தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
114.சிவவாக்கியர் பாடல்களில் தமிழ் மரபுச் சிந்தனை
முனைவர் .சௌ. வீரலெட்சுமி
முதுநிலை விரிவுரையாளர், தமிழ்த்துறை,
சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம்,
தஞ்சோங் மாலிம், மலேசியா.
முன்னுரை
சிவவாக்கியர் தமிழகச் சித்தர் மரபைச் சேர்ந்தவர். சிவவாக்கியர் ‘சிவவாக்கியம்’ எனும் நூலை இயற்றியுள்ளார். சிவவாக்கியர் பாடல்களில் சமய, சமூக சீர்திருத்தக் கருத்துக்களில் பொதுத்தன்மையைக் காண முடிகின்றது. தமிழ்ச் சிந்தனை மரபின் பரிமாணத்தைச் சிவவாக்கியர் பாடல்களில் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
காலச்சூழல்
சிவவாக்கியர் வாழ்ந்த காலம் குறித்து, தெளிவான வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் அவர் பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு பார்க்கும்போது அவர் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகயிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இக்காலகட்டத்தில் தமிழகத்தில் வேற்றரசர்களின் படையெடுப்பு நிகழ்ந்தது. இக்காலகட்டத்தில் வேதியர்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இதனால் வைதிக சடங்குமுறைகள் பெருகின. மக்களிடையே பிரிவினையும் அறியாமையும் அதிகரித்தன. இந்நிலையில் சிவவாக்கியர் சமயத்திலும், சமூகத்திலும் நிலவிய பிற்போக்குத்தனத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தார்.இவர் வாழ்ந்த காலச்சூழலாலனது பண்பாட்டு மாற்றம் நிகழ்ந்த தருணத்தில் இருந்தமையால் இவர் சிந்தனைகளில் சீர்திருத்தக் கருத்துக்களைக் காண முடிகிறது.
இறைக்கொள்கை
சமயங்களானது இறைக்கொள்கையை மையமாகக் கொண்டே இயங்குகின்றன. இருவேறுபட்ட சமயங்களுக்கிடையேயும், சில வேளைகளில் ஒரு சமயத்திற்குள்ளேயும் இறைக்கொள்கை குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும். சிவவாக்கியர் தமிழகத்தில் நிலவிய சைவ, வைணவ வேறுபாட்டை நீக்க விரும்பினார். எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் ஒருவனே என்று கூறினார்.
“தில்லை நாயகன் அவன்; திருவரங்கனும் அவன்
எல்லையான புவனமும் ஏக முத்தியானவன்” (பா.55)
என்று சிவன், திருமால் என வேறுபாடு கிடையாது. இந்த உலகம் முழுவதும் நிறைந்திருக்கக் கூடிய இறைவன் ஒருவனே என்று கூறுவதன் வாயிலாக சிவவாக்கியர் ஓர் இறைக்கொள்கையுடையவர் என்றறிய முடிகிறது.
வழிபாடு
அனைத்துப் பொருட்களிலும் இறைவன் இரண்டறக் கலந்திருக்கிறான் என்று எண்ணும் சிவவாக்கியர் குறிப்பிட்ட வழிபாட்டுச் சடங்குகளை மேற்கொண்டால் தான் இறைவனை அடையலாம் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
புறவழிபாடு
சிவவாக்கிய புறவழிபாட்டு முறைகளில் நாட்டம் கொண்டவராக இல்லை. அவரவர்க்குள்ளேயே இறைவன் இருக்கும் போது கோவில்களுக்கும், குளங்களுக்கும் சென்று இறைவனை வழிபடுவதால் பயன் இல்லை என்ற எண்ணம் கொண்டவராக இருந்தார்.
சிவவாக்கியர், நம்முள்ளேயே இறைவன் இருக்க, கோவிலை ஏன் வழிபட வேண்டும் எனும் வகையில், “கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே” என்கிறார். இறைவனைத் தேடி மக்கள் காடு, மேடுகளிலும், மலைகளிலும் திரிந்து அலைகின்றனர். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் குறித்து மக்கள் அறியாமையில் இருக்கின்றனர் என்று கூறுகிறார் சிவவாக்கியர்.
“நட்ட கல்லைத் தெய்வம் என்று
நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொண மொண என்று
சொல்லும் மந்திரம் ஏதடா ?
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில் ?
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை அறியுமோ ?”
என்று வினவுகிறார் சிவவாக்கியர்.
