உலகெங்கும் சிறுகதை வடிவம் பத்திரிகைகள் வாயிலாக வளர்ந்தது போலவே தமிழிலும் நிகழ்ந்தது. மணிக்கொடி இதழ் மூலமே 1930-களில் சிறுகதை வடிவ அறிமுகம், பரவலும் நிகழ்ந்தது. மேலும், சரஸ்வதி, தாமரை, எழுத்து முதலான இதழ்கள் சிறுகதை வடிவத்தை முதன்மைப்படுத்தின. மேலும் சிறுகதை வடிவம் கலை நோக்கிலும், அரசியல் நோக்கிலும் வளரத் தொடங்கிய போது, அதன் பரவலும் நிலைபேறும் உறுதிப்பெற்றன.
1970-களில் பல்வேறு இதழ்களில் வண்ண நிலவனின் சிறுகதைகள் வெளிவரத் தொடங்கின. பல்வேறு இதழ்களில் வெளிவந்த எண்பத்தெட்டு சிறுகதைகள் 2001-ஆம் ஆண்டு வண்ணநிலவன் கதைககள் என்ற பெயரில் வெளியிடப்பெற்றன. வண்ணநிலவனின் சிறுகதைகள் தொடக்க நிலையில் புதுமைப்பித்தனைப் பின்பற்றி அமைந்த போதிலும், வளர்ச்சிப் போக்கில் தனித்தன்மை எய்தின. வாழ்வை ஆவணப்படுத்தும் போக்கே அவரது தனித்தன்மையாகும்.
தனி மனிதர்களின் கூடலே ‘குடும்பம்’ எனப் பெறுகின்றது. காதல், பாசம் என்பவற்றின் அடிப்படையில் குடும்பத்தின் நிலைப்பாடு அமைகின்றது. சமுதாயத்தின் பேருறுப்பாகவும், அரசு - ஆட்சி - அதிகாரம் செயல்படுவதற்கான முதன்மைக்களமாகவும் ‘குடும்பம்’ அமைந்துள்ளது.
குடும்ப அமைப்பு ஒரு மனிதரின் பிறப்பு, இறப்பு, பாலியல் மற்றும் உடல் - மனத் தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான இடமாகத் திகழ்கின்றது. கணவன் - மனைவி, பெற்றோர் - பிள்ளை முதலான உறவு முறைகளைக் கொண்டு மகிழ்வதற்கும் குடும்பம் என்ற அலகு காரணமாகி நிற்கின்றது. எனவே பண்பாடு, சமயம், கலைகள் என மனித வாழ்வோடு தொடர்புடைய அனைத்து வளர்ச்சிக்கும் ‘குடும்பம்’ காரணமாகி அதன் இன்றியமையாமைப் புலப்படுத்துகின்றது. ப்ராய்டு, ஆடலர் போன்ற உளவியலறிஞர்கள் குடும்ப வளர்ப்பே சமுதாய வளர்ச்சியாகப் பரிணாமம் கொள்கிறது என்பர்.
குடும்பத்தில் பெண்களின் நிலை மரபைத் தழுவியே இருந்து வருகின்றது. தந்தைவழிச் சமூகநிலை தொடர்வதால், பெண்நிலை பெரிய அளவில் மாற்றமின்றியே இருந்து வருகின்றது. எனினும், வண்ணநிலவன் சிறுகதைகளில் நுணுக்கமான மாறுபாடுகளைக் காண இயலும். மரபுநிலையில் பெரிதும் துன்பங்களுக்கு இலக்கான பெண்களே படைக்கப் பெற்றுள்ளனர்.
“நமது அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் கீழ்நிலை அனுபவங்கள் பலவிதமாக உள்ளன. பாகுபாடுகள், அவமதிப்பு, கட்டுப்படுத்துதல், ஒடுக்குதல், வன்முறை என்ற இத்தகைய கீழ்நிலைப்படுத்தும் நிகழ்வுகளை வர்க்க வேற்றுமை இன்றி, அனைத்துப் பெண்களும் அனுபவித்து வருகின்றனர். இந்த நிகழ்வுகளின் தன்மைகள் மாறலாம். ஆனால், உட்பொருள் ஒன்றே” என்று கம்லா பாசின் கூறுகிறார்.
