தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
111.நெய்தல் திணைப் பாடல்களில் பொருள் சார் வாழ்வியல்
முனைவர் சோ. முத்தமிழ்ச்செல்வன்
தமிழ்ப் பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி.
முன்னுரை
இலக்கியம் என்பது சமுதாயப் படைப்புக்களில் ஒன்று, தமிழ்ச் சமுதாயம் நீண்ட நெடிய வரலாற்றுப் பரப்பைக் கொண்டது. சமுதாயத்தின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், பண்பாடுகள், கலைகள், சிந்தனைகள், உணர்ச்சிகள், விருப்பு வெறுப்புகள் போன்றவற்றின் பதிவுகளாக விளங்குபவை பண்டைய இலக்கியங்கள். அந்த வகையில் புகழ்மிக்க சமுதாயத்தைப் புரிந்து கொள்ளவும், தொன்மையான தமிழ்ச் சமூகத்தை அறிந்து கொள்ளவும் இன்றைக்கு முதன்மையான இலக்கியமாக இருப்பவை சங்க இலக்கியங்களாகும். அந்த வகையில் சங்க இலக்கிய எட்டுத்தொகை அகப்பாடல்களில் 1862 பாடல்கள் உள்ளன. அவற்றில் நெய்தல் திணைப் பாடல்கள் 344 ஆகும். இதில் 259 களவுப் பாடல்கள், 74 கற்புப்பாடல்கள், 11 பெருந்திணைப் பாடல்கள் ஆகியவை அடங்கும். நற்றிணையில் 102 பாடல்களும், குறுந்தொகையில் 72 பாடல்களும், ஐங்குறுநூற்றில் நூறு பாடல்களும், அகநானூற்றில் 40 பாடல்களும், கலித்தொகையில் 33 பாடல்களும் நெய்தல் திணைப் பாடல்களாகும். இத்தகைய நெய்தல் திணைப் பாடல்களில் இடம்பெறும் பொருள் சார் வாழ்வியலை இக்கட்டுரை ஆராய்கிறது.
நெய்தல் திணை பெயர்க்காரணம்
நெய்தல்திணை அன்பின் ஐந்திணைகளில் ஒன்று. நிலத்தினைச் சுட்டும் தன்மையிலும், கடலும் கடல் சார்ந்த பகுதியினைக் குறிக்கும் வகையிலும் பயன்படுத்தப் பெறுகின்றது. நெய்தல் - ஒரு தாவரத்தின் பெயர். மிகுதியான நீர் நிலைகள் கொண்ட இடத்தில் வளரும் தன்மை பெற்ற தாவரமாகும். இதன் மலர் நீலமணி போன்ற நிறமும், நீரின் அளவிற்கு ஏற்ப வளரும் தன்மையும் கொண்டது. இதன் சிறப்பினை அடிப்படையாகக் கொண்டே நெய்தல் திணை எனப் பெயரிட்டுள்ளனர் பண்டைத் தமிழர். இத்தகைய நெய்தல் என்ற சொல்லாட்சி நற்றிணையில் 16 இடங்களிலும், குறுந்தொகையில் ஏழு இடங்களிலும், ஐங்குறுநூற்றில் 17 இடங்களிலும், அகநானூற்றில் 14 இடங்களிலும், கலித்தொகையில் 4 இடங்களிலும் இடம் பெற்றுள்ளன.
நிலம்சார் தொழில் உறவுகள்
நிலம்சார் தொழில் உறவுகள் என்பதில் நெய்தல் நிலம் தொடர்பான அல்லது நெய்தல் நிலத்திற்குரித்தான மண்ணின் மணம் சார்ந்த தொழல்களை அடிப்படையாகக் கொண்டு காணப்படுகிற உறவுகள் ஈங்கு கருத்தில் கொள்ளப்பெற்றுள்ளன.
அதனடிப்படையில் தோன்றிய மரபுகள் போன்றவற்றை எடுத்தியம்பும் வகையில் உள்ளன. இந்நிலத்தில் நடைபெற்ற வாணிப முறையினைக் கொண்டு அம்மக்களிடையே காணப்பெற்ற இருவகையான உறவுகளைப் பகுத்து விளக்க இயலும். அவை,
1. உள்நாட்டு வாணிபம்
2. அயல்நாட்டு வாணிபம்
என்பனவாகும்.
