தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
104.கல்வெட்டுக்கள் காட்டும் சிற்றரசர்களின் நிலக்கொடைகள்
ஆ. ஜெயபாரதி
முனைவர் பட்ட ஆய்வாளர்,
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
முன்னுரை
பேரரசர்களைப் போன்று சிற்றரசர்களும் பல்வேறு தானங்களை கோயிலுக்கு வழங்கியுள்ளனர். இவர்கள் தங்களது சமய ஈடுபாட்டின் காரணமாகவும், வெற்றிச் சிறப்பிற்காகவும் தங்களுக்குத் தொடர்புடைய சில சிறப்பு நாட்களிலும் கொடைகளை வழங்குவதனைக் கொண்டிருந்தனர். இவர்கள் அதிகளவு கோயில்களுக்கென்று நிலதானங்கள் வழங்கியுள்ளனர். கோயில்களுக்குத் தொடர்புடைய செயல்கள் மட்டுமின்றி பிற பணிகளுக்காகவும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலங்கள் தேவதானம், பிரமதேயம், சதுர்வேதிமங்கலம், பள்ளிசந்தம், திருநாமத்துக்காணி, திருவிளையாட்டம் எனப் பலவாறு வழங்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டுக்கள் இறையிலியாக நிலங்கள் வழங்கப்பட்டதனையும், இந்நிலத்தின் அளவுகள், எல்லை, அந்தந்த நிலத்தின் மீதான வரிகள் பற்றியும் குறிப்பிடுகின்றன. இந்தச் செய்திகள் ஆணைகளாக அந்தந்த ஊரார்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்பதனையும் அறியமுடிகிறது. ஊர்கள் தானமாக வழங்கப்படும் பொழுது அவற்றின் நிர்வாகமானது ஊரவர்களால் (ஊர்ச்சபை) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வூர்கள் மன்னரது ஆணையின்படியே செயல்பட்டுள்ளது என்பதனை அவ்வூர்க் கல்வெட்டுகளின் மூலமாக அறியமுடிகிறது. (1) இதனைப் போன்று ஊரவர்கள் நடவடிக்கைகளைப் பற்றியும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. சில நேரங்களில் நீர்ப்பாசன வசதிகளை இவ்வூராரே மேற்கொண்டுள்ளதுடன் இச்செயலினைப் பற்றி அரசிற்கும் தெரியப்படுத்தினர். (2)
தேவதான நிலங்கள்
குறுநில மன்னர்கள் பல்வேறு ஊர்களைத் தேவதானமாக வழங்கியுள்ளனர். இவ்வூர்களின் மீதான வரிகள் நீக்கப்பட்டதுடன் நிலங்களானது விலைக்கு வாங்கியும் வழங்கப்பட்டுள்ளது. காட்டாக சிறிய வேளாண் என்கிற பராந்தக இருக்கு வேளார் 130 ஈழக்காசுகளைத் திருவிசலூர் சபையினரிடம் கொடுத்துக் கால்வேலி நிலத்தினை விலைக்கு வாங்கி வழிபாட்டிற்காக வழங்கியுள்ளார் என்பதனை ஹிங்குள்ள கல்வெட்டு தெரியப்படுத்துகிறது. (3) சில நேரங்களில் தேவதானமாக வழங்கப்பட்ட நிலத்தின் மீதான வரித்தொகையானது இக்கோயில்களில் வழிபாட்டிற்காகவும் வழங்கப்பட்டுள்ளது.
