தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
16. பண்டைத் தமிழகத்து முருக வழிபாட்டு நெறிகளும் - நோக்கங்களும்
(பரிபாடல் - செவ்வேள் பாடல்களை முன்வைத்து)
முனைவர் த. கண்ணன்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்செங்கோடு.
முன்னுரை
பரிபாடல் சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் அகமும் புறமும் கலந்த தொகுப்பாக உள்ளது. இது தொகுக்கப்பட்ட போது எழுபது பாடல்களை உடையதாக இருந்துள்ளது.
1 அவற்றுள் செவ்வேள் குறித்து 31 பாடல்கள் இருந்துள்ளன. இன்றோ செவ்வேள் குறித்த எட்டுப் பாடல்களே காணப்படுகின்றன.
2 இப்பாடல்களை எழுவர் பாடியுள்ளனர்.
3 இதனுள் காணப்படும் செவ்வேள் குறித்த பாடல்கள் திருப்பரங்குன்றத்து முருகனின் சிறப்புகளைப் பாடுகின்றன.
இப்பாடல்களுள் பண்டைத் தமிழகத்து மக்களிடம் காணப்பட்ட முருக வழிபாட்டு நெறிகளையும் அவ்வழிபாட்டிற்கான நோக்கங்களையும் காணமுடிகிறது. அவற்றைத் தொகுத்துரைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முருகனைச் சேர்வார்தம் தகுதிகள்
முருகனைச் சென்று வழிபடுதற்குச் சில தகுதிகள் இருக்க வேண்டும். அவ்வாறான தகுதிகள் இல்லாதவர்கள் முருகப்பெருமானைச் சென்றடைய முடியாது. அவ்வாறான தகுதிகள் யாவை என்பதைப் பரிபாடல் வழி அறியமுடிகிறது. அவையாவன,
* முருகனின் அருளைத் தம்பால் ஏற்றுக்கொண்டோர். அதாவது முருகனிடம் காணப்படும் அருட்குணங்களைத் தானும் உடையவராய் இருத்தல்.
* முருகனின் பண்பாகிய அறத்தைத் தானும் மேற்கொண்டவராய் இருத்தல்.
* நிலைபெற்ற நற்குணங்களை உடையவராய் இருத்தல்.
* பெருந்தவப் பேற்றை உடையவராய் இருத்தல்.
இவ்வாறு அருள், அறம், நற்குணம், தவப்பேறு எனும் இவற்றை உடையவர்களே முருகனைச் சென்று வழிபட முடியும். இத்தகுதிகள் இல்லாதோர் முருகனை வழிபட மாட்டார்கள். அதாவது அவர்களுக்கு முருகனை வழிபட வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றுவதும் இல்லை, அதற்கான வாய்ப்புகளை முருகன் தருவதும் இல்லை. அவ்வாறு முருகனை வழிபடுதற்குத் தகுதியற்றோர் யாவர் என்பதையும் அறியமுடிகிறது. அவர்களாவார்,
* உயிர்களைக் கொல்லும் சினத்தை நெஞ்சில் நீடித்து வைத்திருப்பவர்கள்.
* அறநெறியில் பொருந்தாத சீர்மையில்லாதோர்.
* அழிந்த தவ வடிவத்தோடு முருகனை மறந்தவர்கள்.
* மறுபிறப்பு இல்லை என்று வாதிடும் அறிவற்றோர்.
