தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
113.ஆத்திசூடி - புதிய ஆத்திசூடி கட்டமைப்பு ஒப்பீடு
வே. தீனதயாளி
முனைவர் பட்ட ஆய்வாளர்,
பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
முன்னுரை
இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாகக் கருதப்பெறுவது ஒப்பிலக்கியம் ஆகும். இந்த ஒப்பிலக்கியம் செழுமையான தனித்துறையாக ஏற்கப் பெற்று வளமான ஆய்வுகளுக்குக் களமாக வளர்ந்திருக்கின்றது. ஒத்த தன்மைகள், தாக்கங்கள் என்று தொடங்கி அடிக்கருத்து, சிக்கல், நடையியல் என நுணுக்கமாக ஆராய்ந்து புதிய பரிமாணங்களை அடையாளம் காணும் ஒப்பற்ற துறை ஒப்பியலக்கியம். ஒரு மொழிக்கு இடையேயும் அல்லது இரு நாடு, இரு மொழிகளுக்கு இடையேயும் ஒப்பிடுவது ஒப்பீட்டு எல்லைக்குள் வரும் என்று கருதப்பெறுகிறது. அவ்வகையில் ஔவையார், மகாகவி பாரதியார் ஆகியோர் எழுதிய இரு ஆத்திசூடிகளின் கட்டமைப்பினை இந்த ஆய்வுக்கட்டுரை ஆராய்கின்றது.
காலச்சூழல்
ஔவையார் சோழர் காலமாகிய பனிரெண்டாம் நூற்றாண்டில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை ஆகிய நூல்களை எழுதிப் புகழ்பெற்றவராவர். இவர் காலத்து மக்களுக்கு வேண்டிய அறங்களை அவ்வப்போது வேகமறத் தெளிந்து ஆறு இருகரைகளைத் தொட்டுக் கரையை மீறாது தெளிந்த நீரோடை போல அறம் பாடினார். ஆனால், மகாகவி பாரதியார், ஔவையார் இயற்றியதை அடியொற்றி அவ்வகைத்தாய் அவரின் அறமொழிகளில் பெரிதும் ஈடுபாடு கொண்டு கல்வி கற்றவர் மட்டுமின்றி நூல்கள் கல்லாதோரும் உணரும் வகையில் விடுதலை வேண்டி நின்று அதனைப் பெறமுடியாத சமூகத்துக்கு மத்தியில் அவ்வறம் மட்டும் போதாத நிலையில் பழமை, பழமை என்று ஒரே ஓர் அவ்வணையா விளக்கு மட்டும் கொண்டிருத்தல் போதாது. நமது தமிழர்களுக்குப் புதிய அறநெறிக்கு ஏற்பப் புதிய ஆத்திசூடி வேண்டும் எனப் படைத்திட்டார். இது கட்டற்ற காற்றைப் போல் புதிய காட்டாற்று வெள்ளம் எவ்வாறு கரை கடந்து சீறிப் பாய்ந்து வருமோ அதுபோல இருந்தது; உணர்ச்சியற்ற மரத்துப்போன மக்களைத் தட்டி எழுப்பிய பெருமை இதனைச் சாரும் எனில் அது மிகையாகாது.
