தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
112.சங்க இலக்கியப் பாடல்களில் சூழலியல் நோக்கில் நீர்
ப. வீரக்குமார்
உதவிப் பேராசிரியர்,
பேரறிஞர் அண்ணா அறிவியல் கல்லூரி,
தாருகாபுரம், சிவகிரி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்
முன்னுரை
தமிழர் வாழ்க்கை தமிழகத்தில் நிலவிய ஐவகை நிலப்பாகுபாட்டை ஒட்டித் திகழ்ந்தது. மலைப்பகுதிகள் குறிஞ்சியாகவும், காட்டுப்பகுதிகள் முல்லையாகவும், கடற்பகுதிகள் நெய்தலாகவும், வயல்பகுதிகள் மருதமாகவும், வறண்ட பகுதிகள் பாலையாகவும் வெளிப்பட்டன. தமிழகத்தில் பாலைப்பகுதி உருவாவதற்கு மலையும் காடும் திரிபடைதல் அடிப்படையாக அமைந்தது. நெய்தல் பகுதிகள் முதல் கரு உரிப்பொருள்களால் மேம்பட்டுத் திகழ்பவை. இப்பகுதியின் இயற்கையமைப்பு வாழ்க்கை முறை உயரினங்களின் நடத்தை நெறி போன்றவை சங்கப் பாடல்களால் தெளிவாகின்றன. இத்தகைய நெய்தல் திணைப் பாடல்கள் இரக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உரிப்பொருள் தெளிவாகுமாறு பல செய்திகளை நுணுக்கமாகப் புலப்படுத்துகின்றன. இரங்கலும், இரங்கல் நிமித்தமும் என்பது துயரம் வாய்ந்த வாழ்க்கை நிலையின் ஒரு கூறாகும். எனவே இரக்கம் பற்றிப் பேசும் நெய்தல் திணை பாடல்கள் நெஞ்சைக் கவர்பவையாகவும் நெகிழ்ச்சி தருபவையாகவும் விளங்குகின்றன. இருந்த போதிலும் உணர்வுகளுக்கு அப்பால் அறிவியல் நெறியில் அதாவது நெய்தல் திணைப் பாடல்களில் சூழலியல் நோக்கில் நீர் எவ்வாறு இடம் பெற்றுள்ளது என்பதனை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நீரின் பல்வேறு பெயர்கள்
அயம் - நீர் (ஐங், 264;3), துவலை - நீர்த்திவலை (நற், 142;5), நீர் - ஈரப்பண்பு (நற், 99; 1) நீரல் நீர் - சிறுநீர் (நற், 103;4), பிசிர் - நீர்த்துளி (நற், 67;10), பிதிர் - நீர்த்துளி (நற், 89;2), மழை - மேகம் (நற், 17;1), கமஞ்சூல் - மழைமேகம் (பதி, 11; 2), அளறு - நீர் (பாp, 2; 47), சலம் - நீர் (பரி,10; 90), தீநீர் - இனிய நீர் (பாp, 10; 111), பொகுட்டு - நீர்க்குமிழ் (பரி 11; 27), அமல் - தண்ணீர் (பதி, 17;11), எழிலி - மேகம் (ஐங், 304; 1), மலிர்நிறை - நீர் (பதி, 26; 8), அறல் - நீர் (ஐங், 341; 3), ஆம் - நீர் (ஐங், 223; 2), உறை - நீர்த்துளி (ஐங், 81; 3), துணிநீர் - தெளிந்த நீர் (ஐங், 224; 3), துவலை - மழைத்தூறல் (ஐங், 141; 2)
கடலின் வேறுபெயர்கள்
ஆழி, ஆர்க்கலி, வேலை, புணரி, முந்நீர், வாரிதி, சமுத்திரம், பௌவம், அத்தி, அலக்கர், பெருநீர், அம்பரம், உப்பு, வீரை, தோயம், தொன்னீர், தென்திரை, ஓதம், வெள்ளம், நேமி, வாரி, சலதி, அலை, பரவை, வாரம், கார்கோள், உவரி
நீரின் பெயர்க்காரணங்கள்