எனும் இவர்களுக்கு முருகனை வழிபடுதற்குரிய பேறு அமைவதில்லை. இதனை,
“நின்குணம் எதிர்கொண்டோர் அறங்கொண்டோர் அல்லதை
மன்குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை
செறுதீ நெஞ்சத்துச் சினம் நீடி னோரும்
சேரா வறத்துச் சீரி லோரும்
அழிதவப் படிவத்து அயரி யோரும்
மறுபிறப்பு இல்லெனும் மடவோரும் சேரார்”
(பரி.5:71-76)
எனும் செவ்வேள் பாடல் வழிப் பெற முடிகின்றது. இவற்றால் முருகனை வழிபடும் அடியவர்கள் முருகனுக்கு நிகரான அருள், அறம், நற்குணம் முதலியவற்றைப் பெற்றவர்களாக உள்ளார்கள். அதன்பொருட்டே “அடியார்தம் பெருமை சொல்லவும் அரிது” என்றனர் பிற்காலத்தார். இறைவனுக்கு நிகரான குணங்களை உடைத்தாய் இருப்பதாலே மக்கள் இறைவனை வழிபடும் இடத்து அடியவர்களையும் வழிபட்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள இப்பரிபாடல் தகுந்த சான்றாகவே அமைகிறது.
பயத்துடன் கூடிய பக்திநெறி
முருகன் சூரனைச் சுற்றத்துடன் அழித்தவன். சிறு குழந்தைப் பருவத்தே இந்திரன் முதலான தேவர்களை வெற்றி கொண்டவன். ஆயினும் பக்தர்களுக்கு எளியவனாகவும், அன்புள்ளவனாகவும், மக்களின் அன்புக்கு உரியவனாகவும் திகழ்கிறான். எனினும் மக்கள் முருகன் மீது பயபக்தியைக் கொண்டிருந்தனர் என்பதை அறியமுடிகிறது.
‘பரத்தையொழுக்கம் தன்னிடம் இல்லை’ என்றுரைக்கும் தலைவன் முருகன் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றத்து மலையின் மீது பொய் ஆணையிட்டுக் கூறுகிறான். இவ்வாறு பொய்ச் சூளுரைப்பவர்களை அம்முருகனின் சத்திய வேலானது அழித்துவிடும் என்ற பய உணர்வு மக்களிடம் காணப்பட்டதை அறியமுடிகிறது.
அவ்வாறே சூளுரைக்கும் தலைவன் முருகனின் அடியவர்களின் அடியைத் தொட்டும் முருகனின் வாகனமான மயிலின் நிழலைத் தொட்டும் முருகனது வேலின் நிழலைத் தொட்டும் பொய்ச் சூளுரைக்கிறான். அதனைக் காணும் தோழி நீ செய்யும் இப்பொய்ச் சூளினை அடியவர்கள் பொறுத்தாலும் பொறுப்பர். ஆனால் முருகனின் மயிலும் வேலும் பொறுப்பதில்லை என்றுரைக்கிறாள். இதனை,
“என்னை அருளி அருள்முருகு சூள்சூளின்
நின்னை அருளில் அணங்கான்மெய் வேல் தின்னும்
விறல்வெய்யோன் ஊர்மயில் வேல்நிழல் நோக்கி
அறவர் அடிதொடினும் ஆங்கவை சூளேல்”
(பரி.8: 65-68)
என்னும் அடிகள் உணர்த்தும். இதனுள் பொய்ச் சூளுரைப்பவரை முருகனின் கைவேல் அழித்துவிடும் என்பதையும் மயிலும் வேலும் தன்மீது பொய்ச் சூளுரைத்தவர்களைப் பொறுப்பதில்லை என்பதையும் அறியமுடிகிறது.
இங்கு பொய்ச் சூளுரைக்கும் தலைவன் முருகனின் மயிலையும் வேலையும் நேரே நோக்காது அதன் நிழலை மட்டுமே நோக்கிச் சூளுரைப்பது கவனிக்கத்தக்கது. அதாவது தான் கூறப்போவது பொய்ச் சூள் என்பதால் அவன் மயிலையும் வேலையும் நேரே நோக்குவதற்கு அஞ்சுகிறான். இவற்றால் முருகனைப் பண்டைத் தமிழகத்து மக்கள் பயபக்தியுடன் வழிபட்டுள்ளனர் என்பதை உணரமுடிகிறது.
அன்பு நெறி
பண்டைத் தமிழகத்து மக்கள் திருப்பரங்குன்றத்து முருகனை அன்பு நெறியில் வழிபட்டதை அறிய முடிகிறது.
