தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
7. வல்லிக்கண்ணனின் “மூக்கப்பிள்ளை வீட்டு விருந்து” கதையில் சமூகம்
வி. கவிதா
முன்னுரை
சிறுகதை இலக்கியம் ஒருவகையில் வாழ்வின் நடப்பியலாகக் காட்டுகிறது. கற்போருக்குப் பொழுது போக்காகக் சுவையூட்டுவதோடு மட்டும் சிறுகதையின் பங்கு நின்று விடுவதில்லை. நடப்பியல் செய்திகளைத் தருவதால் சிறுகதை மக்கள் வாழ்வை, பண்பாட்டை ஆராய உதவும் கருவியாகின்றது. சமூகத்தில் உள்ள மக்கள் பிரச்சனையைத் தமது கதைகளில காட்டுகிறார். மனிதன் தன் இனத்துடன் இணைந்தும் பிணைந்தும் வாழும் இயல்புடையவன். அவன் கூடிக் கலந்து வாழ்வதில் சமூகம் உருவாகிறது.
சமூகம்
சமுதாயம் என்பதற்குச் சமூக அறிஞர்கள் பல்வேறு விளக்கங்களைத் தருவார்கள். “சமுதாயம் என்பது கூடி வாழும் மனிதக் கூட்டத்தைக் குறிப்பதாக அமைகின்றது. சமூகம் என்பது மக்களின் தொகுதியாகும். பல குடும்பங்களின் இணைவால் சமூகம் உருவாக்கம் பெறுகிறது. தனி மனிதருடைய வாழ்க்கை சமூகத்தோடு ஒத்து வாழ வேண்டும் என்பதை வல்லிக்கண்ணன் படம் பிடித்துக் காட்டுகிறார்.
மூக்கப்பிள்ளையின் மனச்சான்று
“மூக்கப்பிள்ளையின் மனச்சான்று உறுத்தல் கொடுக்கத் தொடங்கியது. காரணம், செய்தித்தாள்களில் வந்த செய்திகள், பயணச்சீட்டு வாங்காமல் இரயில் பயணம் செய்த ஒருவர், பல ஆண்டுகள் கழித்துப் பயணக் கட்டணத்துடன் அபராதமும் வட்டியும் சேர்த்து நிருவாகத்தினருக்கு அனுப்பி வைத்தார்” (1) என்பதே செய்தியாகும். இத்தகைய செய்திகள் மூக்கப்பிள்ளையின் மனத்துள் பதிந்து வேலை செய்யத் தொடங்கின.
மூக்கப்பிள்ளையின் பண்பு
“கடைக்காரர்கள் சில்லறை கொடுக்கும் போது அதிகமாய்க் கொடுத்தால், அதிகப் பணத்தைத் திருப்பிக் கொடுத்திடுவார். ‘ஊரான் அவர் பொதுச் சொத்தைச் சுரண்டியதில்லை; தனிநபர் எவரையும் ஏமாற்றியதுமில்லை” (2) இவ்வாறு முதலில் மூக்கப்பிள்ளையின் பாத்திரத்தை அறிமுகப்படுத்தி அவர்தம் பண்பை விளக்கக் கதையைத் தொடங்குகிறார் வல்லிக்கண்ணன்.
தனியனாய் இருக்கும் மூக்கப்பிள்ளை
“சிவபுரத்தில் சுகவாசியாய் வாழ்ந்தவர், மூக்கப்பிள்ளை. சமூகத்துடன் ஒட்டி வாழாமல் விலகியிருந்தவர் ஊர்ப் பொதுக்காரியங்களில் பங்குகொள்ளாதவர் எனினும், ஊர் இழவு, திருமணங்களில் வேண்டா வெறுப்பாய்த் தலைகாட்டுவார். விருந்துச் சாப்பாட்டில் பங்கு பற்றமாட்டார்” (3). ஆனால், ‘ஊர் வழக்கம்’ ஒன்றை மட்டும் தட்டாமல் ஏற்க வேண்டியதாயிற்று. அதனால் அவருக்கு ஏற்பட்ட மன உறுத்தலைச் சில நிகழ்ச்சிகளால் கதாசிரியர் தொpவிக்கிறார்.
