தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
14. அரசியல் நோக்கில் புறநானூறு
செ. ஓவியம்
முனைவர் பட்டஆய்வாளர், தமிழாய்வுத்துறை,
பெரியார் ஈ. வெ. ரா. கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி.
முன்னுரை
பண்டைத் தமிழகம் சேர, சோழ, பாண்டியர் என்னும் முடியுடைவேந்தர் மூவர்க்கும் உரியதாய் விளங்கியது. குடிமக்களுக்குத் துன்பம் நேராதவாறும்,அவர்களது நலனில் ஈடுபாடு கொண்டும் செங்கோல் ஓச்சும் முறை சங்ககாலத்தில் பெரிதும் பின்பற்றப்பட்டது. மன்னர்கள் தம் ஆட்சியில் நடுநிலைமையும், நீதிபிறழாத் தன்மையும் உயர்வாகப் போற்றப்பட்டது. இத்தகைய சீர்சால் வேந்தரின் அரசியல் திறத்தை தமிழர்களின் வரலாற்றுக் கருவூலமாய்த் திகழும் புறநானூறு வழிநின்று விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
குடியோம்பல்
பழந்தமிழ் வேந்தர்கள் குடிமக்களைக் காப்பாற்றியதிறத்தைச் சங்க இலக்கியங்கள் இயம்புகின்றன. புலி தன் குட்டிகளைப் பேணுவதைப் போல் வேந்தன் மக்களைப் பேணிக் காத்ததை,
“புலி புறங்காக்கும் குருளைபோல
மெலிவுஇல் செங்கோல் நீபுறங்காப்பப்” (புறம். 42: 10-11)
என்ற புறநானூற்று வரிகள் உணர்த்துகின்றன.
குடிமக்களின் நலம் பேணல்
மக்கள் நலனில் மிகுந்த நாட்டம் கொண்ட வேந்தனாகப் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் விளங்குகிறான். நான் இளையவன் என்று கருதி என் மேல் போர் தொடுப்போரைச் சிதறியோடச் செய்து அவரை வெற்றி கொண்டு, அவர் முரசைக் கைப்பற்றுவேன். அவ்வாறு செய்யாவிடில் கொடியவன் எனக் கண்ணீர் பெருக்கிக் குடிமக்கள் பழி தூற்றும் கொடுங்கோலன் என்றுஎன்னை இகழ்வாராக என வஞ்சினம் கூறுகின்றான்.
“என்னிழல் வாழ்நர் வென்னிழற் காணாது
கொடியனெம் மிறையெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றுங் கோலேனாகுக” (புறம். 72 : 10 -12)
இப்புறப்பாட்டு அடிகளின் வழி பாண்டியன் மக்களை முன்னிறுத்தி ஆட்சி புரிந்ததை அறிய முடிகின்றது.
இறைபெறும் வழி
அரசனின் கடமைகளுள் ஒன்றாகக் குடிமக்களைக் காக்கும் பண்பு போற்றப்பட்டுள்ளது. குடிமக்களின் நலம் கருதி படை முதலியவற்றை மேம்படுத்த குடிமக்களிடம் வரி வசூலிக்கும் முறைமை ஏற்பட்டது. இத்தகையச் செலவிற்கென வரி விதிக்கப்பட்டு அரசனுக்குத் தரப்பட்டது. இது வரி என்றும் குடிமக்களைப் புரத்தல் காரணமாய் எழுந்தமையின் புரவு என்றும் அழைக்கப்பட்டது. இறைபெறும் நெறிஅறிந்து வரியினைப் பெற்றனர். முறைமைக்கு மேலாக வரி பெறும் வேந்தனை,
“குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின்அதுசிறந்தன்றுமன்னே”(புறம். 75: 4-5)
என்று சோழன் நலங்கிள்ளி இகழ்கின்றான்.
பிசிராந்தையாரின் அறிவுரை
பிசிராந்தையார் அறிவுடைநம்பி என்னும் வேந்தனிடம் நெல்லை அறுத்து அதனை முறைப்பட யானைக்கு இட்டால் வீண் ஆகாது; மாறாக யானையை நெல் வயலினுள் இறக்கிவிடின், அது தானும் உண்ணாமல், பயிரையும் வீணாக்கிவிடும். அது போல் வேந்தன் குடிகளிடம் வரி பெறும்போது நெறியறிந்து கொள்ள வேண்டும் என்பதை,
“காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
... ... ... ... ... ... ... ... ... ..
