தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
110.தமிழ் சிந்தனை மரபில் நிலா
சி. ஆதி சின்னம்மாள்
ஆய்வியல் நிறைஞர், தமிழ்த்துறை,
காந்திகிராம கிராமியப் பல்கழைக்கழகம், காந்திகிராமம் - 624302.
முன்னுரை
தமிழ் இலக்கியத்தில் பெரும்பாலும் நிலவு பற்றிய கருத்துக்கள் நிலவி வருவதை அறிய முடிகிறது. நிலா என்ற சொல் மக்கள் அனைவரும் அறிந்த சொல்லாகும். நிலாவினைக் கூறும் பொழுது, இயற்கை, குழந்தை, அரசன், பெண்கள், வழிபாட்டில் நிலா, இலக்கியங்களில் நிலா, அறிவியலில் நிலா பற்றியும், நிலவு குறித்த சிந்தனைகள் பற்றியும், நிலா எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கட்டுரையின் வழியாகக் காணலாம்.
புராணக் காலத்தில் நிலாவினைச் சந்திரன், பிறை, மதி என்ற சொற்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. புராண காலத்தில் சந்திரன் தோன்றிய வரலாறு கூறப்படுகிறது. இயற்கைப் பொருளான சந்திரனுக்கு மட்டும்தான் வானில் இருந்து ஒளியை உலகத்திற்குத் தருகின்ற சக்தியை இறைவன் சந்திரனுக்கு அளித்துள்ளார்.
நிலாவின் வேறு பெயர்களாகச் சந்திரன், அம்புலி, இந்து, கலாநிதி, குமுதசகாயன், சசாங்கதன், கதிர், மதி, பிறை, திங்கள், நிலவுப்பூ, சோமன், நிலவு ஆகிய பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.
நிலவின் தன்மை
நிலா என்ற சொல்லைத் தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்டும் பொழுது நிலாவைக் காண்பதாகக் கூறப்படுகிறது. நிலா வட்டமான வடிவத்தையும், வெண்மையான நிறத்தையும் ஒளி சிறப்பு மிகுந்த ஒன்றாக உள்ளது. அமாவாசை, பெளர்ணமி நிலவின் சிறப்பு வாய்ந்ததில் ஒன்றாகும். வழிபாட்டின் அடிப்படையில் நிலாவினை மக்கள் வழிபடுகின்றனர். நிலவின் வட்டமான வடிவத்திற்கு அரசனின் வெண்கொற்றக்குடை, பெண்களின் முகம், அரசனின் முகம், மார்கழி மாதம் முழுநிலவின் ஒளியைக் கண்களுக்கு நிலாவினை வர்ணித்தும், உவமைகளும் கூறுகின்றனர். மூன்று மதங்களுக்கும் நிலாவினை ஒப்பிட்டுக் கூறியுள்ளனர்.
“எம்மதமும் சம்மதம்”
என்ற வரிகளுக்கு இணங்க நிலாவின் தன்மை அறியப்படுகின்றது.
வழிபாடுகள்
நிலாவினை வழிபாட்டில் சந்திரன் என்று மக்கள் கூறுகின்றனர். இதில் பெளர்ணமி நாள் தரிசனம் குறிப்பிடத்தக்கது. இந்நாளில் மிகவும் சிறப்பான முறையில் கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றது. அன்று சந்திரனின் வடிவம் பெரியதாகவும், ஒளி அதிகமாகவும் விளங்குகின்றது. பெளர்ணமி என்பது மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு ஆகும். அதற்கு அடுத்துத் தேய்பிறை என்ற நிகழ்வு நடைபெறும். இதுவும் நிலவுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. அமாவாசையில் நிலாவானது தேய்ந்து, பின் சிறிது சிறிதாக வளர்கிறது. ஆனால் பெளர்ணமியில் நிலா முழு வடிவில் மிகப் பிரகாசமாக சிறந்த ஒளியுடன் இருக்கும். மேலும், வளர்பிறை நாட்களில் மட்டும் சுப நிகழ்ச்சிகள் தொடங்குவதாகக் கருதுவது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
சோதிடத்திலும் நிலா பற்றிய கருத்துக்கள் இடம் பெற்றிருக்கிறது.
கவிதை இலக்கியத்தில் நிலவு
பாரதிதாசன் இயற்கைக்கு அழகாக விளங்குகின்ற நிலாவை வர்ணனையாகக் கூறுகின்றார். இவர் ’நிலாச் சேவல்’ எனும் தலைப்பில்
“பாற்புகை முகிலைச் சீய்த்துப்
பளிச்சென்று திங்கட் சேவல்
நாற்றிக்கும் குரல்எ டுத்து
நல்லொளி பாய்ச்சிப் பெட்டை” (பாரதிதாசன் பாடல் - 75)
எழுதியுள்ள கவிதையில் நிலவைப் பறவை இனத்துடன் சேர்ந்த சேவலுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றார்.
நாட்டுப்புறவியல்
நாட்டுப்புறவியலில் தாய் தன் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடல் பாடுவது மரபாக வருகின்றது.
