தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
13. சங்ககாலப் புலவர்களின் மழை குறித்த சிந்தனை
இரா. உமாதேவி
தமிழ் ஆர்வலர்
முன்னுரை
சங்ககால வாழ்க்கை முறை இயற்கையமைப்பை அடிப்படையாகக் கொண்டது. மக்களின் உணவு, தொழில், பழக்க வழக்கங்கள் பொழுதுபோக்குகள், மனப்பாங்கு, சமய நம்பிக்கை என அனைத்தையும் சங்க இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. உலக உயிர்கள் வாழ்வதற்கு அடிப்படைத் தேவையாக அமைவது நீர் என்றால் அது மிகையாகாது. அந்நீரிற்கு அடிப்படையாக அமைவது மழை. சங்க இலக்கியங்களைப் படைத்த புலவர்கள் மழையின் முக்கியத்துவத்தை உணர்ந்து தத்தமது பாடல்களில் ஆங்காங்கே மழை பற்றிய செய்திகளை கூறிச் சென்றுள்ளனர்.
தொல்காப்பியரும் மழையும்
தொல்காப்பியர் அன்பின் ஐந்திணைகளுள் முல்லைக்குரிய முத்ற்பொருளைக் கூறுமிடத்து ஆவணி, புரட்டசி ஆகிய இரு மாதங்களைக் கூறுகிறார். இது நமது மரபுப்படி மழை பொழியும் காலமாகும். இதனை,
“காரும் மாலையும் முல்லை” (தொல்.பொரு.நூ.6)
எனும் நூற்பாவின் வழி அறியலாம்.
மழையின் சிறப்பு
கொடை வள்ளல்களில் சிறந்தவனாகக் கருதப்பெறும் பாரியின் வள்ளல்த் தன்மையினைக் கூறுமிடத்து,
“மாரியுமுண்டு ஈங்கு உலகு புரப்பதுவே” (புறம். 107)
எனக் கபிலர் மழையினைப் பற்றி உரைக்கிறார்.
மழையின் தேவை
மழைதான் அனைத்திற்கும் அடிப்படை. பசுமை வறண்டு காணப்படும் நிலப்பகுதியில் மழை பொழிதலை ஒழித்து மேகம் வேறு இடத்திற்கு சென்றுவிடும் என்பதனை நன்கு அறிந்திருந்தனர். அதனால் தான்,
“பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண் வானுலந்து
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்” (அகம்.185 : 8-10)
என்ற அடிகளைப் பாட முடிந்தது. அதுமட்டுமா, மழை பொழியாது வெறுமானம் ஆகுவதினால் உண்டாகும் துன்பத்தினை,
“உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
மழைக்கால் நீங்கிய மாக விசும்பல்” (அகம்.141 : 5-6)
எனும் பாடல் அடிகள் மழை பொழியாது பொய்த்துப் போனால் உழவுத்தொழில் உட்பட அனைத்துத் தொழில்களுமே பாழ்படும் என்றுரைக்கின்றது.
மழையின் வரவு
அவ்வையார் போன்ற புலவர்கள் மழை வருவதனை நன்கு கணித்திருந்தனர். கார் கொண்ட கருமேகங்கள் இடி மின்னலுடன் வருவது பாறை இடுக்குகளிலுள்ள பாம்புகளை நடுநடுங்க வைத்தது என்பதனை,
“கேழ்கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப
படுமலை உருமின் உரற்று குரல்” (நற். 129 : 7-8)
எனும் அடிகள் விளக்குகின்றது.
நீல நிறமுடைய வானத்தில் கருநிற மேகங்கள் சூழ்ந்துள்ளது. அம்மேகக் கூட்டத்திற்கிடையே மின்னல் மின்னுவதால் பெரிய பாறைப் பிளவுகளைக் கூட நன்றாகக் காண முடிகிறது. பின்னர் மழை பொழிந்தது என்பதனை,
“காயாக் குன்றத்து கொன்றை போல
மாமலை விடரகம் விளங்க மின்னி...
வியலிரு விசும்பகம் புதைப்ப பாஅய்ப்
பெயல் தொடங் கினவே பெய்யா வானம்” (நற். 371)
எனும் பாடலின் வழி உணரலாம்.