திருவல்லம் பில்லவனத்தீஸ்வரர் கோயிலில் உள்ள பல்லவ மன்னர் விஜைய நந்திவிக்கிரவர்மனின் காலத்தைச் (பொ.ஆ.) சேர்ந்த கல்வெட்டுதான் முதன் முதலாகச் சிற்றரசர்கள் நிலத்ணினைத் தானமாக வழங்கியதனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் மகாபலி வாணராயர் வாணபுரத்தில் வடக்கர கோயில் அமைத்ததுடன் இக்கோயிலுக்கு இளங்கிழவர் மகன் மன்றாடியிடம் ‘அறிஞ்சிற்களப்பட்டி’ என்னும் ஊரினை விலைக்கு வாங்கித் தேவதானமாக வழங்கியதனைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. (4) மேலும் இக்கல்வெட்டுக்களின் மூலமாக மணவினைமெண்கொண்ட சோழபுரம், வீரசோழநல்லூர், புங்கர் பையூர் போன்ற ஊர்களும் தேவதானமாக வழங்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. சில சிறப்புச் செயல்பாடுகள் நடைபெற்றதற்காகவும் நிலங்களைத் தானமாக வழங்கியுள்ளனர். திருப்புக்குழியில் (காஞ்சிபுரம்) உள்ள ஜடாவர்ம விக்கிரம பாண்டியனின் 8ஆவது ஆட்சியாண்டைச் சேர்ந்த (பொ.ஆ. 1312) கல்வெட்டு சம்புவராயர் வீரசம்பன் என்பவர் இவ்வூர் கோயிலுக்குத் தன்னுடைய பிறந்த நாளில் திருநாள் நடத்தவும், தன் பெயரில் ‘வீரசம்பன்சந்தி’ என்ற பூசைக்கு விளக்கெரிக்கவும் படூவூரான வீரசம்பநல்லூர்’ எனும் ஊரினை இறையிலியாக்கித் தேவதானமாக வழங்கினார் என்பதனைக் குறிப்நிடுகிறது. (5) சில போர்களில் வெற்றி பெற்றதன் நினைவாகவும் நிலதானங்களைச் செய்துள்ளனர். பாண்டியருக்கும் கேரளருக்கும் இடையே ஏற்பட்ட செய்யாற்றுப் போரில் சம்புவராயரும் பங்கு கொண்டார். இப்போரில் வெற்றிபெற்றதன் நினைவாகச் செய்யாரையொட்டி உள்ள அனுக்காவூர் எனும் ஊரின் ஒரு பகுதியினைப் பிரித்து ‘செய்யாற்று வென்றான் சதுர்வேணிமங்கலம்’ எனப் பெயரிட்டுப் பிராமணர்களுக்கு நிலதானம் வழங்கியுள்ளார் குலசேகரச் சம்புவராயர். (6) மேலும் இவரது காலத்தில் வென்று மண்கொண்ட சம்புவராயர் இறந்தவுடன் அவரது எரிசாம்பலைக் கொண்டு போய்க் கங்கையில் கரைத்துவிட்டு வந்த அவரது பணியாளர் எழும்போதன் கெங்கையாடி மாதயன் என்பவரின் செயலினைப் பாராட்டி, அவருக்குக் குட்டியம் என்னும் ஊரினை ‘ராஜநாராயணநல்லூர்’ என்று பெயரிட்டு கங்காநாமவிருத்தியாக வழங்கி அவரை மரியாதைப்படுத்தியுள்ளார். (7) மேலும் இத்தகைய நில தானங்கள் வழங்கப்படும் பொழுது அவ்வூரின் பெயர்கள் மாற்றம் பெற்றுள்ளன என்பதையும் அறியமுடிகிறது.
இவ்வாறு தேவதானமாக வழங்கப்பெற்ற ஊர்களின் மூலமாகக் கிடைத்த வருவாய்கள் அனைத்தும் அங்குள்ள கோயிலின் வழிபாடுகள் மற்றும் பூஜைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. நில தேவதானங்கள் வழங்கப் பட்டவைகளில் வருவாய் சரிவர செலுத்தாமையால் பூஜைகளும் நின்று போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்பிலையில் பழைய தேவதான நிலங்களும் வழங்கப்பட்டுள்ளன என்பதனைப் ‘பழைய தேவதானம் நடவாதபடியாலே திருநாளும் எழுந்தாளாமல்’ என்ற கல்வெட்டுக் குறிப்பானது தெளிவுறுத்துகிறது. (8) இத்தகைய தேவதானங்கள் வழங்கப்படும் பொழுது அங்குள்ள பழங்குடிகள் நீக்கப்படவில்லை என்பதனை ‘குடிநீங்கா தேவதானம்’ என்ற கல்வெட்டு வாசகத்தின் மூலமாகக் காணலாம். தேவதான நிலங்கள் திருநாமத்துக்காணியாக (கடவுளின் பெயரில் நிலத்தின் மீதான உளீமை) விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. இந்நிலங்கள் மீதான வரித்தொகையானது அந்நாயனாரின் பூஜை, திருப்பணிக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. (9) திருவெண்காடு, திருக்கோடிக்காவல், படைவீடு, திருகச்சி, நெற்குணம், செவலப்பாறை, தையூர், குன்றத்தூர், ஆர்ப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள சிற்றரசர்களின் கல்வெட்டுக்கள் திருநாமத்துக்காணிப் பற்றிக் குறிப்பிடுகிறது.