சிவவாக்கியர் இறைவனை, சமய வரையறை கடந்த பரம்பொருளாகப் பார்த்தார். எனவே, சமயங்கள் காலம் காலமாகப் பின்பற்றும் வழிபாட்டு முறைகளில் அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. மனத்தில் இறைபக்தியும், சிந்தனையுமே இறைவனை அடையும் வழி என்று கருதினர். புறவழிபாட்டில் ஈடுபடுவது மக்களின் அறியாமையையே வெளிப்படுத்துவதாக உள்ளது என்றும், இத்தகு வழிபாட்டால் பயன் இல்லை என்றும் இவர் கருதினார்.
சடங்குகள்
சிவவாக்கியர் சமயங்களில் செய்யப்படும் பொருளற்ற சடங்கு முறைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. சமயத்துறையில் வேதியர் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினர். இதன் பொருட்டு அளவற்ற சடங்குமுறைகள் பெருகின. உண்மையான பக்தியின்றி, உயிரற்ற நடைமுறையாகப் பின்பற்றப்படும் சடங்குமுறைகளை சிவவாக்கியர் ஏற்றுக்கொள்ளவில்லை.
தீர்த்தம் ஆடுவதால் புண்ணியம் என்று கூறுகின்றனர், அப்படியானால் நாள்தோறும் நீரில் கிடக்கும் தேரை என்ன பெறும்? என்று சிவவாக்கியர் வினவுவதன் வாயிலாக, தீர்த்தம் ஆடுதல் போன்ற சடங்குமுறைகளின் போலித்தன்மையை அவர் சாடுவது விளங்கும். வேதம் ஓதுதல், அபிஷேக ஆராதனை செய்தல், தலயாத்திரை மேற்கொள்ளுதல் போன்ற சடங்குமுறைகளைச் செய்வதால் இறையின்பம் கிட்டாது என்கிறார். மேலும் இத்தகைய செயல்கள் மக்களின் அறியாமையை வெளிப்படுத்துமாறு அமைந்துள்ளனவே அன்றி பக்தியின் வெளிப்பாடு அன்று என சிவவாக்கியர் உரைக்கிறார். சிவவாககியர் தாம் வாழ்ந்த காலத்தில் சமயத்தில் பரவியிருந்த போலிச் சடங்குகளையும், மூடநம்பிக்கைகளையும் மக்களிடம் இருந்து களைய முயன்றார்.
சமயச் சின்னங்கள்
சமயச் சடங்குகளை எதிர்க்கும் கொள்கையுடையவர்களாக விளங்கிய சிவவாக்கியர் சமயச் சின்னங்கள் அணிவதையும் ஏற்றுக் கொள்வதில்லை. புறக்கோலங்களில் செய்யப்பெறும் இத்தகு அடையாளங்களால் பயனில்லை என்றே சிவவாக்கியர் கருதினார். இச்சின்னங்களை அணிவது வேடம் புனைவது போன்றது என்று கருதினார்.
சிவவாக்கியர், உடலில் திருநீறு பூசி இருப்பது மட்டும் பக்தியின் அடையாளமன்று, ஆனால் பக்தி என்று கூறி ‘வெந்த நீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர்’ என்று சாடுகிறார். வேதியர் அணிந்துள்ள பூணூலும், அவர்கள் வைத்திருக்கும் குடுமியும் பிறக்கும் போதே அவர்களுடனிருந்ததா? இல்லை அனைத்தும் அவர்களாகவே உருவாக்கிக் கொண்டது. இத்தகு சின்னங்களை அணிவதால் உயர்வும், இறையருளும் கிடைக்கப் போவதில்லை. இவை அனைத்தும் வேடங்களே அன்றி வேறொன்றும் இல்லை என்பதே சிவவாக்கியரின் கருத்து.
சிவவாக்கியர் புரிநூல் அணிவதையும், சமயச் சின்னங்கள் தரிப்பதையும் பக்தியின் அடையாளங்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறு அணிந்திருப்பவர்களை வேடதாரிகள் என்றும், இதனால் பயன் இல்லை என்றும் கூறுகின்றார்.