தலைவனிடன் காணப்பட்ட பரத்தமை ஒழுகத்தின் காரணமாகத் தலைவி ஊடுகின்றாள். அவளது ஊடலைத் தணித்துரைக்கும் தலைவன் தன்னிடம் அவ்வாறான பரத்தமை ஒழுக்கம் இல்லை என்றும், தன்மேல் நாறும் நறுமணத்திற்கு மதுரையில் இருந்தும் திருப்பரங்குன்றத்திலிருந்தும் வந்து என் மீது வீசிய நறுமணம் உள்ள காற்றே காரணம் என்றுரைக்கிறான். தலைவி அதனை ஏற்காதவளாகிறாள். இந்நிலையில் தலைவன் வையை மணல் மீதும் திருப்பரங்குன்றத்து மலையின் மீதும் ஆணையிட்டுக் கூறுகின்றாள். இந்நிகழ்வைக் காணும் தோழி அத்தலைவனிடம்,
“வருபுனல் வையை மணல் தொட்டேன் தருமணவேள்
தண்பரங் குன்றத்து அடிதொட்டேன் என்பாய்
கேளிர் மணலின் கெழுவும் இதுவோ?
ஏழுலகும் ஆளி திருவரைமேல் அன்பளிதோ?”
(பரி.8: 61-64)
என்றுரைக்கிறாள். இதனுள் ஏழு உலகை ஆளும் முருகன் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றத்து அடியைத் தொட்டேன் என்று பொய்ச் சூளுரைக்கும் தலைவனே அம்மலையின் மீது நீ வைத்திருக்கும் அன்பும் இவ்வளவுதானோ, இது இரக்கத்திற்குரியதாகும். என்று கூறுகிறாள். இங்கு தோழி சுட்டும் இக்கூற்று வழி அம்மக்கள் முருகன் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றத்தின் மீது பயம், பக்தி எனும் இவற்றையும் தாண்டி அன்பு வைத்திருந்தனர் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
துன்பம் எய்திய அடியவரின் துன்பத்தைப் போக்குவது திருப்பரங்குன்றம். அக்குன்றின் தண்ணிய தன்மைக்குப் பரிபாடல் சுட்டும் உவமையின் வழி, பண்டைத் தமிழகத்து மக்கள் முருகன் மீது கொண்டிருந்த அன்பை அறிந்துகொள்ள முடிகிறது.
சுனையின் நடுவில் ஒருத்தி குளித்துக் கொண்டிருக்கிறாள். அப்பொழுது பெய்த மழையின் காரணமாக அருவி பெருக்கெடுத்து ஓடிவந்து அச்சுனையில் விழுகின்றது. நீர் பெருக்கெடுத்த நிலையில் தனக்கு உதவி செய்யுமாறு கரையில் இருக்கும் தன் கணவனை அழைக்கிறாள். தன் கைக்கு எட்டும் அளவில் மூங்கில் புணையினைத் தள்ளிவிடுமாறு வேண்டுகிறாள். அவனோ அவ்வாறு உதவி செய்யாது சாயநீர் நிரப்பப்பெற்ற வட்டத்தை அவள் மீது எறிகிறான். புணை கிடைக்கப்பெறாமல் நிற்கவும் முடியாத ஆழத்தில், நீருக்குள் மூழ்கித் தவிக்கிறாள். அந்நிலையில் அவளது கணவனது உள்ளத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. உடனே சுனைக்குள் குதித்தான். அவளைத் தழுவித் தூக்கிக்கொண்டு வந்து கரை சேர்க்கிறான். இவ்வாறு தவித்துக்கொண்டிருக்கும் ஒருத்திக்கு அவளது கணவன் அவளைத் தழுவிக் காப்பாற்றும் தன்மையைப் போன்று துயருற்ற அடியவரின் துன்பங்களைப் போக்கும் தண்ணிய பரங்குன்றம் என்பதை,
“தாழ்நீர் இமிழ்சுனை நாப்பண் குளித்தவண்
மீநீர் நிவந்த விறலிழை கேள்வனை
வேய்நீர் அழுந்துதன் கைதயின் விடுகெனப்
பூநீர்பெய் வட்டம் எறியப் புணைபெறாது