உள்நாட்டு வாணிப உறவுகள்
உள்நாட்டு வாணிபம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதிக்குள் நடைபெற்ற வணிக முறையினைக் குறிக்கும். பண்டையக் காலத்தில் இது பெரும்பான்மையாகப் பண்டமாற்று முறையிலேயே நடந்தேறியுள்ளது. நெய்தல் நிலத்தில் வாழக்கூடிய மக்கள் உள்நாட்டு வாணிகத்தில் மிகுதியாக ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்துக் கருவிகளின் வளர்ச்சி குறைந்திருந்த இக்காலகட்டத்தில் பண்டமாற்று முறையில் உள்நாட்டு வணிகம் நடைபெற்றதில் வியப்பில்லை. எனினும் இம்மக்களின் வாழ்க்கை நகர்விற்கு, தொழில் வளர்ச்சிக்கு இவ்வாணிபமே அடிப்படையாய் அமைந்திருக்கிறது. (அக.320) பரதவ மகளான தலைவியின் தங்கையர்கள் விழாக்காலங்களில் விழா நடக்கும் இடங்களுக்குச் சென்று மீனை விலைகூறி விற்றுள்ள செய்தியினைக் காட்சிப்படுத்துகின்றன.
பரதவர் - மருதநிலத்தார் வாணிபநிலை
பரதவர்களான நெய்தல் நிலத்தவர்க்கும் அருகில் உள்ள மருத நிலத்தவர்க்கும் மிக நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளன. இதனை மெய்ப்பிக்கும் தரவுகளாகச் சங்க இலக்கிய நெய்தல் பாடல்கள் மிகுதியாகப் புனையப்பெற்றுள்ளது.
மீன் - நெல்
நெய்தல் நிலத்தின் முதன்மையான உணவுப் பொருள் மீன், அதே போல் மருதத்தின் விளைபொருள், உணவுப் பொருள் நெல், இவ்விரு நிலத்தாரும் தங்களுக்குள் ஒன்றையொன்று கொடுத்துப் பண்டமாற்று முறையினால் பரிமாற்றம் செய்துள்ளனர். (அக.340)
இப்பி - கள்
பரதவர்கள் தான் வாரிக்கொண்டு வந்த இப்பியைப் பன்னாடையால் அரிக்கப்படும் மகிழ்ச்சியைத் தரும் கள்ளுக்கு மாற்றாக அளிக்கப் பெற்ற நிகழ்வைச் சுட்டுகின்றன. (அக.296)
பரதவர் - குறிஞ்சி வாணிப நிலை
மீன்பிடித் தொழிலைச் செய்த பரதவர்க்கும், வேட்டைத் தொழிலைச் செய்யும் குறிஞ்சி நிலத்தார்க்கும் இடையே ஓர் உறவு ஏற்பட்டிருக்கின்றது. தொழில் அடிப்படையில் நோக்கும் போது பரதவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் நிலையை ‘வேட்டம்’ செல்லுவதாகப் புலவர்கள் பதிவு செய்துள்ளனர்.
“வேட்டம் பொய்யாது வலைவளம் சிறப்பப்
பாட்டம் பொய்யாது பரதவர் பகர” (நற்.38)
“புலாஅன் மறுகிற் சிறுகுடிப் பாக்கத்
தினமீன் வேட்டுவர் ஞாழலொடு மலையு” (அக270)
என்பன போன்ற பாடலடிகள், பரதவர் மீன் பிடிக்கச் செல்லும் நிகழ்வை ‘வேட்டம்’ என்றும், அவர்களை ‘வேட்டுவர்’ என்றும் அழைக்கப் பெறுகின்றமையைத் தெளிவுறுத்திக் காட்டுகின்றன. இருப்பினும் இதனைத் தாண்டி இவர்களிடையே பண்டமாற்று நிலையில் தொடர்பு இருந்துள்ளது. முடத்தாமக் கண்ணியார் என்ற புலவர் பதிவு செய்திருக்கிறார். இதனை,
“தேன்நெய்யோடு கிழங்கு மாறியோர்
மீன்நெய்யோடு நறவு மறுகவும்
... ... ... ... ... ...