கடவுள் வாழ்த்து ஒப்பீடு
ஔவையார் தமது ஆத்திசூடியில்,
“ஆத்திசூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோ மியாமே”
எனக் கடவுள் வாழ்த்தை அமைக்கின்றார். இதில் சிவபெருமான் விரும்பிய விநாயகக் கடவுளை நாம் பலகாலும் துதித்து வணங்குவோம் என இருவரியில் தாம் போற்றும் இறைவனைத் துதித்து முடிக்கின்றார். ஆனால், மகாகவி பாரதியார் தமது புதிய ஆத்திசூடியில்,
“ஆத்திசூடி இளம்பறை அணிந்த
மோனத்திடுக்கும் முழுவெண் மேனியான்
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்பேன்
முகமது நபிக்கு மறையருள் புரிந்தேன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தில்
உருவகத் தாலே உணர்ந்து உணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவோம்
அதனிலை கண்டார் அல்லலை அப்பற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்”
எனக் கடவுள் வாழ்த்தை அமைக்கின்றார். இதில் வள்ளுவன் சொல்லாத, கம்பன் கூறாத, இளங்கோ இயம்பாததை, மகாகவி பாரதியார் போற்றும் காளிதாசன் போன்ற பழம்பெரும் புலவர்களெல்லாம் புகழாததைப் புதுமையாகக் கூறியுள்ளார். மேலும், தாம் கூறிய பரம்பொருள் வாழ்த்து ஒன்றின் மூலம் அவரின் புரட்சிப் புதுமைகள் தெளிவாகும். சிவனென்றும், விஷ்ணு என்றும், அல்லா என்றும், ஏசுவென்றும் பலப்பல மதத்தினர் உணர்ந்தும், உணர்தற்கு இயலாததும் பரவிடும் பரம்பொருள் ஒன்றே எனப்பெறும். முதலும் களப் பசியுமான கவிஞன் மகாகவி பாரதியாரே ஆவான்; அல்லலை அகற்ற அமரவாழ்வெய்த அதனிலைக் கண்டு அதனருள் வாழ்ந்து அருமையாக வழிகாட்டினார். இவ்வாறு இந்நாளின் தேவையை இனிய வகையில் நிறைவும் செய்திட்டார். உண்மையில் புதிய ஆத்திசூடி எந்த ஒரு மதக் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்க முன்வரவேண்டும். ஆகவே, சர்வமத சம்மந்தப்பட்டதாகவும் எல்லா மதத்திற்கும் அப்பாற்பட்ட உருவகத்தால் உணர முடியாத அறிவுத் தெய்வமாகவே புனைந்திருக்கிறது எனக் கூறுதல் மிகவும் பொருத்தமுடையதாகும்.
வரிசை முறை ஒப்பீடு
ஔவையார் இயற்றிய ஆத்திசூடி, மகாகவி பாரதியார் புதிய ஆத்திசூடி இயற்றுவதற்கு அடியெடுத்துக் கொடுத்தது. சுருங்கக் கூறி விளங்க வைக்கின்ற அந்த உத்திமுறை பிடித்ததால் தானும் அவர் வழியைப் பின்பற்றி மக்களுக்கு அறநெறியை அறிவுறுத்தினார்.
குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் முறையில் அகரவரிசைப்படி ஆத்திசூடி அமைக்கப் பெறும். குழந்தைகளின் உள்ளத்துப் பசுமரத்தாணி போலப் பதிக்கும் எண்ணத்தில் சிறந்த கருத்துக்களும் கூறப்பெறும். ஒரே மாங்காய் என்பது போல உயிர் உயிர்மெய் எழுத்து அமைத்துக் கற்பித்தல் அதுவே அறிவுரையாக அமையும் திறனும் ஒருங்குடைய அதை ஔவையார் அறிமுகப்படுத்தியுள்ளார். அதனால் ஔவையாரைப் பின்பற்றி மகாகவி பாரதியாரும் புதிய ஆத்திசூடியை இயற்றியுள்ளார்.
ஔவையார் வரிசைமுறை
அ முதல் ஃ வரையும் கூறிப்பின்னர்
‘க’ முதல் ‘ன’ வரை உயிர்மெய் எழுத்தமையக் குறிப்பின்
‘க’ முதல் ‘கோ’ வரையும் ‘ங’ கரம் விட்டுப்பின்
‘ச’ முதல் ‘சோ’ வரையும் ‘ஞ’ கரமும் விட்டு
‘ட’ கரமும் விட்டு ‘ண’ கரமும் விட்டு
‘த’ முதல் ‘தோ’ வரையும் ‘ந’ முதல் நேர்வரையும்
‘ப’ முதல் ‘போ’ வரையும் ‘ம’ முதல் ‘மொ’ வரையும்
‘அ’ விட்டு ‘ர’ கரமும் ‘ல’ கரமும் விட்டு
‘வ’ கரத்தை ‘வு’, ‘உ’ என்றும்
‘ஆ’, ‘ஊ’ என்றும்
‘வொ’, ‘ஒ’ என்றும்
‘வோ’, ‘ஓ’ என்றும் கூறி அமைத்துள்ளார்.
ழகர, ளகர, றகர, னகரங்கள் மொழிமுதல் வாராமையில் அதனை விட்டுக் கூறியுள்ளார். மேலும் கௌ முதலிய சென்றுவரும் என்ற எழுத்தும் மொழிமுதல் வாராததால் விடப்பெற்றுள்ளன.