“மாசிப் பிறையோ நீ வைகாசி மாங்கனியோ
தேசப் பிறையோ நீ தெவிட்டாத மாங்கனியோ” (நாட்டுப்புற இயல் ஆய்வு - ப.46)
என்ற பாடல் குழந்தையை நிலாவுக்கு ஒப்பிட்டும், இயற்கையின் பழமான மாங்கனிக்கும் நிலாவினை ஒப்பிட்டு வர்ணித்துக் கூறுகிறது.
இயற்கைப் பொருட்கள்
இயற்கைப் பொருளான நிலாவினை நாட்டுப்புற இலக்கியத்தில் விடுகதை மரபின் வழியாகவும் காணலாம்.
விடுகதை:
“எட்டாத ராணி
இரவில் வருவாள்
பகலில் மறைவாள் - அவள் யார்?”
விடை: நிலா
தமிழ் வருடப் பிறப்பு
சித்திரை முதல் நாள் தமிழ் வருடப் பிறப்பாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக, சித்திரை மாதம் பெளர்ணமி நிலா கொண்டாடப்படுகிறது. இதையும் மக்கள் மரபாகக் கொண்டாடுகின்றனர்.
முருகனும் முழுமதியும்
நிலவினை முருகப்பெருமானுக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றனர். நிலாவினை விளையாட அழைத்து வராதக் காரணத்தால் சிவபெருமானின் தலையில் உள்ள நிலவினை முருகப் பெருமான் தன் முகத்தை வைத்து விளையாடினார் என்பதை இரா. பி. சேதுப்பிள்ளை அவர்களின் கட்டுரை வழியாக அறியலாம்.
பத்துப்பாட்டில் நிலவு
சங்க இலக்கியத்தில் நிலவினை அகம், புறம் என்ற இரண்டு பகுதிகளிலும் நிலா பற்றிய வேறு வேறு விதமான சொற்கள் பயன்படுத்தும் இடங்கள், உவமைகள், உருவகங்கள், வர்ணனைகள் ஆகியவைகள் இடம் பெறுகின்றன. பத்துப்பாட்டில் நிலவு என்ற சொல் முப்பத்தினான்கு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
பத்துப்பாட்டில் சக்கரத்தை நிலவுக்கும், தலைவன், தலைவி மருதநிலத் திணையின் வருணனைக்கும் ஆறு பெரும் பொழுதுகளுக்கும் அதிகாலையில் மேகம் நிலவினை மறைப்பது பாம்பு விழுங்குவதுபோல் காட்டப்படுகிறது.
மருதநில வருணனை
“மதிசேர் அரவின் மானத் தோன்றும்
மருதஞ் சான்ற மருதத் தண்பனை” (சிறுபாணாற்றுப்படை-155-156)
எட்டுத்தொகையில் நிலவு
எட்டுத்தொகையில் நிலா என்பதில் நிலாவினை ஒப்பிட்டு ஒவ்வொரு திணையிலும் ஒவ்வொன்றாகக் கூறப்படுகின்றது. இதில் எட்டுத்தொகையில் கலித்தொகைப் பாடலில்,
“தண்கதிர் மதியத்து அணிநிலா நிரைத்தரப்” (கலி. 121-3)
நிலவின் வெளிச்சத்தில் பறவைகள் தம் கூட்டிற்குச் செல்வதாகப் பதிவு செய்யப்படுகிறது. எட்டுத்தொகையில் நிலா பற்றிய சொற்கள் ஐம்பத்து மூன்று இடங்களில் இடம் பெற்றுள்ளது.
அறிவியல் நிலா
அறிவியலில் நிலா என்று அறியும் போது நிலாவினை மனிதர்கள் தான் முதன் முதலில் ஆராய்ச்சி செய்தனர். அதன் பின்னர் தான் மனிதர்கள் முதன் முதலாகக் காலடி வைத்தனர்.
தமிழரின் மரபுசார் அறிவியல் தொழில்நுட்பம்
தமிழர்கள் இன்றைய அறிவியலை அன்றைய நாட்களில் கண்டுபிடித்தனர். நிலாவுடன் தொடர்புடையதுமான, கடவுள் சார்ந்த வழிபாடு, இயற்கைப் பொருள், பெண்ணின் முகத்திற்கும், கடவுளுக்கும் பொருந்துமாறு உருவகங்களைப் புலவர்கள் பயன்படுத்தினர்.
காலம் காலமாக ஒரு பொருள் குறித்த சிந்தனை மாற்றம் அடைந்து கொண்டுதான் வருகின்றது.
முடிவுரை
தமிழ் இலக்கியத்தில் நிலா பயன்படும் இடங்கள் மற்றும் புராணக் காலம், நிலாவின் வேறு பெயர்கள், நிலாவில் அமாவாசை, பெளர்ணமி பற்றியக் கருத்துக்கள், இடம் பெறுவதைக் காணமுடிகின்றது. எனவே, தமிழ்ச் சிந்தனை மரபில் நிலா இவ்வாறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதை இக்கட்டுரையின் வழியாக எடுத்துக் காட்டப்படுகின்றது.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.