தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
103.முல்லைப்பாட்டில் தலைவியின் பிரிவாற்றாமை
இரா. ஜெயந்தி
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல்.
முன்னுரை
பத்துப்பாட்டில் சிறப்பானதாகக் கருதப்படுவது முல்லைப்பாட்டு ஆகும். பாட்டுடைத்தலைவன் இல்லாத நூல் முல்லைப்பாட்டு, மாலை வருணணை, சகுனம் பார்த்தல், பாசறை அமைப்பு, பாகர் யானையைப் பழக்குதல், அரசனின் பள்ளியறை, வீரமங்கை, நாழிகை சொல்பவர், மெய்க்காப்பாளர் ஆகியோரின் செயல், அரசன் படைகளைப் பார்வையிடல், தலைமகளின் வருத்தம், கார்காலத்து முல்லை நில வருணணை போன்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன.
தலைவனை எண்ணி வருந்துதல்
பின்பனிக்காலத்தில் பிரிந்து செல்லும் தலைவன் கார்காலத்தில் திரும்பி வருதல் இயல்பு. அதுவரை ஆற்றியிருத்தல் தலைவியின் கடமை. தலைவன் ஆற்றியிரு எனக் கற்பித்த சொல்லைக்கடப்பது கற்புநெறிக்கு மாறானது என்பதை எல்லாம் நினைத்து தலைவி ஆற்றியிருக்கிறாள். தன் விருப்பத்திற்கு நெஞ்சு தலைவன்பால் செல்வதை நிறையழிந்து தனிமையில் துயருறுகிறாள். இதனையே “நெஞ்சாற்றுப்படுத்த நிறையழி புலம்பு” என்கிறார். பிரிவாற்றாமையால் துயருறும் மகளிர்க்கு உடல் மெலிந்து வளை கழலுதல் இயல்பு. இந்நிலையை;
“கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சே நீ
பெட்டாங்கு அவர்பின் செலல்” (குறள்-1293)
“பனைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்” (குறள்-1234)
என்னும் குறட்பாக்களும் உணர்த்தும்.
தலைவன் பிரிந்ததை நினைத்து தலைவி உடல்மெலிந்து வருந்தினாள்.
“கருங்கால்வேம்பின் ஒண்பூ யாணர்
ஏன்ஐ இன்றியும் கழிவது கொல்லோ?
ஆற்று அயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து
எழு குளிரு மிதித்த ஒரு பழம் போலக்
குழைய கொடியோர் நாவே
காதலர் அகலக் கல்லென் றவ்வே” (குறுந்தொகை)
தலைவன் தலைவியைப் பிரிந்து சென்ற வருத்தம் தாங்காது துயருறும் தலைவியை ஊரார் அலர் தூற்றுகின்றனர். நண்டுகள் மிதித்த பழம் போல அவளது மனம் வாடியது என தலைவன் மனதை பழத்திற்கும் ஊரார் நாவை நண்டுக்கும் உவமைபடுத்தியிருக்கிறார்.
முதியோர் விரிச்சி கேட்டல்
ஒரு செயலை தொடங்குவதற்கு முன்னால் பிறர் கூறும் சொற்களைச் சகுனமாகக் கொள்ளும் வழக்கம் பண்டுதொட்டே நம்மிடையே நிலவுகிறது. இதனைப் பண்டைய தமிழ் மக்கள் விரிச்சி எனச் சுட்டியுள்ளனர். ஏதேனும் ஒரு செயலை மேற்கொள்ளப் புகுங்கால் அம்முயற்சி இன்னவாறு கைக்கூடும் என்பதனை அறிதற்கே இவ்வாறு செய்வர். இதனை நற்சொல் எனவும் கூறலாம். விரிச்சி கேட்டலை அசரிரீ என்பதனோடு சிலர் தொடர்புபடுத்துவர். முல்லைப்பாட்டில் விரிச்சி கேட்கும் முறை சிறப்பாக சித்தரிக்கப்படுகின்றது.
