தமிழன் என்ற ஓர் இனம் குமரிக்கண்டம் தொடங்கி இன்றையக் காலக்கட்டம் வரை சாதனைக்கு உரியவர்களகவே அடையாளப்படுத்தி வருகின்றனர். அவர்களது அடையாளம் தோல்வியைத் தாண்டிய வெற்றி எனலாம்.
ஓராயிரம் தோல்விகளைக் கற்ற இனம் என்பதனாலோ என்னவோ, உலகத்தின் வல்லரசு நாடுகளின் மறைமுகப் போராட்டத்தை மோப்பம் பிடித்து எதிர்க்கும் சவால் நிறைந்த சாதனை இனமாக மிளிர்கிறது. இதனால் தமிழ் என்ற இனத்துக்கான "எதிரி "என்பதை விட "எதிரிகள் "நிறம், மதம், மொழி, கடந்து எல்லையற்ற பரந்த பூமியெங்கும் பதுங்கியுள்ளார்கள்.
இன்று தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் பல விடயங்களை சிந்திக்க வைக்கின்றது. தமிழரின் பாரம்பரிய விளையாட்டு ஒடுக்கப்படுவதைத் தமிழனாக அடையாளப்படுத்தப்பட்ட அனேகரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விளைவு போராட்டமாக இந்தியா தொடங்கி கடல்கடந்த நாடுகள் வரை பரவியுள்ளது.
இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிடவேண்டும்!
மொழி என்பது அடையாளம். இந்தப் போராட்டம் தமிழர் வாழும் பகுதியெல்லாம் பற்றி எரிந்தது என்றால்; இந்தியத் தமிழன், ஈழத்தமிழன், மலேசியத்தமிழன் என்ற பாகுபாட்டிலோ அல்லது சாதி, மத பாகுபாட்டிலோ அல்ல. தமது அடையாளம் சிதைக்கப்பட்டுக்கொண்டிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாதவாறு தாய்ப்பாலுடன் ஊட்டப்பட்ட தமிழ் உணர்வு கிளறிய உரிமையே எனலாம். இச்சிறப்புக்குரிய புத்திஜீவிகளின் போராட்டம் பாரட்டப்பட வேண்டிய விடயந்தான். ஏனெனில் ஒரு ஐந்தறிவு ஆறறிவை உணர வைத்துள்ளது என்பது அதிசயந்தானே?
நமது பாரம்பரியம் ஜல்லிக்கட்டில் ஆரம்பிக்கவில்லை. நமது அடிப்படை உரிமையிலும் சுதந்திரத்திலும் கட்டியெழுப்பட்டது. அதற்கு உணர்வூட்டி உரம் கொடுக்கத் தமிழன் ஆயிரமாயிரம் அற்புதங்களை வாழ்வியல் சார்ந்த இயல்புடன் இயற்கையாக இணைத்தான். தமிழன் வாழ்வியல் வீரியம் சாந்ததாகவும் வீரம் செரிந்ததாகவும் நாகரிகம் கற்பித்தது.
இதனால் கடல் கடந்த நாட்டவனும் கண்விரித்து வியந்து பார்க்கும் தமிழினத்தை அழிப்பதற்குச் செய்த சூழ்ச்சிகளைப் பல கோணங்களில் வியாபித்தனர்.
சூழ்சியினால் மட்டுமே தமிழனை வெல்ல முடியுமென்பதற்குப் பல்வேறு சான்றுகளை காலம்காலமாகப் பாடப்புத்தகத்தில் படித்து வந்தாலும், அண்மைக்காலமாக ஈழத்தில் நடந்த வரலாறு காணாத வலிமைத் தமிழன் போராட்டமும் வல்லரசு நாடுகள் பலவிணைந்து பலவாண்டுகள் திட்டமிட்டுப் பலிகொண்ட சூழ்ச்சியின் கொடுரமும் தமிழனாக உணர்வில் வாழும் எவரும் மறக்க முடியாது.
இங்குதான் கேள்வி தொடங்கிறது.
ஓராயிரம் உயிர்கள் உயிரோடு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், உங்கள் சகோதரர்கள் ஓலமிட்டு உதவிக்கரம் நீட்டுங்கள் என்று அவலக்குரல் எழுப்பிய போது வலிமையான தமிழ்ச்சமூகம் உணர்வற்றவர்களாக உண்டு உறங்கி ஐயோ... என்ற பரிதாபத்துடன் ஓர் சில கவனயீர்ப்புப் போராடங்களை நடத்தி ஓய்ந்து போனார்கள். ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழ் உயிர்கள் வயது பேதமின்றிக் கொடுரமாகப் பலி கொடுக்கப்பட்டார்கள். ஏன் இந்த ஜல்லிக்கட்டுக்குக் கொடுக்கும் வேகம் அன்று தம்மின மக்களுக்காகக் கொடுக்க முடியவில்லை?
காரணம் அரசியல்!