மகாகவி பாரதியார் வரிசை முறை
அ முதல் ஔ வரையும் கூறி ஃ நீக்கியுள்ளார்
க முதல் ன வரை உள்ள உயிர்மெய் எழுத்துக்கள் முதற்கூறாது
ச, கா மெய் முதல் சௌ வரையும்
ஞ கரத்தில் ஞ, ஞா, ஞி, நெ, நே என்பன மட்டும் அமைய வந்து
பிற நீக்கியுள்ளார்
ட் ண கரம் நீங்கி த முதல் தௌ வரையும்
ந முதல் நோ வரை நௌ நீங்கலாக இயற்றியுள்ளார்
ப முதல் போ வரையும் பை, பௌ நீங்கவும்
ம முதல் மௌ வரை தமை மௌ முதலிய நீங்கவும்
ய கரத்தில் ய, யா, யௌ என்பது மட்டும்
ர கரத்தில் - ர, ரா, ரி, ரு, ரூ, ரே, ரோ, ரௌ என்பன மட்டும்
ல கரத்தில் - ல, லா, லீ, லு, லோ, லௌ என்பன மட்டும்
வ கரத்தில் - வொ, வோ என்பன நீங்க ஏனையவும்
ழ கரமும் ள கரமும் ற கரமும் ன கரமும் முற்றிலும்
நீக்க ஏனைய எழுத்துக்கள் கொண்டு மகாகவி பாரதியார் புதிய ஆத்திசூடியைப் படைத்துள்ளார்.
ஔவையார் மீது மகாகவி பாரதிக்கு அளவுகடந்த மதிப்பு
நல்லிசைப் புலவர் ஔவையாரின் கவிவளத்தைப் பல கவிஞர்கள் பாராட்டியுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஔவையார் ஆத்திசூடி மீது பெரும் மதிப்புக் கொண்டு தானும் அவ்வாறே புதியது ஒன்று படைத்திட்ட இந்நூற்றாண்டின் சிறந்த கவி மகாகவி பாரதியார் ஆவார்.
ஔவையார் பாடிய கொன்றை வேந்தனில் உள்ள முதல் அடியாகிய அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற முதல் வரியில் உள்ளந் தோய்ந்து, அவர் இளமையிலேயே அன்னை என்ற பெருந்தெய்வத்தை இழந்தவராகையால் தமது சுயசரிதையில்,
“உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவளென் றறியீரோ! வணங்கிக் கேட்பீர்
பண்டாமிச்சி ஔவை அன்னையும் பிதாவும்
பாரிடைமுன் னறி தெய்வம் என்றாள் அன்றோ”
என்ற ஔவையின் நன்மொழியைப் பொன்னே போல் போற்றி நின்றவர்.
ஔவையார் வெறுமென நூலாசிரியர் மட்டுமல்ல. அவர் காலத்திலே அவர் ராஜநீதியில் மிகவும் வல்லவரென்றும், அவர் சிறந்த ஆத்மஞானி. தியோக சித்தியான உடம்பை முதுமை, ரோவு சாவுகளுக்கு இரையாகாமல் காப்பாற்றி வந்தார் என்பதனை,
“மாசற்ற கொள்கை மனத் தமைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு”
என்ற அடி எடுத்துரைக்கிறது. இதில், சுத்தமான, பயமற்ற, கபடமற்ற, குற்றமற்ற, பகையற்ற எண்ணங்களை நிறுத்திக் கொண்டால் உடம்பில் தெய்வத்தன்மை அதாவது தன்மை விளங்கும் என்றும் பொருள்பட ஔவையார் பாடிச் செல்ல, அக்கொள்கைப்படி எழுதிய மகாகவி பாரதியார் அதனை உலகுக்குப் பறைசாற்றினார்.
ஔவையாரின் மேல் மகாகவி பாரதிக்கு மிகுந்த மதிப்புண்டு; அதனால்தான் தமிழ்நாட்டின் மற்றச் செல்வங்களையெல்லாம் இழந்துவிடப் பிரியாமல் என்றும் நம்மிடம் யாரேனும் கேட்டார்களாயின் மற்றச் செல்வங்களையெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மீண்டும் சமைத்துக் கொள்ளும் ஔவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒரு போதும் சம்மதப்பட மாட்டோம்; அதுமட்டும் சமைத்துக்கொள்ள இயலாத தனிப் பெருஞ்செல்வமாகும் எனக் கூறுவது பொருத்தமுடையதாகும்.