ஊர் வழக்கம்
“ஒரு வீட்டில் திருமணம் நடந்தால், பலநாள் கழித்து. ‘நல்ல மாசத்துப் பழம்’ என்று சில பழங்களை ஊர் முழுதும் வீடு தேடிக்கொடுப்பார்கள். ‘மறு வீட்டுப் பலகாரம்’ என்று இனிப்புகளையும் வழங்குவார்கள். இஃது ஊர் வழக்கம். பெரியவர் எவரேனும் இறந்தால், மகன் அல்லது பேத்தி ஊருக்குக் ‘கடலை போடுவது’ வழக்கம். இவற்றைப் பெரும்பாலும் எல்லா வீட்டாரும் மறுக்காமல் ஏற்றுக்கொள்வார்” (4). ‘நாங்கள் என்னத்தைத் திரும்பச் செய்யப் போகிறோம்’ என்று சிலர் மறுத்து விடுவதுமுண்டு.
பெளர்ணமி விரதம்
“இவற்றையெல்லாம் வாங்கும் தாம் ஊராருக்கும் உறவுக்காரர்களுக்கும் திருப்பித்தர வாய்ப்பில்லையே! ஊர் கூட்டிச் சாப்பாடு போடச் சந்தர்ப்பம் வராதே!’ என்று எண்ணினார், மூக்கப்பிள்ளை. இவை வட்டி இல்லாக் கடன். ஒருவர் செய்தால், மற்றவர் எப்பொழுதாவது அதைத் திருப்பிச் செய்ய வேண்டும். தமக்கு அந்த வாய்ப்பு இல்லை. அதனால் ஊரார் பழிப்புக்கும் வசவுக்கும் ஆளாக வேண்டிவரும். இவ்வாறு அவர் நெடிது எண்ணினார். அதன் முடிவாய்ச் சித்திரா பெளர்ணமியன்று இரவில் ஊருக்கு விருந்து வைக்க வேண்டும்: ஊர்க்கடனைத் தீர்க்க வேண்டுமென முடிவு செய்தார்” (5). அன்று சித்திரபுத்திர நயினார் நோன்பும் வருகிறது. உடனே செயல்படத் தொடங்கினார். மூக்கப்பிள்ளை.
சம்பிரதாயத்ததைப் பின்பற்றவில்லை
“சமையல்காரர் இருவரை அழைத்தார். தேவையான பொருள்களுக்குப் பட்டியல் போட்டு வாங்கினார். தம் எண்ணத்தை விருந்து அன்றைக்கு அனைவருக்கும் தொவித்தால் போதுமென்று நினைத்தார்.
மூக்கப்பிள்ளை பெளர்ணமி நாளன்று காலை. ‘அழைப்புக்காரன்’ ஆறுமுகத்தை அழைத்து. சிவபுரம் சுகவாசிகள் எல்லார் வீட்டிற்கும் போய், ‘சித்தரா பெளர்ணமி சித்திரா அன்னச் சிறப்புச் சாப்பாடு” (6) என்று சொல்லி அழைக்குமாறு ஏற்பாடு செய்தார்.
விருந்தினரை எதிர்பார்த்தல்
“அன்று மாலை வீட்டில் விளக்குகளை ஏற்றி வைத்ததுக் கொண்டு உணவு பரிமாறத் தயாராய் இருந்தார் மூக்கப்பிள்ளை. இரவு ஒன்பது மணிவரை எவரும் வரவில்லை. மூக்கப்பிள்ளை மனம் குமுறினார். மீண்டும் அழைக்குமாறு ஆறுமுகத்தை அனுப்பினார். தாம் நினைத்ததை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஆதங்கம் மூக்கப்பிள்ளைக்கு இருந்தது” (7).
ஆறுமுகம் திரும்பி வந்து, ‘சிவபுரத்தில் ஒரு வீட்டில் விசேஷம், விருந்து என்றால் ஊரார் பல சம்பிரதாயங்களை எதிர்பார்க்கிறார்கள் என்றான்.
ஊரார் வழக்கு
“முதலில் வீட்டுக்காரரே நேரில் ஒவ்வொருவரையும் பார்த்துச் செய்தி சொல்லி அழைக்க வேண்டும்: “சாப்பாட்டையும் நம் வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள்” என்று வலியுறுத்த வேண்டும். விசேஷத்திற்கு முதல் நாள் இன்னார் வீட்டு விசேஷம். சாப்பாட்டிற்கு அழைத்திருக்கிறோம்’ என்று சொல்ல வேண்டும். விசேஷத்தன்று உணவு நேரத்தில், ‘ஐயா, சாப்பிட வாங்க, இலை போட்டாச்சு’ என்று அழைக்க வேண்டும்.. அழைக்கப்பெற்றவர் வருகிறாரோ இல்லையோ, அழைப்பு மட்டும் விடுபடக்கூடாது. ஊராரின் சடங்குகள், சம்பிரதாய வழக்கங்களில் ஒத்துப் போகாதவராயிற்றே மூக்கப்பிள்ளை!” (8)
மூக்கப்பிள்ளை இந்தச் சம்பிரதாயங்களுள் எதையும் கடைப்பிடிக்காததால் சிவபுரம் சுகவாசிகள் எவரும் விருந்திற்கு வரவில்லை.