முந்நீர் - ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் ஆகிய மூன்றும் சேர்வது. கடல் - ஒரு காலத்தில் கடத்தற்கு அல்லாத நிலையில் இருந்த பொழுது அதன் பெயர். பரவை - பரந்திருக்கும் நீர்ப்பரப்பு, ஆழி - மிகவும் ஆழமானது. கார்கோள் - கடல்நீரில் இருந்து மழைமுகில் உருவாகும் என்ற அறிவியல் உண்மையை உணர்ந்ததால் ‘கார்கோள்’ என்றனர். பெருநீர் - மிகுதியான நீரை உடையது. உவரி - உப்பு நீர் நிறைந்த பகுதி. அலை - அலை, அலையாய் வீசுந்தன்மை உடையது. வெள்ளம் - பொங்கிவருதல். ஆதி - நீர்ப்பரப்பே இருந்தது என்ற வரலாற்று உண்மையை ஆதி என்றனர். பௌவம் - ‘உப்பு’ என்றும் ‘ஆழம்’ என்றும் பொருள் கொண்டது. தொன்னீர் - தொன்மையான நீர்நிலை. அருவி - மலை முகட்டுத் தேக்கநீர் குத்திட்டுக் குதிப்பது. ஆழிக்கிணறு - கடல் அருகில் தோண்டிக் கட்டிய கிணறு. ஆறு - பெருகி ஓடும் நதி. இலஞ்சி - குடிப்பதற்கும் வேறுவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம். உறைகிணறு - மணற்பாங்கான இடத்தில் தோண்டி, சுடுமண் (அ) சிமிண்ட்டினால் வளையமிட்ட கிணறு. ஊருணி - ஊர் மக்கள் உண்பதற்குப் பயன்படுத்தும் நீர்நிலை. ஊற்று - அடியிலிருந்து நீர் ஊறுவது. ஏரி - ஏர்த்தொழிக்குப் பயன்படும் நீர்நிலை. ஓடை - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர், எப்பொழுது பொசித்து வாய்க்கால் வழியாக ஓடும் ஒரு நிலை. கட்டுக்கிணறு - சரளை நிலத்தில் கல் வெட்டி செங்கலால் உள் சுவர் எழுப்பிய கிணறு. கம்வாய் - பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர். கண்மாய் - கண்ணாறுகளை உடையது. ஏந்தல் - மழை நீரை மட்டும் ஏந்தி நிற்பது. கலிங்கு - ஏரி முதலிய பாசன நீர்த்தேக்கம், உடைப்பு எடுக்காமல் முன் எச்சரிக்கையாகக் கற்களால் உறுதியாகக் கட்டப்பட்டுப் பலகைகளால் அடைத்துத் திறக்கக் கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு. கால்வாய் - ஏரி, குளம், ஊருணிக்கு நீர் ஊட்டும் வாய்க்கால் வழி. குட்டை - சிறிய குட்டம், கால்நடை குளிக்கும் நீர் நிலை. குண்டு - குளிப்பதற்கான சிறுகுளம். குமிழி - நிலத்தின் பாறையைக் குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச் செய்த குடைக்கிணறு. குமிழிஊற்று - அடிநிலத்து நீர் நிலமட்டத்திற்குக் கொப்பளித்து வரும் ஊற்று. குளம் - ஊரின் அருகே மக்கள் குளிக்கப் பயன்படுத்தும் நீர்நிலை. கூவம் - ஒழுங்கில் அமையாத கிணறு. கூவல் - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம். கேணி - தேக்கி வைக்கப்பட்ட பெரிய நீர்நிலை. சுனை - மலையில் இயல்பாய் அமைந்த நீர்நிலை. சேங்கை - பாசிக்கொடி படர்ந்த நீர்நிலை. தடம் - அழகாக நன்கு புறம் கட்டப்பட்ட குளம். தனிக்குளம் - கோயிலின் நாற்புறமும் சுற்றிய அகழி போன்ற நீர்நிலை. தாங்கல் - தொண்டை மண்டலத்தை ஒட்டிய பகுதியில் உள்ள ஏரியைக் குறிக்கும். திருக்குளம் - கோயிலின் அருகே நீராடும் குளம், புட்கரணி என்பர். தெப்பக்குளம் - ஆளோட்டியுடன் தெப்பம் சுற்றிவரும் குளம். தொடுகிணறு - ஆற்றின் உள்ளேயும் வெளியேயும் மணலைத் தோண்டி நீர்கொள்ளும் இடம். நடைகேணி - இறங்கிச் செல்லும் படிக்கட்டு அமைந்த பெரும்கிணறு. பிள்ளைக்கிணறு - குளம் ஏரியின் நடுவில் அமைந்த கிணறு. நீராழி - மைய மண்டபத்துடன் கூடிய பெரும்குளம். பொங்குகிணறு - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு. பொய்கை - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்ட நீர்நிலை. சிறை - தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை.
