தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
109.கொடைத் துறைகளும் புறப்பாடல்களும்
முனைவர் சி. சிதம்பரம்
உதவிப்பேராசிரியர், தமிழ், இந்திய மொழிகள் மற்றும் கிராமியக் கலைகள் பள்ளி,
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் - 624302.
முன்னுரை
சங்க காலத்தில் தோன்றிய நூல்களில் எட்டுத்தொகை நூல்களுக்குத் தனியிடம் உண்டு. அவற்றுள் புறநானூறு குறிப்பிடத்தக்கது. எட்டுத்தொகை நூல்களில் குறிப்பாக புறநானூறு, பதிற்றுப்பத்து முதலான புறப்பாடல்கள் வரலாற்று ஆவணமாகவும், தமிழ்ப் பண்பாட்டின் சின்னமாகவும் அமைந்துள்ளன. சங்க காலத்தில் ஈகையாகிய கொடை செய்யும் மாண்பு மேம்பட்டு விளங்கியதைத் தமிழரின் தலைச்சிறந்த பண்பாடாகப் போற்றப்பட்டதைப் புறப்பாடல்களின் வழி காணமுடிகிறது. அறங்கள் பலவற்றுள்ளும் ஈகையாகிய கொடையறம் முதன்மையானது ஆகும். கொடை என்பது பொருள் அற்றவர்களுக்கு பொருள் தந்து உதவுவதாகும். புறத்திணை பற்றிப் பேசும் நானூறு பாடல்களில் கொடைத்துறையில் அமைந்த பாடல்கள் மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. சங்கத் தமிழர் காதலையும், வீரத்தையும் இரு கண்களாகப் போற்றிப் பாதுகாத்தனர். எனினும், புறப்பாடல்கள் வீரத்திற்கு இணையாகக் கொடையைச் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளன. சங்ககால மன்னர்களின் கொடைச் சிறப்பை வெளிப்படுத்தத் தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை இலக்கணங்கள் குறிப்பிடும் கொடை தொடர்பான புறத்துறைகள் எவ்வாறு புறநானூற்றுப் பாடல்களுக்கு நிலைக்களன்களாக அமைந்துள்ளன என்பதை அறியும் நோக்கத்தில் இவ்வாய்வு அமைகிறது.
கொடை என்ற சொல் ‘கொடு’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தாகும். கொடுத்தல் என்னும் செயல் மனிதர்களிடத்தே நிகழ்வது. கொடுப்பவை பொருளாகவோ, பணமாகவோ, உணவாகவோ, குருதியாகவோ, நிலமாகவோ எனப் பல்வேறு வகைகளுள் அமையும். கொடை செய்யும் உயர்ந்த பண்பைப் பண்டைக் காலத்தில் தமிழர்கள் போற்றி வளர்த்தனர். கொடுத்தல் பண்பில்லாத அரசர்களை கொடுக்க வேண்டும் எனப் பண்டைத் தமிழ்ப் புலவர்கள் வலியுறுத்திப் பாடல்களைப் பாடியுள்ளனர். அவர்கள் பாடிய கொடைத்துறைகள் பற்றிய விளக்கமும், இயல்பும் இவ்வாய்வு எடுத்து இயம்புகிறது.
கொடையின் இயல்பு
தொல்காப்பியர் கொடையின் பெருமையைப் பொருளதிகாரத்தில் எண் வகை மெய்ப்பாடுகளில் ஒன்றான பெருமிதத்தில் விளக்குகின்றார். இதனை,
“கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே” (தொல். 1203)
என்று குறிப்பிடுகிறார். தனி மனிதன் ஒருவன் கொடை செய்வதால் ஏற்படும் பெருமிதத்தை விட அரசுரிமை பெற்ற மன்னன் கொடை செய்வதைப் பெருமையாகக் கொள்வது வியப்பு ஒன்றும் இல்லை.
சங்க காலத்தில் தோன்றிய பாடல்கள் அனைத்தும் உதிரிப்பாடல்களே. சேர சோழ, பர்ணடிய நாடுகளில் ஆங்காங்கே புலவர்கள் பாடிய பாடல்களைப் பிற்காலத்தில் தொகுத்து வைத்தனர். அவ்வாறு பாடல்களைத் தொகுத்த பிறகு அப்பாடல்களுக்குரிய திணை துறைகளையும் குறித்து வைத்தனர். அவ்வாறு திணை, துறைகளை எழுதிய புலவர்கள் பாடல்கள் எழுந்த சூழலில் அவற்றைக் குறிக்கவில்லை. எனவே, அப்பாடல்களுக்கு வகுத்த திணைத் துறைகள் முழுவதும் பொருந்துவதாக இல்லை. கொடை பற்றிய துறைகள் அமைந்த புறநானூற்றுப் பாடல்களின் திணை, துறைகளை ஆராய்வது வேண்டத்தக்கது.