அறிவுடைவேந்தன் நெறியறிந்துகொளினே” (புறம். 184 : 1-5)
இவ்வாறு குடிகளை வருத்தாமல் அளவோடு இறைபெற்று ஆளும் அரசனின் ஆட்சியிலே அவனும், அவனால் ஆளப்படும் நாடும் பெரிதும் வளமுடன் திகழும் என்ற உண்மை வலியுறுத்தப் பெறுகின்றது.
நீர்நிலைப் பெருக்கம்
உயிர் வாழ்வதற்கு வேண்டிய உணவைக் கொடுப்பவை நிலமும் நீருமாகும். இவ்விரண்டையும் ஒன்றாக இணைத்திருக்கும்படிச் செய்வதே மன்னர்களின் கடமை. நிலத்திற்கு வேண்டிய நீர் வசதிகளைச் செய்து தர வேண்டியது அரசின் கடமைகளுள் ஒன்றாகப் பண்டைத் தமிழகம் எண்ணியது. பாண்டியன் நெடுஞ்செழியனின் புகழைப் பாடவந்த குடபுலவியனார்,
“நீரின்றிறமையாயாக்கைக் கெல்லாம்
உண்டிகொடுத்தோருயிர்கொடுத் தோரே
... ... ... ... ... ... ... ... ... ..
உணவெனப் படுவதுநிலத்தொடுநீரே” (புறம். 18: 18-21)
என்கிறார்.
உணவுப்பொருள் பெருக நீர்வளம் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. புலவரின் கூற்று எக்கால அரசுக்கும் பொருந்தும் அறிவுரையாகும்.
சோழன் நலங்கிள்ளி காவிரியின் நீர், பல கால்வாய்களாக ஓடி நிலத்தில் பாய்ந்து பயிர் செழிக்க வழி வகுத்தான் என்பதை,
‘புனிறுதீர் குழவிக் கிலிற்றுமுலைபோலச்
சுரந்தகாவிரிமரங்கொன் மலிநீர்
மன்பதைபுரக்கும் நன்னாட்டுப் பொருநன்” (புறம். 68: 8-10)
என்னும் புறப்பாடலில் கோவூர்க்கிழார் காவிரியின் வளம் பெற்ற காவலனை வாழ்த்துகிறார்.
உழவுக்கு வந்தனை செய்தல்
பாமர மக்கள் முதல் பாராளும் வேந்தன் வரைஅனைவருக்கும் உறுதுணை புரிவோர் உழவர். நாட்டிற்கு அரணாக நிற்கும் உழவர்களுக்கு நல்லன செய்தலை வேந்தன் நாள்தோறும் அறிந்து தக்கன செய்ய வேண்டியதை,
‘களிற்றுக்கணம் பொருதகண்ணகன் பறந்தலை
வருபடைதாங்கியபெயர்புறந் தார்த்துப்
பொருபடைதரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே” (புறம். 35: 23-26)
என்ற அடிகளால் புலவர் வெள்ளைக்குடி நாகனார் உணட்த்துகிறார்.
மன்னர்கள் போரை நிறுத்திவிட்டு உழவரைப் பேணி மக்கள் நலத்தை முன்னிறுத்தினால் மக்களே விரும்பித் தம்மைஆளும் உரிமையை மன்னர்களுக்குக் கொடுப்பர் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
அரசனின் பண்புகள்
நாடாளும் வேந்தனுக்கு இருக்க வேண்டிய பண்புகளை மதுரை மருதனிளநாகனார், பாண்டியன் நன்மாறனுக்குஉரைக்கின்றார். பிழைபுரிந்தவர் நம்மவர் எனவே பிழைத்துச் செல்க என ஒறுக்காது விடுத்தலும், இவர்தம் பகைவர் எனவே பிழை புரியாராயினும் பெருந்தண்டம் கொடுத்து ஒறுத்தலும் அறத்தின் பாற்பட்டதன்று.வேந்தனாய் ஆட்சிப் பொறுப்பேற்றிருப்பவனுக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற வேறுபாடு இருத்தல் கூடாது என்பதை,
‘அறநெறிமுதற்றேஅரசின் கொற்றம்
அதனால் நமரெனக் கோல் கோடாது
பிறர்எனக் குணங் கொல்லாது” (புறம். 55: 12-14)
என்னும் பாடலில் அறனல்லாதசெயல் தன்னிடம் நிகழாவண்ணம் காத்துக் கொள்ளவேண்டும் எனஅறிவுறுத்துகிறார்.
