தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
25. அனுராதாரமணனின் பிரிவுக் கதைகள்
முனைவர் தே. இந்திரகுமாரி
அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஆர்ப்பாட்டங்கள் எங்கெங்கும் கொடிகட்டிப் பறக்கும் இந்த நூற்றாண்டிலும் கூட மனித மனம் கதை சொல்வதிலும், கதை கேட்பதிலும் தனி இன்பம் கொள்கிறது. அத்தகைய மகிழ்வும், நிறைவும் மதிப்பிற்குரிய எழுத்தாளர் திருமதி அனுராதாரமணன் அவர்களின் சிறுகதைகளை வாசிக்கும் போது ஏற்படுகிறது என்பதற்கு அவர்களது எண்ணற்ற வாசகர்களே சாட்சிகளாவர். இவரது சிறுகதைகள் அனைத்தும் ஒரே மூச்சில் படித்து முடிப்பதாக அமைந்திருக்கின்றன. மேலும் சுவையான ஒரு நிகழ்ச்சி, அதற்கேற்ற சூழல், நெருக்கிப் பின்னப்பட்ட சிறு சம்பவம், ஒருவரின் தனிப்பண்பு, அறவுணர்வினால் விளைந்த ஒரு சிக்கல், திகைப்பூட்டும் ஒரு திருப்புமுனை போன்றவற்றில் ஏதேனும் ஒன்று இவரது சிறுகதைக்கு அடிப்படையாக அமைந்து வாசகர்களைத் தன்வயப்படுத்துகின்ற ஆற்றலைப் பெற்றுவிடுகிறது.
‘சிறுகதை என்பது ஒரு எழுத்தாளருக்கு சவால் மாதிரி ‘நறுக்காக... ‘சுருக்காக அதே சமயம் ‘கருக்காக எழுத வேண்டும் எனக் குறிப்பிடும் அனுராதா அவர்கள் தமது இருபத்தேழு வருட எழுத்துப்பணியில் கிட்டத்தட்ட ஆயிரம் சிறுகதைகளை எழுதி வாசகர்களுக்கும் தனக்குமிடையே வலுவானதோர் உறவுப்பாலத்தை ஏற்படுத்திய பெருமை பெற்றவராவார். ‘ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்’ என்பது போல, இவரது ஒவ்வொரு சிறுகதையும் வாசகர்களின் உள்ளத்தில் ஒரு கருத்தை தோற்றுவிப்பதோ, ஒரு விவாதத்தை ஏற்படுத்துவதோ, அல்லது ஒரு சலனத்தை உணர்த்துவதோ செய்கின்றன. குறிப்பாகப் பிரிவு பற்றிக் கூறும் இவரது சிறுகதைகளின் தனித்துவத்தை சுட்டிக்காட்டுவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகிறது.
பிரிவு பற்றிய கதைகள்
ஒரு சிறுகதையில் முழுமையான வாழ்வையோ அல்லது வாழ்வின் பல கோணங்களையோ விரிவாக எதிர்பார்க்கக் கூடாது. வாழ்க்கையின் ஒரே ஒரு கோணம், வாழ்க்கை வெள்ளத்தில் ஒரே ஒரு சுழிப்பு, உணர்ச்சிப் பெருக்கத்தின் ஒரே ஒரு திருப்பம் இவற்றில் ஏதேனும் ஒன்று போதுமென்கிறார் எழுத்தாளர் அகிலன்.
வாழ நினைத்தால்
இவர் கூறுவது போல, அனுராதா ரமணன் அவர்களின் பெரும்பான்மையான சிறுகதைகள் சோக இழைகளால் பின்னப்பட்டிருக்கும். அதுவும் பிரிவை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும். இத்தகைய பிரிவினால் வாழ்க்கையில் போராட்டம் என்பது மாறி வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட பல பெண்களின் அவலநிலை சித்தரிக்கப்படும்.