புறத்துறை விளக்கம்
உலக வாழ்வில் கொடை, வீரம், அரசியல் எனப் பொது வாழ்வியல் யாவும் புறமாகும். கொடை, அளித்தல் (கருணை), செங்கோல், வீரம் பற்றியன புறம் ஆகும். பொதுவாகக் காதல், குடும்ப வாழ்வு அல்லாதவை புறம். பலரும் அறிய நுகர்வதும் இன்னதென வெளிப்படக் கூறக் கூடியதுமாகிய இன்பம் புறம் என்பர் தொல்காப்பியர். இதனை,
“அவ்வவ மாக்களும் விலங்கும் அன்றிப்
பிறஅவண் வரினும் திறவதின் நாடித்
தத்தம் இயலான் மரபொடு முடியின்
அத்திறத்தானே துறை எனப் படுமே” (தொல். 1465)
என்ற நூற்பா விளக்கும். இதற்கு ச. வே. சுப்பிரமணியன், “ஏழு திணைக்கும் உரிய மக்களும், விலங்கும் ஏனைய கருப்பொருள்களும் தெளிவாக ஆராய்ந்து தத்தம் இயல்புக்கு ஏற்ப மரபொடு பொருந்தி வரின் அத்திரம் தானே துறை” என்று விளக்கம் தருகிறார். இத்துறை அகத்துறை, புறத்துறை என இரண்டு வகைப்படும்.
புறம் பற்றிய துறைகளில் கொடை பற்றிய பொருண்மை கொண்ட துறைகள் பன்னிரெண்டு ஆகும், அவையாவன,
1. இயன்மொழி
2. கடைநிலை
3. கடைநிலை விடை
4. கையறு நிலை
5. பரிசில் கடாநிலை
6. பரிசில் விடை நிலை
7. பரிசில் நிலை
8. பெருஞ்சோற்று நிலை
9. மகற் கொடை மறுத்தல்
10. பாணாற்றுப்படை
11. புலவராற்றுப் படை
12. விறலியாற்றுப்படை
இவ்வாறு 12 துறைகள் கொடைத்துறைகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.
கொடைத்துறைகளின் விளக்கம்
கொடை என்பது இல்லாதவர்களுக்குக் கொடுப்பது. சங்ககால மன்னர்கள் கொடையில் சிறந்து விளங்கியதால், கொடையின் திறத்தினைப் புலவர்கள் வியந்து பாடியுள்ளனர். கொடை என்ற பாடுபொருளைப் பாடலாகக் கொண்டு பல்வேறு கொடைத்துறைகள் நிலைக்களன்களாகப் பயன்பட்டுள்ளன. பாடான்திணையில் தொல்காப்பியர் குறிப்பிடும் துறைகள் பதினொன்று அவற்றுள், கொடை பற்றிய துறைகள் ஏழு. புறநானூற்றில் இடம்பெறும் கொடைத்துறைகள் பதின்மூன்று அவற்றுள், பாடாண் திணையில் அமைந்துள்ள துறைகள் எட்டு. வஞ்சித்திணையில் ஒரு துறையும், காஞ்சி திணையில் ஒரு துறையும், நொச்சித்திணையில் ஒரு துறையும் ஆக அமைந்துள்ளன. இதனைத் தொல்காப்பியப் பொருளதிகாரம் மற்றும் புறப்பொருள் வெண்பாமாலை இலக்கண நூல்களின் வழி அறியமுடிகிறது.
முடமோசியாரின் இறக்க நிலை
முடமோசியார் ஆய் அண்டிரன் இறந்த பின், அவனை இந்திரன் வரவேற்பதாகக் கவிநயம் விளங்க (புறம். 241) பாடியதால் இது கையறுநிலைத் துறையையும், பொதுவியல் திணையையும் பெற்றுள்ளது. புலவர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரன் நாடும், அவனின் கொடைச்சிறப்பும் மற்ற நாட்டைப் போல் இல்லாமல் மேம்பட்டு விளங்கப் (புறம்.127) பாடுகிறார். பரிசில் வேண்டி தலைவனின் வாயிலில் நின்று பாடுவதால் கடைநிலைத்துறையும், பாடாண்திணையையும் பெற்றுள்ளது.
ஆயின் பண்பு நலன்கள்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் புலவர் இரவலர்களை ஆய் அண்டிரனைக் காணச் சென்றால் நீ வேண்டிய கொடைப் பரிசிலை அளிப்பான் (புறம். 133) என்று பாடலின் மூலம் ஆற்றுப்படுத்துவது விறலியாற்றுப் படைத் துறை என்பதும் கொடைத் தன்மை குறிப்பிட்டதால் பாடாண் திணையும் பெற்றுள்ளது. பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை தோன்றிய சோழ நாட்டில் விறலியாற்றுப்படையும் தோன்றியிருக்கிறது. ஆயின் பண்பு நலன் கூறியதால் பாடாண் திணையாயிற்று. இப்பாடலை, “இளம்பூரணரும், நச்சினார்கினியரும்”விறலியாற்றுப்படைக்கு மேற்கோளாகக் காட்டுகின்றனர்.