புதிய சிந்தனைகள் ஒப்பீடு
‘புதிய ஆத்திசூடி’ என்ற மகாகவி பாரதி செய்த அறநூல்கள் பெயரே நமக்குப் பல புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கின்றன. ஔவையார் செய்த ஆத்திசூடி என்ற பழைய அறநூலின் பெயரைத் தம் நூலுக்கும் சூட்டிக் கொண்டமையால் மகாகவி பாரதி பழமைக்கும் பகைவர் அல்லர் என்பது தெரிகிறது. ஆனால், பழைய ஆத்திசூடி இன்றைய தேவைக்கும் போதவில்லை என உணர்ந்து புதிய ஆத்திசூடியைப் படைத்துக்கொள்ள மகாகவி பாரதியார் தயங்காமல் புதியது படைத்தார். மகாகவி பாரதி பழைய புதுமை என்ற இருநிலைகளில் உள்ள மாறுதலைத் தெளிவுபடுத்துகின்றார். பழமை போற்றப் பெற வேண்டும்; பாரம்பரியம் காக்கப்பெற வேண்டும். ஆனால், இன்றையத் தேவைக்குப் புதியனவற்றைப் புகுத்தப் பயப்படக்கூடாது என்பதுவே மகாகவி பாரதியின் கட்சியாகும். இவ்வாறு பழமைக்கும், புதுமைக்கும் அழகும் அருமையும் மிக்க வலிய பாலம் ஒன்றை வளமாக அமைத்துத் தந்தவர் மகாகவி பாரதியார் ஆவார்.
பழமையைப் பழமைக்காக விரும்பும் பழக்கத்தைத் தள்ளி மிதித்தவர். பொருளின்றிப் பழமைப்பித்து கொண்டோரைக் கடுமையாக மகாகவி பாரதியார் சாடுகிறார்.
“பழமை பழமையென்று
பா வனை பேசலன்றிப்
பழமை இருந்தநிலை கிளியே
பாமர ரேதளிவார்?” (நடிப்புச் சுதேசிகள்)
என்பதனால் அறியமுடிகிறது.
இவ்வாறாக, ஆத்திசூடி இயற்றிய ஔவையார் தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் ஏற்கப்பெற்ற பெருமை வாய்ந்த நீதிநூலை இயற்றியவராவார். தமிழில் சிறிது பயிற்சியுடையார் எவரும் ஔவையாரின் அறநூல்களில் ஒன்றையாவது படித்தேயிருப்பர். பல அற நூல்களின் சாரமாகவுள்ள அறங்களும் ஆத்திசூடியில் சிறுசிறு சொற்றொடர்களில் தெளிவுற அமைக்கப் பெற்று விளங்குகின்றன. இளம்பருவத்தினரும் எளிமையாக் கற்றுக்கொள்ளும் தன்மையினைக் கொண்டது. இந்த ஆத்திசூடியாவும் அகரம் முதலிய எழுத்துகளை முறையே முதலில் உடையனவாக அவற்றின் சூத்திரம் போலும் சொற்றொடர்கள் அமைந்துள்ளன.
அதேபோன்று மகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி மகாகவி பாரதியாரின் சிந்தனைகள் அனைத்தையும் அடக்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்லிவிடலாம். மகாகவி பாரதியிடத்துக் கவித்திறமும் விஞ்சி நிற்கிறது, கவி உள்ளம் கனிந்து நிற்கிறது. அதுபோலவே கருத்துக்களும் நிறைந்திருக்கின்றன. மகாகவி பாரதியின் பாடல்களில் அறக் கருத்துக்கள் கவித்துவத்தோடு கலந்திருக்கின்றன. ஆனால், ஆத்திசூடியோ மகாகவி பாரதி கருத்துக்களின் உயிர் எனவும் தனது அனைத்துப் பாடல்களின் விளைவாகவும் தனிச்சுனை போலவும் அமைந்து இருக்கிறது எனக் கூறினால் மிகையாகாது. இந்நிலையில் கட்டமைப்பு ஆய்வு அமைகிறது.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.