அருநிலை நீரின் அவள்துயர் கண்டு
கொழுநன் மகிழ்தூங்கிக் கொண்பூம் புனல்வீழ்ந்து
தழுவும் தகைவகைத்துத் தண்பரங் குன்று”
(பரி. 21: 39-45)
எனும் அடிகள் வழி அறியமுடிகிறது. இங்கு அடியவர்கள் நீராடும் தலைவியாகவும் முருகன் அதனைக் கரையில் இருந்து கண்டு மகிழும் தலைவனாகவும் குறிக்கப்படுகின்றனர். இதனுள் அடியவர்களின் செயலை முருகன் எப்பொழுதும் அன்புடன் கவனித்துக்கொண்டிருப்பவன் எனும் கருத்து பெறப்படுகின்றது. அவற்றுடன் பக்தர்கள் தாம் வேண்டிய புணையினை முருகன் தரவில்லையே என்று வருந்த வேண்டாம். அம்முருகன் அடியவரின் நிலையைப் பார்த்துக்கொண்டே உள்ளான். உரிய நேரத்தில் அம்முருகன் வேண்டியதைக் காட்டிலும் மிகுதியான அன்பைச் செலுத்தித் தானே இறங்கி வந்துக் காப்பாற்றுவான் என்ற செய்தியையும் அறிந்து கொள்ள முடிகின்றது. அவ்வாறு முருகன் செலுத்தும் அன்பு, தலைவன் தலைவி மீது செலுத்தும் அன்பாகவும், மக்கள் முருகன் மீது செலுத்தும் அன்பு தலைவி தலைவன் மீது செலுத்தும் அன்பாகவும் அமைகிறது. இவற்றால் முருகன் மீது பண்டைத் தமிழகத்து மக்கள் கொண்டிந்த நம்பிக்கையையும் அதன்வழி முருகன் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பையும் அறிந்துகொள்ள முடிகின்றது.
தமிழர் நெறி
வடமொழிப் புலவர்களை விளித்துரைக்கும் பரிபாடல் (9) கற்புக் காமத்தை விட ஒருவருக்கொருவர் மனமொத்துக் கூடுகின்ற காம இன்பமே சிறந்த இன்பம் என்றும் அவ்வாறான இன்பத்தைத் தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையில் பெறும் பெண்களே அன்றிப் பிற பெண்கள் திருப்பரங்குன்றத்தின் பயனைப் பெற மாட்டார்கள் என்றும் குறிப்பிடுகிறது.
நான்மறைகளை விரித்துக் கூறி அவற்றின் நல்ல புகழை உலகிற்கு எடுத்துரைக்கும் வாய்ப்பேச்சில் வல்லவரான வடமொழிப் புலவர்களே, கேட்பீராக... காமத்துள் சிறந்தது காதற் காமம். கற்புக் காமமோ ஊடலின் காரணமாகச் சிறப்படைவதாகும். அவ்வாறு ஊடலில் பெறும் காம இன்பத்தில் தலைவன் தலைவியை இரந்து வேண்டுகிறான். தலைவனின் வேண்டுதலுக்கு இரங்கிய தலைவி தன்னைத் தலைவனுக்குத் தருகிறாள். இதுவும் தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தால் நிகழ்ந்த சேர்க்கையாகும். தலைவன் பரத்தையின் இல்லத்தில் இருக்க அவ்வீட்டின் வழியே தோழி செவ்வணி அணிந்து சென்று தலைவி பூப்பு எய்தியிருப்பதை உணர்த்தி அதன்பின் அத்தலைவன் தலைவியிடம் வந்து கூடுகின்ற கூட்டமாகும். எனவே இவ்வாறான காம இன்பம் சிறந்த இன்பமாகாது. ஆனால் தலைவனின் பிரிவென்பதே அறியாத இல்லத் தலைவியர் தலைவனின் மீது ஊடலென்பதே கொள்ளாமலும் அத்தலைவரை வருத்தாமலும் இன்பம் எய்துவர். இவ்வாறான இன்பமே தமிழ்ப் பண்பாட்டின் வழியே வந்தவருக்குரிய இன்பமாகும். இவ்வாறான இன்பத்தைப் பெறும் தமிழ்ப் பெண்களுக்கன்றிப் பிற பெண்கள் திருப்பரங்குன்றத்தின் பயனைப் பெறமாட்டார்கள் என்பதை,
“நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர்யீ கேண்மின் சிறந்தது
காதற் காமம் காமத்துச் சிறந்தது
விருப்போர் ஒத்தது மெய்யுறு புணர்ச்சி
புலத்தலிற் சிறந்தது கற்பே அதுதான்
இரத்தலும் ஈதலும் இவையுள் ளீடாப்
பரத்தையுள் ளதவே பண்புறு கழறல்
தோள்புதி துண்ட பரத்தையிற் சிவப்புற
நாளணிந் துவக்குஞ் சணங்கறை யதுவே
கேளணங் குறமனைக் கிளந்துள சுணங்கறை
சுணங்கறைப் பயனும் ஊடலுள் ளதுவே
அதனால் அகறல் அறியா அணியிழை நல்லார்
இகறலைக் கொண்டு துனிக்கும் தவறிலர் இத்
தள்ளாப் பொருளியல்பின் தண்டமிழாய் வந்திலார்
கொள்ளாரிக் குன்று பயன்” (பரி. 9: 12-26)
எனும் அடிகளில் காணமுடிகிறது. இதனுள் விளிக்கபடுவர் நான்மறை அறிந்தவராக உள்ளதால் நான்மறை வேத நெறிகளில் இல்லாத சிறப்பை அவர்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக இக்கூற்று அமைவதைக் கவனிக்க முடிகிறது. அச்சிறப்பு என்னவென்றால் உள்ளமொத்துக் காதலரைப் பிரியாது தலைவனிடம் ஊடல் கொள்ளாது அத்தலைவனுடன் கூடி இன்பம் துய்க்கும் காதற் காமமாகும்.
அவ்வாறு உள்ளமொத்த காதற் காமத்தைய தண்ணிய தமிழ்ப் பண்பாட்டினை உடைய பெண்களுக்கே இத்திருப்பரங்குன்றத்து முருகப்பெருமானது அன்பு உரியதாகும் என்று சுட்டுவதன் வழி பண்டைத் தமிழகத்து மக்கள் திருப்பரங்குன்றத்து முருகனின் அன்பைப் பெறுவதற்குக் காதல் தழுவிய தமிழ் நெறியைக் கையாண்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
ஆய்வு நெறி
பக்தி உணர்வைப் பண்டைத் தமிழகத்து மக்கள் அப்படியே ஏற்றுக்கொண்டனர் என்று கூறுதற்கில்லை. அவர்கள் அப்பக்தியை ஆராய்ந்துள்ளனர். அவ்வாராய்ச்சியின் வழி உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர்.
வேலன் வெறியாட்டெடுக்கின்றான். அவ்வெறியாட்டுக் களத்தில் முருகன் வேலன் மீது வந்து ஆடுகின்றான். இந்நிலையை ஆராய்ந்துள்ளனர். இது உண்மையா? பொய்யா? என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
முருகன் இவ்வுலகம் முழுதும் நிரம்பியவன். அப்படியிருக்க இந்த வேலனிடம் மட்டும் வந்து ஆடுகின்றான் என்றால், இது உண்மையாக இருத்தற்கு வாய்ப்பில்லை. அதே நேரத்தில் உலகம் முழுதும் உள்ள முருகன் இந்த வேலனிடத்தும் வந்து ஆடுகிறான் என்று பார்க்கும் போது இது பொய்யாவதற்கும் வாய்ப்பில்லை என்றுரைக்கின்றனர். இதனை,
“காஅய் கடவுள் சேஎய் செவ்வேள்
சால்வ தலைவ எனப் பேஎ விழவினுள்
வேலவன் ஏத்தும் வெறியும் உளவே
அவை வாயும் அல்ல பொய்யும் அல்ல
நீயே வரம்பிற்றில் உலகம் ஆதலின்” (பரி.5:13-17)
என்னும் அடிகள் உணர்த்தும். இதனால் பண்டைத் தமிழகத்து மக்கள் பக்தியை ஆய்வுக்கு உட்படுத்தி அதன்பின்பு வழிபட்ட நெறியைக் காணமுடிகிறது.