அகவழிபாடு
புறவழிபாட்டு முறையை ஏற்காத சிவவாக்கியர் அகவழிபாட்டு முறையை நாடினார். அவரவர்க்குள்ளேயே இறைவன் இருக்கும் போது வெளியே தேடி அலைவது வீண் என்று கூறினார். இறைவனைப் புற உலகில் பருப்பொருள் வடிவில் காண இயலாதெனின், அகக்காட்சி வாயிலாக இறைவனைக் காணக்கூடும் என்கிறார் சிவவாக்கியர். பரம்பொருள் உள்ளத்தின் உள்ளே நிறைந்திருக்கிறான் என்று அறிந்து காண்போர் அகக்காட்சி அனுபவம் பெறுவர் என்கிறார் சிவவாக்கியர். அகவழிபாட்டு முறையின் வாயிலாக இறையை அடையலாம் என்பது சிவவாக்கியரின் கொள்கையாக இருந்தது.
சமூகநோக்கு
சிவவாக்கியர் சித்தராகயிருந்த போதும், சமூகத்தின் மீதான அக்கறை கொண்டவர்களாயிருந்தார். சமயவாதிகள் பலர் சமுதாய அக்கறையற்றவர்களாக இருப்பர். ஆனால், சிவவாக்கியர் தாம் வாழ்ந்த சமூகத்தில் நிலவிய கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.
சிவவாக்கியர், அக்காலத் தமிழகச் சூழலில் மக்களிடையே சைவ, வைணவ வேறுபாட்டைப் போக்கி ஒற்றுமையுணர்வை வளர்க்கவும், சாதியின் பெயரால் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தும் குரல் கொடுத்தார். வேதியர்களின் ஆதிக்கப் போக்கையும், போலித் துறவியர்களின் செயலையும் கண்டித்தார். இல்லற வாழ்வு, இறைவனை அடைய தடையன்று எனவும், பெண்களைத் தீட்டு, பாவம் என்று ஒதுக்குதல் தவறு எனவும் எடுத்துரைத்தார்.
இராமநாமமும், சிவநாமமும் ஒன்று என்று சிவவாக்கியர் கூறியதில் மக்களிடையே இறையின் பெயரால் வேற்றுமை தோன்றக் கூடாது என்று எண்ணியமையை அறிய முடிகிறது.
படையெடுப்பின் போது மக்கள் பட்ட துயரங்களைத் தம் பாடல்களில் குருநானக் பதிவு செய்துள்ளார். வன்முறையாளர்களைக் கண்டனமும் செய்கிறார். நீதி, நேர்மை ஆகியவற்றின் உயர்வையும், அதன் தேவையையும் எடுத்துரைக்கிறார். பல அறக் கருத்துக்களை இவர் தம் பாடல்களில் கூறியுள்ளார்.
சாதிய நிலை
சாதியை அடிப்படையாகக் கொண்டு சமுதாயத்தைப் பாகுபடுத்துவதை குருநானக், சிவவாக்கியர் கண்டனம் செய்கின்றார். இறைவன் முன் அனைவரும் சமம் என்றிருக்க, சாதியைக் கொண்டு ஏற்றத்தாழ்வு கற்பிப்பது தவறு என்ற கொள்கையை உடையவராகயிருந்தார்.
பிறப்பானது அனைவருக்கும் பொதுவான தன்மையுடன் இருக்க, பிறப்பினடிப்படையில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பாகுபடுத்துதல் தவறு. பிறக்கும் போதே யாரும் பூணூல், குடுமி ஆகியவற்றுடன் பிறப்பதில்லை. பிறக்கும் போது அனைவர் மனமும் வெறுமையாகவே இருந்தது. எனவே பிறப்பில் உயர்வும் இல்லை, தாழ்வும் இல்லை என்கிறார் சிவவாக்கியர்.
சமுதாயத்தில் பிரிவினையை ஏற்படுத்தி இருந்த சாதிய அமைப்பைச் சிவவாக்கியரும், குருநானக்கும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்று கருதிய இவர்கள், புலால் உண்ணுதல் பாவம் என்று கூறி அவர்களை ஒதுக்குதல் தவறு என வலியுறுத்தினர். சாதியைக் கொண்டு மக்களிடையே ஏற்படுத்தப்படும் உயர்வு, தாழ்வு அறிவின்பாற்பட்டதன்று அறியாமையினால் ஏற்பட்டதே என்றுரைத்தார்.