எடுத்துக்காட்டாக, பாக்யா இதழில் வெளிவந்த ‘வாழ நினைத்தால். என்கிற சிறுகதையில் யமுனா சிறுகுடல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு கணவன் மற்றும் மாமியாரால் வெறுத்து ஒதுக்கப்பட்டு விவாகரத்து செய்யப்படுகிறாள். இரு குழந்தைகளுடன் தனித்துப் போராடும் யமுனா தனது விடாமுயற்சியால் வேலை ஒன்றைப் பெறுகிறாள். மெல்ல மெல்ல நோயின் பிடியிலிருந்தும் விடுதலை பெறுகையில் அவளது கணவன் மறுமணம் செய்து கொண்ட செய்தி அவளைத் தேடி வருகிறது. ஒரு நாள் திடீரென அவளைச் சந்திக்கும் அவள் கணவன் விசுவநாதன், தன் இரண்டாவது மனைவி ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பின் பிரசவத்தில் இறந்து போனதாகவும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் கிடக்கும் தன் அம்மாவையும் கவனிக்க இயலாமல் தான் திண்டாடுவதாகவும் விவரிக்கிறான். தன்னை மன்னித்து விடுமாறு மன்றாடி தன்னுடன் வந்துவிடுமாறு வேண்டுகிறான். அதற்கு மறுத்துவிட்ட யமுனாவோ அவனது குழந்தையையும், தாயையும் பராமரிக்கும் பொறுப்பைத்தானே ஏற்பதாகப் பெருந்தன்மையுடன் கூறுகிறாள்.
நோய்வாய்பட்ட மனைவியைக் கைவிடும் விசுவநாதன் போன்ற அற்ப மனிதர்களின் சுயநலப்போக்கிற்குச் சாட்டையடியாக விளங்குகிறது இந்தச் சிறுகதை.
உன்னைத் தொடும் நேரம்
கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் பிரிவு மட்டுமன்றி பிற மனிதர்களின் தொடர்பினாலோ அல்லது பிரிவினாலோ ஏற்படும் பாதிப்புகளையும் இவரது சிறுகதைகள் சித்தரிக்கின்றன.
எடுத்துக்காட்டாக, ‘வளையோசை இதழில் வெளிவந்த ‘உன்னைத் தொடும் நேரம்’ என்னும் சிறுகதையில் பதிமூன்றே வயதான மீனாட்சி தன் அப்பாவின் நிதி உதவியால் தன்னோடு படிக்கும் பதினைந்து வயது சிறுவன் சாமிக்கண்ணுவை விளயாட்டாக ஒருநாள் கட்டிப் பிடித்து முத்தம் தந்துவிடுகிறாள். யதேச்சையாக அந்தக் காட்சியைப் பார்த்துவிட்ட அவள் அம்மா அலறி ஆர்ப்பாட்டம் செய்து ஊரைக் கூட்டி விடுகிறாள், ஆனால் தன் மகளது எதிர்காலத்தை மனதில் கொண்டு பழியைச் சாமிக்கண்ணுவின் மேல் போட்டு விடுகிறாள். மீனாட்சியின் படிப்பைப் பாதியில் நிறுத்தியதுடன் அவளை வீட்டிற்குள் சிறை வைத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சாரங்கனுக்குத் திருமணம் செய்து வைக்கிறாள். ஒரு நாள் தன் அன்பான கணவனிடம் நடந்தவற்றை அப்படியே சொல்லிவிடுகிறாள் மீனாட்சி. அந்த வயதில் அவளது செய்கை பெரிய குற்றமாகாது என அவளுக்கு ஆறுதல் கூறுகிறார் சாரங்கன். ஆனால் தன்னால் சாமிக்கண்ணுவின் எதிர்காலமே இருண்டுவிட்டதே என்கிற குற்றவுணர்வுடன் வாழ்கிற மீனாட்சிக்கு இறுதி நேரத்தில் உயிர் பிரியாமல் தவிக்கிறது. அவள் நிலையைப் புரிந்து கொண்ட சாரங்கன் சாமிக்கண்ணுவைத் தேடிக் கண்டுபிடித்து மரணப்படுக்கையில் இருக்கும் தன் மனைவியைச் சந்திக்க வைக்கிறார்.