திருவிடையாட்டமாக நிலங்களை வழங்குதல்
சிற்றரசர்கள் தேவதானங்களை வழங்கியதனைப் போன்று திருவிடை யாட்டமாகவும் (விஷ்ணு கோயிலுக்கு அளிக்கப்பெறுகின்ற கொடை நிலம்) நிலங்களை வழங்கியுள்ளனர். இந்நிலங்கள் அர்த்தஜாம வழிபாட்டிற்கும், திருவிழாக்களுக்கும் வழங்கப்பட்டு அவை ஸ்ரீவைஷ்ணவர்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது என்பதனைத் திருக்கோயிலூர் திருவிக்கிரப்பெருமாள் கோயிலில் உள்ள முதலாம் குலோத்துங்க சோழரது (பொ.ஆ. 1101) கல்வெட்டு தெரியப்படுத்துகிறது. (10) இந்நிலங்கள் வரிநீக்கி வழங்கப்பட்டுள்ளது.
நந்தவனம் அமைப்பதற்காக நிலதானம்
கோயில்களில் பூஜைக்கு வேண்டிய பூக்களைப் பெறும் பொருட்டு நந்தவனங்கள் (மலர் தோட்டம்) அமைக்கப்பட்டுள்ளது. நந்தவனம் அமைப்பதற்கான நிலங்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. இந்நிலங்கள் ‘நந்தன புறங்கள்’ என்றழைக்கப்பட்டுள்ளது. நந்தவனங்கள் அமைக்க நிலங்கள் வழங்கப்பட்டதுடன் அதனைப் பராமரிப்பதற்காக வேண்டி நிலத்துடன் பணியாளர்களும் வழங்கப்பட்டுள்ளதனை திட்டக்குடியில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. (11) ‘துடந்தடிமை கொண்டான்’ எனும் திருநாமத்தால் வீரநாராயணநல்லூரில் இருந்து விலைக்கு நிலத்தினை வாங்கிய கோப்பெருஞ்சிங்கன் இதன் மூலம் பெறப்படுகின்ற பூக்களைத் திருக்காமகோட்டமுடைய பெரியநாச்சியாருக்கும் அன்னபரண தேவர்க்கும் வழிபாடு செய்யயும் வகை செய்துள்ளார். (12) இதனைப் போன்று கோப்பெருஞ்சிங்கன் சிதம்பரம் கோயிலில் ‘திருச்சிற்றம்பலமுடையான்’ என்னும் பெயரில் திருநந்தவனம் அமைப்பதற்காக நிலம் வழங்கியதுடன் அதனைப் பராமரிப்பதற்காக நான்கு பணியாளர்களைச் சேர்த்து வழங்கியுள்ளார். (13) நந்தவனம் அமைப்பதற்காக விலைக்கு வாங்கப்பட்ட நிலங்கள் முறையாக ‘நாட்டளவுக்கோல்’ என்னும் அளவுகோலால் அளந்து வழங்கப்பட்டுள்ளது.
மடப்புறமாக நிலம் வழங்கப்படுதல்
கோயில்களுக்குத் தானமாக நிலங்கள் வழங்கப்பட்டுள்ளதனைப் போன்று அங்கு செயல்பட்டு வந்த மடப்புறத்திற்கும் நிலங்களானது இறையிலியாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலங்கள் வரிநீக்கி வழங்கப்பட்டுள்ளது. புழல் (சைதை), திருவொற்றியூர், திட்டக்குடி, கீழூர், திருவாமாத்தூர் போன்ற இடங்களில் உள்ள கல்வெட்டுக்கள் மடப்புற இறையிலியாக நிலம் வழங்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது.
திருவிளக்குப்புறமாக நிலம் வழங்கப்படுதல்
விளக்கெரிப்பது பொதுவாக சமூகத்தில் காணப்பட்ட ஒரு பழக்கமாகும். இவ்விளக்கானது பல்வேறு காரணங்களாக எரிக்கப்பட்டுள்ளன. விளக்கு எரிப்பதற்கு நிலம், பொன், காசு போன்றவற்றை வழங்கியுள்ளனர். விளக்கெரிப்பதற்காக வழங்கப்பெற்ற மானிய நிலங்கள் ‘திருவிளக்குப்புறம்’ என்றழைக்கப்பட்டுள்ளது.