“விடர்மகை யடுக்கத்து விறல்கெழு சூழிக்கும்
குனும் பூணாம் கைந்நூல் யாவாம்
புள்ளு மோராம் விரிச்சியும் நில்லாம்
ஊள்ளலு முள்ளா மன்றே தோழி” (குறுந்தொகை-1-4)
“நெடுநா பொண்மனி கடிமனை யிரட்டக்
குதிரையிலைப் போகிய விரவுமணற பந்தர்ப்
பெரும்பாண் காவல் பூண்டென வொருசார்த்
திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப” (நற்றினை-1-4)
தலைவியை ஆற்றுப்படுத்துதல்
சிறிய கயிற்றால் கட்டப்பட்ட பச்சிளங்கன்றுகள் பாலுண்ணாமையால் ஏற்பட்ட பசியால் வருந்திச் சுழலுவதைப் பார்த்த இடையர் பெண் ஒருத்தி குளிரால் நடுங்கும் தன் தோள்களைக் கையணைத்துத்தடுத்தவளாய் அக்கன்றுகளை நோக்கி கோவலர் பின்நின்று செலுத்த மேய்ச்சலை முடித்துக்கொண்டு இப்பொழுதே வந்து விடுவர் நின் தாயர் வருந்த வேண்டாம் என்று கூறும் நல்ல சொற்களை ஆறுதல் மொழிகளை நாங்கள் கேட்டோம். அதனால் போர் மேற்சென்ற தலைவன் பகைவரை வென்று அவரிடமிருந்து பெற்ற திரைப்பொருள்களுடன் விரைந்து வருதல் உறுதி. ஆதலால் மாமை நிறத்தவளே, நீ உன் மனத்தடுமாற்றத்தால் உற்ற வருத்தத்தைப் போக்கி ஆற்றியிருந்திடுக என்று கூறினாள்.
“செம்முகச் செவிலியர் கைம்மிகக் சூழீஇக்
குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி” (நெடுநல்வாடை-153-166)
பெருமுது பெண்டிர் எழிலி பொழிந்த மாலைக் காலத்தே விரிச்சி நிற்ப ஆய்மகள் பசலைக்கன்றின் உறுதுயர் போக்கி இன்னே வருகுவர் தாயர் என்போர். நன்னர் நன்மொழி கேட்டனம்.
பாசறைப்பெண்கள்
அரசனுக்கென அமைந்த பாசறையின் கண் குறிய தொடியணிந்த முன்கையினையும், கூந்தல் அலைகின்ற சிறு முதுகினையும் உடைய இரவைப் பகலாக்கும் ஒளிபொருந்திய திண்மையான பிடியமைந்த வாளினைக் கச்சோடு சேர்த்துக்கட்டிய மகளிர் பாவை விளக்கில் நீண்ட திரியை இட்டு நெய் வார்த்து விளக்கேற்றுகின்றனர்.
அரசன் வருவான் என்று மகிழ்தல்
வினைமுடித்து தலைவன் வருவான் என்று காத்திருந்த தலைவிக்கு அரசனின் தேர் ஒலியும், குதிரையின் சப்தமும் மகிழ்வைத் தருவதாக இருந்தது.
“முதிர்காய் வள்ளி அம் காடுபிறக்கு ஒழிய
துனைபரி துரக்கும் செலவினர்
வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே”
இவ்வாறாக தந்நிலையில் பொருள் தேடிச் சென்றத் “தலைவன் மீண்டும் வருகிறான் என்ற செய்தி கேட்ட தலைவி அடையும் மகிழ்ச்சியை ஆசிரியர் வறண்டு கிடந்த நிலத்தில் ஒரு இரவில் பெய்த மழையில் அவ்வூரில் உள்ள குளம், குட்டை, கிணறு, வயல், நிரம்பியதைப் போல பன்மடங்கு தலைவன் வரும் செய்தி தலைவியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது”
பத்துப்பாட்டில் குறைந்த அடிகளைக் கொண்ட இந்நூல் தலைவனை நினைத்து வருந்தும் தலைவியின் உள்ளன்பை ஆசிரியர் முல்லைப்பாட்டின் வழி வெளிப்படுத்தியுள்ளார்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.