அடியுறையும் இன்ப நெறி
திருப்பரங்குன்றத்து முருகனை வழிபட்ட மக்கள் அம்முருகனை வழிபடும் இன்பத்தையேப் பெரிதும் விரும்பியவராக இருந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் தம் சுற்றத்துடன் முருகனை வழிபட்டு அம்முருகனது அடியில் உறைந்திருக்கும் வாழ்வையே வேண்டி நிற்கின்றனர்.
தன்னோடு பொருந்தாத அசுரரை அழித்த செல்வக்குமரனே, மாறுபட்டவருடன் போரிலே வெற்றி பெற்ற வீரனே, வெற்றி வேலைச் செலுத்தும் வேலனே, ஆறிரு தோள்களுடன் ஆறுமுகத்துடன் காட்சி தரும் ஆறுமுகனே, நன்மையை விரும்புகின்ற எம் சுற்றத்துடன் நின் குன்றிடத்திற்கு வந்து நின் அடியுரையும் வாழ்வாகிய இன்ப வாழ்வை இன்று பெற்றோம். அவ்வாறே இன்றுபோல் என்றைக்கும் இவ்வின்ப வாழ்வு எமக்குக் கிடைக்க உன் அருளை வேண்டி முருகன் அடிகளைத் தொழுது போற்றுகின்றனர். இதனை,
“மாறமர் அட்டவை மறவேல் பெயர்பவை
ஆறிரு தோளவை அறுமுகம் விரித்தவை
நன்றமர் ஆயமொடு ஒருங்குமின் அடியுறை
இன்றுபோல் இயைகெனப் பரவுதும்
ஒன்றார்த் தேய்த்த செல்வநின் தொழுதே” (பரி. 21: 66-70)
என்னும் அடிகள் வழி அறியமுடிகிறது. இதன்வழி முருகனை வழிபட்டு அவன் அடியுறைவதே இன்பம். அவ்வின்பம் தமக்கு என்றுமே கிடைக்க வேண்டும் என விரும்பிய பக்தி மாண்பை அறியமுடிகிறது.
முருகனை வழிபட்டு வாழும் அடியவர்கள் முருகனை வழிபடுதலால் கிடைக்கும் இன்பத்தை விரும்புவதை அன்றி மேலோகத்துப் போக வாழ்வையும் விரும்புவதில்லை என்பதை,
“மாலை மாலை அடியுறை இயைநர்
மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்” (பரி.17: 7-8)
இதனால் உணரமுடிகிறது.
எப்பொழுதும் தன் சுற்றத்துடன் முருகனை வழிபடும் இன்பம் வேண்டும் என வழிபடுவதை,
“செருவேல் தானைச் செல்வ நின் அடியுறை
உரிதினின் உறைபதிச் சேர்ந்தாங்குப்
பிரியா திருக்கஎம் சுற்றமோடு உடனே” (பரி.18: 54-56)
என்பதால் அறிகிறோம்.
முருகனே உன்னைத் தொழுது திருப்பரங்குன்றத்தே வந்து முருகனின் அடியவராகும் பேற்றை வேண்டிநிற்பதை,
“குன்றத் தடியுறை இயைகெனப் பரவுதும்
வென்றிக் கொடியணி செல்வ நின் தொழுது” (பரி.21:16-17)
என்னும் அடிகள் வழி அறிய முடிகிறது.
