தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
10. பாரதிதாசனின் மொழியுணர்வும் விழிப்புணர்ச்சியும்
கோ. இராதாகிருஷ்ணன்
உதவிப்பேராசிரியர், தமிழ்த் துறை,
பெரியார் பல்கலைக்கழகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டூர்..
முன்னுரை
‘தமிழ் மொழி பழகு தமிழ் சொற் இனிமை’தமிழின் உயர்வுக்கும் தமிழர்உணர்வுக்கும் பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். தந்தைப் பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையில் காலூன்றி, மக்களுக்குத் தமிழர் உணர்வை ஊட்டினார். இவ்வகையில் தமிழ் இயற்கையைக் கூறும் நல்லுலகம் அனைத்திலும் உயிரென, மொழியென, விடுதலையென பல்வேறு ஆளுமையில் உணர்ச்சியில் வெளிப்படுத்தியவர் புரட்சிக்கவிஞர். முண்டாசுக் கவியின் மற்றொரு அடையாளம் மொழியுணர்வும் விழிப்புணர்ச்சியும் பாவேந்தர் கவியின் இரு கண்ணாகப் பார்த்தவர். இவ்வகையில்,பாரதிதாசனின் மொழியுணர்வும் விழிப்புணர்ச்சியும் என்னும் பொருண்மையில் பின்வருமாறு அமையும்.
தமிழ் அமுதும் தமிழ்த்தொண்டும்
பாவேந்தர் தமிழை உயிரென நேசித்து, உணர்வென வளர்த்துத் தமிழை வளர்த்தவர். தமிழுக்குச் செய்யும் பெருந்தொண்டு எனப் போற்றியவர். எனவேதான்,
“தமிழுண்டுதமிழ் மக்களுண்டு இன்பத்
தமிழர்நாளும் செய்வோம் நல்லதொண்டு”
பாவேந்தர் தமிழ் மக்கள் மீதும் நம் மொழியின் மீதும் கொண்டுள்ள பற்றினை நல்ல தொண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை. தமிழ்க்கவி செத்ததுண்டா? என்ற உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார் எனலாம்.
தமிழ் தனிமனிதனின் அடையாளம்
தமிழ் கூறும் நல்லுலகில் ஒவ்வொருவரும் தனி அடையாளத்தோடு வாழ்கின்றனர். கவிஞர் தமிழை அமுதம் என்ற உணர்வாக வளர்த்தவர். அதற்குப் பழி ஏற்பட்டு விட்டால், அதைச் சகித்துக் கொள்ளமுடியுமா எனவும் சினம் கொள்கிறார்.
“அமுதென்றுசொல்லுமிந்தத் தமிழ் என்னாவி
அழிவதற்குக் காரணமாயிருந்ததென்று
சமுதாயம் நினைத்திருமேஐயகோஎன்
தாய் மொழிக்குப் பழிவந்தால் சகிப்பதுண்டோ”
மொழிமாசினைத் தடுத்தல்
தமிழ் பிறமொழிக் கலப்பின்றி தனித்து இயங்கும் ஆற்றல் உடையவை எனலாம். பிறமொழி கலக்கா வண்ணம் வடமொழிக்கு எதிர்ப்பை உண்டாக்கித் தமிழ்ப் பற்றை வளர்க்கிறார் கவிஞர்.
‘திம்மனேமோசம் போனாய்
பன்னாரும்தமிழர்களின் மானம் போக்கிப்
பழிவாங்கும் வடக்கருக்குத் துணைபோகின்றாய்
தமிழ்மொழியை இழக்கின்றான் தமிழர்தம்மைத்
தாழ்ந்தவரென் றிகழ்கின்றான் தமிழ்ப்பெண்டிர்
தமதுநலம் கெடுக்கின்றான்’
தமிழர்களின் மொழியை இழிவாகப் பேசுவதும், தமிழ் மொழி தாழ்வு என நினைக்க வைப்பதும் அதனைக் கற்ற மகளிரை நலம் கெடுப்பது போன்ற பல்வேறு செயல்களைச் செய்யும் நிலையில் இருப்பவர்களைத் தடுத்து நிறுத்தல் வேண்டும் என மொழியுணர்வை ஊட்டுகிறார் கவிஞர்.
தமிழ் தனிச்சுவை
தமிழை தமிழ்த்தேன், அமுதம், இனிமை எனப் பல்வேறு முறையில் உணர்ந்த கவிஞர் பிற மொழியைத் தமிழை விட இனிமையாக இல்லை எனவும் மொழியுணர்வை வெளிப்படுத்தியுள்ளார். பின்வருமாறு கூறுகிறார்.
