தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
வாழ்த்துரை
முனைவர் வே. இராதாகிருஷ்ணன்
(முதல்வர், கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்செங்கோடு)
மனித இனம் எதைக் கற்றதோ, எதையெல்லாம் செய்ததோ, அதையெல்லாம் ஒன்றிணைத்துக் கூறுவதுதான் இலக்கியம். மனிதனுக்கு எப்போது அறிவு வளர்ச்சியடையத் தொடங்கியதோ, அன்றிலிருந்து இலக்கியங்களும் தோன்ற ஆரம்பித்துவிட்டன எனலாம். இவ்விலக்கியங்களை மரபு எனும் உத்தி முறையில் அணுகுவது தற்காலத்திற்கு ஏற்றதொன்றே.
“எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே”
எனும் நன்னூலார் கூற்றின்படி அறிவுடைய சான்றோர் ஒரு பொருளை எந்தச் சொல் கொண்டு முறைப்படி சொன்னார்களோ நாமும் அதே போல் கூறுவது மரபு என்று விளக்கமளிக்கப்படுகிறது. சொல்லையும் பொருளையும் மட்டும் பின்பற்றாது, அவர்கள் செய்த செயல்களையும் அவ்வாறே பின்பற்றுவது மரபு.
பண்பாட்டின் எல்லா நிலைகளிலும் மக்களால் பின்பற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதியே மரபு என்று குறிக்கிறது தமிழ் மொழி அகராதி. ஒரு காலத்தினர் உண்மை மற்றும் நன்மைகளை உணர்ந்து செயலாற்றுகின்றனர். பின்னர் அச்செயல்கள் பின்வரும் தலைமுறையினரால் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வாறான தொடர்ச்சியே மரபு எனப்படுகிறது.
பழமையைப் பேணுவதும், முன்னோர் வழியினைப் பொன்போல் போற்றுவதும் மரபின் முக்கியக் கூறுகளாகும். மாந்தரினம் வாழும் உலகின் மூலைமுடுக்கெல்லாம் மரபு நிலைத்து நிற்கக் காண்கிறோம்.
கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையும், முத்துக்கமலம் பன்னாட்டு மின்னிதழும் இணைந்து நடத்தும் “தமிழ்ச் சிந்தனை மரபுகள்” எனும் பொருண்மையிலான கருத்தரங்கு, தமிழ் மரபினை வெளிக்கொணர்வதாக அமைந்துள்ளது. இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்த எம் கல்லூரியின் தமித்துறைப் பேராசிரியர்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். மேலும், இக்கருத்தரங்கில் பங்கேற்று ஆய்வுரை வழங்கவுள்ள பேராளர்கள், ஆய்வு மாணவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்...
*****
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.