தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
115.திருக்குறள் இன்பத்துப்பால் சுட்டும் களவியல் தலைவி
முனைவர் ச. திருப்பதி
தலைமையாசிரியர் (பணி நிறைவு),
தைலாபுரம், விருதுநகர் மாவட்டம்.
முன்னுரை
திருக்குறள் வாழ்க்கைக்கு நல்ல விளக்கம் தரும் சிறந்த இலக்கிய நூலாகும். மனிதன் தன்னோடும், தன் மக்களோடும், பெற்றோரோடும், சுற்றத்தாரோடும், அண்டை அயலாரோடும், ஆளும் அரசனோடும், அருள்புரியும் இறைவனோடும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை விரிவாக விளக்கி உரைக்கும் சிறந்த வாழ்க்கை வழிகாட்டி நூலாகும். திருவள்ளுவர் மனித வாழ்க்கையை நன்கு நுணுகி நோக்கி ஆராயும் ஆற்றல் பெற்றவர் ஆவார். அவ்வகையில் திருக்குறள் இன்பத்துப்பால் சுட்டும் களவியல் தலைவியின் சிறப்புகள் குறித்து இக்கட்டுரை ஆராய்கின்றது.
களவில் தலைவி பேசும் இடங்கள்
தலைவி பேசும் இடங்கள் களவியலில் காதல் சிறப்புரைத்தல், நாணுத்துறவுரைத்தல், அலரறிவுறுத்தல் ஆகிய மூன்று அதிகாரங்களில் மட்டுமே உள்ளன. தலைவி கூற்று மொத்தம் பன்னிரண்டு குறட்பாக்களில் இடம் பெற்றாலும், தலைவியை மையமாகக் கொண்டே தலைவன் கூற்றுகள் அமைகின்றன. களவு வாழ்க்கையில் ஈடுபடும் தலைவிக்கும், கற்பு வாழ்க்கை ஒழுகும் தலைவிக்கும் இடையே வேறுபாடுகள் காணப்பெறுகின்றன. தலைவிக்குரிய இயல்புகளைத் தொல்காப்பியர்,
“அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப” (தொல். களவு. நூ. 8)
என்ற நூற்பா வழியாகக் குறிப்பிடுகின்றார். ஆனால், வள்ளுவர் காட்டும் களவியல் தலைவி,
“வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்றுஅச்
சிறப்புடை மரபின் அவைகளவு எனமொழிப” (தொல். களவு. நூ. 9)
எனத் தொல்காப்பியர் கூறுகின்ற களவொழுக்க உணர்வுகளோடு அமைகின்றாள். தலைவி, தலைவன்மேல் கொண்ட அன்பின் மிகுதியால் தன் பண்பாகிய நாணத்தைத் துறந்து பேசும் நிலை நாணுத்துறவு உரைத்தல் என்ற அதிகாரம் வழியாக வெளிப்படுகின்றது. தனது விருப்பத்தைத் தலைவி கூறும்போது தலைவனிடம் எதிர்நோக்கி நேரடியாகப் பேசும் வழக்கம் இல்லை. இதனைத் தொல்காப்பியர்,
“தன்னுறு வேட்கை கிழவன்முன் கிளத்தல்
எண்ணுங் காலைக் கிழத்திக்கு இல்லைப்
பிறநீர் மாக்களின் இன்றிய ஆயிடைப்
பெய்ந்நீர் போலும் உணர்விற்று என்ப” (தொல். களவு. நூ. 28)
என்ற நூற்பா வழியாகப் புலப்படுத்துகின்றார். தலைவியின் அனைத்துச் செயல்களையும் அறிந்தவள் தோழி. அதனால், தோழியிடமே பேசுவதாக குறட்பாக்கள் அமைகின்றன. சில நேரங்களில் தானே சொல்லிப் புலம்புவதாக அமைகின்றன.
தலைவனின் மகிழ்ச்சியை விரும்பும் தலைவி
தலைவன் தலைவி மேல் மிகுந்த அன்பு கொண்டதனால் தலைவியைப் புகழ்கின்றான். பிறர் தம்மைப் புகழ்வதை அனைவரும் விரும்புவர். தலைவன், தலைவியின் தோற்றத்தை, உடல் மென்மை, இடை மென்மை, திருவடி மென்மை, கண்ணழகு, முக அழகு எனக் கூறுவதாகக் குறட்பாக்கள் அமைகின்றன. தலைவியும் விரும்பியதால் அதை மறுக்காது ஏற்றுக்கொண்டாள். புகழ்ச்சியை விரும்பும் யதார்த்த நிலையிலுள்ள தலைவியைத் திருவள்ளுவர் காட்சிப்படுத்தியுள்ள உண்மையை உணரமுடிகின்றது.