இலக்கியங்களில் நீர்த் தேங்கியிருக்கும் இடங்கள்
ஓதம் - நீர்ப்பெருக்கு (நற்., 117; 2), கயம் - பொய்கை, குளம் (நற், 22;9),. கழி - கடலை அடுத்த உப்புநீர்ப் பரப்பு (நற், 27;9), படு - நீர்நிலையாகிய பள்ளம் (நற், 188;1), பெருநீர் - கடல், பெரிய நீர்ப்பரப்பு (நற், 16;8), பௌவம் - கடல் (நற், 74;2), விழுநீர் - பெரிய நீர்ப்பரப்பு (நற், 84;4), அருவி - நீர்வீழ்ச்சி (பரி, 7;4), அழுவம் - கடற்பரப்பு (பரி, 18;3), ஒருநிலைப் பொய்கை - வற்றாத பொய்கை (பரி, 8;5), ஒடை - நீர்நிலை (பரி, 3;12), கயம் - நீர்நிலை (பரி, 7;23), கால் -நீர்ப்பாதை (பரி, 7;33), சாறு - ஊற்றுநீர் (பரி, 6;41), சென்னீர் - இயங்கும் நீரின் தன்மை (பரி, 8;16), கழி - நீர்நிலை (ஐங்; - 112;2), நீர்ப்பந்தல் - நீர்ப்பள்ளம் (ஐங், 304;2), பத்தல் - ஆநிரை அருந்த நீர் நிரப்பும் தொட்டி (ஐங், 304;2), புயல் - மழை (ஐங், 25;1), பெருநீர் - கடல் (ஐங், 180;1), மலிர்நிறை - நீர்வெள்ளம் (ஐங், 15;1), வெள்ளநீர் (ஐங் (358;1), துருத்தி - நீர்சூழ் நிலம் (ஆற்றிடைக்குறை) (பரி, 2;56), பிசிர் - ஊற்று நீர் (பரி, 6;38), வானிறை - நீர் நிறைந்த மேகம் (கார்மேகம்) (பரி, 2;56), வேலை - கடற்கரை (பரி, 19;18), நீத்தம் - வெள்ளம் (பரி 12;34), அகழி - நீர்க்கிடங்கு (பதி, 33;9), அகழி - கோட்டை சூழ் நீரரண் (பதி, 45;7), கழி - நீர்நிலை (பதி, 11;9), குட்டம் - ஆழமான இடம் (கடல்) (பதி, 86;9), கிடங்கு - அகழி (பதி, 20;17), நிறைமுதல் - நீர்ச்சால் (பதி, 15;10), நீரழுவம் - நதி (ஆறு) (பதி,21;36), நிறை - வெள்ளம் (பதி,28;12)
நீர்
புவியிலிருந்து சில கி. மீ. உயரம் வரை நீர் என்னும் காரணி, நீர்மமாகவோ (liquid), திண்மமாகவோ (solid) இருக்கும். நீர்க்கோளம் (hydrosphere) என்பது ஏனைய கோளங்களைவிட மாறுபட்டது. இதில் புவியிலுள்ள அனைத்து நீர்நிலைகளும் இடம் பெற்றுள்ளன. பெருங்கடல் (Ocean), கடல் (Sea), ஏரி (Lake), ஆறு (River), குட்டை (Pond), நிலத்தடி நீர் (underground water) ஆகிய கூறுகள் நீர் வகையில் அடங்கும். நீர், புவியமைப்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆவியாதல் வழியாக வளிமண்டலத்துடன் நீர் அமைப்புத் தொடர்பு கொண்டுள்ளது என்பது அறிவியலாரின் கருத்தாகும்.
