தமிழ் மொழியின் முதன்மையான இலக்கணம் தொல்காப்பியமாகும். இவ்விலக்கணம் இலக்கிய வளம் நிறைந்தது என்றும், இது தமிழர்களின் மரபு சார்ந்த பொக்கிஷம் என்றும் கூறலாம். தொல்காப்பியம் பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாய் அமைந்து காணப்படுகிறது. தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து இலக்கணத்தை உள்ளடக்கியுள்ளது. இவ்வைந்தனுள் பொருளதிகாரம் எனும் பகுதியினுள் இலக்கியம் சார்ந்த செய்திகள் முழுமையாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியத்தில் அகத்திணைக் கோட்பாடுகளாக அக ஒழுக்கம், புற ஒழுக்கம், உருவம், உள்ளடக்கம், இறைச்சி, மெய்ப்பாடு, கற்பனை, கருத்து, உணர்ச்சி ஆகியவற்றைக் கூறலாம். ச. அகத்தியலிங்கம் அவர்கள்,
“ இலக்கணம் என்பதும் பல திறப்பட்டது. வழக்கு மொழி இலக்கணம் , செய்யுள் மொழி இலக்கணம், கிளை மொழி இலக்கணம் எனப் பல நிலை இலக்கணங்கள் உண்டு. பண்டைக்கால பிறமொழி இலக்கணங்கள், இலக்கிய மொழியைப் புரிந்து கொள்வதற்காகவே தோன்றின என்பர். ஆனால், தொல்காப்பியரின் இலக்கணமோ வழக்கு மொழிக்கும் செய்யுள் மொழிக்கும் உரிய இலக்கணமாக உருவாக்கம் பெற்றது. சிறந்த இலக்கணம் என்பது உயிரோட்டமும் உயிர்த் துடிப்பும் கொண்ட பேச்சு மொழிக்கும், அழகும் கம்பீரமும் ஆடம்பரமும் நிறைந்த கவிதை மொழிக்கும் உரியதாக இருக்க வேண்டும்”
என்கிறார்.
அவ்வகைளில் தொல்காப்பியம் சிறப்புடையது எனலாம். இக்கட்டுரையில் அகத்திணையின் முதற்பொருள் மரபுகளை ஆராய்கிறது.
தமிழ் இலக்கியத்தை அகம் என்றும், புறம் என்றும் பாகுபடுத்தலாம். அதாவது, அகம் என்பது உள்ளத்தால் நிகழும் நிகழ்வு என்றும், உணர்வால் அறியக்கூடியதும், மனத்தால் அறியும் பாங்கும் இரு உள்ளங்களின் (தலைவன், தலைவி) இணைவு என்றும் கூறலாம். அகமாகிய காதலை எடுத்தியம்புவது தொல்காப்பியமாகும். அதன் பெருமையைத் தமிழண்ணல் கூறும் போது,
“கிரேக்கர்களுக்கு அரிஸ்டாட்டிலின் கவிதையியல் கிடைத்திருப்பது போலவும், வடமொழியாளருக்குப் பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரம் கிடைத்திருப்பது போலவும், தமிழர்களுக்குத் தொல்காப்பியப் பொருளதிகாரம் கிடைத்துள்ளது’’
என்கிறார். மேலும், அகப்பொருள் பற்றி தெ. கல்யாணசுந்தரம் அவர்கள்,
“ அகப்பொருள் பாடல்கள் புலனெறிப் படுத்தப்பட்டவை, குறிக்கோள் அடிப்படையோ, நடப்பியல் அடிப்படையோ தனித்து இல்லாமல் அவை அறிவு சார்ந்த நிலையில் புலனெறி வழக்கப்படுத்தப்பட்டுள்ளன”
என்கிறார்.
இவ்வாறு வாழ்கையில் சிறப்பிடம் பெறுவது அகம் எனலாம். அகம் என்பது அன்பின்பாற்படும் எனலாம். வள்ளுவப் பெருந்தகை, “அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்” என்று சொல்வதும் குறிப்பிடத்தக்கது. அதாவது, அன்பு என்பது ஒத்த தலைவன், தலைவி ஆகியோரது உள்ளம் ஒன்றுவதே அகம் எனும் அன்பாகும்.