அண்மையில் இந்திய அரசியல் தடுமாற்றமும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் விளைவுகளும் மக்களை விழிப்படையடையச் செய்துள்ளதே காரணம் எனலாம். ஆண்டாண்டு காலமாக மாறிமாறி அரச சிம்மாசனத்தின் சூட்டில் முதுகு நிமிர்ந்தவர்கள் மக்களை மயக்க நிலையில் வைப்பதற்கான உக்திகளை தேடிக் கண்டுபிடித்தனர். இதற்கு ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பும் அறியமையிலான சாதி மத மொழி வேறுபாடும் துணைபுரிந்தது. மாறி மாறி அரசியல் பாதையில் நடந்தவர்கள் யாவரும் புதிய வழியை மக்களுக்கு உருவாக்குவதாக வீரவசனம் பேசினர். இந்தியாவை கட்டியெழுப்ப முதுகெலும்பாக இருந்த விவசாயத்தையும் பகடையாகப் பயன்படுத்தித் தமதுப் பணப்பையை நிரப்ப எத்தணித்தனரோ அன்றிலிருந்து பாரதமாதா விழித்தாள் எனலாம். இதனால் தமது வயிற்றில் அரசியல்வாதி கை வைப்பதை உணரத் தொடங்கினான் தமிழன். ஏனெனில் உணர்வுகளின் இருப்பிடமே வயிறுதான். அதனால்தானோ என்னவோ விவசாயிகளின் தற்கொலையும் அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கானத் தடைவிதிப்பும் தமிழனை விழிப்படையச் செய்துள்ளது எனலாம்.
மறுபக்கம் நிலையற்ற அரசியல் அமைப்பு முறை வளர்ந்து வரும் மாணவர் சமூகத்தை, மானமுள்ள தமிழனாக மட்டுமன்றி ஏட்டுப்படிப்புத் தாண்டி சிந்திக்கும் சிந்தனையாளராகவும் மாற்றியுள்ளது. மக்களை ஆள்பவன் தனது மண்ணையும் மக்களையும் நேசிப்பவனாக இருக்க வேண்டுமே தவிர, தனது குடும்பத்தையும் சுற்றத்தையும் நேசித்துத் தனது பரம்பரைக்குச் சொத்து சேகரிக்கும் மனப்பாங்களாராக இருக்க கூடாதென உணர்ந்ததன் விளைவு வெகுண்டனர் !
"இனியொரு விதி செய்வோம்" என்ற தலைமுறையினர். அடிமட்டத்தில் குளிர் பிடிக்கத் தொடங்கியது. காரணம் சாதிச்சண்டை, மதச்சண்டை, கட்சி சண்டை எனத் தூண்டி விட்டு வாக்கு பெற்ற வல்லமையற்ற அரசியல்வாதிகள் கனவிலும் நடக்குமென அறியாத புரட்சி கதிகலங்க வைத்தது. இந்தியப் போராட்டம், இளைஞர் போராட்டம், மாணவர் போராட்டம், மானமுள்ள தமிழன் போராட்டம் என்று சங்கிலித் தொடராகப் பலமடையத் தொடங்கியது. ஜல்லிக்கட்டுக்கு இந்தப் போராட்டமா அல்லது விழித்தோம் என்பதை பறைசாற்றுவதற்கான போராட்டமா என்பதில் ஒரு சிலர் தெளிவடையவில்லை. ஆக, மொத்தம் தமிழகத்தின் பறை அதிரத் தொடங்கி விட்டது.
புரட்சியின் வடிவம் பெரிதா?சிறிதா?என்பது விவாதமல்ல. புரட்சியாளன் டெஸ்கார்ட்ஸ் கூறியது போல, "எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்...!" என்று ஆபத்தைச் சந்திக்கத் தயாராகிய எண்ணற்ற மக்கள் எல்லையற்றுக் கூடினர். புரட்சியை அடக்க முதலில் கைச்சாத்திட்ட போலி வாக்குறுதியும் அதற்கு மந்தைகளாக தலையாட்டாது விட்டால், நாட்டின் தேசியத்துக்கு துரோகம் செய்யும் இனமாக முத்திரை குத்தப்பட்டு அறிவுக்கண்ணற்றவர்கள் அடக்குமுறையை மனிதம் மீறி கட்டவிழ்த்து விடுவர். ஜல்லிக்கட்டுப் போராட்டம் புரட்சியே என்பதற்குக் காவல் துறையினரால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் கண்மூடித்தனமான மனித உரிமை மீறல்கள் சான்றாகும்.
மா. அமரசேனன் என்ற புரட்சியாளன் கூற்றுப் போல, "பணம், பட்டங்களுக்காக நாம் போராடவில்லை, நமது வாழ்வின் அடிப்படை உரிமைகளுக்காகவும், மனிதர்களாக வாழ்வதற்காகவுமே போராடுகின்றோம்"
ஆக மொத்தம் புரட்சிகள் உருவாகுவதில்லை நாம் தான் உருவாக்க வேண்டும்!