தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
34.கந்தர்வன் படைப்புகளில் குடும்ப உறவுகள்
மு. சண்முகம்
ஐரோப்பியர்களின் வருகையினால் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மாபெரும் மாற்றம் உருவாகியது. அதற்குக் காரணம் அச்சு வடிவமே ஆகும். இதன் வருகையினால் தமிழ் மொழியில் கவிதை, சிறுகதை, நாவல் எனப் பலதரப்பட்ட மொழி வடிவங்கள் தோன்றின. இவ்வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பல்வேறு பொருண்மையில் சிறுகதை இலக்கியம் வளர்ச்சி அடைந்தது. சிறுகதையின் வளர்ச்சியில் முக்கியப் பங்களிப்பினைச் செலுத்தியதில் மணிக்கொடி இதழே ஒரு கருவியாக திகழ்ந்தது. இவற்றின் மூலம் தான் சிறுகதை எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட்டு வளரத் தொடங்கினார்கள்.
சிறுகதைக்குப் பலர் புகழ்ப் பெற்று இருந்தாலும், தன்னுடைய கிராமிய வாழ்வின் அனுபங்களோடு தான் பணிபுரிந்த இடத்தில் கண்ட தொழிலாளரின் இன்னல்கள், வேதனைகள், அவர்களுடைய குடும்ப உறவுகள் ஆகியவற்றைத் தன்னுடைய எளிய படைப்புகளின் வழி சமுதாயத்திற்கு எடுத்துரைத்தவர் கந்தர்வன் ஆவார். சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய இளமைக் காலத்தில், குடும்பத்தில் உறவாடிய உறவுகளைப் பற்றியும் அனுபவ ரீதியாக தன்னுடைய படைப்புகளில் வெளிப்படுத்தியவர். அவருடைய படைப்புகளில் காணப்படும் குடும்ப உறவுகளைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
குடும்பம்
குடும்பம் என்பது சமுதாயத்தின் ஒரு அங்கமாகும். மனிதன் அவனுடைய வாழ்க்கையில் பலவகையான குழுக்களோடு சேர்ந்து செயல்படுகிறான். அவ்வாறு செயல்படும் குழுக்களில் ஒன்றுதான் குடும்பம். மனிதன் வாழ்வின் பெரும்பாலான நேரங்கள் குடும்பத்தோடு அமைவதை நாம் அறிந்த ஒன்றே.
சங்க காலத்தில் மனிதர்கள், மனிதர்களை மனிதர்களாகவே போற்றி வந்தனர் என்பதனையும் அவர்கள் வாழ்ந்த ஊரையும் வேறுபடுத்திக் காணாமல் ஒன்றாகக் கருதினர் என்பதனையும்,
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்ற புறநானூறு பாடல் மூலம் அறியப்படுகின்றது.
குடும்பம் என்பது எல்லாச் சமுதாயங்களிலும் உள்ள அடிப்படையான அமைப்பு. சமுதாயத்தில் உள்ள பல்வேறு அமைப்பு. சமுதாயத்தில் பல்வேறு பிரிவுகளுக்கும் குடும்பம் முக்கியமானது. சமுதாய நடவடிக்கைளுக்குச் சட்டத்திட்டங்களை ஏற்படுத்தி அவைகளைப் பின்பற்றச் செய்கின்றது குடும்பம் என்று கலைக்களஞ்சியம் (தொ.4 ப-8) குறிப்பிடுகின்றது. திருக்குறள் குடும்பத்தைப் பற்றி குறிப்பிடும் போது,
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு (குறள் - 1029)
இக்குறளுக்குப் பரிமேலழகர் உரை எழுதும் போது குடும்பத்தினைக் குடி, இல்லறம், மனை, வீடு என்ற பொருளில் உரை எழுதியிருப்பதையும் காண முடிகின்றது.
குடும்ப உறவு
கந்தர்வன் அவர்கள் தன்னுடைய கதைகளில் குடும்ப உறவு சார்ந்த பதிவுகளைச் செய்துள்ளார். அவற்றில் கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளை, சகோதரன் சகோதரி போன்ற உறவுகளின் உரிமைகளையும், அவற்றின் சிறப்புகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.
“குடும்ப உறவு என்பது இரத்த உறவு என்றும் மண உறவு என்றும் பகுத்துக் கூறலாம் என்கிறார்" சு. சண்முகசுந்தரம். (திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்களில் சமுதாய அமைப்பு பக்- 140)
கணவன் மனைவி உறவு
மனித குலத்தில் கணவன் மனைவி உறவு என்பது மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. திருமணத்திற்குப் பின் தங்களுடைய வாழ்க்கைக்கு மூலதனமாக தங்களுடைய உறவினை வளர்த்துக் கொள்கின்றனர்.
