தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
22. கந்தர்வன் கதைகளில் உத்திகள்
முனைவர் பொ. அன்பானந்தன்
ப. தனசேகரன்
மனித வாழ்வினைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி இலக்கியம் எனலாம். தனிமனித வாழ்வினையும், சமுதாய நிகழ்வுகளையும் உணர்வியல் தன்மையோடு புலப்படுத்திக் காட்டும் சிறப்பு இலக்கியங்களுக்கு உண்டு. தமிழ் இலக்கியத் தளத்தில் குறிப்பாக நவீன இலக்கிய வகைகளில் சிறுகதையின் பங்கு அளப்பரியது. மனித வாழ்வில் நடைபெறும் உணர்வுகளைச் சிறப்பாக எடுத்துக்காட்டும் தன்மை சிறுகதைக்கு உண்டு. சிறுகதை உலகில் தனித்துவம் படைத்த படைப்பாளராக வலம் வருபவர்கந்தர்வன். தொழிற்சங்கவாதியாகவும், முற்போக்கு இயக்கியப் படைப்பாளியாகவும் திகழ்பவர். கந்தர்வன் கதைகள் முழு தொகுப்பாக வெளிவந்திருக்கின்றன.
படைப்பாளர்தம் படைப்பின் உணர்வுகளை முழுமையாக எடுத்துக்காட்ட உத்திகளைக் கையாளுகின்றனர். படைப்பின் நுட்பங்களையும், உணர்வுகளையும் படிப்பாளன் முழுமையாக உய்த்துணர வேண்டும் எனும் பாங்கில் சிறந்த நடையையும் உத்திகளையும் எடுத்தாளுகின்றனர். அவ்வகையில் கந்தர்வன் கதைகளில் காணப்படும் உத்திகளை வெளிக்கொணரும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.
கந்தர்வன் கதைகளில் உத்திகள்
சிறுகதைகளைப் படைக்கும் ஒவ்வொரு படைபாளர்களும் தம் படைப்புகளில் புதிய உத்தி முறைகளை எடுத்தாண்டு வருகின்றனர். படைப்பாளர்கள் தங்கள் படைப்பின் வடிவங்களை உருவாக்கவும், கருத்துக்களை எடுத்துக் கூறும் தன்மைக்காகவும் கையாளும் நுண்ணிய அணுகுமுறை உத்தியாகும்.
உத்தி-சொல் விளக்கம்
இலக்கியப் படைப்பை கலைப்படைப்பாக உருவாக்குவதற்குப் படைப்பாளன் மேற்க்கொள்ளும் நுட்பமான அணுகுமுறை உத்தி எனலாம். உத்தி என்பதற்கு தொல்காப்பியர் பின்வரும் நிலையில் விளக்கம் தருகின்றார்.
“ஒத்தகாட்சி உத்திவகைவிரிப்பின்“ என்கிறார். சென்னைப் பல்கலைக்கழக அகராதி உத்தி என்பதற்கு கீழ்காணும் நிலையில் விளக்கம் சுட்டுகின்றது.
‘தனித்துறை முறைநுட்பம், கலைப்பாணிகலை நுணுக்கத்திறம்; கலைநுணுக்கக் கூறு இயல் நுட்பக் கூறு தொழில் துறைநுட்பம், தனிச் செயல்முறைத் திறம் ஆகியவை உத்தியாகும் என்று கூறுகின்றது.
அடுக்குத் தொடர்
ஒரே சொல் இரண்டு, மூன்று, நான்கு முறை தொடர்ந்து வருவது, பிரித்தால் பொருள் தருவது அடுக்குத் தொடர் எனலாம். இதனை அசைநிலை பொருனிலையிசை நிறைக்கொருசொல் இரண்டு மூன்று நான் கெல்லை முறையடுக்கும்’ என்று நன்னூல் விளக்கம் தருகிறது.
கந்தர்வன் தம் படைப்புகளில் கதைகளின் தன்மைக்கேற்பவும், சுவையை கூட்டுவதற்காகவும், அடுக்குத் தொடர்சொற்களைக் கையாண்டுள்ளார். ‘மங்கலநாதர்’ எனும் கதையில் இத்தொடரைக் கையாண்டுள்ளதைக் காணலாம்.