செய்யுளுக்குரிய அகத்திணை மரபுகளாகத் திணை, கைகோள், முதல், கரு, உரி என்பனவற்றைச் உ. வே. சாமிநாதைய்யர் அவர்கள்,
“அகப்பொருள் ஐந்து திணையாகப் பகுக்கப்பட்டு ஒவ்வோன்றும் முதல், கரு, உரி என்னும் மூவகையானும் செய்யுளில் விளக்கப்படும். முதலென்பன நிலமும், காலமும். கருவென்பது தெய்வம் முதலிய உரியென்ப திணைக்குரிய ஒழுக்கங்கள். இவ்வரையறைக்குள் புலவர்களால் இயற்றப் பெற்றப் பெரும் கவியமைப்புக்கு உரியனவேயன்றி உலகியலுக்கு உரியனவல்ல. ஆனால், இவற்றில் சில மட்டும் உலகியலுக்கு ஏற்புடையனவாகும்.” என்கிறார்.
மேலும், அகத்தியலிங்கம் அவர்கள்,
“கவிதை மரபுகளில் திணைப் பாகுப்பாடும் முதல், கரு, உரிப்பொருள் போன்றவையும் வழக்கிலிருந்த ஒரு கவிதை மரபே எனக் கருதுவதில் தவறில்லை”
என்றார்.
தமிழ் இலக்கியத்தில் திணை என்பது மக்களின் ஒழுக்கமாகும். தொல்காப்பியர் திணையாகிய அக ஒழுக்கத்தை ஏழு என்றும், புற ஒழுக்கத்தை ஏழு என்றும் கூறுகின்றார். அதாவது, அக ஒழுக்கங்களாகக் கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை ஆகியனவற்றை,
“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப”
(தொல்,சூ.947)
எனவும், புற ஒழுக்கங்களாக வெட்சி, வஞ்சி, காஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண் என்பனவற்றை,
‘வெட்சி தானே குறிஞ்சியது புறனே’
(தொல்,சூ.1002)
‘வஞ்சி தானே முல்லையது புறனே’
(தொல்,சூ.1007)
‘உழிஞை தானே மருதத்துப் புறனே’
(தொல்,சூ.1010)
‘தும்பை தானே நெய்தலது புறனே’
(தொல்,சூ.1015)
‘வாகை தானே பாலையது புறனே’
(தொல்,சூ.1019)
‘காஞ்சி தானே பெருந்திணைப் புறனே’
(தொல்,சூ.1023)
‘பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே’
(தொல்,சூ.1026)
என்றும் எடுத்தியம்புகின்றது. மேலே சொல்லப்பட்ட ஒழுக்கங்களுள் அன்பான ஒழுக்கங்கள் ஐந்தாகும். அதாவது, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவாகும். இதற்கு அடிப்படைக் காரணம் நிலம் இல்லாததே என்பதும், நிலம் இருந்தால்தான் மக்கள் வாழ முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திணை என்ற சொல்லுக்குக் குடி என்ற பொருளும் உண்டு. குடிகள் வாழும் இடமும் திணை எனப்பட்டது. பொருளிலக்கணத்தில் விளக்கப்படும் இவ்வைந்து திணைகளும் மக்கள் வாழ்க்கைப் பற்றியது என்றும், திணை என்ற சொல் நிலத்தை மட்டுமின்றி நிலத்தின் அமைப்பு, அங்கு வாழும் மக்களின் இயல்பு, உயிர் வாழும் விலங்குகள், பறவைகள், செடி, கொடிகள், உழவுப் பயிர்கள், மக்கள் வழிபட்டு வந்த தெய்வங்கள் யாவையும் குறித்து நிற்கும் செயல்பாடுகளைக் கூறலாம். தொல்காப்பியர்,
“நிறுத்த முறையான நிலத்தால் திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று”
என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதாவது, நிலத்தால் தான் திணை அமைந்துள்ளது எனச் சுட்டிக் காட்டுகின்றார்.
