தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
6. கண்ணன் சிறுகதைகளில் உத்தி முறைகள்
இரா. ஜீவா
இலக்கியப் படைப்பாளர் ஒருவர் தான் எதிர்பார்க்கின்ற வெற்றியை அடைய வேண்டுமெனில், அதில் இடம் பெறுகின்ற உத்திமுறைகளை நன்கு பயன்படுத்த வேண்டும். கற்பனை வளம், கதைச்சூழல் ஆகியவற்றிற்கு ஏற்ப உத்திகள் வேறுபடுகின்றன. படைப்பாளர்கள் எழுதும் போது உத்திகள் தானாக வந்து கதைப் போக்கிற்கேற்பவும், பொருளுக்கேற்பவும் அமைந்து விடுகின்றன. இத்தன்மையில் கண்ணன் சிறுகதைகளில் அமைந்துள்ள உத்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
உத்தி விளக்கம்
சொல்ல நினைக்கின்ற கருத்தைச் தெளிவாகச் சொல்வதற்கு உத்தி பயன்படுகிறது. உத்தி என்ற சொல்லுக்குச் சொல்லால் மொழிதல் என்று பொருள்படும். ஒரு கலைஞனின் செவ்விய வெளியீட்டுத் திறனும், பயன் கொள்ளும் ஆற்றலும், ஆக்கமுறையும் உத்தி எனப்படுகிறது. படைப்பாளர் தம்முடைய கருத்தைப் பிறருக்கு எடுத்துரைக்க பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றனர். சிறந்த சொல்லாட்சிகளைப் பயன்படுத்தித் தம் படைப்பை உணர்ச்சி மிகுந்து எடுத்துரைக்கின்றனர். தொல்காப்பியம் முப்பத்திரண்டு வகை உத்திகளை விளக்கமாக எடுத்துரைக்கிறது.
‘ஒத்த காட்சி உத்திவகை பிரிப்பின்” ( நூற் 656)
இந்நூற்பா விளக்குவதாவது கூற விரும்பும் பொருளை அதற்கு ஒப்புமையான மற்றொரு பொருள் வழியாகவும் உட்பொருளாகவும் உணர்த்துகிறது உத்தி என்று பொருள் கொள்ளலாம்.
கண்ணன் சிறுகதைகளில் உத்தி வகைகள்
1. தலைப்பு உத்தி
2. கதைத் தொடக்க உத்தி
3. கதை முடிவு உத்தி
4. ஒலிக் குறிப்பை உணர்த்தும் உத்தி
5. இலக்கியப் படைப்புகள் மேற்க்கோள் உத்தி
6. எளிய இனிய சொல்லாட்சி உத்தி
தலைப்பு உத்தி
கதைகளுக்கு தலைப்பிடுதல் என்பது மிக முக்கியமான பணிகளுள் ஒன்றாகும். சிறுகதைக்கும் தலைப்பிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஒரு சிறுகதை வெற்றி பெற வேண்டுமாயின் அதன் தலைப்பு, சுவைபட அமைத்திருத்தல் வேண்டும். கண்ணன் சிறுகதைகளில் கதை மாந்தர்களின் பெயர்களை வைத்தே, கதையின் தலைப்பை பல ஆசிரியர்கள் அமைத்துள்ளனர். உதாரணமாக அருள் செல்வநாயகத்தின் ‘மாருதப் பிரவல்லி’ என்னும் சிறுகதையில் சோழநாட்டு மன்னனான திசையுக்கிரனுக்கு மாருதப்பிரவல்லி என்னும் ஒரு மகள் இருந்தாள் அவள் குன்மநோயால் பாதிக்கப்பட்டிருந்தாள்.