நீரின் தேவை
சங்கப் பாடல்களில் நேரடிக் காட்சிப் பொருளாகவும், உணர்வு கலந்த குறியீடாகவும் நீர் விளங்குகிறது. அணையைக் கடந்த நீரைப் போலத் தலைவியின் பிரிவுத் துன்பத்தால் பொங்கும் கண்ணீர் சுட்டப்படுகிறது.
“துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி,
உடைத்து எழு வெள்ளம் ஆகிய கண்ணே?”
(ஐங். 358)
காண்பதற்கு அரிதான நீர்நிலைகளைப் பற்றிய குறிப்புகள் சில சங்கப் பாடல்களில் இடம் பெறுகின்றன. அங்குக் கட்புலனாகும் நீர், கானல் நீராக அமைந்து பொருட்சிறப்பைத் தருகிறது. குறிப்பாக நெய்தல் பாடல்கள் இத்தகைய அமைப்பில் சிறந்து விளங்குகின்றன.
“எறும்பி அளையின் குறும் பல் சுனைய”
(குறு. 12)
“வான் நீங்கு வைப்பின் வழங்காத் தேர் நீர்”
(கலி. 7)
“மல்கு சுனை புலர்ந்த நல்கூர் சுரமுதல்”
(குறு. 347)
“நெடுநீர் ஆம்பல் அடைப் புறத்துஅன்ன”
(குறு. 352)
“சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க”
(நற். 7)
“வண்புனல் தொழுநை வார்மணல் அகன்துறை”
(அகம். 59)
மனிதரும் விலங்கும் பயன்பெறப் பழந்தமிழ் மக்கள் கிணறுகள் தோண்டி நீரை பெற்றமை அறியப்படுகிறது.
“நெடு வெளிக் கோவலர் கூவல் தோண்டிய”
(அகம். 155)
“உடைக்கண் நீடு அமை ஊறல்”
(அகம். 399)
ஒரு தலைவன், தன் காதலியின் கண்கள், குளிர்ந்த நீரிலுள்ள மலரில் தேனை விரும்பி ஆராயும் வண்டுகளுக்கு இணையாகத் திகழ்வதைப் புகழ்ந்துரைக்கிறான்.
“என்ன ஆம் கொல் தாமே - ‘தெண் நீர்
ஆய் சுனை நிகர் மலர் போன்ம்’ என நசைஇ,
வீ தேர் பறவை விழையும்
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே?”
(அகம். 371)
ஓர் இரவுக்குள் நீரில் மூழ்கி இருந்த தாமரை மலர் அகற்றப்பட்டால் வாடுவதைப் போலத் தலைவி, தலைவனின் பிரிவுத்துயர் ஆற்றமாட்டாது வாடுவாள் என ஒரு தோழி உரைக்கிறாள்.
“ஓர் இரா வைகலுள் தாமரைப் பொய்கையுள்
நீர் நீத்த மலர் போல, தீ நீப்பின் வாழ்வளோ?”