இலக்கியத்தில் கொள்கை, கோட்பாடு, விதி என்னும் மூன்றும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டவை எனலாம். இவைகளில் இலக்கியக் கொள்கை என்றும், இலக்கியத்தில் பேசப்படும் கொள்கை என்றும் வரையறுப்பது இன்றியமையாததாகும். முதலில் கூறப்படும் இலக்கியக் கொள்கைக்கு விஞ்ஞானம் அல்லது கலை பற்றிய விதிமுறைகளுக்குத் தரப்படும் தெளிவில்லாத விளக்கம் என்றும், இரண்டாவது கொள்கையில் உண்மைகள் நிகழ வேண்டும் என நினைத்து இன்று நியாயத்தால் கூறப்படும் அனுமானங்களாகும். கோட்பாடு என்பதை இலக்கியப் படைப்பில் பின்பற்றப்படும் விதி முறைகள் ,அதாவது, முக்கியமான அல்லது முன்னைய கருத்து எனலாம். மேலும், அறிவுக்கெட்டிய பொருள்களைப் பற்றிய மையக்கருத்து. கோட்பாடு என்பதற்கு அகராதி தரும் விளக்கம், காப்பியம், பிள்ளைத்தமிழ், வெண்பா, கலிப்பா, அமைப்பு அல்லது யாப்பு பற்றிய இலக்கணம் ஆகியவற்றைக் கூறலாம். ரெனிவெல்லக் கூறும் கருத்தைத் தழுவி ச. வே. சுப்பிரமணியன் அவர்கள் இலக்கியக் கல்வியை இலக்கியக் கொள்கை, இலக்கியத் திறனாய்வு, இலக்கிய வரலாறு என்னும் மூன்றுநிலைகளில் அடக்குவார். இவற்றுள் இலக்கியக் கொள்கையை அமைக்க ஏனைய இரண்டு கல்விகளும் துணை புரிகின்றன. இலக்கிய நெறிகள், வகைகள், அடிப்படை நிலைகள் ஆகியவற்றைப் பற்றிய கல்வி இலக்கியக் கொள்கையின் கீழ் அடங்கும் எனக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. அவ்வடிப்படையில் முதற்பொருள் பற்றிய அகத்திணை மரபுகளைக் கோட்பாட்டுநிலையில் அமைவதைக் காணலாம்.
தொல்காப்பியர் அகத்திணையை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்னும் மூன்று வகையாகப் பிரித்துக் கொள்வார். எந்த நாடாக இருந்தாலும் மக்கள் வாழ்வியற் முறையும், பழக்க வழக்கங்களும், சிந்தனையும் செயல் களமும் தொல்காப்பியரின் இந்த மூன்று பிரிவுகளுக்குள் அடங்கிவிடும் எனலாம். முதற்பொருள், கருப்பொருள் ஆகியன இடம் என்றும், பெரும் பொழுது, சிறுபொழுது ஆகிய இரண்டையும் நேரம் என்றும், உரிப்பொருளாகிய ஒழுக்கத்தை இயக்கம் என்றும் பிரிப்பார். தொல்காப்பியக் கோட்பாடாகிய இவைகள் இன்றைய உலக மக்களின் இயக்கமெல்லாம் இடத்தையும், பொழுதையும் அடிப்படையாகக் கொண்டவை என பிச்சமுத்து கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
தமிழரின் கோட்பாடுகளில் காலம் என்ற தத்துவம் மக்கள் வாழ்க்கையில் பேரிடங் கொண்டது. எனவே மக்கள் வாழ்ந்த இடமும், காலமும் அவர்களுக்குத் தேவையான முதற்பொருள் எனலாம். இதனைத் தொல்காப்பியர்,
“முதலெனப் படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே”
என்னும் சூத்திர அடிகளுக்கு ஏற்ப முதற்பொருளுக்குக் காலம், இடம், முக்கியத்துவம் பெறுகின்றது.