நீதி வழங்கல்
அரசநீதி, நாட்டு மக்களைத் துயரங்களினின்று காத்தலேயாகும். சமன்செய்து சீர்தூக்கும் கோல் போல் தமிழரசர்கள் திகழ்ந்தனர். பல்யாகசாலை முதுகுடுமியைப் பாடும் காரிக்கிழார்,
‘தெரிகோல் ஞமன்போலஒருதிறம்
பற்றல் இலியரோநின்றிறம் சிறக்க” (புறம். 6: 9-10)
என்கிறார். எளியோருக்கு ஒன்றும் வலியோர்க்கு மற்றொன்றும் வேண்டியோர்க்கு ஒரு நீதியும், வேண்டாதோர்க்கு மற்றொரு நீதியும் வழங்குதல் முறையன்று. அளந்தறியும் துலாக்கோலின் முள்போல் நடுவுநிலைமை தவறாது ஆட்சி செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
போர் அறம்
போர் தொடங்குவதற்கு முன்பாகப் போர்ச்செய்தியினை முரசறைந்து தெரிவித்தனர். ஆனிரை, பார்ப்பனர், பெண்டிர், பிணியுடையோர், குழந்தையற்றோர் ஆகியவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
“ஆவு மானியற் பார்ப்பனமாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புலவாழ்நர்க் கருங்கடனிறுக்கும்
பொன்போற் புதல்வர் பெறாஅதீரும்
எம்மம்புகடிவிடுதுநும்மரண் சேர்மினென
அறத்தாறுநுவலும் பூட்கைமறம்” (புறம். 9 : 1-6)
எனப் புறநானூறும்,
“பார்ப்போரறவோர் பசுப்பத்தினிப் பெண்டிர்
மூத்தோர் குழவியெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தோர் பக்கமேசேர்க” (சிலம்பு. 26 : 225- 230)
எனச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றன.
மேற்குறிப்பட்டவர்களுக்குப் போரினின்று விலக்கு அளிப்பதைப் பண்டைத்தமிழ் வேந்தர் மரபாகப் போற்றினர் எனலாம்.
அறங்கூறவையம்
நீதி வழங்குவதற்கென்று இயங்கிய ஓர் அமைப்பே அறங்கூறவையமாகும். இது இக்கால நீதிமன்றத்தைப் போன்று அக்காலத்து நீதி வழங்குமிடமாகத் திகழ்ந்தது.
“மறங்கெழுசோழருறந்தையவைத்
தறநின்றுநிலையிற்று” (புறம். 39. 8-9)
என்றும்
‘அறந்துஞ் சுறந்தை” (புறம். 58.9)
என்னும் அடிகள் உறையூரில் அறங்கூறவையம் இருந்ததைச் சுட்டுகின்றன.
முடிவுரை
சங்ககால வேந்தர்களின் வெண்கொற்றக்குடை வெயிலை மறைப்பதற்கன்று. குடிகளின் துயரைப் போக்கவே என்னும் கொள்கை நிலவிற்று. பருவமழை பொய்த்தாலும் இயற்கையிகந்த செயல்கள் நிகழ்ந்தது. மக்கள் இன்னலுற்றாலும் அதற்குப் பொறுப்பானவன் நாடாளும் வேந்தனே என்பதை,
‘மாரிபொய்ப்பினும் வாரிகுன்றினும்
இயற்கையல்லனசெயற்கையிற் றோன்றினும்
காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம்” (புறம். 35: 28-30)
என்னும் பாடலடிகள் உரைக்கின்றன.
இதனையுணர்ந்து அரசோச்சினர் பண்டைய வேந்தர்கள்..
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.