(கலி. 5)
“நாற்றம் சால் நளி பொய்கை அடைமுதிர் முகை”
(கலி. 17)
மழை
இயற்கையாகவே புவியிலுள்ள நீர், ஞாயிற்று வெப்பத்தினால் ஆவியாகி மண்ணில் மேகமாகத் தங்கிவிடுகிறது. மரங்களிலிருந்து வெளியாகும் காற்று மேகங்களில் பட்டவுடன், புவியில் மழை பெய்கிறது. இதனால் மழைநீரை மிகவும் தூய்மையான நீராக அறிவியலார் குறிப்பர். “இயற்கையில் கிடைக்கும் பலவகை நீரில் மழை நீரே மிகவும் தூய்மையானது. ஆனாலும் மழை நீரிலும் சில மிதக்கும் மாசுகளும், ஆக்ஸிஜன், நைட்ரஜன் போன்ற வளிமங்களும், நைட்ரஸ் அமிலம், நைட்ரிக் அமிலம், அம்மோனியா, கார்பன்-டை-ஆக்சைடு போன்றவையும் கரைந்திருக்கலாம். இருப்பினும் சூரிய ஒளியால் சூடேற்றப்பட்டு, ஆவியாகிப் பின்னர் குளிர்ச்சியடைந்து மழை பெய்வதால் மழை நீரை இயற்கையிலேயே காய்ச்சி வடித்தல் மூலம் கிடைக்கும் நீராகக் கருதலாம்” என அறிவியல் களஞ்சியம், தொகுதி ஐந்து பகர்கிறது (603).
சங்கப் பாடல்கள் மழை பற்றிப் பல்வேறு செய்திகளைத் தருகின்றன. மழையின் இன்றியமையாமை கருதி இலக்கியப் பாத்திரங்கள், பல அறிவியல் குறிப்புகளைத் தம் கூற்றுகளில் வழங்குகின்றன.
‘மழை வந்து வளம் கொழிக்க வேண்டும்’ எனத் தன் மகள் உடன்போக்கில் தலைவனுடன் சென்ற வழியின் வறுமையை ஒரு செவிலித்தாய் நினைந்து புலம்புகிறாள். மழையின் அழகு, அது எழுப்பும் ஒலி, அது தரும் பயன் ஆகியவற்றையும் சங்கப் புலவர்கள் அறிவியல் சார்ந்து அளித்துள்ளனர்.
“நெடு வான் மின்னி, குறுந் துணி தலைஇ” (நற். 274)
“மண்கண் குளிர்ப்ப, வீசித் தண் பெயர்” (அகம். 23)
கடல்
அனைத்து வகையான பொருள்களையும் கடலில் கொட்டுவது புனிதம் என்று மரபுவழியாகப் பலர் கருதுகின்றனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடலில் கலக்கும் கழிவுகளைப் பட்டியலிட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முனைந்துள்ளனர். கழிவுகளால் கடல் உயிர்கள் அழிவதைப் பல சான்றுகளுடன் சூழலியலார் விவரித்து வருகின்றனர். சங்க நெய்தற் பாடல்கள் கடலை முதன்மையாக வைத்துப் பல்வேறு நீர்ப் பின்னணியைச் சுட்டுகின்றன.
“பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
அறு கழிச் சிறுமீன் ஆர மாந்தும்
துறைவன் சொல்லிய சொல் என்
இறை ஏர் எல் வளை கொண்டு நின்றதுவே” (ஐங். 165)
“தெண் கடற் சேர்ப்பனொடு வாரான்,
தான் வந்தனன், எம் காதலோனே!” (ஐங். 157)
பொறையன் என்பானின் படை வீரர்கள் அலை அடங்கிய கடல் போல இனிமையாகக் கண்மூடிப் போர் முடித்து உறங்கியமையை ஒரு சங்கப் பாடல் குறிக்கிறது. நெய்தல் திணைப் பாடல்களை இனங்காண்பதற்கு கடற்பகுதியே முதன்மைச் சான்றாக அமைகிறது.
“திரை தபு கடலின் இனிது கண் படுப்ப” (நற். 18)
“ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற்
பல் பூங் கானல் முள் இலைத் தாழை” (நற். 335)
ஆறு
ஆறுகள் அனைத்தும் நெடுங்காலம் முதல் புனிதமானவையாகக் கருதப் பெறுகின்றன. இன்றைய மக்கள் பெறுகின்ற பல நோய்களுக்கு ஆற்றுநீர் மாசு, அடிப்படையாக விளங்குகிறது. ஆறுகளை வணங்கி மகிழ்ந்து நாளைத் தொடங்கிய மக்கள் இன்று ஆற்று மாசு காரணமாக அல்லலுறுவதை அறியமுடிகிறது. பழந்தமிழர்கள் ஆறுகளைக் காப்பதற்கென்றே காவலர்களைப் பணியமர்த்தியிருந்த சிறப்பைச் சான்றுடன் திறனாய்வாளர்கள் புலப்படுத்தியுள்ளனர்.