கந்தர்வன் அவர்கள் தன்னுடைய படைப்புகளில் கணவன், மனைவி உறவினைப் பற்றிக் குறிப்பிடுகிறார். “காடுவரை" என்ற கதையில் பெஞ்ஜமினும் விஜயலட்சுமியும் ஆராம்பத்தில் இருந்தே ஒரே அலுவலகத்தில் வேலை செய்கின்றனர். பின் இருவரும் காதலித்துத் திருமணம் செய்துக் கொள்கின்றனர். இரு வீட்டார் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவிப்பதால் இவர்கள் தனியாக வாழ்கின்றனர். விஜயலட்சுமி பிரசவத்தின் போது இறந்து விடுகிறாள். அவளுடைய இறுதிச் சடங்கின் போது சிலுவை நடப்படுகின்றது. அப்போது அச்சிலுவையின் ஒரு புறம் உடைத்துவிடுகிறது. அதைக்கண்டு பெஞ்ஜமின் மேலும் கதறி அழுகின்றான். இக்கதையின் மூலம் அறியப்படுவது தன் வாழ்க்கைக்குத் துணையாக வந்த அவளின் இறப்பானது தான் ஒரு கையினை இழந்தது போன்று எண்ணுவதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
இதைப் போன்றே குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் மனைவியின் ஆசைகளையும், அவளுடைய தேவைகளையும் பூர்த்தி செய்வதில் அருணாசலம் ஒரு சாதரண அலுவலகப் பணியாளராக இருந்தாலும் மனைவி, பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து தான் ஒரு நல்ல கணவனாக விளங்குவதை “அடுத்தது" என்ற சிறுகதை தெளிவுப்படுத்துகிறது.
“சாசனம்" என்ற கதை ஒரு புளியமரத்தின் கதையாகும். இக்கதையில் ஒவ்வொரு முறையும் புளியம்பழங்களை உலுக்கும் போதும் அந்தப் பகுதியில் உள்ள கிழவி ஒருத்தியும் அவளது மகளும் மரத்தடியில் வந்து நிற்பார்கள். அந்தக் கிழவியின் மகள் தாத்தாவின் சாடையிலே இருப்பாள். அப்பா பேசும்போது வாஞ்சையாகக் கேட்பார்கள். பழம் உலுக்கி முடிந்ததும், அப்பா தன் காலால் கொஞ்சம் ஒதுக்கி அந்தக் கிழவியை நோக்கி எடுத்துக் கொள்ளச் செய்வார். உண்மையில் அந்தப் புளியமரம் தனக்குச் சொந்தமானதுதானா என்று அப்பாவுக்கே சந்தேகமாகத்தான் இருந்தது. இக்கதை மறைமுகமாக வெளிப்படுத்துவதெல்லாம், அந்தக் கிழவி தாத்தாவின் மனைவிகளில் ஒருத்தி என்பதுதான். இவ்வாறாக இக்கதையில் கணவன், மனைவி உறவினை வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது.
பெற்றோர் பிள்ளை உறவு
கணவன் மனைவியின் இல்லற வாழ்வின் முக்கியச் செல்வமாகக் கருதப்படுவது குழந்தைச் செல்வம். இந்தச் செல்வத்தைக் காட்டிலும் சிறந்த செல்வமில்லை. பெற்றோர் பிள்ளை உறவு என்பது அப்பாவுக்கும் பிள்ளைகளுக்கும், அம்மாவுக்கும் பிள்ளைகளுக்கும் ஆகியோருக்கும் உள்ள உறவாகும். பெற்றோர்கள் பிள்ளைகள் மீது பாசமாக இருப்பதென்பது இயல்பு, ஆனால் பிள்ளைகள் பெற்றோர்கள் மீது அன்பாக இருப்பதென்பது அரிது. இது தான் உலக வாழ்வின் இயல்பும்.
“பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கள்ளு" என்பார்கள். ஆனால் பெத்த மனமே கள்ளாக இருப்பதை கந்தர்வன் காடுவரை - என்ற கதையில் விளக்கியுள்ளார். தன் மகள் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட பின்பு, அவள் தனியாக வாழ்கிறாள். அவளின் இறப்புச் செய்தி கேட்டதும் ஈரைந்து மாதங்கள் சுமந்த தாய் தலை முழுவதும் பூக்களை வைத்துக் கொண்டும், முகத்தில் மஞ்சள் பூசி பொட்டு வைத்தும் வருவதைக் கண்டு ஊர் மக்கள் புலம்புவதைக் ஆசிரியர் சிறப்பாக எடுத்துரைப்பதைக் காடுவரை என்ற கதை விளக்குகிறது.