பல வைத்தியர்களால் கூட அவள் நோயை குணப்படுத்த முடியவில்லை. அப்போது, மாருதபிரவல்லி சாந்தலிங்கம் என்னும் முனிவரைக் கண்டாள் அவள். நோய் குணமாக பரிகாரம் சொல்கிறார். குழந்தாய், நீ இலங்கையின் வடக்கே கீரிமலை என்றோர் இடம் உள்ளது. அங்குள்ள கடற்கரையை அடுத்து புண்ணிய நீர்நிலை இருக்கிறது. அங்கு சென்று நீராடினால் உன் நோய் தீரும் என்கிறார். அம்முனிவர் சொன்னபடி நடந்து கொள்கிறாள். பின்பு அவள் நோய் குணமடைந்து அழகுடையவளாகிறாள். இச்சிறுகதை முழுவதும் மாருதப் பிரவல்லியை சுற்றியே கதை நகர்த்தப்படுவதால் ஆசிரியர் கதைத்தலைவி பெயரையே கதைத் தலைப்பாக ‘மாருதப் பிரவல்லி’ என்று அமைந்துள்ளார். இதுபோல் குமாரின் பிடிவாதம், ராமு துப்பறிந்தான். மாயாபுரி நீலவேணி, சமுத்திர ராஜகுமாரி போன்ற சிறுகதைகளில் கதை மாந்தாகளின் பெயரே கதைத் தலைப்பாக அமைந்துள்ள உத்தி முறையைக் காணலாம்.
கதைத் தொடக்க உத்தி
‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும், முதல் கோணல் முற்றிலும் கோணல்” முதலான பழமொழிகள் சிறுகதைகளின் தொடக்கங்கள் நன்றாக அமைய வேண்டும் என்பதைச் சுட்டுகின்றன. சிறுகதையின் முக்கியமான மரபுகளில் ஒன்று, அதன் தொடக்கம் ஆகும். சிறுகதை இலக்கியத்திற்கு அதன் தொடக்கம் இன்றியமையாததாகும்.
இவ்வகையில் கண்ணன் சிறுகதைகளில், இரு வகையிலான தன்மையில் கதைத் தொடக்க உத்திகள் பின்பற்றப்பட்டுள்ளன. அவை
1. கதை மாந்தர் கூற்று முறையில் கதையைத் தொடங்குதல்
2. இடமும் காலமும் பற்றிய சூழல் வருணனையோடு தொடங்குதல்
ஆகியனவாகும். இவை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
1. கதைமாந்தர் கூற்றுமுறையில் கதையைத் தொடங்குதல்
கதை மாந்தர் கூறுவதுபோல் எழுதப்படும் கதைகள் தன்மை இடத்தில் (First Person) தொடங்கப் பெறுவது இயல்பாகும். இவ்வகைத் தொடக்கம் படிப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைகின்றது. சங்கரசுப்புவின் ‘கண்ணன் ஒரு திருடன்’ என்னும் சிறுகதையில் “தமிழாசிரியர் முருகபூபதி பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். மந்தரை சொன்ன சொல் கேட்ட கைகேயி கோபம் மிகக்கொண்டாள்” என்று கதைமாந்தர் கூறுவதாக இச்சிறுகதை தொடங்கப்பட்டுள்ளது.
2. இடமும், காலமும் பற்றிய சூழல் வருணனையோடு தொடங்குதல்
கதை நிகழும் இடம், காலம், பாத்திரத்தன்மை, ஆகியன பற்றிய வருணனைகளோடும் சிறுகதைகள் தொடங்குகின்றன. சான்றாக, தி. ஜ. ர. வின் ‘அணில்’ என்ற சிறுகதையில் ‘டிங்! டிங்! மணி இரண்டு அடித்தது. இச்! இச்! என்று கத்திக் கொண்டு அணில்கள் வந்து விட்டன”. கே. எஸ். பியின் ‘பழைய பாக்கி’ என்னும் சிறுகதையில் “காலையில் எழுந்ததும் முகசவரம் என்பது, என் தந்தையோடு கூடவே பிறந்தது என்ற காலத்தை குறிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது”. இவ்வாறு இடம், காலம், பற்றிய வருணனையோடு ஆசிரியர் அமைத்துள்ளார். இவ்வுத்தி சிறு கதையைப் படிக்கும் போதே ஆர்வத்தைத் ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைகிறது.