பண்டைத் தமிழ் மக்கள் நீர்நிலைகளில் எவரையும் நீராடவோ, மாசுபடுத்தவோ விடமாட்டார். கட்டுக்காவலை மீறி மாசு செய்வோரைத் தண்டனை அளித்துத் திருத்துவர். இப்பணியை மேற்பார்வை செய்யும் காவலர் பற்றிய செய்தி இலக்கியத்தில் இடம் பெறுகிறது.
“எறிதிரை திவலை தூஉம்
சிறுகோட்டுப் பெருங்குளம் காவலன்” (அகம். 252)
நதிநீர் மாசுபாட்டில் பழந்தமிழ்ப் புலவர்களுக்கு இருந்த சமூக அக்கறை இவ்வரிகளில் தெளிவாகிறது.
சங்கப் பாடல்களில் காவிரி நீர் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. வீரக்கழல் அணிந்த பண்ணன் என்பானின், காவிரி ஆற்றுக்கு வடக்கில் உள்ள குளிர்ந்த குளத்தின் அருகில் வளரும் மா மரங்கள் பற்றிய செய்தி சங்கப் பாடல்களில் அறியப்படுகிறது.
“நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன்,
கள் கமழ், பொறையாறு அன்ன என்
நல் தோள் நெகிழ மறத்தல், நுமக்கே?” (நற். 131)
காவிரிக் கரை பொருந்திய வெள்ள நீரில் வாய் வைத்து எருமைகள் பருகும் காட்சி ஒரு பாடலில் தெளிவுபடுத்தப்படுகிறது.
“நாடு ஆர் காவிரிக் கோடு நோய் மலிர் நிறைக்
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள்” (அகம். 341)
“பல் நீரால் பாய் புனல் புரந்து ஊட்டி, இறந்த பின்,
சில் நீரால் அறல் வார, அகல் யாறு கவின் பெற” (கலி. 34)
அழகு மிகுந்த வண்டுகள் ஆரவாரம் செய்து இயற்கையைப் பெருமைப்படுத்தும் காட்சியை வையை ஆறு குறித்த ஒரு பாடலில் அறியமுடிகிறது. நீர்வளத்திற்குப் பரிபாடல் தரும் பல அழகிய வருணனைகளும் குறிக்கத்தக்கவை.
“வண்ண வண்டு இமிர்ந்து, ஆனா வையை வார் உயர் எக்கர்
தண்அருவி நறு முல்லைத் தாது உண்ணும் பொழுதன்றோ” (கலி. 35)
நீர்த்தூய்மை
உலகம் தோன்றி உயிர்கள் வாழத் தொடங்கிய போது புவி மிகவும் தூய்மை பெற்றிருந்தது. நிலம் தன் முழுப்பயனைத் தந்து செழித்து விளங்கியது. நீரும், காற்றும் மாசடையாமல் இருந்தன. குறைந்த மக்கள்தொகையுடன் இவ்வுலகம் அமைந்தமையால் மக்கள் உலகின் பயனைப் போதிய அளவுக்குத் துய்த்து மகிழ்ந்தனர். அன்று மாசுபடுத்தும் தொழிற்சாலைகளே இல்லாத நிலை காணப்பட்டது. முறை தவறாமல் பருவமழை பெய்தது. புவி, தன் விளைச்சலைப் பெருமளவில் தந்து சிறப்படைந்தது. இதனால் மக்கள் மிக மகிழ்ச்சியுடன் அனைத்துத் தேவைகளும் நிரம்பப் பெற்றவர்களாக வாழ்ந்தனர்.