தலைவியின் கண்களும் ஐம்புல இன்பங்களும்
கண், செவி, நா, மூக்கு, மெய் ஆகியவை ஐம்புலன்களாகும். இவற்றால் பெறும் பார்த்தல், கேட்டல், உண்ணல், நுகர்தல், உற்றறிதல் என்னும் ஐம்புலன் இன்பத்தையும் உடையவளாகத் தலைவி திகழ்வதை,
“கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள” (குறள். 1101)
என்ற குறள் வழியாக உணரமுடிகின்றது. ஐம்புலன் சிறப்புடையாள் தலைவி என்பதை வள்ளுவர் வழி அறியமுடிகின்றது.
அமிழ்தமும் தோளும்
ஐம்புலன் சிறப்புடையவள் மட்டுமின்றி தோள் சிறப்புடையவள் தலைவி எனத் தலைவன் குறிப்பிடுகின்றான். தலைவியைக் கூடி மகிழ்ந்த தலைவன், தலைவியைச் சேரும் போதெல்லாம் உயிர் மீண்டும் கிடைப்பது போன்றதாகும், உயிர் தரும் தலைவியின் தோள்கள் அமிழ்தத்தினால் செய்யப்பெற்றன என்பதை,
“உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலான் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்” (குறள். 1106)
என்ற குறள் புலப்படுத்துகின்றது. அவளது தோள் அமிழ்தினால் செய்யப்பட்டது போன்ற தன்மையைப் பெற்றுள்ளது.
பிணிக்கு மருந்து
ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் அதற்குப் பிற பொருள்கள் மருந்தாகும். இங்குத் தலைவியால் ஏற்பட்ட நோய்க்குத் தலைவியே மருந்தாகத் திகழ்கின்றாள். மாலை நேரத்திலே வாட்டும் காமநோயையும், அது நீங்குவதற்கு மருந்தான மடல் ஏறுதலையும் தந்தவள் தலைவி என்பதை,
“பிணிக்கு மருந்து பிறமண் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து” (குறள். 1102)
“தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்” (குறள். 1135)
என்ற குறட்பாக்கள் வழியாகத் தெளிய முடிகின்றது. ‘வைரத்தை வைரத்தால் அறு’ என்பதைப் போல நோயை உண்டாக்கும் கிருமியாகவும், அதை அழிக்கும் மருந்தாகவும் தலைவி அமைந்ததை அறிய முடிகின்றது.
குளிர்ச்சியும் வெப்பமும்
நீர் குளிர்ச்சித் தன்மையுடையது. நெருப்பு சுட்டெரிக்கும் வெம்மைத் தன்மையுடையது. நீரும் நெருப்பும் ஐம்பூதங்கள் எனினும் மாறுபட்ட குணத்தைக் கொண்டன. அதேபோல் தலைவியும் தலைவனுக்கு மாறுபட்ட தன்மைகளோடு காட்சியளிக்கின்றாள். தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றால் சுடுகிறது. அருகில் சென்றால் குளிர்கிறது என்பதை,
“நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்” (குறள். 1104)
என்ற குறள் தெளிவுபடுத்துகின்றது. மாறுபட்ட தன்மையுடைய தலைவியை வள்ளுவர் அடையாளப்படுத்தியுள்ளதை அறிய முடிகின்றது.
தலைவன் தலைவியிடம் பெறும் இன்பம்
ஒருவர் மற்றொருவரின் பொருள் மேல் கொள்ளும் இன்பத்தை விடத் தன் சொந்தப் பொருள் மேல் கொள்ளும் இன்பமே சிறப்பானது. தலைவன் தன் உயிரான தலைவியுடன் பகிர்ந்து பெறும் இன்பம், சொந்த வீட்டில் ஒருவர் தான் அமர்ந்து தாமாகச் சமைத்த உணவைப் பகிர்ந்து உண்பதற்கு நிகரானது. இதனை,
“தம்இல் இருந்து தமதுபாத்து உண்டாற்றல்
அம்மா அரிவை முயக்கு” (குறள். 1107)
என்ற குறள் தெளிவுபடுத்துகின்றது. தலைவி இல்லறம் சிறப்பதற்குரிய பண்பினை உடையவள் என உணர முடிகின்றது.