பெற்றோரின் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் தன்னுடைய பதிவினையும் காட்டியுள்ளார். பேண்ட்காரர் என்ற கதை மாந்தர் தான் சொந்தமாக ஒரு வீடு கட்ட ஆசை கொண்டு, கடன் வாங்கி அலைந்து திரிந்தாலும் கூட வீட்டிற்குத் தன் பெயரை வைத்து அழகு பார்க்காமல் தன்னுடைய மகனான குமாரின் பெயரையே தன் வீட்டிற்கு “குமார் இல்லம்" என வைத்தும், அப்பெயரையும் ஒரு சான் உயர எழுத்துகளாகச் சிமெண்டில் உருவாக்கி மொட்டை மாடிச் சுவரில் ஏற்றி வைத்துத் தன் மகன் மீது கொண்ட பாசத்தை பேண்ட்காரர் புலப்படுத்துவதை “ஒவ்வொரு கல்லாய்" என்ற கதையின் மூலம் அறியப்படுகின்றது.
“அடுத்தது" என்ற கதையில் வரும் கதை மாந்தர் அருணாசலம் என்பவர் சாதாரண அலுவலக ஊழியராக இருந்தாலும் தன்னுடைய பிள்ளைகளின் ஆசைகளை, பத்து காசு வட்டிக்கு பணம் வாங்கி நிறைவேற்றும் சிறந்த அப்பாவாக இருப்பதை இக்கதையின் மூலம் காண முடிகின்றது.
உடன்பிறப்பின் உறவு
பொதுவாக உலக வாழ்க்கையில் அனைத்து மக்களும் கூறும் பழமொழியானது “அடித்தாலும் புடித்தாலும் அண்ணன் தம்பி தான்" என்பது உலக வாழ்க்கைக்கு மிகவும் பொருந்தக் கூடிய உண்மையாகும். தன் உடன்பிறப்பிற்கு ஒரு துன்பம் வரும் போது அவர்களுடைய இரத்த பாசத்திற்கே வலிமை அதிகம் என்பது நாம் அறிந்த ஒன்று. இக்கூற்றுகளை மெய்பிக்கும் விதமாக கந்தர்வன் தன்னுடைய “பத்தினி ஓலம்" என்ற கதையில் ஒரு பெண்ணிற்கு நிகழ்த்த மாபெரும் அநீதி ஒன்றை ஆற்றமுடியாத துயரமாகக் குறிப்பிடுகிறார். இதன் காரணமாக அப்பெண் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, அவளுடைய தம்பி உடன் அவனுடைய மனைவியும் ஒன்று சேர்ந்து பராமரிப்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டியிருப்பதைக் காணமுடிகின்றது.
“காடுவரை" என்ற கதையில் வரும் ஒரு பெண் கதாபாத்திரம் தன் அக்காளுடைய இறப்பின் போது அவளைத் தவறாகத் திட்டுவதுடன் தன்னை முழுமையாக அலங்கரித்து வருவதைப் பொதுமக்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டியிருப்பதையும் வெளிப்படுத்துகிறார்.
நிறைவாக, கந்தர்வன் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் தான் கண்ட அனுபவங்களையும் நிஜங்களையும் படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார். சமுதாயத்தில் காதல் திருமணத்தினால் ஏற்படும் இன்னல்களையும் மிக ஏழ்மையான குடும்பத்தில் வாழும் சிறிய தொழிலாளர்கள் தம் குடும்பத்தார் மீது கொண்டிருக்கும் அன்பினையும் தம்முடைய பிள்ளைகளின் முன்னேற்றத்தில் துணைபுரியும் பெற்றோர்களின் உழைப்பினையும் கந்தர்வன் அவர்கள் பல கதைகளில் எளிய மொழிநடையோடு சிறந்த படைப்பாற்றலையும் வெளிப்படுத்தியிருப்பதைக் காணமுடிகின்றது.
பயன்பட்ட நூல்கள்
1. கந்தர்வன் கதைகள் தொகுப்பு - பவாசெல்லதுரை
2. கலைக்களஞ்சியம் தொகுதி - 4
3. திருக்குறள்
4. திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்களில் சமுதாய அமைப்பு -சு.சண்முகசுந்தரம்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.