மக்கள்தொகை பெருகியமையால் சிற்றூர் மக்கள், மெல்ல நகரம் நோக்கிக் குடிபெயர்ந்தனர். நகர்ப்புறங்களில் தொழில் தேடத் தொடங்கினர். இதனால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. குடிநீருக்கே துன்புற்ற மக்கள் காலப்போக்கில் மாசு கலந்த நீரிலும் வாழ முற்பட்டனர். நீர்நிலைகள் அனைத்தும் கழிவுநீர்க் குட்டைகளாக மாறின. தொழிற்சாலைக் கழிவுநீர், வீட்டுக் கழிவுநீர், பொதுக்கழிப்பிட நீர் போன்றவை நீர்நிலைக்குச் செல்வதால் நீரில் மாசு ஏற்பட்டது. அங்கு வாழும் உயிரினங்களும் காலப்போக்கில் அழியும் நிலை உருவானது.
நீர்வளம்
நிலத்தில் வளரும் பயிருக்கு நீரூட்டி வளர்ப்பன நீர்நிலைகளாகும். தமிழகப் பரப்புகளில் பாய்ந்து பெருகிய நீர்ப்பகுதிகள் காலமாற்றத்தால் திரிபடைந்து பாலைநிலம் போலாகிவிட்டன. எனினும் பாலைநிலத்தில் சிறிது நீரையும் கண்டு பாடியுள்ளனர் சங்ககாலக் கவிஞர்கள். கவிஞர்கள் உள்ளம் எதையும் தாழ்வாகக் கருதாத பக்குவம் பெற்றதாகையால் வற்றிய பகுதியைக் கூட வளம் நிறைந்த பகுதியாக உயர்த்திப் பேசுவதைப் பல படைப்புகளில் அறியமுடிகிறது. திறனாய்வாளர்கள் பழந்தமிழகத்தின் பெருமையைப் பற்றிக் கூறுமிடங்களில் நீர் நிரம்பிய பகுதிகளையே முதன்மைப்படுத்திப் பல தரவுகளைத் தந்துள்ளனர். “தொண்டை நாட்டில் உள்ளது பாலாறு; பாண்டி நாட்டில் உள்ளது தேனாறு; சேர நாட்டில் நெய்யாறு உண்டு. பாலாறு என்ற பெயர் பெற்ற ஆற்றிலே நீர் சுரக்கும்; தேனாற்றிலே நீர் சொட்டும்; நெய்யாற்றிலே நீர் துளிர்க்கும்; பாலையும், தேனையும், நெய்யையும் அளவறிந்து ஊட்டிப் பிள்ளையைப் பேணி வளர்க்கும் தாய்போல் ஊற்றுப் பெருக்கால் நிலத்திற்கு நீரூட்டி நலம் பயக்கும்” என்று ரா. பி. சேதுப்பிள்ளை ‘ஆற்றங்கரையினிலே’ என்ற நூலில் கூறுவார் (ப. 10). ஆறுகளைச் சிறப்புப் பெயரிட்டு வழங்கியவர் தமிழ்நாட்டார் என்பது நோக்கத்தக்கது. சான்று: காவிரி, வையை போன்றவை.
இவ்வாறாக, நிலத்தைப் பண்படுத்தி நீர் வளமும், பயிர்ச் செழிப்பும் பெறுவதற்கான வழிமுறைகளைச் சங்கப் புலவர்கள் செய்யுள்களில் பதிவு செய்துள்ளனர். சமுதாய வாழ்க்கையின் பல்வேறு நோக்கங்களைச் செயல்படுத்த மனிதர்களின் வாழுமிடம் பெருந்துணை புரிகிறது. அனைத்துக் கழிவுகளையம் கடலில் கொட்டும் சடங்கை மக்கள் பல காலமாக மேற்கொண்டிருந்தமையால், மரபு வழியாகவே மாசுகள் நீரில் கலந்துவிட்டன. பண்டைத் தமிழர்கள் நீர்நிலைகளில் எவரையும் இறங்கவிடாமல் தண்டனைகள் அளித்துப் புவி மாசடையாமல் காத்துள்ளனர்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.