உண்டாரும் கண்டாரும்
கள் உண்ணுதல் ஒழுக்கமற்ற செயல் என்றாலும், சங்க இலக்கியங்களில் கள் உண்ணுதல் பெருமையாகவேப் பேசப்படுகின்றது. மது, குடித்தவருக்கு மட்டும் மயக்கம் தெளியும் வரை குறுகிய கால அளவு மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியது. ஆனால், தலைவி மேல் கொண்ட காமம் அவளைக் கண்டபொழுதிலும் இன்பத்தைத் தரும்; அவளை நினைக்கும் பொழுதிலும் இன்பத்தைத் தரும். இத்தகைய பண்பு மதுவிற்கு இல்லை என்பதை,
“உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று” (குறள். 1090)
என்ற குறள்வழித் தெளிய முடிகின்றது. இதில் வள்ளுவர் மதுவை விடச் சிறந்த தலைவியைத் தலைவன் வாயிலாகக் கண்முன் காட்சிப்படுத்தியுள்ளதை அறிய முடிகின்றது.
உயிர் பிரிதலும் பெறுதலும்
தலைவன் உடல், தலைவி உயிர். உடலை விட்டு உயிர் நீங்கினால் அங்கு துன்ப நிகழ்வே ஏற்படும். தலைவியாகிய உயிர், தலைவனாகிய உடலை விட்டுப் பிரியும் போது, பிரிவு தாங்க முடியாமல் சாதல் ஏற்படுகின்றது. அவள் உடனிருக்கும்போது மீண்டும் உயிர் பெறுகிறது. தலைவி தனக்கு உயிரானவள் என்பதைத் தலைவன்,
“வாழ்தல் உயிர்க்குஅன்னள் ஆயிழை சாதல்
அதற்குஅன்னள் நீங்கும் இடத்து” (குறள். 1124)
என்ற குறள் வழியாக வெளிப்படுத்தியுள்ளான். இதில் தலைவி தலைவனால் உயிரெனப் போற்றப்பட்டதை அறிய முடிகின்றது.
பணிமொழி
பாலும் இனிமையானது தேனும் இனிமையானது. இவை இரண்டினையும்விட இனிமையானது, பணிவு ததும்ப மென்மையான சொற்களால் பேசும் தலைவியின் பேச்சு என்பதை,
“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வால்எயிறு ஊறிய நீர்” (குறள். 1121)
என்ற குறள்வழி உணரமுடிகின்றது. ‘பணிமொழி’ என்றதனால் தலைவியின் பணிவையும் எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது. பாலினும் தேனினும் இனிய மொழியைப் பேசுபவள் தலைவி என்பதை அறிய முடிகின்றது.
யான் நோக்கும் தான்நோக்கும்
தலைவி நாணம் கொண்டதைச் சில குறட்பாக்கள் எடுத்துரைக்கின்றன. அவளது நாணம் பார்வை வழியாக வெளிப்பட்டதை அறிய முடிகின்றது. தலைவன் தலைவியைப் பார்க்கின்றான். அவள் தலைவனை நேருக்குநேர் பார்க்காமல் நிலத்தைப் பார்க்கிறாள். தலைவன் உற்று நோக்கிப் பார்க்காதபோது, தலைவி தலைவனை முழுமையாகப் பார்த்துத் தன்னுள் இன்புறுகிறாள், இதனை;
“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்” (குறள். 1094)
என்ற குறள்வழி அறியமுடிகின்றது.
தலைவன் பார்க்காத போது தலைவி அன்பொழுக நாணத்துடன் பார்த்த பார்வை தலைவனின் அன்பை வேண்டின. அவ்வாறு பார்வை வழி காட்டிய குறிப்பு இருவருக்குமுள்ள அன்பாகிய பயிர வளர்ப்பதற்குரிய நீரை ஊற்றின. என்பதனை,
“நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதுஅவள்
யாப்பினுள் அட்டிய நீர்” (குறள். 1093)
என குறள் உணர்த்துகின்றது. தலைவியின் நாணத்துடன் கூடிய பார்வை அன்பை வளர்ப்பதற்குரிய நீராகவும் அமைந்தது என்பதை அறிய முடிகின்றது.