ஒரு நல்ல உள்ளத்தின் சிதைந்து போன கனவுகளுக்குத் தான் காரணமாகிவிட்டோமே என வருந்தும் தன் மனைவியின் மெல்லிய மன உணர்வுகளைப் புரிந்து கொண்ட சாரங்கனைப் போன்ற கணவர்களும் சமூகத்தில் என்றும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை உணர்த்தும் சிறுகதை இது.
தண்ணீர் மலை
குடும்ப வாழ்வில் பிற மனிதர்கள் ஏற்படுத்தும சில சிக்கல்கள் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மிகப் பெரிய பிரிவினை ஏற்படுத்திவிடுகிறது என்பதற்கு ‘குமுதம் இதழில் வெளியான ‘தண்ணீர் மலை’ சிறுகதை சிறந்த சாட்சியாக அமைந்துள்ளது.
பிரசவத்திற்காகத் தன் தாய் வீட்டிற்குச் சென்ற தேவி தன் குழந்தை பிறந்து பேச ஆரம்பித்த பிறகும் கூட தன் புகுந்த வீட்டிற்கு வரவில்லை. காரணத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தனர் தேவியின் மாமனார் அருணாசலமும், மாமியார் வள்ளியம்மையும். தன்னைவிட்டுப் பிரிந்த மனைவியின் நினைவால் உடல்நலம் குன்றி கிழிந்த நாராய்ப் படுக்கையில் கிடக்கிறான் தேவியின் கணவன் தண்ணீர்மலை. நேரில் சென்று தங்கள் மருமகளைத் தன்னுடன் வருமாறு வற்புறுத்தினர் அருணாசலமும் வள்ளியும். அப்போது தேவி தன் கணவன் தண்ணீர்மலை வேறு யாருக்கோ பிறந்தவன் என்றும் அவர்களால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட பிள்ளை என்றும் தங்களது உறவினர் தெரிவித்த செய்தியைக் கூறி பரம்பரைப் பெயர் தெரியாத ஒரு அனாதையுடன் வாழ்வதில் தனக்கு விருப்பம் இல்லையென மறுக்கிறாள். அதற்கு வள்ளியம்மை தண்ணீர்மலை அருணாசலத்தின் மூத்ததாரம் பெற்றெடுத்த பிள்ளை என்றும் அவள் இறந்துவிட்ட காரணத்தால் தான் அவனை வளர்த்ததாகவும் கூறி தண்ணீர்மலை அனாதையல்ல என உணர்த்துகிறாள். தேவி தன் கணவனிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டுகிறாள். அதற்குத் தண்ணீர்மலையோ ‘ஒரு கணவனுக்கும் மனைவிக்குமிடையே ஆதாரமாக இருக்கவேண்டியது அன்புதானே தவிர பரம்பரையல்ல. நீ உன் பரம்பரையின் பெயரைக் காப்பாற்றிக் கொண்டு உன் தாய் வீட்டிலேயே இருந்துவிடு எனக்கூறி அவளை ஏற்க மறுக்கிறான்.
வாசகன்
பிரிவில் தான் எத்தனை வகைகள்! உண்மையான அன்பின் ஆழத்தைப் பிரிவு ஏற்படும் போதல்லவா அளக்க முடிகிறது. அத்தகைய பிரிவு பற்றிப் பேசும் அருமையான சிறுகதை ‘இந்தியா டுடே இதழில் வெளிவந்த ‘வாசகன் ஆகும்.