வாழ்வியல் இன்பத்தை வேண்டிய வழிபாடு
முருகனை எந்நாளும் வழிபடும் இன்பமே போதும் என்றும், பொருளும் பொன்னும் போகமும் வேண்டாது அருளும் அன்பும் அறனும் வேண்டி வழிபட்ட மக்கள் தங்களது வாழ்வியல் தேவைகளைப் பெறவும் முருகனை வழிபட்டுள்ளனர் என்பதைக் காணமுடிகிறது. அவ்வாறு மக்கள் முருகனிடம் வேண்டுவன,
* கனவிலே தம் காதலரோடு கைகோர்த்து நீர் விளையாட்டில் இன்பம் பெற்றது பிழைபடாது நனவிலும் அவ்வாறே இன்பம் பெறுவதற்கும் வரமருள வேண்டும். (பரி.8: 103-105)
* நெடுநாளும் பிள்ளைப் பேறு இல்லாமல் போயிற்று இனியேனும் எம் வயிற்றில் கருப்பம் உண்டாகட்டும். அதற்கான இன்னது காணிக்கையாகத் தருவோம் எனக் கூறித் தொழுகின்றனர். (பரி.8: 106)
* தலைவன் பொருள் தேடிச் சென்றுள்ளான். அத்தலைவனுக்கு அப்பொருள் எளிதில் கிடைக்க அருள் செய்ய வேண்டும். (பரி.8: 107)
* போருக்குச் சென்ற தலைவன் பகைவரை அழித்து வெற்றி வீரனாக மீள வேண்டும் என அருச்சிக்கின்றனர். (பரி.8: 108)
* திருமணப் பேற்றைத் திருப்பரங்குன்றத்து முருகனை வேண்டிப் பெற்றுள்ளனர். அதன்காரணமாக திருப்பரங்குன்றத்தை, “தருமணவேள் தண்பரங்குன்றத்து” (பரி.8: 61-62) என்று சுட்டுகின்றனர்.
* காதலரைப் பிரிந்திருப்போர் தம்மைக் காதலருடன் சேர்த்து வைக்குமாறு முருகனை வேண்டிச் சரவணப் பொய்கையில் நீராடியதைக் காணமுடிகிறது (பரி.8: 112)
* கணவர் தம்மைத் தழுவியவராகச் சுற்றிக்கொண்டிருக்க, அந்த இன்பம் என்றும் நிலைக்க விரும்பிய மகளிர் யாழினை மீட்டியவராக முருகனைக் குறித்துப் பாடுகின்றனர்.
இதனை,
“கெழீஇக் கேளிர் சுற்ற நின்னை எழீஇப் பாடும்…” (பரி.14: 23-24)
என்பதன் வழி பெறமுடிகிறது.
* தலைவன் பொய்ச் சூளுரைத்தன் காரணமாக முருகன் அவனைத் தண்டித்து விடாதிருக்க மகளிர் முருகனை வழிபட்டுள்ளனர். அவ்வாறு வழிபடும் ஒரு பெண் திருப்பரங்குன்றத்தில் தொங்கும் மணியைத் தன் கைகளால தாக்கி ஒலியுண்டாக்கித் தன் தலையை முருகனது அடியில் சேர்த்துப் பணிந்து வேண்டுகிறாள். இதனை,
“செருவம் செயற்கென்னை முன்னைத்தன் சென்னி
அருள்வயினான் தூங்கும் மணிகையால் தாக்கி
நிரைவளை ஆற்றிருஞ் சூள்” (பரி.8: 87-89)
எனும் பாடலுள் காணமுடிகிறது.