‘தமிழ்ச்சுவையை இங்கிலீஷால் அறியமுயுமா?
தமிழ்ப் பண்பாட்டின் இனிமை தமிழனுக்குத் தெரியவில்லை
இங்கிலீசுகாரன் தமிழ்ப்பாட்டு நன்றாயிருக்கிறது
என்று சொன்ன பிறகுதான் தமிழனுக்குத் தெரிகிறது’
மேற்காணும் கவிதையின் கவிஞர் தமிழர், தமிழன் மனநிலை எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறான் என்பதனை உணரமுடிகிறது. பாரதிதாசன் தமிழர்களின் மொழியுணர்வுகளைப் புரட்சி விழிப்புணர்ச்சியும் தம் கவிதைகளில் வெளிப்படுத்துகின்றார்.
தமிழ் வழிக் கல்வி
தமிழை இகழ்தலின்றி தமிழ்க் கவியைக் கற்கண்டாய்க் கொண்டு வாழ்ந்து தமிழர், பின்பு வடமொழியையும், இந்தியையும் எதிர்த்து மற்றும் பிறமொழியைக் கற்றாலும் தமிழைதமிழ் வழிக்கல்வி உயிராய் உணர்வாய் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
“கன்னல் தமிழ்க்கல்வி
கட்டாயமாக்காமல்
இன்னல் தரும் இந்தியை
எண்ணுவதோஎன் தமிழா”
தாய்மொழிக் கல்வியைக் கற்காமல் பிறமொழியைக் கற்றால் முழுமையான சிந்தனை வாரா. தாய்மொழிக் கல்வியின் மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் விஞ்ஞான முறைகளில் கண்டுபிடிக்கப்படும். உலக மக்களின் அறிவு தமிழ் மக்களுக்கு உடன் கிடைக்கஒரே வழி பிறநாட்டு நல்லறிஞர்களின் நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தால் அவற்றின் நாடு வளர்ச்சியும் கவிஞர் கருத்தாகும்.
கவிஞரும் உலகமும்
பாவேந்தர் ஒவ்வொரு துறை தோறும் அறிவியல், விஞ்ஞானம், தத்துவம், தர்க்கவியல் எனப் பல்வேறு துறையில் இருக்கின்ற தமிழ்மொழியில் தாய்மொழியில் விரைவாக வாசிக்க வேண்டியவை எனவும், அதுவும் பிறர் துணையின்றி தானே புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ற வகையில் இருக்கவேண்டும் என விரும்புகிறார் எனலாம்.
“உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்
ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
சலசலெனஎவ்விடத்தும் பாய்ச்சிடவேண்டும்
தமிழிலாப் பிறமொழி நூல் அனைத்தும் நல்ல
தமிழாக்கிவாசிக்கத் தருதல் வேண்டும்”
பாவேந்தர் தமிழறிஞர்களைப் பார்த்துப் பிற உலக நூல்களில் இருக்கின்ற நுட்பமான சொற்களைத் தமிழாக்கிக் கொடுக்க வேண்டும் எனவும், அதுவும் அறிவியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைய உலகியல் பார்வை காண்கின்றார் புரட்சிக் கவிஞர்.
கல்வி வரையறை
பாரதிதாசன் கல்வியைப் பின்வருமாறு வரையறைப்படுத்துகிறார். கல்வி என்பதற்குப் பெயர்ப்பு என்பது பொருள் ஆகும். ‘கல்லல், கல்வி, கற்றல், கற்பு’அனைத்தும் பொருட்சொற்கள் என்பன கல்வி ஆழமான ஆய்வு செய்து பாரதிதாசனின் சிந்தனைகள் ஆகும்.
ஒரு தமிழ்ச் சொல்லா, பிறமொழிச் சொல்லா எனக் காண வேண்டுமானால் அதனைப் பகுப்பாய்வு செய்து பார்க்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். பின் வருமாறு,
“வெட்டப் படுவதால் வேட்டி
துண்டிக்கப்படுவதால் துண்டு
துணிக்கப்படுவதால் துணி
அறுக்கப்படுவதால் அறுவை”
என்று வழக்குப் பிறமொழிச் சொற்களையும் அறியலாம். எந்தச் சொல் பகுத்தாய்வு செய்யும் போது பகுதி பெற்று வந்தால் தமிழ் மொழி என்றும், பகுத்தாய்வு செய்யும் பொருள் தாராச் சொற் பிறமொழிச் சொற்கள் என்று மொழியில் விழிப்புணர்ச்சியும் ஏற்படுத்துகிறார் கவிஞர்.