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும்பூங் கண்ணி குறவர் சூட” (பொருநா.214-219)
என்று குறிஞ்சி நிலத்திற்கும் நெய்தல் நிலத்திற்கும் இடையேயான பண்டமாற்று உறவினை மட்டுமல்லாது, பண்பாட்டு ரீதியிலான குறிஞ்சிப் பண்ணைப் பரதவர் பாடவும். நெய்தல் நிலத்துப் பூவான நெய்தற் கண்ணியைக் குறிஞ்சி நிலத்துக் குறவர் சூடுவதுமான தொடர்பு நிகழ்த்துள்ளமையைப் பதிவு செய்துள்ளார்.
பரதவர் - உமணர் வாணிப நிலை
உள்நாட்டில் நடைபெற்ற வாணிபத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்கள் உமணர்களே ஆவர். இவர்களே பரதவர்களால் கழிமுகப் பகுதிகளில் விளைவிக்கப்பெற்ற உப்பினைப் பண்டமாற்று முறையில் பெற்று, வேற்று நிலங்களுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்துள்ளனர். இதன் காரணமாக உமணர்கள் உப்பு வணிகர் என்று அழைக்கப் பெற்றுள்ளனர். இந்த வகையில் பரதவர் - உமணர் என்பவர்களுக்கிடையேயான உறவு வாணிப முறையிலான தொடர்பாக உள்ளமையைத் தெளிவாகக்காண முடிகிறது.
“உவர்விளை உப்பின் உழாஅ உழவர்
ஓகை உமணர் வருபதம் நோக்கிக்
கானல் இட்ட காவற் குப்பை”(நற்.331)
என்ற உலோச்சனாரின் பாடலடிகள், பரதவர்கள் தாங்கள் விளைவித்த உப்பினை மாற்றுச் செய்யும் பொருட்டு உமணர்களின் வண்டிகள் வரும் நேரத்தை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைப் புலப்படுத்துகின்றன. மேலும், இவ்வுமணர்கள் நெல்லினைக் கொண்டு வந்து பரதவர்களிடம் கொடுத்து விட்டு உப்பினை வாங்கிச் சென்றுள்ளனர். இவ்வாறு உமணர்களிடம் வாங்கப் பெற்ற நெல்லை அரிசியாக்கி அதனை உட்கொண்டனர். (நற்.254) (அக.60)
உமணர் - குறிஞ்சி மக்கள் வாணிபம்
சங்ககாலத்தில் உள்நாட்டு வாணிகத்தில் சிறப்பிடம் பெறுவது உப்புப் பண்டமாகும். இதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் உமணர்களேயாவர். இவர்கள் எருதுகள் பூட்டிய வண்டிகளில் உப்புப் பண்டத்தை ஏற்றிக் கொண்டு குறிஞ்சி நிலத்திற்குச் சென்றனர். (நற்.138) (புற.60) குறிஞ்சி நிலத்திற்குச் சென்று உப்பு விற்ற நிலையினை, பொருளாதார நிலையில் ஏற்படுத்திய இயல்பினை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
உமணர் - மருத நில வாணிபம்
நெய்தலுக்கும் மருதத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதை ஏற்கெனவே குறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்வுமணர்களினால் ஏற்பட்டுள்ள தொடர்பினை அறிவது மேலும் இருநில மக்களுக்கும் உள்ள நெருக்கத்தை மிகுதிப்படுத்தும் நிலையில் அமையும்.