சம்பிரதாய மீறல்
“மூக்கப்பிள்ளை மனம் தளரவில்லை; தம் எண்ணத்தை மடைமாற்றம் செய்தார்; ஆறுமுகத்தை அழைத்தார்; “நீ வடக்கூர், கீழூர்ப் பக்கம் சென்று, அங்கே உள்ள ஏழை எளிய பிள்ளைகளை இங்கே வரச்சொல். ஐயா வீட்டில் நயினார் நோன்பு வழிபாடு, சித்திரான்ன பிரசாதம் என்று சொல்லி அனுப்பி வை. ஆண்டுக்கு ஒரு நாள் அவர்கள் புதுமையாய் நிறைவாய் சாப்பிடட்டும்” (9) என்றார்.
மூக்கப்பிள்ளையின் தத்துவம்
“செய்தது வீணாகக் கூடாது. சுகவாசிகளுக்கு உணவு அளிப்பதை விட ஏழை எளியவர் வயிற்றுக்குச் சோறு போடுவது மிகப்பெரிய விஷயம்” (10) என்று தத்துவம் பேசினார், மூக்கப்பிள்ளை.
அழைக்கப்பெற்றவர்கள் வந்து சாப்பிட்டிருந்தால் அவரிடம் இந்தத் தத்துவம் பிறந்திருக்குமா?
மூக்கப்பிள்ளையின் பொன்மொழி
‘இருக்கிற சுகவாசிகளுக்கே மேலும் மேலும் விருந்தளிப்பதை விட ஏழைபாழைகள் வயிற்றுக்குச் சோறு போடுவது மிகப்பெரிய விஷயமாகும்’ (11) என்ற பொன்மொழியை உதிர்த்தது, மூக்கப்பிள்ளையின் மனம்.
முடிவுரை
சிறுகதை என்பது சமூத்தில் உள்ள பிரச்சனைகளை எடுத்துக்காட்டுவதாகும். வல்லிக்கண்ணன் சிறுகதையில் தனிமனிதனுடைய வாழ்க்கை சமூகத்தோடு ஒத்து வாழவேண்டும் என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது. மூக்கப்பிள்ளை வீட்டு விருந்து சிறுகதையில் நாட்டு வழக்கம் ஊர்மரபு பற்றிய செய்திகள் குறிப்பிடப்படுகிறது. சமூகத்தில் தனியனாய் இல்லாமல் ஊரோடு ஒத்துவாழவேண்டும் என்ற கருத்தின்படி வாழவேண்டும் ஊரில் உள்ளவர்களுக்கு விருந்தளிப்பவர்களுக்கு விருந்தளிப்பதைவிட ஏழை எளியவர்களுக்கு உணவளிப்பதே சிறந்தது என்ற கருத்து இக்கதையின் மூலம் அறியப்படுகிறது.
அடிக்குறிப்பு
1. மூக்கப்பிள்ளை, வல்லிக்கண்ணன். ப.191.
2. மூக்கப்பிள்ளை, வல்லிக்கண்ணன். ப.192.
3. மூக்கப்பிள்ளை, வல்லிக்கண்ணன். ப.193.
4. மூக்கப்பிள்ளை, வல்லிக்கண்ணன். ப.194.
5. மூக்கப்பிள்ளை, வல்லிக்கண்ணன். ப.197.
6. மூக்கப்பிள்ளை, வல்லிக்கண்ணன். ப.198.
7. மூக்கப்பிள்ளை, வல்லிக்கண்ணன். ப.199.
8. மூக்கப்பிள்ளை, வல்லிக்கண்ணன். ப.200.
9. மூக்கப்பிள்ளை, வல்லிக்கண்ணன். ப.201.
10. மூக்கப்பிள்ளை, வல்லிக்கண்ணன். ப.201.
11. மூக்கப்பிள்ளை, வல்லிக்கண்ணன். ப.201.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.