கதை முடிவு உத்தி
கதைத் தொடக்கம் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக அமைவது போல், கதையின் முடிவு வாசகர்களைச் சிந்திக்க வைப்பதாக அமைய வேண்டும். சிறுகதைகளில் முடிவுகளைப் பொறுத்த வரையில் அழுத்தமும், ஆற்றலும், சுருக்கமும், செறிவும் படிந்திருக்க வேண்டும். சோமசன்மாவின் ‘கூரைமேல்ஆடு’ என்னும் சிறுகதையில், “பிள்ளைகளே சாது வாயிருந்தாலும் இருக்கிற இடத்தில் இருந்தால் தைரியமாய் இருக்கலாம்” என்ற கருத்து ஆசிரியர் கூற்றாக அமைவதோடு, தெரியாத இடத்திற்குச் சென்று துன்பப்படுவதை விட, இருக்கின்ற இடத்திலே மகிழ்ச்சியாய் வாழலாம் என்ற செய்தி நமக்கு வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு கதையின் முடிவு ஆசிரியர் கூற்றாக அமைவது சிறந்த உத்தியாக கருதப்படுகின்றது.
ஒலிக்குறிப்பை உணர்த்தும் உத்தி
விலங்கு, பறவை, வாகனம், கருவி, போன்றவை எழுப்பும் அம்மே, அம்மே, காகா, காகா, குபு, குபு, டிக், டிக், டிங்டாங் போன்ற ஒலிக்குறிப்புச் சொற்களை நாம் வாசிக்கும் போதே அந்தச் சூழலுக்கு நம்மை அழைத்துச் செல்லும் இத்தன்மையில் கண்ணன் கதைகளில் ஒலிக்குறிப்பு உத்தியை ஆசிரியர் பின்பற்றியிருக்கிறார். “ரெயில் ஊ ஊ, என்று கத்திக் கொண்டே குப் குப் என்று வேகமாகக் கிளம்பி விட்டது.” அதே சிறுகதையில் “சீன வெடிகள் டப்டுப் என்று வெடித்தது.” இச்செய்தி ரயிலின் கறுப்புமுயல் என்னும் சிறுகதையில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு வாசகர்களை ஈர்க்கும் விதமாக ஒலிக்குறிப்புச் சொற்களை பயன்படுத்தும் உத்திகளையும் ஆசிரியர் கையாண்டுள்ளார்கள்.
இலக்கியப் படைப்புகள் மேற்கோளாகக் காட்டும் உத்தி
படைப்பாளன் தான் அறிந்த இலக்கியவாதிகளின் பாடல்களைத் தனது படைப்பில் எடுத்தாள்வது இலக்கிய மேற்கோள் உத்தியாகும். இவ்வகை உத்தி கதையின் ஆரம்பத்திலோ, முடிவிலோ உச்சகட்டத்திலோ பின்பற்றப்படும்.
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்” (குறள் 319)
என்ற குறள் பூவண்ணனின் ‘பொம்மை உடைத்தது’ என்னும் சிறுகதையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கதை மூலம் பிறருக்கு நாம் துன்பம் செய்தால் பின்பு, அது நமக்கே துன்பமாக அமையும் என்று சிறுகதையில் கதை மாந்தர் உணர்வதாக இலக்கியப் படைப்புகள் மேற்கோளாக சுட்டிக்காட்டப்படுகிறது.
எளிய இனிய சொல்லாட்சி உத்தி
எளிய இனிய சொற்களில் எதுகை, மோனை இரண்டு மூன்று சீர்களில் அமையும், குழந்தைப் பாடல்கள் குழந்தைகளை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை. நாம் குழந்தைகளிடம் சுட்டிக்காட்டிப் பேசிப் பழகும் சொற்களில் பாடல்கள் அமைந்திருப்பது விரும்பத்தக்கதாகும்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.