தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
வாழ்த்துச் செய்தி
முனைவர் சி. சுவாமிநாதன்
(துணைவேந்தர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம்)
கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையும், முத்துக்கமலம் பன்னாட்டு மின்னிதழும் இணைந்து “தமிழ்ச் சிந்தனை மரபுகள்” என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கினை நிகழ்த்துவது அறிந்து உளம் மகிழ்கிறேன். தமிழ் இலக்கியங்களைக் கற்பித்தல் என்பதோடு மட்டும் நின்று விடாமல், அவற்றில் தரமான ஆய்வுகளை முன்னெடுப்பது மொழி வளர்ச்சிக்கு உகந்ததாகும் என்னும் உயரிய நோக்குடன் இக்கல்லூரியின் தமிழ்த்துறை ஆண்டுதோறும் பல்வேறு கருத்தரங்குகளையும், மொழி சார்ந்த ஆய்வு நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது.
தாய்மொழி என்பது வெறும் மொழியைப் பேசுவதற்கானக் கருவி இல்லை; ஒரு இனத்தின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கைமுறை, சிந்தனை எல்லாவற்றிலும் முக்கியப் பங்காற்றும் நீங்காத அங்கமாக இருக்கும் சிறப்பு மொழிக்கு உண்டு. மொழியை அறிவதோடு நில்லாமல், அவற்றைப் பேணுதல் நம் அனைவரின் கடமையாகும். மரபுப் பேணுதலுக்கு மொழிப்பற்று அவசியமாகிறது. மொழிப்பற்றின் அவசியத்தைத் தந்தைபெரியார், “ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றேயாகும். மொழிப்பற்று இராதவரிடமிருந்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது. ஆதலால், தமிழர்களுக்குத் தாய்மொழிப் பற்றுப் பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை” என்று எடுத்துரைக்கிறார்.
கம்பராமாயணம் மொழிவது போல் ‘என்றுமுள தென்றமிழான’ தமிழையும், தமிழ் மரபுகளையும் அறிந்து கொள்ளவும், அதனை வாழ்வில் பின்பற்றி அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்லவும், இப்பன்னாட்டுக் கருத்தரங்கம் உதவியாய் அமைந்திடும் என்பதில் எனக்கு ஐயமில்லை. இக்கருத்தரங்கினை நடத்தும் கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரிக்கும், தமித்துறைக்கும், கருத்தரங்க அமைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
*****
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.