* தம் காதலரைப் பிரியாது வாழ்வது வேண்டியும் பிரிந்த காதலரைச் சேர்ந்திட வேண்டியும் மகளிர் முருகனை வழிபட்டுள்ளனர். அவ்வாறு வழிபடும் மகளிர், முருகனுக்கு விழாக் கொடியேற்றும் நாளில் ஆறுமுகப் பெருமானின் யானை உண்டு மிஞ்சிய எச்சில் உணவினை உண்டு வழிபட்டுள்ளனர். இதனை,
“ ... ... ... பின்னிருங் கூந்தலர்
கன்னிமை கனிந்த காலத் தார் நின்
கொடியேற்று வாரணம் கொள்கவழ மிச்சில்
மறுவற்ற மைந்தர்தோள் எய்தார் மணந்தார்
முறுவல் தலையளி எய்தார் நின் குன்றம்
குறுகிச் சிறப்புணாக் கால்” (பரி.19: 89-94)
என்பதால் உணரமுடிகிறது.
* பொருளும் பொன்னும் போகமும் வேண்டாது, முருகனின் அருள், அன்பு, அறம் எனும் மூன்றை மட்டுமே இரந்து நிற்பதைக்; காணமுடிகிறது. இதனை,
“... ... ... யாம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே” (பரி. 5: 78-81)
எனும் அடிகள் உணர்த்தும்.
இவற்றால் பண்டைத் தமிழகத்து மக்கள் தம் வாழ்வியல் தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு முருகனை வழிபட்டுள்ளனர் என்பதை அறியமுடிகிறது. இவையனைத்தும் அகவாழ்வையே மையமிட்டதாக அருள், அன்பு, அறம் எனும் இவற்றை வேண்டியதாக அமைவதைக் கவனிக்க முடிகிறது. இதனால் இவர்கள் முருகனைத் தன் அன்பிற்குரியவனாகவும் தனக்கு அன்பான வாழ்வை அருளி அறத்தின் வழி நடக்கச் செய்பவனாகவும் கருதியுள்ளனர் என்பது பெறப்படும்.
முடிவுரை
பண்டைத் தமிழகத்து முருகவழிபாட்டையும், முருகவழிபாட்டு நோக்கங்களையும் அறிந்து கொள்வதற்குப் பெரிதும் துணைநிற்கும் நூல்களுள் பரிபாடலும் ஒன்றாகும். இதனுள் முருகனை வழிபடுதற்குரிய தகுதிகளாக அருள், அறம், நற்குணம், தவப்பேறு என்பன சுட்டப்படுகின்றன. இவ்வாறான தகுதிகளைப் பெற்றிருக்கும் பக்தர்கள் முருகனை பயத்துடன் கூடிய பக்திநெறியுடனும் அன்பு கலந்திட்ட அகநெறியுடனும், களவுக் காதலை உடைய தமிழ்ப் பண்பாட்டு நெறியுடனும், பக்தியை ஆராய்ந்திட்ட ஆய்வுநெறியுடனும் வழிபட்டுள்ளனர். இவர்களின் வழிபாட்டில் பக்தர்கள் முருகனைச் சுற்றத்துடன் எப்பொழுது வழிபட்டு அவன் அடியுறையும் வாழ்வையே பெரிதும் விரும்பியுள்ளனர். அடியுறையும் வாழ்வையன்றி மேலோகத்துப் போக வாழ்வையும் அவர்கள் விரும்பவில்லை. அவற்றுடன் தம் அக வாழ்விற்கு அன்பு அருள் அறம் முதலிவற்றையும் வேண்டியுள்ளனர். இவர்களின் வேண்டுதலில் பொருளும் பொன்னும் போகமும் முதன்மை பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
சான்றெண் விளக்கம்
1. திருமாற்கு கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகிழாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம் - பழம் பாடல்.
2. பரி.5,8,9,14,17,18,19,21.
3. நல்லந்துவனார் - பரி.8, 9, கடுவன் இளவெயினனார் - பரி.5, குன்றம் பூதனார் - பரி.18, கேசவனார்- பரி.14, நப்பண்ணனார் - பரி.19, நல்லச்சுதனார் - பரி.21, நல்லழிசியார் - பரி.17
துணைநூற்பட்டியல்
1. புலியூர்க்கேசிகன், பரிபாடல், சாரதா பதிப்பகம், கௌரா ஏஜென்ஸீஸ், 10/14, தோப்பு வேங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை. டிசம்பர் 2009.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.