மழை உருவாக்கம்
மழை மேகங்கள் உருவாதற்கு பரந்த விரிந்த கடலிலுள்ள நீர்தான் ஆதாரம். சூரிய வெப்பத்தால் கடல் நீர் ஆவியாகி மேலே செல்கிறது. அவ்வாறு சென்ற நீராவியை பூமியிலுள்ள காற்று மண்டலங்களின் வழி மழையாகப் பொழிகிறது. இதனை,
“பனித்துறைப் பெருக்கடல் இரந்து நீர் பருகிக்
காலை வந்தன்றால் காரே” (அகம்.183)
எனும் அடிகளில் அறியலாம்.
மேலும், அதிக நீரை உடைய மேகங்கள் மேலே அதிக தூரம் செல்லாமல், முதற் சூலை உடைய மகளிர் போல கீழேயே நின்று மழை பொழிவதனை,
“கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு
விசும்புலர் கல்லாது தாங்குபு புணரிச்” (குறுந்.287 : 5-6)
என்று கச்சிப்பேட்டு நன்னாகையார் எனும் புலவர் எடுத்துரைக்கிறார்.
காற்றும் மழையும்
‘ஆடியில் காற்றடிச்சா ஐப்பசியில் மழை பொழியும்’ எனும் பழமொழி நாம் அனைவரும் அறிந்ததே. பண்டையத் தமிழர்கள் மழையோடு காற்றினை தொடர்புபடுத்தியிருக்கின்றனர். காற்றால் தான் மழை ஒரே இடத்தில் பொழியாமல் பல இடங்களுக்கும் பரவிச் செல்கின்றது. கார்கால மேகம் காற்றில் அடித்துச் செல்லும் காட்சியை,
“நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே”
(ஐங். 492)
எனும் அடி விளக்குகின்றது.
காற்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசுவதனை நன்குணர்ந்த புலவர்கள் வலமாகச் சுற்றுவதனை,
“வலனேர்பு அங்கண் இரு விசும்பதிர
ஏறொடு பெயல் தொடங்கின்றே வானம்”
(ஐங். 469)
எனவும்,
“கடல் முகந்து கொண்ட காமஞ்சூல்
மாமழை சுடர்நிமிர் மின்னொடு வலன் ஏர்பு”
(அகம். 43)
எனவும் சுட்டப்படுகிறது.
மேலும் முல்லைப்பாட்டில்,
“நனந்தலை உலகம் வளையிநேமியொடு
வலம்புரி பொறித்த மாதங்கு தடக்கை”
(முல் - 1-2)
என காற்று வலம் நோக்கிச் செல்வதனைத் தெளிவாக நப்பூதனார் உரைக்கிறார்.
கீழ்க்காற்று கடல் தொழில் செய்பவர்களுக்கு உகந்ததல்ல. ஏனெனில் அது மழை பொழியும் காலம் என்பதனை நன்குணர்ந்த புலவர்,
“கொண்டல் மாமழை குடக்கு ஏர்பு குழைத்த”
(நற். 140)
என்கிறார்.
காற்றினால் மேகம் தள்ளப்படுவதால் மலையினால் தடுத்து நிறுத்தப்பட்டு அங்கு மழை பொழிகின்றது என்பதை,
“வளிபொரு மின்னொடு வானிருள் பரப்பி
விளிவுடன்று கிளையொடு மேல்மலை முற்றி
தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்”
(பதி.12)
எனும் பாடலடி விளக்குகின்றது.
முடிவுரை
பண்டைய இலக்கியங்களைப் படைத்த புலவர்கள் இன்றைய நவீன விஞ்ஞானிகள் பெறாத அறிவினைப் பெற்றிருந்தனர் என்பதனை இக்கட்டுரையின் வழி அறிந்தோம். மேலும், மழையின் அவசியம், அதனது உருவாக்கம், பொழிவு போன்ற பல்வேறு சிந்தனைகளையும் புலவர்கள் சங்கப்பாக்களின் மூலம் கூறிச் சென்றுள்ளனர்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.