உமணப்பெண் மருத நிலத்திற்கு உப்பு விற்கச் செல்லும் போது, அவளைக் கண்ட தலைவன் அவள் மீது காதல் கொண்ட நிகழ்வினைத் தெளிவுறுத்தும் வகையில் அமைந்துள்ளன. (அக.390) வெண்ணெல்லுக்கு மாற்றாக உப்பினைப் பெற்று விலைகூறி விற்ற செய்தியினைப் புலப்படுத்துவதோடு, இருநிலத்தார்க்கும் இடையே உமணர்கள் தொடர்பை ஏற்படுத்திய இயல்பினைத் தெளிவுறுத்திக் காட்டுகின்றன. (நற்;.183)
உமணர் - முல்லை நிலவாணிபம்
முல்லை நிலமானது காடு சார்ந்த பகுதியாக இருப்பினும் அங்கும் மக்கள் வாழக்கூடிய சூழல் இயற்கையமைப்புக் காணப்பெற்றுள்ளது. உமணர்களைப் பற்றி வருகின்ற பதிவுகளில் பெரும்பாலான பாடல்கள் பிற நிலங்களுக்குச் சென்று உப்பு விற்கின்ற நிலையினையும், போகும் வழியின் தன்மையினையும் குறிப்பிடுகிறதே தவிர, அவர்களின் குடியிருப்பின் அமைப்பினைப் பற்றி மொழியவில்லை. முல்லைத்திணைப் பாடலில் வன்பரணர் என்ற புலவர் உமணரின் குடியிருப்பினை மேலோட்டமாகப் பதிவு செய்துள்ளார்.
உமணர் - பாலை நிலத்தொடர்பு
பாலை நிலத்திற்கும், நெய்தல் நிலத்திற்கும், நேரடியான முறையில் மற்ற திணை நிலங்களைப் போன்று தொடர்பு இருந்ததாகச் சங்கப் பாடல்களில் பதிவுகள் இல்லை. உமணர்கள் அப்பாலை நிலத்தின்கண் உள்ள சிற்றூரில் சிறிய குடிசைகள் அமைத்துத் தங்கியிருந்த நிகழ்வும், அங்கு பிரிந்து சென்ற தலைவன் தங்கி இளைப்பாறி விட்டுச் செல்லட்டும் என்று தலைவி சுட்டும் வகையிலும் பதிவு செய்யப்பெற்றுள்ளன. (அக.329) பாலை நிலத்திலும் உமணர்கள் குடிசையமைத்துத் தங்கியிருந்த நிகழ்வினை உணர்த்துகின்றன. இந்த வகையில் நோக்கும் போது உமணர்கள் தாங்கள் உப்பு விற்கச் செல்லும் இடங்களில் எல்லாம் சிறிய குடிசையமைத்துத் தங்கிச் செல்வதால், அவர்களின் வாழ்க்கை ஓரிடத்தில் தங்கி வாழும் அளவிற்கு நிலையானதல்ல என்பதை உணரமுடிகிறது.
அயல்நாட்டு வாணிக முறை
‘அயல்நாட்டு வாணிகம்’ என்பது சங்ககாலத்தில் கடல் கடந்து சென்று பொருட்களை விற்று வருவதும், அங்கிருந்து வாங்கி வருவதுமான நிகழ்வைக் குறிக்கும். பண்டைக்காலத்தில் அயல்நாட்டு வாணிகம் நடைபெற்றதற்குச் சான்றாக விளங்குபவை கடற்கரை துறைமுகங்கள் ஆகும். இத்துறைமுகங்களில்தான் பெரிய பெரிய மரக்கலன்கள் பொருட்களை ஏற்றி வந்து இறக்குமதி செய்துள்ளது. அதே போல் இங்குள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பெற்றன. நெய்தல் பாடல்களில் பதிவு செய்யப்பெற்றுள்ள குறுந்துறை, பெருந்துறை, முன்துறை என்பன இதனைத் தெளிவுறுத்திக் காட்டுவதாக உள்ளன.
முன்துறை என்பது கடல்அலை இறங்கி வரும் இடத்தில் அமைந்துள்ளமையைப் ‘பௌவம் இரங்கும் முன்துறை’ என்ற சொற்கள் புலப்படுத்தி நிற்கின்றன. மேலும், முன்துறை என்பது பாண்டிய மன்னனின் ‘கொற்றை முன்துறை’யினையும் (அக.130) நற்றேர்வழுதி ‘கொற்கை முன்துறை’யினையும் (அக 120), பெரியன் என்ற வள்ளலின் ‘புறந்தை முன்துறை’யினையும் (அக 100), சேரமன்னனின் ‘தொண்டி முன்துறை’யினையும் (குறு, 128), குட்டுவனின் ‘தொண்டி முன்துறை’யினையும் (அக.190) குறிக்கும் வகையில் நெய்தல் பாடல்களில் கையாளபபெற்றுள்ளன. இது அக்காலத்தில் ஒவ்வொரு துறையும் மன்னர்கள், வள்ளல்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தமையைத் தெளிவுறுத்தும் இயல்பில் உள்ளன. இதேபோல் பெருந்துறை என்பது ‘கொற்கைஅம் பெருந்துறை’ (ஐங்.188), ‘கானலம் பெருந்துறை’ (குறு.163), ‘தாதணி பெருந்துறை’ (அக.320), ‘வளைமேய் பெருந்துறை’ (அக.150) என்று சுட்டப்படுவதன் வழி கடற்கரைச் சோலையின் அருகினில் பெருந்துறை இருந்தமையை அறிய முடிகிறது.