புலவர்கள் பாடும் பாடல்களின் வகைகள்
* தலைவன் முன் சென்று அவனைப் புகழ்ந்துரைத்து வாழ்த்திப் பாடுதல்
* வாயிலில் சென்று நிற்றலைக் கூறிப் பாடுதல்
* வாயிற்கடை நின்று விடை கூறுதல், பெறுதல், பரிசில் விடை பற்றிப் பாடும் முறை
* இறந்த அரசனைக் குறித்து அவரும் அவனைச் சார்ந்தோரும் வருத்தம் தெரிவித்து அவன் புகழை நினைத்துக் கையற்றுப் பாடுதல்
* பரிசில் நாடிப் புரவலன் பாற்சென்று உரைத்துப் பாடுதல்
* அரசன் முன்னே தாம் பெறக்கருதிய பரிசை உரைத்தல், பெற்றப் பரிசினைப் பாராட்டிப் பாடுதல்
* பரிசில் பெற வந்தவன் அரசனைப் போற்றிப் பாடுதல், அதிக அளவு பரிசில் கொடுத்தல் பற்றிப் பாடுவது
* இரவலரைப் புரவலனிடம் வழிப்படுத்திப் பாடுவது
* பாணனை மலை வழியில் வழிப்படுத்திப் பாடுவது
* அதிக அளவு சோற்றை வீரர்களுக்கு அளிப்பது பற்றிப் பாடுவது
* அரச மகளிரை கொடுக்க மறுத்துப் புலவர் பாடுவது
* தலைவனை வாழ்த்திப் பாடுவது (வீரம், கொடை)
* அரசனுடைய புகழைப் பாடும் பாடினியை வழிப்படுத்திப் பாடுவது
இவ்வாறு ஐம்பத்தாறு புலவர்களும் பாடல்களைப் பாடுகின்றனர். பரிசில் வேண்டியே அதிக அளவில் பாடல்களைப் பாடுகின்றனர்.
புறநானூற்றுப் பாடல்களில் நூற்றி முப்பத்தைந்து பாடல்கள் (135) கொடையின் பொருண்மையைப் பற்றி விளக்குவதாக அமைந்துள்ளது. நூற்றி ஐம்பத்தைந்து (155) புலவர்கள் கொண்ட புறநானூற்றில் நாற்பத்தெட்டு புலவர்கள் கொடைத் துறைகளைப் பற்றிப் பாடியுள்ளனர்.
புறநானூற்றில் இடம்பெற்றுள்ள அறுபத்து ஐந்து துறைகளில் பதின்மூன்று துறைகள் மட்டுமே கொடைத் துறைகளாக அமைந்துள்ளன.
கொடையின் வகைகள்
1. பொன் தாமரை கொடுத்தல்
2. ஊரையே தருதல்
3. அணிகலன்கள் தருதல்
4. யானைகள் கொடுத்தல்
5. பொன்னால் செய்த ஆரம், பொற்கடகம் கொடுத்தல்
6. மணிமாலை பூண்ட யானைகள் பொன்னால் செய்யப்பட்ட மாலை கொடுத்தல்
7. நீலமணியை வெள்ளி நாரில் தொடுத்த ஆரம் கொடுத்தல்
8. மாமிசம் கலந்த உணவுகள் கொடுத்தல்
9. பொன் ஆபரணங்கள் தருதல்
10. உணவு கொடுத்தல் (நெய் கலந்தது)
11. விளை நிலங்கள் தருதல்
12. புத்தாடைகள் தருதல்
13. மதுபானங்கள் தருதல்
14. பாம்பு உரித்த தோல் போன்ற பூவேலை செய்யப்பட்ட ஆடைகள் தருதல்
15. வெள்ளி நாரால் கோர்க்கப்பெற்ற தாமரைப்பூ மாலையைப் பரிசாகத் தருதல்
ஆகியவற்றை கொடை அரசர்கள் பரிசுகளாகத் தன்னை நாடி வந்த புலவர்களுக்கு தந்தனர்.
முடிவுரை
சங்க இலக்கியங்களில் உள்ள புறப்படல்கள் தொல்காப்பியத்தின் அடிப்படையிலும், புறப்பொருள் வெண்பா மாலை அடிப்படையிலும் திணை, துறைகள் வகுக்கப்பட்டாலும் பெரும்பாலான துறைகள் பொருத்தமுடையதாக இல்லை. இதற்குக் காரணம் அவை பாடப்பட்ட காலம், தொகுக்கப்பட்ட காலம், திணை, துறை வகுக்கப்பெற்ற காலம் என்பது மாறுபட்ட நிலையில் அமைந்ததால் இவ்வாறான குழப்பங்கள் எழுவது இயல்பே. எனவே தொல்காப்பியச் சிந்தனை மரபைப் பின்பற்றி சங்க இலக்கியப் புறப்பாடல்கள் அமைந்தாலும் அவை புதிய சிந்தனை மரபு மாற்றத்துடன் திகழ்வதை அறியமுடிகிறது. இன்றைய சூழலில் புறப்பாடல்களை மறுவாசிப்பிற்கு உட்படுத்திப் புதிய சிந்தனைகளைப் புகுத்தித் தொகுக்க வேண்டிய நிலையில் புறப்பாடல்கள் அமைந்துள்ளன.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.