போலித் துறவியரை எதிர்த்தல்
சமயத்தின் பெயரால் மக்களை ஏமாற்றக் கூடிய போலித் துறவியர்களை சிவவாக்கியர் வன்மையாகச் சாடினார். முக்தி தரும் வரத்தை அளிக்கிறேன் என்ற பெயரில் மக்களிடம் பணம் பறிப்பவர்கள், வயிறு வளர்ப்பதற்காகவே சாமி வேடம் பூண்டுள்ளனர். இத்தகையோர் நரகத்தில் வீழ்வர் என்கிறார் சிவவாக்கியர். பூசை செய்கிறேன் என்ற பெயரில் அந்நியர் பொருளின் மீது ஆசை கொண்டலைவோர் பாதகர்கள் என்கிறார். மக்களை ஏமாற்றி, தங்களை உயர்வானவர்களாகக் காட்டிக் கொள்ளும் போலித் துறவிகளை மதிக்க வேண்டாம் என்று சிவவாக்கியர் கூறுகிறார்.
இல்லறம்
சமயவாதிகளின் எண்ணப்படி இல்லறம் என்பது இறைவனை அடைவதைத் தடுக்கும் தடைக்கல். ஆனால் சிவவாக்கியர் இல்லற வாழ்வு ஒதுக்கப்பட வேண்டியது என்றோ, தேவையற்றது என்றோ கூறவில்லை. இறையின்பம் தேடிக் காவியுடுத்தி காடு, மேடுகளில் அலைவதைவிட, வருகின்ற விருந்தினரை வரவேற்று, விருந்தளித்து, உறவுகளோடு வாழ்ந்தாலே இறையின்பம் கிட்டும் என்கிறார் சிவவாக்கியர். இல்லறத்தில் இருந்து பசித்தவர்களுக்கு உணவு அளித்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் என்கிறார்.
தமிழகத்தில் நிகழ்ந்த வேற்றரசர் படையெடுப்பு, மக்களின் சமூக, பண்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தின. சிவவாக்கியர் , சமய, சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைத்தார். ஓர் இறைக் கொள்கையாளராக விளங்கிய இவர், புறவழிபாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. சடங்குகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் மூடத்தனங்களை இவர் சாடுகின்றார். சித்தர் கூட்டத்தைச் சேர்ந்த சிவவாக்கியரின் சமயவாதியாகயிருந்த போதும் சமூக நோக்கோடு சாதிய ஏற்றத்தாழ்வையும், வேதியர் ஆதிக்கத்தையும் கண்டித்தார்.
தமிழகத்துச் சித்தரான சிவவாக்கியர், சைவ, வைணவ வேறுபாட்டை நீக்கி, எங்கும் நிறைந்து இருக்கும் பரம்பொருள் ஒன்றே என்று ஓர் இறைக் கொள்கையாளராக விளங்கினார். அவரவர்க்குள்ளேயே இறைவன் இருக்கும் போது, இறையைத் தேடிக் கோயில், குளங்கள் சுற்றுவது வீண் என்று எடுத்துரைத்தார். சமயச் சடங்குகளும், விழாக்களும் போலித்தனமானவை என்பது சிவவாக்கியரின் எண்ணம். யாத்திரைகள் மேற்கொள்வது, தீர்த்தமாடுவது, வேதம் ஓதுவது ஆகியன பொருளற்ற செயல்கள் எனக் கண்டித்தார். சமயத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் போலித் துறவிகளை பாவிகள் என்று சாடினார். சமுதாயத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வையும், பெண்களைத் தீட்டு, பாவம் என்று ஒதுக்கி வைப்பதையும் எதிர்த்துக் குரல் கொடுத்தார்.
முடிவுரை
சமய வேறுபாடுகளைக் கடந்து எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் ஒன்றே என்று ஓர் இறைக் கொள்கையுடையவராக விளங்கினார் சிவவாக்கியர். மேலும், சடங்குகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் மூடத்தனங்களை இவர் சாடுகின்றார். சமுதாயத்தில் சாதிய ஏற்றத்தாழ்வையும், வேதியர் ஆதிக்கத்தையும் கண்டித்தார் சிவவாக்கியர். சமயத்தில் மலிந்திருந்த சீர்கேடுகளை எதிர்ப்பதிலும், சமுதாயக் கொடுமைகளைச் சாடினார் என்பதை அவர் பாடல்கள் வழி அறிய முடிகிறது. தமிழகச் சித்தர் சிந்தனை மரபின் பண்பாட்டு அடையாளமாகச் சிவவாக்கியர் பாடல்கள் உள்ளன.
துணை நின்றவை
1. நாராயணன். க, சித்தர் சிவவாக்கியர், மாரி பதிப்பகம், புதுச்சேரி, டிசம்பர் 2003.
2. மெய்யப்பன். ச, சித்தர் பாடல்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, மூன்றாம் பதிப்பு ஆகஸ்டு 2002.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.