலைவடிவின் இன்றியமையாச் சிறப்புடன் அமைந்து படிப்பவரின் எண்ணத்தைத் தூண்டும் ஆற்றலைப்பெற முடிவுச் சொற்றொடரும் துணை செய்கிறது. கதையில் எழுதப்பட்ட சிக்கலைப் பற்றியோ, கதைமாந்தர் பண்பு பற்றியோ, கதைக் கருப்பொருள் பற்றியோ, எழுப்பிய உணர்வு பற்றியோ, மென்மேலும் சிந்திக்கத் தூண்டுவதாகக் கதையின் முடிவு அமைந்தால் அது சிறப்பானது. அதனால் தான் “மனதில் நிற்கும் முடிவு ஒரு நல்ல சிறுகதையின் அங்கம்” (7) என்பர் திறனாய்வறிஞர்.
கதையின் போக்கிற்கு ஏற்ற முடிவாகவே அமைதல் வேண்டும். அதாவது, இந்தக் கதைக்கு இதுதான் முடிவு என்று எண்ணி மனம் நிறைவு கொள்ளுமாறு முடிவு அமைய வேண்டும். படிப்பவரை மனத்தில் கொண்டு எழுதவேண்டும் என்பதற்காகக் கதையின் இயற்கைக்கு மீறிய, அதன் ஒருமைப்பாட்டைச் சிதைத்துவிடும் வண்ணம் முடிவு அமைதல் கூடாது.
“கதை வளர்ச்சிக்கேற்ப முடிய வேண்டும். எப்படித்தான் முடியப்போகிறது என்று படிப்போர் தெரிந்துகொள்ளாத வகையிலும், முடிந்த பின்னர் இதுதான் சரியான முடிவு என்று அவர்கள் ஒத்துக் கொள்ளும் வகையிலும் வளர்ந்து செல்ல வேண்டும்” (8) என்று கூறுவர்.
கதையின் முடிவு இன்பவியலாகவும் இருக்கலாம், துன்பவியலாகவும் இருக்கலாம். கதையில் அது வருமிடம் உச்சிநிலையோடு அமைந்தும் இருக்கலாம். ஆனால், அது படிப்போரின் உள்ளத்தை முற்றும் கவர்ந்து அதன் வழியே இழுத்துக் கொண்டு போய்ச் சிந்திக்கச் செய்யும் பேராற்றலைப் பெற்றிருக்க வேண்டும் என்பது கதையின் முடிவு பற்றிய கருத்தாகும்.
1. இன்பவியல் முடிவு
2. துன்பவியல் முடிவு
3. கதை மாந்தர் எண்ண ஓட்டத்துடன் முடிவு
ஆகிய வகையின் கீழ் முடிவு வகைகளை அடக்கலாம்.
இன்பவியல் முடிவு
ஒரு கதையின் முடிவு மகிழ்வோடு முடிவடைந்தால் இன்பவியல் முடிவு எனலாம்.
1. ஆதலினால் இனி
2. ராசி
3. ஆயுதம்
ஆகிய மூன்று கதைகளும் இன்பவியல் முடிவில் அமைந்துள்ளன. ‘ராசி’ என்னும் கதையில் வரும் முடிவினை இன்பவியலான முடிவுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
“எல்லாம் உம்ம ராசி, உம்ம போட்டோ ராசி, ஆனி முதல் முகூர்த்தத்தில் கல்யாணம், வந்து நடத்தி வைக்கணும், படமெடுத்து ஜமாய்க்கணும், சாம்பு உற்சாகமாகப் பேசிக் கொண்டே போனார்” (ப.80)
என்ற உரையாடல் மூலமாக இன்பவியல் முடிவு என்று நிருபணமாகிறது.
துன்பவியல் முடிவு
சிறுகதையின் முடிவு துன்பமாக அமையும் நிலையை
1. கரப்பான் பூச்சிகள்
2. அடிமைகள்
3. பொய்க்கால் கழுதைகள்
4. பெண்மை வாழ்கவென்று
ஆகிய கதைகளில் காணமுடிகிறது.
கரப்பான் பூச்சிகள் என்ற கதையின் முடிவு துன்பவியல் முடிவாக உள்ளது. “முகத்தைத் திருப்பின அவர், இவனைக் கண்டதும் உடைந்தார், குலுங்கி அழுதார், அந்த அழுகைக் குரலும், நிலைகுத்தின பார்வையும் சிவராமனைத் துரத்தித் துரத்தி அடித்தன. இப்போது கூட மனத்தில் சன்னமாய் அது ஒலித்துக் கொண்டும், கேள்விகள் மனத்தைக் கொட்டிக் கொட்டி தலைகுனிய வைத்தன”(ப.52) என்ற அடிகள் துன்பவியலைத் தெளிவுப்படுத்துகிறது.