தொல்காப்பியரின் கூற்றுப்படி கைக்கிளைக்கும், பெருந்திணைக்கும் நிலம் கிடையாது என்பர். ஏழுத் திணைகளில் முதல் இரண்டும் தவிர முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்னும் ஐந்தும் நிலம் பெற்ற பகுதி எனலாம்.
முல்லை காடும் காடு சார்த பகுதியாகும். அதாவது, மக்களைச் சார்ந்தது எனலாம். இம்மக்களின் ஒழுக்கம் இருத்தலும் இருத்தல் நிமித்தமாகும். இவ்வொழுக்கத்தில் இருந்து பெண் வீட்டு வாழ்க்கைக்கு உரியவளாகவும், ஆண் சமூக வாழ்க்கைக்குரியனவாகவும் மாறிவிட்ட காலத்தில், அக வாழ்க்கையில் வேலையின் காரணமாக வெளியில் சென்ற ஆண்களின் வருகைக்காகப் பெண்கள் காத்திருந்த செயலை முல்லை என்பர். மேலும், முல்லை மக்களின் வாழ்க்கை முறையால் அல்லது செயலால் பெற்ற பெயர் எனலாம்.
அது போல குறிஞ்சி நிலத்தை மலையும் மலைச் சார்ந்த பகுதி யைமையப்படுத்தி வருவதாகும். பல்லாயிரம் ஆண்டுகளாகச் சமூகத்தில் திருமணமுறை தோன்றி, தனியுடைமை வளர்ந்து தழைத்து விட்ட வீரயுகத்தில் காதல், போர், உண்டாட்டு ஆகிய மூன்றுமே மக்களின் வாழ்க்கையாக அமைந்துவிட்ட நிலையில் ஆணும், பெண்ணும் கூடி மகிழும் உடலுறவு சிறப்பாகக் கொள்ளப்பட்டக் காலம் புணர்தல் காலம் ஆகும்.
மருதம் நிலம் எனும் பொழுது வயலும் வயல் சார்ந்த பகுதி எனலாம். மருதநிலத்தில் உற்பத்தி நிலைகளும், அதனோடு தொடர்புடைய பொருளாதார உறவுமுறைகளும் நிலைபெற்றச் சமுதாய வாழ்க்கைக்குக் காரணமாகி விடுகிறது. திருமணத்தின் மூலம் நிலைபெற்று விட்டக் குடும்ப வாழ்க்கையில் ஆண், பெண் முரன்பாடுகளைக் குறிக்கும் சொல்லாக ஊடலைக் குறிப்பிட்டுள்ளார் தொல்காப்பியர்.
மேலும், நெய்தல் நிலம் கடலும் கடல் சார்ந்த பகுதி எனலாம். நெய்தல் நில ஒழுக்கத்தில் பண்டமாற்று முறையில் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததைக் குறிக்கிறது. இந்நிலப் பாகுப்பாட்டினைத் தொல்காப்பியர்,
“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய வைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”.
என்ற சூத்திரத்தின் வாயிலாக அறியலாம்.
எனினும், பாலைத்திணைக்கு நிலமாகக் ‘குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமங் கொள்ள’ என்னும் கூற்றிற்கேற்ப பாலைத்திணை மணலும் மணல் சார்ந்த பகுதியைக் கூறலாம். பாலை நில மக்கள் பிற பகுதிகளுக்குச் சென்று பொருளைத் தேடுவதற்கும் வழிப்பறி செய்வதற்கும் இந்நில மக்கள் குடியிருப்புகளை விட்டுப்பிரிந்து சென்று தொழில் புரிய வேண்டிய நிலை, பொருள் தேடுவதற்காகப் பெண்களையும், பிள்ளைகளையும் விட்டுப் பிரிவதே இந்நில மக்களின் அன்றாடம் ஒழுக்கம் தனி உடைமையின் தோற்றத்தோடு, வெறுப்போடு அமைந்தநிலை பாலையாக வளர்ந்தது எனலாம்.
இங்கு நிலத்தைப் பெண்ணாகவும் , உழைப்பாகிய உழுபவன் ஆணாகவும் எடுத்துக்காட்டுவது சிறப்புடையதாகும்.
தொல்காப்பியர் பொழுதினை நேரம் எனும் பொருளில் கூறுகின்றார்.