புதிதாகத் திருமணம் செய்துகொண்டு நிறைசூலியாக இருக்கும் செல்லபாப்பா
(பலாப்பழம் - வ.நி.க.பக்.73-79) பலாப்பழம் தின்ன ஆசைப்படுகிறாள். மரத்தடுப்புக்குப் பின் இருக்கும் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பலாப்பழம் சாப்பிடுகின்றனர். வாசனை மூக்கைத் துளைக்கிறது. பக்கத்து வீட்டுக் குழந்தை வேறு வேலையாக வந்த போது, பலாச்சுளையை அப்பெண்ணின் அம்மா கொடுத்து அனுப்பியதாக நினைக்கிறாள். அப்படி ஏதுமில்லை, அன்று மாலை கணவன் வாங்கி வருவான் என்று நினைக்கிறாள். அவளது ஆசை நிராசையாகிறது. குறைந்த வருமானம் உள்ள கணவனின் நிலை அவளது ஏமாற்றித்திற்குக் காரணமாகிறது. இதில் குடும்ப வறுமையின் விளைவு முதலில் (சூலுற்ற) பெண் மாந்தரைத் தாக்குவதைக் காணமுடிகிறது.
செல்லம்மா, செல்லையா பண்டிதரின் மனைவி. பிணம் வராததால் வெட்டியார் (ன்) பணி இல்லை. கூலி இல்லை, வீட்டில் வறுமை தாண்டவமாடுகிறது. செல்லம்மா தன் கணவனைக் குற்றங்கூறுகிறாள். “யோவ் மனுஷா! ஏதாவது மிச்சம் மிஞ்சாடி சொரணையாவது இருக்கா, பொணத்தக் காத்துக் கெடந்து, காத்துக் கெடந்து நீயும் பொணமாகிப் போயிட்டீயா? மயிரே... வீடு மொழுகலைன்று ஆடுதீரே, மூணு நாளாகுது சோத்துப் பருக்கையைப் பாத்து... இன்னிக்கி எளவு விழும். நாளைக்கி எளவு விழும்னு பத்து பகல் ராத்திரி கழிஞ்சாச்சு...”
(மயான காண்டம் - வ.நி.க.பக.43-48) என்று வறுமையைக் கூறிப் புலம்புகிறாள். மேலும், அவள் கணவன் அவளைத் திட்டி இழிவுபடுத்துகிறான். இது, குடும்பத்தில் மனைவி நிலையை எடுத்துக்காட்டுவதாகும்.
‘சிவகாமி’யின் கணவன் தன் நண்பனை வீட்டுக்கு அழைத்து வருகிறான். நண்பன், தன் நண்பனின் மனைவியைக் காமவுணர்வோடு காண்கிறான், பேசுகிறான். இதைக் கணவன் உணர்ந்ததுபோல தெரியவில்லை. அவனிடமிருந்து கடன் பெறுவதையே முதன்மையாகக் கொள்கிறான். மனைவி, தன்னைக் காமவுணர்வோடு நோக்கும் கணவனது நண்பனின் செயலை வெறுக்கின்றாள். (வ.நி.க.பக் 104)
இதில் பெண் ஓர் இக்கட்டான நிலையில் உள்ளமை உணரத்தக்கது. நண்பனின் மனைவி என்ற பண்பாட்டு உணர்விலிருந்து விடுபட்டுக் காமவுணர்வோடு பார்க்கும் ஆணின் செயல் இதில் விளக்கப்படுகிறது.
குஸ்திக்குப் போகின்ற இஸ்மாயிலின் மனைவி ஆமினா, தன் குழந்தைகளின் மேல் தன் கணவன் மீதான வெறுப்பை மடைமாற்றம் செய்கிறாள். அவளது மூத்த மகள் நூர் எல்லாவற்றையும் சரி செய்து, பீடி சுற்றி, வருமானத்தைக் குடும்பம் நட்த்தக் கொடுத்துத் தந்தைக்குப் பதிலாகக் குடும்பத்தை நடத்தும் நிலை, பயில்வான் என்ற சிறுகதையில் இடம் பெற்றுள்ளது.
“இன்றைக்கும் கூட வாப்பாவுக்கு குஸ்தி இருக்கிறது. பத்துநாள் குஸ்தியாம். ஆயிரம் கிடைக்குமோ, இரண்டாயிரம் கிடைக்குமோ, எவ்வளவு பணம் வந்தால் என்ன? ஆமினாவுக்குப் புகைகிற அடுப்பும், வறட்டு இருமலும், சுத்தி சுத்திச் சலிப்பை உண்டு பண்ணுகிற இந்தப் பிள்ளைகளும்தான் மிச்சம். நூருக்கோ இருக்கவே இருக்கிறது வட்டச்சுளரும், பீடி இலைகளும். பல் தேய்த்தது முதல் படுக்கப் போவதுவரை இந்த பீடி இலைகள்தான் அவளது உலகம். ரொம்ப அமைதியான பிள்ளை அவள். பசிக்கிறது. என்று அவள் சொன்னதே இல்லை. அவள் மட்டும் இல்லையானால் வீடு என்ன ஆகியிருக்கும் என்று சொல்லவே முடியாது. முதுகு ஒடிய அவள் பீடி சுற்றப்போய் ஈரவிறகாவது புகைகிறது...”