கவிஞரும் விழிப்புணர்ச்சியும்
பாவேந்தர் தமிழ்ச் சொல்லாய்வையும், ஊர்ப்பெயர் ஆராய்ச்சியிலும் விழிப்புணர்ச்சியைஏற்படுத்துகிறார். அவை; கீழ்ப்பாக்கம், குன்னூர், கெல்லிஸ் என்ற சொற்கள் எவ்வாறு சிதைவு ஏற்பட்டுள்ளது என்பதனையும் அதன் மூலச் சொற்களைஆராய்ச்சி செய்கிறார்.
“கீழ்ப்பாக்கம் என்னும் அஃது
கீல்ப்பாக்கம் என்றாகிப் பின்
தாழ்வுற்றுக் கெல்லிஸ் என்று
தான் மாறிற் றென்றுசொன்னார்
கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் ஆனால்
கிள்ளையும் அள்ளியுண்டு
வாழ்த்திடும் தமிழமிழ்தின்
வரலாறுமாறிடாதோ”
இதேபோல் குன்றின் மீதில் அமைந்தது குன்னூர். குன்னூர் என்று திரித்து கூறினோர். யார் எனில், ஆங்கிலர் என்று கூறுவர்.
“குன்னூர் குன்னூர் என்றுசிதைந்துபின்
குன்னூர் குன்றூர் எனத் திரிந்திற்றாம்”
“ஊட்டி என்றே ஆங்கிலன் உரைப்பதும்
உதகை என்றே ஆரியன் உரைப்பதும்”
என்ப பிற மொழிக் கலப்பினால் ஏற்படும் தமிழ்மொழிச் சிதைவை ஊர்ப்பெயராய்வியல் சொல்லாராய்ச்சியில் மொழி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறார் கவிஞர்.
குழந்தைமனத்தின் விழிப்புணர்வு
சின்னசிறு வயதியிலே விளையாடுகின்ற பெண் குழந்தைகளும் திருமணம் செய்வதும் என்பதனைஆண்மகன் நோய் வாய்ப்பட்டு இறந்து விடுகிறான்.
அந்நிலையில், சிறுவயதிலேயே கைம்பெண்ணாக மாறிவிடுகிறாள். இதனைக் கவிஞர் கவி வடிவில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.
“கூவத்தெரியாதகுயிலின் குஞ்சு
தாவாச் சிறுமான் மோவாஅரும்பு
தாலியறுத்துத் தந்தையின் வீட்டில்
இந்தச் சிறுமியிருந்திடுகின்றாள்”
மேற்காண் கவிதையின் மூலம் குழந்தைத் திருமணத்தின் அவலநிலையை, அந்தச் சிறுமிபடும் வேதனை என்று குறிப்பிடுகிறார். இதற்குத் தந்தை பெரியாரின் வழியில் பகுத்தறிவுச் சிந்தனையில் கவிஞர்தான் பாவேந்தர்எனலாம்.
“அன்புள்ளகாதல்” (இல்லறத்திற்கு விழிப்புணர்வு)
பாவேந்தர்அக்காலத்தில் புதுமையான புரட்சியை ஏற்படுத்தியவர். ஒத்தத் தலைவனும், ஒத்தத் தலைவியும் உளமாற அன்பு கலந்திருக்க வேண்டும் என விரும்புகிறார். இல்லறம் நற்துணையாகஅமைய இரு மணங்களின் புரிதல் வேண்டும் எனக் கூறுகிறார்.
“நீ எனக்கும் உனக்கு நானும்-இனி
நேருக்குநேர் தித்திக்கும் பாலும் தேனும்’
தூயவாழ்வில் இதுமுதல் நமதுளம்
நேயமாமஅமைவுறஉறுதிசொல் அடி”
முடிவுரை
தமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வைக் கொண்டு சேர்த்தவர் பாவேந்தர் எனலாம். அவ்வகையில் பார்க்கும் தனிமனிதன் முதல் தொடங்கி மொழி, இனம், சமுதாயம், காதல், கைம்பெண்ணின் அவலம், பிறமொழிக் கலப்பினால் ஏற்பட்ட ஊர் பெயர் மாற்றம் இதனைப் போன்ற பாடுபொருள்களில் எளிமையான நடையில் கவி புனைந்து, படித்தவர் முதல் பாமர மக்கள் வரை எளிதில் புரியும் மொழியுணர்வோடு தன் கவி மூலம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய மாபெரும் கவிஞர் பாரதிதாசன் என்பதனை அறியலாம்.
துணை நூல்கள்
1. பாரதிதாசன் கவிதைத் தொகுப்பு
2. பாரதிதாசன் பேசுகிறார்
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.