பொழுதினை இரண்டு வகைப்படுத்தி, சிறுபொழுதினை ஒரு நாளின் உட்பகுப்பாகவும், பெரும் பொழுதினை ஓர் ஆண்டின் உட்பகுப்பாகவும் அமைக்கின்றார். மேலும், ஆறு பருவங்களை உள்ளடக்கியுள்ளன.
சிறுபொழுதுகளாக
மாலை (2-6),
யாமம் (10-2),
எற்பாடு (6-10),
நண்பகல்(10-2),
வைகறை(2-6),
காலை அல்லது விடியல்(6-10)
என அழகாக வகுத்துள்ள திறம் பாராட்டுக்குரியது.
பெரும் பொழுதினை ஓர் ஆண்டின் உட்பகுப்பாகவும், பெரும் பொழுதுகளாக;
கார்க்காலம் (ஆவணி, புரட்டாசி),
கூதிர்க்காலம் (ஐப்பசி, கார்த்திகை),
முன்பனிக் காலம்(மார்கழி, தை),
பின்பனிக் காலம் (மாசி, பங்குனி),
இளவேனிற் காலம் (சித்திரை, வைகாசி),
முதுவேனிற் காலம்(ஆணி, ஆடி)
என்பனவும், பெரும்பொழுதினை ஒரு ஆண்டிற்கு உட்பட்டு பணிரண்டு மாதங்களாகப் பகுத்துள்ளதும் போற்றுதற்குரியது.
தொல்காப்பியரின் கூற்றின்படி முல்லைத் திணைக்குரிய சிறு பொழுதாக மாலையும், பெரும் பொழுதாகக் கார்க்காலத்தையும், குறிஞ்சித் திணைக்கு யாமமும், பெரும் பொழுகளாகக் கூதிர்க்காலம், முன்பனிக்காலமும், மருத நிலத்திற்குச் சிறுபொழுதுகளாக வைகறை, விடியலும், பெரும் பொழுதுகளாகக் கார்க்காலம், கூதிர்க்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் போன்றனவும் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியர்,
“காரும் மாலையும் முல்லை: குறிஞ்சி
கூதிர், யாமம் என்மனார் புலவர்” (தொல்.952)
“பனிஎதிர் பருவமும் உரித்தென மொழிப” (தொல்.953)
“வைகறை விடியல் மருதம் : எற்பாடு
நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும்” (தொல்.954)
“நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே” (தொல்.955)
“பின்பனித்தானும் உரித்தென மொழிப” (தொல்.956)
என்னும் சூத்திரங்களின் வாயிலாக அறியலாம்.
தமிழ்ச் சமூக மரபில் அகத்தியர் இயற்றிய தமிழ் இலக்கணத்தை அடுத்து, தொல்காப்பியம் ஐந்திலக்கணம் வாழ்வியல் செய்திகளைச் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது. தொல்காப்பியர் செய்யுள் வழக்காகவும், மரபாகவும் வகுத்த போது, களவு, கற்பு, முதற்பொருள், கருப்பொருள், உரிப் பொருள் போன்றன அகத்திணை வாழ்வுக்கு அடிப்படையாக அமைத்துள்ளதை அறியமுடிகிறது. மேலேக் கூறப்பட்ட அகத்திணை மரபு வாழ்வியலுக்கும், மக்கள் சார்ந்த திணை, நிலத்திற்கும் ஏற்றவாறு முதற்பொருள் அமைந்துள்ளதைத் தொல்காப்பியம் வாயிலாக அறியமுடிகிறது.
1. இலக்குவனார், தொல்காப்பிய ஆராய்ச்சி, வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை.
2. அகத்தியலிங்கம். ச, தொல்காப்பிய உருவாக்கம், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம்.
3. பொற்கோ, தொல்காப்பியப் பொருளதிகாரம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.
4. சுப்பிரமணியன். ச.வே, தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
5. பாலசுப்பிரமணியம், பண்டைத் தமிழர் இன்பியல் வாழ்க்கை, கழக வெளியீடு, சென்னை.