இக்கதையின் கதாநாயகன் கிருஷ்ணன் ஒரு பிரபலமான எழுத்தாளர். இவரது வாசக ரசிகரும் நண்பருமான பாலு வெளியூரைச் சார்ந்தவர். ‘சோடாபுட்டி என்று அனைவராலும் அழைக்கப்படும் அவர் தனது வருமானத்தில் சரிபாதியை கிருஷ்ணனின் படைப்புகளைச் சுமந்து வரும் புத்தகங்களை வாங்குவதற்குச் செலவிடுகிறார். அவர் காலமான விவரம் ஒரு வருடத்திற்குப் பிறகு தான் கிருஷ்ணனுக்குத் தெரியவருகிறது. செய்தியைக் கேட்ட பிறகு மீண்டும் மீண்டும் பாலுவைப் பற்றிய எண்ணங்கள் மனதை வட்டமிட்ட காரணத்தால், திருநெல்வேலியிலிருக்கும் பாலுவின் வீட்டிற்குச் செல்கிறார். தன் அண்ணனின் குடும்பத்திற்காக ஓடி உழைத்த தனிக் கட்டையான பாலுவிற்கு திவசம் கொடுப்பதற்குக் கூட அவரது குடும்பத்தினர் தயாராக இல்லை என்கிற உண்மை கிருஷ்ணனின் உள்ளத்தைச் சுடுகிறது. பாலுவின் நினைவாகத் தன்னால் என்ன செய்யமுடியும் என்று யோசித்த கிருஷ்ணன் ஒரு கற்றை வெள்ளைக் காகிதங்களை எடுத்துக் கொண்டு தாமிரபரணி ஓடும் படித்துறைக்குச் சென்று பாலுவிற்காக எனத் தொடங்கி ஒரு சிறுகதையை எழுதத் தொடங்குகிறார் என்பதுடன் கதை முடிகிறது.
கிருஷ்ணனது பேனா, ஆழ்ந்த துக்கத்துடன், விசும்பலுடன் கண்ணீர் சிந்துவது போல தலைப்பை எழுதத் தொடங்கியது எனும் வரிகளுடன் இச் சிறுகதை நிறைவடையும் போது நமது உள்ளத்தில் ஏதோ இனம் புரியாத சோகம் நிழலாடுவதை உணரமுடிகிறது.
முடிவாக
சங்ககாலம் முதல் தற்காலம் வரை சோகத்தை சுமந்துவரும் இலக்கியங்களே மக்கள் உள்ளத்தில் நிலைத்துள்ளன. அனுராதா ரமணன் அவர்களின் பிரிவு பற்றிய பல சிறுகதைகள் வாசகர்களின் உள்ளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் இவரது இந்தக் கற்பனைகள் சூனியத்திலிருந்து பிறக்கவில்லை. நிஜங்களின் அஸ்திவாரங்களிலிருந்தே பிறந்திருக்கின்றன. வாழ்க்கை தனக்கு ஒவ்வொரு கணமும் வாரி வழங்கிக் கொண்டிருந்த அழகிய அனுபவங்களைக் கையகப்படுத்தி அப்படியே பிறருக்குத் தன் எழுத்தின் மூலம் சொல்வதில் சிறந்தவர் திருமதி அனுராதா ரமணன் என்பது இச்சிறுகதைகளால் புலனாகிறது.
சமூகத்திடமிருந்து தான் கற்றதை தனது அற்புதமான படைப்புகள் மூலமாக இந்தச் சமூகத்திற்கே திருப்பித் தருவதில் வல்லவர் திருமதி. அனுராதா ரமணன் அவர்கள் என்பதை அவரது சிறுகதையின் பொருத்தமான தலைப்புகளே உறுதி செய்கின்றன.
நூலடைவு
1. அனுராதா ரமணனின் சிறுகதைகள் (இரண்டாம் தொகுப்பு), அனுராதா ரமணன், பூம்புகார் பதிப்பகம், சென்னை ப. எண். 4
2. வாழ நினைத்தால், அனுராதா ரமணனின் சிறுகதைகள் (இரண்டாம் தொகுப்பு), அனுராதா ரமணன், பூம்புகார் பதிப்பகம், சென்னை ப. எண். 39
3. உன்னைத் தொடும் நேரம், அனுராதா ரமணனின் சிறுகதைகள் (இரண்டாம் தொகுப்பு), அனுராதா ரமணன், பூம்புகார் பதிப்பகம், சென்னை ப. எண். 65
4. தண்ணீர் மலை, அனுராதா ரமணனின் சிறுகதைகள் (இரண்டாம் தொகுப்பு), அனுராதா ரமணன், பூம்புகார் பதிப்பகம், சென்னை ப. எண். 86
5. வாசகன், அனுராதா ரமணனின் சிறுகதைகள் (இரண்டாம் தொகுப்பு), அனுராதா ரமணன், பூம்புகார் பதிப்பகம், சென்னை ப. எண். 151
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.