பாண்டிய நாட்டின் கடற்கரையில் வந்திறங்கும் பொருட்களும், ஏற்றுமதி செய்யப்படும், பொருட்களும் எவையெவை எனக் காட்சிப்படுத்தி நிற்கின்றன. இவற்றுள் முத்து, சங்கு, உப்பு. மீன் துண்டுகள், போன்ற பரதவரின் பல்வேறு பண்டங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடுகின்றது. மேலும் நெய்தல் நிலப்பொருட்கள் அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை தெளிவாவதுடன், பரதவர்கள் அயல்நாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தமையை இதன் வழி அறியமுடிகிறது.
பொருளுக்கு முதன்மை
நெய்தல் நிலத் தலைவர்களாகக் கொண்கன், சேர்ப்பன், துறைவன், புலம்பன் என்ற சங்கப்புலவர்கள் குறித்துள்ளனர். கொண்கன் என்ற சொல்லாடல் இயல்தேர்க் கொண்கன் (குறு.114), திண்தேர்க் கொண்கன் (ஐங்.137), துறைகெழு கொண்கன் (நற்.211), நெடுந்தேர்க் கொண்கன் (ஐங்.134), பொலந்தேர்க் கொண்கன் (ஐங்.200), என்று குறிக்கப்பட்டுள்ளமை அவனுடைய செல்வச் செழிப்பினைப் பொருளாதார மேம்பாட்டினை வெளிக்காட்டுவதாக உள்ளன.
இதே போன்று சேப்பன் என்ற சொல்லாடல்கள் வரும் இடங்களில் உரவுநீர்ச் சேர்ப்பன் (குறு.397), தெண்கடற் சேர்ப்பன் (ஐங்.157), வயங்குநீர்ச் சேர்ப்பன் (கலி.124), இலங்குநீர்ச் சேர்ப்பன் (126), மலிதிரைச் சேர்ப்பன் (அக.290), என்று கடலினை அடைகொடுத்துக் குறிக்கப்பெற்றுள்ளது. மேலும், துறைவன் என்பவன் தண்ணந்துறைவன் (குறு.310), பௌவநீர் துறைவன் (நற்.291), என்றும், புலம்பன் என்ற சொல்லாடல் மெல்லம் புலம்பன் (அக330) எனவும் சுட்டப்பெற்றுள்ளன.