‘அதிகாலையில் எழுந்து எல்லோரும் குளிக்கப் போனார்கள், மாமா ‘சீக்கிரம் சீக்கிரம்’ என்றுசத்தங் கொடுத்துக் கொண்டு உற்சாகமாய்த் திரிந்தார்’
என்ற பகுதியில் ‘சீக்கிரம் சீக்கிரம்’ எனும் அடுக்குத் தொடர் நடையைக் கையாண்டுள்ளதைக் காணலாம்.
இரட்டைக்கிளவி
ஒருசொல் பிரித்தால் பொருள் தராதது. இரட்டைக்கிளவிஎன்பர். இரட்டைக்கிளவி’ என்றால் ‘சொல்’ என்றுபொருள். இரண்டு ஒரேசொல் சேர்ந்துவருவது. சிறுகதை ஆசிரியர்கள் சிறுகதையின் நடை சுவைபட அமைய, இரட்டைக்கிளவிசொற்களைக் கையாண்டு வருகின்றனர். அந்நிலையில் கந்தர்வன் தம் படைப்புகளில் இரட்டைக்கிளவி சொல்லாட்சியைப் பல இடங்கிளில் பயன்படுத்தி வந்துள்ளார். இரட்டைக் கிளவிச்சொற்கள் படிப்பதற்கு இனிமையையும், நகைப்பூட்டும் தன்மையையும் கொண்டதாக அமைந்துள்ளது. இதனால் கந்தர்வன் தம் கதைகளில் பல இடங்களில் இரட்டைக்கிளவி சொற்களைக் கையாண்டு வந்துள்ளமையை பின்வருமாறுகாணலாம்.
‘சிறுசிறு’ (ப.51)
‘குளுகுளு’ (ப.63)
‘ஜிலுஜிலு’ (ப.64)
‘மடமட’ (ப.88)
‘படபட’ (ப.233)
‘ஜேஜே‘ (ப.332)
‘ஹோஹோ’ (ப. 522)
‘சலசல’ (ப. 537)
‘கமகம’ (ப.110)
போன்ற இரட்டைக்கிளவிச் சொற்களைப் பல இடங்களில் கையாண்டுள்ளார்.
ஒலிக்குறிப்புச் சொற்கள்
சிறுகதைப் படைப்பாளர்கள் கதைகளில் உணர்வுத் தன்மையினை முழுமையாக கொடுப்பதற்காக ஒலிக்குறிப்புச் சொற்களைக் கையாண்டு வருகின்றனர். ஒலிக்குறிப்புச் சொற்கள் கதைகளில் இடம் பெறும் பொழுது கதையின் போக்கும், பாத்திரங்களின் உணர்வியலும் படிப்பவரின் சுவையினைக் கூட்டுவதற்கு உறுதுணையாக விளங்குவதைக் காணமுடிகிறது. கந்தர்வன் தம் சிறுகதைகளில் கதைகளின் தன்மைக்கேற்பவும், பாத்திரங்களின் உணர்வியலுக்கேற்பவும் ஒலிக்குறிப்புச் சொற்களைக் கையாண்டுள்ளார்.
‘கதை’ எனும் சிறுகதையில் பாண்டி எனும் பள்ளிமாணவன் இறந்த பொழுது ஏற்பட்ட மக்களின் சப்தத்தினைவெளிப்படுத்திக் காட்டுகின்றார். ‘ஊரே அமைதியாயிருந்தது. திடீரென்று கொள்ளைஎன்றசத்தம் வந்தது’ என்று துன்பம் வரும் பொழுது அதை வெளிப்படுத்த கந்தர்வன் கையாளும் ஒலிக்குறிப்புச் சொல்லினைக் காணமுடிகிறது.
ஆங்கிலச் சொற்கள்
இன்றைய காலமக்களின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் சிறுகதைகளில் அம்மக்கள் எதார்த்தமாகப் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களைப் படைப்பாளர்கள் பதிவு செய்து விடுகின்றனர். கதைகளின் எதார்த்தத் தன்மையை நிலை நாட்டுவதற்காகப் படைப்பாளர்கள் எளிமையான பேச்சுவழக்கில் உள்ள ஆங்கிலச் சொல்லைக் கையாளுகின்றனர்.
கந்தர்வன் அரசு சார்ந்த நிறுவனப் பணியாளர்களையும், அரசுசாராத பணியாளர்களையும் கதைமாந்தர்களாகக் கொண்டுள்ளதால் அவர்கள் கையாளும் ஆங்கிலச் சொற்களை அப்படியே தம் கதைகளில் கதையின் இயல்பிற்கேற்ப அமைத்துள்ளார். அவ்வகையான சொற்களைப் பின்வரும் நிலையில் காணலாம்.