பிற பணிகளுக்காக நில தானம்
விளக்கெரிப்பதற்கு மட்டுமின்றி கோயில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் நிலதானம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலங்கள் பற்றி திட்டக்குடி விஸ்ராயேஸ்வரர் கோயிலிலுள்ள மூன்றாம் குலோத்துங்கனின் (பொ.ஆ. 1123) கல்வெட்டொன்று இக்கோயிலின் திருப்பதியம் பாடும் பணியாளர்க்கு ஊதியமாக நிலமாக வழங்கப்பட்டுள்ளதனைக் குறிப்பிடுகிறது. இந்நிலங்கள் மீதான வரிகள் நீக்கப்பட்டுள்ளன.
திருப்பாட்டு ஓதுபவர்களுக்கு நிலங்களை வழங்கும் பொழுது அங்கிருந்த விஷ்ணுகோயிலின் பங்கு இரண்டினையும் தேவபங்கு ஒன்றினையும் நீக்கி மீதமுள்ள நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. கோயில் நிலங்கள் சிலவற்றைப் பணியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்றாலும் அவற்றினைத் துய்க்க அப்பணியாளர்களுக்கு உரிமைகள் இருந்தபொழுதிலும் அந்நிலத்தில் அடங்கியுள்ள தேவபாகம், விஷ்ணுபாகம் நீக்கியே வழங்கியுள்ளனர். இந்நிலங்கள் வழங்கப்படும் பொழுது அந்நிலத்திலிருந்து கிடைக்கும் பொன்வரி, தட்டார் பாட்டம், ஊசிவரி, கார்த்திகைப் பச்சை, சூலவரி உள்பட பல்வேறு வரித் தொகைகளையும் சேர்த்து வழங்கியுள்ளனர். (14) இதனைப் போன்று கோயில்களில் பணிபுரியும் திருக்கை ஓட்டிக்கு (தேர் ஓட்டுபவர்) ஊதியமாக வாணராயர் நிலத்தினை வழங்கியுள்ளார். (15) நந்தவனம் வளர்ப்பதற்காகப் பெறப்படும் நீரைப் பெற்று பராமரிப்பு செய்பவருக்குத் திருவோடை ப்புறமாக நிலத்ணினை சேதியராயர் வழங்கியுள்ளார். மேலும் பல பணியாளர்களுக்கு ஊதியமாக நிலங்கள் வழங்கப்பட்டுள்ளது.
சிற்றரசர்கள் கொடைகள் வழங்கியதனைப் போன்று அவர்களுக்கு அதிகாரிகளாக இருந்தவர்களும் நிலக் கொடைகளை வழங்கியுள்ளனர். சேதியராயரின் அதிகாரி சோழகோன் என்பவர் சிதம்பரம் கோயிலுக்கு திருப்பாவாடைப்புறமாக (துதி மேல் படைக்கும் நிவேதனத்துக்காக கொடுதத நிலம்) உத்தமச்சோழ மங்கலத்து சத்திரியசிகாமணிநல்லூரில் உள்ள நிலத்தினைக் கொடுத்துள்ளார். (16)
மேற்கோள் சான்றுகள்
1. இ.க.ஆ. 1937-38, க.எண் 254.
2. இ.க.ஆ. 1915, க.எண் 416.
3. தெ.இ.க.தொ.3, க.எண் 42.
4. தெ.இ.க.தொ. 7, க.எண் 55.
5. தெ.இ.க.தொ. 8, க.எண் 101.
6. இ.க.ஆ. 1933-34, க.எண் 33.
7. ஆவணம் 23, க.எண் 31:5, ப. 142.
8. தெ.இ.க.தொ. 26, க.எண் 283.
9. தெ.இ.க.தொ. 7, க.எண் 134.
10. இ.க.ஆ. 1921, க.எண் 338.
11. தெ.இ.க.தொ. 12, க.எண் 175.
12. தெ.இ.க.தொ. 12, க.எண் 216.
13. தெ.இ.க.தொ. 12, க.எண் 141.
14. தெ.இ.க.தொ. 7, க.எண் 109.
15. ஹி.க.ஆ. 1908, க.எண் 203.
16. தெ.இ.க.தொ. 28, க.எண் 165.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.