உலோச்சனாரின் பாடலடிகள் தலைவன் செல்வ வளமிக்க கடற்கரை நாட்டிற்கு உரிமையுடையவன் என்பதைப் புலப்படுத்தி நிற்கின்றன. இந்த வகையில் பார்க்கும்போது நெய்தல் நிலத்தில் மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் இவர்களே என்பது தெளிவாகிறது. (நற்.363)
பரதவருக்கிடையேயான பொருளாதார நிலை
பரதவர்களைப் பற்றிச் சுட்டும் பாடல்கள் கடல்மேம் பரதவர் (நற்.4), பெருவலைப் பரதவர் (நற்.63), மீன்எறிப் பரதவர் (நற்.45), வரிவலைப் பரதவர் (நற்.111), கொடுந்திமிற் பரதவர் (குறு.304), இனமீன் வேட்டுவர் (அக.270), வன்கைப் பரதவர் (நற்.303), கொலைவெம் பரதவர் (அக.210), வல்லில் பரதவர் (அக.340), வான்திமிற் பரதவர் (நற்.388), பனித்தலைப் பரதவர் (அக.140) எனச் சுட்டப்பெறுவது ஆராய்வதற்குரியதாக உள்ளது. மேற்கண்டவற்றை நோக்கும் போது குறியீட்டு நிலையில் பதிவு செய்யப்பெற்றுள்ளமை தெளிவாகிறது. இவற்றைப் பண்பு, பெருமை, வடிவம் என்ற மூன்று நிலைகளில் பகுக்க முடிகிறது. இவர்கள் பெரும்பாலும் தங்கள் தொழில் முறையினால் கடற்மேற் சென்று மீன்வேட்டம் செல்லும் நிலையில் கடல்மேம் பரதவர், மீன்எறிப் பரதவர், கொலைவெம் பரதவர், வல்வினைப் பரதவர் என்று செய்யும் தொழிலினை வைத்துச் சுட்டும் பண்புகளை அடிப்படையாகக் கொண்டும், தொழிலுக்குப் பயன்படுத்தக்கூடிய கருவிகளின் பொருட்டுப் பெருவலைப் பரதவர், வரிவலைப் பரதவர், கொடுந்திமிற் பரதவர், வான்திமிற் பரதவர், திமிலோன் என்றும், உருவத்தோற்றத்தினைக் கொண்டு வன்னைப்பரதவர், முடிமுதிர் பரதவர், பனித்தலைப் பரதவர், என்றும் பலவாறாகப் பதிவுசெய்யப் பெற்றுள்ளமை குறிக்கத்தக்கது. மேற்கண்ட சொல்லாடல்களின் பதிவுகளைக் கொண்டு நோக்கும் போது அவர்களின் தொழிற்கருவிகள், பொருளாதாரநிலைகள், குணங்கள் போன்றவற்றால் குறிக்கப் பெற்றுள்ளமை தெளிவாகிறது. இதன்வழி நெய்தல் நிலத்தில் வாழும் பரதவமக்கள் தாங்கள் செய்யும் தொழிலாலும், பயன்படுத்தப் பெறுகிற கருவிகளாலும், குணநலன்களாலும் அடையாளப்படுத்தப் பெற்று புனையப் பெற்றிருப்பது தெளிவாகிறது.
தொழில் - பொருளாதார வெளிப்பாடு
பரதவர்களிலேயே தொழில் அடிப்படையில் சிலர் மீன் பிடிப்பவர்களாகவும், உப்பு விளைவிப்பவர்களாகவும், கடலில் மூழ்கி முத்து எடுப்பவர்களாகவும், சங்குவளை அறுத்து விற்பனை செய்பவர்களாகவும், கடல் வாணிபம் செய்பவர்களாகவும் எனப் பல் நிலைகளில் காணப்படுகின்றனர். இவர்களுள் மீன் பிடிப்பவர்கள் பல வேறுபாடுகள் காணப்பெறுவதை அறிய ஏதுவாக பதிவுகள் நெய்தல் பாடல்களில் உள்ளன. பரதவர்கள் பயன்படுத்திய மரக்கலன்கள், வலைக்கருவிகள் ஆகியவற்றை வைத்து நோக்கும்போது அவர்களுக்கிடையே காணப்பெறுகின்ற பொருளாதார நிலையினை ஓரளவு கணிக்க இயலும். இவர்கள் அம்பி, தோணி, திமில், நாவாய், வங்கம், கலம் என வெவ்வேறு வடிவம் கொண்ட மரக்கலன்களைப் பயன்படுத்தியுள்ளனர். இவற்றுள் ஆம்பி, தோணி, திமிழ் போன்றவற்றைப் பயன்னடுத்திக் கடலின் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள தொலைவிற்கு மடடும் சென்று மீன் வேட்டை செய்துள்ளனர். இம்மரக்கலன்கள் பற்றியும் இதனைப் பயன்படுத்தி மீன்வேட்டம் சென்று பிடித்து வந்த மீன்கள் பற்றியும் ‘பொருள்சார் பண்பாட்டில்’ ஆராயப்பெற்று மொழியபபெற்றுள்ளன.
இவ்வாறாக, நெய்தல் திணைப் பாடல்களில் காணலாகும் பொருள் சார் வாழ்வியலை இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|