‘பப்ளிக் பிராஸிக்யுட்டருடம் டிஸ்கசன்’ (ப.33)
‘ட்ராப்ட்களும் பேர்காப்பிக்காகவரும்’ (ப.34)
‘எக்ஸ்பிரஸ்’ (ப.35)
‘ரெவினியு இலாகாவின் பிரிஸ்ட்டிஜோடு’ (ப.37)
‘டீச்சர்’ (ப.47)
போன்ற பல ஆங்கிலச் சொற்களை கந்தர்வன் தம் கதைகளில் பயன்படுத்தியுள்ளார். கதைகளின் எதார்த்தத்தை உணர்த்த ஆங்கிலச் சொற்களைக் கையாண்டுள்ளார். என்பதை அறிய முடிகிறது.
வட்டார வழக்கு
ஒரு மொழி ஒவ்வொரு வட்டாரங்கள் தோறும் வேறுபட்டு வழங்கும் வழக்ககை வட்டார வழக்கு எனலாம். வட்டார வழக்குச் சொற்களால் படைப்பாளியின் மனச்சூழலையும், அம்மொழியோடு தொடர்புடைய தன்மையையும் அறியமுடிகிறது. கந்தர்வன் தம் பகுதிகளில் பேசப்படும் வட்டாரவழக்குச் சொற்களைத் திறம்பட தம் படைப்புகளில் பதிவு செய்துள்ளார். அவற்றைக் கீழ்க்காணும் நிலையில் காணலாம்.
‘சாயங்காலம் (ப.98)
இதுதோதுபடாது (ப.90)
வெவரமானவரு (ப.71)
அப்படிப்போடுரா (ப.116)
கண்களை இடுக்கி இடுக்கிப் (ப.116)
அநியாயமாவுல இருக்கு (ப.125)
சீராயில்லை (ப.133)
பிறமொழிச் சொற்கள்
கந்தர்வன் கதைகளில் இடம் பெறும் கதை மாந்தர்களின் தன்மைகளுக்கேற்பவும், எதார்த்தமான தன்மையினைக் காட்டவும் பிறமொழிச் சொற்களைக் கையாண்டுள்ளார். வடமொழி,தெலுங்கு, இஸ்லாமியச்சொல் போன்றவற்றைப் பதிவு செய்துள்ளார். அவற்றைக் கீழ்க்காணும் நிலையில் காணலாம்.
ஜலதோசம் (ப.68)
ஜஸ்தயாப் போ (ப.105)
ஜமக்காளங்கள் (ப.109)
ஆஜானுபாகுவாய் கிளைகள் விரிந்துநிற்கும் (ப. 111)
செய் நம்பு (ப.225)
போன்ற பிறமொழிச் சொற்களைக் கையாண்டுள்ளார்.
உரையாடல்
படைப்பாளர்கள் தங்கள் கதைகளில் இடம்பெறும் கதைமாந்தர்களின் தன்மையினையும் பண்புகளையும் எடுத்துக்காட்ட உரையாடல் உத்தியினை கையாளுகின்றனர். குறிப்பாகக் கதையின் போக்கு எதார்த்த தன்மையோடு இயங்குதற்கு உரையாடல் உறுதுணை புரிகின்றது.
கந்தர்வன் தம் கதைகளில் பாத்திரங்களின் இயல்பிற்கேற்ப மிகச் செறிவாக உரையாடலை அமைத்துக் காட்டியுள்ளார்.
‘அரண்மனைநாய்’ எனும் கதையில் கையாண்டுள்ள உரையாடல் சிறப்பினைக் காணலாம்.
‘ஓடிவந்ததா? என்றார்
‘ஆமா’என்றான்.
‘எங்கேயிருந்து?’
‘அரண்மணையிலிருந்து’
‘என்னகுடுக்கிறதெனமும்’
‘மாட்டிறைச்சிநாய் பிஸ்கட்’
‘இதெல்லாம் போட்டுஎவ்வளவுநாளாச்சி?’
‘ஏன் அப்படிகேக்கறீங்க?’
‘ரொம்பஎளச்சிருச்சே’
டிரைவர்பழையஅவசரத்தோடு இவனிடம் பேசினேன். (ப.131)
எனும் பகுதியில் மிகச் செறிவுபட உரையாடலை அமைத்துள்ளார்.