(வ.நி.க.பக்.182) எனத் தொடங்கும் பகுதி குடும்பப் பெண்ணிகளின் நிலையைப் படம் பிடிக்கிறது.
கணவனின் அடக்கு முறைக்கு உள்ளான அந்த அவள் (துருவங்கள்) தன் சொந்த ரசனையற்ற வாழ்வை வெறுக்கிறாள். “அவனுக்கும் அவளுக்கும் எதிலுமே ஒட்டவில்லை. இரண்டு பேருடைய ருசியும், ரசனைகளும் விருப்பு வெறுப்புகளும் நேர் எதிர்மாறாக இருந்தன.”
(வ.நி.க.பக்.301.) “எப்போதோ, உனக்கும் எனக்கும் உள்ள உறவு அறந்தது என்று சொல்லிவிட்டு ரயிலேறிப் போயிருக்கலாம். இவளால் ஏன் அப்படிச் செய்ய முடியாமல் போயிற்று? அப்படிக் கண்டித்துக் கொண்டு போகமுடியாமல் தடுத்தது எது? இந்தக் குழந்தைக்காகவா? இல்லை உலகம் சொல்லும் பழிச்சொல்லுக்காகவே?
(வ.நி.க.பக்.307) குடும்பத்தின் மீதான பொறுப்புணர்வின் அவளை வேண்டாத கணவனோடு வாழச் செய்கிறது. பொறுப்புணர்வின் சுமை அவளை வருத்துகின்றது. மனைவியை அடிமையாகவே நடத்தும் கணவனின் இயல்பை ‘பொறுப்புணர்வு’ என்ற மரபு இயல்பு (Unconcious behaviour) தாங்கி நிற்கச் செய்கிறது. இது குடும்பவுணர்வின் ஆதிக்க இயல்பு எனக் கொள்ளத்தக்கது.
பிள்ளை இல்லாத பெண் (மெஹ்ருன்னிசா) கணவனுக்குப் பெண் பார்த்து மணம் முடிக்கிறாள். கணவன் மீரான் வேறு வழியின்றித் தனிக் குடித்தனம் செய்கிறான். மெஹ்ருன்னிசா பழைய வீடு சிதைந்தபோதும், அங்கிருந்து செல்லவில்லை. தனிமையில் வாழ்கிறாள். மெஹ்ருன்னிசாவின் வீட்டில் வேலை செய்யும் கருத்த ஆயிஷாவோ ஆதறவற்றவள். ஆக்குப்புரை தவிர பிற ஏதும் அறியாதவள். அவளும் மாரடைப்பால் இறந்திட மென்மையும், இசை ஆர்வமும் கொண்ட மெஹ்ருன்னிசா தனிவாழ்வு வாழ்கிறாள்.
பதினான்கு ஆண்டுகளாகப் பிள்ளை பேறற்ற மெஹ்ருன்னிசா தன் கணவனுக்கு வேறு மணம் முடிக்க முடிகிறது. தனக்கான மாற்றுவழியைத் தெரிவு செய்ய இயவில்லை. பெண்ணடிமை உணர்வு, ஆணின் மகிழ்வை மட்டுமே நாடுவதாக அமைகிறது. மெஹ்ருன்னிசா வீட்டுச் சமையல்காரப் பெண் ஆயிஷா திருமணமும், குடும்ப வாழ்வும் அறியாமலே சமையலறை வாழ்வோடு முடிந்து போகிறாள். பெண்களின் துயர் குடும்ப வாழ்வின் இயல்பாக அமைந்துள்ளமை எண்ணத்தக்கது.
(வ.நி.க. பக்.441-453)
குடும்ப அமைப்பில் கணவனது பொருளாதாரப் பற்றாக்குறையின் விளைவுகள் யாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்வதும், தனக்காக வாழாமல் கணவனுக்காகப் பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்பதும் வண்ணநிலவன் சிறுகதைகளின் வழியாக உரை முடிகிறது. மேலும், இவரது சிறுகதைகளில் துயர் கொண்ட பெண்களே குடும்ப அமைப்பில் இடம் பெறுகின்றனர். குடும்பம் என்ற அமைப்பு பெண்களுக்கு எதிரானதாகவே இருந்து வருகிறது என்பதையும் நம்மால் உணர இயலும்.