தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
வாழ்த்துரை
முனைவர் மா. மணிவண்னன்
(பதிவாளர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம்)
பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளுள் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி குறிப்பிடத்தக்க கல்லூரியாகும். கற்பித்தல், கற்றல் என்பதோடு மாணாக்கர்களின் அறிவுத் தேடலுக்கு வழிவகுக்கக் கூடிய ஆராய்ச்சிக் கருத்தரங்குகள் பலவற்றைக் கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரியின் பல துறைகளும் நடத்தி வருவதனைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் என்ற முறையில் நான் நன்கறிவேன். இக்கல்ல்லூரியின் அறிவியல் துறைகளுக்கு இணையாகத் தமிழ்த்துறையும் பல தேசியக் கருத்தரங்குகளையும், பன்னாட்டுக் கருத்தரங்குகளையும் நடத்தி வருவது பாராட்டத்தக்கது. அவ்வரிசையில் கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை, ‘முத்துக்கமலம்’ பன்னாட்டு மின்னிதழுடன் இணைந்து ‘தமிழ்ச் சிந்தனை மரபுகள்’ என்னும் பொருண்மையில் 19-04-2017 அன்று நடத்தவுள்ள கருத்தரங்கு சிறப்பாக நடைபெற முதற்கண் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்ச் சிந்தனை மரபுகளும், தமிழ்த் தத்துவ மரபுகளும் உலகம் வியந்து போற்றும் சிறப்புக்குரியனவாகும். தமிழ்ப் பண்பாட்டின் கருவூலமாக விளங்கும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ள கனியன் பூங்குன்றனாரின் பாடலின் முதல் அடி ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பதாகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இப்படிச் சிந்தித்த தமிழ்ச் சிந்தனை மரபுகளின் தொடர்ச்சியை ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்’, ‘ஈன்றாள் பசிகாண்பார் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை’ என்று திறக்குறளிலும், ‘மண்டினி ஞாலத்து உயிர் வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்று காப்பியங்களிலும் காண்கிறோம். வாழையடி வாழையாக வரும் தமிழ்ச் சிந்தனை வளத்தை இக்கால இலக்கியங்களிலும் நெட்டோட்டமாகப் பார்க்க முடிகிறது. சான்றாக, பாரதிதாசனின் மனிதநேயச் சிந்தனையை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
”உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய்
அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை”
என்னும் பாவேந்தர் பாரதிதாசனின் மனிதநேயச் சிந்தனை தமிழ்ச் சமூகம் பிறர்நலம் பேணும் பண்புடைய சமூகம் என்பதை எடுத்துக் காட்டுகிறது. தமிழிலக்கியப் பெரும்பரப்பினுள் காணலாகும். இத்தகைய சிந்தனை மரபுகளை வெளிக்கொணர்வதற்காகக் கே. எஸ். ரங்கசாமி கலை, அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்த முன் வந்திருப்பதும், அக்கருத்தரங்கில் நிகழ்த்தப்படவுள்ள ஆய்வுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடத் திட்டமிட்டிருப்பதும் பாராட்டத்தக்க செயல்களாகும்.
கருத்தரங்கில் படிக்கப்படவுள்ள ஆய்வுக் கட்டுரைகளும், அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள விவாதங்களும் தமிழியல் வளர்ச்சிக்கு ஆக்கம் தருவனவாக அமையும் என்று நம்புகிறேன்.
கருத்தரங்கமும், கருத்தரங்கையொட்டி நடைபெறவுள்ள அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக அமைய என்றுமுள்ள தென்றமிழால் வாழ்த்துகிறேன்.
*****
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.