வருணனைகள்
கதையாசிரியர்கள் கதையின் போக்கு அழகுபட நகர வருணனை உத்தியினைக் கையாளுவர். தான் கண்ட காட்சியினைச் சொல்லோவியமாக வடித்துக் காட்டுவதற்கு வருணனையைக் கையாளுவர். அந்நிலையில் கந்தர்வன் தான் கண்ட இயற்கைக் காட்சிகளையும், செயற்கை நிகழ்வுகளையும் தம் படைப்புகளில் வருணனைப்படுத்தியுள்ளார்.
‘தூக்கம்’ எனும் கதையில் இயற்கை நிகழ்வினைச் சிறப்பாக வருணனைப்படுத்திக் காட்டுகின்றார்.
‘நிலவொளியில் வயல் பயிர்கள் கருகருவென்று தெரிந்தன. சாலை ஓரத்தில் ஒரு வெள்ளைச் சேலை விரித்துக் கிடப்பதுபோல் வாய்க்கால் தெரிந்தது. தண்ணீர் மடமட வென்று பாய்ந்து போனது. எங்கும் குளிர்ச்சி தெரிந்தது. புதரும் செடிகொடிகளுமாயிருந்த ஒரு இடத்தில் சைக்கிளை நிறுத்தினான். (ப.140)
என்ற பகுதியில் இயற்கை நிகழ்வுகளைத் திறம்பட வருணனைப் படுத்தியுள்ளார்.
உவமைகள்
படைப்பை உருவாக்கும் படைப்பாளன், தன் சிறப்பினை உணர்த்துவதற்காக கையாளும் உத்தி உவமை எனலாம். தான் உணர்த்தும் பொருளைப் பிறபொருளோடு ஒப்புமைப்படுத்திக் காட்டும் போக்கில் உவமை அமைகின்றது. இதனைத் ‘தண்டியலங்காரம்’ எனும் நூல் பின்வரும் நிலையில் இலக்கணம் தருகின்றது.
‘பண்புந் தொழிலும் பயனுமென்றிவற்றின்
ஒன்றும் பலவும் பொருளோடுபொருள் புணர்ந்து
ஒப்புமைதோன்றச் செப்புவதுஉவமை
என்கிறது.
கந்தர்வன் தம் படைப்பின் நடையினை அழகுபடுத்திக் காட்டவும், ஒப்புமைப்படுத்திக் காட்டவும் உவமைத் தொடர்களைக் கையாண்டுள்ளர்.
‘தூக்கம்’ எனும் கதையில் நிலா ஒளி வீசுவதை உவமைப்படுத்திக் காட்டுகிறார். ‘வீட்டோரச் சாக்கடைப் பக்கம் முனிஸிப்பாலிட்டிக்காரன் வெள்ளைமாவு தூவுவதுபோல் துருப்பிடித்த ஜன்னல் கம்பிகள் வழியாக நிலாகொஞ்சம் வெளிச்சத்தைத் தூவியிருந்தது (ப. 133). என்கிறார்.
தொகுப்புரை
சிறுகதைகள் வெற்றியடைவதற்கு வழிகாட்டுவது உத்திகள் ஆகும். அவ்வகையில் படைப்பாளர் கந்தர்வன். தம் கதைகளில் நேர்த்தியாகப் பல உத்திகளைக் கையாண்டுள்ளார். மேலும், கதையின் போக்கிற்கு ஏற்ற சொல்லையும் தொடரையும் கையாண்டு சிறுகதையின் வெற்றிக்கு வழி கண்டுள்ளமையை இவரின் கதைகள் வழியே அறிய முடிகிறது. படைப்பாளன் சொல்ல முயலும் கருத்தினைப் படிப்பாளன் முழுமையாக உணர்ந்து கொள்ள உத்திகள் பயன்படுகின்றதுஎன்பதை இக்கட்டுரை வழி காணமுடிகின்றது.
சான்றெண் விளக்கம்
1. தொல்காப்பியர்,தொல்காப்பியம், ப. 124.
2. அகராதிக்குழு,சென்னைப் பல்கலைக்கழகஅகராதி, ப. 201.
3. பவணந்திமுனிவர். நுன்னூல், ப. 88.
4. கந்தர்வன்,கந்தர்வன் கதைகள், ப. 23.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.