மேலும் ‘அடிமைகள்’ என்னும் சிறுகதையிலும் கதையைத் துன்பமாக படைத்துள்ளார்.
“ஆனந்த் ஒன்றும் பேசாமல் எழுந்து கொண்டான், அடுத்து பத்தாவது நிமிடம் அவனுடைய ராஜினாமாக் கடிதத்தை ஆபீஸ் பையன் கொண்டு வந்தான். அவன் வெளியில் இறங்கி நடந்த போது சுற்றிலும் இருள் கவிந்திருந்தது” (ப.101) என்ற அடிகள் தெளிவுப்படுத்துகின்றன.
கதை மாந்தர் எண்ண ஓட்டத்துடன் முடிவு
அகிலன் கதைமாந்தர் எணணமிடுவதாக உள்ள சூழலைக்காட்டி அந்த உணர்வுச் சூழலுடன் முடிந்துவிடும் சிலகதைகளைப் படைத்துள்ளார். பெரும்பாலும் உணர்வு வெளிப்பாட்டுக் கதைகளில், அல்லது கருத்து வெளிப்பாட்டுக் கதைகளில் இத்தகைய முடிவினை மாலன் அமைக்கின்றார்.
இதைத் தான் ‘இறகுகளும் பாறைகளும்’ எனும் கதைப்பகுதியில்,
“பாளம் பாளமாக எத்தனையோ பாறைகளைச் சுமந்து கொண்டு தீரத்துடன் முன்னேறிய பெண் ஒரு மயிலிறகின் கனம் தாங்க மாட்டாமல் முறிந்து விழுந்ததைப் பார்த்து வார்த்தைகள் அற்று ஸ்தம்பித்தேன்” (ப.23) என்று கதைமாந்தர் எண்ணக் குமுறல்களை ஆசிரியர் கதை மாந்தர்களின் மூலம் தன் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரச்சனையின் பெயர் சந்திரலேகாஎன்ற சிறுகதையின் முடிவில் கதைமாந்தர்களில் எண்ண ஓட்டத்திற்கு கதைக்கருவுக்கு ஒட்டியவாறு முடிவுகளை ஆசிரியர் மாலன் அமைத்துள்ளார்.
இவ்வாறாக, சிறுகதையின் இலக்கிய உத்திகளுள், மிகவும் சிறப்பானதாகக் கருதும் கதைத்தலைப்பிடல், தொடக்கமும், முடிவுமாகும். இம்மரபினை மாறாத தன்மையினை மாலனின் கதைகளில் நாம் காணலாம். சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைத் தலைப்புகள் அனைத்தும் எளிமையானதாகவும் கதைக்கருவின் உள்ளீட்டின் உருவை எடுத்துக் காட்டுவனவாகவும் அமைந்துள்ளது. படிக்கத் தொடங்கியவுடன் விரைவாக கதை உலகிற்குள் முழுமையாக ஈர்த்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டதாக மாலன் சிறுகதைத் தொடக்கங்கள் இடம் பெற்றுள்ளன. கதை முடிவைப் பொறுத்தவரை நாடகப்பாங்கில் முடிவு கூறியிறுப்பது மாலனுக்கே உரிய உத்தியாகத் திகழ்கிறது என்றால் மிகையல்ல.
அடிக்குறிப்புகள்
1. சாலை இளந்திரையன்,“தமிழில் சிறுகதைகள்”, ப.18
2. சு.வேங்கட்ராம் (ப.ஆ.), நா.செயராமன் மு.வ.நாவல்களில் குறிப்புப் பொருளும் குறியீடுகளும்”, ப.702
3. ம.இராமலிங்கம்,“விடுதலைக்கு முன் புதிய தமிழ்ச் சிறுகதைகள்”, ப.171
4. இரா.மோகன், கு.ப.ராஜகோபலன் சிறுகதைகள், ப.22
5. இரா.தண்டாயுதம், தமிழ் சிறுகதை முன்னோடிகள், ப.129
6. மு.வரதராசன், இலக்கிய மரபு, ப.167
7. இரா.தண்டாடுயுதம்,“தமிழ்ச் சிறுகதை முன்னோடிகள்”, ப.12
8. சாலை இளந்திரையன்,“தமிழில் சிறுகதைகள்”, பக்.90-91.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.