கண்ணுக்குள்ளே காதலர்
கணவன் மேல் அன்பு கொண்டு வாழும் மனைவியர் உண்டு. வள்ளுவர் காட்டும் தலைவியின் அன்பு இயல்பான நிலையிலிருந்து மாறுபட்டுக் கற்பனை நிலையில் அமைந்துள்ளது. நுட்பமான தன்மையுடைய தலைவன், தலைவியின் மனத்திலும், நினைவிலும் இருப்பான். தலைவியின் கண்களை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டார். இமைத்தாலும் தலைவி தன் கண்களில் வைத்துத் தலைவனைப் பாதுகாக்கின்ற நிலையை உணர முடிகின்றது. இதனை,
“கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர் எம்காத லவர்” (குறள். 1126)
என்ற குறள்வழி அறிய முடிகின்றது. கண்ணினுள் தலைவன் இருப்பதால் அவருக்குத் துன்பம் ஏற்படும் என எண்ணி மையிடவில்லை. கண்களுக்கு மையிடும்போது தலைவனின் திரு உருவம் மறைந்துவிடும் எனத் தலைவி வருந்துகிறாள். அத்தகைய அன்பை,
“கண்உள்ளார் காதல வராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து” (குறள். 1127)
என்ற குறள் வழியாகவும் அறிவுறுத்துகின்றார்.
நெஞ்சத்தில் காதலர்
தலைவன் நெஞ்சினுள் உறைவதால், அவரைச் சுட்டுவிடும் என்பதால் சூடான உணவை உண்பதில்லை என்ற தலைவியின் அன்பு நிலையை,
“நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுவதும் வேபாக்கு அறிந்து” (குறள். 1128)
என்ற குறள் வாயிலாகவும் அறிய முடிகின்றது. தலைவனிடம் மிதமிஞ்சிய அன்போடு வாழ்ந்த தலைவியை வள்ளுவர் அடையாளப்படுத்தியதை ஆராய்ந்தறிய முடிகின்றது.
குணமென்னும் குன்று
அழகு என்பது காலத்திற்கேற்ப மாறக்கூடியது, அழியவும் கூடியது. ஆனால், குணம் ஒன்றே கடைசிவரை நிலைபெறக் கூடியது, போற்றக் கூடியது. தலைவி ஒளிபடைத்த அழகிய கண்களைக் கொண்டிருந்தாலும் அவளின் நற்குணங்களைத் தலைவன் மறப்பதுமில்லை, மீண்டும் நினைப்பதுமில்லை, மறக்காமல் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பதை,
“உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்புஅறியேன்
ஔஅமர்க் கண்ணாள் குணம்” (குறள். 1125)
என்ற குறள் தெளிவுபடுத்துகின்றது. “குணம் என்பதற்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” என்ற வரையறை கூறுவார் பரிமேலழகர். நற்குணமுடைய தலைவியை வள்ளுவர் வழியாக அறிய முடிகின்றது.
இவ்வாறாக, திருக்குறள் படைத்துக் காட்டும் இன்பத்துப்பால் களவியல் தலைவியின் பண்புகளும், சிறப்புகளும் யதார்த்தத்தோடும் கற்பனையோடும் படைக்கப்பெற்றுள்ளது.
அச்சம், மடம், நாணம் பயிர்ப்பு என்பன பெண்களுக்குரிய பண்புகளாகும். அப்பண்புகளுள் திருக்குறள் காட்டும் தலைவி நாணமுடைய தலைவியையும் சில இடங்களில் நாணத்தைத் துறந்த தலைவியையும் திருவள்ளுவர் படைத்துக் காட்டுகின்றார்.
தலைவனிடம் நேருக்கு நேர் பேசாத தலைவியின் மாண்பினை உணரமுடிகின்றது.
புகழ்ச்சியை விரும்பும் யதார்த்த நிலைத் தலைவியையும் ஐம்புலன் சிறப்புடைய தலைவியையும் திருவள்ளுவர் படைத்துள்ளார்.
அமிழ்தின் இயன்றன தோள், உயிர்கொடுக்கும் தோள், வைகுண்ட இன்பத்தைவிட இனிய தோள் எனத் தலைவியின் தோள் சிறப்பு புனையப்பெற்றுள்ளது.
தலைவன், தலைவியை மருந்தானவள், இன்பமானவள், நீரும் நெருப்புமானவள், மதுவனும் இனியவள், உயிரானவள், எனப் பலவிதமாகப் புனைந்துரைக்கிறாள். மொத்தத்தில் தலைவியின் அழகை விட குணங்களை மிகுதியாகப் புனைந்துரைக்கப் பெற்றுள்ளது.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.